அம்பிகா சொன்னதை கேட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் விதுரன்.
பிரதிக்ஷாவே, ” அத்தை நீங்க இல்லைனா நான் மட்டும் எப்படி இங்கே இருக்கிறது, பேசாம நானும் உங்க கூட வந்தரவா? ” என்று கேட்க, அம்பிகாவும் ரேணுவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
விதுரன் பிரதிக்ஷாவை கோபத்தில் முறைத்துப் பார்த்தான். மனிஷா இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு உச்சி குளிர்ந்து கொண்டிருந்தாள்.
” அத்தை பதில் சொல்லுங்க நானும் உங்க கூட வந்தரவா? ” என்று பிரதிக்ஷா கேட்க,” எல்லாரும் போங்க உங்க இஷ்டத்துக்கு எங்க போகணுமோ அங்க போங்க, ஆள விடுங்க!” என்று விதுரன் கோபமாக சொல்ல,
“இங்க பாரு பிரதிக்ஷா, உனக்கு புதுசா இப்பதான் கல்யாணம் ஆகி இருக்கு. நீ உன் புருஷன் கூட தான் இருக்கணும், அத விட்டுட்டு எங்க கூட வந்து என்ன செய்யப் போற?” என அம்பிகா கேட்டார்.
“க்கும்… புதுசா கல்யாணம் முடிஞ்சு என்ன பிரயோஜனம், எப்ப பாத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு கோபப்பட்டு பேசுற இவர் கூட இருக்கிறதுக்கு நானும் உங்க கூட சந்தோசமா வந்துருவேன்!” என்று சலித்துக் கொண்டாள் பிரதிக்ஷா.
“ஏன் என்னோட விதுரன் கூட வாழ்றது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா, அப்படி கஷ்டமா இருந்தா என்னால இவர் கூட வாழ முடியாதுன்னு எழுதி கொடுத்துட்டு இங்க இருந்து போ, ஆறு மாசம் நாங்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நானும் என் விதுரனும் கல்யாணத்தை பண்ணிட்டு சந்தோசமாவது வாழ்கிறோம்!” என்று மனிஷா பிரதிக்ஷாவிற்கு பதில் கூறினாள்.
மனிஷா கூறியதை கேட்கவும் விதுரன் நக்கலாக பிரதிக்ஷாவை பார்க்க பிரதிக்ஷா, விதுரனை முறைத்தாள்.
“அதான் ஆறு மாசம் வர கோர்ட்ல ஒன்றாக சேர்ந்து வாழணும்னு சொல்லி இருக்காங்கல்ல. இப்போ நீ எதுக்கு தேவையில்லாம எழுதி கொடுத்துட்டு போக சொல்ற நீ உன்னோட வேலைய போய் பாரு”என்று அம்பிகா கோபமாக மனிஷாவிடம் கூறினார்.
மனிஷா அலட்சியமாக அம்பிகாவை பார்த்தாள்.
” சரி காலைல அஞ்சு மணிக்கு நாங்க இங்க இருந்து கிளம்பிடுவோம்” என்று அம்பிகா சொல்ல,
“சரி படிப்புக்குத்தான போறீங்க நல்லபடியா போயிட்டு வாங்க, ஏதாவது தேவைனா எனக்கு போன் பண்ணுங்க நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்” என்று விதுரன் கூறிவிட்டு மாடியேறி அவனின் அறைக்குச் சென்றான்.
மனிஷாவும், இவ்வளவு நேரம் மாட்டி ப்போமோ என்ற படபடப்பில் நின்று கொண்டிருந்தவள் விதுரன் செல்லவும் தன்னுடைய அறைக்கு சென்று தன்னை ஆசவாசப்படுத்தி கொண்டாள்.
அம்பிகா பிரதிக்ஷாவை பார்த்து “நீனும் போய் தூங்கு!” என்று சொல்ல, ” அத்த நீங்க எனக்காக தான வீட்டை விட்டு கிளம்புறீங்க? “என்று கேட்க அதிர்ந்து போனார் அம்பிகா.
“அத்தை என்ன அப்படி பாக்கறீங்க இவளுக்கு எப்படி உண்மை தெரிஞ்சுச்சுமா? எனக்கு தெரியும், எனக்கும் விதுரனுக்கும் பிரைவசி கொடுக்கிறதுக்காக நீங்க இங்க இருந்து வெளில போயி தங்க போறீங்கன்னு எனக்கு தெரியும்!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
அம்பிகா பிரதிக்ஷாவை பார்த்து சிரிக்க, “அத்தை நீங்களும் ரேணுவும் எங்களுக்காக வெளில போயி கஷ்டப்படணுமா? அதெல்லாம் வேண்டாம் நீங்களும் எங்க கூடவே இருங்க!” என்று பிரதிக்ஷா சொல்ல,
” வேற வழி இல்ல பிரதிக்ஷா, உங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்குற பிரச்சனை பெருசு, இந்த பிரச்சனை சரியாகணும்னா உங்க ரெண்டு பேருக்கும் பிரைவசி தேவை, அது வீட்டில கிடைக்காது, வேற எங்கயாவது உங்க ரெண்டு பேரைய அனுப்பி வைக்கலாம்னு நினைச்சாலும் விதுரன் அதுக்கு ஒத்துக்க மாட்டான், அதனாலதான் நானும் ரேணுவும் கொஞ்ச நாளைக்கு இங்க இருந்து வெளியூர் போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம், எங்க எல்லாருக்கும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றத பாக்கணும் அவ்வளவுதான், அதுக்காக நாங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழ்வதற்கு எங்களால என்ன பண்ண முடியுமோ அதை கண்டிப்பா பண்ணுவோம் அதுல ஒன்னு தான் இது! அதனால நீ எதையும் நினைச்சு கவலைப்படாதே, இந்த ஆறு மாசம் சீக்கிரத்துல ஓடிரும், அதுக்குள்ள விதுரன் மனசுல இடம் புடி ! உன் மனசுல உள்ள காதல அவனுக்கு வெளிப்படுத்திக்கிட்டே இரு, கண்டிப்பா சீக்கிரம் உன்னோட அன்பையும் காதலையும் புரிஞ்சுகிட்டு அவனே இந்த டைவர்ஸ் வேண்டாம்! நான் பிரதிக்ஷாவோடையே சேர்ந்து வாழ்ந்துக்கிறேன்னு சொல்லுவான்!” என்று கூறினார் அம்பிகா.
“அத்தை என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல, நான் பண்ணுன தப்பையும் மன்னிச்சு என்னைய உங்கள மருமகளாய் ஏத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி, உங்க மகன் மேல அளவு கடந்த காதல் நான் வச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியுது ஆனா உங்க மகன் என்னை பார்த்தாலே எரிஞ்சு எரிஞ்சு விடுறாரு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைய பிரச்சனையின்னு சொன்னாரு, எனக்கு பயமா இருக்கு அத்தை, விதுரன் என்னய ஏத்துக்கிற மாட்டாரோனு தோணுது!” என்று கண் கலங்க,
“அண்ணி, உங்கள மாதிரி மனைவி கிடைக்க எங்க அண்ணன் கொடுத்து வச்சுயிருக்கணும். அதனாலதான் அந்த மனிஷா கிட்ட இருந்து தப்பிச்சு உங்கள கல்யாணம் பண்ணி இருக்காரு! நீங்க பொய் சொல்லி கல்யாணம் பண்ணுனதால அண்ணன் கொஞ்சம் வருத்தமா இருக்காரு அவ்வளவுதான், கூடிய சீக்கிரத்துல அந்த வருத்தம் எல்லாம் அவர் மனசு விட்டு காணாமல் போய்விடும் அதுக்கப்புறம் அவர் உங்க கூட சந்தோசமா சேர்ந்து வாழ ஆரம்பிச்சுருவாரு! நீங்க மனசு தளராம இருங்க?” என்று ரேணு சொல்ல, ரேணுவை பார்த்தாள் பிரதிக்ஷா.
“பொய் சொல்லி கல்யாணம் பண்ணுனீங்கன்னு எப்படி தெரியும் தானே பாக்குறீங்க?” என்று ரேணு கண்ணடிக்க, ” நீங்க பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணுனீங்கன்னு எல்லாருக்கும் தெரியும் ” என்று சிரித்தாள் ரேணு.
ரேணு கூறியதை கேட்கவும் பிரதிக்ஷாவின் முகம் வாடியது. உடனே அம்பிகா “என்னடி சொல்லிக்கிட்டு இருக்க?” என்று ரேணுவை அதட்ட, ” ஐயோ அம்மா நான் அந்த அர்த்தத்துல சொல்லல, அண்ணி பொய் சொல்லி அண்ணனை கல்யாணம் பண்ணினாலும், அண்ணன் மேல இருக்கிற காதல்தான் இப்படி ஒரு தப்ப அண்ணி செஞ்சாங்கன்னு தெரியும். அதனால அண்ணி நாங்க யாரும் உங்கள தப்பா நினைக்கல எங்க அண்ணனுக்கு கிடைச்ச வரம் நீங்க, அப்படித்தான் நான் பெரியம்மா அம்மா எல்லாரும் பாக்குறோம், கூடிய சீக்கிரத்துல அண்ணாவும் அப்படி பாப்பாரு! கூடிய சீக்கிரத்துல நீங்களும் அண்ணனும் சேர்ந்து சந்தோஷமா வாழ்வதற்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணி” என்று ரேணு சொல்ல சிரித்தாள் பிரதிக்ஷா.
“சரி பிரதிக்ஷா நீ போய் தூங்கு நாங்களும் கொஞ்ச நேரம் தூங்குறோம் அப்பதான் சீக்கிரம் எந்திரிக்க முடியும் ” என்று அம்பிகா சொல்ல, பிரதிக்ஷா தன்னுடைய அறைக்கு சென்றாள்.
அங்கு கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுழைய விதுரன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தான் .
பிரதிக்ஷா விதுரனை கடந்து செல்ல விதுரன் எழுந்து கபோடின் மேலிருந்த ஒரு சூட்கேஸை எடுத்து பிரதிக்ஷாவின் கையில் கொடுத்து, ” உன்னால தான் என்னோட இருக்க முடியாதே அதனால நீயும் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு அவங்களோடையே கிளம்பி போ!” என்று சொல்ல அதிர்ந்து போய் விதுரனை பார்த்தாள் பிரதிக்ஷா.
இங்கு,
‘நல்லவேளை எப்படியோ தப்பிச்சிட்டோம், விதுரனுக்கு நம்ம மேல எந்த சந்தேகமும் வரல’ என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தவளின் நினைவில், அந்த அடையாளம் தெரியாத நபரின் ஞாபகம் வர, காலையில பத்து லட்சம் ரூபாய்க்கு என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்.
இருந்த ஒரு வழியும் அடைச்சிருச்சு, இப்ப எப்படி பணத்தை ரெடி பண்றது, என்று நினைத்துக் கொண்டிருக்க , மனிஷாவின் அலைபேசியில் அழைப்பு வந்தது. யார் என்று பார்க்க அந்த பிளாக் மெயிலர் தான் அழைத்திருந்தான்.
” என்ன டார்லிங், பணத்தை ரெடி பண்ணிட்டியா? ” என்று கேட்க, ” அதான் பத்து மணி வரை நேரம் இருக்கே அதுக்குள்ள ரெடி பண்ணிடுவேன்!” என்று அலட்சியமாக கூறினாள் மனிஷா.
“எப்படி ரெடி பண்ணுவ, இருந்த வழி எல்லாத்தையும் முயற்சி பண்ணி பாத்துட்ட, கடைசில அந்த விதுரன் வீட்டிலேயே திருடலாம்னு முயற்சி பண்ணி இருக்க, நல்லவேளை எப்படியோ தப்பிச்சுட்ட போல! இப்ப பணத்தை ரெடி பண்றதுக்கு உன் கிட்ட என்ன ஐடியா இருக்குன்னு முதல்ல சொல்லு!” என்று அலைபேசியில் கேட்க அதிர்ந்து போனாள் மனிஷா.
“ஏய் நீ யாரு இங்க நடந்ததெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?” என்று பயந்து கொண்டே மனிஷா கேட்க,
“அதான் சொல்லிட்டேனே உனக்கு நல்லா தெரிஞ்சவன்.உன்னைய பத்தி நல்லா தெரிஞ்சவன்! 24 மணி நேரமும் உன்னைய கண்காணிச்சுக்கிட்டு இருக்கிற எனக்கு நீ என்ன பண்றேன்னு தெரியாம இருக்குமா? வேணா இப்ப ஒரு வீடியோ அனுப்புறேன் அதை பார்த்துட்டு சொல்லு!” என்று சொல்லிவிட்டு, லாக்கர் ரூமுக்கு மனிஷா செல்லும் போது எடுத்த வீடியோவை அனுப்பினாள் ரேணு.
அதைப் பார்த்த மனிஷா அதிர்ந்து “இது எப்படி உன்கிட்ட, இது இப்பதான் நடந்துச்சு?”என்று தடுமாற ” இன்னைக்கு நடந்த வீடியோ மட்டும் இல்ல, கடந்த மூன்று வருஷமா நீ எங்க எங்க போன யார் கூட சுத்துன, எத்தனை பேர ஏமாத்தி இருக்க எல்லா டீடைல்ஸும் என்கிட்ட இருக்கு!” என்று ரேணு சிரித்துக்கொண்டே கூறினாள்.
வாய்ஸ் மாற்றி காட்டும் ஆப்பை இன்ஸ்டால் செய்து ரேணு பேசியதால் , ரேணுவின் குரல் ஆண் குரலாகவே மனிஷாவின் அலைபேசியில் கேட்டது.
மனிஷா பயந்து நடுங்கத் தொடங்கினாள். “ப்ளீஸ் நீ யாருன்னு தெரியல, நீ ஏன் இப்படி பண்றன்னு எனக்கு சுத்தமா விளங்கல?” என்று மனிஷா சொல்ல, ” அதான் சொன்னேனே எனக்கு பத்து லட்ச ரூபாய் பணம் தேவைப்படுது! அத நீ கொடுத்துட்டால் நான் உன்னைய பத்தின எந்த விவரத்தையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!” என்று ரேணு கூறினாள்.
“அதான் சொல்லிட்டியே காலையில பத்து மணிக்கு உனக்கு பணத்தை ரெடி பண்ணி நீ வர சொல்ற இடத்துக்கு வந்து தரேன்னு சொல்லிட்டேனே அப்புறம் என்ன? ” என்று மனிஷா கேட்க,
“அதுல ஒரு சின்ன சேஞ்ச். காலை பத்து மணி வரை இல்லை, இப்ப பத்து மணிக்குள்ள எனக்கு பணத்தை ரெடி பண்ணி தரணும், நீ தரலைன்னா என்கிட்ட இருக்கிற எல்லா புட்டேஜையும் அந்த விதுரனுக்கு அனுப்பிருவேன்!”என்று சொல்ல அதிர்ந்து போனாள் மனிஷா
