கோயம்புத்தூர் மாநகரம் முழுவதையும் லேசான சாரல் மழை நனைத்துக் கொண்டிருந்தது. மணி விடியற்காலை 5:00 இருக்கும்.
ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்திருந்த அந்தப் பெரிய பங்களாவுக்குச் செல்லும் பாதையில், மகாதேவன் ஹவுஸ் என்ற பெயர் பலகை மிளிர்ந்துகொண்டிருந்தது. அந்த அமைதியான நேரத்தில், ஒரு கருப்பு நிற ஆடி கார் வந்து வாசலில் மெதுவாக நின்றது.
காரின் கதவு திறக்க, உள்ளிருந்து முதலில் வெளியே வந்தது அடர்ந்த சிகரெட் புகை. அதைத் தொடர்ந்து தன் கால்களை வெளியே வைத்துத் தள்ளாடியபடி இறங்கினான் அபிமன்யு.
கசங்கிய வெள்ளைச் சட்டை, கலைந்த தலைமுடி, கண்களில் ரத்தச் சிவப்பு, உடல் முழுக்க மதுவின் வீச்சம். கால்கள் இரண்டும் சரியான பாதையில் நகர மறுத்தன.
காரிலிருந்து இறங்கிய அவனைக் கண்டதும், வாசலில் குடையோடு காத்துக்கொண்டிருந்த வேலைக்காரர் பதறியடித்து ஓடிவந்தார். “தம்பி… ரொம்ப மழையா இருக்கு, பார்த்து வாங்க…” என்று குடையை அவன் தலைக்கு மேலே பிடித்தார்.
அபிமன்யு தன் சிவந்த கண்களால் அவரை ஒரு மாதிரி ஏறிட்டுப் பார்த்தான். “எனக்குக் குடை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை… போய்யா உள்ள!” என்று ரஃப்பாகச் சொல்லிவிட்டு, மழையிலேயே நனைந்தபடி மெதுவாக ஸ்டெப்ஸ் ஏறி உள்ளே போனான்.
வீட்டின் பெரிய வரவேற்பறை இருட்டாக இருந்தது. ஆனால், நடுவிலிருந்த சோஃபாவில் இருவர் அமர்ந்திருந்தார்கள். அபிமன்யுவின் தந்தை மகாதேவனும், தாய் சிவகாமியும்.
அபிமன்யு உள்ளே நுழைந்ததும், மகாதேவன் கையிலிருந்த நாளிதழை மேஜை மீது வீசியெறிந்துவிட்டு ஆத்திரத்தோடு எழுந்து நின்றார்.
“எங்க போயிட்டு வர்ற அபிமன்யு?”
அபிமன்யு அதைப் பொருட்படுத்தாமல், படிக்கட்டுகளை நோக்கித் தன் நடையைத் தொடர்ந்தான்.
“உன்னைத்தான் கேட்கிறேன்! நில்லுடா!” மகாதேவனின் குரல் அந்தப் பெரிய ஹால் முழுக்க எதிரொலித்தது. “கோவைக்கே பெரிய டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியோட CEO வா உட்கார வேண்டியவன்டா நீ! ஆனா இந்த வயசுல இவ்வளவு கெட்ட பழக்கத்துக்கும், குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி, விடிய விடிய எங்கேயோ கிடந்துட்டு இப்போ வர்றியே… உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? இல்லை இந்த மகாதேவனோட மானத்தை வாங்கணும்னே சுத்துறியா?”
அபிமன்யு நின்ற இடத்திலேயே நின்றான். ஆனால் திரும்பித் தன் தந்தையைப் பார்க்கவில்லை.
“அப்பா… நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. போய் தூங்குங்க…” மிகவும் தளர்ந்த, அதே சமயம் அழுத்தமான குரலில் சொன்னான்.
“தூங்கவா? கம்பெனி வேலையெல்லாம் விட்டுட்டு, உன்னைப் பெத்த பாவத்துக்கு இன்னும் இந்த வயசுலயும் நான் ஆபீஸுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன். உன்னை இந்த நிலமையில பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்குடா!”
தாயார் சிவகாமி உடனே ஓடிவந்து கணவனின் கரங்களைப் பிடித்துத் தடுத்தார். ” விடுங்கங்க… அவன் தான் ஏதோ உள்ளுக்குள்ள கஷ்டப்பட்டுட்டு இருக்கான்ல, எதுக்கு இப்போ சத்தம் போடுறீங்க?”
“கஷ்டமா? என்னடி கஷ்டம் இவனுக்கு? கேட்கிறதெல்லாம் பணமா கொட்டுது! பெரிய ஆளாக்கலாம்னு பார்த்தா, இவன் என்னடான்னா வாழ்க்கையே தொலைஞ்ச மாதிரி சுத்துறான்!”
அபிமன்யு மெதுவாகத் திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான். அவன் பார்வையில் கோபமில்லை, ஆழமான வெறுமை மட்டுமே இருந்தது.
“உங்களுக்கு பணம், அந்தஸ்து, கம்பெனி… இதுதானே முக்கியம்? எனக்கு எதுவுமே வேணாம் ப்பா. நீங்க கட்டுன இந்த பங்களா, நீங்க வாங்கித் தந்த இந்த கார்… எதுவுமே எனக்கு வேணாம். என்னை என் போக்கிலயே விட்டுடுங்க,” என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.
அவன் போன திசையையே பார்த்து சிவகாமி கண் கலங்க, மகாதேவன் பெருமூச்சோடு சோஃபாவில் சரிந்தார்.
கோவைக்கே பெரிய தொழிலதிபர் மகாதேவன். அவர் உருவாக்கிய மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்திற்கு அபிமன்யு தான் ஒரே வாரிசு. அவன்தான் அந்த நிறுவனத்தின் CEO வாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், தன் வாழ்க்கையில் நடந்த அந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, அபிமன்யு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் அளவுக்கு போதைக்கும் கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகிவிட்டான். மகாதேவனே வேறு வழியின்றி இன்னமும் கம்பெனிப் பொறுப்புகளைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.
தன் அறைக்குள் சென்ற அபிமன்யு, விளக்குகளைக் கூடப் போடாமல் இருட்டிலேயே கட்டிலில் போய் விழுந்தான். தலை நச்சென்று வலித்தது.
தன் சட்டைப் பையிலிருந்த பழைய தோல் வாலெட்டை எடுத்தான். அதற்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அந்தப் பள்ளிப் பருவப் புகைப்படத்தை வெளியே எடுத்தான்.
இரண்டு ஜடை போட்டு, பள்ளிச் சீருடையில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த பெண்ணின் முகத்தை தன் கட்டை விரலால் வருடினான். அவனுக்கே தெரியாமல் அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளி அந்தப் புகைப்படத்தின் மேல் விழுந்தது.
“பத்து வருஷம் ஆச்சுடி… என்னை இப்படி ஒரு பிணமாக்கிட்டு நீ எங்கடி போன?” அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.
அவன் மனது இன்னமும் அந்தப் பள்ளிப் பருவத்திலேயே நின்றுவிட்டது. அவளைத் தேடித் தேடி அலைவதும், கிடைக்காத ஏக்கத்தில் தன்னைத்தானே போதையில் புதைத்துக் கொள்வதுமாகவே அவனது நாட்கள் கழிந்தன.
காந்திபுரம் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய பெண்கள் ஹாஸ்டல்.
சிறிய அறையின் ஜன்னல் வழியே மழைச்சாரல் லேசாக அடித்துக் கொண்டிருந்தது. அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுந்துவிட்டாள் பாவை.
மதுரையில் இருக்கும் எளிய குடும்பம் அவளுடையது. தந்தை ஒரு சிறிய கடையில் வேலை பார்க்கிறார், அம்மா இல்லத்தரசி, தம்பி கல்லூரியில் படிக்கிறான். குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், தம்பியின் படிப்புச் செலவிற்காகவும் கோவைக்கு வந்து, ஒரு சிறிய நிறுவனத்தில் ரூ.15,000 சம்பளத்திற்குப் பணிபுரிகிறாள்.
அவளோடு அதே சிறிய அறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் அவளது தோழிகளான வானதியும் தாமரையும்.
பாவை குளித்து முடித்து, ஒரு எளிய சுடிதாரை அணிந்து கொண்டு, கண்ணாடியின் முன் நின்று தன் தலைமுடியை வாரிக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த வானதி மெதுவாகக் கண்ணைத் திறந்து, “ஏண்டி பாவை… மணி இன்னும் ஏழு கூட ஆகல, அதுக்குள்ள கிளம்பிட்ட?” என்று கொட்டாய் விட்டபடியே கேட்டாள்.
பாவை மெலிதாகப் புன்னகைத்து, “ஆபீஸுக்கு நேரமாச்சு… கிளம்பணும்,” என்றாள்.
“உன் கம்பெனி ஒன்பது மணிக்குத்தானே? நீ ஏன் தினமும் எட்டு மணிக்கே ஓடுறன்னு எனக்குத் தெரியாதா?” என்று தாமரையும் தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.
பாவை பதறிப்போய், “அப்படியெல்லாம் இல்லைடி… பஸ் கிடைக்காதுனு தான் சீக்கிரம் கிளம்புறேன்,” என்று சமாளித்துவிட்டு, தன் பையை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தாள்.
பாவைக்குத் தெரியும்… அவளுக்கு அபிமன்யுவுடன் வாழும் ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை. அவனது கம்பெனியில் வேலை பார்க்கும் பெரிய பதவியும் தேவையில்லை. தான் வேலை பார்க்கும் சின்ன ஆபீஸுக்குச் செல்வதற்கு முன்பாக, தினமும் காலையில் அபிமன்யுவின் காரோ அல்லது அவனோ அந்த வழியைக் கடந்து போவதையாவது தூரத்திலிருந்து பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே அவளுக்குள் இருந்தது.
அபிமன்யுவின் இந்தக் கோபமும், அவனது கெட்ட பழக்கங்களும், அவன் சுமக்கும் இந்த ஆறாத வலியும் பாவைக்கு நன்றாகத் தெரியும். அவன் மனதிலிருப்பது வேறொரு பெண் என்று தெரிந்தும், அந்த உடைந்த மனிதனைத் தன் அன்பால் குணப்படுத்த முடியாதா என்ற ஒரே ஒரு நம்பிக்கைதான் பாவையின் வாழ்க்கையாக இருந்தது.
காலை எட்டு மணி… காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக இருந்தது.
மழை நின்றிருந்தாலும், சாலையோர மரங்களிலிருந்து சொட்டும் நீர் பாவையின் தோளில் விழுந்தது. பஸ்ஸுக்காகக் காத்திருந்தபடியே, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது, தூரத்திலிருந்து அந்தப் பரிச்சயமான கறுப்பு நிற ஆடி கார் கம்பீரமாக வருவது தெரிந்தது. பாவையின் இதயம் மெல்ல வேகம் எடுத்தது.
கார் அருகே வரும்போது, கண்ணாடியின் வழியே அபிமன்யுவின் முகம் லேசாகத் தெரிந்தது. தலைவலியால் தன் நெற்றியை அழுத்தமாகத் தேய்த்தபடி, முகத்தில் தீவிரமான யோசனையோடு காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த அந்தச் சில நொடிகள்… பாவையின் முகம் தானாக மலர்ந்தது. அவன் எவ்வளவோ தூரத்தில் இருந்தாலும், அவனைக் காண்பதே அவளது நாளின் மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது.
“எப்படியாவது உங்க கஷ்டமெல்லாம் மாறி, உங்க மனசுக்கு அமைதி கிடைக்கணும் சார்…” மனதுக்குள்ளேயே வேண்டிக்கொண்டாள் பாவை.
காரின் கறுப்புப் புகை காற்றில் கரைய, அவளது பஸ்ஸும் வந்து நின்றது. ஒரு பெருமூச்சோடு பஸ்ஸில் ஏறினாள் பாவை.
இது என்னோட புது கதை.. ரொம்ப நாளா யோசிச்சு எழுத ஆரம்பிச்சு இருக்கேன்.. கண்டிப்பா தொடர்ந்து படித்து ஆதரவு தருவீங்கன்னு நம்புறேன்..!! கதை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க..
விழிமொழி-1
❤️ Loading reactions...
