‘வரவர இந்த ரோபோ நடந்துக்கிறது ஒண்ணும் சரியில்லையே? இப்போலாம் நம்மகிட்ட பர்மிஷன் கேட்கிறார். ஏன் இப்படி பண்றார்?’ எவ்வளவு யோசித்தும் நதியாவிற்கு விடை தெரியவில்லை. மிதுன் பணத்துக்காக இல்லாமல் அவள் மன விருப்பத்தோடு அவளுடன் ஒன்றிணைய நினைக்கிறான். ‘நதியா விஷயத்தில் தான் செய்வது தவறல்ல’ என்று தன்னுடைய மனதை சமாதானப்படுத்த முயல்கிறான்.
“நதியா உனக்கு என்ன கனவு இருக்கு?” மிதுன் கேட்டதும் ஒருவித திகைப்போடு அவனைப் பார்த்தவள், “ஹ்ம்ம். கனவா?” என சொல்லி யோசித்தாள்.
“சைக்காலஜி படிச்சிருக்கேன். ஒரு கிளினிக் வச்சு, என்கிட்ட கவுன்சிலிங்கு வர்ற பேஷண்ட்களோட மனப்பிரச்சினைகளை தீர்த்து வைக்கணும்னு நினைச்சேன். என்னோட அப்பா கூட நான் டிகிரி வாங்கினதும் எனக்கு ஒரு கிளினிக் வச்சுத் தரேன்னு சொன்னார்” ஏனோ இன்று மனதில் தோன்றியதை தயக்கமில்லாமல் அப்படியே அவனிடம் பேசினாள்.
“குட்.. நல்ல விஷயம் தான். குழந்தை பிறந்த பிறகு, நீ இந்த வீட்டை விட்டு போகும் போது, உனக்கு கிளினிக் வச்சுத்தர சொல்றேன். ஏன் நீ படிச்சதையும், உன்னோட கனவையும் வேஸ்ட் பண்ணனும்” அவன் அக்கறையாக சொல்லிட, அவளுக்கோ சுருக்கென்றது.
அவளுடைய அம்மாவை குணப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், வேறு வழியே இல்லாமல் இந்த முடிவை எடுத்திருந்தவளுக்கு, அதைத்தாண்டி அவனிடம் வேறு எதுவும் கேட்டிட மனம் ஒப்பவில்லை. வெளியில் சொல்லாவிட்டாலும் அன்று அவன், ‘உனக்கு மூணு வேளை சோறு போடுறேன்ல’ என்று சொன்னது இன்னும் அவளது நினைவில், நெருஞ்சி முள்ளாய் தைக்கத்தான் செய்கிறது.
ஏனோ இப்போதெல்லாம் கணவன் மனைவி போல இருவருக்கு இடையேயும் கலவிக்குப் பிறகு பேச்சுகள் இருக்கிறது. மிதுன் தன்னை அறியாமலேயே அவளிடம் நெருங்க நினைக்கிறான், அக்கறையாய் நடந்து கொள்கிறான். வீட்டை விட்டு கிளம்பு என்று சொன்ன பிறகும் மீண்டும் அவளுடன் ஒன்றிணைகிறான், எனக்கு குழந்தை வேண்டும் என்கிறான். அவனும் குழம்பி அவளையும் குழப்பி வைக்கிறான்.
அவனிடம் மாற்றங்கள் தெரிந்தாலும், அதைப் பற்றி யோசித்துப் பார்த்தவள், ‘அவர் என்னமோ
பண்ணட்டும், நமக்கு குடுத்த வேலையைப் பண்ணலாம்’ என இயல்பாக இருக்கிறாள்.
ஜெய் இரண்டு நாட்களாக நதியாவிற்கு போன் செய்தவாறு இருந்தான். அவள் அவனுடைய எண்ணை பிளாக்கில் போட்டால் வேறு வேறு எண்ணில் இருந்து அழைக்கிறான். அவன் தொல்லை தாங்காமல் அன்று அவளே அவனுக்குப் போன் செய்தாள்.
“ஜெய் உனக்கு என்ன தான் வேணும்? ஏன் எனக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்க?” எரிச்சலோடு அவள் கேட்டிட,
“நீதான் வேணும் நதியா.. அதுக்குள்ள என்னை மறந்துட்டியா? ஏன் என்னை அவாய்ட் பண்ற?” என்றான் ஜெய்.
இங்கே ஆபீஸில் கோப்புகளில் மூழ்கியிருந்த மிதுன், அதை வைத்துவிட்டு காதைக் கூர்மையாக்கி, அவர்கள் பேசுவதைக் கேட்கலானான்.
“உனக்கு என்னதான் பிரச்சனை ஜெய்?” உச்சக்கட்ட கோபத்தில் அவள் கத்த, “நதியா.. உன் அப்பா ஆக்சிடென்ட்ல இறந்து போனதால நீங்க இருந்த வீடு, உங்க சொத்து எல்லாமே போயிடுச்சாம். ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. உன் அம்மாவும் சீரியஸா இருக்காங்களாம். ஆதிரா கூட உன்னை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணா” அவன் சொல்லி முடித்ததும் விரக்தியாய் புன்னகைத்தாள்.
“அதான் உதவி கேட்டு நான் போன் பண்ணப்போ உதவி பண்ற அளவு நான் வசதியா இல்லன்னு ஆதிரா சொல்லிட்டாளே. உன்கிட்ட இதெல்லாம் சொல்ல வேணாம், உதவி எதுவும் கேட்க வேணாம்னு சொன்னாளே. இப்போ ஏன் அவ உன்கிட்ட இதெல்லாம் சொன்னா?”
“அவளை விடு. நீ என்னைக் காதலிக்கிறது தெரியாம நான் அவளைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அது தப்புன்னு இப்போதான் யோசிக்கிறேன்”
“பொய் சொல்லாத ஜெய். உனக்குத் தெரியும். நான் தான் உன்னை பார்த்துட்டு இருக்கேன்னு ஆதிராவுக்கும் தெரியும். அவளோட அப்பா எங்க அப்பாவை விட பணக்காரர். அதனால நீ அவளைத் தேர்ந்தெடுத்த அப்படின்னும் எனக்குத் தெரியும்” நதியா பேசியதில் அவன் வாயடைத்துப் போனான்.
“ஜெய்.. எல்லாமே முடிஞ்சு போன கதை. நான் உன்னை லவ் பண்ணல. ஜஸ்ட் எனக்கு உன்னைப் பிடிக்கும். ஸ்கூல் படிக்கும் போது இருந்து நீ, நான், ஆதிரா, ஆதவ், ஜீவா எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் தான. நீ எல்லாரையும் விட எங்க மேல கேரா இருப்ப, எங்க போனாலும் எங்களை பாதுகாப்பா பார்த்துப்ப. எல்லா பொண்ணுங்களும் தன்னை புரிஞ்சுக்கிற நண்பன் கிடைச்சா சந்தோஷப்படுவாங்க. சில பேர் அதை காதலா மாத்திப்பாங்க.
“கல்யாணம்னு பேச்சு வந்தா நான் உன்னோட பேரை என் அப்பாகிட்ட சொல்லணும்னு நினைச்சேன், அதைப் பத்தி ஆதிரா கிட்ட கூட சொல்லியிருக்கேன். அவளும் சூப்பர்டி நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லிட்டு, எனக்குத் தெரியாம உன்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணிட்டா. நான் எங்க உங்களை பிரிச்சிடுவேனோனு காலேஜ் படிக்கும் போதே ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க.
“அவ உன்னை லவ் பண்றான்னு தெரிஞ்சப்புறம் நான் உன்னைப் பத்தி யோசிக்கிறது கூட இல்ல. என் அம்மாவுக்காக நான் ஃப்ரெண்ட்ஸ்னு உங்க எல்லார்கிட்டயும் வந்து நின்னப்போ இதுதான் முடியும்னு நீங்க எல்லாரும் எனக்கு உதவி பண்ணியிருக்கலாம், இல்லை ஹாஸ்பிடலுக்கு வந்து எனக்கு ஆதரவா இருந்திருக்கலாம்.
“நான் போன் பண்ணப்போ யாரும் எடுக்கவும் இல்ல. தெரியாத மாதிரி இருந்துக்கிட்டீங்க. என்னோட அப்பா இறந்த பிறகு தான் நான் எல்லா உறவுகளையும், நண்பர்களையும் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டேன். பழசெல்லாம் பேச வேணாம், இப்போ எதுக்கு எனக்கு போன் பண்ற. அதை மட்டும் சொல்லு” நீண்ட நாள் மனதில் இருந்தவற்றை சொல்லி முடித்தவள், அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள்.
“நான் பண்ணது தப்புதான். அப்போ எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா உன்னை வந்து பார்த்திருப்பேன். அதை விடு, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்” விஷயத்திற்கு வந்தான் ஜெய்.
“அடச்சீ இப்படி கேட்க உனக்கு வெட்கமா இல்ல. என்னோட அம்மா ஆபரேஷனுக்காக, என் அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நான் பணம் கேட்டுப் போனப்போ, ‘என் கூட ஒருநாள் இரு, எனக்கு ஆசை நாயகியா இரு’ன்னு சொன்னாங்க. நீ அதை புதுவிதமா கேட்குறியா?” கோபத்தில் முகம் சிவந்து போயிருந்தவள் கேட்க,
“அய்யோ நான் தப்பா எதுவும் கேட்கல நதியா. உன்னால வாழ்க்கைல தனியா சர்வைவ் பண்ண முடியாது. உன் அம்மாவை நான் சரி பண்றேன், உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரேன். ஆதிராவுக்கு தெரியாம நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நான் உன்னோட சொத்து எல்லாம் மீட்டுத் தர கூட ஹெல்ப் பண்றேன். என்னை நம்பு. எனக்கு நீ வேணும் நதியா” அவன் பேசப் பேச அதைக் கேட்ட அவளுக்குத் தான் உடல் கூசியது.
“ச்சீ.. நீ இவ்வளவு கேடு கெட்டவனா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல. உன் கூட இவ்ளோ நாள் ஃப்ரெண்டா பழகினேன்னு நினைச்சாலே எனக்கு கேவலமா இருக்கு. நான் ஒண்ணும் தனியா இல்ல. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் ஹஸ்பன்ட் என்னையும், அம்மாவையும் ரொம்ப நல்லாப் பார்த்துக்கிறார். இனிமே நீ எனக்கு போன் பண்ணா நான் அவர்கிட்ட சொல்ல வேண்டியதா இருக்கும். போனை வைடா பொறுக்கி” கோபம் குறையாமல் போனை மெத்தையில் எறிந்தாள்.
இத்தனை நாட்களாய் மறைத்து வைத்திருந்த நினைவுகளை எல்லாம் அவன் கிளறியிருக்க, நதியா அழ ஆரம்பித்தாள். அப்பாவிற்கும் அம்மாவிற்கும் விபத்து ஏற்பட்டதும், அவள் முதலில் அழைத்தது அவளுடைய தோழி ஆதிராவிற்குத் தான். ஆதிரா அப்படி பேசுவாள் என அவள் நினைக்கவில்லை. சொல்லி வைத்தாற்போல் மற்ற நண்பர்களும் போனை எடுக்காமல் போய்விட, தந்தையின் நண்பர்களுக்கு போன் செய்தாள்.
அப்பாவின் தொழில் பார்ட்னர்களாக இருக்கும் சில பெரிய மனிதர்கள் வந்தார்கள். அவர்களின் உதவியோடு அப்பாவை நல்லடக்கம் செய்து, அம்மாவிற்கு மூட்டு ஆபரேஷன் செய்து, ஹாஸ்பிடலிலேயே விழுந்து கிடந்தாள் பெண்ணவள்.
தொழில் நஷ்டம், பண முடக்கம், ஹாஸ்பிடல் செலவு, ஈமக் காரியங்கள் செலவு என கணக்கு காட்டி மொத்தச் சொத்துக்களையும் நதியாவிடமிருந்து அவர்கள் எழுதி வாங்கிக் கொண்டனர். அவளுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாததால், அவர்கள் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டாள்.
மொத்தமும் வாங்கிய பின், அவளிடம் இனி உதவ பணமில்லை என கை விரித்து விட்டனர். அதோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள கூட கேட்டனர். அவர்களிடமிருந்து தப்பியவள் வேறு வழியே இல்லாமல் மிதுனிடம் மாட்டிக் கொண்டாள்.
தொடக்கத்தில் வாடகைத் தாய், சோதனைக்குழாய் மூலம் மட்டுமே கருவுறுதல் என்று சொன்னதால் தான் இன்டர்வியூக்குச் சென்றாள். மொத்த படிநிலைகளைத் தாண்டிய பிறகுதான் நேரடிக் கருத்தரித்தல் என அறிந்து கொண்டவள் சில நிமிடங்கள் யோசித்தாள்.
தன்னுடைய தாயின் உயிரை விட எதுவும் பெரிதாகத் தெரியவில்லை அவளுக்கு. இப்போதைக்கு அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவர்தான். ஒன்று அவருடன் அவளும் மரணிக்க வேண்டும், இல்லை அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
‘நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏன் சாக வேண்டும்? குழந்தைப் பெற்றுத் தருவது ஒன்றும் தவறில்லையே? இதுதான் விதியென்றால் இன்டர்வியூவில் நான் செலக்ட் ஆவேன். இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும்’ என்ற எண்ணத்தோடு தான் ஆபீஸில் மிதுனின் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் செலக்ட் ஆகி மிதுனின் விதிக்குள் நுழைந்தபின் நடந்ததெல்லாம் நாம் அறிந்ததே.
‘நான் இங்க மட்டும் என்ன மனைவியாவா இருக்கேன்? அதை விட கேவலமான நிலையில தான் இருக்கேன். நான் கண்டிப்பா குழந்தை பெத்து குடுக்கணும். அப்போதான் சரகஸி மதர் அப்படின்னு கௌரவமா இங்கிருந்து வெளில போகலாம். இல்லன்னா இதுக்கு பேர் வேற தானே’ தனக்குள் நினைத்துக் குமுறிக் குமுறி அழுதாள்.
சாப்பிட மனமின்றி அழுது கொண்டேயிருந்தவள், அறைக்கு வந்த உணவைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். மிதுன் பேசியது நினைவுக்கு வந்திட, தன்னைப் பற்றி அருவருப்பாக உணர்ந்தாள்.
அவள் மெத்தையில் படுத்தவாறு அழுது கொண்டேயிருக்க, அறைக்கு வந்த மிதுன் அவளைப் பார்த்தான். வழக்கம் போல் குளித்து, சாப்பிட்டு முடித்து அவன் வந்தபின்பும் அப்படியே அழுதபடி கிடந்தாள்.
அவன் மடிக்கணினியோடு மெத்தையில் அமர்ந்து வேலையை செய்து கொண்டிருக்க, மனதை தேற்றிக் கொண்டவள் எழுந்து குளித்து வந்தாள்.
“சார்..” என்று நதியா அழைத்திட, அவன் நிமிர்ந்து பார்த்தது அழுது சிவந்து வீங்கியிருந்த அவளது முகத்தைத் தான். மிதுன் அவளைக் கேள்வியாய் பார்த்திருக்க, “சார்.. நான் குளிச்சு ரெடியாகிட்டேன்” என்றாள்.
“இன்னும் ஏன் சாப்பிடாம இருக்க? முதல்ல போய் சாப்பிடு” அங்கு அவளுக்கிருந்த உணவைக் காட்டி கேட்டான். “பசிக்கல..” என்றவளை கூர்மையான பார்வையால் அளந்தவன், “அதெல்லாம் பசிக்கும், முதல்ல சாப்பிடு. எனக்கு சாப்பாட்டை வேஸ்ட் பண்றது பிடிக்காது” இறுகிய குரலில் சொல்லிட, பயந்து போய் உணவைச் சாப்பிட்டு முடித்தாள்.
சற்று நேரத்திற்குப் பிறகு.. “நீங்க இன்னும் ஒர்க் பண்றீங்க. எப்போ முடிப்பீங்க. நான் தூங்கிட்டா அப்புறம் உங்களால என்னை எழுப்ப முடியாது” தயக்கத்துடனே அவள் சொல்லிட,
“என்னாச்சு நதியா? எதும் பிரச்சனையா? ஏன் ஒருமாதிரியா இருக்க?” காரணம் தெரிந்தும் கேட்டான்.
“என்னோட பிரச்சனையை உங்க கிட்ட சொல்ல நான் உங்க பொண்டாட்டியும் இல்ல. என் மேல அக்கறை காட்ட நீங்க ஒண்ணும் என் புருஷனும் இல்லையே” அவள் சொல்லி முடிப்பதற்குள் எழுந்து வந்தவன், அவள் இதழைச் சிறைப்பிடித்து முத்தமிட, அவன் முத்தத்தில் இருந்த ஏதோ ஒன்று காதலா? அனுதாபமா? அன்பா? அரவணைப்பா? ஆறுதலா? ஏதோ ஒன்று, அவள் கண்களில் நீரைத் தழும்ப வைத்தது.
இதழ்முத்தத்தோடு அவளது கன்னம் பற்றி, தன் பெருவிரலால் அவள் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்தான்.
“நதியா பீ ப்ரீ.. ஒண்ணும் இல்ல. அழாத.. எல்லாம் சரியாகிடும். தூங்கு” என்றவன் வெளியே சென்றுவிட, கண்ணீரோடு அவள் மன வேதனையும் பறந்தே போனது.
பால்கனியில் அமர்ந்தவன், ‘எனக்கு ஏன் அவ கண்ணீரைப் பார்த்தா கஷ்டமா இருக்கு? நான் ஏன் அவளை சமாதானப்படுத்த முத்தம் வைத்தேன்? என்னால அவ அழறதை பார்க்க முடியல. இதுக்கு பேர் தான் காதலா?’ என்ற யோசனையில் இருக்க, காதல் என்றதும் அவனுடைய நினைவுக்கு அவனைக் காப்பாற்றியவளும் வர குழம்பித்தான் போனான்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
