வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 4
ஆணாதிக்கம் நிறைந்த கலாச்சாரங்களில் ‘மதர் வூன்ட்ஸ்’ அப்படிங்கிறது தலைமுறை தலைமுறையாகப் பெண்ணாகப் பிறந்ததால் ஏற்படும் வலி கடத்தப்படுகிறது. இந்த வலி பல வழிகளில் தாங்கிக் கொள்ளப்படுகிறது. இது ஓப்பீடு, அவமானம், தன்னைச் சிறிதாக நினைத்தல், ஒன்று வேண்டும் என நினைப்பது குற்ற உணர்வைக் கொடுக்கும். இவை எல்லாம் இதில் அடக்கம். பொதுவாக இந்த வகை மன நிலையில் உள்ள பெண்கள் தங்களுடையை உண்மையான திறமை மற்றவர்களைப் பயமுறுத்தும் என்பதால் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். பிறர் தன்னை மோசமாக நடத்தினால் அதற்கு அளவு கடந்த சகிப்புத் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னைத் தானே மட்டம் தட்டிக் கொள்ளுவதும், பிற பெண்களோடு போட்டி மனப்பான்மையோடும் இருப்பார்கள். மன அழுத்தம், உண்ணுவதில் வரும் மன அழுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம். இவை எல்லாம் பிறர் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இவர்கள் இயல்பை மீறி நடந்து கொள்வதால் ஏற்படும். தாய் தன்னை அங்கீரிக்க வேண்டும் என்று மகள் இப்படி நடந்து கொள்வது ‘மதர் வூன்ட்ஸ்’ பிரச்சினையை உருவாக்கும்.
-பத்மமுகி
“சாரி சார்! நாங்க இப்ப கிளம்பறோம்.” எனப் பத்மமுகி மன்னிப்புக் கோரினாள்.
“முகிக்கா, நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. ருத்ரா இங்க வரதை போறதை யாராலும் தடுக்க முடியாது.”
“சிவகாமி, இரு இப்பவே அங்கிளுக்கு கால் பண்றேன்.” எனக் கைப்பேசியை எடுக்கவும் சிவகாமினி ருத்ரனின் கைப்பேசியை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்.
ருத்ரா அவளருகே நெருங்க, “கிட்ட வந்தால் உன் போன் ஸ்பெகட்டி மாதிரி வெந்நீர் குளியல் போட்ரும் ருத்ரா. அப்பாகிட்ட சொல்லிக்கோ. நான் பார்த்துக்குவேன்.” என்று தைரியமாகப் பேசினாள்.
அவன் மேலும் நெருங்கக் கைப்பேசியை முதுகு பக்கமாகக் கைகளில் மறைத்தாள் காமினி.
“காமினி மொபைல்.” என அழுத்தமான குரலில் கைப்பேசியைக் கேட்டான் ருத்ரன். அவன் விழிகள் கூர்மையாக அவள் முகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன.
“மொபைல் வேணுமா? அப்ப அதுக்கு ஒரு டீல் போடலாமா?”
அவள் செய்ததற்கு தன்னுடைய கைப்பேசியைப் பிடுங்கி, தன்னிடமே விளையாடும் அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கினான்.
“அது ஒன்னுமில்லை ருத்ரன் செல்லம். நான் கேட்ட டிஷ்சஸ் டிரையல் செய்யறதுக்கு ஒத்துக்கணும்.”
“முடியாது சிவகாமி.”
“அப்பப் போ, புதுசா போன் வாங்கிக்கோ.” என வெந்நீரின் அருகே கொண்டு போனாள்.
உடல் முழுக்க நீர் சொட்டிக் கொண்டு, மேனி எங்கும் நீராவி சூழ நிற்கும் அவளிடம் அவன் மேலும் நெருங்க முற்படவில்லை. அதுவும் இந்த இடத்தில் அது தவறாகப் பட்டதால் விலகி நின்றான் ருத்ரா. அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள் காமினி.
“உன் போன் டர்ட்டியா இருக்கு. அதுக்கு இன்னிக்கு ஒரு ஹாட் குளியல்.” எனக் கைப்பேசியை நீரின் மேலே ஆட்ட அதன் மேல் நிராவி படியத் தொடங்கியது.
“ஓகே.” எனப் பல்லைக் கடித்தபடியே அவன் பதில் அளிக்க, காமினியின் முகத்தில் மிகப்பெரிய புன்னகை ஒன்று உதயமாகியது.
சட்டென்று எழுந்தவள், “தேங்க்ஸ் ருத்ரா!” என வேகமாக அவனை அணைத்து விடுவிக்க, ருத்ராவின் விழிகள் அகலமாக விரிந்தது. அவளின் ஈரம் அவனையும் ஒட்டிக் கொண்டது.
“முகிக்கா, இன்னிக்கு டபுள் சந்தோஷம்! வாங்க போலாம்.”
“தேங்க்ஸ் ருத்ரா! ஃபார் யுவர் அன்எக்ஸ்பட்டடு விசிட்.” எனக் கண்ணடித்தவள் அங்கிருந்து முகியின் கையைப் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தாள்.
“இங்க டிரஸ்ஸிங் பண்ணிக்கலாம்.” எனச் சிறிய வீடு போன்றிருந்த பகுதிக்குள் முகியை அழைத்துச் செல்ல, இருவரும் உடை மாற்றிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
“சிவகாமினி, அவர் யாரு? நீ யாரு முதல்ல?” என்றாள்.
“முகிக்கா, நெய்தல் நிழல் ஓனர் எங்கப்பா. அதில் ஒரு பார்ட்னர் கம் செஃப் ருத்ரா. நானும் என்னோட டிவின்னும் இங்க மேனேஜர்ஸ், அப்பா காலத்துக்கு அப்புறம் நாங்க டேக் ஓவர் பண்ணுவோம். ருத்ரா ஓகே சொல்லாமல் அப்பா எதையும் அப்ரூவ் பண்ணமாட்டார். நானும் மெனு அப்டேட் கேட்கறேன். இரண்டு பேரும் ஒத்துக்கல. அதான் இன்னிக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைச்சதும் யூஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை.”
“ருத்ரா ரொம்ப ஸ்ட்ரிக்டா?”
“ருத்ரசேனா ரொம்ப டிசிப்ளின், ரிஜிட் அக்கா. ஏழு மணினா ஆறரைக்கே அங்க இருக்கும் பக்கா பர்ஃபெக்சனிஸ்ட். எது சரியாப்படலைன்னாலும் விம் போட்டு விலக்கி வைக்கற வள்ளல். இந்த விஷயத்துக்காக நேத்து நைட் பேசும் போதுதான் உங்களைப் பார்த்தேன்.”
“ம்ம்ம்.”
“சரி, ருத்ர புராணத்தை விடுவோம். ருத்ர நளபாகத்துக்குப் போகலாம். மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் இன்னிக்கு ருத்ரா கைப்பக்குவத்தில் சூப்பரா இருக்கும். வாங்க போய்ச் சந்தோஷத்தைக் கொண்டாடலாம்.”
உற்சாகமாக அவள் துள்ளிக் கொண்டே நடப்பது முகிக்கும் புன்னகையை வரவழைத்தது.
“அக்கா, உங்க சொந்த ஊர் எது? அப்பா அம்மா எங்க இருக்காங்க?”
அவள் கேள்வியில் அப்படியே நின்ற முகியின் முகம் இறுகி பிறகு மாறியது.
“நான் கடவுளோட பிள்ளை காமினி.”
முகி கூறியது புரியாமல் பார்த்தாள் காமினி.
“சுருக்கமா என் லைஃப் சொல்லட்டுமா? நான் ஒரு அனாதை. ஒருத்தனை காதலிச்சு அவனோட குடும்பமாக இருந்தேன். இப்ப அதுவும் இல்லை.”
காமினி ஒரு சில விநாடிகள் அமைதியாகப் பார்த்தாள்.
“ஏன் யாருமில்லை? இந்தத் தங்கச்சி இருக்கேன். வாங்க சாப்பிடலாம்.”
“எனக்கும் அம்மா இல்லை அக்கா. நாங்க பிறந்ததும் இறந்துட்டாங்க. எங்க அப்பாதான் எங்களுக்கு எல்லாமே. இந்த உலகத்தில் யாராவது ஒருத்தர் நமக்குத் துணையாக அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப இருப்பாங்க. இப்ப நான் இருக்கேன்.” எனக் காமினி பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
காலை உணவையும் காமினியுடன் பேசியபடி முடித்துக் கொண்டவள் தன்னுடைய பணிக்கு விரைந்தாள்.
சிவகாமினி உற்சாகமாக வீட்டிற்குள் நுழைவதை உணவு உண்ணும் மேசையில் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் சிவகார்த்திக்.
“என்ன மினியன் மேம்? காத்து ஹாட் ஸ்பிரிங்க் பக்கம் வீசுனதாவும் கூட ஒரு பொண்ணு இருந்ததாவும் தகவல் வந்துச்சு.”
“அதுக்குள்ள இன்ஃபர்மேசன் வந்துருச்சா. உன்னோட காசிஃப் நெட்வொர்க்கை முதல்ல டேமேஜ் செய்யணும்.”
தன் சகோதரியை லேசான முறுவலுடன் பார்த்தான் அவன்.
“எனக்குத் தெரியாமல் இங்க எதுவும் செய்ய முடியாதுன்னு தெரியும் இல்லை மினியன்.”
“சரி, நான் என்ன செஞ்சுருக்கேன்னு சொல்லு பார்க்கலாம்?”
“என்ன செஞ்சீங்க மேடம்? உன் முகத்தில் தேஜஸ் கொஞ்சம் கூடிருக்கு. அது நல்லா குளிச்சதால் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்லு.”
“ருத்ராவை டிரையலுக்கு ஒத்துக்க வச்சுட்டேன்.”
உணவு மேசையிலிருந்து எழுந்தே விட்டான் சிவகார்த்திக்.
“என்ன சொல்ற? நிஜமாவா?”
“மெய்யாலும்தான் பிரதர். சுடுதண்ணியைக் கொட்ட டிரை பண்ணேன், ஒத்துகிட்டார் அந்தப் பாகற்காய் பரமசிவம்.”
வாயில் தன் விரல்களை வைத்துத் தன் சகோதரியை அதிசயமாகப் பார்த்தான்.
“எப்படி மினி? ருத்ராவை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க வைக்க முடியாதே?”
“அதெல்லாம் தொழில் ரகசியம்டா அய்யாச்சாமி. ஓரம் போ. நான் போய் டாடிகிட்ட இன்ஃபார்ம் செய்யணும்.” என உதட்டைச் சுளித்தப்படி முன்னே நடந்தாள்.
தன் அக்காளைப் பற்றி அவன் நன்கு அறிவான். அவள் ஒரு செயலை முடிவு செய்து விட்டாள் எனில் அதை நிச்சயம் செய்தே தீருவாள். அவளைத் தடுப்பது என்பது இயலாத ஒன்று.
அவளுக்கு எதிர்வினை புரிவானா ருத்ரன்? முகியின் கணவன் என்ன செய்து கொண்டிருப்பான்?
தொடரும்…
