“அம்மா நம்ம ரெண்டு பேரும் என்ன காரணம் நீங்க சொல்றது எனக்கு புரியலையே?” என்று கேட்க,
“இந்த வீட்டில நம்ம ரெண்டு பேரும் இருக்கிற வரை, ” உன் அண்ணன் பிரதிக்ஷாவ புரிஞ்சுக்கிற வாய்ப்பு இல்ல!
நம்ம இங்கே இருந்து கிளம்பி போயிட்டோம்னால் விதுரன் அவனுடைய எல்லா தேவைகளுக்கும் கண்டிப்பா பிரதிக்ஷாவை தான் தேடுவான். அந்த சமயத்துல அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற அந்த ஈகோ குறைஞ்சு இரண்டு பேரும்
அன்னியோன்யமா வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கு! அதனால மனிஷா நம்மளும் இங்கே இருந்து கொஞ்ச நாளைக்கு வெளில போய் தங்குவோம்!” என்று அம்பிகா கூறினார்.
“சரி மா நீ சொல்றது சரிதான், ஆனால் அண்ணா ஏன் எதுக்கு எங்க போறீங்கன்னு கேட்குமே என்ன பதில் சொல்லுவ? நீ சொல்ற திட்டத்துக்கு பெரியம்மா ஒத்துக்குருவாங்களா? ” என்று ரேணு கேட்டாள்.
“சரஸ்வதிய ஏதாவது சொல்லி நான் சமாளிச்சுருவேன், விதுரன் கிட்ட தான் ஏதாவது சொல்லி சமாளிக்கணும்” என்று அம்பிகா சொல்ல
“சரிமா அப்ப பிரச்சனை இல்ல, நீ பெரியம்மாவ சமாளி. நான் அண்ணன கிட்ட சொல்லி சமாளிக்கிறேன். எனக்கும் கொஞ்ச நாள் வெளில போயிட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு, இத பத்தி நானே உன்கிட்ட பேசலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நல்லவேளை நீயே சொல்லிட்ட. ஒரே கல்லில் இரண்டு மாங்கா, பேசாம கொடைக்கானல்ல நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்குல்ல அங்க போவோமா? அண்ணா அண்ணிக்கு தனிமை கொடுத்த மாதிரியும் இருக்கும், கொஞ்ச நாளு நம்மளும் அமைதியா வாழ்ந்த மாதிரியே ஆச்சு!” என்று ரேணு செல்ல,
“சரி ரேணு,நீ சொல்றபடி அங்கேயே போயிருவோம்!” சரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மனுஷாவ பத்தி என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தியே, என்ன சொன்ன? ” என்று அம்பிகா ஞாபகம் வந்து கேட்க,
“அம்மா ரேணு அவளோட நகைய எடுத்துட்டு வெளில போறா! எனக்கு தெரிஞ்சு அவளோட நகைய வச்சு அமௌன்ட் ரெடி பண்ண போறான்னு நினைக்கிறேன்!” என்று கூறினாள் ரேணு.
“அப்போ ஈசியா பணத்தை ரெடி பண்ணிடுவாளே, சரஸ்வதி அவளுக்கு கொடுத்த நகை தானே, அது ரொம்ப காஸ்ட்லியான நகை, கிட்டத்தட்ட அடமானம் வச்சாவே இருபது லட்ச ரூபா வர கிடைக்கும்! இப்ப என்ன பண்றது” “என்று அம்பிகா கவலை கொண்டார்.
“அம்மா கவலைப்படாதீங்க அதுக்கும் ஒரு வழி பண்ணி இருக்கேன்! இந்நேரம் அவ எங்க இருக்காளோ “என்று நக்கலாக சிரித்தாள் ரேணு.
இங்கு,
நகையை அடமானம் வைக்க வந்த இடத்தில் அது கவரிங் நகை என்று கடைக்காரர் கூறவும் அதிர்ச்சியானாள் மனிஷா.
“நீங்க ஒழுங்கா பாருங்க என்னோடது எல்லாம் ஒரிஜினல் கோல்ட், நீங்க ஏதோ பொய் சொல்றீங்க போல!” என்று மனிஷா கடைக்காரரிடம் சண்டை போட,
“எம்மா, இப்படி எத்தனை பேரு திரியறீங்க! கவரிங் நகையை கொண்டு வந்துட்டு கோல்டுன்னு சொல்லி பணம் கேட்கிறதுக்கு, நீ பண்ணின வேலைக்கு போலீச வரச்சொல்லி உன்னை உள்ள தள்ளி விடுவேன். வயசு பொண்ணா இருக்கியேன்னு பொறுமையா உன்னையா அமைதியா விடுறேன். ஒழுங்கா இங்க இருந்து பிரச்சனை பண்ணாம போயிரு இல்ல , போலீசுக்கு போன் பண்ணி நீங்க வர சொல்லிருவேன்!” என்று கூறினார் அந்த கடைகாரர்.
மனிஷாவுக்கு ஒன்றும் புரியாமல் பதட்டத்தில் ஆழ்ந்து விட்டாள். இது சரஸ்வதி அத்தை எனக்கு கொடுத்த நகை தானே, அப்போ அவங்க கவரிங் நகையையா எனக்கு கொடுத்தாங்க? அது தங்கம் இல்லையா? என்று அவளின் மனதில் பல கேள்விகள் ஓடியது. “பேசாம அவங்க கிட்டயே கேட்டுருவோமா?” என்று தோன்ற,’ஏன் கேக்குற எதுக்கு கேக்குறன்னு ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க, அவங்களுக்கு பதில் சொல்லி மாளமுடியாது. அவங்க கிட்ட,
நம்ம ஏதாவது கேட்டோம்னு தெரிஞ்சால் விதுரன் நம்ம மேல கோவப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு, இந்த விஷயத்தை பின்னாடி பாத்துக்குவோம் இப்போதைக்கு எப்படி பணத்தை ரெடி பண்றது!” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இந்த ஆளு பொய் சொல்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. வேற நகைக்கடையில கேட்டு பாப்போம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அந்த நகைகளை எடுத்துக்கொண்டு வேறு சில கடைகளிலும் விசாரிக்க இந்த நகை கவரிங் தான் என்று சொல்ல அதிர்ந்து போனாள் மனிஷா.
‘எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கு கவரிங் நகை வாங்கி கொடுத்து இருப்பாங்க அவங்களுக்கு இருக்கு, இதுல இந்த விதுரன் வேற எங்க அம்மா ஆசைப்பட்டு கொடுக்குறாங்க வாங்கிக்கன்னு பந்தாவா சொன்னான், கடைசில கவரிங் நகைகள் தான் குடும்பமே இப்படி பந்தா பண்ணுனாங்களா?’ என்று சலித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் மனிஷா.
மனிஷா உள்ளே வரும்போது எதிரில் ரேணுவும்,அம்பிகாவும் இருக்க அவர்கள் இருவரையும் பொருட்படுத்தாமல் அவள் அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டாள்.
என்னாச்சு பணத்தை ரெடி பண்ணிக்கிட்டு வந்து இருப்பாளோ என்று அம்பிகா கேட்க, ” அது எப்படிம்மா பணத்தை ரெடி பண்ண முடியும் கவரிங் நகைக்கு யாரு அமௌன்ட் தருவா? நான் எப்படி இதை வீட்டுக்கு வந்தானு யோசிச்சிட்டு இருக்கேன்!” என்று ரேணு சொல்ல அதிர்ந்து போனார் அம்பிகா.
“என்ன சொல்ற எனக்கு புரியல?” என்று அம்பிகா கேட்க, ” சரஸ்வதி அம்மா அவளுக்கு கொடுத்த தங்க நகையை எடுத்துட்டு அதே மாதிரி கவரிங் நகை செய்யச் சொல்லி வாங்கி அவளோட ரூம்ல வச்சிட்டேன்! பத்து லட்ச ரூபாய் பணத்தை அவகிட்ட கேட்கும் போதே எந்தெந்த சோர்ஸ்ல அந்த பணத்தை ரெடி பண்ணுவானு யோசிச்சேன். எனக்கு தெரிஞ்சு ரெண்டு அண்ணா கிட்டயும் கேட்பா, முடியாத பட்சத்துக்கு அவளோட நகையை அடமானம் வைப்பானு தோணுச்சு, அதனால ஒரிஜினல் நகையை எடுத்துட்டு டூப்ளிகேட் வச்சிட்டேன்!”என்று சொல்லி சிரித்தாள் ரேணு.
“நல்லவேளை பண்ணிட்ட!” என்று அம்பிகா சொல்ல, ” கொஞ்சம் பொறுமா இவள இன்னும் கொஞ்சம் வம்பு இழுப்போம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று மனிஷாவிற்கு அழைப்பை விடுத்தாள்.
அலைபேசி அலரும் சத்தம் கேட்டு மனிஷா எடுத்துப் பார்க்க முன் பின் தெரியாத எண்ணில் இருந்து வரவும் அவளின் முகம் எல்லாம் பயத்தில் வேர்த்து கொட்டியது.
அலைபேசியை அட்டென்ட் செய்து காதில் வைக்க,” என்ன பணத்தை ரெடி பண்ணிட்டியா? ” என்று கேட்க அதிர்ந்து போனாள் மனிஷா.
“என்ன சத்தத்தையே காணோம் பணத்தை ரெடி பண்ணிட்டியா இல்லையா?” என்று எதிர்புறம் இருந்த குரலில் அழுத்தம் வர,
“நாளைக்கு வர டைம் இருக்குது அதுக்குள்ள என்ன அவசரம் பணத்தை ரெடி பண்ணிடுவேன்!” என்று மனிஷாவும் அழுத்தமாக கூறினாள்.
“அது சரி, பெரிய புளியம் கொம்ப புடிச்சு வச்சிருக்கயே பத்து லட்ச ரூபாய் எல்லாம் உனக்கு படிக்காசு மாதிரி, அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணி கொண்டு வந்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல! கரெக்டா காலையில பத்து மணிக்கு உனக்கு போன் பண்ணுவேன் பணத்தை பேக்ல எடுத்துட்டு நான் சொல்ற இடத்துக்கு நீ வரணும்.நீ வரல அடுத்த பத்தாவது நிமிஷம் உன்னைய பத்தின எல்லா எவிடென்ஸும் அந்த விதுரனுக்கு மெயில் பண்ணிருவேன்!” என்று கூற அதிர்ந்து போனாள் மனிஷா.
“அப்படி எல்லாம் எதுவும் பண்ணிராத பத்து மணிக்கு நீ சொல்ற இடத்துக்கு நான் பணத்தோட வருவேன் என்னைய நம்பு!” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் மனிஷா.
“காலைல பத்து மணிக்கு பணத்தோட வர்றேன்னு இவ்வளவு அழுத்தமா சொல்றாளே ஒருவேளை பணத்த ரெடி பண்ணிட்டாளோ?” என்று அம்பிகா தன் சந்தேகத்தை கேட்க,
“எனக்கும் அதுதாம்மா சந்தேகமா இருக்கு, எப்படி ரெடி பண்ணுவா?” என்று இருவரும் யோசிக்க தொடங்கினர்.
இவர்கள் இருவரும் தங்களின் அறையில் இருந்து பேசிக் கொண்டிருக்க, மனிஷா அவளுடைய அறையில் இருந்து வெளியேறி இவர்களின் அறையை கடந்து மெதுவாக சென்று கொண்டிருந்தாள். இதை பேசிக் கொண்டிருந்த அம்பிகாவும், ரேணுவும் பார்த்து விட்டனர். மனிஷா எங்கே செல்கிறாள் என்று பார்க்க
விதுரனின் வீட்டில் லாக்கர் இருக்கும் இடத்தை நோக்கி மெதுவாக சென்றாள்.
மனிஷாவிற்கு தெரியாமல் இவர்கள் இருவரும் பின் தொடர மனிஷா யாராவது வருகிறார்கள் என்று நிமிடத்திற்கு ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள்.
“பாத்தியாம்மா, கடைசில நம்ம வீட்டுல பணத்தை திருடவே முடிவு பண்ணிட்டா போல! நில்லு இவ பண்றத வீடியோ எடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய மொபைலில் கேமராவை ஆன் செய்தாள் ரேணு.
இது எதுவும் தெரியாத மனிஷா வீட்டுக்குள் சென்று அந்த லாக்கரை திறக்க அது திறக்கவில்லை. உடனே அதனுடைய சாவி எங்கேயாவது இருக்கிறதா என்று தேடி எப்படியோ சாவியை எடுத்து விட்டாள்.
சாவியை எடுத்து மெல்லமாக லாக்கரை திறக்க லாக்கர் முழுவதும் பணம் நகை என நிரப்பப்பட்டிருந்தது.
‘இவ்வளவு பணம் நகையா?’ என அதிர்ந்து தன்னை அறியாமல் சத்தமாக பெருமூச்சு விட்டவள், சுயம் தெளிந்து தன்னுடைய வாயை பொத்தி விட்டு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துவிட்டு அவளுக்கு தேவையான பணத்தை எடுக்கத் தொடங்கினாள்.
‘பிச்சைக்காரங்க இவ்வளவு பணத்தை நகைய வச்சுக்கிட்டு எனக்கு கவரிங் குடுத்துருக்காங்க! இருக்கட்டும் இருக்கட்டும் இந்த பணம் நகை எல்லாத்துக்கும் நானே சொந்தக்காரி ஆகுறேன்.
அந்தப் பிரதிக்ஷாவை மட்டும் வீட்டை விட்டு துரத்தி அந்த விதுரனை கல்யாணம் பண்ணிட்டா இது எல்லாம் எனக்கு தான!’என்று சந்தோஷத்தோடு அந்த நகைகளை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவ பணத்தை எடுத்துக்கிட்டே இருக்கா?” என்று அம்பிகா கேட்க, ” நான் போயி செக்யூரிட்டி அலாரத்தை ஆன் பண்ணிட்டு வரேன்! நீயும் நம்ம ரூமுக்கு போ. கொஞ்ச நேரத்துல இவள கதி கலங்க வைப்போம்!” என்று சொல்லிவிட்டு மெதுவாக அந்த அறையை விட்டு வெளியே சென்று ரேணு செக்யூரிட்டி அலாரத்தை ஆன் செய்ய
வீடு முழுவதும் அபாய ஒலி ஒலித்தது.வீட்டுக்குள் இருந்த விதுரன், பிரதிக்ஷா என இருவரும் மாடியில் இருந்து வேக வேகமாக கீழே இறங்கி வர,அம்பிகாவும் ரேணுவும் தங்களுடைய அறைக்குள் இருந்து வருவதைப் போல் வந்தனர்.
அபாய ஒலி சத்தத்தை கேட்கவும் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே ஆடிப் போய் நின்றாள் மனிஷா.
