மிதுன் ஆபீஸுக்கு கிளம்பி சென்றிட, நதியா கிளினிங் வேலை செய்யும் பணியாட்களிடம், “அந்த அறையில் என்ன சுவிட்ச் எதற்கு இருக்கிறது? எந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும்? மிதுனுக்கு பிடிக்காத விஷயங்கள் என்ன?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டாள். பின்ன நேத்து வாங்கிய அறை அப்படி. மறுபடியும் அடி வாங்கக்கூடாது என்று நினைத்து தன்னுடைய வேலைகளை சரியாக செய்ய ஆரம்பித்தாள்.
அந்த தளத்தில் ஒரு பால்கனியும், அதில் பூச்செடிகள் நிறைந்த பூந்தோட்டமும் இருக்கிறது. அதோடு பீன் பேக், சோபாவும் போடப்பட்ட சிட் அவுட்டும் இருக்கிறது. அங்கிருந்து கீழே பார்த்தால் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டமும், கொஞ்சம் தள்ளி வேலையாட்கள் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ்களும் தெரியும்.
நதியா அவள் தோழியிடம் போன் பேசும் போது மாலை பொழுதுகளில் அங்கு வந்து அமர்ந்து கொள்கிறாள். அந்த இயற்கை காற்றும், பூச்செடிகளின் வாசமும், அங்கு பறக்கும் பட்டாம்பூச்சிகளும் அவள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. அவ்வப்போது வைஷாலியும் அங்கு வந்து அவளுடன் அமர்ந்து கதை பேசிச் செல்வாள்.
அது தேவ் மனைவி ரூபிணிக்கு பொறுக்கவில்லை. ஏற்கனவே மிதுனை திருமணம் செய்ய முடியவில்லையே என்ற வெறுப்பில் இருந்தவள் கோபமெல்லாம் இப்போது நதியா மீது தான் திரும்பியிருந்தது.
ரூபிணி சிறு வயதில் இருந்தே மிதுனை நேசித்து வந்தாள். ஆனால் அவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. ராதாவிற்கு தன்னுடைய அண்ணன் மகள் ரூபிணியை மிதுனுக்கும், அதிதியை தேவ்க்கும் மணமுடித்து வைக்க ஆசை.
தேவ் ரூபிணியை விரும்பினான். இதைத் தெரிந்து கொண்ட மிதுன், ராதாவிடம் பேச அவருக்கு இதில் சம்மதமே இல்லை. மிதுன் பிடிவாதமாக நின்று இருவரின் திருமணத்தை நடத்தி முடித்தான். ரூபிணியும் மிதுன் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்ன கோபத்தில், “எனக்கும் அவன் வேண்டாம்” என்று சொல்லி விட்டாள்.
தேவ் தன்னை நேசிக்கிறான் என்று தெரிந்ததும் முழு மனதுடன் அவனை ஏற்றுக் கொண்டாள். இருவரும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவளுக்கு மிதுன் மீது கோபம் இருக்கிறது. இப்போது அது நதியாவின் மீதும் திரும்பி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ராதா நதியாவை ஏற்றுக் கொண்டால், இந்த வீட்டின் மூத்த மருமகள் என்ற பதவியும் பறிபோய் விடும் அல்லவா. எப்படியாவது நதியாவை இந்த வீட்டை விட்டுத் துரத்திட நினைக்கிறாள். (அக்ரிமெண்ட் முடிஞ்சா அவளே வீட்டை விட்டு போயிடுவா. நீ வேற ஏம்மா கஷ்டப்படுற)
அன்று மாலை நதியா, வைஷாலி இருவரும் சிட் அவுட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த ரூபிணி, “வைஷு.. அத்தை இவ கூட உன்னை பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கள, அப்புறம் ஏன் பேசிட்டு இருக்க?” கோபமாய் அவளிடம் கேட்க,
“அவங்க எங்க அண்ணி நான் பேசுவேன். உனக்கென்ன ரூபி” மாமன் மகள் என்பதால் விளையாட்டாய் பேசினாள் வைஷாலி.
அது இன்னும் அவள் கோபத்தை அதிகமாக்கிட, “அவ உனக்கு அண்ணினா நான் உனக்கு யாரு? நான் தான் இந்த வீட்டுக்கு முதல்ல வந்தேன். நான் தான் இந்த வீட்டோட முத்த மருமகள். நீ என்னையும் அண்ணின்னு தான் கூப்பிடணும்” என்றாள்.
“நாம என்ன அப்படியா பழகியிருக்கோம். நான் சின்ன வயசுல இருந்தே உன்னை ரூபின்னு தான் கூப்பிடுவேன். இப்போ திடீர்னு அண்ணின்னு கூப்பிட சொன்னா எப்படி?”
“அது அப்படிதான். இனிமே மரியாதையா பேசிப் பழகு”
நதியாவோ ஏதோ டிவி சீரியலில் நடக்கும் சண்டை போல இதை வேடிக்கை பார்த்திருந்தாள்.
“நீ வேற வந்து ஃபன் பண்ணிட்டு இருக்க, அண்ணி பண்ணின்னு. அப்படிலாம் உன்னை கூப்பிட முடியாது” அவள் உரிமையாய் விளையாடிட,
“அப்படியே அடிச்சேன்னு வை. இரு தேவ் வரட்டும். அவன் வந்து உன்னை அடிச்சா தான் அடங்குவ” ரூபிணி ஆக்ரோஷமாக பேசினாள்.
“இப்போ எதுக்கு தேவ் கிட்ட சொல்ல போற. அவங்க வெளில இருந்து வந்தவங்க. அதனால மரியாதையா பேசுறேன். நாம ஃப்ரெண்ட்ஸ் தான?” அண்ணன் மீதிருந்த பயத்தில் அவளுக்கு கண்ணீர் வர,
“எதுக்கு சின்ன பொண்ணு கிட்ட இவ்வளவு கோபமா பேசுறீங்க. பொறுமையா சொன்னா கேட்டுக்க போறா” மனம் தாங்காமல் நதியா வைஷாலிக்கு ஆதரவாக பேச,
“எவ்வளவு தைரியம் இருந்தா நீ என்கிட்ட இப்படி பேசுவ. நான் எப்படி இருக்கணும்னு சொல்றதுக்கு நீ யாரு? உன்னை அத்தை கிட்ட சொல்லி என்ன பண்றேன் பாரு” கோபம் குறையாமல் அவள் கேட்டிட, நதியாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இங்க பாருங்க ரூபிணி, எதுக்கு இவ்வளவு நீளமா சீரியல் டயலாக் எல்லாம் பேசுறீங்க? எதுக்கு சின்ன குழந்தை மாதிரி தேவ் கிட்ட, அத்தை கிட்ட கம்பிளையண்ட் பண்றேன்னு சொல்றீங்க? லெட் பீ ஃப்ரெண்ட்ஸ்” என்று நதியா கைக்குலுக்கக் கையை நீட்ட, அவளோ சட்டென அதைத் தள்ளிவிட்டு வேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.
வைஷாலி இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்காதடா வைஷு. என்னதான் இருந்தாலும் ரூபி உன் அண்ணனோட வைஃப். மத்தவங்க முன்னாடி உன் ஃபேமிலில இருக்கவங்களை விட்டுக் கொடுத்து பேசக்கூடாது சரியா?” என்றாள் நதியா.
“நீங்களும் எங்களோட ஃபேமிலி தான். உங்க முன்னாடி தான நான் அவங்களை கிண்டல் பண்ணேன்” என்று வைஷு சொல்ல, அவளுக்கு பதில் பேச முடியவில்லை. ‘நான் இவர்களுக்கு உறவு இல்லை என்பதை எப்படி புரிய வைப்பது?’ மனதோடு நினைத்து சிரித்தவாறு அறைக்குச் சென்றாள்.
இரவு மிதுன் வீட்டிற்குள் நுழைந்ததும் ராதா அவன் முன்பு நின்றார். “என்ன நினைச்சுட்டு இருக்கா நீ கூப்பிட்டு வந்தவ?” என்று அவர் கேட்டிட, “என்னம்மா என்ன ஆச்சு?” அவர் பேசுவது புரியாமல் பார்த்தான்.
“என்னை சீரியல் வில்லி மாதிரி பேசுற. சின்ன குழந்தை மாதிரி பிஹேவ் பண்றன்னு அந்த நதியா கிண்டல் பண்றா. வைஷுவும் அவ கூட சேர்ந்துட்டு என்னை கேலி பேசுறா” ரூபிணி கொஞ்சம் பொய்யையும் சேர்த்து சொல்லிட,
மிதுன் இண்டர்காமில் வைஷாலி, நதியா இருவரையும் கீழே அழைத்தான். அவர்களுடன் தேவ்வும், சூர்யாவும் கீழே இறங்கி வந்தனர்.
“வைஷு என்ன நடந்துச்சு சொல்லு?” மிதுன் இறுக்கமான குரலில் கேட்டிட, அவள் நடந்ததைச் சொன்னாள்.
“வைஷு என்ன இது புதுப்பழக்கம். மத்தவங்க முன்னாடி அண்ணியை நீ அப்படி பேசலாமா?” மனைவிக்கு பரிந்து கொண்டு வந்தான் தேவ்.
“நதியா அண்ணியும் நானும் மட்டும்தான இருந்தோம். நாங்க ஒண்ணும் தப்பா பேசல” தான் செய்தது சரியென்று பேசினாள் கடைக்குட்டி.
“எதிர்த்து பேசாதன்னு சொல்லியிருக்கேன்ல, அடி வாங்கப் போற” தேவ் அதட்டிட,
“வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் ஆகல. அதுக்குள்ள பெரிய பஞ்சாயத்து பண்ணிட்டா. எல்லாம் இவன் குடுக்கிற இடம்தான். ஒண்ணு இந்த வீட்ல அவ இருக்கணும், இல்ல நான் இருக்கணும்” ராதா இதுதான் சமயம் என்று மனதில் உள்ளதைச் சொல்லிட,
“நதியா.. நீ ஏன் ரூபிணி கிட்ட அப்படிலாம் பேசுன?” ஏற்கனவே ஆபீஸ் டென்ஷனில் இருந்த மிதுனுக்கு, இங்கு நடக்கும் பிரச்சனை அவன் கோபத்தைக் கிளறியிருந்தது.
நதியா அவன் கோபத்தைக் கண்டு மிரண்டவள், “அது வந்து.. ரூபிணி வைஷு வை திட்டுனாங்க. அதான்” சொல்லி முடிப்பதற்குள் தன் இரும்புக் கரத்தால் அவளை அறைந்திருந்தான் மிதுன்.
“உன்னை ரூமை விட்டு வெளில வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. இத்தனை நாளா இந்த வீட்ல ஒரு பிரச்சனையும் வந்ததில்ல. உன்னால இனிமே ஏதாவது பிரச்சனை வந்தது தொலைச்சிடுவேன். ரூபிணி கிட்ட சாரி கேளு” அவள் மீது தவறு இல்லை என தெரிந்தாலும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திட நினைத்து சொன்னான்.
வலி தாங்காமல் கன்னத்தை கையால் பற்றிக் கொண்டு தலை குனிந்திருந்தவள், ரூபிணிக்கு அருகில் சென்று “சாரிங்க..” என்றுவிட்டு அறைக்குச் சென்றாள்.
வீட்டில் அவன் கோப முகத்தை பார்த்திராதவர்கள் கொஞ்சம் அரண்டு தான் போனார்கள். அதுவும் அவன் நதியாவை அடிப்பான் என அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ராதாவுக்கு மகன் குடும்பத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறான் என்ற எண்ணத்தில் அவன் மீதிருந்த கோபம் கொஞ்சம் குறைந்தது. ரூபிணிக்கு அவள் அடிவாங்கியதில் மனம் நிறைந்து விட்டது.
மிதுன் அறைக்குச் சென்று பார்த்தால், அவள் மெத்தையில் குத்துக்காலிட்டு கால்களுக்குள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.
“எனக்கு இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல. நீ ரூமை விட்டு வெளில போகாம இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல” தான் செய்தது சரியென்று அவன் வாதிட,
அவள் பதிலேதும் பேசாமல் எழுந்து குளித்து வந்தாள். உடைகளை களைந்து மெத்தையில் படுத்தாள். அவன் அமைதியாய் அவள் முகத்தைப் பார்த்திருக்க.. “நான் இங்க ஒரு ஸ்டாஃப், அவங்க உங்க ஃபேமிலி. நீங்க செஞ்சது சரிதான்” அவன் குற்ற உணர்ச்சியை புரிந்து சமாதானம் சொன்னாள்.
“நமக்கு டைம் இல்ல. உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க” நதியா உடைந்து போன குரலில் சொல்லிட, அவன் எழுந்து வந்தான். என்னதான் வெளியே அவனுக்கு சமாதானம் சொன்னாலும் செய்யாத தவறுக்கு கிடைத்த தண்டனையால் அவள் மனம் தகித்தது.
தன்னுடைய அம்மாவுக்காக எல்லா வலிகளையும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் அவர் எப்படி இருக்கிறார்? எங்கு இருக்கிறார்? என் வலிகளுக்கு தீர்வாக என் அம்மா எனக்கு பழைய மாதிரி கிடைப்பாரா? யாரிடம் போய் கேட்பாள். விடை தெரியாத கேள்வியாகிவிட்டது அவளுடைய வாழ்க்கை.
அதற்கு பின் அவள் அறையை விட்டு வெளியே செல்வதில்லை. கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள். கொஞ்ச நேரம் செல்போன் பார்த்தாள். சில நேரம் அசதியில் நன்கு தூங்கினாள். அவள் மனமெங்கும் அம்மா குணமாகி விடவேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே. அவ்வப்போது வைஷாலி மட்டும் அங்கு வந்து அவளிடம் பேசிச் செல்வாள்.
ரூமுக்குள்ளேயே அடைந்து கிடப்பது அவளுக்கு வெறுப்பாய் இருக்க, அன்று விஷ்ணுவிற்கு போன் செய்தாள். “அண்ணா.. எனக்கு கொஞ்ச திங்க்ஸ் வேணும், வாங்கி தாங்க” கட்டளையாய் சொன்னாள்.
அவன் மிதுனிடம் கேட்டபின் வாங்கி அனுப்பினான். ஒரு டிரைபாட், ரிங் லைட், இன்னும் வீடியோ எடுப்பதற்கு தேவையான சில உபகரணங்கள் எல்லாம் வாங்கியிருந்தாள். நதியா கல்லூரி படிக்கும் போது தோழிகள், நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்வாள். எப்போதாவது தான் அதை சமூக ஊடகங்களில் போடுவாள். மற்ற நேரம் எடுத்து வைத்து நண்பர்களுடன் பார்த்து சிரித்துக் கொள்வாள்.
இப்போது தனியாக இருப்பதால் தினமும் டான்ஸ் ஆடி வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்வது என பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள். வீடியோக்களை நெருங்கிய தோழிகளுக்கு மட்டும் அனுப்பி விடுவாள். வைஷாலியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.
மிதுன் அவளுடைய சமூக வலைத்தள கணக்குகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள் எடுக்கும் வீடியோக்களை போடாததால் அவன் இதைக் கண்டு கொள்ளவில்லை.
அன்று விஷ்ணு மிதுனை பார்க்க வீட்டிற்கு வந்தவன், அவனது அறைக்கு வந்தான். பாஸ்வேர்டை போட்டு உள்ளே வந்தவன், எதிர்ப்பட்ட நதியாவிடம், “என்னம்மா கண்ணு சௌக்கியமா?” என்று பாட்டுப் பாட, “ஆமாம்மா கண்ணு சௌக்கியம் தான்” என்று எதிர்ப்பாட்டு பாடினாள்.
“தங்கச்சி தேறிட்ட போல” விஷ்ணு கிண்டலாகக் கேட்டிட, “அண்ணா.. எல்லாம் உங்க சார் ட்ரெயினிங் தான்” என்று சிரித்தாள்.
மிதுன் குளியலறையில் இருக்க, இருவரும் இங்கு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். “அண்ணா.. அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிட்டாங்களா? அவங்க எப்படி இருக்காங்க? நீங்க போய் பார்த்தீங்களா?” அவள் கண்கலங்கி கேட்க,
“எனக்கும் அவங்க எங்க இருக்காங்கன்னு நிஜமா தெரியாது. ஆனா தினமும் அவங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குனு சாருக்கு போன் வரும். உன்னோட அம்மாவுக்கு மூட்டு ஆபரேஷன் பண்ணிட்டாங்க. ஹார்ட் ஆபரேஷன் 15 நாள் கழிச்சு பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. அங்க அவங்கள நல்லா தான் கவனிச்சுக்கிறாங்க. நீ ஒண்ணும் கவலைப்படாம இரு” அவள் முக வருத்தத்தை பார்த்து ஆறுதலாய் பேசினான்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
