அன்பாலயா ஹோம் அங்கிருக்கும் குழந்தைகளுக்கான பள்ளியுடன் இணைந்து பெரிய பரப்பளவில் அமைந்திருந்தது. முன்புறமிருந்த இரும்பு கேட்டைத் தாண்டி உள்ளே காரை ஓட்டிச் சென்றவன், ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு தானும் அவளுடன் இறங்கி நடந்தான்.
‘என்ன இவன் போக மாட்டேங்கிறான்?’ என்று கேள்வியாய் அவன் முகத்தை நோக்கியவள், நான் போய்க்கிறேன் பாலா… நீங்க கிளம்புங்க” என்றாள்.
“பரவாயில்ல வாங்க… உள்ள விட்டுட்டே போறேன்” என்று அவள் கையிலிருந்த நெகிழிப் பையை வாங்கிக் கொண்டவனைக் கண்டு திகைத்து நின்றாள். “என்ன அப்படி பார்க்குறீங்க? வாங்க மலர்…” என்று முன்னே நடந்தான் பாலா.
மலரைப் பார்த்ததும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், “மலரக்கா… மலரக்கா…” என அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
“நீங்க கேட்ட எல்லாமே நான் வாங்கிட்டு வந்துட்டேன். ராஜி அக்காகிட்ட தரேன், உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. வேற என்ன தேவைப்பட்டாலும் அக்காக்கு மெசேஜ் பண்ணுங்க, அடுத்த தடவை வரும்போது வாங்கிட்டு வரேன்” என்று புன்னகைத்தபடி கூறியவள், அவர்களைக்கடந்து அலுவலக அறையை நோக்கிச் சென்றாள்.
சட்டென்று பாலாவை இடைமறித்து நின்றவள், எங்க மதர் கொஞ்சம் ஸ்டிரிக்ட்… உங்கள என்கூட பார்த்தா ஏதாச்சும் சொல்லுவாங்க. அதனால நீங்க டொனேஷன் தர விசாரிச்சுட்டு போக வந்தேன்னு மட்டும் சொல்லுங்க, ஓகே வா?!” என்று கிசுகிசுப்பான குரலில் கூறியதும், அவன் புன்முறுவலோடு சரியென தலையசைத்தான்
இருவரும் அலுவலக அறைக்குள் நுழைந்ததும், “அடடே வாங்க பாலா… என்ன இன்னைக்கு சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?!” என்று மதர் அவனை எழுந்து நின்று வரவேற்றார். அவன் பதிலுக்கு புன்னகைக்க, “வாங்க உட்காருங்க” என்று இருக்கையை காட்டிவிட்டு அவரும் அமர்ந்தார்.
மலர் ஆவென வாயைப் பிளந்து இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க, “வாம்மா.. உனக்கு வேலையெல்லாம் எப்படி போகுது?” என்று கண்டிப்பான குரலில் வினவினார்.
“நல்லா போகுது மதர்…” என்று செல்லமாய் இழுத்து பதில் தர, “என்ன இழுக்கிற, போ… போய் பாலா சாருக்கு கூல்ட்ரிங்க் கொண்டு வா” என்று புருவங்களை உயர்த்தி சத்தமாக கட்டளையிட்டார்.
சமையல் கூடத்திற்குச் சென்றவள், “அடேங்கப்பா பாலா சாரா? இவனுக்கு நான் கூல்ட்ரிங்க் கொண்டு போய் தரணுமா? ஆளப் பாரு… ஒர்க் முடிஞ்சு வந்து ரெஸ்ட் எடுக்க விடுறாங்களா? எல்லா வேலையும் நம்ம தலையிலேயே கட்டுவாங்க” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே, அங்கிருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பினாள்.
அவள் அதை பவ்யமாக குனிந்து பாலாவிடம் நீட்டியதும், புடவை கட்டியிருப்பவள் குளிர்பானத்தை தருவதைப் பார்க்கையில், திருமணத்திற்கு அவளைப் பெண் பார்க்க வந்திருப்பதைப் போல் தோன்ற தனக்குள் சிரித்துக்கொண்டான்.
அவன் சிரிப்பதைக் கவனித்து விட்டவள், “இவன் வேற நக்கலா சிரிக்கிறானே!” என்று முணுமுணுத்தாள்.
“மதர்… இந்த பக்கமா ஒர்க் இருந்தது, போகும் போது அப்படியே உங்களை பார்க்கலாம்னு வந்தேன். திடீர்னு வந்ததால உங்ககிட்ட என்ன வேணும்னு கேட்க மறந்துட்டேன், ஒண்ணும் வாங்கிட்டு வர முடியல. நான் இருபதாயிரம் பணமா ஜிபே பண்ணிடுறேன்” என்றவாறு தன்னுடைய அலைபேசியை எடுத்து ஆசிரமத்தின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினான்.
இவர்களின் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த மலர், “ஓஹோ… பாலாவும் நம்ம ஹோமோட டோனரா? ஆனா ஒருநாள் கூட இந்த மூஞ்சிய இங்க பார்த்ததில்லையே?” என சிந்தனையில் இருந்தாள்.
அப்போது சில ஆட்கள் உள்ளே வர, மதர் அவர்களை வரவேற்று அமர வைத்தார். பாலா எழுந்து மலருக்கு அருகே நின்றுகொண்டான்.
வந்திருந்த டோனர் ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் என அனைத்தையும் விசாரித்துக்கொண்டிருந்தனர்.
பேச்சின் இடையே மதர் வந்திருந்தவர்களிடம், “இவ எங்களோட பொண்ணு மலர். இங்க வளர்ந்த பொண்ணு. வெரி டேலன்டேட், இங்க சென்னையில தி ஃபேமஸ் டி.அண்ட்.என் சாப்ட்வேர் சொல்யுஷன்ஸ்ல டீம் லீடா இருக்கா. சீக்கிரமே சீனியர் மேனேஜர் புரொமோஷன் கிடைக்கப் போகுது” என்று அவளைப் பெருமிதம் பொங்க அறிமுகப்படுத்தினார்.
அவள் வணக்கம் என்பதைப் போல புன்னகையோடு தலையசைக்க, இவர் யாரு? அவங்க ஹஸ்பன்டா?” என அவர்கள் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு விழித்தாள். பாலா அப்படித்தான் அவளருகே அத்தனை நெருக்கமாக நின்றிருந்தான்.
“இல்ல… இவர் பாலா, இந்த ஹோம்மோட ஒன் ஆஃப் த ஸ்பான்சர்” என்று மதர் அறிமுகம் செய்து வைக்க, “அச்சோ சாரி… தப்பா நினைச்சுக்க வேணாம், ரெண்டு பேரும் பார்க்க பொருத்தமான ஜோடியா இருந்தாங்க. அதான் அப்படி கேட்டுட்டோம்” என்று சமாளித்தனர்.
அவர்கள் அப்படிக் கூறியதும், பாலாவின் மனதிற்குள் எழுந்த பரவச உணர்ச்சியை அவனால் தடுக்க முடியவில்லை, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான். ‘இவன் எதுக்கு என்னை உரசிட்டு நிக்கிறான். பக்கத்துல நின்னா ஹஸ்பன்டா? பொருத்தமான ஜோடியா? இருக்கிற கடுப்புல இவங்க வேற’ என மனதிற்குள் புலம்பினாள் மலர். அவர்கள் பேசி முடித்தபின் கிளம்பினர்.
“மதர்… நீங்க எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுறீங்க. எங்களைப் பார்த்து மட்டும் கோபமா பேசுறீங்க. ஏன்?” என்று மலர் செல்லமாய் சிணுங்க, “ஆமா… உன்னோட சேட்டை எனக்கு தெரியாதா? அங்க எடுத்த என் சில்வர் பேனாவை அங்கேயே போய் வச்சுரு” என்று அவளைக் கோபமாய் முறைத்தார்.
“ஹி… ஹி… உங்க ஞாபகார்த்தமா வச்சுக்கலாம்னு எடுத்தேன் வேற ஒண்ணுமில்ல” என அசடு வழிந்தவாறு எடுத்து பேனாவை மேஜையின் மீது வைத்துவிட்டு திரும்பினாள்.
“அறுந்த வாலு… ஆளு தான் வளர்ந்திருக்க, பண்றது அத்தனையும் குறும்புத்தனம்” என்று அவர் மலரின் காதுகளை பிடித்து திருகியதும், “சாரி மதர்… உங்ககிட்ட குறும்பு பண்ணாம நான் வேற யார்கிட்ட போய் பண்றது. நான் கிளம்புறேன். லவ் யூ… பாய்” என்று அவர் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு விட்டு ஓடினாள்.
அவள் குறும்புத்தங்களை ரசித்திருந்த பாலா, மதரிடம் விடைபெற்று புறப்பட்டான்.
“பாலா… என்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிடுறீங்களா?” என்று மலர் அவனிடம் வினவியதும், சரியென்றான்.
காரை இயக்கிக்கொண்டே மலரை நோக்கி அவன் சிரித்தபடி இருக்க, “ஹலோ என்ன? என்னைப் பார்த்தா உங்களுக்கு ஜோக்கர் மாதிரி இருக்கா?” என்று பற்களைக் கடித்து வாயை அழுத்தமாக மூடினாள்.
“ஹா…ஹா… ஹா…” அவளது சுட்டித்தனத்தை கண்டு பற்கள் தெரியுமாறு சத்தமாகச் சிரித்தான். “அய்யோ… அழகா சிரிக்கிறானே!” அவன் புன்னகையில் லயித்து இமைக்க மறந்து அவனை நோக்கினாள். அவளது ரசனைப்பார்வையை உணர்ந்தவனுக்குள் வெட்கம் பூக்க, முகத்தை வேறு பக்கம் திருப்பினான்.
“இங்க பாருங்க பாலா… இங்க நடந்த காமெடியெல்லாம் இங்கேயே மறந்திரனும். ஆபீஸ்ல உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி என்னை காமெடி பீஸாக்கினீங்க அவ்ளோதான்” அவள் கண்களைச் சுருக்கி செல்லமாய் முறைக்க, “இல்ல… நான் சொல்லமாட்டேன்” என மறுப்பாய் தலையசைத்தான்.
“அப்போ ப்ராமிஸ் பண்ணுங்க” என்று தன் கரத்தை அவள் நீட்டியதும், அதன் மீது தன் கையை வைத்தவன், “ப்ராமிஸ்…” என்று சத்தியம் செய்துவிட்டு அவளது உள்ளங்கையில் மென்மையாகக் கிள்ளினான்.
“ஸ்ஸ்… ஆஆ… வலிக்குது பாலா” என முணுமுணுத்தவள், பாலாவின் தோளில் அடித்ததும், “மலர்… நீ சரியான அறுந்த வாலு” என்று கிண்டலாகச் சிரித்தான்.
‘அலுவலகத்திலிருந்து இன்னும் தோழி வரவில்லையே’ என அனன்யா விடுதியின் மேல் தள வராண்டாவில் நின்று தவிப்போடு சாலையைப் பார்த்திருக்க, வாசலுக்கு சற்று தள்ளி மலர் வாகனத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டாள்.
மலர் அறைக்குள் நுழைந்ததும், “டார்லிங்… என்ன இன்னைக்கு கார்ல வந்து இறங்கின. யாருடி உன்னை ட்ராப் பண்ணது?” என்று கேள்வியாய் அவள் முகத்தைப் பார்க்க, “அந்த பாலாதான்” என்றாள்.
“யாரு? அந்த பொறுக்கியா? அவன் எதுக்கு உன்னை ட்ராப் பண்ணான்? அனன்யா குழப்பத்தோடு வினவியதும், “ஹே… அப்படி சொல்லாதடி. பாலா
நல்லவன்தான், அன்னைக்கு ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டான். அவன் நம்ம ஹோம் டோனராம். மதர் இன்னைக்கு வர சொல்லியிருந்தாங்கள்ள… அதான் ஆபீஸ்லருந்து ஹோமுக்கு போயிட்டு, அப்படியே என்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணினான்” என்று நடந்ததை விளக்கினாள்.
“அடடா … பொறுக்கி நல்லவனா புரொமோஷன் வாங்கிட்டானா? என்ன டார்லிங் மோதலில் ஆரம்பித்த காதலா?” அனன்யா கண்களைச் சிமிட்டி சிரிக்க, “ஏன்டி நீ வேற. நான் இருக்கிற நிலைமைக்கு எனக்கு காதல் ஒண்ணுதான் குறைச்சல்” என்று சலித்துக்கொண்டாள்.
“உனக்கு நான்… எனக்கு நீதான்டி எப்பவும்… லவ் யூ செல்லம்” என்று அனன்யா மலர் கன்னத்தில் அமுத்தமாய் முத்தம் தர, “ஹே… ச்சீ போடி அங்கிட்டு” என்று சிரித்தவாறு குளியலறைக்குள் நுழைந்தாள்.
இரவு படுக்கையில் சாய்ந்திருந்த மலர், அன்று நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைத்துப் பார்த்தாள்.
‘மனது விட்டு யாரிடமாவது சிரித்துப் பேசி நெடுநாட்கள் ஆகிவிட்டன. இன்று எவ்வித அழுத்தமின்றி இருப்பதைப் போல் உணர்ந்தாள். இத்தனை நாள் இறுக்கத்துடன் அலுவலகத்திற்குச் சென்றுவருவது அவளுக்கே மூச்சு முட்டியது, இந்த இறுக்கத்தை கொஞ்ச நாள் விட்டு விடுவோம்’ எனப் பலவித யோசனைகளில் புரண்டு புரண்டு படுத்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.
பாலா முன்னேறி வர மலர் பின்னால் நகர்ந்தாள். அதற்கு மேல் நகர முடியாமல் அவள் சுவற்றில் மோத, பாலா அவளை மோகப் பார்வையோடு அவளை நோக்கினான்.
அவள் பயத்தில் எச்சில் விழுங்க … அது ஆணவனுக்கு மிகுந்த போதை தர, பாலா அவளது கன்னங்களைத் தாங்கி மென்மையாய் மலர் இதழ்களில் தன் அதரங்களைப் பதித்தான்.
அவனது ஆழ்ந்த முத்தத்தில் மலர் மெய்மறந்து அவனுக்கு இசைந்து தர, பாலா அசுரத்தனமாக அவள் இதழைப் பற்றினான்.
“அய்யோ…” என்று கத்தியவாறு தூக்கத்திலிருந்து பதறி விழித்தாள் மலர். “அடச்சே… கனவா? இதென்ன கேடுகெட்ட கனவா இருக்கு. கருமம், எல்லாம் அந்த பொறுக்கியாலதான். இனிமே அவன்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும். விட்டா என்னையும் கெடுத்துருவான் போல” என வாய்விட்டே புலம்பியவள்,
நுனிநாக்கை கடித்துக்கொண்டாள்.
“எல்லாம் டபுள் மீனிங்கா கேட்குதே” என்று தன் நெற்றியில் தட்டிக்கொண்டவள், எழுந்து குளித்து அலுவலகத்திற்குப் புறப்பட்டாள்.
அறையிலிருந்து வெளியே செல்லும்முன் தூங்கிக் கொண்டிருந்த தோழியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள், “டார்லிங்… எழுந்திரு செல்லம்” என்று சிரிக்க, “ஏய்… ச்சீ காலைல மூஞ்சில எச்ச பண்ற, போடி அங்கிட்டு” என்றவாறு அனன்யா எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.
“மவளே… நேத்து எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்” என்று சுட்டித்தனமாகச் சிரித்துவிட்டு, “டார்லிங்… பாய்… பார்த்து ஹாஸ்பிட்டல் போயிட்டு வா” என்று கீழே இறங்கினாள்.
மலர் அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே முதலில் பார்த்த காட்சி, சசியும் பாலாவும் மும்முரமாக பேசிக் கொண்டிருந்ததைத்தான்.
பாலா அடர் நீல நிறத்தில் கருப்பு நிற சிறு கட்டங்கள் போட்ட சட்டையும் கிரீம் நிற காற்சட்டையும் அணிந்து டக்இன் செய்திருந்தான். நீல நிற குளிர் கண்ணாடி அணிந்து மிடுக்காக நின்றிருந்தான்.
‘எந்த ட்ரெஸ் போட்டாலும் இவனுக்கு மட்டும் எப்படி அழகாயிருக்கு’ என யோசித்தவள், ‘அய்யய்யோ… நான் என்ன இன்னைக்கு இவனை இப்படி ரசிச்சுப் பார்க்கிறேன். எனக்கென்ன ஆச்சு. இந்த மனசு ஏன் மானங்கெட்டு போய் அலையுது’ என்று மனதிற்குள் புலம்பியவாறு தன் கேபினுக்குள் நுழைந்துகொண்டாள்.
அவளைக் கவனித்துவிட்ட பாலா தன் குளிர் கண்ணாடியை கழற்றி சட்டைப் பைக்குள் வைத்தபடி அவளை நோக்கிச் சென்றான். அவளோ அவனை அருகில் பார்த்ததும் லேசாக அதிர்ந்தாள்.
“மலர்… இன்னைக்கு நீங்களும் நானும் ஒரே கலர் டிரஸ் போட்டுருக்கோம், சேம் பின்ச்… ட்ரீட் குடுங்க” என்று குறுநகையுடன் அவளைப் பார்க்க, அப்போதுதான் மலர் தான் அணிந்து வந்திருந்த உடையைக் கவனித்தாள். அவளும் அடர் நீல நிற ஷார்ட் டாப், ஜீன்ஸ் அணிந்திருந்தாள். கையில் கிடைத்த ஆடையை எடுத்து உடுத்தி வந்திருந்தாள்.
“உஃப்ப்…” என இழுத்து பெருமூச்சு விட்டவள், “அவ்ளோதானா…” என்று அவனைப் பார்க்க, பாலா புருவங்களைச் சுருக்கி யோசனையாய் அவளை நோக்கினான்.
“பிரேக் டைம்ல வாங்கித் தரேன் பாலா” என்று அவள் சிரித்தவாறு கூறியதும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு தன் கேபினை நோக்கி நகர்ந்தான்.
🌹காதல் மலரும்🌹
