அத்தியாயம் 2

நேர்முகத் தேர்வில் நதியாவை தெரிவுசெய்த பின் கிளம்பியவன், காரில் நேராகச் சென்று இறங்கியது, சக்கரவர்த்தி நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலைக்குத் தான். கோட் பட்டனை கழற்றி ரிலாக்ஸாக இறங்கியவன் அங்கிருக்கும் பழைய தேவையற்ற பொருட்களை வைக்கும் குடோனுக்குள் சென்றான்.

அங்கு ஒருவனை அடித்துக் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்க, இவனைப் போலவே கோட் சூட் அணிந்த இரண்டு பேர், இவ்வளவு நேரம் ஓய்வின்றி அவனை அடித்துவிட்டு அமர்ந்திருந்தார்கள்.

என்னடா நம்ம நாயகனுக்கு பெயரில்லையா? சரியா கூட காட்ட மாட்டேங்கிறாங்க அப்படின்னு தான நினைக்கிறீங்க. ஹீரோ இன்ட்ரோ கொடுத்திடலாமா?!

குடோன்னுக்குள் நுழைந்து வேகமாக தன் கோட்டை கழற்றியவன், அங்கிருந்த மெய்க்காப்பாளரிடம் கட்டையை வாங்கி கட்டிப் போட்டிருந்தவனை அடிக்க, அடி வாங்கியவன் பொறிக்கலங்க நிமிர்ந்து பார்க்கையில் பழுப்பு நிற விழிகளோடு ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் நம் கதையின் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தி குடும்பத்தின் மூத்த வாரிசு.

30 வயது இளைஞன். திராவிட நிறத்தில் இருந்தாலும் களையாக இருந்தான். அவனது செதுக்கப்பட்ட உடற்கட்டுகள், அவன் தினந்தோறும் ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்து தன் உடலை மெருகேற்றி வைத்திருப்பதைப் பறைசாற்றின.

அவன் பழுப்பு நிறக் கூர்மையான விழிப் பார்வையில் காண்பவர் மயங்கிடக் கூடும். அவன் கட்டளையிட வேண்டியதில்லை, ஒற்றைப் பார்வையை வீசினால் போதும் மறுபேச்சின்றி அந்த வேலை தானாக நடந்திடும்.

கொஞ்சம் பழைய செவ்ரான் ஸ்டைலில் அடர்த்தியான மீசையும், அதற்கேற்றாற்போல் ட்ரிம் செய்த தாடியும் வைத்திருந்தான். அவன் சதுர வடிவ முகத்திற்கு அது கூடுதல் அழகுடன் வசீகரத்தை தந்தது. என்ன மூக்கு தான் கொஞ்சம் பெரியதாக போய்விட்டது. அதனால் கோபமும் பெரிதாக வரும்போல. பெரிய முகம் என்பதால் அது அவன் அழகை ஒன்றும் கெடுத்து விடப் போவதில்லை. (ரொம்ப ஓவரா வர்ணிச்சுட்டேன் போல)

“ஏன்டா நாயே.. என்கிட்ட சம்பளத்தை வாங்கிட்டு எனக்கே துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்தது. எவ்வளவு தைரியம் இருந்தா நீ சக்கரவர்த்தி கம்பெனிக்குள்ள டூப்ளிகேட் புரொடக்டை கொண்டு வந்திருப்ப.உன்னை…” ஆத்திரத்தில் கண்மண் தெரியாமல் அவனை அடித்தான்.

“இந்த மாதிரி கேவலமானவங்க கூட நாயை ஒப்பிட்டு பேசக்கூடாது மித்து. நாயை வளர்த்தா அது நன்றியை மட்டும்தான் காட்டும். நமக்காக உயிரை கூட தரும். ஆனா இவனுங்க பணத்துக்காக நம்ம உயிரை கூட எடுப்பானுங்க” கால் மேல் கால் போட்டு ஆசுவாசமாக பெருமூச்சொன்றை விட்டுப் பேசியவன், மிதுனின் ஆருயிர்த் தோழன் அரவிந்தன்.

“ஏன்டா அந்த ராஜீவ் பைத்தியக்காரனுக்கு வேற வேலையே இல்லையா? ஒவ்வொரு வருஷமும் பெஸ்ட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் அவார்டு வாங்கணும்னா அவன் தயாரிக்கிற பொருளோட தரத்தை உயர்த்தணும். அதை விட்டுட்டு நம்ம கம்பெனி பொருளோட தரத்தை கம்மி பண்ண பார்க்குறான், டூப்ளிகேட் பொருளை கொண்டு வந்து வைக்கிறான். அவனை எதுக்கு இன்னும் விட்டு வைச்சிருக்க? எனக்கென்னமோ கடைசியா உனக்கு நடந்த ஆக்சிடென்ட் கூட அவன் பண்ணது தான்னு தோணுது” தன்னுடைய அனுபவங்களை ஆராய்ந்து நீண்ட உரையை பேசியவன் மிதுனின் மற்றொரு தோழன் சத்யன்.

மிதுன், அரவிந்தன், சத்யன் மூவரும் பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே உயிர் நண்பர்கள். கல்லூரி, ஜிம், ட்ரெக்கிங், டூர், பிசினஸ் என எல்லா இடங்களிலும் மூவரும் பார்ட்னர்கள். சில கிரைம்களிலும் கூட பார்ட்னர்கள் தான்.

இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் எல்லாம் கிளைகளைக் கொண்டிருந்த சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர், மிதுனின் அப்பா சக்கரவர்த்தி. அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில், விபத்தொன்றில் தந்தை இறந்து விட மொத்த கம்பெனிகளின் பொறுப்புகளையும், அதோடு குடும்ப பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.

மிதுனின் அப்பாவை விபத்து என்ற பெயரில் கொன்றது, வேறு யாருமில்லை அவன் சொந்த சித்தப்பாவே தான். தொழில் போட்டியின் காரணமாக தந்தை கொலை செய்யப்பட்டிருக்க, பழிக்குப் பழியாக அவரைத் தீர்த்துக்கட்டிய பின், கம்பெனியின் பொறுப்பை ஏற்கும் முதல் கையெழுத்தைப் போட்டான்.

அன்றிலிருந்து மொத்த நிறுவனங்களையும் திறம்பட நிர்வகித்து, தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே நாடெங்கும் தன்னுடைய பிசினஸை விரிவு செய்தான். கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் பட்டியலில், ஒவ்வொரு வருடமும் முதலிடத்தில் இருப்பவன் மிதுன் சக்கரவர்த்தி.

எத்தனை வளர்ச்சியோ அத்தனை துரோகங்கள், அத்தனை இழப்புகள், அத்தனை சவால்களை சந்தித்திருக்கிறான். யாரையும் எளிதில் நம்பிட மாட்டான், ஆனால் நம்பிக்கைக்குரியவர்கள் சில பேரையும் கூடவே வைத்திருக்கிறான். மிதுனின் பிசினஸ் அகராதியில் பேச்சுவார்த்தை எல்லாம் இல்லை. பழிக்குப்பழி ரத்தத்திற்கு ரத்தம் தான். தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டனை கிடைத்தே தீரும்.

தன் நிறுவனங்களின் கீழ் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் தேவையானதை செய்திடுவான். அதே சமயம் துரோகிகள் இருந்தால் வேரோடு அழித்திடுவான். ஆபீஸில், பொது இடங்களில் இவனை சிரித்த முகமாக பார்த்திட முடியாது. இறுக்கமாகத் தான் இருப்பான். வீட்டிலும், நண்பர்களிடமும் இருக்கும்போது இவனை இறுக்கமாக பார்த்திட முடியாது. சிரித்த முகமாகத் தான் இருப்பான்.

“இவனை என்ன பண்ணலாம்னு இருக்க?” அந்த துரோகியை சுட்டிக் காட்டி அவன் நண்பர்கள் கேட்க, “போலீஸ்ல ஹாண்டோவர் பண்ணிடுங்க, நான் கோகுல் கிட்ட பேசுறேன். சாகுற வரைக்கும் ஜெயில்லயே இருக்கட்டும்” மிதுன் சொல்லிட, நண்பர்கள் அவனை அதிர்ச்சியாய் பார்த்திருந்தனர்.

மிதுன் கண்ணைக் காட்ட அங்கிருந்த பாடிகார்ட்ஸ் அவனை இறக்கி போலீஸில் ஒப்படைக்க தூக்கிச் சென்றனர்.

“மித்து உனக்கு என்னாச்சு? நீ என்னடா இப்படி மாறிட்ட? பழைய மிதுனா இருந்திருந்தா இந்நேரம் அவனைக் கொன்னுட்டு தான் அடுத்த வேலையே பார்த்திருப்ப. இப்போ என்னடான்னா போலீஸ் அது இதுன்னு பொறுமையா பேசுற?”  அதிர்ச்சி குறையாமல் அரவிந்தன் கேட்டிட,

ஏன் மித்து உனக்கு ஆக்சிடென்ட் ஆனதுல தலையில அடிபட்டு மூளை எதுவும் குழம்பிடுச்சா? நீ பண்றது எல்லாமே வித்தியாசமா இருக்கே” சிரிக்காமல், சத்யா நண்பனை கிண்டல் செய்திட, மென் புன்னகை உதிர்த்தான் மிதுன்.

“சிரிக்கிறது கூட மாறிடுச்சு. ஏன் டா இப்படி மாறிட்ட. உன் மாமா பொண்ணு ரூபிணி உன்னைத்தான் கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப ஆசையோட இருந்தது. கல்யாணமே வேணாம்னு அந்த பொண்ணை உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்ட. உனக்கு வேற எதும் பிரச்சனையா? எங்களுக்கு தெரியாம எதும் மறைக்கிறியா?” அரவிந்தன் ஆதங்கமாய் கேட்டிட,

“இதையே எத்தனை தடவை கேட்பீங்க? முதல்ல ரெண்டு பேரும் கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” தன் நண்பர்களை பேசியே சமாளித்து, அவர்களையும் உடனழைத்துக் கிளம்பினான் மிதுன்.

அவன் நண்பர்கள் இவ்வளவு பேசினாலும் மிதுன் செய்வதும், முடிவெடுப்பதும் சரியாகத் தான் இருக்கும், அதில் நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையில், எந்த விஷயத்திலும் அவனை வற்புறுத்துவதில்லை.

அடிக்கும்போது சட்டையில் ஆங்காங்கே தெறித்த இரத்தத் துளிகள் தெரியாமல் இருக்க, அந்த கருப்பு நிற கோட்டை மாட்டிக் கொண்டான் மிதுன். மூவரும் காரில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றிட, அங்கே அப்போது தான் விஷ்ணுவும், நதியாவும் காரில் வந்திறங்கினர்.

‘வந்துட்டாங்க மும்மூர்த்திகள். ஒண்ணு முழுசா வெந்தது, ஒண்ணு அரை வேக்காடு, ஒண்ணு வேகவே வேகாதது’ மனதிற்குள் எரிச்சலோடு அவர்களை அர்ச்சித்தவன், “நதியா இப்போ சார் கூட ரெண்டு பேர் வருவாங்க. குறுகுறுன்னு பார்ப்பாங்க, தப்பா நினைச்சுக்காத” என்றுவிட்டு அருகில் நிற்க,

கம்பெனியின் கீழ்தளத்தில்… மிதுனும் அவன் நண்பர்களும் காரில் வந்திறங்கியதும், “இவங்க தான் அந்த பொண்ணு, பேர்…” என்றவாறு மிதுன் யோசிக்க, “சார்.. மிஸ்.நதியா” விஷ்ணு எடுத்துக் கொடுக்க, மிதுனின் நண்பர்கள் இருவரும் அவனை முறைத்தார்கள்.

“என்ன விச்சு, நீதான் இன்டர்வியூலாம் பண்ணி செலக்ட் பண்ணியாம். எனக்கு கூட ஒரு நல்ல பொண்ணு பார்க்கணும், கல்யாணத்துக்குத் தான், இன்டர்வியூ பண்ணிடலாமா?” சத்யா கேலியாக சிரித்திட, ‘உனக்கு யாருப்பா பொண்ணு தருவாங்க. கொஞ்சம் விட்டா மூணு பேரும் சேர்ந்து இதே வேலையை செய்ய வச்சுருவீங்க போல’ விஷ்ணுவால் பேசிட முடிந்திடுமா என்ன? வழக்கம்போல மனதிற்குள் புலம்பியவன்,

“சத்யா சார்.. மிதுன் சார் சொன்ன வேலையை செஞ்சேன், அவ்வளவுதான். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று பற்கள் தெரிய இளித்து வைத்தான்.

அரவிந்த், சத்யா இருவரும் நதியாவின் முகத்தையே பார்த்தார்கள். நீண்ட நேரமாக அழுத்தமாய் அவர்கள் பார்த்திருக்க அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

பார்வையை தாழ்த்திக் கொண்டவள் நெளிந்திட, ‘அப்படியே கண்ணாலேயே நல்லவங்களா? இல்லையான்னு ஸ்கேன் பண்றாங்களாம் முட்டா பீசுங்க. இவங்க கண்டுபிடிச்சுட்டாலும். பணத்தை பார்த்தாலே எல்லாரும் மாறிடுவாங்க. நீங்க பண்ற டார்ச்சருக்கே ஆப்போசிட் பார்ட்டி எவனாச்சும் பெரிய லம்ப் அமவுண்ட் குடுத்தா நானே உங்க மூணு பேரையும் போட்டுத் தள்ளிடுவேன். வேஸ்ட் ஃபெல்லோஸ்’ மனதிற்குள் மூவரையும் வறுத்தெடுத்தான் விஷ்ணு.

“நீ என்னமா படிச்சிருக்க?” அரவிந்த் நதியாவை பார்த்து நெற்றியை நீவியபடி கேட்க, “B.Sc சைக்காலஜி படிச்சிருக்கேன் சார்” அமைதியாக பதில் சொன்னாள் நதியா.

” ஓ.. இந்த மைண்ட் ரீடிங் பண்ணுவாங்களாமே. டூ யூ நோ தட்?” சத்யன் ஆர்வமாய் கேட்டிட, அவள் “தெரியும் சார்..” என்றிட, சட்டென அவளை திரும்பிப் பார்த்தான் விஷ்ணு.

“நாங்க மனசுல என்ன நினைச்சாலும் கண்டுபிடிச்சுடுவியா?” அரவிந்தனும் அவர்கள் பேச்சில் இடைநுழைய, “சென்ட் பர்சன்ட் சொல்லிட முடியாது. ஆனா முடிஞ்ச அளவு கண்டுபிடிச்சுடுவேன்” நதியா சிரித்தவாறு சொன்னாள்.

‘அய்யோ அப்போ காலைல இருந்து நான் மனசுல நினைச்ச எல்லாத்தையும் கண்டுபிடிச்சிருக்குமோ இந்த பொண்ணு?’ விஷ்ணு தன்னோடு நினைத்துக் கொண்டிருக்க, அவனைப் பார்த்து சிரித்தவள், ‘ஆமா’ என்பது போல் கண்களை சிமிட்டிட, அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

“சரி இப்போ நான் என்ன நினைச்சேன் சொல்லு” சத்யா கேட்க, மற்றவர்கள் என்ன சொல்வாள் என்று ஆவலாய் அவளைப் பார்த்திட, “நம்ம சொல்றதை கேட்காம அவர் கூட சேர்ந்து இன்டர்வியூ பண்ணிருக்கான் இந்த விச்சு, இவனை வேலையை விட்டுத் துரத்தினா தான் மிதுன் சார் சரியா ஆவார்” அப்படின்னு நினைச்சீங்க” சீரியஸான முகத்துடன் நதியா சொல்லிட, அரவிந்தும் சத்யாவும் சத்தமாக சிரித்தனர்.

விஷ்ணு இவர்களை அதிர்ச்சியாய் பார்த்திருக்க, “மித்து ஷீ இஸ் சம்திங் டிஃப்ரென்ட். சோ மிச்சிவியஷ். நம்ம பேசுனத வச்சு சும்மா அசம்ப்ஷன்ல சொல்லுது. நான் அப்படி நினைக்கல” சத்யா மனதில் நினைத்ததை மறைத்து பொய்யாய் சிரிக்க,

‘சும்மாவே இவங்க சேர்ந்தா என்னை ராக்கிங் பண்ணுவாங்க. இதுல புதுசா ஒரு வானரம் இவங்க குரூப்ல சேர்ந்திடுச்சா?’ என்று நினைத்த விஷ்ணு, “அய்யோ..” என்று சத்தமாக கத்தினான். ‘இந்த பொண்ணு கண்டுபிடிச்சிருக்குமோ?’ மெதுவாய் அவள் பக்கம் திரும்பிட, அவன் மனதை படித்தவள் கோபமாய் அவனை முறைத்தாள்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மோகம் தீர்க்கும் நதியவள்
5,939 177 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page