8.ராட்சசனின் காதல் பாவை

8. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில்:

“ஓகே, சார். நான் அனுப்புறேன்” என்று சொல்லியவன், உடனே தான் இருக்கும் இடத்தின் லைவ் லொகேஷனை அனுப்பி வைத்திருந்தான்.

அதைப் பார்த்த சுனில் வேகமாகக் கிளம்பினான்.

இனி..

அந்த டீமின் தலைவன் உடனே சுனிலுக்கு லொகேஷன் அனுப்பியிருக்க, அதைப் பார்த்தவன் அந்த இடத்தை நோக்கிக் கிளம்பினான். ஒரு மணி நேரம் செல்ல வேண்டிய இடத்திற்கு, அவனுடைய அவசரத்தால் அரை மணி நேரத்திலேயே வந்து சேர்ந்தான்.

அவன் வரும்போதும், அவனுடைய ஆட்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரித்துக்கொண்டிருந்தார்கள். அவனைப் பார்த்தவுடன் அந்த டீமின் தலைவன் உடனே அவனிடம் வந்தவன்,

“சார், ஒரு அளவுக்கு எல்லா ஏரியாவையும் முடிச்சிட்டோம், சார். இன்னும் ரெண்டு மூணு ஏரியா மட்டும்தான் இருக்கு. இதுவரைக்கும் அந்தப் பொண்ணைப் பத்தி எந்தத் தகவலும் கிடைக்கல. ஆனா, மீதி இருக்கிற ஏரியாவுல ஏதாவது தெரியும்னு நினைக்கிறேன்” என்று சொன்னான்.

“எத்தனை பேர் இருக்கீங்க? இந்தச் சின்ன இடத்துல அந்த ஒரு பொண்ணைப் பத்தி விசாரிக்கிறது உங்களுக்கு அவ்வளவு பெரிய விஷயமா? நேத்துல இருந்து விசாரிச்சிட்டு இருக்கீங்க. ஒரு யூஸும் இல்ல! உங்களையெல்லாம் வச்சு என்ன பண்ணப்போறேன்னே தெரியல” என்று திட்டியவன், அவனும் ஒரு புறம் அவளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான்.

அப்படியே விசாரித்துக்கொண்டே வந்த சுனில், எதிரில் ஒருவர் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவரிடம் சென்றவன்,

“சார், கொஞ்சம் இந்தப் போட்டோல இருக்கிற பொண்ணை எங்கேயாவது பார்த்திருக்கீங்களான்னு பாருங்க” என்று கேட்டான் சுனில்.

அவரும் அந்தப் போட்டோவைப் பார்த்தவுடன் புருவங்களைச் சுருக்கினார்.

“எதுக்குப்பா இந்தப் பொண்ணைத் தேடுறீங்க?” என்று கேட்டார் அவர்.

“சார், உங்களுக்கு இந்தப் பொண்ணைத் தெரியுமா?” என்று கேட்டான் சுனில்.

“முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுப்பா. எதுக்கு இந்தப் பொண்ணைத் தேடுற?” என்று மீண்டும் கேட்டார்.

அவர் கேட்டதில் என்ன சொல்வதென்று ஒரு நிமிடம் விழித்தவன், மனதிற்குள்,

“அய்யய்யோ! இவரு வேற கேள்வி கேக்குறாரே! என்னன்னு நம்ம சொல்றது? நம்ம பாஸைப் பத்திச் சொன்னா பிரச்சினை ஆயிடும். வேற எப்படி சொல்லி அந்தப் பொண்ணைப் பத்தித் தெரிஞ்சுக்கிறது?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

அப்பொழுது அவனுக்கு ஏதோ ஒன்று தோன்றியது.

“சார், தெரிஞ்ச பொண்ணுதான். இந்த ஏரியாவுலதான் இருக்குன்னு சொல்லுச்சு. ஆனா, எந்த வீடுன்னு நான் மறந்துட்டேன். அதனாலதான் சார் கேட்கிறேன். உங்களுக்கு இந்தப் பொண்ணைத் தெரியுமா, சார்?” என்று கேட்டான் சுனில்.

“என்னப்பா சொல்ற? இந்தப் பொண்ணு உனக்குத் தெரியுமா? இந்த ஊர்ல யாரையும் தெரியாதுன்னு சொல்லுச்சே!” என்று கேள்வியாக அவனுடைய முகத்தைப் பார்த்தார் அவர்.

“இல்லை, சார். இப்போதான் பழக்கம்” என்று சொன்னான் சுனில்.

அவன் சொன்னதைக் கேட்டவருக்கு ஏதோ சரியில்லை என்பதுபோல் தோன்றியது. அதனால், அவனைப் பார்த்து அமைதியாகவே இருந்தார்.

“சார், சொல்லுங்க சார். உங்களுக்கு இந்தப் பொண்ணைத் தெரியுமா? நீங்க கேட்கிறதைப் பார்த்தா, உங்களுக்கு இந்தப் பொண்ணைப் பத்தித் தெரியும்னு நினைக்கிறேன். கொஞ்சம் சொல்லுங்க, சார்” என்று கேட்டான் சுனில்.

“ஏம்பா, எனக்குத் தெரிஞ்சாலும் உன்கிட்ட எப்படி சொல்றது? ஒரு வயசுப் பொண்ணைப் பத்தி, நீயும் ஒரு வயசுப் பையனா இருக்க. நான் ஏதோ சொல்லப்போய் நாளைக்கு அந்தப் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்றது? நானும் பொண்ணு பெத்தவன்தான். அதனால ஒரு பொண்ணைப் பத்தின விவரத்தையெல்லாம் என்னால அப்படியே சொல்ல முடியாது. நீ அந்தப் பொண்ணைத் தெரியும்னு சொல்ற இல்ல? அப்போ அந்தப் பொண்ணோட நம்பர் இருக்கும் இல்ல? அந்தப் பொண்ணுக்குக் கால் பண்ணி விசாரிச்சுக்கோ” என்று சொன்னவர் அங்கிருந்து நகரப் பார்த்தார்.

“சார், சார்! நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான பையன் கிடையாது, சார். தெரிஞ்ச பொண்ணுதான். அதனாலதான் கேட்கிறேன். கொஞ்சம் சொல்லுங்க” என்று கெஞ்சுவதுபோல் கேட்டான் சுனில்.

அதில் சிறிது நேரம் அவனுடைய முகத்தைப் பார்த்தவர்,

“இந்தப் பொண்ணு என் வீட்லதான்ப்பா குடியிருக்கா. இவ கூட இன்னொரு பொண்ணும் இருக்கா. என் வீடு இந்தத் தெருவுக்கு அடுத்த தெருவுல நாலாவது வீடு” என்று சொன்னார்.

“ரொம்ப தேங்க்யூ, சார்! இப்போ அந்தப் பொண்ணு வீட்டுல இருக்காங்களா?” என்று கேட்டான் சுனில்.

“இல்லப்பா, அந்தப் பொண்ணு வேலைக்குப் போயிருக்கா” என்று சொன்னார் அவர்.

வேலைக்கா என்று யோசித்தவன்,

“எங்கே சார் வேலைக்குப் போறாங்க?” என்று கேட்டான் சுனில்.

“கே.கே. குரூப்ஸ் இன்டர்வியூக்குப் போறேன்னு சொன்னாங்க. இன்னைக்கு காலையில கேட்டப்போ, வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனாங்க” என்று சொன்னார்.

அவர் சொல்லிய பெயரைக் கேட்டவனுக்கு, ‘ஐயோ!’ என்றிருந்தது.

‘இந்தப் பொண்ணு கே.கே. குரூப்ஸ்ல வேலை செய்றான்னு தெரிஞ்சா இன்னும் பிரச்சினை பெருசாகிடுமே!’ என்று நினைத்தவன்,

“ஓகே, சார். ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொன்னதுக்கு நன்றி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஆபீஸை நோக்கிக் கிளம்பினான்.

கே.கே. குரூப்ஸ் ஆபீஸ்..

காலையில் ஆபீஸுக்கு வந்த ஸ்ரீனாவும் கவியும், அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த வேலையைச் செய்யத் தொடங்கினார்கள்.

இருவரும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்பதுபோல இல்லாமல், மிகவும் நேர்த்தியாகத் தங்களுடைய வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

அதைக் கவனித்த சேல்ஸ் டிபார்ட்மென்டின் ஹெட்,

“நீங்க ரெண்டு பேரும் புதுசா ஜாயின் பண்ண மாதிரியே இல்லம்மா. ரொம்ப நாளா இந்த வேலையிலேயே இருந்த மாதிரி இருக்கு. உங்களோட ஒவ்வொரு வேலையும் நல்லா இருக்கு. காலையில இருந்து நீங்க பார்த்த ஃபைல்ஸ் எல்லாமே நீட்டா இருக்கு” என்று பாராட்டினார்.

“தேங்க்யூ, சார். எங்களுக்குத் தெரிஞ்சதை வச்சுத்தான் நாங்க செஞ்சோம். அதுவும் இல்லாம, எங்களோட டீமோட உதவி இல்லாம எங்களால இதைச் செய்திருக்க முடியாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“ஆமா, சார். அவங்க எங்களுக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணாங்க. எங்களுக்கு எந்த டவுட் வந்தாலும், நாங்க கேட்கும்போது அதை கிளியர் பண்ணாங்க” என்று சொன்னாள் கவி.

“ஓகே, மா. போங்க, உங்க வேலையைப் பாருங்க” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.

இருவரும் தங்களுடைய வேலையில் மூழ்கிவிட, அப்படியே அந்த நாள் இருவருக்கும் மகிழ்ச்சியாக ஓடியது.

ஆனால், இவர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தது சுனிலின் நிலைமை.

அவன் தேடிச் சென்றவள் கிடைத்தும் கிடைக்காமல் போக, மீண்டும் ஆபீஸுக்குத் திரும்பி வந்தான். அவன் வருவதற்கும் விதுரன் வருவதற்கும் சரியாக இருந்தது.

விதுரனைப் பார்த்தவன் உடனே சென்று அவனுக்குச் சல்யூட் வைத்தான்.

ஆனால், விதுரனோ அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நேராகத் தன்னுடைய அறைக்கு வந்தான். அவனுக்குப் பின்னாலேயே வந்த சுனில், பதற்றத்துடன் அவன் முன்பு நின்றிருந்தான்.

“என்ன? உனக்குச் சொன்ன வேலையை முடிச்சிட்டியா? அவளைப் பத்தின எல்லா டீடைல்ஸும் தெரிஞ்சுக்கிட்டியா?” என்று கேட்டான் விதுரன்.

“பாஸ், அந்தப் பொண்ணைப் பத்தி ஒரு அளவுக்கு டீடைல்ஸ் கண்டுபிடிச்சாச்சு, பாஸ். அந்தப் பொண்ணு எங்கே இருக்கு, எங்கே வேலை செய்யுது எல்லாமே தெரிஞ்சிருச்சு, பாஸ். அந்தப் பொண்ணு வேலை செய்ற இடம்…” என்று சொல்லிவிட்டு தயங்கினான் சுனில்.

“இப்படி எதுக்கு தயங்கிட்டு இருக்க? முழுசா சொல்லு! இப்போ அவ எங்கே இருக்கா?” என்று கர்ஜனையாகக் கேட்டான் விதுரன்.

அவனுடைய கர்ஜனையில் பதறியவன், தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தான். அந்தப் பெரியவர் சொன்னதையும், அவள் கே.கே. குரூப்ஸில் வேலை செய்வதையும் தெரிவித்தான்.

அதைக் கேட்ட விதுரனுக்கு, இதற்கு முன்புவரை அவள் தன்னை அனைவரின் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திவிட்டாள் என்றுதான் தோன்றியிருந்தது.

ஆனால், இப்போது அவனுடைய மனதிற்குள் வேறொரு எண்ணம் தோன்றியது.

‘இதை அவள் சொல்லித்தான் செய்திருக்கிறாள். அதுவும் அவனுடைய வேலையாகத்தான் இருக்கும்’ என்று அவனுடைய மூளை சொல்லியது.

ஆனால், இன்னொரு புறம், ‘அவன் எல்லாம் எனக்கு ஒரு ஆளா?’ என்ற எண்ணமும் தோன்றியது.

மீண்டும் சுனிலைப் பார்த்தவன்,

“இன்னைக்கு ஈவினிங் குள்ள அவ இங்கே இருக்கணும். இல்ல, நீ ஒரேயடியா இல்லாம போயிடுவ!” என்று எச்சரித்துவிட்டு லேப்டாப்பில் மூழ்கினான் விதுரன்.

அவன் சொன்னதைக் கேட்ட சுனிலுக்கு, ‘ஐயோ!’ என்றிருந்தது.

மீண்டும் தன்னுடைய ஆட்களுக்குக் கால் செய்தவன், அவள் எப்பொழுது வீட்டுக்கு வருகிறாள் என்பதை அங்கேயிருந்து கண்காணிக்கச் சொன்னான்.

இன்னொரு டீமுக்கு அழைத்து, கே.கே. குரூப்ஸில் அவளைப் பற்றி விசாரிக்கும்படியும் சொன்னான் சுனில்.

இப்படியே சுனிலுக்கு அவளைத் தேடுவதற்கே நேரம் சரியாக இருக்க, அந்த நாளின் மாலைப் பொழுதும் அவளைத் தேடுவதிலேயே ஓடியது.

அனைவருக்கும் ஆபீஸ் நேரம் முடிய, ஒவ்வொருவராக வீட்டுக்குக் கிளம்பத் தொடங்கினார்கள்.

சுனில் ஒருபுறம் கே.கே. குரூப்ஸில் அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தவனிடம், அவளைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

இங்கே, ஸ்ரீனாவும் கவியும் வீட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் இருவரும் வீட்டுக்கு வருவதற்காகவே அங்கே காத்துக்கொண்டிருந்த தன்னுடைய ஆளிடமிருந்து சுனிலுக்குத் தகவல் வந்தது.

“சார், அந்தப் பொண்ணு வீட்டுக்கு வந்துடுச்சு, சார். இப்போ என்ன பண்றது?” என்று கேட்டான் அவன்.

“அந்தப் பொண்ணை நல்லா வாட்ச் பண்ணு. எங்கே போகுது, எங்கே வருது, எல்லாமே தெரிஞ்சுக்கோ. நாளைக்கு மார்னிங் வரைக்கும் அங்கேயே இரு” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்டவனும் சரியென்று சொல்லிவிட, அவளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கினான்.

வீட்டில்..

வீட்டுக்கு வந்த இருவரும் தங்களுடைய அன்றைய வேலையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஸ்ரீ, இன்னைக்கு வேலை நல்லா போச்சு இல்லடி? ஆனா, என்னவோ நினைச்சேன். அந்த அளவுக்கெல்லாம் கஷ்டம் இல்ல” என்று சொன்னாள் கவி.

“ஆமா, வேலை அவ்வளவா கஷ்டம் இல்ல. இருந்தாலும், அதுல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“சரி, ஸ்ரீ. இன்னைக்கு நீயே சமைக்கிறியா? கொஞ்சம் டயர்டா இருக்குடி. நான் போய்க் குளிச்சிட்டு வரேன்” என்று சொன்னவள், சிட்டாகப் பறந்துவிட்டாள் கவி.

“எருமைக்கு ஏதாவது ஒரு வேலை செய்யணும்னாலே கஷ்டம்! எப்படி ஓடுறதைப் பாரு! வேலைக்குப் பயந்துகிட்டு இருக்கா. இதையெல்லாம் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேன்னே எனக்குத் தெரியல!” என்று புலம்பியவள், சமையல் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

இவர்களுக்கு அந்த இரவு இப்படிச் செல்ல, அங்கே விதுரனுக்கோ சுனில் சொன்னதைக் கேட்டதிலிருந்து மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

அவளை எப்பொழுது வேட்டையாடுவோம் என்று காத்திருக்கும் சிங்கம்போல், அவளைத் தன் கையில் பிடிக்கும் நாளுக்காகக் காத்திருந்தான் அந்த ராட்சசன்.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..

இப்படிக்கு, உங்கள் அன்புத் தோழி..

மோகனா அருண்

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!