பிரதிக்ஷா சீக்கிரத்தில் ‘விதுரனோட அம்மா அம்பிகா அத்தையா? இல்ல சரஸ்வதி அத்தையான்னு கண்டுபிடிக்கணும்!’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க,
சரஸ்வதி பிரதிக்ஷாவின் பக்கத்தில் வந்து பிரதிக்ஷாவின் மனதை படித்தது போல “தேவையில்லாத கண்டுபிடிக்கணும்னு நினைக்கறத விட்டுட்டு உன் வாழ்க்கையில உள்ள பிரச்சனையை எப்படி சரி பண்ணனும்னு நினை, எல்லா நேரமும் உனக்காக நாங்க போராடிகிட்டே இருக்க முடியாது உன்னோட வாழ்க்கை, உனக்கு வேணும்னால் நீ தான் போராடி உன்னோட வாழ்க்கைய தக்க வச்சிக்கிறணும், நான் இங்க இருந்து கிளம்புறேன். அடுத்த முறை நான் உன்னைய பார்க்கும் போது என் மகனோட மனசுக்கு புடிச்ச பொண்டாட்டியா தான் பாக்கணும்!” என்று கூற பிரதிக்ஷாவும் சரி என்பதை போல் தலையசைத்தாள்.
“அம்பிகா நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் உன்னைய நம்பி தான் நான் இங்க இருந்து கிளம்புறேன், ஏதாவது பிரச்சனைனால் எனக்கு போன் பண்ணு! எதையும் நினைச்சு கவலைப்படாதே, எல்லா நல்லபடியா நடக்கும்,அம்பிகா கார் டிரைவரை காரை ஸ்டார்ட் பண்ண சொல்லு நான் ஊருக்கு கிளம்புறேன்!” என்று சொல்ல அம்பிகாவும் அவருக்கு தேவையானதை எடுத்து வைக்க காரில் ஏறி சரஸ்வதி அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
சரஸ்வதி அங்கிருந்து செல்லும் வரை அனைவரும் வாசலில் நின்றனர். போகும்போது அனைவரிடமும் போய் வருகிறேன் என்று சொன்ன சரஸ்வதி விதுரனை மட்டும் பார்த்து எதுவும் சொல்லாமல் அப்படியே அமைதியாக சென்றுவிட்டார்.
சரஸ்வதியின் புறக்கணிப்பு விதுரனின் மனதில் வருத்தத்தை உண்டு பண்ணியது. விதுரனை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அம்பிகா ரேணு பிரதிக்ஷா என மூவரும் வீட்டுக்குள் சென்று விட்டனர்.
சில நிமிடங்கள் வாசலிலேயே விதுரன் சரஸ்வதி கடைசியாக சொல்லிச் சென்ற வார்த்தைகளை அசை போட்டுக் கொண்டிருந்தான்.
‘பிரதிக்ஷாவோட சேர்ந்து வாழ்றதுக்கு வழிய பாரு’ என்று சரஸ்வதி சொல்லிய வார்த்தைகள் மட்டும் விதுரனின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அம்மா என்கிட்ட பேசாம கோபமா போறதுக்கு பிரதிக்ஷா தான் காரணம், எல்லா பிரச்சனையும் அவ ஒருத்தியால தான் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் விதுரன்.
உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த பிரதிக்ஷாவை பார்த்து, ” இப்ப உன் மனசுக்கு திருப்தியாடி, நீ நெனச்சத சாதிச்சிட்டல்ல! எங்க அம்மா சொன்னால் எதையும் மீறமாட்டேன்னு தெரிஞ்சே அவங்க கிட்ட பேசி உன் கூட சேர்ந்து வாழ சொல்லி இருக்க! அவங்களும் உன் பேச்சை கேட்டுகிட்டு என்கிட்ட உன் கூட சேர்ந்து வாழ சொல்றாங்க. நான் முடியாதுன்னு சொல்லவும் என்கிட்ட பேசாம என் மேல கோபமா போறாங்க, இதுக்கெல்லாம் காரணம் நீதான்!” என்று கோபத்தில் கூறினான் விதுரன்.
“இங்க பாருங்க நான் அத்தை கிட்ட எதுவும் சொல்லல, நீங்க தேவையில்லாம என் மேல பழைய போடாதீங்க, எனக்கு எதுவும் தெரியாது!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“வாய மூடு! நீ சொல்றதெல்லாம் நம்புவதற்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது, நீ கல்யாணதன்னைக்கு என்னென்ன பண்ணுனேன்னு எனக்கு தெரியும், தேவையில்லாம ரஞ்சித் உன்னோட ரூம்ல குடிச்சிட்டு தகராறு பண்றான்னு பொய் சொல்லி என்னை வர வச்சு தேவையில்லாம வழுக்கி விழ வச்சு அதை போட்டோவ எடுத்து, அத காட்டி காலையில கல்யாணத்தை நிறுத்துனவ தானே!” என விதுரன் கேட்க அதிர்ச்சியில் உறைந்தாள் பிரதிக்ஷா.
“நடந்தது என்னன்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. என்ன மீறி எப்பவும் குடிக்க மாட்டேன். அப்படியே குடிச்சாலும் என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஞாபகம் இருக்கும்!
சரி நீ பண்ணினதை மண்டபத்துல சொல்லி உன்ன அசிங்கப்படுத்த கூடாதுன்னு அமைதியா நின்னேன். எங்க அம்மா என்னை அந்த மாதிரி கண்ணியமா வளர்த்திருக்காங்க. ஆனால் நீ ஒழுக்கம்னால் என்னனுமே தெரியாமலேயே வளர்ந்துட்ட!” என்ற வார்த்தைகளை சரமாரியாக பேசினான் விதுரன்.
விதுரன் பேசியதை கேட்கவும் பிரதிக்ஷாவின் கண்கள் கலங்கியது. அதை பார்த்த விதுரன் இப்படி அழுதழுது தானே நடிச்சுக்கிட்டு இருக்க, இன்னும் யாரை ஏமாற்றுவதற்காக இப்படி அழுது நடிக்கிற? நீ அழுது யார வேணும்னாலும் நம்ப வைக்கலாம்!ஆனால் என்னைய ஏமாத்த முடியாது” என்று விதுரன் கோபமாக சொல்ல, பிரதிக்ஷாவின் கண்கள் இன்னும் கலங்கியது.
எதுவும் சொல்லாமல் பிரதிக்ஷா அந்த இடத்தை விட்டு நகர, அதைப் பார்த்த விதுரனுக்கு இன்னும் கோபம் வந்தது. “என்னடி நான் பேசிகிட்டு இருக்கேன், நீ யார்கிட்டயோ பேசுற மாதிரி போற!” என்று அவளின் கையை பிடித்து இழுத்தான்.
அவன் அவ்வாறு இழுப்பான் என்று தெரியாத பிரதிக்ஷா, பிடிமானம் இன்றி அவனின் மேல் சாய பிரதிக்ஷாவின் எடை அதிகமாக இருக்க விதுரன் நிலைகுலைந்து கீழே விழ, பிரதிக்ஷா விதுரனின் மேல் விழுந்தாள்.
மிக நெருக்கத்தில் பிரதிக்ஷாவின் முகத்தை பார்த்தவன் என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று அமைதியாக,
பிரதிக்ஷாவோ தெரியாமல் விழுந்ததையும் திட்டம் போட்டு செய்திருக்கிறாள் என்று நினைத்து தன் மீது பழி போடுவான் என்று எண்ணி அவனிடமிருந்து எழுந்து போக முயற்சிக்க, விதுரன் அவனை அறியாமலேயே பிரதிக்ஷாவை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.
திடீரென்று விதுரன் பிரதிக்ஷாவை அணைக்கவும் பிரதிக்ஷா ஒன்றும் விளங்காமல் விதுரனை பார்க்க, அப்போதுதான் அவன் என்ன காரியம் பண்ணினான் என்பதை உணர்ந்தான்.
பிரதிக்ஷாவின் பார்வை விதுரனை கேள்வியாக பார்க்க, “இந்தப் பக்கம் கட்டில் இருக்கு நீ எழுந்தால் கட்டில் உன்னோட தலையில அடிச்சிடும் அதனாலதான் உன்னை இழுத்து புடிச்சேன். நான் என்னமோ உன்னைய ஆசைப்பட்டு இழுத்து அணைச்சேன்னு தப்பா நினைச்சுறாத அது உன் கனவுல கூட நடக்காது!” என்று கோபமாக கூறினான்.
விதுரனியின் பேச்சு பிரதிக்ஷாவின் மனதை காயப்படுத்திக் கொண்டே எதுவும் பேசாமல் அமைதியாக அவனிடம் இருந்து விலகி எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.
இவ்வளவு நேரம் தன் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தவள் சவரில் தண்ணீரை திறந்து விட்டு கத்திய அழ ஆரம்பித்தாள்.
பிரதிக்ஷாவின் கண்ணீரும் தண்ணீரோடு தண்ணீராக கலந்து கொண்டிருந்தது.
யாருடைய அன்பு வேண்டும் என்று பிரதிக்ஷா இப்படி ஒரு திட்டத்தை போட்டு திருமணம் செய்தாலோ அவனுடைய அன்பு , ஒவ்வொரு நாளும் வெறுப்பாக மாறிக்கொண்டே இருக்க அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!
இங்கு விதுரனின் நிலை அந்தோ பரிதாபம்!
பிடிக்கவில்லை, என்னை பொய் சொல்லி ஏமாற்றி இவள் திருமணம் செய்து விட்டாள் என்று விதுரனுக்கு பிரதிக்ஷாவின் மேல் கோபம் இருந்தாலும், அந்தக் கோபம் அவனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. அதை உணர்ந்தவன் கரைந்து கொண்டிருக்கும் கோபத்தை பிடித்து வைப்பதற்காகவே பிரதிக்ஷாவிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறான்! பிரதிக்ஷாவை ஏற்றுக்கொண்டு மனிஷாவிற்கு துரோகம் செய்து விடக்கூடாது என்று எண்ணி தன் மனதிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்.
இங்கு,
காரில் பயணித்துக் கொண்டிருந்த சரஸ்வதியின் உள்ளம் கடந்த கால நிகழ்வுகளின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தது.
சில மணி நேரம் பயணத்திற்கு பிறகு வீடு வந்து சேர்ந்தார் சரஸ்வதி. அங்கே ரஞ்சித்தின் அப்பா அமர்ந்திருக்க, வீட்டுக்குள் நுழைந்தார் சரஸ்வதி.
சரஸ்வதியை பார்க்கவும், ரஞ்சித்தின் அப்பா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க,” சாப்பிட்டீங்களா? “என்று கேட்டுக் கொண்டே உள் நுழைந்தார் சரஸ்வதி.
ம்ம்.. என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக தந்து விட்டு தன்னுடைய அலைபேசியை ஆராய ஆரம்பித்தார் அவர்.
சரஸ்வதி எதுவும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர, ” என்ன ஆச்சு உங்க மகனையும் மருமகனையும் சேர்த்து வச்சுட்டீங்களா? ” என்று நக்கலாக கேட்டார் ரஞ்சித்தின் அப்பா.
“எனக்கு மகன்,மருமகன்னால் உங்களுக்கு என்னது?” என்று சரஸ்வதியும் விடாப்பிடியாய் கேட்க, அதிர்ந்து போனார் ரஞ்சித்தின் அப்பா.
“இதே மாதிரி பேசுறத இதோட நிறுத்திக்கிடுங்க! எனக்கு ரெண்டு பேரும் புள்ளைங்க தான். ரஞ்சித்துக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ண்ணுனோம். அது எப்படியோ விதுரனுக்கு நடந்திருச்சு. இதுல திட்டம் போட்டு யாரும் எதுவும் பண்ணல,
ஒரு மகனுக்கு கல்யாணம் நின்னு போச்சு என்கிறதுக்காக இன்னொரு மகனுக்கு நடந்த கல்யாணத்தை ஏத்துக்காம இருக்க முடியாது.
அவன் கல்யாணம் முடிஞ்சு அவன் பொண்டாட்டியோட சந்தோசமா வாழ்றத பாக்கணும்னு நெனச்சேன் அதனால சில விஷயங்கள் பண்ண வேண்டியது இருந்துச்சு!” என்று சொல்ல,
“நீ ஒவ்வொன்னையும் விதுரனுக்கு பார்த்து பார்த்து செய்யும்போது ரஞ்சித் எவ்வளவு வருத்தப்படுவான்னு உனக்கு தெரியாதா? நீ ஒதுங்கி நிற்க வேண்டியது தானே! நீ எதுக்கு முன்னாடி போயி எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேள்வியை கேட்டார் ரஞ்சித்தின் அப்பா.
“நான் தானே விதுரன பெத்த அம்மா! என்னோட மகன் கல்யாணத்துல நான் முன்னாடி நின்னு எதுவும் செய்யாம வேற யார் செய்வா?
நீங்கதான் அவன பெத்த அப்பாவ எந்த கடமையையும் ஒழுங்கா செய்யல, உங்கள மாதிரியே நானும் இருக்க முடியுமா?இங்க பாருங்க, நீங்க ரஞ்சித்துக்கு மட்டும் அப்பா இல்ல, விதுரனையும் நீங்கதான் பெத்திங்க, அதை ஞாபகம் வச்சுக்குருங்க!” என்று சரஸ்வதி சொல்ல மேலும் அதிர்ச்சி அடைந்து போனார்.
“அது வந்து என்று அவர் எதையோ சொல்ல வர, ” நமக்கு ரொம்ப வருஷமா குழந்தை இல்லைன்னு தத்தெடுக்க முயற்சி பண்ணும் போது ரஞ்சித்த பார்த்தோம். ரெண்டு பேருக்கும் புடிச்சு போயி ரஞ்சித்தை எடுத்துட்டு வந்துட்டோம். அதுக்கப்புறம் தான் விதுரன் பொறந்தான்.
விதுரன நம்ம கொஞ்சுவதை பார்த்ததும் ரஞ்சித் ஏத்துக்க முடியாம உடம்பு சரி இல்லாம போய்ட்டான், நம்மளும் வேற வழி இல்லாம என்னுடைய தோழி அம்பிகா கிட்ட கொடுத்து விதுரன அவனுடைய மகன் மாதிரி வளர்க்கச் சொல்லிட்டோம். விதுரன் இன்னும் அப்படித்தான் வளர்ந்துட்டு இருக்கான். எனக்கு ரஞ்சித்தை விட விதுரன் ரொம்ப முக்கியமா இருந்தால், நான் எதுக்கு விதுரன அம்பிகா வீட்டில் வைத்து வளர்க்க போறேன்.
அதிலிருந்து உங்களுக்கு என்னோட எண்ணம் புரியும்னு நினைக்கிறேன் விதுரனுக்கும் ரஞ்சித்துக்கும் இடையில நான் எந்த வேறுபாடும் பாக்கல. ரஞ்சித்துக்காகத்தான் இத்தனை வருஷம் பார்த்து பார்த்து பண்ணிக்கிட்டு இருக்கேன். அத முதல்ல புரிஞ்சிக்கிருங்க, தேவை இல்லாம வார்த்தையை விடாதீங்க!
அப்புறம் இன்னும் ஒன்னு, ரஞ்சித் நம்ம தத்தெடுத்த பையன் கிடையாது. உங்களுக்கும் கலாவுக்கும் பொறந்த பையன்னு எனக்கு தத்தெடுத்த கொஞ்ச நாளிலேயே தெரியும்!” என்று சொல்ல அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
