அத்தியாயம் 4

ஜெர்லி வந்து சென்றதிலிருந்து அருணாவின் மனதிற்குள் குழப்பம் குடியேறி கொண்டிருந்தது. 

‘அவள் சொல்வது உண்மைதானே..!, பத்தாவது  படிக்கும்போதே  தன்னை விரும்புவதாகதான் அன்பு சொல்லிக் கொண்டிருந்தான்.  ஆனால் படிப்பை முடிக்காமலே, அன்பு பள்ளியில் இருந்து நின்றுவிட்டான். அருணாவிற்கு அவன் என்ன ஆனான்..?, எங்கு சென்றான்..?, என  எதுவுமே தெரியவில்லை.

பள்ளி படிப்பு முடிந்து ஒரு நாள் ஆர்த்தியை ஏதேச்சையாக வெளியே செல்லும்போது பார்க்க நேர்ந்தது. அவளிடம் பேசியவள், ஆர்த்தி அருணாவின்   அலைபேசி எண்ணை கேட்க கொடுத்தாள். 

 

“என் நம்பர் சொல்றேன் எழுதிக்கோ… மறக்காமல் போன் பண்ணு”  என ஆர்த்தி கூற…

“என்கிட்ட நம்பர்  இருக்குடி. டைரியில் எழுதி வைத்தேன்” என்றாள் அருணா.

 

இரண்டு நாட்கள் கடக்க.. அருணா,  ஆர்த்தி எண்ணிற்கு  அழைத்தாள். வீட்டில் மட்டும்  போன் இருக்கும் அதுவும் பட்டன் போன்தான்.  அழைப்பு சென்று கொண்டே இருந்தது, ஏற்கப்படவில்லை. 

ஒரு இரண்டு மணி நேரம் கடந்ததற்கு பின்பு அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அதை  கவனித்தவள் அட்டென்ட் செய்து காதில் வைக்க…

“ஹலோ யார் பேசுறீங்க” என அருணா கேட்க… எதிர்ப்புறம்  பலத்த அமைதி “ஹலோ..!,  ஆர்த்தி, ஹலோ, ஆர்த்தி.. ஆர்த்தி இருக்கியாடி..?” என கேட்க…

” நான் அன்பு பேசுறேன்” என்ற குரல் வரவும், திகைத்து வெடித்தாள், அருணா. 

“அன்பா…?” என பேச முடியாமல் அதிர்ந்து கேட்க…

“நான் அன்பு தான் பேசுறேன், நீ அருணாதானே, ” என்றான்,  அன்பு.

“ஆமா, ஆனால் நான் இப்போ உனக்கு போன் பண்ணலை.  இது ஆர்த்தி நம்பர் தானே” 

“ஆர்த்தியா, அவள் நம்பர் இல்லை.  இது என் வீட்டு நம்பர்.  அம்மாவுக்கு வேற நம்பர் வாங்கி கொடுத்து இந்த நம்பரை நான் வச்சுக்கிட்டேன்,” என்றான்.

“இல்ல அன்பு, என் டைரியில்  ஆர்த்தி என  இந்த நம்பர் தான் இருக்கு” என தன் தரப்பு நியாயத்தை கூற…. 

“தெரியல, ஆனால்  இது என்னோட நம்பர் தான்” என்றான், அன்பு. 

அருணா யோசித்தாள். ஆர்த்திதான் அவள் டைரியில் பள்ளி படிக்கும்போது தொலைபேசி எண்களை எழுதினாள்‌. எப்படி மாறியது. ஆர்த்திக்கு அன்புவை நண்பனாய்  ரொம்ப பிடிக்கும்.  தன்னிடம் கூட அவனை பற்றி பெருமை பேசியது நினைவுக்கு வர, ஆர்த்தி தான் ஏதோ தேவையில்லாத வேலை பார்த்திருப்பது புரிந்தது. 

 

“சாரி அன்பு, ஆர்த்திதான் இந்த நம்பரை கொடுத்தாள். எனக்கு உன் நம்பர்னு தெரியாது.”

“இதுல என்ன இருக்கு..?,  நீயும்  என்னோட ப்ரெண்ட் தானே கூப்பிடலாம் தப்பில்லை” என்றான் அன்பு. 

“சரி அருணா…,  இப்போ என்ன பண்ற..? படிக்கிறியா..?” 

“நான் படிக்கலை அன்பு . வீட்ல நிறைய ப்ராப்ளம், படிக்க முடியாம போயிடுச்சு , இப்போ தையல் க்ளாஸ் போறேன்” என்றாள். அப்போது அருணா ஹாஸ்பிடலில் வேலைக்கு சேரவில்லை.

“ஒஹ் சரிம்மா, நான் சென்னையில் இருக்கேன். அண்ணா பிஸெனஸ் பண்றாங்க. அவர்கிட்ட  வேலை செய்றேன்.”

 

“சரி அன்பு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறமா கூப்பிடுறேன்” என வழக்கமாய் எல்லாரிடமும்  கூறும் வார்த்தையை கூறியவள்,  அழைப்பை துண்டிக்க போக…

“கூப்பிடுவல்ல” என கேட்டதும்… 

ஒரு நிமிடம் யோசித்தவள்  பதிலும் சொல்லாமலே இருக்க… 

“எனக்கு யார் கூடயும் ப்ரண்ட்ஷிப் இல்லை அருணா. ஆர்த்தி காலேஜ் போறதால்  எப்போதாவதுதான் பேசுவாள்.  நீ பேசுவேன்னு நினைக்கிறேன்” என அடுத்து பேசாமல் நிறுத்த…

“வீட்ல யாரும் இல்லை அன்பு, அதான் இப்போ பேசுறேன். எல்லா நேரமும் என்னால்  பேச முடியாது உனக்கே தெரியும்.”

“தெரியும் நீ யாரும் இல்லாத நேரத்தில் பேசு… ஒரு நல்ல தோழியாய் போதும்” என்றான். 

அப்போது மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தது, வருடங்கள் கடந்தும் இப்போது வரை நட்பாய்  தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை  நினைத்துப் பார்த்தவள்..,  சாப்பாடை கிளரியபடியே இருக்க, அவள் கையிலேயே அடித்தால் ஜானகி.

“ஆஹ்…அக்கா”

“என்னடி அக்கா..?,  மண்டைக்குள்ள என்ன ஓடுது , சாப்பிடாமல்  கிண்டிக்கிட்டே இருக்கிற..?,  இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சாப்பிட்டு டியூட்டிக்கு போகனும்ல”. 

“இதோ”, என கடகடவென வாயில்  அள்ளி வைத்தவள். சாப்பிட்டு முடித்து  வேலைக்கு வந்து விட்டாள்.

வழக்கம்போல வேலை முடிந்து  இன்று  முன்னமே பஸ் ஸ்டாண்டிற்கு வந்துவிட்டாள். போனை பார்க்க எந்தவித அழைப்பும் இல்லை. ‘சரி போன் பண்ணுவான்,’ என போனை பையில் வைத்துவிட்டு பஸ் ஸ்டாண்டில்  இருந்த நாற்காலியில் அமர்ந்து காத்திருக்க, ஈஸ்வரி அக்கா வந்து சேர்ந்தார். 

“என்ன அருணா குட்டி, இன்னைக்கு முன்னாடி வந்துட்டு போல.. !,”

“ஆமாக்கா, லதா சிஸ்டர் நானே பார்த்துக்கிறேன். சொன்னாங்க, அதனால நான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி கிளம்பி வந்துட்டேன். ”

“அதானே பார்த்தேன், இல்லன்னா அறக்க, பறக்க ஓடி வருவியே..!,”

“அருணா…, நம்ம ஊரு பஸ்ஸூ  போயிடுச்சா..?,”  என வந்தார், ஒரு பெண்மணி. அருணா ஊரைச் சேர்ந்தவர்தான். அவளுக்கு அத்தை முறை வரும். 

“இல்லை அத்தை, இனிமேதான் வரும், நேரம் இருக்கு.” என்றாள்.

“சரிம்மா” என அவர்களோடு நின்று கொண்டார் அந்த பெண்மணி. அதனால், அதற்கு மேல் இருவரும்   சாதாரணமாக வேலையை  பேசியபடி நின்று  இருந்தனர். 

பேருந்தில்  இன்று கூட்டம் இல்லை. இருவரும் ஒரு சீட்டில் வந்து அமர, அருணாவின் போன் அடித்தது. ‘அன்பாதான் இருப்பான்’ என அழைப்பை பார்க்க… அவளின் பாசக்கார  அண்ணன். 

“அண்ணா, சொல்லுண்ணா…”

“அருணா பஸ்  ஏறிட்டியா. ”

“ஆமாண்ணா,  நான் இப்பதான்  பஸ்ல ஏறுனேன்.”

“சரிடா” 

“என்ன அண்ணா” 

 

“இல்லமா, ஒரு பத்து நிமிஷத்துல நான் அங்கே  வருவேன். அப்படியே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்னு பார்த்தேன். கொஞ்சம் லேட் ஆகிடுச்சி, சரிடா பார்த்து போ , உனக்கு ஏதாவது வேணுமா..?” 

“ஸ்னாக்ஸ் வாங்கிக்கோ  அண்ணா”. 

“அதெல்லாம் நீ கேட்பன்னு தெரியும். வேற ஏதாவது வேணுமாடா…?”

“பூ வாங்கிட்டு வா அண்ணா, நான் இன்னைக்கு வாங்கணும்னு நினைச்சேன், மறந்துட்டேன் .”

“சரி” என அழைப்பு துண்டித்தான் அவளின் அண்ணன் கதிர். 

“என்னடி பாசமலரே யார்கிட்ட பேசிட்டு இருந்த..?” 

“என் அண்ணண் அக்கா”

 

“ம்ம்ம்… இப்படி பஸ் ப்ரியா இருக்கும்போது, இந்துவையும் தாராவையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன், தெரியுமா..?, என்றார் ஈஸ்வரி” 

“ஆமாக்கா ரெண்டு பேரும் காலேஜ் முடிச்சதுதான் நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இல்ல. ”

“ஆமா, தாரா கூட அப்பப்போ பேசுறாள். இந்துலாம் நம்ம  பக்கம் எட்டி பாக்கறதே இல்லை, மேடம் ரொம்ப பிசியா ஆயிட்டாங்க..!,” 

“தாரா, அதுக்கப்புறம் படிக்கலை, வீட்ல இருக்காள். இந்து  படிக்கிறாள்.  நியூ பிரண்ட்ஸ் நிறைய இருப்பாங்க, அவளுக்கு கொஞ்சம் டைம் கிடைக்கிறது கஷ்டம் தானே. ”

“கரெக் அருணா. இத்தனை வருஷத்துல எத்தனையோ பிள்ளைங்களை பார்த்து இருக்கோம். ஆனால்  இந்துவும்  தாராவும்தான்  ரொம்ப ஸ்பெஷல். நம்ம ரெண்டு பேரையுமே அக்கா, அக்கான்னு சுத்திகிட்டு இருப்பாங்க.” என ஈஸ்வரி கவலை கொள்ள…

“நான் தாராவைதான் ரொம்ப மிஸ் பண்றேன். ஏன்னா அவ நமக்கு ரொம்ப செல்லம்ல.”

“ஆமா அருணா. அவள் மூலமாதானே இந்து பழக்கம், இந்த பஸ் நமக்கு நிறைய நல்ல நட்புக்களை கொடுக்குது” என்கவும் ஈஸ்வரியின் பஸ் ஸ்டாப் வந்தது. 

“சரி அருணா, நான் கிளம்புறேன் நாளைக்கு நான் லீவ். அடுத்த நாள் தான் வருவேன் தேடாத. மத்ததை போன் பண்ணி சொல்றேன்” என  இறங்கினார், ஈஸ்வரி. 

அவர் இறங்கியதும் தன் போனை எடுத்துப் பார்த்தாள். அன்புவிடம் இருந்து  அழைப்பு வராமல் இருக்க.. ‘என்ன ஆச்சு போன், மெஸேஜ்   பண்ணாமல் இருக்கான், காலையில் போன் செய்த பின், அவனிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்துகொண்டே  இருக்கும். ஆனால் இன்று எதுவும் இல்லையே’ என  அவளே அன்புவின் எண்ணிற்கு  அழைப்பை கொடுத்தாள். அழைப்பு சென்றதே தவிர அட்டென்ட் செய்யவில்லை. வாட்ஸ் அப்பிலும் மெசேஜ் அனுப்பி பார்க்க, அவன் ஆன்லைன் வரவில்லை. 

“என்னாச்சுன்னு தெரியலையே..?,” என உள்ளம் படபடத்தது. 

அருணா , வீட்டிற்கு சென்று வழக்கமான வேலைகள் செய்தாலும் ஒரு கண் அவளின் அலைபேசியிலேயே இருந்தது. 

 

“அருணா…  நம்ம பக்கத்து தெருவுல சாந்தி மக பெரிய பிள்ளை ஆகிருக்காலாம், சொல்லிட்டு போனாங்க.” எல்லா பிள்ளைகளும்  பார்க்க போவாங்க, நீ போகனும்னா  போய் பாத்துட்டு வா.” 

“சரிம்மா” என்றவளுக்கு போக மனமில்லை.. வீட்டிலேயே அமர்ந்து கொண்டாள். 

“என்னடி போகலையா..?”

“இல்லம்மா, போக மனசு இல்லை.”

“உன் ஜோடி இருந்தால் கிளம்பி போயிருப்ப… அவளுங்க  ரெண்டு பேரும்தான் கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டாங்களே”. 

“ஆமா அவளுங்க இருந்து இருந்தால்,   அப்பவே வீட்டு வாசல்லயே வந்து நின்று இருப்பாளுங்க, வா அருணான்னு இழுத்துட்டு  போய்,  திரும்ப வர வரைக்கும், என் கைய புடிச்சிட்டு இருப்பாளுங்க ரெண்டு பேரும். அதெல்லாம் ஒரு காலம்… என்னம்மா… எல்லாமே அப்படியே மாறிடுது இல்ல.” என தன் ஊரில் தனக்கு இருந்த இரண்டு தோழிகளை நினைத்தாள் அருணா. 

“நாளைக்கு அக்கா வர்றாள்‌. அவளுக்கு பிடிச்சதெல்லாம் செய்யணும். அதிரசம் மாவு வச்சிருக்கேன். அச்சு முறுக்கு வச்சிருக்கேன். வந்துட்டு உடனே போயிடுவேன்னு வேற சொன்னால் எல்லாம் செய்து கொடுத்துடனும்டி ”

“சரிம்மா” என்கவும்  வீட்டின் முன் வண்டி நிற்கும் சத்தம் கேட்டது.  உள்ளே வந்தான் கதிர்.

 

அருணா… 

“அண்ணா உள்ளே வா”  என்கவும் 

உள்ளே வந்தவன்,  அருணாவின்  கையில் மல்லிபூ பண்டலை கொடுத்தான். 

“அவள் என்ன சொன்னாலும் வாங்கி கொடுத்து பழகாத, கதிர்” என தெய்வானை கண்டிக்க…

“ஏம்மா  அருணா மட்டும்தான் இருக்காள். அவளுக்கும் வாங்கி கொடுக்காதேன்னு சொன்னால் எப்படி…?” 

“இப்போ அவள்  நம்ம கேட்டதெல்லாம்  வாங்கி கொடுத்தால்,  அவ  வாக்கப்பட்டு போற இடத்துல.., கேட்டது கிடைக்கும்,   ஒருவேளை கிடைக்காமல் இருக்கலாம், அந்த நேரம் அவள் வேணும்னு நினைத்தது  கிடைக்கலைன்னு வச்சுக்கோயேன்

நம்மளை  நினைத்து ஏங்குவாள். நம்ம அண்ணன் இருந்தால்  வாங்கி தந்து இருப்பான். நம்ம அப்பா இருந்தால் வாங்கிட்டு வந்து இருக்கும்னு நினைச்சி மனசை உலப்பிட கூடாதுல்ல, கதிர்”. 

“அதுக்காக இப்பவே புள்ளைக்கு வாங்கி கொடுக்காதேன்னு  சொல்றியா, சும்மா இரும்மா” என்றான். 

“சரி எப்படியும் அப்பாவும் பையனும் திருந்த மாட்டீங்க… நீ வெளிய எங்கயும் போறியா கதிர்…”

“இல்லைம்மா… இப்பதானே வந்தேன் இனிமே நாளைக்கு தான் போகணும்”

 

“அப்படியா… அப்பாவுக்கு மாத்திரை மருந்து முடிஞ்சு போச்சு,  கதிர். காலையிலேயே உன்கிட்ட சொல்லி விடனும் நினைத்தேன், மறந்துட்டேன். உங்க அப்பா அவங்க ப்ரெண்ட் கூட போனவங்க,  மருந்துசீட்டை எடுத்துட்டு போகலை. கொண்டு போனால் அவங்களே வாங்கிட்டு வந்திருப்பாங்க,  அதான் நீ  இப்போ போறியான்னு கேட்டேன்”

 

“இன்னைக்கு வரைக்கும் மாத்திரை இருக்குல்லம்மா…”

“நாளைக்கு காலையில் வரைக்கும் இருக்கு கதிர்” 

“நாளைக்கு  காலையிலே  வாங்கி தரேன்” 

“சரியா” என அவர் வேலையை பார்க்க… அண்ணன் தங்கையும் டிவி முன் அமர்ந்து படத்தை பார்ப்பதை விட ஊர்க்கதையை  பேசிக் கொண்டிருந்தனர்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கானலாய் ஒரு காதல் கொண்டேன்.
168 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page