ஆசையாசையாக கட்டிய கோபுரம் நொடிப் பொழுதில் சரிந்தது ஏனோ?
இனிமையான கனவுகள் எல்லாம் கண் விழிக்கும் முன்னே கலைந்தது ஏனோ?
உயிர் கொடுத்த உறவுகளே இன்று உணர்வற்றுப் போனது ஏனோ?
விதைத்த அன்பின் வேர்கள் கருகி வீழ்ந்து கிடக்கும் விருட்சம் ஏனோ?
திசையறியாது திகைக்கும் படகாய் தத்தளிக்கும் நிலைதான் ஏனோ!
விதியோ? விதியின் சதியோ? காலத்தின் கணக்கை அறிந்தவர் யாரோ?
உன்னில் சிறையாகிறேன் – 24
விஷ்வாவின் கார் சாலையின் இடதுபுறம் மிக நேர்த்தியாகச் சென்று கொண்டிருந்தது, உள்ளே, ஏசி காற்றில் ராகவன் மெல்லக் கண் அயர்ந்திருக்க,
அகிலன் தன் தந்தை கார் ஓட்டுவதையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்,
”ஏங்க, ஜனனிக்கு இந்த மாசம் வளையகாப்பு வைக்கணும்னு சொன்னேனே, ஞாபகம் இருக்கா” என்று தாமரை ராகவனைத் தட்டி எழுப்ப,
”அது எப்படி மறக்கும், நம்ம ஜோசியர்கிட்ட நல்ல நாளா பார்த்து குறிச்சு இந்த மாசத்துலயே வளைகாப்பை சிறப்பா செஞ்சு முடிச்சிடலாம்,” என்று ராகவன் புன்னகையுடன் சொன்னார்,
ஜனனி தன் வயிற்றைத் தடவியபடி, உள்ளே வளரும் அந்த உயிருக்கு இந்த உலகத்தைக் காட்டப் போகும் ஆவலில் இருந்தாள்,
“இந்த மாசமே வளைகாப்பு செய்யனுமா, இன்னும் ஒரு மாசம் கழிச்சு ஒன்பதாவது மாசத்துல வளைகாப்பு பங்ஷனை வச்சுக்கலாமே” என்றான் விஷ்வா,
“ஏன்டா இந்த மாசத்துல வளைகாப்பு வச்சா என்ன, ஏன் இப்ப தான் கார் வாங்கி இருக்கோம் அதுக்குள்ள இன்னொரு செலவான்னு யோசிக்கிறியா விஷ்வா,
ஜனனியோட வளைகாப்புக்குன்னு தனியா பணம் எடுத்து வச்சிருக்கேன், அதனால எதைபத்தியும் கவலைப்படாதப்பா” என்று தாமரை சொல்ல,
“அதுக்கில்ல அம்மா, இப்பவே வளைகாப்பு பண்ணா ஜனனி அவ அம்மா வீட்டுக்கு போயிடுவா, டெலிவரிக்கு இன்னும் மூனுமாசம் இருக்கில்ல, இப்போ இருந்தே அவ அங்க போய் என்ன பண்ணப் போறா அதான் சொன்னேன்” என்றான் விஷ்வா,
“அவனுக்கு அவன் பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதாம் அதை தான் சுத்தி வளைச்சு சொல்றான், அதுகூட புரியலையா தாமரை” என்றார் ராகவன்,
“நான் மட்டும் என் மருமகளை பிரிஞ்சு இருந்திருவேனா, எனக்கும் தான் இவ இல்லாம இருக்க முடியாது, அதுக்காக வயித்துப் பிள்ளைக்காரிய பொறந்த வீட்டுக்கு அனுப்பாம நாமளே வச்சுக்க முடியுமா,
அவளுக்கும் அம்மா அப்பா தம்பின்னு எல்லார் கூடயும் இருக்கனும்னு ஆசை இருக்காதா, அவ ஆசைப்படி போய் மூனு மாசம் சந்தோஷமா இருந்துட்டு வரட்டும் விடு,
உனக்கு எப்போ பாக்கனும்னு தோணுனாலும் போய் பார்த்துட்டு வா, இல்லையா அவ கூட இருந்துட்டு வா, அதுக்காக வளைகாப்பை தள்ளிப் போடத விஷ்வா” என்றாள் தாமரை,
“சரிம்மா நீங்க சொன்ன மாதிரியே இந்த மாசத்துலயே வளைகாப்பு பங்ஷனை வச்சுக்கலாம்” என்று விஷ்வா சுரத்தே இல்லாமல் சொல்ல,
“ஏன் அத்தை வளைகாப்பு பண்ண கட்டாயம் அம்மா வீட்டுக்கு போய் தான் ஆகனுமா, ஏன் நம்ம வீட்ல இருக்க கூடாதா” என்று ஜனனி கேட்க,
“அப்படின்னு எதுவும் இல்ல, இருந்தாலும் உன் அம்மா அப்பாவுக்கு மாசமா இருக்கிற மகளை கொஞ்ச நாள் கூட வச்சு பாத்துக்கனும்னு ஆசை இருக்கும் இல்ல அதான்” என்றாள் தாமரை,
“எனக்கு உங்க எல்லாரையும் விட்டு அம்மா வீட்டுக்கு போறதுல இஷ்டம் இல்லத்தே, எப்படியும் டெலிவரிக்கு அப்புறம் கொஞ்ச நாள் அம்மா வீட்ல தான இருக்கப் போறேன்,
அதனால டெலிவரி வரைக்கும் நம்ம வீட்லயே இருக்கேனே அத்தை,
அம்மாகிட்ட கூட நான் பேசிக்கறேன், வளைகாப்பு முடிஞ்சு இரண்டு நாள் மட்டும் இருந்துட்டு வந்திரட்டுமா அத்தை” என்று கெஞ்சலாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் ஜனனி,
“நல்ல பொண்ணும்மா நீ, அவ அவ விட்டா போதுன்னு பொறந்த வீட்டுக்கு ஓடுனா, நீ என்னடான்னா பொறந்த வீட்டுக்கு போறதுக்கே மாட்டேன்னு அடம்பிடிக்கிற,
சரி சரி உன்னை அனுப்பிட்டு நாங்களும் உன்னை பத்தியே தான் நினைச்சுட்டு இருக்கனும், நானே உன் அம்மாகிட்ட பேசிக்கறேன், நீ நம்ம வீட்லயே இரும்மா” என்றாள் தாமரை,
“என் அத்தைன்னா அத்தை தான்” என்று தாமரை மீது சாய்ந்து கொண்டாள் ஜனனி, விஷ்வா கண்ணாடி வழியாக தன் மனைவியைப் பார்த்து பூரித்தான்,
அந்நேரம் எதிரே மிகத் தொலைவில் ஒரு வாகனம் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது, முதலில் அது சாதாரணமாகத் தெரிந்தாலும்,
சில நொடிகளிலேயே அதன் வேகம் கட்டுப்பாட்டை மீறியிருப்பது தெரிந்தது, தறிகெட்டு ஓடும் அந்த வாகனம், திடீரெனத் தன் தடம் மாறி, விஷ்வாவின் காருக்கு நேர் எதிராகச் சீறிப் வந்தது,
”விஷ்வா… பார்த்து” என்று ராகவன் அலறினார்,
விஷ்வா பதற்றத்துடன் ஸ்டியரிங்கைத் திருப்ப முயன்றான், பிரேக் போட்டு வண்டியை நிறுத்த அவன் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை,
எல்லாம் ஒரு சில வினாடிகளில் நடந்து முடிந்திருந்தது, தடார் என்ற பயங்கரமான சத்தத்துடன், எதிரே வந்த வாகனம் இவர்களின் காரின் மீது நேருக்கு நேராக மோதியது,
இரும்பு ஒன்றோடு ஒன்று மோதும் அந்த கோரச் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது,
கார் நிலைகுலைந்து சுழன்று, சாலையோரம் இருந்த ஒரு பெரும் மரத்தில் மோதி நின்றது,
விஷ்வாவின் முகம் ஸ்டியரிங்கில் மோதி ரத்த வெள்ளத்தில் நனைய, பின்னால் இருந்தவர்களின் அலறல் சத்தம் கூட அந்த இடிபாடுகளுக்குள் அமுங்கிப் போனது,
சில நிமிடங்களுக்கு முன்னால் குலதெய்வக் கோவிலில் சந்தனம் மணக்க, சிரிப்பும் கலகலப்புமாய் இருந்த அந்த அழகிய குடும்பம், இப்போது ரத்தமும் மரண ஓலமுமாய் அந்தச் சிதைந்த காருக்குள் உறைந்து போனது,
ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடந்த விஷ்வாவின் கையில் இருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாகக் கீழே விழுந்தது, அவனது கண்கள் மட்டும் மூடுவதற்கு முன்னால் ஒருமுறை தன் குடும்பத்தைத் தேடியலைந்தது,
தாமரையின் திருமாங்கல்யம் ரத்தத்தில் நனைந்திருக்க, சந்துருவின் மடியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு யாழினியன் மூச்சுக்காற்று அற்றுப் போயிருந்தான்,
அந்தச் சாலையோரம் ஒரு சிறிய வெள்ளை நிறக் கார், நொறுங்கிப் போய் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவுகளையும் பிணவறையாக மாற்றிக் காட்சியளித்தது, அந்த அழகிய பயணமே அவர்களின் இறுதிப் பயணமாக முடிந்தது,
அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த வாகனம் தலைகீழாகக் கிடந்தது,
அதோடு நில்லாமல் விஷ்வாவின் காருக்கு பின்னால் வந்த இன்னொரு காரும் ஆக்ஸிடெண்ட் ஆகிக் கிடந்தது, அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் ஒரு ஆணும் இருந்தனர்,
இருவரில் அந்த ஆண் அதே இடத்திலேயே உயிர் துறந்திருந்தார், அந்த கர்ப்பிணிப் பெண் மட்டும் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடந்தாள்,
விபத்தான மூன்று வண்டிகளுமே பெருத்த சேதாரத்தோடு நொறுங்கிக் கிடந்தது, அவ்விடமெங்கும் ரத்தக்காடாக மாறிப் போயிருந்தது,
மகிழ்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அருவிக்கு, காலம் இப்படியொரு மரண அடியைக் கொடுக்கக் காத்திருக்கும் என்று தெரியாது,
தமிழினியின் வீட்டிற்குச் சென்று தன்னுடைய மகிழ்ச்சி பகிர்ந்து விட்டு, மீண்டும் அதே சாலையில் தன் பைக்கில் வந்து கொண்டிருந்தாள் அருவி,
தூரத்தில் மக்கள் கூட்டம் கூடியிருப்பதையும், ஆம்புலன்ஸ் சத்தம் காதைப் பிளப்பதையும் கேட்டபோது, அவளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத நடுக்கம் பரவியது,
ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்று நினைத்தவளின் இதயம், சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளைப் பார்த்ததும் தானாக துடிக்கத் தொடங்கியது,
கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே சென்ற அருவி, அங்கே கண்ட காட்சியால் அப்படியே சிலையாக உறைந்து போனாள்,
யாரோ ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது போலும் என்று நினைத்து வந்தவளுக்கு, தன் ஒட்டுமொத்த குடும்பமே உருக்குலைந்து கிடக்கிறது என்பதை அறிந்ததும், மீள முடியா துயரக் கடலில் தத்தளித்து தவித்தாள்,
”அண்ணா… அண்ணா…” என்று
அவள் தொண்டை அடைக்கக் கத்திய அந்த அலறல் காற்றில் கரைந்தது,
விஷ்வாவின் சடலம் ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்க, அவன் கையில் கட்டியிருந்த அந்த வாட்ச் இன்னும் ஓடிக்கொண்டிருந்தது,
”அப்பா… அம்மா… சந்துரு அண்ணா…” என்று பைத்தியம் பிடித்தவள் போல ஓடினாள்,
ஜனனியின் முகம் சிதைந்து கிடக்க, அந்தச் சின்னஞ்சிறு யாழினியன் தூங்குவது போலவே உயிரற்றுப் போயிருந்தான்,
”அம்மா… அண்ணி… அண்ணா… எல்லாரும் போயிட்டீங்களா, என்னை மட்டும் ஏன் இங்க தனியா விட்டுட்டுப் போனீங்க” என்று
உயிரற்று ரத்தமும் சதையுமாகக் கிடந்த தன் குடும்பத்தைக் கட்டிப்பிடித்துக் கதறிய அருவியின் அழுகுரல், அங்கிருந்தவர்களின் கல் நெஞ்சங்களையும் கரைய வைத்தது,
தன் கண்முன்னே தன் சொர்க்கமே எரிந்து சாம்பலாகிக் கிடக்க, திக்கற்று நின்றாள் மகிழருவி,
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள் யார் கண் பட்டதோ, ஓர் அழகிய நந்தவனம் இங்கே அழிந்து போனது,
இந்த கோர நிகழ்வு கனவாய் இருந்தால் கூட முழுதாய் ஒரு இரவாகும்,
ஆனால் ஒரு நொடிப் பொழுதில் மொத்தமும் சிதைந்து போனது, அன்பும் பாசமும் அக்கறையும் அலாதிப் பிரியமும் கொண்ட குடும்பம் ஒருசில விநாடிகளில் மொத்தமா இல்லாமலேயே போய் விட்டது,
சில நிமிடங்களுக்கு முன்னால், “பார்த்துப் போம்மா” என்று சொன்ன அப்பாவின் குரலோ,
“நேரத்தோட வந்துடு” என்று அதட்டிய அம்மாவின் குரலோ இனி அவளுக்குக் கேட்கப் போவதில்லை,
பித்துப் பிடித்தவள் போல ஒவ்வொரு பிணத்தின் முன்னும் மண்டியிட்டு அமர்ந்து கதறினாள்,
அப்போதுதான், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கத் தொடங்கினர்,
ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இன்னொரு காரின் கதவை உடைத்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணை வெளியே எடுத்தனர்,
”தம்பி… இந்தம்மாவுக்கு மூச்சு இருக்கு, சீக்கிரம் ஸ்ட்ரெச்சரை எடுங்க” என்று ஒரு ஊழியர் கத்த, அந்தச் சத்தம் அருவியின் மரத்துப் போன உணர்வுகளைத் தட்டியது,
அருவி மெல்லத் தலை நிமிர்ந்தாள், தன் கண்முன்னே தன் மொத்த உறவுகளும் சலனமற்றுக்கிடக்க, அந்த முகம் தெரியாத பெண் மட்டும் இன்னும் மரணத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்,
அந்தப் பெண்ணின் வயிற்றின் அசைவு, உள்ளே இருக்கும் இன்னும் ஒரு உயிர் பிழைக்கத் துடிப்பதை அருவிக்கு உணர்த்தியது,
”டாக்டர் இவங்களைக் காப்பாத்திருவீங்கல்ல” என்று அருவி தடுமாற்றத்துடன் ஆம்புலன்ஸ் அருகே ஓடினாள்,
”முயற்சி பண்றோம்மா, ஆனா நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, கூட யாராவது வர்றீங்களா” என்று ஊழியர் கேட்க,
அருவி ஒரு நிமிடம் தன் குடும்பத்தின் சடலங்களைப் பார்த்தாள், அவர்கள் அவளை விட்டுப் பிரிந்து வெகுதூரம் போய்விட்டார்கள்,
ஆனால் இந்தப் பெண்?
தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அந்த ஆம்புலன்ஸில் ஏறினாள் அருவி,
”நான் வர்றேன் அவங்களை எப்படியாவது காப்பாத்துங்க” என்று அவள் சொன்னபோது,
அந்தத் திக்கற்ற நிலையிலும் அவளுக்குள் ஏதோ ஒரு மனிதாபிமான வேர் துளிர்விட்டது,
ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்துடன் சீறிப் பாய,
விபத்து நடந்த அந்த இடத்தில் அருவியின் மகிழ்ச்சியான கடந்த காலம் ரத்தக் கறைகளாக உறைந்து கிடந்தது, முகம் தெரியாத அந்தப் பெண்ணும்,
அவளது கருவில் இருக்கும் உயிரும் மட்டுமே இப்போது அருவியின் முன்னால் இருந்த ஒரே நம்பிக்கை,
அவள் இழந்த உயிர்களுக்குப் பதிலாக,
அந்தப் பெண் உயிர் பிழைப்பாளா? காலத்தின் கணக்குத்தான் எவ்வளவு விசித்திரமானது…!
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
