வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 3
தன் உறவுகள் கை விடுதல் பற்றிய பயம் சிலருக்கு இருக்கும். ‘தன்னை மறுத்து விடுவார்கள் என்ற பயம், எப்போதும் தன்னை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம், நெருக்கத்தைத் தவிர்த்தல், பதட்டம் மற்றும் மன அழுத்தம், மற்றவர்களை அதிகமாகச் சார்ந்திருத்தல், வெறுமையாக உணர்தல், பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை இவை எல்லாம் இதில் அடக்கம்.
-பத்மமுகி.
பத்மமுகி யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். சிறு வயதிலிருந்தே அவளுக்கு அது பழக்கம். தாய் தந்தையை ஒரு விபத்தில் இழந்துவிட்டிருக்க, ஆதரவற்றோர் இல்லத்தில் அவளுடைய குழந்தைப் பருவமும், விடலைப் பருவமும் முடிந்திருந்தது. கல்லூரி படிக்கும் போதே பகுதி நேர வேலையை அவள் படிக்கும் அறக்கட்டளையில் தேடிக்கொள்ள படிப்பு செலவுக்கும் பிரச்சினை இல்லை. இளங்கலை வரலாற்றோடு, தொல்லியல் படிப்பையும் முடித்தவள், அரசு வேலைக்கான அறிவிப்பு எப்போது வரும் எனக் காத்திருந்தாள்.
அவள் படித்து முடித்ததும் வர, உடனே தேர்வு எழுதி முடித்து வெற்றியும் பெற்று விட, அரசு வேலை அவளைத் தேடி வந்தது. அந்த வேலையால்தான் தற்போது இருக்கும் வாழ்க்கையும் அவளைத் தேடி வந்தது.
அந்த அரங்கமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. தொல்லியல் சார்ந்த புத்தக வெளியீட்டு விழா. அரசே வெளியிடும் புத்தகம் என்பதால், விழா பெரிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் கிடைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் அந்த இடத்தின் மக்களின் நாகரீகத்தை பறை சாற்றும் அல்லவா! அப்படி முக்கியமான கண்டுபிடிப்புகள் கிடைத்திருக்க, அரசு தமிழரின் தொன்மையை பறை சாற்றும் விதமாகப் புத்தமாகத் தொகுத்து வெளியிட முடிவு செய்திருந்தது. அந்த ஆராய்ச்சி மற்றும் புத்தகத்தில் பத்மமுகியும் இடம் பெற்றிருந்தாள். அத்தோடு விழா ஏற்பாடு செய்யும் குழுவிலும் இருந்ததால் அவளுக்குப் பலவற்றை கவனிக்க வேண்டி இருந்தது.
பத்மமுகி வேலைக்குச் சேர்ந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தது. இருபத்தி ஆறை தொட்டுக் கொண்டிருந்தவளின் எழில் அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையால் கூடி இருந்தது.
விழாவுக்குச் சில தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளிக்க முன்வந்திருக்க, அந்த நிறுவனத்தின் தலைமையில் இருக்கும் சில அதிகாரிகளுக்கும் அழைப்பு சென்றிருந்தது.
அப்படியொரு நிறுவனத்தில் ஒருவருக்கு பதிலாக இன்னொரு தலைமை அதிகாரி வந்திருக்க, அவரை அழைத்து வரச் சென்றிருந்தாள் பத்மமுகி. இதுவரை வந்திருந்த அதிகாரிகள் எல்லாம் நாற்பதைத் தொட்டுக் கொண்டிருக்க, இருபத்தி எட்டு வயதில் தன் கையில் மின்னும் விலை உயர்ந்த கடிகாரத்தைப் பார்த்தப்படி இறங்கினான் அவன்.
பெயர் மட்டும் பத்மமுகிக்கு தெரிவிக்கப்பட்டிருக்க, “வணக்கம், ஆதி மனோகரன் சார்! நீங்க இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி! வாங்க உள்ள போலாம்.” என அவனை அழைத்துச் சென்றாள் முகி.
அவன் முகத்தில் முப்பது நொடிகள் கூட அவள் கவனம் பதியவில்லை. ஆனால் மகிழுந்திலிருந்து இறங்கியவன் கவனமெல்லாம் தாமரை வண்ணப் புடவையில் ஒளிரும் பெண்ணின் மீதுதான் இருந்தது. பார்த்தவுடன் அவன் மனதினைத் தாக்கியது அந்த விழிகள்.
“மிஸஸ்…” என அவன் பின்னால் இருந்து அழைக்க, அவனுக்கு இணையாகத் தரையைப் பார்த்து நடந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“சொல்லுங்க சார், மிஸ். பத்மமுகி.”
அவளுக்குத் திருமணம் ஆகவில்லை என்பதில் அலாதி நிம்மதிதான்.
பத்மமுகிக்கு அவனும் விழாவில் ஒரு விருந்தினன். அவனை விட்டுவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கச் செல்ல வேண்டும்.
“எங்க தலைமை நிர்வாக அதிகாரிக்குப் பதிலாக நான் வந்திருக்கேன்.”
“தகவல் வந்துச்சு சார். நாங்க விழாவில் அதுக்கு ஏத்த மாதிரி மாத்திட்டோம். உங்களோட சீட்டிங்க்கு கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு வேற எதாவது வேணுமா சார்?”
“நத்திங்க.”
தலையசைத்த பத்மமுகி மேலும் நடக்க ஆரம்பிக்க, அவனும் நடந்தான்.
“ஆதி மனோகரன் சார், இதுதான் உங்க சீட்.” என முன் வரிசையில் இருந்த இருக்கையைக் காட்டினாள்.”
“உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும், இந்த ரோவில் நிக்கற வாலண்டியர்ஸ் பார்த்துப்பாங்க.”
“ஓகே.” என அவன் தலையசைக்க பத்மமுகி விடைபெற்றாள்.
விடை பெற்றாலும் அவளின் வாசனை அங்கேயே இருப்பது போன்ற பிரம்மை அவனுக்குள் நிரம்பியது.
‘பத்மமுகி’ அவள் பெயரை மனதுக்குள் ஒருமுறை உச்சரித்துப் பார்த்தான். புத்தகம் அமைச்சரால் வெளியிடப்பட, பத்திரிக்கைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டன. அவர்கள் வெளியிட்ட புத்தகத்தினை இவனுக்கு மேடையில் கொடுத்திருக்க, அவன் விழிகள் முகியை மேடையில் ஏறி நின்று துழாவியது. ஆனால் அவள் அங்கு இல்லை. கீழே வந்தவனுக்கு அழைப்பு வர, அதைப் பேச வெளியில் சென்றவன் வரப் பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தது. அதற்குள் பத்மமுகி மேடையில் ஏறித் தன்னுடன் பணிபுரிவர்களுடனும், அமைச்சருடனும் சில புகைப்படங்கள் எடுத்திருந்தாள். மீண்டும் அவள் வெளியே சென்றிருக்க, அப்போது உள்ளே வந்தான் ஆதி மனோகரன். அவன் மனம் ஏனோ தொடர்ந்து அவளைத் தேடிக் கொண்டிருந்தது. ஆனால் முகி அவன் கண்களில் படவே இல்லை.
அவன் தன்னை முதன் முதலாய் சந்தித்தது கனவில் வந்திருக்க, அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு தட்டியது முகிக்கு. இரவு பன்னிரண்டு மணிவரை அழுதிருந்தவள் தாமதமாக உறங்கி இருக்க, எழுந்தவளால் மீண்டும் உறங்க இயலவில்லை. அதிகாலையில் மீண்டும் அவன் நினைவு எழுந்தது. ஐந்து மணியெல்லாம் அவன் கைகளுக்குள் சிறு பறவையாய் குளிருக்கு ஒண்டியிருப்பவளுக்கு அவனுடன் இருக்கும்போது இருந்த இதம் நினைவுக்கு வந்தது.
“இப்படி செஞ்சிட்டியே துரோகி!” என முணுமுணுத்தவளின் விழிகள் தானாகக் கண்ணீரைச் சொரிந்தது. அப்படியே இருளை வெறித்தபடி அழுதபடியே இருந்தாள்.
“என்னை உண்மையாகக் காதலிச்சேன்னு சொன்னது, எப்போதும் கைவிடமாட்டேன்னு சத்தியம் செஞ்சது எல்லாம் பொய்யா மனோ?” என முணுமுணுத்தவள் இதயப்பகுதியைத் தடவிக் கொண்டாள். அவனுடைய காதலின் அனல் பூப் போன்ற அவள் இதயத்தைச் சிறிது சிறிதாக வாட்டிக் கொண்டிருந்தது.
மணி ஆறரைக்கு மேல் ஆகி இருக்க, அவளுடைய கைப்பேசி அடித்தது. திரையில் சிவகாமினி என்ற பெயர் மின்னியது. முதல் முறை தவறவிட்டவள், இரண்டாம் முறை அதனைத் தவறவிடாமல் எடுத்தாள்.
“அக்கா குட் மார்னிங்க்! கால் மணி நேரத்தில் ஹோட்டல் முன்னாடி வந்திருங்க. நான் வெயிட் பண்றேன்.”
சிவகாமினியின் குரலில் வழிந்திருந்த உற்சாகம் பத்மமுகியையும் எழுப்பியது.
சட்டென்று குளியலறைக்குள் புகுந்து தயாராகினாள். அவள் கூறியபடி உடைகளை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறிய பத்மமுகி, விடுதியின் நுழைவு வாயிலுக்கு வர, அங்கே இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தாள் காமினி.
“அக்கா வந்துட்டீங்களா? குட் மார்னிங்க்!”
அவளின் உற்சாகம் மெல்ல முகியையும் பற்றிக்கொள்ள அவளைப் பார்த்துப் புன்னகைத்தவள், “குட் மார்னிங்க்!” என்றாள்.
“வாங்க சீக்கிரம் போலாம்.” என்றதும் வாகனத்தின் பின்னால் முகி ஏறிக்கொள்ள வாகனம் விரைந்தது.
“எங்க போறோம் காமினி?”
“சர்ப்பிரைஸ்! ரிஸ்க் எடுக்கத் தயாரா?”
“எடுக்கலாமே!”
“சன்ரைஸ் பார்த்துட்டே வாங்க.” என்றவள் கூறிய இடம் பத்து நிமிடத்தில் வந்து விட்டது.
தோட்டம் போலிருந்த இடத்தில் வந்து வாகனத்தை நிறுத்தினாள் காமினி.
“அக்கா, வாங்க போலாம்.”
அருகில் கேட்கும் அலையின் சத்தம் பத்மமுகியின் காதில் விழுந்தது. அவர்கள் செல்லும் வழியில் தாழம்பூ மரங்கள், பனையெனப் பலவற்றைப் பார்க்க முடிந்தது. அருகில் செல்லச் செல்லத் தண்ணீர் ஊற்றுவதைப் போன்ற சத்தம். ஆவிபோல் சில மீட்டர் தூரத்தில் தெரிந்தது.
“இது என்ன இடம் காமினி?”
“அக்கா, இந்தச் சிட்டியில் இருக்குற ஒரே ஹாட் ஸ்பிரிங்க். இந்த இடம் நெய்தல் நிழலுக்குச் சொந்தம். இங்க யாரும் வர முடியாது. பிரைவேட் பிராப்பர்ட்டி. ஆனால் இது கூடக் கடலும் கனெக்ட் ஆகி இருக்கு. கீழே பெரிய கடற்குகை இருக்கு. அங்க கரண்ட்ஸ் அதிகம். ஆனால் கீழ போகாமல் மேல மட்டும் நின்னு குளிக்கச் சூப்பராக இருக்கும். அத்தோட கீழே குகையைத் தாண்டாமல் இருக்க தடுப்பு இருக்கு. ஸோ பயப்படத் தேவை இல்லை. அதோட இங்க யாரும் வரமாட்டாங்க.”
“இது உன்னோட ஹோட்டலுக்குத் தெரிஞ்சால்…”
“எதுவும் சொல்லமாட்டாங்க. உங்களுக்காக ஸ்பெஷல் எக்ஸ்பிரியன்ஸ்.” எனத் தான் மேலணிந்திருந்த கோட்டைக் கழற்றி கொண்டு வந்திருந்த நெகிழிக் கூடையில் போட்டாள் காமினி.
இருபக்கமும் ஸ்டிராப் வைத்து ‘ப’ வடிவில் கழுத்து டிசைன் இருக்க, கெண்டைக்கால் வரை இருக்கும் நீச்சல் உடை அது.
“நீங்க அக்கா?”
“எனக்கு டிராக், டி சர்ட் போதும் காமினி.”
“சரி வாங்க.” எனச் சட்டென்று நீருக்குள் குதித்தாள் காமினி.
“வாங்க, ஜம்ப் பண்ணுங்க.” என்றதும் முகியும் குதித்தாள். வெந்நீரின் இதம் உடலுக்குள் சுகமாய் இறங்கியது.
நீல நிற நீர்நிலை, அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. மூச்சை நன்றாக இழுத்தபடி நீருக்குள் மிதந்தாள் அவள். அவளது உடலை அது அமைதிப்படுத்தியது.
“எப்படிக்கா இருக்கு?”
“ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. சன்ரைஸ் இந்த வாட்டர். செம பீல்!”
“நாம மனசை எப்போதும் ஹேப்பியாக வச்சுக்கணும் அக்கா. உங்களுக்கு ஓகேன்னா நாம டெய்லியும் வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் இல்லை இப்படி மார்னிங்க் ஒவ்வொரு இடமாகக் கூட்டிட்டுப் போறேன்.”
இருவரும் தங்களைப் பற்றிப் பேசியபடி குளிக்க அரை மணி நேரம் சென்றிருக்கும்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க சிவகாமி?” என்று எழுந்த குரலில்,
நீருக்குள் தலையை மூழ்கி விளையாடிக் கொண்டிருந்த காமினியின் காதுக்குள் கேட்க, “யாரு அந்தக் கட்டைக் குரல் கந்தசாமி?” என நிமிர்ந்தவளின் விழிகள் விரிந்தது.
அடர் பச்சை நிற நீச்சல் உடையில் உதடுகள், விழிகள் சிவக்க நின்றிருந்தவள் அங்கே நின்று தலையை மட்டும் வேறுபக்கம் திருப்பி இருந்த ருத்ராவைத்தான்.
தலையைத் தண்ணீருக்குள் விட்டு, கீழே நீர் அரித்திருக்கும் பாறையின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
சத்தத்தில் அவளும் தலையை நீட்டி வெளியே பார்த்தாள். புதிதாக ஒரு ஆடவன் இருக்க, பத்மமுகி வெளியே வர முயற்சிக்கவில்லை.
“என்ன ருத்ரா வேணும்?”
“வெளியே வா சிவகாமி. அவங்களையும் வரச் சொல்லு.”
முகியும் உடனே வெளியில் வந்து கொண்டு வந்திருந்த துண்டை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். காமினியும் வெளியே வர அவளுக்குத் துண்டைக் கொடுக்க, அதைக் கழுத்தில் போட்டுக் கொண்டவள் ருத்ரனின் எதிரே நின்றாள்.
நீரில் குளித்திருந்த சருமம், சூரியனின் உபயத்தில் மேலும் பளபளத்தது.
“ருத்ரா, இங்க என்ன செய்யற?”
“அதை நான் கேட்கணும். உன்னை அங்கிள் இங்க வரக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.”
“நான் அப்படித்தான் வருவேன்.”
அவள் கூறியதில் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் கனல். அந்தக் கனலை சளைக்காமல் எதிர் கொண்டாள் காமினி.
தொடரும்…
