அத்தியாயம் – 5

‘பிள்ளையாரப்பா! இந்த ஃபங்ஷன் மட்டும் நல்லபடியா நடந்து முடிஞ்சா எங்களுக்கு அடுத்து நிறைய ஆர்டர்ஸ் கிடைக்கும்.

அத வச்சு பிஸ்னஸ இன்னும் நல்லா டெவலப் பண்ணிடுவேன். ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் என் கூடவே இருப்பா!’ என்று பிள்ளையாரிடம் அவசர வேண்டுதலை வைத்துவிட்டு தயாராகிக் கொண்டிருந்தாள் வேதிகா. 

“இசை! பூ லோடு எத்தனை மணிக்கு வருதுனு கேட்டுட்டியா? நம்ம பொட்டிக்கு போய், அங்க எல்லாம் ப்ராசஸ் பண்ணி, அப்பறம் தான் ஈவன்ட்டிற்கு எடுத்துட்டு போகனும். லேட் ஆகிட போகுது” என்று கூறியபடியே தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தோழியைக் கண்டு முறைத்தாள் இசை. 

“அம்மா தாயே! எல்லாமே பக்காவா அரேஞ்ச் பண்ணிருக்கேன். ஈவினிங் ஃபங்ஷன் நல்லபடியா நடக்கும். கவலைப்படாதே” என்று தோழிக்கு ஆறுதல் கூறினாள்.

“ஃபர்ஸ்ட் ஆர்டர் இசை. அந்த சார் நம்மள நம்பி கொடுத்திருக்காரு. எதுவும் சொதப்பிடக்கூடாது” என்றவள், அடுத்தடுத்து அருள்ராஜ் வீட்டில் நடக்கப் போகும் அதிதியின் பிறந்தநாள் விழாவிற்கான அலங்காரங்களை மேற்கொள்ள ஆயத்தமானாள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சரியாகப் பொழுது சாய்ந்து இருள் உலகை ஆளும் சமயம், அருள்ராஜின் அந்த பிரம்மாண்டமான தோப்பு வீடு, வண்ண வண்ண விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருந்தது. 

வழக்கமான விழா அலங்காரங்களில் இருந்து சற்றே தனித்துவமாக, அதே சமயம் திரும்பும் திசை யாவும் பாரம்பரிய மனம் வீசும் மலர்களால் நவீனமாக மெறுகேரியிருந்த அந்த வித்தியாசமான சோடிப்பு, வந்திருந்த விருந்தினர்களை வெகுவாய் கவர்ந்தது. 

“வித்தியாசமா இருக்கே! நம்ம ஊர்ல கிடைக்கிற பூவெல்லாம் வந்துச்சு இப்படி கூட டெக்கரேஷன் பண்ணலாமா?” என வந்திருந்த விருந்தினர்களில் சிலர் வெளிப்படையாகவே இந்தப் புதுமையை பாராட்டிய வண்ணம் இருந்தனர்.

இவற்றையெல்லாம் கேட்டபடி வேதிகா அந்த ஓரமாய் நின்று இருக்க, அவள் தோளில் கை வைத்த இசை, “எப்படியோ அடிச்சு புடிச்சு எல்லாத்தையும் செட் பண்ணியாச்சு பாத்தியா?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

“ஆமாடி. எனக்கு இது மூலமா நிறைய ஆர்டர்ஸ் வரும்ங்குறத விட, அந்த சார் நம்ம மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்திடனும்னு தான் நினைச்சேன். அதே மாதிரி நடந்திருச்சு” என்றாள் வேதிகா ஆசுவாசமாக. 

விழா தொடங்கி சில நிமிடங்களில் தயாராகி அருள்ராஜ், இளவரசி மற்றும் அதிதி மூவரும் வெளியே வந்தனர்.

வந்திருந்த விருந்தினர்களைக் குடும்பமாக சேர்ந்து அவர்கள் வரவேற்க, அதிரதனை மட்டும் அங்குக் காணவில்லை. 

“அருள்ராஜ்! ஏற்பாடெல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கே” 

“ஸ்பெஷலி இந்த டெக்கரேஷன் ரொம்ப அருமையா இருக்கு” 

“ஆமா உங்க மகன் எங்க?” என்ற பாராட்டும் கேள்வியும் தான் மாறி மாறி அருள்ராஜிடம் கேட்கப்பட்டது. 

“வேலையா போயிருக்கான். வந்துருவான்” என்றே சமாளித்து வந்தவர், ஒரு கட்டத்தில் முடியாமல்  “அரசி உன் பையன் எங்க தான் போய்த் தொலைஞ்சான்?” என்று மனைவியிடம் காய்ந்தார்.

“வருவான் இருங்க” என்றவருக்கும் தன் மகன் எங்கு சென்றான் என்று தெரியாதே. 

மறுபுறம் இங்கு ரஞ்சித்தின் வீட்டில், அவனைப் போட்டு ஒரு வழியாக்கி கொண்டிருந்தான் அதிரதன்.

“டேய் அங்க எல்லாரும் உங்க அப்பா எங்க அப்பா பிசினஸ் ஆட்களா இருப்பாங்கடா. உன் கூட சேர்ந்து என்னையும் எல்லாரும் வறுத்து எடுத்துருவாங்கன்னு தான், எங்க அப்பா அம்மாவை மட்டும் அனுப்பிட்டு ‘யாரும் இல்லா பொன் நேரமே’னு வீட்ல தனியா இருந்தேன்.

அது பொறுக்காம ஏண்டா இங்க வந்து நிக்கிற? எள்ளு தான் எண்ணைக்கு காயணும். எலிப் புழுக்க நான் ஏன்டா காயனும்? 

நான் வரல போடா” என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த தோழனிடம் “அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னால தனியா சமாளிக்க முடியாதுனு தான் உன்னை கூப்பிடுறேன். கிளம்பி வாடா” என்று அதிரதன் ரஞ்சனை மெத்தையிலிருந்து பிடித்து இழுத்தான். 

ரஞ்சனும் வரமாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டே இருக்க, ரதனும் அவனை விடாமல் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தான். 

அச்சமயம் அந்த வீட்டில் பணிபுரியும் பெண் வந்து “ஐயா உங்களைப் பார்க்க அந்த அப்சரா பொண்ணு வந்திருக்கு” என்று கூறி சென்றாள். 

“நினைச்சேன். என்னடா இன்னும் மோப்பம் புடிச்சு வராம இருக்காளேன்னு. இதோ வந்துட்டா பாரு” என்று தலையில் அடித்துக் கொண்ட ரதனிடம் “அவள ஏன் ஏதாவது ஒன்னு சொல்லித் திட்டிகிட்டே இருக்க? 

நம்ம காலேஜ் ரோமியோல இருந்து, எத்தனை ஹேண்ட்ஸமான பசங்க அப்சிய அப்ரோச் பண்ணிருக்காங்க? 

ஆனா அவ உன் பின்னாடி சுத்திட்டு இருக்கா” என்று அப்சராவிற்கான பரிவும், சிறிது கடுப்பும் கலந்தே நண்பனிடம் கேட்டு வைத்தான் ரஞ்சன்.

“அவளுக்கு தான் என்ன பத்தி தெரியாது. உனக்குமா புரியல? ஒருத்தர பாத்தா பிடிக்கிறதுக்கும் பிடிக்காம போறதுக்கும் காரணம் தேவையில்லை.

அப்சராவ என்னோட பிரெண்டா கூட வச்சு யோசிச்சு பாக்க முடியல. அப்புறம் எப்படி டா?” என்று கூறிய ரதனின் மனதில் மின்னல் வெட்டியதை போல் வேதிகாவின் உருவம் தானே மின்னி மறைந்தது.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயமே “டேய் ரஞ்சு! நீ இன்னும் ரெடி ஆகலையா? அதிதி பர்த்டேக்கு டைம் ஆச்சுல்ல” என்று வந்து அப்சரா நிற்க, அதிரதன் ரஞ்சனை தான் முறைத்து வைத்தான். 

‘எப்ப பாரு இதுங்க ரெண்டுக்கும் இடையில சிக்கிட்டு நான் தான் முழிக்கணுமா’ என்று பூந்துவாலையை தலையில் முக்காடிட்டுக் கொண்டு புலம்பும் நிலை ரஞ்சனுக்கு.

எப்படியோ ரஞ்சனையும், விருப்பமே இல்லாமல் அப்சராவையும் அழைத்துக் கொண்டு, தங்கள் தோப்பு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அதிரதன். 

அவன் தலையைக் கண்டதுமே, விழா முழுவதும் அடுத்து அதிரதன் தான் பேசு பொருளாகிப் போனான். 

பின்னே, படித்து முடித்து நான்கரை வருடங்கள் முடிந்தும், நிலையான தொழிலுக்கும் வராமல் தந்தைக்கும் உதவாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞனை கண்டால் பேச சொல்லியும் தர வேண்டுமா. 

ரதனும் ரஞ்சனை தன்னுடன் நிற்க வைத்துக்கொண்டு, அவர்களை சமாளித்துக் கொண்டிருந்தான். 

மகன் வந்து விட்டான் என்று தெரிந்ததும் “என்னங்க ரதன் வந்துட்டான். நேரம் ஆயிடுச்சு கேக் கட் பண்ணிடலாமா?” என்று வந்து கேட்டார் இளவரசி. 

விருந்தினர்களை வெகு நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று அருள்ராஜும் தன் செல்ல மகளை அழைத்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஏறினார். 

இதுதான் சாக்கு என்று தப்பித்து மேடை அருகில் வந்த ரதனிடம், “நீயும் மேல போகலாம்ல டா?” என்று கேட்க, “எதுக்கு இத்தனை நேரம் தனித்தனியா கேட்டது போதாதுனு, மொத்தமா இவங்களுக்கு நானே கண்டென்ட் கொடுக்கவா?” என்று ரதன் கூற, “அதுவும் சரிதான்” என்று விட்டான் ரஞ்சன்.

பார்ட்டி கவுனில் தேவதை போல் ஜொலித்த அதிதி, அவளுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இனிரொட்டியை வெட்டி, தன் தாய்க்கும் தந்தைக்கும் ஊட்டி விட்டாள். 

இத்தனை தூரம் வளர்ந்து நிற்கும் மகளுக்கு, இன்றும் சிறுபிள்ளை போல் பிறந்தநாளை கொண்டாடும் அந்தப் பெற்றோரையே பார்த்து நின்றிருந்தாள் வேதிகா.

அந்த பெரிய இனிரொட்டி துண்டு துண்டாக வெட்டப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட நகர்த்தி செல்லப்பட்டதும், வந்திருந்த விருந்தினர்களிடம் மேடையில் நின்றவாறு “நான் இன்வைட் பண்ணதுக்காக இன்னைக்கு இங்க வந்திருக்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. 

இந்த நேரத்துல நான் ரெண்டு முக்கியமான விஷயத்தை உங்க எல்லார்கிட்டயும் சொல்லனும்னு நினைக்கிறேன். 

முதல் விஷயம் என் பொண்ணு அதிதி, இந்த வருஷம் படிச்சு முடிச்சதும் என்னோட பிசினஸ் எல்லாத்தையும் எடுத்து நடத்துவாள்.

என் பையன் அதிரதன், அவனுக்கு பிடிச்ச இயற்கை விவசாயம் சார்ந்த தொழில தொடங்கப் போறான்” என்று கூறியதும் கீழே வட்டமேசையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள் கைகளைத் தட்டி தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அவர் கூறியது மற்றவர்களுக்கு அறிவிப்பு என்றால், அதிரதனுக்கு அதிர்ச்சி அல்லவா.

தனக்கு பிடித்த துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருப்பவனுக்கு, அதை தன் தந்தை அனுமதியின்றி துவங்கவும் விருப்பமில்லை என்று அருள்ராஜும் அறிந்தது தானே. 

இருந்தும் இத்தனை கோடிகளுக்கு வாரிசானவன், கடினப்பட்டு வங்கியில் கடன் வாங்கி தொழில் தொடங்குவது ஒரு சராசரி தந்தையாக அவருக்குப் பிடிக்கவில்லை.

அதைத்தான் பலவகையில் தன் மகனிடம் உணர்த்தி அவனை தன் தொழிலுக்குக் கொண்டுவர முனைந்தார்.

இன்று திடீரென, தந்தை தன் விருப்பத்திற்கு பச்சைக் கொடி காட்டியதும் அதிரதனுக்கு தலையும் புரியவில்லை வாளும் புரியவில்லை. 

தன் தந்தையின் பிடித்தம் குறித்தும், அவ்வளவு எளிதில் எதிலிருந்தும் இறங்கி வர மாட்டார் என்பதையும் அறிந்து வைத்திருந்த அதிரதனுக்கு, அவரின் மனமாற்றத்திற்கான காரணம் மட்டும் பிடிபடவில்லை. 

விருந்தினர்களின் கரவோசை சத்தம் குறைந்ததும், “அப்புறம் இன்னொரு விஷயம், இந்த ஃபங்ஷனுக்கு நல்ல டெக்கரேஷனா பண்ணனும்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். 

அப்பதான் புதுமையான யோசனையோட ஒருத்தர சந்திச்சேன். இந்த மொத்த ஃபங்ஷனோட டெக்கரேஷனையும் அவங்கள நம்பி ஒப்படைச்சேன்.

நினைச்சதை விடவே ரொம்ப அருமையா பண்ணி கொடுத்துட்டாங்க. வேதிகா மேல வாமா” என்று அங்கு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தார் அருள்ராஜ். 

வேதிகா தயங்கி நிற்க “போடி” என்று இசை கொடுத்த உந்துதலில், தயக்கத்தை மறைத்து மேடை ஏறினாள் வேதிகா.

முன்னரே அதிர்ச்சியில் நின்றிருந்த அதிரதனுக்கு, வேதிகாவை அங்கு கண்டதில் மேலும் இன்ப அதிர்ச்சி. 

தன் அருகில் நிற்கும் வேதிகாவை கைகாட்டி, “இன்னைக்கு இருக்க இளைஞர்கள் கிட்ட புதுமையான சிந்தனைகள் மட்டும் இல்ல, நம்ம பண்பாட்டையும் மண்ணையும் காப்பாத்தனுங்குற உத்வேகமும் நிறையவே இருக்குனு எனக்கு புரிய வச்சது இந்தப் பொண்ணு தான். 

என் பையன் விவசாயம் சார்ந்து தொழில் பண்றேன்னு சொன்னப்ப, ஒரு சராசரி தந்தையா மட்டும் யோசிச்சு அதை மறுத்தேன். ஆனா என்னோட எண்ணத்த, இந்த சின்னப் பொண்ணு மொத்தமா மாத்திட்டா. 

அதுக்கு ரொம்ப நன்றி மா. உனக்கு நல்ல திறமை இருக்கு. நிச்சயம் மென்மேலும் வளருவிங்க!” என்று அவர் வேதிகாவை மனதார வாழ்த்தினார். 

வந்ததிலிருந்து அலங்காரத்தை குறித்து புகழ்ந்து கொண்டிருந்தவர்கள், அதற்குப்பின் இருக்கும் வேதிகாவின் திறமையை பாராட்டி கைதட்ட, அனைவருக்கும் பொதுவாக நன்றி கூறிவிட்டு கீழ இறங்கிவிட்டாள் வேதிகா.

தன் மனதில் ஈர்ப்பென்னும் காதலின் முதல் படியை அடைந்த பெண்ணவள் தான், இன்று தன் கனவிற்கான முதல் கதவையும் திறந்து வைக்க காரணம் என்று அறிந்த அதிரதன், வேதிகாவையே இமைக்காமல் பார்த்தான்.

அதேசமயம் அப்சராவும் வேதிகாவை தான் பார்த்திருந்தாள். 

-தொடரும்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
தோள் சாயும் காரிகையே
571 7 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page