அபாய ஒலி சத்தத்தை கேட்கவும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மனிஷா.
ஒரு நொடி திகைத்தவள் மறுகணமே யோசித்து விட்டு அவள் கையில் வைத்திருந்த பணத்தை லாக்கரிலேயே வைத்துவிட்டு லாக்கரை மூடினாள்.
அபாய ஒலி சத்தத்தை கேட்டு விதுரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வர அவன் பின்னால் பிரதிக்ஷாவும் இறங்கி வந்தாள் . அப்போதுதான் வெளிவருவது போல ரேணுகாவும் அம்பிகாவும் தங்களுடைய அறையில் இருந்து வெளிவருவது போல் நடந்து கொண்டனர்.
“செக்யூரிட்டி அலாரம் அடித்த சத்தம் கேட்டுச்சு, என்னாச்சு?” என்று விதுரன் அம்பிகாவிடம் கேட்க,
“எங்களுக்கும் எதுவும் தெரியாது நாங்களும் சத்தத்தை கேட்டு தான் வெளியில வந்தோம்!” என்று கூறினார் அம்பிகா.
” சரி அப்ப நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க உள்ள போயி நான் என்னன்னு பாத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, வீடு முழுக்க சுற்றி பார்த்தான்.
அவன் சந்தேகப்பட்டது போல் எதுவும் இல்லாமல் இருக்க சோபாவில் நின்று கொண்டிருந்த மூவரிடம் வந்து, “நல்லா பாத்துட்டேன் யாரும் இருந்த மாதிரி தெரியல? அப்புறம் எதுக்கு செக்யூரிட்டி அலாரம் அடிச்சுனு தெரியல”என்று சொல்லிக்கொண்டே யோசிக்க,
“லாக்கர் ரூம் .. என சொல்லிக்கொண்டே விரைந்து அந்த அறைக்கு ஓடினான். மற்ற மூவரும் விதுரன் பின்னால் அந்த அறைக்கு சென்றனர்
மனிஷா அந்த அறை பழையபடி இருந்தது போல் அனைத்து பணம் நகைகளையும் வைத்து லாக்கரை பூட்டிவிட்டு வெளியே வர முயற்சி செய்ய, கீழே அனைவரும் நிற்பதால் வெளியே வந்தால் மாட்டிக் கொள்வோமோ? ” என்று அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
விதுரன் வேகமாக அந்த அறைக்குள் நுழைய , அங்கே நின்று கொண்டிருந்த மனிஷாவை சந்தேகமாக பார்த்தான்.
அவள் முகம் முழுவதும் பயத்தில் வியர்த்திருக்க,
“நீ என்ன இங்க? ” என்று மனிஷாவை பார்த்து கேட்டான் விதுரன். விதுரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த மனிஷா திருவென்று விழிக்க, ” மனிஷா நீங்க எப்படி இங்க? ” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள் ரேணு.
மனிஷா என்ன பதில் சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருக்க, ” இந்நேரத்துல உங்களுக்கு இங்கே என்ன வேலை மனிஷா? ” என்று பிரதிக்ஷாவும் கேள்வி கேட்டாள்.
இவ நம்மள கேள்வி கேட்கிறதா? என்ற எண்ணம் மனிஷாவுக்கு தோன்றியதோ என்னவோ கோபத்தில், ” நீ எதுக்கு இந்நேரத்துல இங்க வந்த? ” என்று பதிலுக்கு கேட்டாள்.
“வீட்டில செக்யூரிட்டி அலாரம் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு, அதான் என்னன்னு பாக்குறதுக்காக வந்தேன்!” என்று பிரதிக்ஷா சொல்ல, ” அந்த சத்தம் கேட்டு தான் நானும் வந்தேன்!” என்று சமாளித்தாள் மனிஷா.
மனிஷாவின் பதிலை கேட்ட பிரதிக்ஷா மனிஷாவை சந்தேகமாக பார்க்க, மனிஷா பிரதிக்ஷாவிடம் இருந்த தன்னுடைய பார்வையை மாற்றினாள்.
உடனே ரேணு மனிஷாவை மாட்டிக் கொடுக்க எண்ணி,” அது எப்படி எல்லாருக்கும் செக்யூரிட்டி அலாரம் அடிச்ச சத்தம் கேட்டுச்சு, அது அப்படி நீங்க மட்டும் லாக்கர் ரூமுக்கு கரெக்டா வந்தீங்க? ” என்று கேட்க விதுரன் மனிஷாவை பார்த்தான்.
நால்வரின் பார்வையும் தன்னை நோக்கி இருப்பதை உணர்ந்து கொண்ட மனிஷா,” ஹால்ல உக்காந்து போன் பேசிட்டு இருந்தேன், லாக்கர் ரூமுக்குள்ள ஏதோ ஒரு உருவம் போன மாதிரி இருந்துச்சு, நானும் பிரம்மையா இருக்குமோ நெனச்சு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டேன், திடீர்னு பார்த்தா கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு, உடனே சந்தேகப்பட்டு லாக்கர் ரூமுக்குள்ள வந்து பார்த்தேன், யாரையும் காணல, சரின்னு வெளியில வரலாம்னு பார்த்தா நீங்க எல்லாரும் வந்து நிக்கிறீங்க !” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் மனிஷா.
“அம்மா பொய்ய கூட எப்படி உண்மை மாதிரி மூச்சு விடாம சொல்றான்னு பாருங்க, எனக்கு தெரிஞ்சி இவ சரியான பிராடா இருப்பா போல, இவள போய் நல்லவனு நம்பி அண்ணா வீட்டுக்குள்ள வச்சிருக்காரு” என்று அம்பிகாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் ரேணு.
மனிஷா கூறியதை கேட்டதும் மீண்டும் விதுரன் அங்கிருந்த அறைகளில் சோதனை செய்து பார்த்தான். லாக்கருக்கு சென்று அங்கிருந்த அறைகளில் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று பார்க்க எல்லாம் சரியாகவே இருந்தது.
“எதுவும் திருடு போன மாதிரி தெரியல, மனிஷா சொல்றத பார்த்தா யாரோ வீட்டுக்குள்ள திருடன் நுழைஞ்சு இருக்கிற மாதிரி தான் தெரியுது, ஆனா எந்த பொருளும் திருடு போன மாதிரி தெரியல, பேசாம போலீசுக்கு இன்பார்ம் பண்ணுவோமா?” என்று கேட்க அதிருந்து போனாள் மனிஷா.
விதுரன் கூறியதை கேட்கவும் கொண்டு “சரி அண்ணா போலீசுக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்று தனக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ரேணுவும் கூறினாள்.
எங்கு போலீஸ் வந்தால் தான் மாட்டிக் கொள்வோமோ என்று நினைத்த மனிஷா, “உருவமா அருவமான்னு தெரியல, ஒருவேளை நான் பார்த்தது என்னோட மனப்பிரம்மையா கூட இருக்கலாம், அதான் எந்த பணமும் பொருளும் காணாம போகலையே அப்புறம் எதுக்கு போலீஸ் கிட்ட எல்லாம் இன்பார்ம் பண்ணிக்கிட்டு!” என்று மனிஷா உளர விதுரன் பிரதிக்ஷாவை சந்தேகமாக பார்த்தான்.
“எந்த பொருளும் திருடு போகலைனா என்ன? ஏதோ சத்தம் கேட்டு நாம எல்லாரும் உடனே வந்துட்டோம் அதனால திருடன் தப்பிச்சு கூட போயிருக்கலாம், திருடன் வீட்டுக்குள்ள வர வந்து திருட முயற்சி பண்ணி இருக்கும்போது அதை எப்படி அசால்டா அப்படியே விட முடியும்! வந்தது திருடன் தானா இல்ல வேற யாரான்னு கண்டுபிடிச்சா தான் இனிமேல் நடக்கப்போற அசம்பாவிதத்தை தடுக்க முடியும்! அதனால போலீஸ்காரங்களுக்கு இன்பார்ம் பண்ணனும்!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
ஏற்கனவே பிரதிக்ஷாவின் மேல் கோபம் கொண்டவன் அவளை அலட்சியப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ” மனிஷா சொன்ன மாதிரி எந்த பொருளும் திருடு போகாம தான இருக்கு, இப்ப எதுக்கு போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு, ஒருவேளை போலீஸ் வந்து இன்வெஸ்டிகேஷன் பண்ண ஆரம்பிச்சால் சில பிரச்சனைகளை நம்ம சந்திக்க வேண்டியது வரும், ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் சந்திச்சுக்கிட்டு இருக்கிறதே எனக்கு பெரிய மன உளைச்சலா இருக்கு! இதுல இந்தப் பிரச்சனையும் சமாளிக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை” என்று பிரதிக்ஷாவை பார்த்துக் கொண்டே கூறினான் விதுரன்.
பிரச்சனை என்று தன்னைத்தான் சொல்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட பிரதிக்ஷா கண்கள் லேசாக கலங்கியது.
இதைப் பார்த்த மனிஷாவின் உள்ளம் சந்தோஷத்தில் ஆழ்ந்து போனது. அம்பிகாவும் ரேணுவும் விதுரனுக்கும் பிரதிக்ஷாவுக்கும் இடையே நடக்கும் இந்த ஊடல்களை பார்க்கும்போது மனம் கலங்கினர்.
“சரி, இப்ப எல்லாரும் இங்கிருந்து போய் தூங்குங்க, காலையில இத பத்தி பேசிக்கலாம்!” என்று விதுரன் சொல்லிவிட்டு தன் அறைநோக்கி நகர,
“விதுரா உன்கிட்ட பேசணும்” என்று அவனை இடை நிறுத்தினார் அம்பிகா.
“என்ன பேசணும் எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என்று விதுரன் மீண்டும் படி ஏற,
“காலையில பேசுறதுக்கு நாங்க இருக்க மாட்டோம்” என்று அம்பிகா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான் விதுரன். பிரதிக்ஷாவும் மனிஷாவும் கூட அதிர்ந்து அம்பிகாவை பார்த்தார்கள்.
“புரியல, காலைல பேசுறதுக்கு நீங்க இருக்க மாட்டீங்களா? ” என்று விதுரன் கேட்க,
“ரேணுவேடா காலேஜ்ல ஏதோ ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண வேண்டியது இருக்காம். அதுக்காக அதை பத்தின விஷயங்களை கலெக்ட் பண்ண வெளியூர் போக வேண்டியது இருக்கு,
அவள மட்டும் தனியா அனுப்ப முடியாது, அதனால அவளுக்கு துணையா அவ கூட நானும் போகலாம்னு இருக்கேன். வீட்டுக்குள்ளேயே இருக்க எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு. வெளில போயிட்டு வந்தா ஏன் மைண்டும் ரிலாக்ஸ் ஆகும்!” என்று கூறினார் அம்பிகா.
” என்ன ப்ராஜெக்ட் எந்த ஊரு இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல? ” என்று விதுரன் ரேணுவை பார்த்து கேட்க, ” அது வந்து எனக்கே இப்பதான்னா தெரியும்” என்று கூறினாள் ரேணு.
அவள் கூறியதை கேட்கவும் நால்வரும் அவளை அதிர்ந்து பார்க்க, ” அண்ணா சும்மா கிண்டல் பண்ணேன், இந்த ப்ராஜெக்ட்ட சப்மிட் பண்றதுக்கான காலம் மூணு மாசம் வர கொடுத்து இருந்தாங்க. நேத்து திடீர்னு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள ப்ராஜெக்ட் முடிச்சு சப்மிட் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டாங்க” என்று இளித்தாள் ரேணு.
” சரி, எந்த ஊருக்கு போறனு சொல்லு அந்த ஊர்ல இருக்கிற நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி நீங்க தங்குவதற்கான ஏற்பாடு எல்லாத்தையும் பார்க்கச் சொல்றேன்!” என்று விதுரன் சொல்ல, ” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணா, நாங்களே எல்லாத்தையும் பாத்துட்டோம்!” என்று ரேணு கூறினாள்.
“அப்போ எல்லாத்தையும் நீங்களே முடிவு எடுத்து செஞ்சிட்டு கடமைக்காகத்தான் என்கிட்ட சொல்றீங்களோ? ” என்று அம்பிகாவை பார்த்துக் கொண்டே ரேணுவிடம் கேட்டான் விதுரன்.
“அவரவர் வாழ்க்கையிலும் அவரவர் இஷ்டப்படி தானே எல்லாத்தையும் பண்றாங்க, அதே மாதிரி அவ வாழ்க்கையில அவ என்ன பண்ணனும்னு முடிவு பண்றா, புள்ளைங்க வாழ்க நல்லா இருக்கனுமேனு நெனச்சு , புள்ளைங்க விஷயத்துல தலையிட்டு ஏன் இப்படி பண்றீங்கன்னு பெத்தவங்க நாங்க கேட்டா,
இது என் வாழ்க்கை என் விருப்பப்படி தான் இருக்கணும், இதுல நீங்க தலையாயிடாதீங்கன்னு முகத்தில் அடிச்ச மாதிரி பேசுவீங்க! வேற என்ன செய்ய , நாங்க நீங்க என்ன சொல்றீங்களோ செய்றீங்களோ அதை எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு அப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டியதுதான், வேற எங்களால என்ன பண்ண முடியும்” என்று விதுரனை பார்த்து கொண்டே குத்தலாக பேசினார் அம்பிகா.
அம்பிகா தன்னைத்தான் பேசுகிறார் என்பதை உணர்ந்த விதுரனும் எதுவும் சொல்லாமல், அமைதியாக நின்றான்.
