கோவையின் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி அது. மிதுன் இங்குதான் இளநிலை விஸ்காம் படித்தான். சூர்யா தற்போது பயிலும் கல்லூரியும் இதுதான். மதிய உணவு இடைவேளையில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் வகுப்பிற்குள் நுழைந்தவன், அவன் நண்பர்களோடு சென்றமர்ந்தான்.
இவன் மூன்றாமாண்டு விஸ்காம் தான படிக்கிறான்னு நீங்க நினைக்கிறது சரிதான். சார் இங்க படிக்க வரல. அவர் ஆளைப் பார்க்க வந்திருக்கார். “என் தாரா.. என் தாரா.. நீயே என் தாரா..” ரிங்டோன் ஒலிக்க.. போனை அட்டென்ட் செய்தவன், “சொல்லுடா மாப்ள, இதோ உன் தங்கச்சியைத் தான் பார்க்க வந்திருக்கேன். இப்போ வந்துடுவேன்” என்று கட் செய்தான்.
இது அனுதினமும் நிகழும் ஒன்று. அவன் இந்த வகுப்பிற்கு அவளைப் பார்க்க வருவதும், அங்கு அவனுடைய வகுப்பிலிருந்து நண்பன் அழைப்பதும், இந்த ரிங்டோனைக் கேட்டு அவள் டென்ஷனாவதும் வாடிக்கையான ஒன்று.
அவள் தாரா. ஆம் அவனுடைய மேகலா அத்தை பெத்த மகளே தான். அவள் கல்லூரியில் அட்மிஷன் போட வந்த நாளன்று, துறுதுறு கண்களுடன் புன்னகை தாங்கிய முகத்துடன் இருந்தவளைப் பார்த்து மயங்கியவன், இன்னும் மீளவில்லை. தினமும் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அத்தை மகள் இருக்கிறாள் எனத் தெரியும், இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று தெரியாதல்லவா?!
அவளுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்தவள், “சூர்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என்கூட வா” என்று அழைத்துவிட்டு, அவள் கேண்டீனுக்குச் செல்ல வால் பிடித்த பூனையாய் அவள் பின்னே சென்றான்.
அவளுக்கு எதிரில் அமர்ந்தவன், டேபிளில் கை ஊன்றித் தன் கன்னத்தைத் தாங்கி, அவள் கண்களையேப் பார்த்திருக்க, “சூர்யா.. உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. இது ஒத்து வராது. உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்ல. எப்படியும் நாம ரெண்டு பேரும் காதலிச்சா நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. எனக்கும் உங்களைப் பிடிக்கல. சொன்னா புரிஞ்சுக்கோங்க” அவள் எரிச்சலோடு பேசிக் கொண்டிருந்தாள்.
இது தினசரி நிகழ்வல்ல என்றாலும் அடிக்கடி அரங்கேறும் ஒன்று. அவளும் கடந்த ஒரு வருடமாய் அவனுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறாள். அவனோ சரியெனத் தலையாட்டிவிட்டு மறுநாள் அவளைப் பார்க்க வகுப்பிற்கு வந்து விடுகிறான்.
அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்க, அவளுக்குக் கோபம் அதிகமானது. “உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா. அவளை இந்த மாதிரி தினமும் யாராவது டார்ச்சர் பண்ணா உனக்கு எப்படியிருக்கும்?” அவள் கேட்டதும், சமீபத்தில்தான் தன்னுடைய தங்கைக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை வந்தது அவனது நினைவிற்கு வர, அமைதியாக எழுந்து அவனுடைய வகுப்பிற்குச் சென்றான்.
மிதுன் அன்று மதியம்போல் ஆபீஸில் இருந்து வீட்டிற்கு வந்தவன், நதியாவை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான். சோதனைக்குழாய் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறலாம் என முடிவு செய்தவன், அதற்காக கோவையில் அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால், பெங்களூரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவனையிலிருந்த டாக்டரிடம் பேசியிருந்தான்.
பெங்களூருக்குப் போகத்தான் விமான நிலையத்துக்குச் செல்கின்றனர். கண்களில் கூலர்ஸ், ஒயிட் டீஷர்ட், ஐஸ் ப்ளூ ஜீன்ஸ், ஓவர் கோட் அணிந்திருந்த நதியா விமான நிலையத்திற்குள் நுழைய, அங்கு அவர்களுக்காகக் காத்திருந்த விஷ்ணு வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவளைப் பார்த்தான். விஷ்ணு பிஸ்தா நிற டிஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருக்க, மிதுன் கருப்பு நிற செக்டு குர்தா ஷர்ட், கிரே ஜீன்ஸ் அணிந்திருந்தான்.
விஷ்ணு, “மேடம்.. கேப் ஒண்ணு தான் மிஸ்ஸிங்” என்றிட, அவள் கையில் இருந்த வெள்ளை நிறத் தொப்பியை அணிந்ததும், “ஹ்ம்ம்..சூப்பர்.. பிள்ளை பிடிக்குறவ மாதிரியே இருக்க” கிண்டலாகச் சிரித்தான்.
“என்னோட அப்பா நாங்க இந்த மாதிரி வெளில போகும் போதெல்லாம், என்னை வெஸ்டர்ன் டிரெஸ் போட்டுக்கச் சொல்வார் தெரியுமா? நாங்க நார்த் இந்தியாவுக்கு போகும் போதெல்லாம் நான் இதைவிட ஸ்டைலா தான் ட்ரெஸ் பண்ணிப்பேன்” அவள் வீட்டுக் கதைகளை பேசும் போது, அவளுடைய கண்கள் சந்தோஷத்தில் மின்னிடும்.
ஃப்ளைட்டில் ஜன்னல் அருகே விஷ்ணு அமர்ந்திருக்க, அவனை இடமாற்றி அமரச் சொல்லிவிட்டு அவள் அமர்ந்துகொண்டாள். ‘மிதுன் விஷ்ணுவை மாறச் சொல்லி அவன் நதியாவிற்கு அருகில் அமர்வான்’ என நினைத்தால் அப்படியேதான் அமர்ந்திருந்தான்.
விஷ்ணுவிற்கு மிதுன் செய்வது ஒன்றும் புரியவில்லை. எல்லாம் புரிந்திட்டால் அவன் மிதுன் இல்லையே. காரில் ஹாஸ்பிடலுக்குச் சென்றதும், அவளுக்கு முதல் கட்டப் பரிசோதனைகள் செய்யப்பட்டதிலேயே, நதியா கொஞ்சம் சோர்ந்து முகம் சுருங்கினாள்.
சிறிது நேரம் கழித்து, அவளுக்கு முதல் IVF ஊசி போட நர்ஸ் வர, அவளுக்கு அருகிலிருந்த ஆண்கள் எழுந்து வெளியே சென்றனர். அறைக்குள் இருந்த மிதுனுடைய செல்போனிற்கு அழைப்பு வந்ததால் உள்ளே வந்தவன், அங்கேயே நின்று போனில் பேசிக் கொண்டிருக்கையில் அவளுக்கு வயிற்றில் ஊசி போடுவதைப் பார்த்தான்.
பயத்தில் கண்களை மூடியிருந்தவள், தனக்கு கீழே இருந்த பெட்ஷீட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். நர்ஸ் சென்றதும் அவளுக்கு அருகில் வந்தவன், “நதியா.. ஆர் யூ ஓகே?” கலக்கமான குரலில் கேட்டான்.
மெல்லிய புன்னகையோடு அவனைப் பார்த்தவள், “எனக்கு ஒண்ணும் இல்ல, நான் நல்லா இருக்கேன். நீங்க போய் சாப்பிடுங்க. என்னைக் கொஞ்சம் லேட்டா சாப்பிட சொல்லியிருக்காங்க” என்க, வெளியே சென்றவன் கொஞ்சத் தூரம் சென்ற பின் அவனுடைய வாலட்டை எடுப்பதற்காக, விஷ்ணுவோடு மறுபடியும் அறைக்குள் நுழைய, நதியா வயிற்றைப் பிடித்துச் சுருண்டு படுத்தவாறு, “அம்மா..” என அழுது கொண்டிருந்தாள்.
மிதுன் வேகமாக அவளுக்கருகே சென்றவன், “நதியா..வலிக்குதா? என்ன பண்ணுது?” பதற்றத்தோடு வினவிட, அவள் பதிலேதும் பேசாமல் கண்களை மூடி அழுதாள்.
“நதியா சரியாகிடும்.. அழாத” என்றவன், மனம் தாங்காமல் அவளுடைய கையைப் பிடித்துக் கொள்ள, அப்போதும் அவள் அழுகை குறையவில்லை. விஷ்ணுவும் அவளைப் பார்த்துக் கலங்கினான். மிதுன் என்ன நினைத்தானோ, அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டான்.
சில பேருக்கு இந்த ஊசி போடுவது வயிற்றில் ஒரு பிடிப்பு போன்ற வலியைத் தரும். வலி தாளாமல் அவளும் அவன் மார்பில் சாய்ந்து, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். விஷ்ணு நர்ஸை அழைத்து வர, அவர் வந்து வலி நிவாரண மாத்திரையைத் தந்தபின், அவள் அமைதியாக உறங்கினாள்.
அவள் தலை வருடிக் கொண்டிருந்தவனின் மனமெங்கும் அப்படி ஒரு போராட்டம். ‘அவளும் சின்னப் பெண் தானே. தன்னுடைய சுயநலத்துக்காக அவளும் எத்தனை வலியைத் தான் தாங்குவாள்’ நதியின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாணலைப்போல அவன் மனம் சிக்கித் தவித்தது.
‘அப்பா என்னை விட்டுப் போகாதீங்கப்பா.. எனக்கு நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குது’ நதியா தூக்கத்தில் புலம்பியதைக் கேட்டவனின் நெஞ்சம் வேதனையில் கனத்தது.
அவள் எழுந்ததும் நர்ஸ் அவளைச் சாப்பிடச் சொன்னதோடு, மருந்து மாத்திரைகளையும் தந்தபடி, “இன்னும் ரெண்டு நாள் இங்க இருந்து இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க. அடுத்து வீட்ல நீங்களோ, இல்ல ஹோம் நர்ஸ் வச்சோ போட்டுக்கோங்க” என்று சொல்லிட,
“சிஸ்டர் ட்ரீட்மென்ட் போதும், எனக்கு நிறைய ஒர்க் இருக்கு. நான் இங்க இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்புறமா ட்ரீட்மென்ட் பார்த்துக்குறோம்” கலைந்த குரலில் சொன்னான் மிதுன்.
நதியாவும் விஷ்ணுவும் குழப்பத்துடன் அவனைப் பார்த்திருக்க, “டாக்டர் கிட்ட இன்ஃபார்ம் பண்றேன். அவங்களைப் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிட்டுப் போங்க” என்று நர்ஸ் சொல்லிச் சென்றதும், “சார்.. எதுக்கு ட்ரீட்மென்ட் வேணாம்னு சொல்றீங்க. நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு வலிக்கும்னு தெரியல. இனிமே பொறுத்துக்குறேன்” என்றாள் நதியா.
“நதியா.. என்னோட மனசு மாறிடுறதுக்கு முன்னாடிக் கிளம்பிடு. உன்னைக் கஷ்டப்படுத்தின அளவு நான் வேற யாரையும் கஷ்டப்படுத்தினதில்ல. போதும். உன்னோட அம்மாவுக்கு ஹார்ட் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. கொஞ்ச நாள் அவங்க மெடிக்கல் அப்சர்வேஷன்ல இருக்கணும். அவங்க முழுசா சரியானதும், நீ வீட்டை விட்டு கிளம்பிடு. கம்பெனில உனக்கு என்ன போஸ்டிங் வேணுமோ கேட்டு வாங்கிக்கோ. உனக்கு வீடு, நகை, செட்டில்மென்ட் பணம் எவ்வளவு வேணுமோ எல்லாம் விஷ்ணு கிட்ட கேட்டு வாங்கிக்கோ. இப்போ கிளம்பு போகலாம்” தழுதழுத்த குரலில் பேசியவன், அதட்டலாய் முடித்தான்.
விஷ்ணு, நதியா இருவருக்கும் அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. கோவை சென்றடையும் வரை மூவரிடமும் கனத்த மௌனமே நிலவியது.
அதன் பிறகு வந்த நாட்களில் மிதுன் நதியாவிடம் இருந்து விலகியே இருந்தான். ஆனால் அவனையும் மீறி அவனது உடலுக்கு அவள் தேவைப்பட, அவனுள் அவஸ்தை அதிகமானது. மெத்தையில் கண்களை மூடிச் சாய்ந்திருந்தவன் மனதில் அவன் காதலியின் நினைவுகளும், நதியாவின் நினைவுகளும் மாறி மாறி வந்து அலைக்கழித்திட, திடீரென்று அவன் காதலியின் நிழல் முகத்தில் நதியாவின் முகம் ஒட்டிக்கொள்ளச் சட்டெனக் கண்விழித்தான். ‘நான் நதியாவை என்னுடைய காதலியாக்க முயற்சிக்கிறேனா?’ குழம்பினான்.
அன்று வைஷாலி தன் கல்லூரியிலிருந்து வெளியே வந்து காரில் ஏறும்போது, கல்லூரிக்கு எதிரே இருந்த ஐஸ்கிரீம் பார்லரில் விஷ்ணு நின்றிருப்பதைப் பார்த்தாள். காரை நிறுத்தச் சொல்லி அவனருகே சென்றவள், “இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க, அவளது பேச்சுச் சத்தம் கேட்டு செல்போனைப் பார்த்திருந்தவன், நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.
“வைஷு.. இங்க நீ என்ன பண்ற?” எதிர்கேள்வி கேட்டவனை ஏற இறங்கப் பார்த்தவள், “இதான் நான் படிக்கிற காலேஜ். நீங்க எந்த பொண்ணை சைட் அடிக்க எங்க காலேஜ் பக்கம் சுத்துறீங்க?” எனக் குறும்பாய்க் கேட்டதும், சிரித்தான்.
“இல்ல ஒரு முக்கியமான வேலையா இந்தப்பக்கம் போனேன். இன்னைக்கு கொஞ்சம் வெயிலா இருக்கா. அதான் சில்லுனு ஐஸ்கிரீம் சாப்பிடலாமேன்னு இங்க வந்தேன். நீயும் என்கூட வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” அவள் மறுத்து விடுவாள் என நினைத்துத்தான் கேட்டான். அவளோ, “ஹ்ம்ம்.. போகலாம்” என்று சொன்னதில் அவனுக்குத் தான் ஆச்சரியம்.
“சாக்லெட் பிரவுனி வித் வெண்ணிலா ஐஸ்கிரீம் கொண்டு வாங்க. சாக்லெட் சாஸ், நட்ஸ் கொஞ்சம் அதிகமாக டாப்பிங் பண்ணிடுங்க” கொஞ்சும் குரலில் அவள் ஆர்டர் சொல்லிட, அவன் “எனக்கும் அதே கொண்டு வாங்க” என்றான்.
“ஏன் உங்களுக்கும் அதுதான் பிடிக்குமா?” கேள்வியாய் ஏறிட்டவளைப் பார்த்தவன், “நமக்கு ஐஸ்கிரீம்னா அது கப் ஐஸ், கோன் ஐஸ் தான். இதெல்லாம் எங்க தெரியுது” என்று சொன்னதும் சிரித்தாள்.
அவள் பிரவுனியுடன் ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அந்த ஐஸ்கிரீமைப் போல் அவனுடைய மனம் அவள் சிரிப்பில் உருகிக் கரைந்தது. ‘அந்த குறும்புச் சிரிப்பும், குழந்தை போன்ற அவள் கொழுத்த கன்னங்களும், அதற்கு இடையில் சின்னதாய் அழகாய் இருக்கும் அவள் அதரங்களும்’ அவளிடம் எல்லை மீறிச் சென்ற தன் பார்வையைக் கட்டுப்படுத்தியவன், ‘அவ அண்ணனுங்களுக்குத் தெரிஞ்சது உன் கண்ணை நோண்டி எடுத்துடுவானுங்க. நீ அவங்க கிட்ட சம்பளம் வாங்குற சாதாரண ஸ்டாஃப்டா முட்டாள்’ அவனுடைய மனதையும் சேர்த்தே கட்டுப்படுத்தினான்.
நதியாவின் பள்ளிக்காலத் தோழி ஷீலா அவளுக்கு போன் செய்திருந்தாள்.
“ஹாய் ஷீலா.. எப்படி இருக்க? உன்கூட பேசி ரொம்ப வருஷமாகிடுச்சு”
“உன்னோட நம்பரை மிஸ் பண்ணிட்டேன் டி. சொல்லு நீ எப்படி இருக்க. என்ன பண்ற?”
“நான் சைக்காலஜி முடிச்சுட்டு ஒரு பிரைவேட் கம்பெனில ஒர்க் பண்றேன். நீ?”
“நான் நர்ஸிங் முடிச்சுட்டு பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். அதுசரி நீ லவ் பண்ணியே உன்னோட கார்த்திக் மச்சான், அவர் எப்படி இருக்காரு? நீ அவரைத்தான கல்யாணம் பண்ணிக்கப் போற?”
“கார்த்தி மாமாவைக் கேக்குறியா?” நதியா பேசிக் கொண்டிருக்கையில், ருக்மணி பாட்டி அழைத்திட, “நான் அப்புறமா பேசுறேன் பாய்” என்றவாறு போனை கட் செய்தாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மிதுனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ‘நதியா காதலிக்கிறாளா? அப்புறம் எப்படி அவள் என்னோடு இயல்பாக இருக்கிறாள்?’ ஏற்கனவே அவனுக்கு இருக்கும் குழப்பங்களில் இந்தப் புதுக் குழப்பமும் வந்து ஒட்டிக்கொண்டது.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
