அத்தியாயம் – 2

விஸ்தாரமாய் விரிந்து கிடக்கும் அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் முன் வந்து நின்ற மகிழுந்தில் இருந்து பதற்றமாய் இறங்கினார் கோவையின் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் அருள்ராஜ்

பின்னோடு அருள்ராஜின் மனைவி இளவரசியும் அவ்களின் மகள் அதிதியும்.

சிகிச்சை அறைக்குள் தாதிகள் வெளியே வரவும் உள்ளே போகவும் நிலவரம் கலவரமாக இருக்க, அங்கு ஓர் மூலையில் ஒடுங்கி மண்டியிட்டு அமர்ந்திருந்த அதிரதனை கண்டு ரௌத்திரத்துடன் நெருங்கினார் அருள்ராஜ்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது?

யார் தன்னை நெருங்குகிறார்கள்? 

இப்படி எந்தவித உணர்வுமற்று ஜடத்தை போலிருந்தவனின் பின்பக்க சட்டையை பற்றி தூக்கி கன்னத்தில் ‘ரை’ என ஒன்று வைக்க அதில் தான் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான் அதிரதன். 

கண்ட நொடி, இத்தனை நேரம் தேக்கி வைத்திருந்த மொத்த பயத்தையும் தன் தந்தையை கட்டிக்கொண்டு கதறி தீர்த்தான் ஆறடி ஆண்மகன்.

மகன் செய்கையில் கோவத்தில் இருந்த அருள்ராஜால் அவனை திட்டக்கூட முடியாத நிலை.

அந்த இறுக்கமான சூழலை கலைக்கும் விதமாக வேதிகாவுக்கான சிகிச்சை முடித்துக் கொண்டு வெளியில் வந்தான் ராகவ். 

ராகவை கண்டதும் அருகில் சென்ற அதிரதனின் தங்கை அதிதி “அண்ணிக்கு என்ன ஆச்சு ராகவ்? அவங்களுக்கு ஒன்னும் இல்ல தானே?” என்று கண்களில் தேங்கிய நீருடன் கேட்டாள். 

அவள் தோளை ஆதூரமாய் தட்டி கொடுத்தவன் “வேதிகா இப்ப சீரியஸ் ஸ்டேஜ தாண்டிட்டா அதி. இனி பயப்படுறதுக்கு எதுவும் இல்ல” என்று கூறியவன் பார்வை அதிரதனின் மேல் தான். 

அதிரதன், ராகவ் கூறிய அந்த ஒற்றை வார்த்தையில் போன உயிர் மீண்டும் திரும்ப வரப்பெற்றவனாய் அப்படியே சரிந்து விட்டான். 

இந்த இரண்டு மணி நேரம் அவனுக்கு இரு யுகங்களாய் அல்லவா கடந்தது. இதோ இறுதியில் அவன் காத்திருப்பை ஏற்று அவனவள் மீண்டுவிட்டாளே! 

தற்போது அருள் ராஜை நெருங்கிய ராகவ் “கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அங்கிள். உங்க மகன் வேதிகாவுக்கு பண்ண கொடுமைய நான் அதிதிக்கு பண்ணா நீங்க ஒத்துக்குவீங்களா?” என்று அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டான்.

அவன் கேள்வியில் கம்பீரமான மனிதர் தலை தாழ்ந்து நின்றார். 

அதனை பொறுக்கமாட்டாமல் இளவரசி “மாப்பிள! உங்களுக்கே தெரியும். ரதன் யார் சொல்றதையும் கேட்க மாட்டான். கல்யாணமான அன்னைக்கு வேதிகாவோட வெளிய போனவன் தான். 

அவளும் புருசன் தான் முக்கியம்னு போயிட்டா. இதுல எங்கள குறை சொல்ல என்ன இருக்கு?” என்று கூறியதில் அங்கிருந்த யாருக்குமே உடன்பாடில்லை என்பது அவரவர் முகத்திலேயே வெளிபட்டது.

“அப்படியா அத்தை? உங்கள பேச இதுல ஒன்னும் இல்லையா? ரதன் இப்படி நடந்துக்குறதுக்கு மொத்த காரணமும் நீங்க தான். யாருக்கும் அடங்காம தான் மட்டும் எதோ பெரிய இது மாதிரி” நிறுத்தி தன் தலைமுடியை தொட்டு காட்டியவன் “ நடந்துக்குற உங்க பையன வளத்தது நீங்க தான? ஏதோ உலகத்திலேயே இவர் மட்டும் தான் பெரிய இவரு மாதிரி என்ன ஆட்டம்?” என்று பொறுமினான். 

அதில் இளவரசியும் வாயடைந்துக்கொள்ள அதிதி தான் “ராகவ் ப்ளீஸ் கொஞ்சம் பொருமையா இருங்க” என அவனை சமாதானப்படுத்த நெருங்க “எனக்கு புரியல. நீங்க எல்லாம் என்ன மனுசங்க? 

உன் அண்ணன் அந்த பொண்ண ஏமாத்தி கல்யாணம் பண்ணி, தனியா கூட்டிட்டு போய் வச்சு இல்லாத கொடுமையெல்லாம் பண்ணுவான். அப்ப எல்லாம் யாரோ எவரோனு குடும்பமே ஒதுங்கி நின்னிங்க. அவள் கர்பமா இருக்கோம்னு தெரிஞ்சே சாக துணிஞ்சுருக்கா.

இப்பவும் வந்து இவனுக்கு சொம்பு தூக்கிட்டு நிக்கிறிங்க? 

உங்களுக்கெல்லாம் அந்த பொண்ண பாத்தா எப்படி தெரியுது? கேட்கிறகு யாரும் இல்லாத அனாதை பொண்ணுங்குறதுனால என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைப்பா? 

அவளுக்கு ரத்தம் குடுத்தாத்தான் காப்பாத்த முடியும். வான்னு கூப்பிட்டா, குடிச்சுட்டு வந்து நிக்கிறான் உங்க புள்ள.

பொண்டாட்டி நாலு மாசம் மாசமா இருக்குறது கூட தெரியல. இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? குடும்பம்?” என்று மருத்துவனாக மட்டுமால்லாது வேதிகாவின் சகோதிர நிலையில் நின்று வாதாடினான் ராகவ்.

அருள்ராஜ் “என்ன மாப்பிள சொல்றிங்க? வேதிகா கர்பமா இருக்காளா?” என்று அவரும் அதிர்ச்சியாக கேட்டார்.

“அப்பா சாமி உங்க டிராமா குடும்பத்துல சேர்ந்து நல்லா நடிக்க கத்துக்கலாம். என்ன ஆக்ட்டிங்? குடும்பமா சேந்து நடிச்சு  உங்க பையன காப்பாத்த போறிங்களா? நான் விடமாட்டேன். கண்டிப்பா போலிஸ் கம்ப்ளெய்ன்ட் குடுப்பேன்” என்றவன் விறுவிறுவென சென்றுவிட்டான்.

இங்கு ராகவ் கூறிய எதுவும் மண்டைக்கு உறைக்காமல் ‘தன் உயிரை சுமப்பவள் உயிர்பிளைத்து விட்டாள்’ என்ற செய்தியே போதும் என்ற நிலையில் அதிரதன் எழுந்தான். 

தன்னவள் இருக்கும் அறையை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து தளர்ந்துபோன நடையுடன் வெளியில் வந்தான்.

நடையில் தோரணை; பேச்சில் தீர்க்கம்; பார்வையில் கூர்மை என நவீன பயிர் விதைகளை விளைவிக்கும்  நிறுவனத்தை தொடங்கி அதில் புரட்சி நடந்தும் இளம் தொழிலதிபன் என்ற கர்வம் எப்போதுமே அவனுக்கு அதிகம் தான்.

அவனின் அந்த கர்வம் யாவும் கரைந்தது; அவன் உதிரத்தோடு கலந்து உயிரானவளை ரத்த வெள்ளத்தில் கண்ட நொடி.

எல்லையற்று எங்கோ வெறித்தபடி, கால்ப்போன போக்கில் நடந்தவன் எப்படி சாலைக்கு வந்தான்? எப்படி விபத்தேதும் நேராது நெடுஞ்சாலைகளை இணைக்கும் மேம்பாலத்தை அடைந்தான் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

மாலை வேளையில் மனித பறவைகள் தங்கள் கூட்டிற்குள் அடைய பரபரப்பாய் இயங்குவதை, உயரமான அந்த மேம்பாலத்திலிருந்து பார்த்து நின்றிருந்தான் அதிரதன். 

அவன் சிந்தையும் நினைப்பும் அவள்; அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

இமைகள் பூட்டியவன், ஒன்றரை வருடத்திற்கு முன்பு விரிந்த வெள்ளை ரோஜாவை போன்ற தன் காதல் காரிகையை சந்தித்த நினைவிற்கு நகர்ந்தான்.

ஒன்றரை வருடத்திற்கு முன்….

“ரதன் படிச்சு முடிச்சு மூணு வருஷம் ஆச்சு. ஆபீஸ பாத்துக்க வான்னா வராம இப்ப வரைக்கும் ஊர் சுத்திட்டிருக்க. இப்படியே இருந்தா உன் வாழ்க்கையில அடுத்து என்ன தான் செய்ய போற?” காலை பதினோரு மணிக்கு ஆற அமர  எழுந்து வந்த மகனிடம் கேட்டார் அருள்ராஜ். 

“ஏங்க சாப்பிட உட்கார்ந்திருக்க பிள்ளையை கரிச்சி கொட்டிட்டு இருக்கீங்க? அவன் தான் சொந்தமா பிசினஸ் பண்றேன்னு கேட்டானே. நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க” என்று மகனுக்காய் பரிந்துக்கொண்டு வந்தார் இளவரசி.

“உன்னால தான் அரசி அவன் இப்படி தறுதலையை சுத்திட்டு இருக்கான். நமக்கு என்ன தொழிலா இல்ல எடுத்து நடத்த? 

எக்ஸ்போர்ட்ஸ இவன் பாத்துக்குவான்னு நம்பி தான ஆரம்பிச்சேன். ஆனா அது எல்லாத்தையும் விட்டுட்டு உரம் போடுறேன். செடி வளர்க்கிறேன்னு சுத்திட்டு இருக்கான் உன் புள்ள” என்று அன்னை மகன் இருவரையும் சாடினார் அருள்ராஜ். 

“யார கேட்டு அவரு அந்த பிசினஸ் ஆரம்பிச்சாரு? எனக்கு விருப்பமான்னு ஒரு வார்த்தை கேக்கணுமில்ல? நான் படிச்சதுக்கு சம்பந்தமா தான் என்னால வேலை பார்க்க முடியும். 

எனக்கு துணிய பத்தியும் எக்ஸ்போர்ட்ட பத்தியும் ஒன்னும் தெரியாது. சீக்கிரமே மல்டி லெவல் ஆர்கானிக் பார்ம் ஆரம்பிக்க தான் போறேன். 

நான் ஒன்னும் சும்மா இல்ல. ஸ்டார்ட்டப் ஆரம்பிக்கிறதுக்கான வேலைய தான் பார்த்துட்டு இருக்கேன்” என்று கூறியவன் நெய் மணக்க வெண்பொங்கலை போட்டு ஒருப்பிடி பிடித்துக் கொண்டிருந்தான்.

மகனின் இந்த போக்கு பிடிக்காத அருள்ராஜும் அவனை முறைத்தபடியே தன் சங்கத்திற்கு புறப்பட்டுவிட்டார். 

தன் கணவனின் தலை மறைந்ததும் மகனின் அருகில் வந்த இளவரசி, “அவர் சொல்றதும் கரெக்ட் தானே ரதன். உங்க அப்பாவுக்கும் வயசாயிட்டே இருக்கு.

இத்தனை வருசமும் குடும்பத் தொழில் எல்லாத்தையும் மனுஷன் ஓடி ஓடி உழைச்சு பல மடங்கா உயர்த்தி வைச்சிருக்கிறாரு. 

நீ பாட்டுக்கு உன் தொழிலை பார்த்து போயிட்டேனா, இதெல்லாம் நாளைக்கு யார் பாத்துக்குறது?” என்று மென்மையாக மகனிடம் பேசினார். 

தான் பிடித்த முயலுக்கு எட்டுக்கால் என்று நிற்கும் ரதன் அவரில் பேச்சிலா மயங்க போகிறான்? 

“மம்மி நீ எந்த மாடுலேஷன்ல என்கிட்ட இந்த கேள்வியை கேட்டாலும் என்னோட அன்சர் நோ தான். நீயே சொல்ற அப்பா கஷ்டப்பட்டு இவ்ளோ பெரிய சாம்ராஜ்யமா உருவாக்கிருக்காருனு.

எதுவுமே தெரியாம அவ்ளோ பெரிய இடத்தில் போய் உட்கார்ந்து எனக்கு அந்த சீட்டோட வேல்யூ புரியாது. 

இதுவே நான் ஆரம்பத்துல் இருந்து பார்த்து பார்த்து உருவாக்கின கம்பெனினா அது வேற. உங்களுக்கு அப்பாக்கு அடுத்து தொழில் வாரிசு வேணும்னா, பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்  படிக்கிற உங்க பொண்ணு கிட்ட எல்லா பொறுப்பையும் குடுத்துருங்க. என்ன விட்ருங்க” என்றவன் பாதி உணவிலேயே எழுந்து கைகழுவி விட்டு வெளியே சென்றுவிட்டான். 

இளவரசியும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு “இவன் எப்பதான் திருந்துவானோ?” என புலம்பி கொண்டிருந்தார். 

வீட்டிலிருந்து, தன் சொகுசு பைக்கில் புறப்பட்ட ரதன் நேராக சென்று நின்றது தன் நண்பன் ரஞ்சனின் வீட்டில் தான். 

ரதனும் ரஞ்சனும் சிறுவயதிலிருந்து ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள்.

தந்தை கால நட்பு இவர்கள் தலைமுறையிலும் அழகாக தொடர்ந்து வருகிறது. 

பெரிதாக நட்பு வட்டத்தை தன்னருகில் ஒட்டவைத்துக் கொள்ளாத ரதன் தவறும் சமயங்களிலும் துவளும் சமயங்களிலும்

எதிர்பார்ப்பது ரஞ்சனின் துணையை மட்டுமே. 

தான் ஆசையாக வளர்க்கும் ஹஸ்கி நாயை சங்கிலியால் பிணைத்து கையில் பிடித்துக் கொண்டு நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ரஞ்சன், இவனை நோக்கி வந்தான். 

“என்ன ப்ரோ இன்னைக்கு காலையில அர்ச்சனையா?” என சிரித்தபடி ரஞ்சன் கேட்க, “உனக்கு என் நிலைமையை பார்த்த சிரிப்பா இருக்கா? வண்டில ஏறு. சூடா போய் டீ அடிச்சா தான் ஏறினது இறங்கும்” என்று கூறினான் ரதன். 

“ஒருத்தர் உன்னை எதுவும் சொல்லிறக்கூடாது. உடனே டீ குடிக்க கிளம்பிருவையே. சரி இரு நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்று திரும்பியவனின் ஆம் கட் பனியனை பற்றி இழுத்தவன் “நீ இந்த காஸ்டியூம்ல தான் ஹேண்ட்ஸாமா இருக்க. வந்து வண்டில ஏறு” என்று பிடித்து இழுத்தான். 

“டேய் நம்ம போறது தெருமுனைல இருக்கிற டீ கடைக்கு டா. அங்க எப்படிடா இப்படியே வர முடியும்?” என்று கேட்டவனை கண்டு கொள்ளாமல் அவன் வீட்டு வாட்ச்மேனிடம் நாய்க்குட்டியை அழைத்து செல்ல கூறிவிட்டு ரஞ்சனை வம்படியாக பிடித்து இழுத்து சென்றான் ரதன்.

 

-தொடரும்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
தோள் சாயும் காரிகையே
574 7 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page