அத்தியாயம் 1

இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல!
பல வழிகள், ஏக்கங்கள், மனஉளைச்சல்கள், போராட்டங்களுக்கு பிறகு
காயம் கொண்ட இரண்டு இதயங்கள் பகிரும் கதை.

குடும்பமா? அல்லது காதலா? என்ற குழப்பத்தில்
மாட்டித் தவிக்கும் தலைவி,
காதலுக்கும் காலத்திற்கும் இடையில்
சிக்கித் தவிக்கும் தலைவன்.

இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால்
மற்றொன்றை இழந்து விடுவார்கள்.
இந்த காதல் கூடிவரும் என்ற நம்பிக்கையில்
காலத்தை கடக்கும் இரண்டு உயிர்களின் கதை.

மித்ரா

உன் விழிகளில் தொடங்கிய காதல்,
உன் விழிகளிலேயே முடிந்து விடுமா?
கைகோர்த்து இந்த உலகில்
மனம் விரும்பியவனுடன் வாழ வேண்டும்
என்று நினைத்தது ஒரு பிழையா?

என மித்ரா அவளது டைரியில் எழுதிக் கொண்டிருந்தாள்.

தன்னைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தும்,
தன் கூற்றைக் கேட்க யாரும் இல்லை.
தன் மனதைப் புரிந்தவர்கள் யாரும் இல்லை.
மனம் வெறுமை அடைந்து,
நம்பிக்கையின் கடைசி பக்கத்தில்
நின்றுகொண்டிருந்தாள் அவள் அன்று.

எட்டு வருடங்களுக்கு முன்பு
அவள் எடுத்த முடிவு,
அவள் வாழ்வின் மிக அழகான முடிவு
என்று அவளுக்குத் தெரியவில்லை.

ஒரு கூண்டிற்குள் சிக்கித் தவித்த அவளை
பறவையாக பறக்க வைத்தது இந்த காதல்.

சூர்யா

உனக்காகத்தான் என் ஜீவன்,
என் எட்டு ஆண்டு கால உழைப்பு.
உன் விழிகள் என் விழிகளை
சந்தித்த அன்றே
“நீதான் என்னவள்”
என்று என் மனம் முடிவு எடுத்தது.

உனக்காக என் ஜீவன் முடியும் வரை போராடுவேன்.
நீ இல்லை என்றால் நானும் மறைவேன்.
இந்த புனிதமான காதலை
என் இதயக் கூட்டில் வைத்து காப்பேன்.

நீ என்னுடையவள், மித்ரா.
8 ஆண்டுகளுக்கு முன்பு…

கதிரவன் தன் ஒளிக்கதிர்களை பூமியில் பரப்பி,
மீண்டும் ஒரு அழகிய காலைப்பொழுது தொடங்கியது.

சூரிய ஒளியின் செல்லத் தீண்டலில்
தன் மீன் போன்ற கண்களை விழித்தாள் மித்ரா.
இந்த நாள் இனிதான நாள் என்ற மனநிலையோடு,
முகத்தில் சிரிப்புடன்
தன் படுக்கையை விட்டு எழுந்து
சமையலறையை நோக்கி ஓடினாள்.

“குட் மார்னிங் பாட்டி,
இன்னைக்கு என்ன சமையல்?”
என்று பாட்டியை கட்டியணைத்தபடி கேட்டாள்.

“மஹாராணிக்கு இப்போதான் காலை விடிந்ததா?
உன்னை சொல்லி ஒன்னு இல்ல,
உன் அண்ணன்தான் சொல்லணும்.
உன்னை படிக்க வைக்க வேண்டாம் என்று சொன்னேன்,
கேட்டானா?”
என்று அவளது பாசத்தை
ஒரே நொடியில் வருத்தமாக மாற்றினார் பாட்டி.

மித்ரா 16 வயது அடைந்த
பெரிய ஆசைகள் கொண்ட பெண்.
மனதில் கனவுகள் நிறைந்தவள்.
இயற்கையை ரசிப்பவள்,
மிருகங்கள் என்றால் உயிராய் இருப்பவள்.
இரக்கம் மிகுந்த அவளுக்கு
முழுமையாக யாரையும் வெறுக்கத் தெரியாது.

இவள் செய்த பாவமோ
இல்லை கடவுளின் திட்டமோ –
அவள் குடும்பம் அவள் குணத்திற்கு
முழுமையாக எதிர்மறையானது.

பெண்களை குப்பை போல நடத்தும் தந்தை,
மற்றவர்களின் உணர்வுகளை
துச்சமாக நினைக்கும் பாட்டி,
எளிதில் கோபப்படும் தாத்தா.
ஒரு வார்த்தையில் சொன்னால் –
ஒரு ஹிட்லர் குடும்பம்.

இந்த ஹிட்லர் குடும்பத்தில்
மூன்று அழகிய மனங்கள் இருந்தன.

முதலாவது – மித்ராவின் அம்மா,
மென்மையான குரலும்
குழந்தை மனமும் கொண்டவர்.
“என் கணவன்தான் என் உயிர்”
என்று நம்பியவள் – நிலா.

இரண்டாவது – மித்ராவின் அண்ணன் சந்துரு.
தங்கை, அம்மா என்றால் உயிர்.
பிறருக்கு மரியாதை கொடுக்கும்
பரந்த மனம் கொண்டவன்.
மித்ராவை விட ஆறு வயது மூத்தவன்.
தன் தங்கை படித்து
அவள் கனவுகள் நிறைவேற வேண்டும்
என்று நினைப்பவன்.

மூன்றாவது மித்ரா.
தன் குடும்பம் எவ்வளவு
புண்படுத்தினாலும்
அவர்கள்மீது பாசம் காட்டி
மதிப்பவள்.

சூர்யாவின் வீடு….

காலை 4 மணி.
அனைவரும் உறங்கும் நேரம்.

இரண்டு கால்களும் அயராமல்
வீட்டிலுள்ள வேலைகளை முடித்துவிட்டு
அலுவலகத்திற்கு தயாரானார்
சூர்யாவின் தாய் தீபா.

முகத்தில் சோர்வு,
மனதில் கவலை 
இதையெல்லாம் சுமந்தபடி
அகத்தில் ஒன்றும் காட்டாமல்
தன் மகனுக்காக
தன் நாளை தொடங்கினார்.

படுக்கையறையில் அலாரம் அடிக்க,
அதை அணைத்துவிட்டு
கண்களை தேய்த்தபடி
சமையலறைக்கு வந்தான் சூர்யா.

“குட்டி மம்மி, கிளம்பிட்டியா?
வா, நான் உன்னை ட்ராப் பண்றேன்.”

“டேய், முதல்ல குளிடா.
இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே டா!”

“இன்னைக்கு குளிக்காம இருப்பேனா?
புது ஸ்கூல்,
நிறைய பொண்ணுங்க இருப்பாங்க.
இம்ப்ரெஸ் பண்ண வேண்டாமா?”

“போடா கொரங்கு”
என்று சிரித்துக்கொண்டே சொன்னார் தீபா.

கணவன் இறந்தபோது
“சூர்யாவை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேண்டும்”
என்று சத்தியம் வாங்கிக்கொண்டு
அவர் உயிர் பிரிந்த அந்த நினைவு
இன்றும் தீபாவின் மனதில் இருந்தது.

இங்கு மித்ரா பள்ளிக்கு தயாராகி
அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு
அப்பாவின் அறைக்குச் சென்றாள்.

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு
எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்
குருநாதன்.

மித்ரா பயத்துடன் வந்து,
“அப்பா, இன்று பதினொன்றாம் வகுப்பு முதல் நாள்.
என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கள்,” என்றாள்.

“ஆசீர்வாதமெல்லாம் இருக்கட்டும்.
அங்க போய் பசங்கள்கிட்ட பேசுற வேலை
எதுவும் வச்சுக்காத.
இன்னைக்கு பேசுவ,
நாளைக்கு என் பேரை கெடுத்துட்டு
ஓடிப்போவே.
ஞாபகம் வச்சுக்கோ.
அப்படி ஏதாவது நடந்தது
நீ உயிரோட இருக்க மாட்ட.
சரி, கிளம்பு.”

என்று குருநாதன் கூறியதை கேட்ட
மித்ராவின் முகம் வாடியது.
வாடிய முகத்துடன்
கீழே சென்ற மித்ரா
அண்ணனுடன் பைக்கில்
பள்ளிக்குச் சென்றாள்.

பள்ளி வாசல்

பள்ளி வாசலில் மித்ராவை இறக்கிவிட்ட
சந்துரு,
தன் பாக்கெட்டில் இருந்த
எழுதுகோலை எடுத்து
அவளிடம் கொடுத்தான்.

அதைப் பார்த்த மித்ராவின்
வாடிய முகம்
மீண்டும் மலர்ந்தது.

காயப்படுத்த பலர் இருந்தும்
தன்மேல் அக்கறை காட்டும்
அண்ணாவைப் பார்த்து
ஆனந்தத்துடன் சென்றாள்.

சூர்யாவும் தன் அம்மாவுடன்
பள்ளிக்கு வந்தடைந்தான்.

வகுப்பில் அன்று முதல் நாள்.
புதிய முகங்கள், புதிய இருக்கைகள்,
புதிய சத்தங்கள் –
அனைத்திற்கும் நடுவில்
சூர்யா மட்டும் அமைதியாக
தன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

புதிய மாணவன் என்பதால்
யாரிடமும் பேசாமல்,
சுற்றியுள்ள உலகத்தை
அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது –
வகுப்பறையின் வாசலில்
ஒரு சிறிய கலகம்.

சில மாணவிகள்
சிரிப்போடு வகுப்பை விட்டு வெளியே ஓடினார்கள்.
சூர்யா குழப்பத்துடன்
அந்தப் பக்கம் பார்த்தான்.

அடுத்த நொடியில்
அவர்கள் நடுவில்
மித்ரா.

அவளை கட்டியணைத்தபடி,
அவளை வகுப்பிற்குள் அழைத்து வந்தார்கள்.

அனைவரிடமும்
எளிமையாக பழகும் அவள் முகம்,
அந்த சிரிப்பு,
அந்த இயல்பான நடத்தை 
சூர்யாவின் பிஞ்சு மனதில்
ஒரு புத்துணர்வை விதைத்தது.

ஏதோ ஒரு இணைப்பு…
வார்த்தைகளில்லாத ஒரு ஈர்ப்பு…

கண் இமைக்காமல்
அவளை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு
நேரம் போனதே தெரியவில்லை.

அவளும் அமைதியாக
வகுப்பறையின் நடுப்பகுதியில்,
சூர்யாவுக்கு நேரே இருக்கும்
மேசையில் வந்து அமர்ந்தாள்.

தன்னை யாரோ
உற்று நோக்குகிறார்கள் என்ற
ஒரு உணர்வு மித்ராவுக்கு.

மெல்ல கண்களை உயர்த்தி
எதிரே பார்த்தாள்.

அந்த நொடியில் 
இரு பார்வைகளும்
ஒன்றையொன்று சந்தித்தது.

மொட்டுப் பூவாய் விரியும் போது
உள்ளத்தில் எழும் புத்துணர்வு,
தேனீ மகரந்தத்தை
பகிரும் போது வரும் இனிமை.

ஒரு முன்ஜென்ம இணைப்பு போல.

இரண்டு நொடிகள்…
இரண்டே நொடிகள்.

இவ்வளவு இனிமையை
ஒரு பார்வை கொடுக்குமா?

அந்த இரு நொடிகளில்
இருவரின் மனதிலும்
ஒரே கேள்வி…

“யார் இது?”

அந்த பார்வையிலேயே
அவர்களுக்கே தெரியாமல்
தொடங்கியது 
ஒரு அழகிய காதல்…
மற்றும்
அதைச் சுற்றிய போராட்டங்கள்.
 

❤️ Loading reactions...
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உன் விழிகளில்
128 5 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page