அத்தியாயம் -9

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 9

 

என்னால் அவ்வளவு பெரிய வீட்டில், காதலிச்சு கல்யாணம் பண்ண ஹஸ்பண்ட், சொந்தங்களோடு இருந்தும் நிம்மதியாக மூச்சு விட முடிஞ்சதில்லை. எல்லாத்தையும் விட்டு மொத்தமாக வெளியே வந்ததுக்கு அப்புறம் நான் கொஞ்சமாவது நிம்மதியா உணர்றேன். வாழ்க்கையில் அப்பா, அம்மா இல்லாமல் நான் தவிச்சதை விட, அந்த வீட்டில் தவிச்சேன். நான் சாப்பிடக் கூடப் பார்த்துப் பார்த்துதான் சாப்பிட்டேன். மதியம் அதனால் வெளியில் சாப்பிட்டுப்பேன். ஒருவேளை சாப்பாடாவது என்னோட காசில் உடம்பில் ஒட்டட்டுமே! கெட்ட குணம் இருக்குறவங்க பெரும்பாலும் அப்படியே இருப்பாங்க. அவங்க மாறுறது, திருந்தறது எல்லாம் கதைக்கு நல்லா இருக்கும். 
        -பத்மமுகி.

ருத்ரன் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

“நானா? சிவகாமியவா? ஏன் இப்படி செஞ்சேன்? எனக்கு என்னாச்சு?” கடலலை போல் மனம் ஓயாமல் கேள்வியால் தாக்கிக் கொண்டே இருந்தது.

ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவன், பன்னிரண்டு மணியாகி இருக்க, இதற்கு மேல் வீட்டுக்குச் செல்வது பயனில்லை என்பதால் அங்கே உள்ள நீள்விருக்கையில் சாய்ந்து கொண்டு விழிகளை மூடினான். மூடியவனின் விழிகளுக்குள் காமினியின் வதனமும், அவளின் இதமும், வெம்மையும் வந்து இம்சித்தன.

ஒரு வழியாக உறங்கிப் போனவன், மூன்று மணிக்கு அலாரம் ஒலி எழுப்ப, விழிகளைத் தேய்த்தபடி எழுந்தான். இரவு முழுவதும் உறங்காத காரணத்தால் விழிகள் சிவந்திருக்க, சட்டென்று தனது அறையில் உள்ள குளியலறையில் குளித்து விட்டு விடுதியின் சமையல் கூடத்திற்குச் சென்றான். அங்கிருந்த மற்ற சமையல் கலைஞர்கள் அவனுக்குக் காலை வணக்கம் கூற. அதைத் தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவன் பொதுவாகக் காலை வணக்கம் ஒன்றைச் சொல்லிவிட்டு, உணவுப் பொருட்கள் இருக்கும் குளிர்பதன அறைக்குச் சென்றான்.

“ராகுல், செஃப் கண்ணு இப்படி சிவந்திருக்கு?” என உதவி சமையல் கலைஞரைப் பார்த்து இன்னொருவன் கேட்டான்.

“ஒருவேளை டிரிங்க்ஸோ?” என மற்றொருவன் முணுமுணுத்தான்.

“ச்சே! செஃப் எப்பவும் குடிக்க மாட்டார். குக்கிங் ஒயின் தேவைப்பட்டால் அதை டேஸ்ட் செய்யறதோட சரி. அவர் அம்மாவுக்கு அவர் குடிச்சால் பிடிக்காது. நைட் ஹோட்டலில்தான் இருந்தாருன்னு நினைக்கிறேன். வொர்க்கா இருக்கும்.” என ராகுல் என்பவன் மறுத்தான்.

“செஃப் எப்பவும் வொர்க்கைக் கரெக்ட் டைமுக்கு முடிப்பாரு. இப்படி லேட் நைட் வொர்க் பண்ணி கண்ணு சிவந்து பார்த்தது இல்லை.”

“இருக்கலாம். அது நமக்குத் தேவை இல்லாத விஷயம். வேலையைப் பாருங்க.” என ராகுல் உத்தரவிட்டான்.

ருத்ராவுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் என்பதால் மற்ற அனைவரும் சரியென்று தலையாட்டினர். பிறகு ருத்ராவும் வந்து விட, அங்கே நெருப்பின் சத்தமும், பாத்திரங்கள், கரண்டிகள் எழுப்பும் சத்தமும், இந்தப் பொருள் வேண்டும் என்று கேட்கும் சத்தமே எழுந்தது. சமைக்கும்போது எந்த ஒரு கவனச் சிதறலும் இருக்கக் கூடாது என்பது ருத்ராவின் கொள்கை. அதனால் அவனை “ரூல்ஸ் ருத்ரா” என உடன் வேலை செய்பவர்கள் அழைப்பார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ள வந்திருக்கும் சமையல் கலைஞர்களுக்குத் தெளிவாகக் கற்றுக் கொடுப்பான்.

ஏன் இப்படி இருக்கிறாய்? எனக் கேட்டால் அவனுடைய பதில் இப்படி இருக்கும்.

“சாப்பாட்டில் எவ்வளவு உப்பு சேர்க்கணுமோ அவ்வளவுதான் சேர்க்கணும். அதையும் மீறிச் சேர்த்தால் மொத்த உணவுப் பண்டமுமே வீண். வாழ்க்கை, நம்மளோட உடல் எல்லாமே ஒரு வகை ரூல்ஸோடதான் இயங்குது. அதனால் நமக்கும் அது அவசியம்.” என அழகான பதில் கூறிவிடுவான். அப்படிப்பட்டவனின் சம நிலை இன்று மொத்தமும் மாறி இருந்தது. ஆனாலும் சமையலை வழக்கம்போல் செய்யத் தவறவில்லை.

காலைச் சமையல் முடிந்ததும், ருத்ரா வீட்டுக்குச் சென்று அன்னையைப் பார்த்துவிட்டு வந்தவன், மீண்டும் அலுவலக அறைக்குள் மூழ்கிக் கணினியில் காமினியின் அறைக்கு அனுப்ப வேண்டிய கோப்பை பிரதி எடுத்து, கையொப்பமிட்டு அனுப்பினான். காமினிக்குப் பதிலாகச் சிவகார்த்திக் அதை வாங்கி தந்தையிடம் எடுத்துச் சென்று கையொப்பம் வாங்கிய பின்னர் தன் சகோதரியிடமும் கையொப்பம் வாங்கி ருத்ராவிற்கு அனுப்பி வைத்தான்.

மாலை நேரமாகி விட்டது. காமினி இன்னும் ருத்ராவின் விழிகளில் படவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காமினி அவன் விழிகளில் பட்டுவிடுவாள். இன்று அவள் இல்லை.

இரண்டு நாட்கள் ஆனது. காமினியைக் காணவில்லை. இடையில் சிவகார்த்திக் ருத்ராவைத் தேடி வந்தான்.

“ருத்ரா, மெனு பத்தி அனௌன்ஸ் செஞ்சுட்டேன்.”

“ஓகே. காமினி வரவே இல்லை.”

“ஆமா ருத்ரா. மேடம் அப்பாகிட்ட லீவ் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. எங்கிட்ட கூடச் சொல்லலை. வந்ததும் வச்சுக்கிறேன். இப்ப வந்துருக்கற புது ஃபிரண்ட் கூட மேடம் எங்கேயோ கிளம்பிட்டாங்க.”

“ஓ.” என்பதுடன் அவன் நிறுத்திக் கொண்டான்.

“மேடம் இப்பவே என்ஜாய் பண்ணிக்கட்டும். அப்பா இனி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொல்லி இருக்கார். ஏற்கனவே ரொம்ப லேட்டாம். அவரைப் பத்தி உனக்குத் தெரியும் இல்லை. அவரு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்திட்டாருன்னு தோணுது. இல்லைன்னா அவரு இவ்வளவு சீக்கிரம் சொல்லமாட்டார். எல்லாம் செஞ்சிட்டுத்தான் சொல்லுவாரு. பார்க்கலாம். என்னோட மச்சான் எப்படின்னு?” எனக் கார்த்திக் கூற ருத்ரா தலையசைப்புடன் கேட்டுக் கொண்டான்.

***

நீல வானத்தின் நீலம் கீழே கடலலையின் மீது வண்ணம் தீட்ட, தன்னைச் சுற்றி இருந்த பரந்த கடலில் உள்ள படகு ஊசலாடினாலும் மன அமைதியுடன் கடலைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர் முகியும், காமினியும். இருவரும் எதுவும் பேசவில்லை. மௌனமாய் சூரியன் மறைவதைப் பார்க்க நின்று கொண்டிருந்தனர். செந்நிறச் சூரியன் நீலக்கடலுக்குள் மூழ்குவதைப் போல் மறைய ஆரம்பிக்க, கடல் நீலமும், செந்நிறமும் ஒன்றோடு ஒன்று கலக்க ஆரம்பித்தன.

இவ்வளவு நேரம் இருந்த கடல்காற்றும் மாற ஆரம்பித்தது.

பகல் நேரத்தில் நிலம் விரைவாகச் சூடாவதால் அங்குக் குறைந்த அழுத்தம் நிலவும். ஆனால் கடல் நீர் மெதுவாகச் சூடாகும். அதனால் கடலிலிருந்து கடல்காற்று வீசும். ஆனால் இரவு நேரத்தில் கடல் மெதுவாகக் குளிர்வடையும், நிலம் விரைவில் குளிர்வடையும். அதனால் நிலத்திலிருந்து கடலுக்குக் காற்று வீச்சு. இயற்கையின் காற்று சுழற்சி.
மூன்று அடுக்குகள் கொண்ட அந்தச் சொகுசுக் கப்பலில் வந்திருந்தனர் இரு பெண்களும். காமினி மாலுமியின் இடத்தில் நின்று சுக்கானைத் திருப்பினாள்.

“காமினி, நீ எப்படி இந்த யாச்செட்டுக்கு லைசென்ஸ் வாங்குன?”

“ஒரு வருஷம் நான் இந்தியாவில் இல்லைக்கா. அப்பக் கத்துகிட்டது. இங்க வந்தும் லைசென்ஸ் வாங்குனேன்.”

பத்மமுகிக்கும் இன்னும் ஆச்சரியம்தான். கடலில் சொகுசுப் படகைத் தனியாக ஓட்டும் சிவகாமினி மற்ற பெண்களிலிருந்து தனிப்பட்டுத் தெரிந்தாள்.

கடலில் வீசும் காற்றின் வேகத்தில் படகை லாவகமாகத் திருப்பி ஓட்டினாள். அவள் முகத்தில் அதன் மீதான பிடித்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“எப்படி காமினி இதைத் தைரியமாக ஓட்ட முடியுது? பைக், கார், லாரி, ஃபிளைட் ஓட்டற பெண்களைக் கூடப் பார்த்திருக்கேன். ஏன் ஆத்துல பரிசல் ஓட்டற பெண்களைக் கூடப் பார்த்திருக்கேன். ஆனால்…”

காமினி சத்தமாகச் சிரித்தாள்.

“அவங்க ரோட்டில் ஓட்டறாங்க. ஆனால் நான் தண்ணீரில் ஓட்டறேன். அவ்வளவுதான்!”

“ஆனாலும் இது டேஞ்சரஸ் இல்லையா காமினி?”

“தரை, காற்று, கடல் எல்லாமே ஆபத்து மிகுந்தது அக்கா. சொல்லப் போனால் கடலில் போக்குவரத்து நெரிசல் குறைவுதான். பெரிய கப்பல் வரும்போது மட்டும் கவனமாக இருக்கணும். கடலுக்கு வரும்போது ஒரு அமைதி. படகு ஆடறது அப்படியே அம்மா தொட்டில்ல போட்டு ஆட்டற மாதிரி இருக்கும். இதைக் கடலன்னைன்னு ஏன் சொல்வாங்க தெரியுமா? நிறைய பேருக்குக் கடலில் மிதந்தால்தான் வீட்டில் அடுப்பெரியும். அப்புறம் கடலில் வித்தியாசமான உயிரினங்கள் நிறைய இருக்கும். இந்தக் கடல் ஒரு அற்புதம், அதிசயம்.”

காமினியின் கடல் பற்று முகிக்கும் நன்றாகப் புரிந்தது. அவளுக்கும் கடலைப் போல் நிலத்தின் பற்று மிகுந்துள்ளது. அதுவும் அந்தக் கால மனித வாழ்வியல் மீது ஆர்வம் அதிகம். 

“ஆனால் ஆபத்து நிறைஞ்சது. புயல், சுனாமி இப்படி ஆபத்தும் இருக்கே காமினி.”

“நிச்சயமாக! தரையில் கூட வெள்ளம் வந்து எத்தனை வீடு மூழ்கிப் போகுது? இயற்கை எப்போதும் அப்படித்தான். இதுவரைக்கும் நிலத்தைத் தோண்டி ஆழமாகப் போன அளவு கடலுக்குள் போக முடியலை.” என அவள் சிலாகித்துப் பேசப் பத்மமுகியும் அவளது பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவளுக்குமே கடலன்னையின் ஆகர்ஷணம் பிடித்திருந்தது. எங்கு நோக்கினும் நீலம்! ஒரு தனி உலகிற்கு வந்தது போன்ற பிரமிப்பில் இருந்தாள்.

“சரி வாங்க. கொஞ்ச நேரம் ஆங்கர் போட்டுட்டு சமைப்போம்.”

இருவரும் பேசியபடியே சமைத்தனர். உண்டு முடித்தபின் காமினி மீண்டும் சொகுசு படகைச் செலுத்த ஆரம்பித்தாள். அவளருகில் பத்மமுகி அமர்ந்தாள்.

“நீ இப்படி வந்துட்டா அப்பா, தம்பி பயப்படமாட்டாங்களா காமினி?”

“ஓ! கண்டிப்பா பயப்படுவாங்க. ஆனால் எதுவும் நிச்சயம் இல்லாத வாழ்க்கை அக்கா. என்னோட மனசு ஆறுதலுக்காக விட்ருவாங்க. நல்ல வானிலை இருக்கும் போதும், மனசு அப்செட்டா இருக்கும் போதும் வந்திடுவேன்.”

“இப்ப எதுக்கு வந்துருக்கோம் காமினி?”

“ஒன்னுல்ல மூணு காரணம்.”

“மூணா?”

“முன்னாடி சொன்ன இரண்டு காரணம். அதோட உங்களுக்கும் கடல் அனுபவத்தைக் காட்டணும்னு நினைச்சேன். உங்களையும் கூட்டிட்டு வந்துட்டேன்.”

“என்னாச்சு காமினி? ஆர் யூ ஓகே?” பத்மமுகியின் முகத்தில் கவலை எட்டிப் பார்த்தது.

“அக்கா, இட்ஸ் நத்திங். ஜஸ்ட் சும்மா ஒரு கன்ஃப்யூசன். அவ்வளவுதான்! சரி சொல்லுங்க. உங்களுக்கு என்னாச்சு? ஏன் உங்க ஹஸ்பண்டை டிவோர்ஸ் பண்றீங்க? என்னைக்காவது நேர்ல பார்த்தால் நானும் நாலு காட்டு காட்டறேன்.”

“ஹய்யோ காமினி! அவரு எதுவும் பண்ணலை.”

“அப்பச் சொல்லுங்க. யார் மேல் என்ன தப்பு? மூணாவது ஆளா இருந்து நான் சொல்றேன். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விட்ரலாம்.”

“சொல்றேன் காமினி. சொல்லப் போனால் லாயர்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் மனசு ரொம்ப நிம்மதியாக இருக்கு. உங்கிட்ட சொல்றதுக்கு என்ன? இங்க வந்ததிலிருந்து என்னை நீ, நான் சோர்ந்து போயிடக் கூடாதுன்னு அடிக்கடி என்னைச் செக் பண்ணிட்டே இருக்க. முதல்ல உங்கிட்டதான் சொல்லி இருக்கணும். பாலைவனம் போல் இருந்த என் வாழ்க்கையில் அவர் வந்ததுக்கு அப்புறம்தான் சோலைவனம்னு சொல்லலாம். ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். ஆனால் இப்ப எதுவுமே இல்லை. என்னால இன்னமும் அந்த மொமண்ட்ஸை மறக்க முடியாது. இன்ஃபேக்ட் எப்போதும் மறக்க முடியாது.”

முகியின் விழியோரம் காதல் கசிய ஆரம்பித்தது.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page