அத்தியாயம்- 4
அன்று….
போன் திரையில் கபிலின் பெயரை கண்டவுடன், ஏனோ அந்த உணர்வை அவளால் விவரிக்க முடியவில்லை..
”ஹாய் கண்மணி எப்படி இருக்கீங்க?,”
”ம்ம்ம் நல்லா இருக்கேன், நீங்க..? “
”சூப்பரா இருக்கேன் கண்மணி, நீங்க ஃப்ரியா? கொஞ்சம் பேசலாமா? “
”சொல்லுங்க கபில் “
”நாங்க ஃபிரண்ட்ஸ் நாலஞ்சு பேர் சேர்ந்து அட்வர்டைஸ்மென்ட் (advertisement company) கம்பெனி ஒன்று நடத்திட்டு இருக்கோம். சோப்பு, சீப்புல இருந்து நிலம், வீடுனு எல்லாமே கவர் பண்ணிட்டு இருக்கோம், லைன்ல இருக்கீங்களா? “
”ஹான் ஹான் இருக்கேன், நீங்க சொல்றத தான் கேட்டுட்டு இருக்கேன். “
”ஓகே கண்மணி, ஒரு புது புராஜெக்ட் ஒன்னு கிடைச்சிருக்கு, அதுக்கு நீங்க “…
அவனை இடை நிறுத்தி,
”என்னால நடிக்க எல்லாம் முடியாது கபில் “…
”ஹே கூல் கூல், நானும் நடிக்க சொல்லல. இங்க மாடல் இருக்காங்க, நீங்க தான் கோர்யோ (choreography) பண்ணணும். உங்க டான்ஸ் நான் பாத்திருக்கேன், தீம் ‘டான்ஸ்’ வெச்சு நீங்க தான் பண்ணிக்கொடுக்கணும். ஒரு மாசம் தான் டைம் லைன் கொடுத்திருக்காங்க, எனக்கென்னமோ நீங்க பண்ணா ஹிட் ஆகும்னு தோணுது,”
”அது வந்து என்னால எப்படி? “
”ஏங்க உங்க வொர்க் நான் பாத்திருக்கேனுங்க, அதான் கான்ஃபிடெண்ட்டா சொல்றேன். இவனுக்கு எப்படி தெரியும் என்ன, ஏதுனு ஆராய்ச்சி பண்ணாதீங்க கண்மணி. நல்லா டைம் எடுத்து யோசிச்சு பொறுமையா நாளைக்கு காலைல சொன்னா போதும். “
”ஏங்க எனக்கு டைமே இல்லைங்க, எப்படி ஒன்னும் புரியல.”
”ஒன் மந்த் தானேங்க, ரெகுலர் வொர்க்ல இருந்து ஒரு பிரேக், ஒரு டைவர்சன் மாதிரி. நீங்க நெனச்சா முடியாதாங்க? கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க அம்மணி… சாரி கண்மணி. “
’இவன் கிட்ட பேசினா சிரிக்காம இருக்க முடியாது போல ‘ கண்மணி நினைத்துக்கொண்டாள்.
”நீங்க சொல்லிட்டீங்க, பொறுமையா டைம் எடுத்து நாளைக்கு சொல்ல சொல்லி, நாளைக்கு சொல்றேனே கபில் “
”உங்க பதிலுக்காக காத்திட்டு இருப்பேன் ” பிடித்தமோ, விருப்பமோ அந்த குரல் இதுவரை அவள் கேட்டிராத குரல்.
”…… ” – அவளிடம் மௌனம் மட்டுமே.
”ஓகே கண்மணி நாளைக்கு சந்திப்போம், டேக் கேர் “
”பாய்…. “
ஏதோ ஏக்கங்களும், அழுத்தங்களும் நிறைந்த இதயம் லேசானதைப் போல் உணர்ந்தாள் கண்மணி.
அவர்களின் இருவரின் அன்பை நிறைக்க இதோ கண்ணாடியால் ஆன ஜாடி ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த நாள்..
அந்த அலுவலக அறையின் மத்தியில் கண்மணியும், அவளை சுற்றி கபிலின் நண்பர்கள் படையினரும் அமர்ந்திருந்தனர்.
”ரெகுலரா பண்றது போல இல்லாம நாம ஏதாச்சும் புதுசா பண்ணுவோம் நீங்க என்ன சொல்றீங்க ஃபிரண்ட்ஸ்,” சரண்யா மற்ற அனைவரையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியதை அடுத்து அடுத்து சொல்ல ஆரம்பித்தார்கள். எதுவும் யாருக்கும் திருப்தி அளிக்கும் விதமாய் அமையவில்லை.
”நம்மளுடைய தீம் ‘டான்ஸ்’ இல்லையா? சோ நம்ம ஆட்ட நாயகி கண்மணி அவர்கள் கிட்ட கேட்கலாம்” சிரித்துக் கொண்டே கண்மணியை வாரினாள் சிவானி.
அருள், சிவானி, ஜீவா, சரண்யா இவர்களுடன் கபிலும் சிரிப்பினூடே கண்மணி என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக கவனித்தனர்.
சரண்யாவை பார்த்து கண்களை சுருக்கி சிரித்தவாறே.. “ஓகே பிரண்ட்ஸ் எனக்கொரு ஐடியா. இது ஒரு பர்ஃபியூம் விளம்பரம்ல? சோ, நம்ம தீம் டான்ஸ். சீன் என்னன்னா… அது ஒரு ஃபங்ஷன், நம்ம ஹீரோ அதுல கெஸ்ட். நாலஞ்சு பொண்ணுங்க இருக்காங்க, நாலஞ்சு ஸ்டைல்ஸ் ஆஃப் டான்ஸ் எடுத்துப்போம். ஒவ்வோருத்தரும் ஒரு ஒரு ஸ்டெப் போட்டு ஹீரோ கிட்ட ஒரு பொருள் கொடுத்து இம்ப்ரஸ் பண்றாங்க. தாஜ்மஹால், சாக்லேட்ஸ் அந்த மாதிரி. ஆனா எதுவும் அவருக்கு பிடிக்கல, ஆனா அவரும் வெளிய காட்டிக்கல.” தொடர்ந்தாள் கண்மணி,
“கடைசியா ஒரு பொண்ணு மாஸ்க் போட்டு வந்து ஒரு சின்ன ஸ்டெப் ஆடுறாங்க. அத பாத்ததும் சின்னதா ஒரு சிரிப்பு ஹீரோ கிட்ட. அந்த பொண்ணு இன்னும் கிட்ட வராங்க, அவங்க கைல வைச்சிருக்க ரோஸ் கொடுக்கிறதுக்கு முன்னாடியே அந்த பொண்ண அவரு ஹக் பண்ணிக்கிறாரு… அந்த டைம்ல ‘பீ யூனீக்’ (Be Unique) னு அந்த பர்ஃபியூம் பிராண்ட் ரிவீல் பண்றாங்க. அவங்க லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்ல லவ் பண்றாங்க, அத சும்மா கிளிம்ப்ஸ் மாதிரி ஃபாஸ்ட்டா போட்டு காட்டி முடிக்கிறோம்.” ஒரு அமைதி சில நொடிகளுக்கு…
”இத டெவலப் பண்ணி ஒரு ரிஹர்சல் (ஒத்திகை) மாதிரி பாப்போம். நல்லா இல்லாட்டி வேற யோசிக்கலாம்” என்றாள் கண்மணி.
”ஓகே கண்மணி, நீங்க புரோசீட் பண்ணுங்க, ரிசல்ட் பாப்போம் ” – அருள் ஊக்கப்படுத்த, கடகடவென வேலைகள் நடந்தன.
எடுத்ததும் ஆஹா ஓஹோ எனும் அளவிற்கு வந்து விடவில்லை. சில திருத்தங்கள், பல மாற்றங்கள் என்று அன்று முழுவதும் இப்படியே கழிந்தது.
மாலை நேரம் நெருங்க நெருங்க அவர்கள் வேலையும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இறங்கும் முன்பு வரை அத்தனை ஆர்வம் தெரியவில்லை, இறங்கியப்பின் அனைவரும் பம்பரமாய் சுழல துவங்கி விட்டனர்.
அவர்களின் வேலைக்கான முடிவு என்னவாகும்? அவர்களின் இந்த புதிய முயற்சி வெற்றி முகமாய் மாறியதா? பார்ப்போம் தொடர்ந்து…
இன்று….
நாள் ஒன்று…
அதுவரை தம்பதிகளாகிய அவர்களின் இல்லமாக இருந்தது, இன்றிலிருந்து தனித்தனியாக அவர்களின் இல்லமாக மாறியது.
முந்தைய நாள் இரவில் வீட்டிற்கு வந்தவர்கள் தனித்தனி அறையில் புகுந்து கொண்டனர்.
’சரியான இம்சை, இவன் பண்ண வேலைக்கு கல்யாணம் ஆன உடனே சார் பண்ண எல்லா நல்ல வேலையும் மறந்துட்டு, இவன் வந்து தொட்டா அப்படியே ஐஸ் கிரீமா மாறி இவன் கைல உருகிடனும்னு நெனப்பு போல. எவ்ளோ ஈசியா டிவோர்ஸ் வேணுமானு கேட்கிறான். இந்த டீல் மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு செட் ஆகாதுனு நீயே என்ன விட்டு ஓடிருவ, ஓட வைப்பேன். இந்த கண்மணி யாருனு இன்னும் உனக்கு சரியா தெரியல போல, தெரிய வைக்கிறேன் டா கபிலா, ரெடியா இரு’. இது கண்மணியின் மனக்குரல்.
’கல்யாணம் தான் ஆயிடுச்சே, ‘போடா எல்லாத்தையும் விட்டு தள்ளு, பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு’னு தலைவரே சொல்லி இருக்காரு. இவ என்னடானா மனுசன போட்டு படுத்திகிட்டு. இருங்க டான்ஸ் டீச்சர், ஆறு மாசம் என்ன பிரமாதம்… மூணே மாசத்துல உன்ன வழிக்கு கொண்டு வந்து ‘கபிலரே நான் கண் கண்ட கணாளன்’னு சொல்ல வைக்கல… இல்ல இல்ல… சொல்ல வைக்கிறேன் டீ என் செல்ல கண்மணி’. இது கபிலின் மைண்ட் வாய்ஸ்.
பாவம் அந்த காதல் ஜோடிக்கு தெரியவில்லை; யார் ஒருவர் இடத்து மற்றொருவர் அதிகம் தோற்கின்றார்களோ, அவர்களே காதலின் பாதையில் மிக அழுத்தமாய் ஊன்றி செல்கின்றார்களாம் காதலின் அகராதியில்.
இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்களா?
காலையில் கண்மணியின் அறையில் மிதமான சத்தத்தில் பாடல் இசைந்து கொண்டிருந்தது.
முணுமுணுத்துக் கொண்டே அந்த வீட்டில் அலைந்து கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்து சோம்பல் முறித்துக் கொண்டே அந்த சோஃபாவில் வந்து அமர்ந்தான் கபில்.
”உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ” அவன் முன் கைகட்டியபடி வந்து நின்றாள் கண்மணி.
”ம்ம்ம் … பேசலாமே!.. “
”இதை புடி,” என்று ஒரு பேப்பரை அவனிடம் கொடுத்தாள்.
”என்ன இது? “…
”ஒரே வீட்ல இருக்க போறோம், எல்லா வேலையும் என்னால தனியா செய்ய முடியாது. வீக் டேஸ்ல ஒரு நாளைக்கு ஒருத்தர்னு மாத்தி மாத்தி சமைச்சுக்கலாம். வீக் எண்ட் சண்டே தான் எனக்கு ஃபிரீ, அன்னைக்கு என்னால எந்த வேலையும் செய்ய முடியாது. உனக்கு வேணும்னா சமைப்பியோ இல்லாட்டி ஆர்டர் போடுவியோ அது உன் பாடு. இதுல டே வைஸ் நம்ம எல்லா வேலையும் பிரிச்சு தெளிவா எழுதி இருக்கேன். இதன் படி ஃபாலோ பண்ணிக்கோ.. “
”ஓ ஓ… ஆத்துக்காரரோட கைல சாப்பிடணும்னா நேரடியாவே கேட்டிருக்கலாம். எதுக்கு இவ்ளோ பெரிய பேப்பர்? “…
”சும்மா எதையாச்சும் உளறிட்டு இருக்காம வேலைய ஆரம்பி.”
”எது?….. “
”என்ன முழிக்கிற? இன்னைக்கு உன்னோட டே, போய் ஸ்டார்ட் பண்ணு போ.. “
”எல்லாம் என் நேரம்… “
”எல்லாமே நல்ல நேரம் தான் ஏழரை, போய் வேலைய கவனி “….
அப்பொழுது தான் கவனித்தான் அவள் உடையை. இரவு உடையில், கொண்டையிட்டு, ஒப்பனையில்லா அவள் முகம் அத்தனை திவ்யமாய் தோன்றியது.
உடனே அவளிடம் பெற்ற வரம் ஞாபகத்திற்கு வரவும், அவளையே விழிகளில் நிறைத்து நோக்கினான். (அந்த வரம் பிறகு தெரிவிக்கப்படும்).
”நம்ம ரூல்ஸ் என்னன்னு கண்மணி மேடத்துக்கு மறந்து போச்சு போலவே? நாம ஒருத்தரை ஒருத்தர் எதிர்பார்க்க கூடாது… இப்படி வேலை எல்லாம் பிரிச்சு வெச்சுருக்கீங்க…. ” அவன் சிரிப்பை மட்டும் கட்டுப்படுத்த பெரும் பாடாய் உணர்ந்தான் கபில்.
”ஹலோ மிஸ்டர் கபில், உங்க வேலைய நீங்க பார்க்க தான் இதெல்லாம். ஒரு நாள் உங்க வேலைய நீங்க பார்க்காட்டியும் அடுத்த நாள் நான் பார்க்க மாட்டேன். நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் பார்த்துக்கோங்க.”
”அடேங்கப்பா… பார்க்கிறேன் பார்க்கிறேன் அம்மணி… சாரி கண்மணி! “
நீண்ட நாள் பிறகு அவனின் அந்த அழைப்பில் ஏதோ ஒன்று அவளுள் உருகுவதை போல் தோன்றியது கண்மணிக்கு.
அதன் பின் அவனிடம் பேசி வம்பு வளர்க்காமல் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.
’இந்த வீம்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, எதுக்கு கோபம் என்ன தான் பண்ணி தொலைச்சேனோ தெரியல போ. ‘ மீண்டும் மனப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது.
இருவரும் மனம் விட்டு பேசினால் முடியும் சிறு விஷயம், அதனை மனதில் மட்டுமே பேசி முடிவிலா தொடர்கதை ஆக்கும் இருவரின் அடுத்த கட்டம் என்னவோ?
