அத்தியாயம் 3

காலையில் சோகமாக வீட்டை விட்டு சென்ற அபிராமி இப்பொழுது புன்னகையாக வீடு வந்து சேர்ந்தாள். 

 

கௌரி மகளை இன்பமாக பார்த்தார். 

 

 வீட்டிற்கு வந்து சோபாவில் புன்னகை முகமாக அமர்ந்தவளின் மனதில் தன்னுடைய பிள்ளைகள் நின்றனர். 

 

“அபி ” என்று மென்மையாக அழைத்தார் கௌரி. 

 

அபிராமிக்கு தாயின் வார்த்தைகள் செவியில் எட்டவில்லை.  

 

” அபி ” என்று மகளின் தோளை ஆதரவாக பிடித்து அவளின் அருகில் அமர்ந்தார் கௌரி. 

 

அம்மா என்றவள் அவரின் மடியில் படுத்தாள். 

 

கௌரி மகளின் தலையை வருடி கொடுத்தார். 

 

அவரின் கைகளை பற்றிய அபிராமி  ” அம்மா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மா ” என்றாள். 

 

மகள் சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறும் வார்த்தை கௌரியின் இதயத்தில் இன்பமாக இறங்கியது. 

 

என்ன மா? என்ன விஷயம்? என்று கேட்டார் கௌரி. 

 

இன்னைக்கு என்னோட கிளாஸ்ரூம்குள்ள போனதும் என்னோட பசங்க வந்து என்னைய கட்டிப் புடிச்சாங்க மா. எனக்கு கல்யாணம் ஆகலைனு சந்தோசப்பட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆச்சுன்னா நான் இனிமேல் ஸ்கூல்க்கு வர மாட்டேன்னு நினைச்சி அழுதுருக்காங்க. என்னைய மிஸ் பண்ணிருக்காங்க என்றவளின் கண்களில் சிறு துளிகள். 

 

கௌரி மகளின் கண்ணீரை துடைத்து விட்டார். 

 

ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கு மா. என்னைய தேடவும் ஆள் இருக்குறாங்க. ஒரு மாதிரி ஃபீல் ஆகுது மா என்றாள் அபிராமி. 

 

கௌரி மகள் பேசுவதை கேட்டு விட்டு அவளின் தலையை வருடி விட்டு வீட்டு வாசலை பார்த்தப்படி, சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்தார். 

 

மணி ஆறு ஆகுது. இன்னும் இந்த சின்ன கழுதை வரலை என்று சிறிய மகளை நினைத்து கடிந்து கொண்டார். 

 

“வந்துட்டு இருப்பா மா அகி” என்றாள் அபிராமி. 

 

இதுக்கு தான் அவளையும் டீச்சர் ட்ரைனிங் படிக்க சொன்னேன். கேட்டாளா அவள் என்று இன்னும் அவளை வசை பாடி கொண்டிருந்தார் கௌரி. 

 

அம்மா எனக்கும் பசங்க இருக்காங்க மா. இது போதும் என்ற அபிராமியின் வார்த்தையில் ” அந்த பாம்பே ஜோதிடர் கூறியது நினைவு வர கௌரியின் கைகள் மகளின் தலையை வருடியதை நிறுத்தியது”. 

 

என்னாச்சு மா? தாயின் கைகள் வருடலை நிறுத்தியதை உணர்ந்து கொண்ட அபிராமி விழிகளை தாயின் முகத்திற்கு விட்டாள். 

 

ஒன்னும் இல்லை டா என்று சமாளிப்பாக சிரித்தார் கௌரி. 

 

****

 

தனியார் நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு வேகமாக பேருந்து நிலையத்திற்கு வந்தாள் அகிலா. 

 

இன்று வேலை அதிகம் தான் போலும். பெண்ணவளின் முகம் அதிக வேலை பளுவால் களைப்பாக இருந்தது. 

 

பயணிகள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமராமல் என் கால்களில் இன்னும் பலம் இருக்கிறது என்பது போல் பேருந்துக்காக காத்து இருந்தாள் அகிலா. 

 

அவள் நின்று இருக்கும் இடத்தில்  எதிரில் டீ கடையில் நின்று இருந்தான் கார்த்திக். 

 

அழகான வசீகரமான முகம். வெள்ளை நிறம் இல்லை என்றாலும் கலையான முகம். ட்ரிம் செய்யப்பட்ட அடர்ந்த தாடி. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் கண்கள். தன்னை ஒரு முறையாவது பார்ப்பாளா என்று ஏங்கி கொண்டிருந்தான் கார்த்திக். 

 

அங்கு ஒருவன் நின்று தன்னையே பார்த்து கொண்டிருப்பது தெரிந்தும் தன் தலை முடியில் ஒற்றை முடி கூட அந்த பக்கம் அசையாத படி வேறு எங்கோ பார்த்து நின்று இருந்தாள் அகிலா. 

 

“ஷப்பா ஒரு வழியா பஸ் வந்துருச்சுப்பா ” என்று நிம்மதி மூச்சை தன் நெஞ்சு குழி ஏற இறங்க விட்டவள், பேருந்தில் ஏறினாள். 

 

வந்த பஸ் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் தன்னுடைய டூ வீலரில் பயணத்தை தொடங்கினான் கார்த்திக். 

 

வெறும் அரை மணி நேர பயணம் தான் அது.

அகிலாவின் ஸ்டாப் வர, அகிலா பேருந்தில் இருந்து இறங்கினாள். 

 

அவளை தாண்டி சென்றது கார்த்திக்கின் டூ வீலர். 

 

ச்சீ… என்ற ஒரு அறுவருப்பான வார்த்தையை மெதுவாக அவளின் உதடுகள் உதிர்த்தது.

 

கோபமாகவும் விறு விறுவெனவும் நடந்து சென்றாள் அகிலா. 

 

இவள் பேருந்தில் ஏறவும் கார்த்திக் அந்த பேருந்தை பின் தொடர்வதும் சில பல மாதங்களாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இவளும் அவனை துச்சமாக பார்த்து கொண்டு தான் இருக்கிறாள். 

 

இருந்தாலும் அவனின் காதல் கொண்ட மனம் இவளையே சுற்றி கொண்டு வருகிறது. 

 

பார்த்த உடன் காதல் வருமா என்ன? ஆனால் இவனுக்கோ பார்த்ததும் காதல் இல்லை தான். அவளை பார்க்க பார்க்க காதல் வந்து விட்டது என்று சொல்லலாம். 

 

அவன் தெரியாமல் செய்த ஒரு தவறுக்காக இப்பொழுது அவன் பின்னே சுற்றி கொண்டிருக்கிறான். இதையே தினமும் வேலையாக வைத்திருக்கிறான். ஒரு நாள் கூட இந்த வேலைக்கு விடுமுறையும் எடுக்கவில்லை அவன். அதற்காக வேலை பார்க்கவில்லை என்று நினைத்து கொள்ள வேண்டாம். 

 

அம்மணி வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் தான் ஐயாவும் வேலை பார்க்கிறார். அவளுக்கு சீனியராக வேலை செய்து கொண்டிருக்கிறான் இந்த கார்த்திக். 

 

*****

 

எதுக்கு டி இவளோ நேரம்? வீட்டிற்குள் நுழைந்ததும் திட்டிய தாயை கோபத்தோடு பார்த்தாள் அகிலா. 

 

வேலை முடிய கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்றாள். 

 

ஏன் கோபப்படுற? என்று அடுத்த கேள்வியை களத்தில் இறக்கினார் கௌரி. 

 

நான் வரும் போது உங்க செல்ல பொண்ணை மடியில படுக்க வச்சு கொஞ்சுறீங்க. அது புடிக்கல என்றாள் அகிலா. 

 

“சரி நீ வந்து அம்மா மடியில படு”  என்று எழுந்து அமர்ந்தாள் அபிராமி. 

 

அச்சோ நீ ஒண்ணும் எனக்கு விட்டு தர வேணாம் ப்பா என்றவள் சோபாவின் கீழ் தரையில் அமர்ந்து கௌரியின் மடியில் தலையை சாய்த்தாள். 

 

அக்கா மாதிரி நீயும் டீச்சர் ட்ரைனிங் படிச்சிருந்தா சீக்கிரம் வீட்டுக்கு வந்துருக்கலாம் டி. இப்போ பாரு மணி “ஏழு” என்றார் கௌரி. 

 

அது ரொம்ப போர் மா. எனக்கு டீச்சரையே புடிக்காது. இதுல நான் ஸ்டூடென்ட்ஸ்க்கு கிளாஸ் எடுத்தா அதுங்க என்னைய மதிக்காது. நான் எப்படி ஸ்கூல் படிக்கும் போது டீச்சரை வெறுத்தேனோ அது மாதிரி என்னோட ஸ்டுடென்ட்ஸும் என்னைய வெறுப்பாங்க என்றாள் அகிலா. 

 

“சீக்கிரம் வீட்டுக்கு வந்துரலாம் டி அதான் சொன்னேன்” என்றார் கௌரி. 

 

அம்மா என்று அவரின் புடவை முந்தானையை பிடித்தாள் அகிலா. 

 

என்ன டி? என்று அவளின் முகம் பார்த்தார் கௌரி. 

 

“அவன் இன்னும் என்னைய ஃபாலோ பண்ணுறான் மா ” என்றாள். 

 

கௌரி விதிர் விதிர்த்து போனார். என்ன டி சொல்லுற? 

 

அவனை கண்டுக்காமல் போ அகி. ஒண்ணும் இல்லை. அவன் பார்த்துட்டு நீ பார்க்கலனதும் கிளம்பி போயிருவான். நீ பயப்படாத! என்றாள் அபிராமி. 

 

இல்லை அக்கா. என்னோட ஹேர் கூட அவன் பக்கம் திரும்பாது. ஆனால்,  இன்னும் அவன் என்னைய ஃபாலோ பண்றத நிறுத்தல என்றாள். 

 

கௌரிக்கு பயமாக இருந்தது. ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை. 

 

 ஏற்கனவே பெரிய மகளை பற்றி தவறாக சித்தரித்து விட்டது இந்த ஊர் உலகம். இப்பொழுது சிறிய மகள் வேறு இப்படி சொல்வது அவருக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. 

 

அகிலா அமைதியாக சென்று வந்து இருந்தாலும் இந்த ஊர் எதையாவது திரித்து பேசிவிட்டால் என்ன செய்வது என்று இப்பொழுது அவர் மூளையை குடைந்து கொண்டு இருந்தார். 

 

சரியான வெட்கம் கெட்டவன் என்று அகிலா பற்களை கடித்தபடி அவனை நினைத்து கூறினாள். 

 

அந்த பையன் உன்னைய தொல்லை பண்ணுறானா? அகி. உன் முன்னாடி வந்து உன்கிட்டே ஏதாவது பேச ட்ரை பண்றானா?  என்று கேட்டாள் அபிராமி. 

 

பேசலாம் இல்லை. தூரத்துல இருந்து என்னைய பார்க்குறான். அப்பறம் ஆபிஸ்க்குள்ள கொஞ்சம் கூடுதலா சைட் அடிக்கிறான் என்றாள் தங்கை.

 

“முள்ளு சேலையில விழுந்தாலும் சேலை முள்ளுல விழுந்தாலும் ” என்று கௌரி கூற வருவதற்குள், 

 

“போதும் நிறுத்துங்க மா” நான் ஜாக்கிரதையா தான் இருக்குறேன். நீங்க இப்படி பேசுறது எனக்கு சுத்தமா புடிக்கல என்றவள் அவள் அறைக்கு சென்று விட்டாள். 

 

ஏன் மா  இப்படி பேசுறீங்க?  இந்த அளவுக்கு பொண்ணுங்க தைரியமா இந்த விஷயத்தை வீட்டுக்கு எடுத்துட்டு வராங்கனா அதுக்கு அம்மாவும் அப்பாவும் கொடுத்த சுதந்திரம் தான். ஆனால் நீங்களே இப்படி அட்வைஸ்னு கழுத்தை அறுத்தா அவள் என்ன நினைப்பா சொல்லுங்க? என்று அபிராமி டீச்சர் என்பதால் கூற, 

 

நீ தான் டி டீச்சர்னு என்னைய அட்வைஸ் பண்ணி கழுத்து அறுக்குற என்றார் கௌரி. 

 

அகிலாவிற்கு கார்த்திக்கின் மேல் கொலை வெறி வந்தது. அவனை குனிய வைத்து கும்ம வேண்டும் என்று தோன்றியது. அன்று தன்னை அடித்தது நினைவு வர தலையணையை எடுத்து அடி வெளுத்து கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் கோபம், அறுவருப்பு இதை தவிர வேறு எந்த உணர்வுகளும் தெரியவில்லை. 

 

****

விம்மி விம்மி அழுது கொண்டிருந்த தன் பெண் குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுத்தாள் கார்த்திகா. 

 

கார்த்திக்கின் செல்ல தங்கை. முன்பொரு காலத்தில் செல்லமாக இருந்தாள். இப்பொழுது இல்லை. 

ஓயாமல் அழுது கொண்டிருந்த மகளை சமாதானப்படுத்த முயலாமல் தோற்று கொண்டிருந்தாள் கார்த்திகா. 

 

வாசலில் தன் தாய் மாமனின் பைக் சத்தம் கேட்டதும், அந்த குழந்தையின் சத்தம் சிறிது மட்டுப்பட்டது. 

 

தன் இரும்பு போன்ற கரங்களால் தலை கவசத்தை கழட்டி கொண்டு உள்ளே வந்தான் கார்த்திக். 

 

அவனை பார்த்ததும் கை, கால்களை அசைத்து அவனிடம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்த மகளை வைத்து கொண்டு விழித்து நின்றாள் கார்த்திகா. 

 

தன்னை பார்த்து சிரித்த மருமகளை தங்கையின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் வாங்கி சென்றான் கார்த்திக். 

 

அச்சோ தங்கம் மாமாவை தேடுனீங்களா டி என்று அதனின் பட்டு கன்னத்தில் முத்தம் வைக்க, அவனின் தாடி முடி குத்திய குறு குறுப்பில் அவனின் தாடியை பிடித்து விளையாடியது குழந்தை. 

 

குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கும் அண்ணனை பார்த்தவள் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று முடங்கினாள். 

 

அவளின் கடந்த கால வாழ்வு அவள் கண் முன் வந்து செல்ல, அவளை அறியாமல் அவள் கன்னங்களில் இருந்து நீர் இறங்கியது. 

 

தொடரும். 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
886 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page