25.ராட்சசனின் காதல் பாவை

25. ராட்சசனின் காதல் பாவை

போன பகுதியில்:

“ஷட் அப்!” என்று சொன்னான் விதுரன்.

இனி…

ஆனால், அதைக் கேட்கும் நிலையில் அவள் இல்லையே. அவன் சொல்லியும் இவள் அழுது கொண்டே இருக்க, அதில் கடுப்பானவன் அவளுடைய பின்னந்தலையைப் பிடித்து, தன்னை நோக்கி இழுத்து நிற்க வைத்தான்.

“அழுகுறதை நிறுத்தப் போறியா இல்லையா?” என்று கர்ஜனையாகக் கேட்டான் விதுரன்.

அவன் பிடித்து இழுத்ததில் வலியை உணர்ந்தவள், அப்போதுதான் தான் எங்கே இருக்கிறோம் என்று பார்த்தாள். அதுவும் விதுரனின் அருகில், அவளுக்கும் அவனுக்கும் நூல் இடைவெளி மட்டுமே இருக்கும் அளவுக்கு நெருக்கத்தில் இருப்பதைப் பார்த்தவளுக்குப் பயம் அதிகமானது. அதைவிட மனவேதனை அதிகமானது. அவனைப் பார்த்தபடி அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க,

“இப்போ ஸ்டாப் பண்ணப் போறியா இல்லையா?” என்றான் விதுரன் பற்களைக் கடித்துக்கொண்டு.

அவன் கோபத்தை உணராதவள்,

“அவங்க காமிச்ச போட்டோஸ்ல இருக்குறது எல்லாம் நான் கிடையாது. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல. அந்த போட்டோஸ் எல்லாம் பார்த்துட்டு எப்படி அழாம இருக்கச் சொல்றீங்க? அதுவும் இல்லாம, அவங்க பேசினதெல்லாம் நீங்களும் கேட்டீங்கதானே? நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது” என்று சொல்லி இன்னும் அழத் தொடங்கினாள்.

இவளுடைய அழுகையைப் பார்க்கும்போது அவனுக்குக் கடுப்பாக இருந்தது. இருந்தும் தன் பொறுமையை இழுத்துப் பிடித்தவன்,

“இங்க பாரு, அவங்க ரிப்போர்ட்டர்ஸ் கிடையாது. ரிப்போர்ட்டர்ஸ் எப்பவுமே அப்படி பேச மாட்டாங்க” என்று அவளிடம் பற்களைக் கடித்துக்கொண்டு பேசினான் விதுரன்.

இவன் சொல்லியும் அவள் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்க,

“அது எப்படி? பிரஸ் மீட்டில் ரிப்போர்ட்டர்ஸ்தானே இருப்பாங்க. அவங்க ரிப்போர்ட்டர்ஸாதான் இருக்க முடியும். அந்தப் போட்டோஸ் எல்லாம் அவங்க பத்திரிக்கையில போடப் போறாங்க. என்னை இந்த உலகமே பார்த்து அந்த மாதிரி பொண்ணுன்னு நினைக்கப் போகுது” என்று சொன்னவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.

அதில் கடுப்பின் உச்சிக்கே சென்றவன், அவள் பிடித்திருந்த பிடியை இறுக்கி,

“இங்க பாரு, ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாதா? அவங்க ரிப்போர்ட்டர்ஸ் கிடையாது. உன்னோட போட்டோஸ் வெளியே வராது” என்று அழுத்தமாகச் சொன்னான் விதுரன்.

அவன் சொன்னதில் அவன் முகத்தையே கண் இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவள் தன்னைக் கண் இமைக்காமல் பார்ப்பதைப் பார்த்தவன், அவனையும் அறியாமல் அவளுடைய கண்களை ஆழமாகப் பார்க்கத் தொடங்கினான் விதுரன்.

இருவருடைய பார்வையும் அப்படியே நிலைத்திருக்க, அந்த நேரம் சுனில் விதுரனின் அறைக் கதவைத் தட்டினான். அந்தச் சத்தத்தில் நினைவுக்கு வந்த விதுரன், நொடியும் தாமதிக்காமல் அவளிடமிருந்து விலகி நின்றான்.

விலகியவனிடம் எந்தப் புதிய மாற்றமும் இல்லை. ஆனால், இவ்வளவு நேரம் அவனுடைய நெருக்கத்தில் நின்று, அவனின் கூர்மையான கண்களை ஆழமாகப் பார்த்திருந்தவளுக்கு ஏனோ தன்னையும் அறியாமல் உடல் சிலிர்த்தது.

அவள் அதே இடத்தில் நிற்க,

“கம்மிங்” என்று சொன்னான் விதுரன்.

அவனுடைய அழைப்பு வந்ததும் சுனில் உள்ளே நுழைந்தான். ஸ்ரீனா அசையாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நிமிடம் அவளைப் புரியாமல் பார்த்தவன்,

“பாஸ், நீங்க சந்தேகப்பட்ட மாதிரி அவங்க ரிப்போர்ட்டர்ஸ் கிடையாது. அவங்களை நம்ம இடத்துக்குக் கொண்டு போகச் சொல்லியிருக்கேன்” என்று சொன்னான் சுனில்.

இவனுடைய சத்தத்தில் நினைவுக்கு வந்தவள், இவன் சொன்னதைக் கேட்டவுடன் விதுரன் சொன்னது ஞாபகத்திற்கு வர, விதுரனை ஒரு பார்வை பார்த்தாள். ஆனால், அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் இருக்கும் அதே முகபாவனையுடன் இருந்தான்.

அதைப் பார்த்தவளுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு அவனுடைய நெருக்கத்தில் நின்றது ஞாபகம் வர, பெண்ணவளுக்கே உரித்தான வெட்கம் தன்னை மறந்து எட்டிப் பார்த்தது. ஆனால், அது ஒரு நொடிதான். அடுத்த நொடியே சுனில் சொன்னதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

‘நம்ம இடத்தில்’ என்று அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு அந்த டார்க் பேலஸ்தான் ஞாபகம் வந்தது. அதில் அவளுடைய உடல் முழுவதும் நடுங்கியது.

“ம்… ஓகே. அவங்களை விசாரிக்கச் சொல்லு. அவங்களை அனுப்புனது யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும். அப்படி அவங்க சொல்லாம அடம் பிடிச்சாங்கன்னா…” என்று நிறுத்தினான் விதுரன்.

அவன் தன் வார்த்தையை அப்படியே நிறுத்திவிட, அதைப் புரிந்துகொண்ட சுனில்,

“அவங்களை நம்ம ஸ்டைல்ல விசாரிக்கச் சொல்றேன் பாஸ். எப்படி சொல்லாம போறாங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்று சொன்னான்.

அதைக் கேட்டவன் சரி என்பது போல் தலை அசைக்க, அதைப் பார்த்த சுனில் சரி என்று சொல்லிவிட்டு, திரும்பி ஸ்ரீனாவைப் பார்த்தான்.

“ஸ்ரீ, நீ எதையும் நினைச்சுப் ஃபீல் பண்ணாத. அவங்க ரிப்போர்ட்டர்ஸ் கிடையாது. பாஸோட பெயரைக் கெடுக்குறதுக்கு யாரோ இப்படி பண்ணியிருக்காங்க. இந்தப் போட்டோஸ் எல்லாம் வெளியே வராது. எதையும் நினைச்சுக் கவலைப்படாம இரு” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்டவள் திரும்பி விதுரனை ஒரு பார்வை பார்த்தாள். ஏனென்றால், சிறிது நேரத்திற்கு முன்பு விதுரனும் இதையேதான் சொன்னான். என்ன வித்தியாசம் என்றால், அவன் அவனுடைய ஸ்டைலில் சொன்னான்; சுனில் கொஞ்சம் தன்மையாகச் சொன்னான். இது மட்டும்தான் இருவரிடமும் மாறுபட்டது.

அதில் சரி என்பது போல் தலை அசைத்தாள். அதைப் பார்த்த சுனிலுக்கு அது பிடிக்காமல் போகவில்லை.

இவள் அப்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்க, அதைச் சகித்துக்கொள்ள முடியாதவனோ உடனே அவளுக்கு வேலை கொடுத்தான். சிறிதும் மனசாட்சியே இல்லாமல்,

“இப்படியே நின்னு அழுதுட்டு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? டெண்டருக்கான கொட்டேஷன் இன்னும் ரெண்டு நாள் ரெடியா இருக்கணும். அது உங்க ரெண்டு பேரோட பொறுப்புன்னு சொன்னேனே, மறந்துட்டீங்களா? அதுக்கான ஒர்க்கைப் பாருங்க” என்று சொன்ன விதுரன்,

தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டான். தனது லேப்டாப்பை உயிர்ப்பித்து, தனக்கான வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டான்.

அதைப் பார்த்தவளுக்கு, ‘இவன் எல்லாம் மனிதன்தானா? இவன் எல்லாம் என்ன ரகம்?’ என்று மனதிற்குள் நினைத்தவள், நேற்று சுனில் சொன்ன அனைத்தும் ஞாபகம் இருக்க, தனது இருக்கைக்கு வந்தாள். அவளுடைய கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து அதற்கான வேலையைத் தொடங்கினாள்.

ஒருபுறம் சுனிலும், அவர்களை யார் அனுப்பினார்கள் என்று தெரிந்துகொள்ள அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தான்.

“உங்களை யாரு அனுப்புனது? மரியாதையா சொல்லிடுங்க. இல்லன்னா உங்க உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை” என்று சொன்னான் சுனில்.

அவன் சொன்னதைக் கேட்டவர்கள், உண்மையைச் சொன்னால் இவர்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து மீண்டும் பொய் கூறத் தொடங்கினார்கள்.

“இங்க பாருங்க, நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க. நாங்க ரிப்போர்ட்டர்ஸ்தான். ஒழுங்கா எங்களை வெளியே விட்டுருங்க. எங்களை மட்டும் நீங்க வெளியே விடலைன்னா, ஹெட்லைன்ல நாளைக்கு நீங்கதான் இருப்பீங்க” என்று சொன்னான் ஒருவன்.

“என்னடா சொன்னீங்க? நாங்க ஹெட்லைன்ல இருப்போமா? நீங்க மட்டும் யாருன்னு சொல்லலைன்னு வச்சுக்கோ, நீங்க யாருன்னு தெரியாத அளவுக்கு ஹெட்லைன்ல வருவீங்க நாளைக்கு” என்று சொன்னான் சுனில்.

இவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்தவன்,

“என்ன, நீங்கதான் நாளைக்கு ஹெட்லைன்ல வரணுமா? இல்ல உங்களை யார் அனுப்புனதுன்னு சொல்றீங்களா?” என்று கேட்டான் சுனில்.

அதைக் கேட்ட அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த சுனில்,

“டேய், இவனுங்களுக்குச் சொன்னா புரியாது. நம்ம ஸ்டைல்ல சொல்லுங்கடா. அப்பயாவது வாயைத் திறக்கிறாங்களான்னு பார்ப்போம். அப்படியும் இல்லையா, நாளைக்கு வர நியூஸ் பேப்பர்ல இவனுங்கதான் ஹெட்லைன்ல இருக்கணும். இவனுங்க யாருன்னு தெரியாம எல்லாரும் முழிச்சிட்டு இருக்கணும். இவனுங்க குடும்பமே ஒரு பக்கம் இவனுங்களைத் தேடிக்கிட்டு இருக்கணும். ஸ்டார்ட் பண்ணுங்கடா நம்ம ட்ரீட்மென்ட்டை” என்று சொன்னான் சுனில்.

சுனில் சொல்லியதுதான் தாமதம். உடனே அடியாட்கள் அவர்கள் முன்பு வந்து நின்று, அவர்களை வெளுத்து வாங்கத் தொடங்கினார்கள்.

ஆனால், முதலில் எப்போதும் போல் சுனிலிடம், தாங்கள் ரிப்போர்ட்டர்ஸ்தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

“இங்க பாருங்க, நாங்க ரிப்போர்ட்டர்ஸ்தான். நீங்க தேவையில்லாம எங்க மேல கை வைக்கிறீங்க” என்று சொன்னான் ஒருவன்.

“ஆமா, அவர் சொல்றது உண்மைதான். நாங்க ரிப்போர்ட்டர்ஸ்” என்று சொன்னான் இன்னொருவன்.

ஆனால், மற்ற இரண்டு பேரும் வேறு எதுவும் சொல்லாமல், தங்களை விட்டுவிடும்படி வலி தாங்க முடியாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து கத்துவதைப் பார்த்த சுனில்,

“இங்க பாரு, அவங்கதான் சொல்லல. நீங்களாவது சொல்லிட்டீங்கன்னா உங்க உயிராவது தப்பிக்கும். இல்ல, அவங்களைப் போல நானும் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிச்சீங்கன்னா…” என்று சொல்லி நிறுத்தினான் சுனில்.

வலி தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தவர்கள், இவன் சொன்னதைக் கேட்டு,

“ஐயோ சார், எங்களால இதுக்கு மேல வலி தாங்க முடியாது சார்” என்று சொன்னான் ஒருவன்.

“சார், இதுக்கு மேல எங்களை ஒரு அடி கூட அடிச்சிடாதீங்க. நாங்க யாருன்னு சொன்னா நீங்க எங்களை விட்டுருவீங்களா?” என்று கேட்டான் அவன்.

“கண்டிப்பா. உங்களை யாரு இப்படி பண்ணச் சொன்னாங்கன்னு சொல்லிட்டு இங்கிருந்து கிளம்பிட்டே இருக்கலாம்” என்று சொன்னான் சுனில்.

“சார், நாங்க உண்மையாத்தான் சொல்றோம். இதுல எந்தப் பொய்யும் இல்ல. எங்களுக்கு யாரு அனுப்புனாங்கன்னு தெரியாது. ஆனா, அவங்களை இவங்களுக்கு நல்லாவே தெரியும். அதுவும் இல்லாம, அவங்க ஏதோ பெரிய இடம்னு மட்டும் எங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்ககிட்ட டீலிங் பேசிட்டு வந்து, எங்களுக்கு ஒரு வேலை இருக்குன்னு சொல்லிக் கூப்பிட்டது இவங்கதான். இங்க வந்து எப்படி பேசணும், எப்படி நடந்துக்கணும், அந்தப் பொண்ணுகிட்ட எப்படி எல்லாம் பேசணும்னு சொல்லிச் சொல்லிக் கொடுத்தது இவங்கதான். இதுக்கு மேல எங்களுக்கு வேற எதுவும் தெரியாது சார். நீங்க எங்களைக் கொன்னாலும் இதுதான் எங்களுக்குத் தெரிஞ்சது” என்று சொன்னான் அவன்.

காதல் பாவை தொடரும்…

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!