அத்தியாயம் 3
அருணா, காலையிலே எழுந்து வாசல் பெருக்கி, முத்தம் தெளித்து கோலமிட்டு வீட்டிற்குள் வர, தன் அன்னை அடுப்பங்கரையில் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. நேராக அங்கே சென்றவளுக்கு, காபி தயாராக இருந்தது. அதை எடுத்து அவர் பக்கத்தில் அமர்ந்தே, அருந்திக் கொண்டிருந்தாள்.
“அம்மா, அப்பாக்கு காபி கொடுத்துட்டீங்களா..?”
“அப்பா காலையிலேயே, டீ கடைக்கு போயிட்டார். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார்”
“அண்ணா கிளம்பி போயிட்டானா..?”
“உங்க அண்ணன் விடியகாலம் மூணு மணிக்கு போய்ட்டான். வரதுக்கு எப்படியும் 10:00 மணிக்கு மேலே ஆயிடும். உங்க அக்கா போன் பண்ணாலா அருணா.”
“இல்லையேம்மா, மச்சான்தான் நேற்று பேசுனாங்க”
“அவள்கிட்ட பேசி ரெண்டு நாள் ஆயிடுச்சு, பிள்ளை குரலை கேட்கும், போன் பண்ணி கொடு,” என்றதும் தான் அலை பேசி எடுத்து தன் அக்காவிற்கு அழைத்து அம்மாவிடம் கொடுத்தால் அருணா.
‘அம்மாவும், அக்காவும் பேசுவதற்கு எப்படியும் அரை மணி நேரம் தாண்டும் என தெரியும்’ என்பதால் தன்னுடைய காலை கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு, குளித்து தயாராகி வரவும் காலை உணவு தயாராக இருந்தது.
“அம்மா அக்காகூட பேசிட்டியா..?”
“பேசிட்டேன்டி இரண்டு நாள்ல ஊருக்கு வாராளாம்”
“உண்மையாவா..!, என்கிட்ட மச்சான் சொல்லவே இல்லையே..!,”
“உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னுதான் சொன்னாள். உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு, நான்தான் வாய் தவறி உலறிட்டேன்”
“வரட்டும், உன் மகளை வச்சுக்கிறேன்”
“சரி சாப்பாடு எடுத்துட்டு டிபன் பாக்ஸ்ல வச்சுக்கோ, அம்மா மாட்டுக்கு புல் அறுக்க போறேன் வர நேரமாகும்… அப்பாவுக்கு கேப்பை கூல் காய்ச்சி வச்சிருக்கேன். அதை எடுத்து கொடுத்துடு ” என தெய்வானை சென்றுவிட…
அருணா வேலைக்கு செல்ல தயாரானாள்.
தன் அப்பா வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு, சரியாக 9:00 மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றாள். அவளுடன் அவள் ஊரிலிருந்து , சில கல்லூரி படிக்கும் பிள்ளைகளும் வந்து நிற்பார்கள். எல்லோரும் அரட்டை அடித்தபடி நிற்க பஸ்ஸும் வந்து சேர்ந்தது.
காலையில் வேலைக்கு செல்லும் பொழுது, பஸ் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். நிற்ககூட இடமில்லாமல் நிரம்பி வழியும். தன் ஊரில் இருந்து பத்து நிமிடத்தில் ஈஸ்வரியின் ஊர். சரியாக பஸ் நிற்கவும் ஈஸ்வரியும் ஏறிக்கொண்டார். காலையில் இருவரும் அவ்வளவாக பேச முடியாது. பஸ்ஸிலிருந்து இறங்கி, நடக்கும் இரண்டு நிமிட நேரத்தில் இருவரும் பேசிக் கொள்வார். அதன் பிறகு மாலை தான் சந்திக்க முடியும்.
பஸ் நின்றதும் இருவரும் ஒன்றாகவே இறங்கினர்.
“அருணா, துணி எடுக்கணும். பக்கத்துல இருக்குற துணிகடையில் எடுத்துட்டு வந்துடலாம்”
“போலாம்கா,” என இருவரும் துணிக்கடையை நோக்கி நகர்ந்தனர்.
ஈஸ்வரி வீட்டிலேயே துணி தைய்த்தும் கொடுப்பார். அதனால் பிளவுஸ் தைக்க தேவைப்படும் லைனிங் துணிகள், பிளவுஸ் துணிகள் எல்லாம் வாங்கிக் கொள்வார். மதியம் தேவைப்பட்டால் மதியம் வந்து வாங்குவார். மதியம் அருணாவால் வர முடியாது, என்பதால் சில நேரம் காலையிலேயே அவளை அழைத்து வாங்கிக் கொண்டு சென்று விடுவார்.
இருவரும் துணியை வாங்கிக் கொண்டு, அவரவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது “ஐயோ அன்புக்கு போன் பண்ணி சொல்லவே இல்லையே, என தன் கைபேசி எடுத்துப் பார்க்க, முப்பது தவறி அழைப்புகளும், 20 வாட்ஸ்அப் மெசேஜ் காட்டியது. தலையில் அடித்துக் கொண்டவள் அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ அன்பு”
“ஹாஸ்பிடல் போயிட்டியாம்மா”
“வந்துட்டேன். நான் பஸ்ல நின்றால் போன் எடுக்க மாட்டேன்னு தெரியும்தானே…, அப்புறம் எதுக்காக இவ்வளவு நேரம் போன் பண்ணி இருக்க, லூசு”
“தெரியல குண்டூஸ், நீ பத்திரமா போயிட்டியானு கேக்குறதுக்காக என்னையும் மீறி, என் கை அத்தனை போன் பண்ணிடுது”
“ஓஹோ… சரி நீ சாப்டியா வேலைக்கு கிளம்பிட்டியா”
“நான் வீட்டுக்கு வந்தே பத்து நிமிஷம்தான் ஆகுது”
“என்ன சொல்ற அன்பு..?”
“இப்போதான் கேப் ஓட்டி முடிச்சி வந்தேன்”
எதிர் பக்கம் அமைதியாக இருக்க..,
“அருணா பேசும்மா” என்றான்.
“நீ ஏன் இவ்வளவு கஷ்டபடுறன்னு எனக்கு தெரியலை அன்பு.”
“சரி சரி நீ ரொம்ப மூளையை கசக்கி யோசிக்காதே, இன்னைக்கு நான் கார் ஓட்ட போகலை… அண்ணா கூட போறேன்.”
“ஏன்..?”
“அவனுக்கு வழக்கமா, வர டிரைவர் வரலையாம். அவன் வண்டி லோட் கொண்டு போகணும்னு சொல்றான். அதனால அவனுக்கு துணையான போறேன்”.
“சரி பார்த்து பத்திரமா போகணும்”
“சரிம்மா, ஈவினிங் கால் பண்றேன்,
“சரி நேரத்துக்கு சாப்பிடு…. சாப்பிடாமல் நீ உழைச்சி கொட்டுறதுக்கு, உனக்கு கல்யாணம் முடியிற வயசுல பொம்பளை பிள்ளை இல்லை. சேர்த்து வைக்கிறதுக்கு”
“சரிம்மா, வாயாடி”
“நீ சாப்பிடுற போட்டோ வரனும்”
“சரி வந்துடும்” என்றான் சிரிப்புடன்…
“எனக்கு வேலைக்கு நேரம் ஆகிடுச்சி , மதியம் வேலை இல்லாமல் இருந்தால் போன் பண்ணு”
“சரிம்மா” என அழைப்பை துண்டித்தான் அன்பு.
இத்தனை வருடங்களில் காலையில் இரண்டு நிமிடம், மாலையில் 2 நிமிடம் மட்டும்தான் அவர்களின் பேச்சு வார்த்தை இருந்தது. அதற்கு மேலும் அவர்களின் பேச்சு நீண்டதில்லை. பொதுவான விசாரிப்புகளோடு நின்றுவிடும். மற்ற நேரமெல்லாம் வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான் இருவருக்கும்.
ஆனால், இவை அனைத்தும் இன்னும் சிறிது நாட்களில் மாறப்போகிறது என்பதை அவர் அறியவில்லை.
“அருணா,”
“சொல்லுங்க ஹேமா சிஸ்டர்”
“இன்னைக்கு லதா சிஸ்டர் வரலையாம். ஈவினிங் டியூட்டி நீ பாக்குறியா”.
“அக்கா நான் வேலைக்கு சேரும்போதே, காலைல டியூட்டி மட்டும்தான் பார்ப்பேன்னு சொல்லிதான் வேலைக்கு சேர்ந்தேன். உங்களுக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன். எங்க வீட்டுல, என்னை நைட் எல்லாம் ஒர்க் பண்ணவிட மாட்டாங்க”
“தெரியும்டா, இருந்தாலும் ஒரு வார்த்தை கேட்கலாம் நினைச்சேன் அந்த வேலையும் சேர்த்து நான்தான் பாக்கணும்.”
“ஏன் திடீர்னு லதா சிஸ்டர் லீவ்”
“அவங்க கொழுந்தனார்க்கு பொண்ணு பாக்குறாங்களாம், ஊர் கொஞ்சம் தூரமாம். போயிட்டு வர லேட்டாகிடும், ஒரு வேலை முன்னாடி வந்துட்டால், நான் வேலைக்கு வந்துடுறேன்னு சொன்னாங்க”.
“சரிக்கா” என தன் வேலையில் மும்மரமாக இருக்க…
“உன்னை கூட பொண்ணு கேக்குறதா சொன்னாங்க, ஆனால் நீதான் சம்மதிக்கல..”
“எனக்கு விருப்பம் இல்லை அக்கா”
“நல்ல பையன், நீ சம்மதித்தால், உங்க வீட்ல பேசி இருப்பாங்க”
சிறு சிரிப்புடன், அடுத்து பேசாமல் அமைதியாக, சிஸ்டத்தில் டோக்கன் போட்டு கொண்டிருந்தாள்.
“சரி நான் 12-வது ரூம்ல ஒரு தாத்தா தங்கி இருக்கார் . அவருக்கு ட்ரெஸ்ஸிங் வைக்க போறேன். டாக்டர் என்னை கூப்பிட்டால் அங்க இருக்கேன் சொல்லிடு”
“டாக்டர் இன்னும் வரலையே சிஸ்டர்”
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க… ஏதோ பர்சனல் வேலையா பேங்க் போய்ருக்காங்க அருணா”
அப்போது மருத்துவமனையின் போன் அடிக்க அதை எடுத்து காதில் வைத்தவள், ஹலோ மலர் ஹாஸ்பிடல் என்றாள்.
எதிர் பக்கம் மருத்துவர் வருகையை கேட்க…
பதில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள். “சரி சிஸ்டர், நீங்க போங்க, நான் பாத்துக்குறேன்” என தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
“ஹலோ மேடம்” என்று சத்தம் கேட்க… நிமிர்ந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி
“ஏய்..! எருமை, நீ எங்கடி இங்க..?”
“நான் கேட்கணும் மேடம், நான் உடம்பு சரியில்லைன்னு, ஹாஸ்பிடல் வந்து இருக்கேன். நீ இங்கே என்ன பண்ற..?” என கேட்டாள், அவளின் பள்ளி தோழி ஜெர்லின்.
“நான் இங்கேதான் வொர்க் பண்றேன்”.
“ஓஹ் சூப்பர். எனக்கு ஃபீவர் டி அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்”
” சரி” என தன் தோழிக்கு டோக்கன் போட்டவள், தோழிகள் இருவரும் பழைய விஷயங்களை பேசியபடி இருக்க…. தன்னுடைய பழைய நண்பர்கள் எல்லாரையும் பார்த்ததாகவும் பேசியதாகவும் கூறியவள், “அன்பு உங்கிட்ட பேசுறானா..?” என கேட்டாள்.
முதலில் ‘ஜெர்லி தவறாக நினைப்பாளோ’ என சொல்ல திணறியவள், பின்பு தன்னை சமாளித்துக் கொண்டு “ஆமாம்” பேசுகிறான், என்றாள்.
“உண்மையா இரண்டு பேரும் பேசுறீங்களா..?”
“ஆமா, ஆனால் நாங்க இரண்டு பேரும் நல்லா ப்ரெண்ட்ஸ்”
“அடியேய்..!, அருணா,எனக்கே காது குத்தலாம்னு பார்க்காதடி,. நீங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸா..?, நீ வேணும்னா ப்ரெண்ட்னு சொல்லு, ஒத்துக்குறேன். ஏனென்றால், உன் மனசுல அவன் மேல எந்த ஒரு எண்ணமும் இருந்ததில்லை. ஆனால் அவன் உன்னை ப்ரெண்ட்னு சொல்றான்னு சொல்லாதே..!, நான் ஏத்துக்க மாட்டேன்.”
“ஏய்..!, நீ ஏன் இப்படி தவறா நினைக்கிற, அன்பு எனக்கு நல்ல நண்பன்”
“இப்பவும் சொல்றேன் உனக்கு அவன் நல்ல ப்ரண்ட் . அதை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். ஆனால் உன்னை அவன் தோழியா பாக்குறான்னு சொல்லாத நான் நம்ப மாட்டேன்”
“ம்ப்ச், என்னாச்சு ஜெர்லி உனக்கு..?”
“எனக்கு ஒன்னும் இல்லை. அவன் உன்னை ஸ்கூல் படிக்கும்போதே, விரும்பிட்டு இருக்கான். நீ இப்போ பிரெண்ட்ஸ்னு சொன்னால், அதை நான் அக்செப்ட் பண்ணிக்கனுமா..?”
“அது தெரியாத வயசு ஜெர்லி…, ஸ்கூல் லைப்ல என்ன தெரியும். உன் மேல நான் பாசம் கட்டினால் கூட, அது காதலாதான் நம்மளுக்கு கன்வே ஆகும், புரியுதா..?”
“அதெல்லாம் எங்களுக்கு புரியும். ஆனால், அவன் கண்ணுல உன் மேல காதல் இருக்கு, அந்த பார்வை உன்னை பார்க்கும்போது ஒரு ரசனை இருக்கும். அதை நான் அப்போதே பார்த்து இருக்கேன்”
“எனக்கு அப்படி எதுவும் தோணவே இல்லை ஜெர்லி”
“சரி போன்லதானே பேசிட்டு இருக்கீங்க… ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் என்னைக்காவது ஒருநாள் நேர்ல மீட் பண்ணி இருக்கீங்களா..?”
“இல்லை” என்றாள் அருணா.
“என்னைக்காவது ஒரு நாள் அவனை நேரில் நீ சந்திப்ப, அப்போ அவன் கண்ணை பார்த்து பேசு. நான் சொல்றது உண்மையா பொய்யா என்று உனக்கே தெரியும்”.
“இவ ஒருத்தி கண்ணை பார், காலை பாருன்னு, இதோ பார், எனக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் செட் ஆகாது ஜெர்லி, என்னோட பேமிலி பற்றி உனக்கு தெரியும் இல்லை”
“எல்லாமே தெரியும். உனக்கு லவ் செட் ஆகாது தான். ஆனால் அவன் பக்கம் பச்சை கொடி காட்டினாள். நல்லது நடக்கலாம் இல்லையா”
“காமெடி பண்ணாத… வர வர பாட்டி மாதிரி பேசுற.. எனக்கும் அவனுக்கும் காதல் இல்லை. நண்பர்கள்தான். அதை தாண்டி எங்களுக்குள் எதுவும் இல்லை. நடக்கவும் நடக்காது”
“ஏன் அப்படி சொல்ற அருணா..?”
“ஏன்னா அவங்க வேற, நான் வேற..!,”
“நீ எதை சொல்றான்னு எனக்கு புரியுது. காதல் அதை பாக்காதுன்னு உனக்கு தெரியாதா..?”
“காதல் எதையுமே பாக்காது ஜெர்லி, ஆனால், காதலிக்கிறவங்க குடும்பம் பார்க்கும். குடும்பம் நமக்கு கடைசி வரைக்கும் வேணும் என நினைத்தால், நம்மளும் அதை பார்த்துதான் ஆகணும் வேற வழி இல்லை”
“நல்லா பேச கத்துக்கிட்ட அருணா”
சிரித்தவள், அடுத்தடுத்து ஆட்கள் வர இருவருக்கும் பேச நேரமில்லாமல் போனது.
மருத்துவரை பார்த்து விட்டு வெளியே வந்த ஜெர்லி, “நான் உனக்கு கால் பண்றேன். உன் கிட்ட பேசணும்” என்றபடி கிளம்பினாள்.
அருணாவின் நட்பு வட்டம் அதிகம். கல்லூரி படிப்பை தொடராமல் விட்டாலும், பள்ளியில் படித்த நட்பு இன்னும் தொடர்கிறது. அதில் அருணா, அன்பு, ஆர்த்தி, ஜெர்லி நால்வரும் நல்ல நண்பர்கள்.
ஆர்த்திற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. ஜெர்லியை விட, ஆர்த்தி, அன்பு, அருணா மூவரும் எப்போதும் இணைப்பில் இருப்பவர்கள்.
