12.ராட்சசனின் காதல் பாவை

12… ராட்சசனின் காதல் பாவை…

போன பகுதியில்:

இவன் சொல்லியபடி, அந்த ஃபைலின் ஒரு காப்பியை எடுத்தவன், அதை லேப்டாப்பிலும் சேமித்துக் கொண்டான். பின்னர், அந்த ஃபைலை லாக்கர் ரூமில் வைத்துப் பூட்டினான் சுனில்.

இனி…

தன் தோழியைத் தேடிக்கொண்டு வந்தவள், அவள் எங்கும் இல்லாததைப் பார்த்ததும்,

“இவ எங்க போயிருப்பா?” என்று யோசித்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீனா.

அவள் இப்படியே யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்குப் பின்னால் வந்த ஒரு கை, அவளுடைய தோளில் தட்டியது. அதில் பயந்துபோனவள்,

“ஐயோ அம்மா!” என்று அலறினாள்.

“ஏய், எருமை! எதுக்குடி கத்துற? நான் தான்!” என்று சொன்னாள் கவி.

“அடியே, அரைப் பைத்தியமே! இப்படித்தான் பின்னாடியிலிருந்து வந்து பயமுறுத்துவியா? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“நீ எதுக்குடி பயப்படணும்? அதுவும் இங்க நின்னு என்னத்த அப்படி பலமா யோசிச்சிட்டு இருக்க? நீ ஏதோ யோசிக்கிறேன்னு தான் தோளைத் தட்டினேன். அதுக்கு ஏன் இப்படி பயந்த?” என்று கேட்டாள் கவி.

“அது வந்துடி… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னுதான் வந்தேன். அதுவும் ரொம்பவே முக்கியமான விஷயம். உன்னை எல்லா இடத்துலயும் தேடினேன். நீ கிடைக்கல. அதான் எங்க போயிருப்பேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா, எருமை மாடு மாதிரி இருக்கிற நீ பேய் மாதிரி வந்து பயமுறுத்துற!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“ஓ… அதுவா! நான் ஒரு ஃபைல் பார்த்துட்டு இருந்தேன். அதுல ஒரு ப்ராடக்ட்டோட சேல்ஸ் ரொம்பவே கம்மியான மாதிரி இருந்தது. ஆனா, போன மாசம் பார்த்தப்போ அதோட சேல்ஸ் ரொம்ப அதிகமா இருந்தது. அதான் என்ன ஏதுன்னு விசாரிக்கப் போயிருந்தேன். அதைவிடு, இப்போதான் வந்துட்டேன்ல! நீ ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே… அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்று கேட்டாள் கவி.

“ரொம்பவே சந்தோஷமான விஷயம்! நாம எதிர்பார்க்காத ஒரு விஷயம். அதுமட்டுமில்ல, நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டோம்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“அடியே, என்ன ஏதுன்னு சொல்லுடி! நீ போடுற பில்டப்பைப் பார்த்தா, எனக்கு அது என்னன்னு உடனே தெரிஞ்சுக்கணும் போல இருக்கு. தயவுசெஞ்சு சீக்கிரமா சொல்லித் தொலைடி!” என்று அவசரப்படுத்தினாள் கவி.

“சரி, சரி! சொல்றேன். அவசரப்படாத. நம்ம பாஸுக்கு என்னைப் பி.ஏ-வா அப்பாயின்ட் பண்ணியிருக்காங்க!” என்று சந்தோஷத்துடன் சொன்னாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட கவிக்கு அவ்வளவு சந்தோஷம்! தன்னுடைய தோழிக்கு, அவளுடைய திறமைக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது என்று நினைத்தவள், உடனே அவளைக் கட்டியணைத்துத் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

“வாவ், ஸ்ரீனா! உனக்கு இந்த வேலை கிடைச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்டி!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் கவி.

“தேங்க்ஸ் டி!” என்று சிரித்தபடியே சொன்னாள் ஸ்ரீனா.

இந்த விஷயம் அனைத்து டிபார்ட்மென்ட்களுக்கும் தெரியவர, அனைவருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருந்தது.

பி.ஏ-வா? அதுவும் ஒரு பெண்ணா? என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இத்தனை நாட்களாக யாரையும் பி.ஏ-வாக நியமிக்காத விதுரன், திடீரென்று ஒரு பெண்ணைப் பி.ஏ-வாக நியமித்திருப்பது அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

அதைப் பற்றியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.

இப்படியே அந்த நாளும் ஓடியது. அனைவரும் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினார்கள். இரு தோழிகளுக்கும் அப்படியொரு சந்தோஷம்! அந்தச் சந்தோஷத்துடனேயே இருவரும் வீட்டிற்குச் சென்றார்கள்.

—

மறுநாள் காலை…

இருவரும் கடவுளின் முன்பு நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள்.

“ஈஸ்வரா! இனிமேலும் நீதான் நான் எந்தத் தப்பும் பண்ணாம பார்த்துக்கணும். பி.ஏ.ங்கிறது வெறும் வேலை மட்டுமில்ல, ரொம்பவே முக்கியமான பொறுப்புன்னு எனக்குத் தெரியும். என்னோட வேலையை நான் சரியா செய்யணும். அதுக்கு நீதான் எப்பவுமே என்கூட இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டாள் ஸ்ரீனா.

அவளுக்கு அருகில் நின்றிருந்த கவி, தன்னுடைய வேண்டுதலைத் தொடங்கினாள்.

“இவ்வளவு நாள் எங்களுக்கு நீதான் துணையா இருந்திருக்க. இனிமேலும் நீதான் எங்களுக்குத் துணையா இருக்கணும். நாங்க இந்த வேலைதான் வேணும், அந்த வேலைதான் வேணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்கோம். ஆனா, இப்போ எங்களுக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுத்திருக்க. அதுவும் என்னோட ஃப்ரெண்டோட திறமையைப் பார்த்து அவளுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கிடைச்சிருக்கு. எப்பவுமே அவள்கூடவே இருந்து, அவளுக்கு எல்லா விஷயத்துலயும் சப்போர்ட் பண்ணணும்” என்று வேண்டிக்கொண்டாள் கவி.

இவர்கள் இருவரும் இப்படித் தங்களுடைய வேண்டுதல்களை முன்வைத்துக் கொண்டிருக்க, அந்தக் கடவுளும் அவர்களுடைய பிரார்த்தனையைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

ஆனால், இப்போதைக்கு அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை.

ஏனென்றால், விதியின் விளையாட்டிலிருந்து யாராலும் தப்ப முடியாது. அந்த விதிக்கு முன்னால் கடவுள்கூடச் சில நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டியிருக்கும். அது அவருக்கும் தெரியும் அல்லவா?

அதனால், அவர்களுடைய வேண்டுதலை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தார். தனக்கான நேரம் வரும்போது அவர்களுக்கு உதவலாம் என்று நினைத்துக்கொண்டார்.

எப்போதும்போல இரு தோழிகளும் வீட்டிலிருந்து கிளம்பி, தங்களுடைய ஆபீஸுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இவர்கள் உள்ளே நுழைந்ததும், அங்கே இருந்தவர்கள் அனைவரும் இவர்களையே பார்த்தார்கள். ஆனால், முதலில் இருவரும் அதைக் கவனிக்கவில்லை.

நேரம் செல்லச் செல்ல, அனைவரும் தங்களையே பார்ப்பதை உணர்ந்ததும் அவர்களுக்கே ஒருமாதிரியாகிவிட்டது.

“ஏய், என்னடி எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க?” என்று கேட்டாள் கவி.

“எனக்கே தெரியலடி. உன்னை மாதிரிதானே நானும் இருக்கேன்? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாதானே வந்தோம்? ஏதோ தனித்தனியா வந்த மாதிரி பேசுற, அரைப் பைத்தியமே! முதல்ல கார்டைப் பஞ்ச் பண்ணு. அதுக்கப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்” என்றாள் ஸ்ரீனா.

அவள் சொன்னதைக் கேட்ட கவி, உடனே தன்னுடைய கார்டைப் பஞ்ச் செய்தாள்.

அதன்பிறகு, ஸ்ரீனா மீண்டும் அங்கிருந்தவர்களைப் பார்த்தாள். அனைவரும் தங்களையே பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. ஆனால், எதற்காக அப்படிப் பார்க்கிறார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை.

எதற்காக எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க? என்று யோசித்தவளின் பார்வை தற்செயலாக ரிசப்ஷன் பக்கம் திரும்பியது.

அடுத்த நிமிடமே ரிசப்ஷனை நோக்கிச் சென்றவள்,

“மேம்…” என்று அழைத்தாள் ஸ்ரீனா.

“சொல்லுங்க, மேம்” என்றாள் ஷீலா.

“மேம், நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எல்லாரும் ஏன் எங்களையே பார்க்கிறாங்க?” என்று தயக்கத்துடன் கேட்டாள் ஸ்ரீனா.

அங்கிருந்தவர்களை ஒருமுறை பார்த்த ஷீலா,

“அதுவா, மேம்! வேற ஒண்ணுமில்ல. நீங்க பாஸுக்கு பி.ஏ-வா அப்பாயின்ட் ஆகியிருக்கீங்க இல்லையா? அதனாலதான் எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கு” என்றாள்.

“வாட்? இதுல என்ன ஆச்சரியப்படுறதுக்கு இருக்கு?” என்று கேள்வியாகக் கேட்டாள் ஸ்ரீனா.

அதற்கு ஷீலா ஏதோ சொல்ல வரும்போது, வாசலில் திடீரென்று சலசலப்பு சத்தம் கேட்டது.

அதை உணர்ந்த ஷீலா, உடனே ஸ்ரீனாவிடம் திரும்பினாள்.

“சாரி, மேம்! பாஸ் வராருன்னு நினைக்கிறேன். அதுவும் இல்லாம, சேல்ஸ் டிபார்ட்மென்ட் ஹெட் உங்க கிட்ட ஒரு விஷயத்தை இன்பார்ம் பண்ணச் சொன்னாரு. நேத்து நீங்க பார்த்துட்டு இருந்த ஃபைல்ல ஏதோ பெண்டிங் ஒர்க் இருக்காம். அதை முடிச்சுக் கொடுத்துட்டுப் போகச் சொல்லியிருக்காரு. நீங்க அதை முதல்ல போய் ஃபினிஷ் பண்ணுங்க. உங்களைப் பாஸ் கூப்பிட்டதும் நான் இன்பார்ம் பண்றேன்” என்றாள் ஷீலா.

அதைக் கேட்ட ஸ்ரீனாவுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

ஆனால், நேற்று தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் சில விஷயங்கள் மீதமிருந்தது அவளுக்கே தெரியும். அதனால், முதலில் அந்த வேலையை முடித்துவிட்டு, பிறகு பாஸைப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.

அதன்பிறகு, தன்னுடைய தோழியுடன் அந்த இடத்திலிருந்து கிளம்பினாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மீதமிருந்த வேலையை முடித்தாள் ஸ்ரீனா.

அவள் வேலையை முடிக்கும் நேரத்தில், ஆபீஸ் பாய் அவளிடம் வந்து நின்றான்.

“மேடம், ஷீலா மேடம் உங்களைப் பாஸைப் பார்க்கச் சொன்னாங்க” என்றான்.

“ஓகே, நான் போறேன்” என்று சொன்னவள், உடனே கவியிடம் திரும்பினாள்.

“கவி, நான் பெண்டிங் இருந்த ஒர்க்கை முடிச்சிட்டேன். இப்போ பாஸோட கேபினுக்குப் போறேன். நம்ம லஞ்ச் பிரேக்கின்போது மீட் பண்ணலாம். இந்த ஃபைலை சார் கிட்ட கொடுத்துடு” என்று சொல்லியவள், தன்னுடைய கையிலிருந்த ஃபைலை அவளிடம் கொடுத்தாள்.

பிறகு, கடைசித் தளத்தை நோக்கிச் சென்றாள்.

சிரித்துக்கொண்டே செல்பவளுக்கு, இன்னும் சிறிது நேரத்தில் தன்னுடைய சிரிப்பு காணாமல் போகப்போகிறது என்பது தெரியவில்லை.

—

கடைசித் தளத்திற்கு வந்த ஸ்ரீனா, அங்கே இருந்த அறையின் கதவில் பொறிக்கப்பட்டிருந்த சேர்மன் என்ற எழுத்துகளைப் பார்த்தாள்.

அதுதான் தன்னுடைய பாஸின் அறை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவள், சந்தோஷத்துடனேயே கதவின் முன்பு வந்து நின்றாள்.

பிறகு, கதவை இரண்டு முறை தட்டினாள்.

ஆனால், உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அதில் குழப்பமடைந்தவள், இது அவருடைய அறைதானா? என்று சுற்றிலும் பார்த்தாள்.

அந்தக் கதவில் மட்டும்தான் சேர்மன் என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதனால், இதுதான் தன்னுடைய பாஸின் அறை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டாள்.

“என்ன இது? சேர்மன் ரூம்னு போட்டிருக்கு. ஆனா, எந்தப் பதிலும் வரலையே! பரவாயில்ல…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

ஆனால், அந்த அறை சேர்மனின் கேபின் மாதிரியே இல்லை. ஏதோ வெயிட்டிங் ஹால் போல இருந்தது.

அதைப் பார்த்தவள், குழப்பத்துடன் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள்.

அப்போதுதான், அங்கே இன்னொரு கதவு இருப்பதைக் கவனித்தாள்.

அந்தக் கதவைப் பார்த்தவள், ஒருவேளை அதுதான் சேர்மனின் கேபினுக்குச் செல்லும் வழியாக இருக்குமோ என்று நினைத்தாள்.

பிறகு, அந்தக் கதவின் அருகில் சென்று இரண்டு முறை தட்டினாள்.

“மே ஐ கம் இன், சார்?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“எஸ், கம் இன்!” என்று கர்ஜனையாகச் சொன்னான் விதுரன்.

அவனுடைய அனுமதி கிடைத்ததும், கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் ஸ்ரீனா.

அந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு, அங்கே யாரும் இல்லாததுபோலத் தோன்றியது. ஆனால், அவளுக்குப் பின்னால் இருந்த சேர்மனின் இருக்கை மட்டும் அவளுடைய பார்வையில் பட்டது.

அந்தச் சுழலும் நாற்காலி அவளுக்குப் பின்புறமாகத் திரும்பியிருந்தது.

அதில் அமர்ந்திருப்பவர் யார் என்று அவளுக்குத் தெரியவில்லை.

“ஹலோ, பாஸ்! ஐ ஆம்…” என்று அவள் பேசத் தொடங்கியபோது,

“கம் பேக், ஸ்ரீனா!” என்றான் விதுரன்.

அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

குழப்பத்துடன் அந்தச் சுழலும் நாற்காலியைப் பார்த்தவள்,

“பாஸ், நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டவன், அடுத்த நொடியே அவள் புறம் திரும்பினான்.

“நோ கன்ஃபியூஷன், ஸ்ரீனா!” என்று சொல்லியபடியே தன்னுடைய நாற்காலியைத் திருப்பினான் விதுரன்.

அவ்வளவுதான்!

தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்த ஸ்ரீனாவுக்கு அப்படியொரு அதிர்ச்சி!

அவள் காண்பது கனவா, நனவா என்று யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

தன்னுடைய கனவில்கூட யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ, அவனே இப்போது தன் கண் முன்னால் அமர்ந்திருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

அவளுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இதயம் ஒரு நொடி துடிக்க மறந்ததைப் போல இருந்தது.

இவனா? இவன் எப்படி இங்கே?

அவளுடைய மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

ஆனால், அந்தக் கேள்விகள் எதற்கும் அவளிடம் பதில் இல்லை.

அவளுடைய பார்வை விதுரனின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

அவனோ, அவளுடைய அதிர்ச்சியை ரசிப்பதைப் போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இனி என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!