அத்தியாயம் 19

மன்னன் தந்த மாலை

 

அத்தியாயம் 19

 

அந்த இடமே போர்க்களமாய் காட்சியளித்தது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கைலாசத்திற்கும் கூட இது அதிர்ச்சி தான். அவனுமே தங்கை இப்படியொரு முடிவு எடுப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அங்கே இருந்த அனைவரும் கோபமாய் இருக்க அவர்களின் கோபம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காதது போல நிமிர்வாய் நின்றிருந்தாள்.

“வசுந்தரா, ஊருக்கு முன்னாடி எங்களோட மானத்தை வாங்கிட்டல்ல… இனி நீ எங்க பொண்ணே இல்லை! இந்த நிமிஷத்தோட நாங்க உன்னைத் தலைமுழுகுறோம்.” என்றார் ஆத்திரமாக ராஜவேலு.

அவரின் வார்த்தையை அலட்சியப்படுத்தியவள் அவரை நேருக்கு நேராகப் பார்த்து, “உங்ககிட்ட நான் சொன்னேன் இல்ல… எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு… ஆனா நீங்க அதைக் கேட்காம உங்க விருப்பம்போல ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணா அதுக்கு நான் சம்மதிப்பேன்னு எப்படி நெனச்சீங்க? இது என்னோட வாழ்க்கை, உங்க விருப்பத்துக்கு விட்டுட்டு காலம் பூராவும் என்னால கஷ்டப்பட முடியாது. வெறும் காசு பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதைத் தாண்டி மனசுன்னு ஒன்னு இருக்கு. எனக்கு இவரைத்தான் புடிச்சருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சே தானே இந்த வேலை பார்த்தீங்க?

உங்களோட வீணான வறட்டு கௌரவத்துக்கு என் வாழ்க்கையை நான் பலி குடுக்க முடியாது. அதுக்கு தான் நான் போலீஸுக்குப் போக வேண்டியதா போயிடுச்சு…” என்றாள் எந்த வருத்தமும் இல்லாத குரலில்.

அவளை வீட்டுச் சிறையில் வைத்த அடுத்த நாளே தங்களின் தகுதிக்குத் தகுந்த மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய அதை எதுவும் தடுக்காமல் அமைதியாக இருந்தவளை அடங்கிவிட்டாள் என்று அவர்கள் சுலபமாக எடுத்துக் கொண்டது எத்தனை பெரிய தவறென்று இப்போது அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டாள் பெண்ணவள்.

ஏன் கைலாசம் கூட அவள் அமைதியாக இருப்பதைக் கண்டு அவள் வேறு வழி இல்லாமல் இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டாள் என்று தான் எண்ணினான். ஆனால் அவனின் எண்ணம் அவளிடம் பொய்த்து தான் போனது.

சிவகாமியோ இத்தனை துணிச்சலாக இருக்கும் தன் நாத்தனாரை பிரமிப்பாய் தான் பார்த்தாள்.

ஒரு பெண்ணை இத்தனை துணிச்சல் உள்ளவளாய் பார்த்தது இப்போது தான். எத்தனை வசதி இருந்தாலும் கூடத் தன் வாழ்வுக்காகக் குடும்பத்தையே எதிர்த்து நின்றவளை அங்கிருந்த மக்கள் சிலருக்குப் பிடிக்காமல் தான் போனது.

ஆனால் அங்கிருந்த வயதுப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அவளை மிகவும் பிடித்துத் தான் போனது. இன்னமும் சாதியில் ஊறிப் போனவர்களுக்கு அவளைப் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். எங்கே இவளைப் பார்த்துத் தங்கள் வீட்டு மக்களும் கெட்டுப் போவார்களோ என்று அவர்கள் பயந்தார்கள்.

ஆனால் பெண்ணவளோ மற்றவர்களைப் பற்றிப் பெரிதாக எண்ணவில்லை. அவள் இப்போது தன் வாழ்க்கையை தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களை அவள் நினைக்கவில்லை.

“சார், இப்போ நீங்க என்னதான் சொல்றீங்க?” என்ற அந்தப் போலீஸ் அதிகாரியின் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல் மகளை முறைத்தபடி நின்றிருந்தார் ராஜவேலு. அவர் மட்டும் அல்ல கற்பகநாயகி, மாணிக்கம், பரிமளம் என அனைவரும் அவளைக் கோபத்துடன் பார்த்தனர்.

ஆனால் இதில் விதி விலக்காய் கைலாசமும் சிவகாமியும் மட்டும் அவளைப் பாவமாகப் பார்த்தனர்.

இதில் அங்கே இருந்த அமுதாவை கோபத்துடன் பார்த்தான் மாணிக்கம். அவனின் பார்வை வீச்சை தாங்காமல் தலைகுனிந்தவளுக்கு முதலில் அங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லைதான்.

அவளுக்கு வித்யாதரன் மேல் அதிகமாகப் பாசம் உண்டு. அவளுக்கென்று இருக்கும் ஒரே அண்ணன் அவன். ஆனால் அவனின் மனதிலும், காதல் இருப்பதை இப்பொழுது தான் உணர்ந்துக்கொண்டாள் பெண்ணவள்.

அதுவும் பணக்காரர்களைக் கண்டால் பிடிக்காதவனுக்கு அதே இனத்தில் ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்பது தான் ஆச்சரியமான விடயம் ஆனது.

முன்பே அவளுக்கு வசுந்தராவைப் பிடிக்கும் தான் என்றாலும் கூட அவளின் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் அவளுக்கு வியப்பாகத் தான் தெரியும். அந்த வியப்பு பிடித்தாலும் கூட ஏனோ மனதோரம் ஒரு நெருடல் அதிலும் மாணிக்கத்தை காதலிக்க ஆரம்பித்தபின்பு அடிக்கடி ஒரு பயம் தான் வரும். எங்கே தனது காதல் வசுந்தராவிற்கு தெரிந்தால் அவள் தன்னை தவறாக நினைப்பாளோ என்று அடிக்கடி பயத்தில் ஆழ்ந்தாள் பெண்ணவள்.

ஆனால் அவளும் இவர்களின் காதலைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இனி என்ன நடக்குமோ என்ற பதைப்பில் அவள் நின்றிருக்க, வசுந்தராவோ தன் குடும்பத்தை இனி என்ன தான் செய்வீர்கள் என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வசுந்தராவோ மாணிக்கத்தை முறைத்தபடி நின்றாள். இத்தனைக்கும் காரணம் அப்பா அவன் அல்லவோ!

வசுந்தராவும் வித்யாதரனும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டுத் தன் குடும்பத்திடம் சொன்னவன் அவன் தானே! அது மட்டும் அல்லாமல் அவளின் காதலையும் பிரிக்க நினைத்தவன் தானே என்ற கோபம் அவள் மனதில் கனன்று கொண்டிருந்தது.

அவன் என்னவோ ஒழுங்குபோல அவளைக் குடும்பத்தாரிடம் மாட்டி விட்டானே என்ற ஆதங்கம். ஆனால் இன்னமும் அவளுக்கு விளங்காதது அவன் உண்மையான முகம் தான் என்ன என்ற கேள்வி தான் அவளிடம் தொக்கி நின்றது.

அவன் அமுதாவை காதலிப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இப்பொழுது ஜாதியின் கீழ் அவனின் நிற்பது தான் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆனால் அவள் அறியாதது அவளின் உடன் பிறந்தவன் அத்தனை நல்லவன் அல்ல என்பது. அதை அறியும் நாளும் தூரத்தில் இல்லை.

ராஜவேலுவிற்கு தன் மகளின் இந்தப் புத்திசாலித்தனம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இத்தனை நாளாக மகளின் புத்திசாலித்தனத்தில் கர்வமாக இருந்தவருக்கு இன்று அது பெரும் அடியாய் மாறியது.

இதோ இன்று ஊர் பார்க்க அவளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சரியாகத் தாலி கட்டும் நேரத்தில் அவர்களும் வந்துவிட பெண்ணவளுக்கு பாதுகாப்பாக அமைந்தது.

இல்லையேல் அங்கே இருப்பவர்களின் கொலை வெறிக்கு அவள் ஆளாக நேர்ந்திருக்கும்.

“சார், இப்ப நீங்கக் கோவப்படுறதுல அர்த்தமே இல்லை. அவங்க மேஜர், அவங்களோட வாழ்க்கையை அவங்களுக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கு. அதைத் தடுக்கிற உரிமை உங்களுக்குக் கொஞ்சமும் இல்லை. அதுக்கு சட்டமும் சும்மா இடம் தராது. அதனால அவங்க அவங்களுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழட்டும் அவங்களை விட்ருங்க…” என்றார் அந்தக் காவல் அதிகாரி அழுத்தமாக.

அதைக் கேட்ட பின்பும் ராஜவேலுக்கு அங்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த நொடியே தன் மகளைக் கொன்றுவிடும் ஆத்திரத்தில் நின்றிருந்தார்.

“அடிப்பாவி! இத்தனை வருஷமா உன்னைத் தங்கமா தாங்குன மனுஷனை இன்னைக்கு இத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டியே… நீ நல்லா இருப்பியா… நிச்சயம் நீ நல்லா இருக்க மாட்டடி… பெத்த வயிறு எரிஞ்சு சாபம் விடுறேன் நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவே…” என்ற கற்பகநாயகியின் சாபத்தைக் கேட்ட பின்பும் கூடப் பெண்ணவளும் கம்பீரமாய் தான் நின்றாள்.

இவர்கள் சரிவரப் பதில் சொல்லாததால் அந்தக் காவல் அதிகாரி வித்யாதரனிடம் திரும்பி,

“ஏன்பா தம்பி, உனக்கு இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் தானே?” என்றார் கேள்வியாய்.

அவனே உடனே வசுந்தராவை பார்த்து, “எனக்கு முழு சம்மதம் சார்…” என்றான் மெல்லமாக.

“அப்புறம் என்ன சார், ரெண்டு பேருமே விரும்புறாங்க இதுக்கு மேல எதுக்காக அவங்களைப் பிரிக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க? உங்க ஜாதியை உங்களோட வச்சுக்கோங்க இனி அவங்ககிட்ட உங்க ஜாதி வெறியை தீர்த்துக்காதீங்க. அவங்க வாழ்க்கையை அவங்களுக்குப் பாத்துக்க தெரியும். இனி நீங்க அவங்க வாழ்க்கையில தலையிடக் கூடாது. அப்படி ஏதாவது எங்களுக்குத் தெரியாம நீங்கச் செஞ்சீங்கன்னா… அது எங்களுக்குத் தெரிய வந்ததுன்னா கண்டிப்பா அன்னைக்கு உங்க மேல ஆக்ஷன் எடுப்போம்.” என்று ராஜவேலுவை மிரட்டிய அந்தக் காவல் அதிகாரி மீண்டும் வித்யாதாரனிடம் திரும்பி,

“இந்தாப்பா தம்பி, இந்தப் பொண்ணு கழுத்துல இப்பவே தாலி கட்டுறியா நீ?” என்றார்‌ அவனைப் பார்த்து.

அவனும் சிரித்தபடி தலையாட்ட அதற்கு மேல் அங்கே யாரிடமும் எதுவும் கேட்காமல் அவரின் தலைமையிலேயே வசுந்தரா வித்யாதரன் திருமணம் இனிதாக முடிந்தது.

ராஜவேலுவின் குடும்பம் அசிங்கப்பட்டு அந்த இடத்திலிருந்து வெளியேறியது.

“இனி என் வீட்டு வாசப்படியை நீ எப்பவும் மிதிச்சிராத அப்படி வந்த அதுதான் உன்னோட கடைசி நாளா இருக்கும்.” என்று மகளை மிரட்டியபடி அங்கிருந்து சென்றார் ராஜவேலு.

அவரின் பின்னே அவரின் குடும்பமும் சென்று விட்டது.

ஏன் போகும்போது கைலாசமும் சிவகாமியும் கூட அவளை மகிழ்வோடு தான் பார்த்துச் சென்றனர்.

அவள் விரும்பிய வாழ்க்கை அவளுக்குக் கிடைத்தது. அதுவே அவர்களுக்கு நிம்மதி அளித்தது.

பரிமளத்தின் குடும்பம் அப்படியே கிளம்பி விட இங்கே வீட்டிற்கு வந்த ராஜவேலுவோ ஆத்திரத்தில் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு உடைத்தார். யாரும் அவரைத் தடை செய்யவில்லை. ஏன் மாணிக்கத்திற்கு கூட அந்தக் கோபம் இன்னும் இருந்தது.

அதே நேரம் கைலாசமும் சிவகாமியும் வீட்டிற்கு உள்ளே வர அவர்களைக் கண்ட ராஜவேலுவோ,

“அங்கேயே நில்லுடா…” என்றார் கர்ஜனையாய்.

அவரின் குரலைக் கேட்ட தம்பதிகள் இருவரும் அப்படியே நின்று அவரைப் பார்த்தனர்.

“இப்போ உனக்குச் சந்தோஷமா இருக்குமே… உன் தங்கச்சி ஆசைப்பட்ட வாழ்க்கையை நிறைவேற்றி வச்சிட்ட… உன்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் இந்தக் கல்யாணம் என்னோட மானம் மரியாதை சம்பந்தப்பட்டதுன்னு… ஒன்னுமில்லாத ஒரு பிச்சைக்காரனுக்கு, என்ன அண்டிப் பிழைக்க வந்த ஒரு பிச்சைக்காரனுக்கு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கே… நீ வீட்டுக்கு மூத்த பையன் எல்லாம் பண்ணுவேன்னு நான் நெனச்சேன் ஆனா நீ என் கௌரவத்துக்கு எமனா வந்து சேருவேன்னு நான் நினைக்கல…” என்றார் கோபமாக.

“அப்பா, என்ன பேசுறீங்க… தெரிஞ்சுதான் பேசுறீங்களா? நான் எப்படி உங்களோட கௌரவத்தை எல்லார்கிட்டேயும் விட்டுக் குடுப்பேன்? நிச்சயமா இது எனக்குத் தெரியாதுப்பா… வசுந்தரா இப்படி செய்வான்னு நானே எதிர்பார்க்கல…” என்றார் தந்தையை நேராகப் பார்த்து.

“இல்ல கைலாசம், இதை நீதான் பண்ணி இருக்க… உன் தங்கச்சிக்கு இந்தத் துணிச்சல் வந்ததுக்கு காரணமே நீதான். உன்னால தான் இது நடந்தது. இனி நீ இந்த வீட்ல இருக்கவே வேண்டாம். ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியே போங்க… இனி இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்னோட பெரிய பையனும், என்னோட சின்ன மகளும் ரெண்டு பேருமே செத்துட்டாங்கன்னு நான் நெனச்சுக்கிறேன்.” என்றபடி வீட்டின் கதவை அடைத்துச் சாத்தினார் ராஜவேலு.

அதைக் கண்ட தம்பதிகள் இருவரும் அதிர்ச்சியில் சிலையாக அப்படியே நின்று விட்டனர்.

 

அடுத்த பாகத்துல பார்க்கலாம் செல்லம்ஸ்.

மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page