🌹மலர்🌹1

தான் வாழ்வில் பெற்ற உறவுகளை இழந்து தனிமையில் உழலும் நாயகன் பாலா… பெற்றவர்கள் யாரென்றே அறியாத நாயகி மலர்… நாயகி தன் காதலை நிராகரித்ததால் காயப்பட்ட நாயகனோ மூர்க்கனாக மாறுகின்றான். 

அன்பின் உச்சம் மூர்க்கமாக மாறும்போது… இழப்புகளின் வலி காதலைப் பிடிவாதமாக மாற்றும்போது… இவர்களின் காதல் கைகூடுமா? 

என் காதல் மலர் 1 

சென்னை மாநகரில்… அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் ஐந்தாவது அடுக்கில் இருந்த கார்ப்பரேட் அலுவலகமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. அங்கு உச்சக்கட்டக் கோபத்தில் தன் குரலை உயர்த்தி உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன் என்கிற பாலா.

‘வேலைக்கு வந்த முதல் நாளே இவ்வளவு கலாட்டா செய்கிறானே!’ என்று அலுவலகத்தின் ஊழியர்கள் அனைவரும் தங்களின் கணினித் திரைகளிலிருந்து பார்வையை விலக்கி, பதற்றத்தோடு அவனையே நோக்கியிருந்தனர்.

“என்னை பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது? நான் என்ன ஃப்ரெஷரா? (Fresher) எம்சிஏ முடிச்சு அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவன்… சொந்தமா கம்பெனி வச்சிருந்தவன்! என் போதாத காலம், என்னோட கம்பெனி நஷ்டத்துல போயிடுச்சு… அதனாலதான் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்!” அவனது குரலில் கோபத்தோடு சேர்ந்து, தன் கம்பெனியை இழந்த வலியும் தெறித்தது. அதைத் தன் அகங்காரத்திற்குள் மறைத்துக் கொண்டு மேலும் சீறினான்.

“எங்க அந்த சீனியர் மேனேஜர்? முதல்ல அவரைக் கூப்பிடுங்க! இது என் அப்பாவோட ஃபிரெண்ட் கம்பெனி. இங்க மேனேஜ்மென்ட் கத்துக்கலாம்னு வந்தா… ஏதோ நியூ எம்பிளாயி மாதிரி சாம்பிள் பிராஜெக்ட் பண்ணு, பேசிக் ட்ரெய்னிங் எடுன்னு சொல்லி விளையாடிட்டு இருக்கீங்களா?!” தன் முன்னால் நின்றிருந்த டீம் மேட்டின் முகத்திற்கு நேரே விரலை நீட்டி, ஆக்ரோஷமாகக் கத்தினான் பாலா.

அவனது கம்பீரக்குரல் அங்கிருந்த கண்ணாடித்தடுப்புகளையும் தாண்டி அந்தப் பிரிவே அதிரும்படி எதிரொலித்தது. சுற்றிலும் அமர்ந்திருந்த ஊழியர்கள் அவனது அதிகார தோரணையையும், பின்னணியையும் கேட்டு வாயடைத்துப் போயினர்.

அந்தப் பரபரப்புக்கு நடுவே, அமைதியாக அங்கே வந்து நின்றாள் டீம் லீடர் மலர். கூர்மையான விழிகளால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் குழுவினரை முறைத்துப் பார்த்தாள். 

அவளது ஒற்றைப் பார்வையின் வீரியம் தாளாமல், அனைவரும் தங்களின் தலைகளை மானிட்டருக்குள் நுழைத்துக்கொண்டு அவசர அவசரமாக வேலையில் மூழ்கினர்.

சத்தம்கேட்டு அந்தப் பிரிவிற்குள் நுழைந்த மேனேஜர் நெடுமாறன், அங்கு நடந்த காட்சிகளை ஒரு நிமிடம் நின்று உற்று நோக்கினார். 

பாலாவின் பின்னணியை நன்கு அறிந்தவர் என்பதால், “மலர்… இந்த ட்ரெய்னிங் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் இவருக்கு வேணாம். டைரக்டா மெயின் பிராஜெக்ட் ஷெட்யூலையே கொடுத்துடுங்க” என்று பரிந்துரைத்தார்.

அவளோ தன் முடிவில் சற்றும் பின்வாங்காமல், “சார், இந்த ஆபீஸ்ல புதுசா ஜாயின் பண்ற எல்லாருக்குமே இதுதான் புரொசீஜர்! அவங்க எவ்ளோ பெரிய எக்ஸ்பீரியன்ஸ்டு ஆளா இருந்தாலும் சரி, பேசிக் ட்ரெய்னிங் எடுத்தே ஆகணும். என்னால இந்த ரூலை மாத்த முடியாது… உங்களுக்கு இவரோட ஈகோ தான் முக்கியம்னா, தாராளமா இவரை வேற டீமுக்கு மாத்திக்கோங்க!” எனத் தீர்க்கமாகப் பதிலடி கொடுத்தாள்.

அதற்குப் பின் பாலாவின் புறம் திரும்பியவள், சற்று கண்டிப்பான குரலில், “நீங்க படிப்புல சீனியர், குவாலிஃபிகேஷன்ல  எக்ஸ்பீரியன்ஸ்டு ஆளா இருக்கலாம்… இது உங்களுக்குப் புது கம்பெனி. இந்த நிறுவனத்தோட சிஸ்டம் என்ன, இங்க வேலை எப்படி நடக்குதுன்னு பேசிக்ல இருந்து தெரிஞ்சுக்கிட்டாதான், உங்களால வொர்க்கை சரியா பண்ண முடியும்” என மெல்லிய குரலில் அதிகாரத் தொனியில் கூறினாள்.

பாலா பேச முற்படுவதற்குள், தன் கரத்தை உயர்த்தி அவனைத் தடுத்தவள், “படிச்சிருக்கீங்கல்ல… இப்படி மார்க்கெட்ல நின்னு கத்துற மாதிரி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க? மத்தவங்க வேலையை டிஸ்டர்ப் பண்றீங்க… ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டரா ஆகணும்னா ஃபர்ஸ்ட் பணிவு வேணும், தெரிஞ்சுக்கோங்க!” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு, அவனது பதிலைக்கூட எதிர்பார்க்காமல் தனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் கண்ணாடித் தடுப்பறைக்குள் சென்றுவிட்டாள்.

அலுவலகத்தில் மலர் இருந்தாலே அப்படித்தான்… அவள் மிஸ். பெர்ஃபெக்ட்! அவளது அகராதியில் அரைகுறை வேலைக்கோ, தட்டிக்கழிப்பதற்கோ இடமே இல்லை. எடுக்கும் காரியம் எதுவாக இருந்தாலும், அது சொன்னபடி, குறித்த நேரத்தில், கச்சிதமாக நடந்து முடிய வேண்டும் என்பதில் கறாரானவள்.

அந்த அசாத்திய உழைப்பினால்தான் மலரின் குழுவிற்குப் பலமுறை ‘சிறந்த செயல்பாட்டிற்கான விருது’ தேடி வந்தது. அவளது தலைமையின் கீழ் செயல்படும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும், போனஸும் தடையின்றிக் கிடைத்தன.

பி.எஸ்சி கணினி அறிவியல் மட்டுமே படித்துவிட்டு, கல்லூரி வளாக நேர்காணல் மூலமாய் அசோசியேட் சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளே நுழைந்தவள், மூன்றே ஆண்டுகளில் டீம் லீடராக அசுர வளர்ச்சி பெற்றிருந்தாள்.

வெகு சீக்கிரத்தில் நிறுவனத்தின் உயர்பதவியான சீனியர் மேனேஜர் பொறுப்பு அவளுக்குக் கிடைக்கப் போவதாகப் பேச்சும் அடிபடுகிறது.

மலர் குறுக்கு வழிகளை நம்பாமல், தன் சொந்தத் திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னேறுபவள். அவளது வளர்ச்சி சக டீம் லீடர்களின் கண்களை உறுத்தியது. பொறாமை எண்ணம் கொண்ட பலர் அவளது வீழ்ச்சிக்காகக் காத்துக்கொண்டிருந்த வேளையில்தான்… அதற்குத் தோதாக இப்போது இவனும் வந்து சேர்ந்திருக்கிறான்!

அங்கிருந்த அத்தனை பேர் முன்னிலையிலும் மலர் வீசிய வார்த்தைகளால் பாலா அதிர்ச்சியில் உறைந்து சிலையாக நின்றான். அவனது ஆண்மைக்கும் அகங்காரத்திற்கும் விழுந்த பலத்த அடியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. 

அவனோடு வேலைக்குச் சேர்ந்த அவனது ஆருயிர் நண்பர்களான ரகுவரன், ராகவன் மற்றும் சசிதரன் மூவரும் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டனர். 

மெதுவாக நண்பனின் அருகே வந்து, அவனது இறுகிய தோள்களைப் பற்றி, “விடுடா பாலா… கம்பெனி நஷ்டமாகி பிரச்சினையில இருந்த நம்ம நாலு பேருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைச்சிருக்கறதே பெரிய விஷயம். ஆரம்பத்துல கொஞ்சம் இப்படித்தான் இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் வா…” என்று அவனது கோபத்தைத் தணிக்க முயன்றனர்.

நண்பர்களின் சமாதான வார்த்தைகள் எதுவும் அவனது காதுகளில் விழவில்லை; அவன் மனதிற்குள் கோபக் கனல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 

நெற்றி நரம்புகள் புடைக்க, ஆத்திரத்தில் சிவந்துபோன தன் விழிகளைத் திருப்பாமல், கண்ணாடித் தடுப்பறைக்குள் அமர்ந்திருந்த மலரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

பாலா தன் பிடிவாதத்தை விட்டுத்தர தயாராக இல்லை. மலர் தனக்குக் கொடுத்த அந்தப் பயிற்சி வேலையை (Sample Project) அவன் செய்யவே இல்லை. அவளது உத்தரவுகளை அலட்சியமாகப் புறக்கணித்தவன், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்தான். 

பாலாவும் சசியும் மலரின் குழுவிலிருக்க, ரகுவும் ராகவ்வும் மற்றொரு டீம் லீடரான ஜெகனின் குழுவில் நியமிக்கப்பட்டிருந்தனர். 

மலரை எதிர்க்க இதுதான் சரியான தருணம் என்றெண்ணி வந்த முதல் நாளே ரகுவையும் ராகவையும் எந்தப் பயிற்சியும் இன்றி நேரடியாகவே முக்கியப் பிராஜெக்ட்டில் இணைத்துக்கொண்டான் ஜெகன். இது பாலாவின் கோபத்தை மேலும் வீரியமாக்கியது.

அவளும் தன் முடிவிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை. கொடுத்த வேலையை முடித்தால் மட்டுமே திட்டத்குழுவில் இணைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டாள்.

வேறு வழியின்றி சசி, மலர் தந்த பணியை முடித்துவிட்டான்; பாலாவோ அதைச் செய்யாமல் முரண்டு பிடித்தான். அவளும் அவனைக்கண்டுகொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

இடைவேளையின் போது, பாலா தன் நண்பர்களுடன் கேண்டீனில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தான்.  

தன் கையிலிருந்த கோப்பையைச் சுழற்றியபடி, “மலர் பெரிய ராங்கிக்காரியா இருப்பா போல” என்று பேச்சைத் தொடங்கினான் ராகவ். 

அருகிலிருந்த சசி, ‘ஏன் அப்படிச் சொல்ற?’ என்பதுபோல் அவனைப் பார்க்க, “பின்ன என்னடா? அவ சத்தம் போட்ட உடனே, சீனியர் மேனேஜரே மறுவார்த்தை பேச முடியாம வாய மூடிட்டுப் போறார்!” என்றான் ராகவ் வியப்புடன்.

சமோசாவைக் கடித்துக் கொண்டே குறுக்கிட்ட ரகு, “கொஞ்சம் ஓவராதான் போறாளோன்னு எனக்குத் தோணுதுடா… ஏதோ இவ ஒருத்தி இல்லைன்னா இந்தக் கம்பெனியே ஸ்தம்பிச்சு நின்னுடும்ங்கிற ரேஞ்சுக்கு சீன் போடுறா!” என்று அவள் மீது தனக்கிருந்த எரிச்சலை வெளிப்படுத்தினான்.

அவர்களுக்குப் பின்னால் இருந்த மேஜையில் அமர்ந்திருந்த மலர், இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டே, எவ்வித சலனமுமின்றி காபியையும் சமோசாவையும் சாப்பிட்டு முடித்தாள்.

தன் கையில் இருந்த கோப்பையைத் தட்டில் வைத்துவிட்டு எழுந்தவள், அவர்களைத் தாண்டிச் செல்ல, அவளைக் கண்டதும் பாலாவின் நண்பர்களோ வாயடைத்துப் போயினர்.

அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், அங்கிருந்த வாஷ்பேசனை நோக்கி அவள் செல்ல… ராகவிற்கும் ரகுவிற்கும் தூக்கிவாரிப்போட்டது. 

மலருக்கு இத்தகைய பேச்சுகள் ஒன்றும் புதிதல்ல. அவள் இல்லாதபோதும், அவளது காதுபடவும் எவ்வளவோ ஏச்சுகளையும் கேலிப் பேச்சுகளையும் கேட்டிருக்கிறாள். மற்றவர்களின் வீணான வார்த்தைகளைத் தன் மனதிற்குள் கொண்டு சென்று, மனஅமைதியைக் கெடுத்துக் கொள்ளும் பலவீனமானவள் அல்ல.

இடைவேளை முடிந்து, பாலா தன் இருக்கைக்குத் திரும்பிய சில நிமிடங்களிலேயே அவனது மேஜையில் இருந்த இன்டர்காம் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் மலர் அவனைத் தன் கேபினுக்கு வருமாறு அழைத்ததும், “எக்ஸ்கியூஸ் மீ” என்று அனுமதி கேட்டவாறு உள்ளே நுழைந்தான்.

தனக்கு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டியவள், “உட்காருங்க பாலா” என்றாள் மெல்லிய குரலில். அவளது கண்கள் அவனது விழிகளையே உற்று நோக்கின.

அவன் அமர்ந்ததும், மலர் நேரடியாக விஷயத்திற்கு வந்தவள், “இங்க பாருங்க பாலா… ஒரு பெரிய கம்பெனியை நடத்தின உங்களுக்கு இந்த ஜாப்பும், இதுல வர்ற சேலரியும் ஒரு பொருட்டாவே இல்லாம இருக்கலாம், ஆனா உங்களையே நம்பி நிக்கிற ஃபிரெண்ட்ஸைப் பத்தி யோசிச்சுப் பார்த்தீங்களா? உங்க கம்பெனிக்காகவும், உங்களுக்காகவும் அவங்க எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க” என்றதும், பாலாவின் கண்கள் வியப்பில் விரிந்தன. அவளுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்பதுபோல் அவளைப் பார்த்தான். 

“உங்களோட பிசினஸ் லாஸ்ல அவங்களோட பணமும் சேர்ந்து மாட்டிக்கிட்டு இருக்கு…  நஷ்டத்துல இருந்து அவங்க மீண்டு வரணும்னுதான் உங்க எல்லாருக்கும் இங்க ஒரே ஆபீஸ்ல வேலையும் கொடுத்திருக்காங்க. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீங்க…” என்றாள் பொறுமையாக.

“இது டீம் ஒர்க்… இங்க ஈகோ பார்க்காம விட்டுக் கொடுத்து பக்குவமா நடந்துக்கிறது தான் மேனேஜ்மென்ட்டுக்கான முக்கியமான தகுதி. உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… நீங்க வேலையை முடிச்சுட்டு என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணுங்க” என்று கணினியை நோக்கியபடி, நிதானமாகக் கூறிவிட்டுத் தன் அன்றாட வேலைகளில் மூழ்கினாள். 

மறுவார்த்தை ஏதும் பேசாமல் மௌனமாக எழுந்தவன், நேராகத் தன் இருக்கைக்குச் சென்று, மலர் கொடுத்த பயிற்சி வேலையை செய்ய ஆரம்பித்தான்.

(பாலா அவ்வளவு கெட்டவன்லாம் இல்லை, கொஞ்சம் கெட்டவன்தான்! கோபத்தில் ஆக்ரோஷமாகப் பேசியவனை விட, அமைதியாக இருக்கும் இவன் செம டேஞ்சர்…)

 

******

நாட்கள் உருண்டோடின….

ஒருவழியாகப் புதிய திட்டக்குழுவில் பாலாவும் சசியும் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர். 

பிராஜெக்ட் மிக நேர்த்தியாக முடிவடைந்து, இறுதிச் சோதனைக்காக (Final Testing) மலரின் கைக்குச் சென்றது. அவளும் பணியை முடித்ததும், மிகுந்த திருப்தியுடன் திட்டக்குழு மேலாண்மை அலுவலரின் (Project Manager) அறைக்குச் சென்றாள். 

“சார்… பிராஜெக்ட் அவுட்புட் பெர்ஃபெக்ட்டா வந்திருக்கு. நாளைக்குக் காலையில கிளையண்டுக்கு இதை சப்மிட் பண்ணிடலாம்” என்று நம்பிக்கையோடு கூறிவிட்டாள்.

மாலை அலுவலக நேரம் முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்பினர்; அந்தப் பிரிவே மெல்ல நிசப்தமடைந்தது. அதுவரை காத்திருந்த பாலா, தன் பழிவாங்கும் திட்டத்தை அரங்கேற்ற இதுதான் சரியான தருணம் என முடிவு செய்தான். 

எவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு நவீன சிசிடிவி ஜாமரைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவன், மெல்ல மலரின் கண்ணாடித் தடுப்பறைக்குள் நுழைந்தான். 

அவளது கணினியை ஆன் செய்ததும் லாக்-இன் பாஸ்வேர்ட் கேட்டு நின்றது. பாலா தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பூட்டபிள் லினக்ஸ் பென்டிரைவை எடுத்து அவளது சிஸ்டத்தில் மாட்டினான்.

கணினியை ரீஸ்டார்ட் செய்து, விண்டோஸ் செக்யூரிட்டியை பைபாஸ் மூலமாக ஹேக் செய்தான். மலரின் அட்மின் லாக்-இன் உள்ளே சென்றவன், தாங்கள் அத்தனை பேரும் உழைத்து உருவாக்கிய மொத்தத் திட்டக் கோப்புகளையும் கரப்ட் செய்து, அழித்துவிட்டான்! அவனது இதழ்களில் ஒரு வஞ்சகப் புன்னகை அரும்பியது.

🌹காதல் மலரும்🌹

 

❤️ Loading reactions...
4 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!