காதல் – 3

​காதல் – 3

​தன் மகனுக்காகப் பெண் கேட்க அண்ணனின் இல்லம் வந்த வசந்தா மற்றும் சுந்தரை, முகமெல்லாம் பற்கள் தெரியச் சிரித்தவண்ணம் வரவேற்றார் கணேஷ்.

​”வாம்மா வசந்தா, வாடா சுந்தர் உள்ள வாங்க. ஏன்டா, இப்பத்தான் எங்க வீட்டுக்கு வர வழி தெரியுதா? எப்படி இருக்கீங்க?” என்று வசந்தாவின் அண்ணன் கணேஷ் கேட்டார்.

​”நாங்க நல்லா இருக்கோம் கணேஷ். டைம் கிடைக்கல, அதான் வர முடியல. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றார் சுந்தர்.
​சுந்தரும் கணேஷும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.

தன் தங்கை வசந்தா நல்ல வசதியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்து, சுந்தரிடம் தன் தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும்படி பேசினார் கணேஷ்.

சுந்தரும் தன் தோழனின் தங்கை என்று சம்மதம் சொல்லி, இரு வீட்டாரிடமும் சம்மதம் வாங்கி கணேஷ் நினைத்தது போலவே திருமணமும் நடந்தது.

​’இனி சுந்தரத்தின் சொத்தில் பாதி நம்ம தங்கச்சிக்குத்தான். அவளிடம் பேசி எப்படிச் சொத்தை நம்ம பெயரில் மாற்றி விடலாம்’ என்று கனவு கண்டான் கணேஷ்.

ஆனால், கணேஷின் கனவில் இடி விழுந்தது போல் அடுத்த ஒரு வருடத்தில் இன்பராஜா பிறந்தான்.

கல்யாணமான புதிதில் தன் அண்ணன் கேட்கும்போதெல்லாம் பணம், நகையைச் சுந்தருக்குத் தெரியாமல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள் வசந்தா.

ஆனால், அவளுக்கும் ஒரு குடும்பம், கணவன், குழந்தை என்று பொறுப்புகள் வந்ததும், இனி புகுந்த வீடுதான் தன் குடும்பம் என்று நினைத்து முற்றிலும் மாறிப்போனாள்.

​தன் தங்கை இப்படித் திடீரென்று மாறுவாள் என்று எதிர்பார்க்காத கணேஷ், வசந்தா மீதும் அந்தப் பையன் மீதும் கோபத்தையும் ஆத்திரத்தையும் மறைமுகமாகத் தன்னுள் வளர்த்துக்கொண்டான்.

எப்படியாவது சுந்தரத்தின் சொத்தில் பாதியாவது தனக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தவன், வேண்டாவெறுப்பாகத் திருமணம் ஒன்றைச் செய்துகொண்டான்.

தனக்குப் பிறக்கும் பெண் பிள்ளையை இன்பராஜாவுக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.

இதோ, கணேசனின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறத் தொடங்கியதை நினைத்துச் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
​இவர்களின் பேச்சுக்கு நடுவில் கணேசனின் மனைவி வந்து இருவரையும் வரவேற்றாள்.

“வாங்க அண்ணா, எப்படி இருக்கீங்க? அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் செல்வி.

​”நாங்க நல்லா இருக்கோம்மா. நீ எப்படி இருக்க?” என்று கேட்டனர் இருவரும்.

​வசந்தாவோ, “ஆமா, என் மருமக இந்து எங்கே?” என்று அவளைத் தேடியபடி கேட்க,

செல்வியோ, “இந்து அவ ரூம்ல இருக்கா அண்ணி. நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் காபி போட்டு அவ கையால உங்களுக்குத் தரச் சொல்றேன்” எனச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

​சமையலறைக்குப் போனவள் பாலை அடுப்பில் வைத்துவிட்டு, ‘இப்ப எதுக்கு இவங்க வந்திருக்காங்க? இந்துவை வேற கேக்குறாங்க. இந்த மனுஷன் வேற எந்த அளவுக்குச் சந்தோஷமா இருக்காரு’ என்று புரியாமல் குழம்பினாள்.

​செல்வி திருமணம் முடிந்து வந்ததிலிருந்து இப்போது வரை தன் கணவனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்த மனுஷன் அவர். “பெண் குழந்தை பிறந்தால்தான்டி உனக்கு இந்த வீட்டில் இடம்” என்று திருமணமான முதல் நாளிலேயே சொன்னவர். அதனாலேயே அவள் வேண்டாத தெய்வமில்லை.

வேண்டியது போலவே பெண் குழந்தையும் பிறந்து செல்வியின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டது.

​தன் கணவனைப் பற்றி நினைத்துக்கொண்டே தன் மகளை அழைப்பதற்காகச் சென்றாள் செல்வி. அறைக்குள் நுழைந்தவள் சற்று காட்டமாகவே, “இந்து எழுந்திடுடி. டைம் ஒன்பது ஆச்சு, இன்னும் பொம்பள பிள்ளைக்கு என்ன தூக்கம்?” என்று தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திப் படுத்திருந்த தன் மகளை உசுப்பினாள்.

​”அம்மா நான் எழுந்து குளிச்சு ரெடியாகித்தாம்மா தூங்குறேன். ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம்” என்று கெஞ்சினாள் இந்து.

​இந்து சொன்னதைக் கேட்டுப் போர்வையை விலக்கி முறைத்துப் பார்த்த செல்வி, “அங்க உங்க அப்பா உன்னைக் கூப்பிட்டு வரச் சொன்னார்” எனச் சொன்ன அடுத்த நொடி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் இந்து.

தன் தந்தை அழைத்தார் என்றதும் விஷயம் என்னவென்று ஊகித்தவள், “என்னது? அத்தையும் மாமாவும் அத்தானும் வந்துட்டாங்களா?” என்று கேட்டாள் ஆவலாக.

​”இல்லை இந்து, அத்தையும் மாமாவும் மட்டும்தான் வந்திருக்காங்க.”

​”அப்போ அத்தான் வரலையா?”

​”வரல இந்து” என அம்மா சொன்னதும், மகளின் வாடிப்போன முகத்தைப் பார்த்து அந்தத் தாயின் உள்ளமும் வாடியது.

​’அவள் எவ்வளவு ஆவலுடன் தயாராக இருந்தாள், ஆனால் ஏமாந்து போய்விட்டாள். இந்த ஏமாற்றமே இனி உன் வாழ்வில் நிலைக்கப் போகிறது. ஏன் இதை நான் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேங்கிற? ஏன்டி நீயும் உங்க அப்பா பேச்சைக் கேட்டு ஆடுற?’ என்று ஆதங்கத்தோடு கேட்டாள் செல்வி.
​தன் தந்தையைப் பற்றிச் சொன்னதும் முன்கோபம் கொண்ட இந்து,

“இங்க பாருமா, அப்பாவைப் பத்தித் தப்பா பேசாத. என் சந்தோஷம் எதுவோ அதைத்தான் அப்பா பண்ணுவாரு, புரியுதா? ராஜாவை கல்யாணம் பண்ணிச் சந்தோஷமா வாழணும்னு நினைச்சுதான் அத்தான் படிச்ச காலேஜில் சேர்ந்தேன். ஆனா அத்தான் அந்த விளங்காதவ பின்னாடிதான் சுத்திக்கிட்டு இருந்தாரு” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசிய மகளைப் பார்த்துச் சற்று குரலை உயர்த்தினார் செல்வி.

​”அதான் அப்பாவும் பொண்ணும் சேர்ந்து அந்தப் பொண்ணை ஒண்ணும் இல்லாம பண்ணிட்டீங்களே! அவங்க காதலையும் பிரிச்சிட்டீங்களே, அப்புறம் என்னடி?” எனக் கேட்டாள்.

​”இல்லம்மா, நான் அத்தானைக் கல்யாணம் பண்ணி அந்த வீட்டுக்குள்ள போகணும். இதுதான் என்னோட கனவு, ஆசை எல்லாம். அதுக்குதான் நான் அவ்வளவும் பண்ணேன். ஆனா அது நடக்காமல் போய்விடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் இந்து.

​தாயின் உள்ளமோ மகளின் தவறை உணர்ந்து, ‘இங்க பாருடி இந்து, நீ நினைக்கிறது கண்டிப்பா நடக்காது. உன் மனசை மாத்திக்க, அதுதான் நல்லது’ என்று அறிவுரை கூறியது. அதைக்கேட்டவள் தன் அம்மாவை முறைத்துப் பார்த்துவிட்டு கீழே சென்றாள்.
​’தன் மகளின் இந்தப் பிடிவாதம் எங்கே போய் முடியப் போகுதோ தெரியல. கண்டிப்பா ராஜா அந்தப் பொண்ணைத் தவிர வேற யாரையும் ஏத்துக்க மாட்டான். இது தெரிந்தும் ஏன் இந்து இப்படிப் பிடிவாதமா இருக்கா?’ என்று நினைத்து வருந்தியவர் வேதனையுடன் கீழே சென்றார்.

​மாடியிலிருந்து வரும் இந்துவைப் பார்த்து, “வா மா இந்து, எப்படி இருக்க?” என்று கேட்டாள் வசந்தா.

​”வாங்க அத்தை, வாங்க மாமா. நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”

​”எங்களுக்கு என்னம்மா, நாங்க நல்லாதான் இருக்கோம்.”

​”ஏன் அத்தை அத்தான் வரல?” என்று வருத்தமாகக் கேட்டாள்.

​”இல்லடா, உன் அத்தானுக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை. அதான் ராஜா வரல.”

​வசந்தா ‘உன் அத்தான்’ என்று சொன்னதும் இந்து எல்லை இல்லாச் சந்தோஷம் அடைந்தாள்.

​”இங்க பாருங்க அண்ணா, நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன். உங்களுக்கு நம்ம ராஜாவைப் பத்தி நல்லாவே தெரியும். உங்க பொண்ணை என் பையனுக்குத் தரச் சம்மதமா?” என்று வசந்தா வெடுக்கெனக் கேட்பாள் என்று சற்றும் எதிர்பார்க்காத சுந்தரமும் செல்வியும் அதிர்ந்து போனார்கள்.

​”வசந்தா…” என்று சுந்தர் பேச ஆரம்பிக்கும் முன்னே, அவர் கையை இறுக்கிப் பிடித்துக் கண்களால் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள் வசந்தா.

​இதற்காகவே காத்திருந்தது போல் கணேஷும், “இதுல என்கிட்ட கேட்க என்ன இருக்கு? என் பொண்ணு பிறந்தது ராஜாவுகாகத்தான், அதை அந்தச் சாமி முடிவு பண்ணிட்டாரு. என்ன, என் மாப்பிள்ளைதான் காதல் கத்திரிக்காய்னு சுத்திக்கிட்டு இருந்தாரு. சரி விடுமா, பழசை எதுக்கு பேசிக்கிட்டு?” என்று தன் முடிவைக் கூறினார்.

​வசந்தாவும் செல்வியைப் பார்த்து, “அண்ணி, உங்களுக்குச் சம்மதம் தானே?” என்று கேட்டாள்.

தன் கணவனையும் மகளையும் பார்த்துவிட்டு ‘சரி’ என்று சொல்லிவிட்டாளே தவிர, செல்வியின் மனமோ தன் மகளின் வாழ்க்கை வீணாகப் போவதைப் பார்க்க முடியாமல் தவித்தது.

​இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன், “அப்போ சரிங்க அண்ணா, நாங்க கிளம்புறோம்” என்றாள் வசந்தா.

​”ஏன்மா, இருந்து சாப்பிட்டுப் போக வேண்டியதுதானே?” என்று கணேஷ் கேட்க,

“இல்ல அண்ணா, நாங்க இன்னொரு நாள் வரோம். இந்த விஷயத்தைப் பத்திப் பேசறதுக்காகத்தான் நாங்க இப்ப வந்தோம். நல்லபடியா பேசி முடிச்சாச்சு” என்று சிரித்தபடி சொன்னாள்.

​கணேசன் அவர்களை வழியனுப்பி வைத்தான். போகும் வழியில் சுந்தரம் தன் மனைவியைப் பார்த்து,

“நீ ரொம்ப அவசரப்படுறியோன்னு நினைக்கிறேன். நம்ம ராஜாகிட்ட ஒரு வார்த்தை கேட்டு முடிவு சொல்லிருக்கலாம்” என்றார்.

​”எல்லாம் எனக்குத் தெரியும், நீங்க சும்மா இருங்க” என அவர் வாயை அடைத்தாள் வசந்தா.
​அவர்கள் சென்றதும் கணேசன்,

“ஏய்! உனக்கு என்ன இன்னும் இங்க வேலை? உள்ள போ” எனத் தன் மனைவியை விரட்டினார். செல்வியும் அமைதியுடன் உள்ளே சென்றுவிட்டாள்.

​”இந்து இங்க வாம்மா” என்று தன் மகளை அருகில் அழைத்தார் கணேசன்.

“சொல்லுங்கப்பா” என்றாள் இந்து.
​தன் அருகில் வந்த மகளின் தலையை வருடிக்கொடுத்து,

“நான் கூட ரொம்ப பயந்துட்டேன், நீ எங்க மாட்டேன்னு சொல்லப்போறியோன்னு நினைச்சேன்டா.”

​”அது எப்படிப்பா மாட்டேன்னு சொல்லுவேன்? அத்தானைக் கல்யாணம் பண்ணணும், அது மட்டும்தான் இப்போ என் ஒரே குறிக்கோள்.

அவ என்கிட்ட சவால் விட்டாப்பா… என்னால அதை இன்னும் மறக்க முடியல” என்றவள் மனதில், சட்டென அவளின் கடந்த காலம் ஒரு நொடி வந்து மறைந்தது.

​’ஏய் இந்து! என் இன்பா எனக்கு மட்டும்தான். உன்னால இல்ல, வேற யாராலயும் எங்களை பிரிக்க முடியாது!’ என்று ஒரு குரல் அவள் காதில் ஒலிக்க, அவளை நடப்புக்கு அழைத்து வந்தார் கணேசன்.

​”இப்ப எதுக்குமா அதை நினைச்சுகிட்டு இருக்க? நம்மதான் அவ காதலை ஒன்றுமில்லாமல் பண்ணிட்டோமே! அப்புறம் என்னடா… விடு” என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.

​கணேசனும் இந்துவும் அவரவர் கனவில் மூழ்கிப் போனார்கள். இவர்கள் கனவு பலிக்குமா என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page