அத்தியாயம் 2

 

அருணாவின் விழிகளில் கண்ணீர் வழிய… மனமோ கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

சில வருடங்களுக்கு முன்,

 

தேவி மருத்துவமனை,

 

மாலை நேரம் 5 மணி.

“அருணா, உன்னோட டியூட்டி டைம் முடிந்தது பார், பஸ்க்கு நேரம் ஆகிடுச்சிடா, இன்னும் கிளம்பாமல் என்ன பண்ணிட்டு இருக்கிற..?, என அவளிடம் வந்தார் , செவிலியர் ஜானகி.

“இதோ கிளம்புறேன்கா” என ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டு கொண்டிருந்தாள், அருணா”

 

“உன்னோட போன் பத்து நிமிஷமா அடிச்சுட்டே இருக்கு, எடுத்து யாருன்னு கேட்டு,  கிளம்புடி”  

“லதா சிஸ்டர், இன்னும் வரலையே ஜானு டார்லிங்” என முகத்தை பாவமாக வைத்தாள் அருணா. 

அருணாவின் கிராமத்திற்கு இன்னும் பஸ் வசதி சரியாக இல்லை. மலை ஐந்து மணிக்கு. மேல் எந்த பேருந்தும் செல்லாது. 

“அவங்க வெளியே போய்ருக்காங்க அருணா. நீ கிளம்பு, நான் சொல்லிடுவேன். உனக்கு பஸ்க்கு நேரம் ஆகிடுச்சி‌. விட்டுடாதே. இதை விட்டால் உங்க ஊருக்கு வேற பஸ் இல்லையே.”

“ஆமா  ஜானு டார்லிங், என்றவள் அவசர அவசரமாக கைப்பையை தூக்க, அவளின் அலைப்பேசி அலறிகொண்டிருந்தது. அதை கண்டும் காணாததுபோல, பையை தூக்கிகொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறியவள், இரண்டு நிமிடத்தில் நடந்து, பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள்.  பள்ளி, கல்லூரி  விடும் நேரம் என்பதால்  கூட்டம் அதிகமாவே இருந்தது. 

“பஸ் போய்டுச்சா, ஈஸ்வரி‌ அக்காவையும் காணுமே” என  சுற்றி கண்களை சுழல விட்டபடி, கைக்கடிகாரத்தை பார்க்கவும் பேருந்து வந்தது.

“அப்பாடா” என பெருமூச்சொன்றை விட்டவள் பேருந்தில் ஏறினாள்.

தன்னுடன் தினமும்   வரும், ஈஸ்வரி அக்காவை காணாது பேருந்தினுள் தேட, தன்னை தேடும் ஜீவனை பார்த்தவர், தன் கையை தூக்கி காண்பிக்க, அந்த கூட்டத்திலும் நசுங்கியபடி அவர் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

 

“என்ன மேடம், இவ்வளவு அஜாக்கிரதையாக வர்றிங்க..?, பஸ் போய்ருந்தால் நிலமை என்ன…?”

“எங்க ஆத்தா தெய்வானை பத்திரகாளி ரூபம் எடுத்திருக்கும். வேற என்ன நடக்கும்?,” என்று சிரித்தாள்.

“தெரியிதுல்ல, சரியான நேரத்துக்கு கிளம்பி வரவேண்டியதுதானே.”

“நீங்க பேங்க்ல வொர்க் பண்றிங்க. நேரம் ஆனதும்  பையை தூக்கிடுறிங்க…, நான் ஹாஸ்பிடல்ல வொர்க் பண்றேன். சரியான நேரத்துக்கு கிளம்ப முடியலை,  ஈவ்னிங் டியூட்டி பாக்குற அக்கா இன்னும் வரலை… ஆமா நீங்க பஸ் ஸ்டாப்ல இல்லையே….?,  அப்புறம் எப்படி பஸ்ல..?,  புது பஸ் ஸ்டாண்ட் போய்ட்டிங்களா…?”

“ஆமாடா… கொஞ்சம் வீட்டுக்கு பொருள் வாங்க வேண்டியிருந்தது. அதான், கொஞ்சம் முன்னாடி, புது பஸ் ஸ்டாண்ட் போய்ட்டேன். பஸ் அங்கே வந்துதானே திரும்பும்… அதான் அப்படியே பஸ்ல ஏறிட்டேன்”

 

அப்போது, ஒரு நிறுத்தத்தில் பேருந்து நிற்க, இடம் கொஞ்சம் காலியானது.

இருவரும் சீட்டில் அமர்ந்தனர்.

அப்போது அருணாவின் கைப்பேசி மீண்டும் ஒலித்தது.

“செல்லம், அந்த போனைதான்  அட்டென பண்ணி, பஸ் ஏறிட்டேன்னுதான் சொல்லேன், பயபுள்ள தவிக்க போகுது” என கிண்டலடித்தார்.

அவரை போலியாக முறைத்தவள் சரியென ,  போனை எடுக்க, அன்பு என்ற பெயருடன் அழைப்பு மிளிர்ந்தது. அட்டென் செய்து காதில்  வைக்க,  இவள் ஹலோ என்பதற்குள் எதிர்புறம் “குண்டூஸ், பஸ் ஏறிட்டியாம்மா” என்ற குரல் ஒலித்தது.

“ம்ம்ம்.. ஆமா அன்பு.” 

“சரி வீட்டுக்கு போய்ட்டு மெஸேஜ்  பண்ணும்மா. நான் ட்ரைவிங்கல இருக்கேன்”.

“சரி” என அழைப்பை துண்டித்தாள்.

“பேச போற‌து இரண்டு வார்த்தை  எத்தனை தடவை கால் வந்திருக்கு, என ஈஸ்வரி அகிலாவின் செல்போனை பார்க்க, பத்து தடவைக்கும் மேலே காட்டியது.

“எடுத்து பேசினால்தான் என்னவாம்…?” என அருணாவை இடிக்க…

“அக்கா, நான் வர்ற அவசரத்துல, எங்கே  பேசுறது…?, பஸ் விட்டுட்டால்  அதுக்கும் திட்டுவான்”

“சரிதான்.” என உதட்டுக்குள் சிரித்த ஈஸ்வரி, “அந்த பையன், சரியா உன் பஸ்  நேரம் பார்த்து, எங்கே இருந்தாலும்   கால் பண்ணிடுறான். பரவாயில்லைதான்” 

“ஃப்ரெண்ட்ஸ்னா அப்படிதான்” என அருணா தோள்களை குலுக்க…

 

“ப்ரெண்ட்ஸா..?” என கேலியாக சிரித்தார் ஈஸ்வரி…

 

“அக்கா” என சினுங்கினாள் அருணா.

“எனக்கு தெரிந்து ,  நீ என்கிட்ட பழக ஆரம்பிக்கும்போதே பார்க்குறேன்…  இந்த நேரம், சரியா உனக்கு போன் வருது.கேட்டால் ப்ரெண்ட்னு சொல்ற”

“ஸ்கூல் படிக்கும்போது நாங்க ஃப்ரெண்ட்ஸ் அக்கா”

“நீ ரொம்ப நாளா,  இப்படிதான் சொல்லிட்டு திரியிற,  எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை”

“அக்கா…”

“என்ன அக்கா மேடம்”.

“உங்க ஊர் பஸ்ஸ்டாண்ட் வந்துடுச்சி. இறங்குங்க, வளவளன்னு பேசாமல்” 

“தெரியிதுங்க மேடம். நாங்க இறங்குவோம்‌. நாளைக்கும் பஸ்லதானே வரனும்.  உன்னை  பாத்துக்கிறேன் ” என  இறங்கினார், ஈஸ்வரி.

“ஈஸ்வரி திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. கூட்டுறவு வங்கியில் க்ளெர்க்காக பணிபுரிகிறார். அருணா வேலைக்கு சேர்ந்ததில் இருந்து, பேருந்தில்  இருவருக்கும் பழக்கமாகி, நட்புடன் தொடர்கிறது.. 

ஈஸ்வரி மறையும்வரை, கையை அசைத்தவள். அவர் உருவம்  மறைந்ததும், தன் கையால் போனுக்கு உயிருட்டினாள். நேராக வாட்ஸ்அப் சென்றாள்.

“அன்பு” என்ற பெயரில் இருந்த பக்கத்தை திறக்க “நான் வர நேரம் ஆகும். வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு, இரவு மெஸேஜ் பண்றேன்ம்மா” என இருந்தது.

இவளும் “சரி” என பதிலனுப்பிவிட்டு, மெல்லிய புன்னகையுடன்  அவனுடன் பேசியதை பார்த்தபடி வர, நேரம் சென்றது தெரியவில்லை. நடத்துனர் விசிலை ஊதியதும்.

தன் ஊர் வந்தவிட்டதை பார்த்தவள், போனை பைக்குள் வைத்துவிட்டு எழுந்து வர, பஸ் நிற்கவும் இறங்கினாள்.

நல்லங்கிணறு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமம். வானம் பார்த்த பூமி. ஒரு நேரத்தில் முப்போகம் விளைந்த இடம். அங்கிருந்தவர்கள் வேலையே விவசாயம்தான். மழை பெய்தால், பச்சை பசலென பாரதிராஜா படத்தில் வரும் கிராமத்தை போல இருக்கும்.  கோடைகாலத்தில் மறந்தும் பச்சை நிறம் கண்ணுக்கு தெரியாது. அந்த அளவுக்கு காய்ந்து போய் இருக்கும் கிராமம். இன்னும் முழுதாய் கோடைகாலம் வரவில்லை, என்பதால் அங்கங்கே பச்சை கண்களில் தென்படுகிறது. 

இரண்டு நிமிடத்திற்குள் நடந்து  தன் வீட்டிற்கு வந்தாள்.

இரும்பு கேட்டை திறந்து உள்ளே வர, தந்தை அவருடைய அறையில் தூங்கிகொண்டிருப்பது தெரிந்தது. “அம்மா” என அழைக்க “பின்னாடி நிற்கிறேன்” என்ற  சத்தம் வந்த  திசைக்கு  நகர்ந்தாள்.

“ம்மா பசிக்குது, சாப்பிட என்ன இருக்கு…?”

“காபி இருக்கு, உங்க அண்ணா  உனக்கு பிடிக்கும்னு  வடை வாங்கிட்டு வந்திருக்கான். துணியை மாத்திட்டு வந்து,  டீயை குடிச்சிட்டு வடையை சாப்பிடு.”

“சரிம்மா ” என்றவள் குளியலறை சென்று முகம், கை, கால்  அலம்பி விட்டு, உடை மாற்றிகொண்டு, வெளியே இருந்த திண்ணையில் ஜம்பமாக  அமர்ந்தாள்.

“உங்க அப்பாவை எழுப்புடி..!,  என் புள்ளை, வந்ததும் காபி குடிக்கிறேன்னு தூங்கிட்டாங்க…”

“பார்த்தேன்ம்மா… அப்பா தூங்குறாங்கன்னுதான் எழுப்பலை.”

“எழுப்பி விடு” என்றதும் தன் தந்தையை கையோடு அழைத்து வந்து, அவர்  பக்கத்தில் அமர்ந்தாள் அருணா.

“அப்பா உடம்பு முடியலையா..?”

“இல்லம்மா… கால் வலிதான் சரியாகிடும்”

 

“சரிப்பா, ம்மா,  அண்ணா எப்போ வருவான்..?”

“அண்ணா வைக்கோல் லோட் ஏற்ற போய்ருக்கான். அப்படியே உங்க அண்ணியையும் பார்த்துட்டு வர்றேன்னு சொன்னான்.”

“இதுதானம்மா அண்ணிக்கு  மாசம்.”

“ஆமா அருணா, அம்மாவும் புள்ளையுமா நல்லபடியா வந்தால் போதும்” என இடையில் சாமியை கும்பிட்டு கொண்டார், தெய்வானை.

“அதெல்லாம் கவலைபடாதே தெய்வானை, என் மருமகளும் பேரபுள்ளையும் நல்லபடியா வருவாங்க” என்றார் முருகன்.

சிறிதுநேரம் மூவரும் காபி அருந்தியபடியே பேசிக்கொண்டிருக்க, 

 

“ம்மா, ரொம்ப சோர்வாக இருக்கு, கொஞ்ச நேரம் தூங்குறேன். அண்ணா வந்ததும் எழுப்பிவிடு” என  தன்‌ அறைக்கு வந்தவள்,  தொப்பென கட்டிலில் விழுந்து அப்படியே, தூங்கி போனாள்.

 

முப்பது வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தேவி மருத்துவமனை, அதில் வரவேற்பாளராய் பணிபுரிகிறாள் அருணா. தந்தை உடல்நலம் சரியில்லாமல் போக,  மருத்துவ செலவு, அதே நேரம் அக்காவின் திருமணம், அண்ணனுக்கு நடந்த விபத்து  என எல்லாம் ஒரே நேரத்தில் வர பணத்திற்கு திணறியது குடும்பம். கொஞ்சம் கொஞ்சமாய் சமாளித்து எழும்பி வர, அதில் அருணாவின் படிப்பு தடைபட்டது. 

அவளை வெளியே வேலைக்கு அனுப்பவும்  விருப்பம் இல்லை. ‘வீட்டில் இருக்க அவளுக்கு  பிடிக்கவில்லை’ என அவள் கூற தங்கள் கிராமத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் வேலை வாங்கி கொடுத்தார் அவளின் தந்தை. இருபது வயதில் வேலைக்கு சேர்ந்தாள் அருணா.

நன்றாக தூங்கிகொண்டிருந்தவளை‌ யாரோ தட்டி எழுப்புவது போல் இருக்க, எழாமல் திரும்பி படுத்தாள்.

“குட்டிமா எழுந்துடு” என்ற குரல் கனமாக கேட்க, திடுக்கிட்டு எழுந்தாள், அருணா.

“தன் முன்னால் நிற்கும் அண்ணணை  பார்த்தவள் எப்போ அண்ணா வந்த..?”

“இப்போதான். வா சாப்பிடலாம். நேரம் ஆகிடுச்சி பாரு… தூங்கறவ சாப்பிட்டு தூங்க வேண்டியதுதானே” என அவள் அண்ணண் கதிர்வேலன் சத்தமிட்டான்.

 

“நீ வந்ததும் சாப்பிடலாம்னு இருந்தேன்”   என கொள்ளைபுறம் சென்று, முகத்தையும் கையையும்  கழுவிகொண்டு,  அண்ணனின் பக்கத்தில் அமர்ந்தாள்.

அண்ணனும், தங்கையும் பேசியபடியே சாப்பிட்டனர். அம்மாவும், அப்பாவும் நாடகம் பார்ப்பதில்  கவனமாக இருக்க, சாப்பிட்டு முடித்த அகிலா, தந்தைக்கு மட்டும்  சப்பாத்தி சுட சென்றாள். 

தெய்வானை சப்பாத்தி மாவை பிசைந்து வைத்துவிடுவார். அவரை விட அருணா மெலிதாக சப்பாத்தியை உருட்டுவால் என்பதால், இந்த ஒரு வேலை மட்டும் அவளுக்காக தினமும் காத்திருக்கும்.

அண்ணண் கதிரும்,  காலையில் தோவாளை  பூ மார்க்கெட் போகனும், என்பதால் நேரத்தோடு தூங்க,  அவன்‌ அறைக்கு சென்றுவிட்டான்.

சப்பாத்தியை சுட்டு,   தந்தைக்கு பறிமாறியவள், அப்படியே தன் அன்னையின் பக்கத்தில் அமர்ந்தபடி, தோளில் சாய்ந்து துயில் கொண்டாள்.

“அருணா ரூம்ல போய் தூங்கு… தூங்கி தூங்கி விழுற…” என தெய்வானை எழுப்பிவிட… 

“சரிம்மா”  என தூக்ககலக்கத்திலேயே அறைக்கு வந்தவள் நன்றாக தூங்கிவிட, இரவு வெகுநேரம் கழித்து காதுக்குள், ஏதோ ஊருவது போல இருந்தது. தூக்கம் கலைய  மணியை பார்த்தால் பதினொன்று. 

“ஆத்தாடி பதினொன்னா…?” என தவிப்புடன் அவளின் மொபைல் இருக்கும் இடத்தை கவனித்து கையில் எடுத்தவள்   உடனே வாட்ஸ்அப்பிற்கு  சென்றாள்

அன்புவிடம் இருந்து குறுஞ்செய்திகள் குவிந்திருந்தன.

“அருணாம்மா..” 

“என்ன பண்ற?” 

“சாப்டியாம்மா?” 

“தூங்கிட்டியா..?”

“ஏய் லூசு..” 

“குண்டூஸ்”

“என்ன பண்றம்மா..?”

“இவ்வளவு நேரமா  துங்குற..?”

“என் நியாபகமே இல்லையா”

“அடிப்பாவி”

“இப்படி கும்பகர்ணி மாதிரியா  

 தூங்குற”

“ஓய்” 

“லூசு”

” லூசு” என இப்படியே நூறைத்தொட காத்திருந்தன.., அன்பு அனுப்பிய குறுஞ்செய்திகள்.

இவள் பார்த்துவிட்டால்,  என தெரிந்த பின்…

“என்ன பண்ண இவ்வளவு நேரம்..?”

“சாரி அன்பு தூங்கிட்டேன்”

“சரி விடு. சாப்டியா”

“சாப்ட்டேன். நீ சாப்டியா”

“சாப்டேன்ம்மா. இப்போதான் அண்ணா வாங்கிட்டு வந்தாங்க. சரி குண்டூஸ் நீ தூங்கு, நான் கேப்  ஓட்ட போறேன்”

“இப்போவா…? தூங்கலையா அன்பு”

“கொஞ்சம் பணம் தேவைப்படுது. கார் டியூ கட்டனும். அதுக்காக  போகனும்”

“கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடு அன்பு”

“எடுக்குற காலம் வரும்போது எடுக்கலாம், இப்போ நல்லா உழைக்கிற வயசும்மா”. 

“இதை‌ ஒன்னை சொல்லி என் வாயை  அடைச்சிடுவ”

“சரி கோபப்படாதே அருணா.”

“ஏன் அன்பு  இப்படி இருக்க”

“ஏன் நல்லாதானே இருக்கேன்”

“இந்த வியாக்யானத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை.”

 

சில சிரிப்பு ஸ்மைலிகளை அனுப்பியவன், “சரி நேரம் ரொம்ப ஆகிடுச்சி, நீ தூங்கு. காலையில் கிளம்பியதும் மெஸேஜ் பண்ணிடு.” என்றதும்

“சரி அன்பு ” என வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே வந்தாள்  அருணா.

பள்ளி படிப்பில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். நல்ல நட்புடன் இருவரின் அன்பும் தொடர்ந்தது. அவள் பள்ளித் தோழியை காணும் வரை…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page