அத்தியாயம்- 7
கீழே சிதறி கிடந்த கைப்பேசியை பார்த்த அபர்ணா அடுத்த நொடி, அவள் கை பையை மாட்டிக் கொண்டு அங்கே இருந்து சிட்டாக பறந்து விட்டாள் பள்ளி கூடத்திற்கு.
ஆராதனா பயத்துடன் கீழே விழந்த பாகங்களை பொருக்கி எடுத்தவள் “என்ன காரியம்டி பண்ணிட்ட” என்று கேட்டுக் கொண்டே தங்கை நின்று புறம் திரும்பி பார்த்தாள்.
அபர்ணா நின்ற இடம் வெறுமையாக இருபத்தை கண்டு, புரிந்துக் கொண்டாள் தங்கை தப்பி ஓடிவிட்டாள் என்று.
பின்னே அங்கே நின்று இருந்தால் இந்நேரம் ஒரு வழியாகி இருப்பாள் அல்லவா அபர்ணா.
கரத்திலிருந்த உடைந்த பொருளை பார்த்த ஆராதனாவிற்கு ரத்த கண்ணீரே வராத குறை தான்.
“போட்டோ வேற டெலீட் பண்ணல. இப்போ என்ன பண்றது. அய்யோ அதுல வேற கண்டபடி போஸ் கொடுத்து இருக்கேனே. யாராவது பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பாங்க. ஏற்கனவே நேத்து சௌந்தர்யா பேசியதில் அவங்க ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாங்க. இப்போ போன் வேற உடைஞ்சிடுச்சி தெரிந்தால் இன்னும் தானே பீல் பண்ணுவாங்க. ரொம்ப காஸ்ட்லியான போனால தெரியுது. எக்குதப்பா வேற போட்டோ உள்ளே இருக்கு. அய்யோ என்ன பண்றது ஒன்னும் புரியலையே” என்று புலம்பினாள் ஆராதனா.
விட்டால் அழுதே விடுவாள் போல். அந்த அளவிற்கு நொந்து போனாள்.
அந்நேரம் அவள் அறை தட்டபட அவசர அவசரராக உடைந்த கைப்சியை அவள் கை பையில் திணித்தாள்.
பின் கதவின் அருகில் சென்று திறந்து பார்க்க அங்கே தில்லை நாதனும் ரகுபதியும் தயராகி நின்று இருந்தனர்.
“அம்மாடி ஆராதனா நானும் ரகுவும் சம்மந்தியம்மா வீட்டுக்கு போயிட்டு மன்னிப்பு கேட்டு வரோம். நீ போகும் போது ஏதோ சொல்லனும் சொன்னீயேடா” என்று சொன்னார் தில்லைநாதன்.
ஆராதனா பதற்றத்துடன் “ஹான் அதெல்லாம் ஒன்னும் இல்ல பெரியப்பா. சும்மா தான்” என்றவள் மனமோ,
‘நம்மளும் பெரியப்பா கூட போய் தாட்சாயிணி அத்தை கிட்ட மன்னிப்பு கேட்டுடலமா? கேட்டு நம்ம கை காசை போட்டு போனை ரெடி பண்ணிட்டு அந்த போட்டோவை டெலீட் செய்து அந்த போனை அவங்க கிட்ட கொடுத்திடலாம்” என்று யோசித்தாள்.
“அப்போ சரிம்மா நாங்க கிளம்புறோம்” என்று தில்லை நாதன் நகர போக, அவரை தடுத்தாள் ஆராதனா.
“பெரியப்பா ஒரு நிமிசம்” என்றவள் தயங்கியப்படி “நானும் உங்க கூட வரட்டுமா? எனக்கும் அவங்களை பார்க்கனும் போல இருக்கு” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
ரகுபதியோ “உனக்கு காலேஜ் இல்லையா?” என்றவனிடம்,
“இன்னிக்கு கல்ச்சரஸ் ப்ராக்டிஸ் தான் அண்ணா. அதனால மதியம் மேல போன போதும்” என்று ஒருவழியாக அவர்களை சம்மதம் சொல்ல வைத்தாள்.
பின் கடகடவென தலையை நன்றாக வாரியவள் பையை மாட்டிக் கொண்டு துப்பாட்டாவை போட்டுக் கொண்டு அவர்களுடன் தாட்சாயிணி வீட்டிற்கு புறப்பட்டாள்.
இவர்கள் சரியாக வெளியே காலடி எடுத்து வைத்த நேரம் “கூட்டமா கிளம்பிட்டீங்க போல” என்று குத்தல் பேச்சோடு கொட்டாவி விட்டப்படி சோபாவில் கால்களை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தாள் சௌந்தர்யா.
அதை கேட்ட மூவரும் அவளை வெறுப்புடன் திரும்பி பார்த்தனர்.
தில்லைநாதனோ “ஒரு பொம்பளபுள்ள எழுந்துக்கிற நேரமா இது? சூரியன் மூஞ்சில அடிக்கிற வரைக்கும் தூங்கிட்டு எப்படி எழுந்து வந்து உட்கார்ந்து இருக்க? உன் மூஞ்சை பார்த்துட்டு போனா.. போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்” என்று மகளிடம் எரிந்து விழுந்தார்.
ரகுபதி தந்தையின் கரத்தை பிடித்தவன் “அப்பா கிளம்பும் போது எதுக்கு டென்ஷனாகுறீங்க. விடுங்க அவளை பத்தி தான் தெரியும்ல. வாங்க நம்ம போலாம்” என்று அங்கே இருந்து மூவரும் புறப்பட்டு சென்றனர்.
தந்தை பேசியதில் சிடுசிடுவென அமர்ந்து இருந்தவளிடம் “சௌந்தும்மா காபி இந்தா” என்று முகத்திற்கு நேராக நீட்டினார் கௌசல்யா.
அதை வெறுப்புடன் தட்டி விட்டு “உன் புருஷன் கிட்ட பேசுனீயா இல்லையா ம்மா?” என்று கோபமாக கத்தினாள்.
“ஏன்டி இப்படி கத்துற. அந்த மனுஷன் கிட்ட காலையிலே பேசிட்டேன்” என்று பறந்து போய் விழுந்த காபி டம்ளரை எடுத்தார் கௌசல்யா.
“அப்புறம் ஏன் அந்த பொம்பளை வீட்டுக்கு போறாங்க?”
“ம்.. மன்னிப்பு கேட்க போறாங்களாம்” என்று சொல்லிவிட்டு அவரும் கடுப்புடன் சமையலறைக்குள் சென்றார்.
“இந்த வீட்ல எல்லாருக்கும் நான் தான் அம்மி கல்லு. எல்லாம் என் தலையில தான் மிளகாய் அறைப்பாங்க. பொண்ணுக்கும் அப்பாவுக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்” என்று தன் விதியை நினைத்து புலம்பிப்பவள் கொட்டிய காபியை சுத்தம் செய்தார்.
சௌந்தர்யா தனதறைக்கு சென்றவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.
அவளிற்கு இருக்கும் பயமே எங்கே தில்லை நாதன் தாட்சாயிணியிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் நிச்சியம் கல்யாணம் என்று வந்து விடுவாரோ என்று பயந்தாள்.
ஆனால் அது போல் இனி ஒரு காலமும் நடக்காது என்று அறியாமல்.
அங்கே தாட்சாயிணி இல்லத்தில்…
“கேஷவ் உனக்கு தான்ப்பா போன்” என்று கீழே இருந்து கேஷவ் அறையை பார்த்து குரல் கொடுத்தார் தாட்சாயிணி.
கேஷவ் சட்டை பட்டனை போட்டுக் கொண்டே “ஒரு பைஃவ் மினிட்ஸ் கழிச்சி கூப்பிட சொல்லுங்கம்மா” என்று கூறியவன் கரத்தில் ஸ்மார்ட் வாட்சை அணிந்தான்.
அவன் கூறியது போல் தாட்சாயிணி தொலைப்பேசியில் கூறி அழைப்பை துண்டிட்டு விட்டு அங்கே அமர்ந்து இருந்த ரதியிடம் “கேஷவ் போன் என்னாச்சி. ஆபிசிலிருந்து வீட்டு லேண்ட்லைனுக்கு அழைச்சி இருக்காங்க?” என்று கேட்டார்.
ரதிபாலாவோ தன் கையிலிருந்த வார இதழை மடக்கி கீழே வைத்தப்படி “அது அவங்க வீட்ல மிஸ் பண்ணிட்டானாம். இன்னிக்கு ஆளை விட்டு எடுத்துட்டு வர சொல்றேன் சொன்னான்” என்றாள்.
அதை கேட்ட தாட்சாயிணி “ஓ” என்றவர் யோசனையுடன் “அதான் அவன் இரண்டு போனை வச்சி இருந்தானே. இன்னொனு என்னாச்சி” என்று கேட்டார்.
“ம்மா அது தான் அண்ணா முந்தாநேத்து ஆபிசில் மறந்து வச்சிட்டானு சொல்லிட்டு இருந்தானே. மறந்துட்டிங்களா?”
“ஆமா மறந்துட்டேன்டா. பெரிய கம்பெனியோட முதலாளி ஆனா எப்போ பாரு போனை மறந்து எங்கேயாவது வைக்கிறதே வேலையா வச்சி இருக்கான். எப்போ பாரு அவன் பி.ஏ கூடவே இருப்பாங்களா என்ன” என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு பணியாள் உள்ளே வந்து,
“அம்மா உங்களை பார்க்க தில்லைநாதன் ஐயா வீட்ல இருந்து ஆள் வந்து இருக்காங்க” என்றான் பணிவோடு.
அவர் சொன்னதை கேட்ட தாட்சாயிணியின் புருவங்கள் சுருங்கியது.
ரதியோ “இப்போ எதுக்கும்மா அவங்க வந்து இருக்காங்க” என்று கேள்வியாக கேட்டாள்.
“தெரில ரதி” என்று சொல்லியவர் ஒரு பெருமூச்சி விட்டு “அவங்களை வர சொல்லு” என்று கூறினார் அந்த பணியாளிடம் தாட்சாயிணி.
அவரும் சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு வெளியே சென்று தில்லைநாதன், ரகுபதி மற்றும் அங்கே நின்று பூக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஆராதனாவிடம் உள்ளே போகுமாறு கூறிவிட்டு அவர் பணியை தொடர்ந்தார்.
வீட்டின் பிரம்மாண்டத்தை வியந்துப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் ரகுபதியும் ஆராதனாவும்.
பெண் பார்த்து விட்டு சென்றதிலிருந்து தில்லை நாதன் மட்டுமே ஒருமுறை தாட்சாயிணியின் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அவர் மனைவியை கூட அழைத்து வந்தில்லை.
ஒருவேளை கௌசல்யா இப்படி ஒரு பிரம்மாண்டமான இல்லத்தை பார்த்து இருந்தால் இந்நேரம் மகளுக்கு புத்திமதி கூறி இவ்வீட்டில் மருமகளாக அனுப்பி இருப்பாரோ என்னவோ.
இரண்டாம் முறை என்றாலும் தில்லை நாதனும் அந்த வீட்டை வியந்து தான் பார்த்தார்.
மிகவும் ரசனையோடு கட்டி இருக்கிறார்கள் என்று மூவரால் யோசிக்க முடியாமல் இருக்க முடியவில்லை.
தாட்சாயிணிக்கும் சரி தில்லைநாதனுக்கும் சரி ஒருவரை ஒருவர் பார்க்க சங்கடமாக தோன்றியது.
தில்லைநாதனுக்கு மகளின் செயலால் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தாட்சாயிணிக்கோ வீட்டு தேடி வந்தவர்களை வரவேற்கும் கட்டாயத்தில் இருக்கிறார்.
இப்படி இருவருமே ஒவ்வொரு கட்டாயத்தில் இருக்க. ரகுபதியோ அங்கே தங்க நிற ஓவியம் போல் எந்த அலங்காரமும் இல்லாமல் சாதாரணமாக நின்று இருந்த ரதியின் மீது ஆர்வமாக படிந்தது.
ரதியின் பார்வையோ அவர்களுடன் பதற்றமாக நடந்து வந்த ஆராதனாவின் மீது விழுந்தது.
ஆராதனாவோ அங்கே மாடிபடியிலிருந்து கோட் சூட் கச்சிதமாக இறங்கி வந்த கேஷவில் நிலைத்தது.
கேஷவ் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களை பார்த்தபடி கீழே வந்தான்.
இருக்கரம் கூப்பி “வாங்க” என்று வரவேற்றார் தாட்சாயிணி.
ரதியும் சம்பிரதாயத்திற்காக கை கூப்பி ஒரு புன்னகையை மட்டும் சிந்தினாள்.
அதற்கு மேல் கேஷவ் ஒரு தலையசைப்புடன் நிறுத்திக் கொண்டான்.
தில்லை நாதன், ரகுபதி ஆராதனா மூவரும் இருக்கரம் கூப்பி வணக்கம் சொன்னார்கள்.
“உட்காருங்க சார்” என்று கேஷவ் சொல்ல. அந்த சாரில் அழுத்தம் கொடுத்து கூறினான் அவன்.
அதை கேட்ட தில்லைநாதன் சுறுக்கென்று வலியை உணர்ந்தார்.
நேற்று வரை மாமா, மாமா என்று அழைத்தவன் இன்று சார் என்று அழைப்பதை கேட்க அவரால் தாங்க முடியவில்லை.
வருத்தமான முகத்தோடு அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தார் அவர். அவரை தொடர்ந்து ரகுபதியும் ஆராதனாவும் அமர.
தாட்சாயிணியின் அருகில் அமர்ந்த கேஷவ் “சொல்லுங்க சார். என்ன விசியமா வீடுவரை வந்து இருக்கீங்க” என்று நிதானமாக கேட்டான்.
அவன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.
முன்தினம் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததிற்கான அசௌகரியம் கூட அவனிடம் இல்லை.
ஆராதனாவின் மனமோ ‘என்ன இவரு, கோபமும் படல. வருத்தமாவும் பேசல. ரோபோ மாதிரி பேசிட்டு இருக்காரு. நேத்து நடந்ததை நினைச்சி அவருக்கு கவலையா இல்லையா? ஆனா இவருக்காக நான் எவ்வளவு வருத்தபட்டேன். அவருக்கு அந்த விசியம் பாதிக்கவேயில்லையா? அது எப்படி பாதிப்பு இல்லாம போகும்’ என்று தீவிரமாக யோசித்தாள்.
ரகுபதி குரலை செறுமிக் கொண்டு “ம்கூம்.. அது வந்து நாங்க” என பேச வந்தவனின் கரத்தை பிடித்த தில்லை நாதன் கண்களால் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு அவர் பேச ஆரம்பித்தார்.
“சம்மந்தி என்னை மன்னிச்சிடுங்க. உங்களை கூப்பிட்டு வச்சி அவமானம் படுத்திட்டோம். என் பொண்ணு அப்படி நடந்துப்பானு நான் நினைச்சி கூட பார்க்கல. எனக்கு தெரியும் நேத்து நடந்தது மன்னிக்க முடியாத தப்பு தான். ஆனாலும் மன்னிப்பு கேட்குறத தவிர வேற என்ன செய்யுறது தெரில” என்று சொன்னவர் சட்டென்று மண்டியிட்டு தாட்சாயிணியின் காலில் விழுந்து விட்டார்.
இதை எதிர்பார்க்காத அனைவருமே பேச்சற்று உறைந்து போயினர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
