அத்தியாயம்- 1
“அண்ணே பத்து ரூபாய் பவுடர் டப்பா கொடுங்க” என்று கேட்டார் மாப்பிள்ளையின் அக்கா தாராவின் கணவர் கணேஷன்.
கடைக்காரரோ “என்னப்பா கணேஷா வீட்ட பக்கத்துல வச்சிட்டே பவுடர் டப்பா வாங்குற? பவுடர் அடிக்க மறந்துட்டியா என்ன?” என்று பளிச்சென்று இருந்த கணேஷின் முகத்தை பார்த்துக் கொண்டு கேட்டார்.
“எனக்கு இல்லண்ணே, பொண்டாட்டியோட தம்பி பார்த்திபனுக்கு பொண்ணு பார்க்க போறோம். அவருக்கு அடிக்க தான். வரும் போது பவுடர் அடிச்சிட்டு வர மறந்துட்டாரு. நாங்க வேற வீட்டையும் பூட்டிட்டோம். பூட்டின வீட்டை திரும்ப திறக்க வேணாமுன்னு கடையில வாங்க வந்தேன். பொண்ணு பார்க்க வேற நேரமாச்சி, அதான் கடையில் வாங்கிட்டு போலாமுனு கேட்டேன். நீங்க விக்கிறதுக்கு தானே பவுடர் வச்சி இருக்கீங்க?” என்று சற்று கடுப்பாக கேட்க,
“என்னப்பா கணேஷா பொசுக்கு பொசுக்குன்னு கோச்சிக்கிற. விக்கிறதுக்கு தானே பவுடர் டப்பா வெச்சிருக்கோம். ஒன்னு என்ன நீ பத்து கூட வாங்கிக்கோ. இந்தா புடி” என்று பவுடர் டப்பாவை கொடுத்தவர் பத்து ரூபாய் நோட்டை வாங்கி கல்லாப்பெட்டியில் போட்டுக் கொண்டார்.
கணேஷனும் பவுடர் டப்பாவை எடுத்துக் கொண்டு பார்த்திபன் அருகில் வந்தவர் “ஏன் மச்சான் வீட்ல இருந்து வரும் போது பவுடர் கூடவா அடிச்சிட்டு வர மாட்ட?” என சிடுசிடுத்தபடி அவன் கையில் அந்த பத்து ரூபாய் பவுடர் டப்பாவை திணித்தார்.
பார்த்திபனோ பெருமூச்சு ஒன்றை விட்டபடி அந்த வெள்ளை நிற மாவை முகத்தில் மிதமாக தடவிக் கொண்டே “மாமா எனக்கு தான் இந்த மேக்கப் பண்றது பிடிக்காதுனு தெரியும்ல. வீட்ல அம்மா அவ்வளவு கத்தியும் நான் கண்டுக்காம கிளம்பி அக்கா வீட்டுக்கு வந்தா இங்க அவ பிடிபிடினு பிடிச்சிட்டா. அதான் வேற வழியில்லாம வேண்டா வெறுப்பா இந்த கண்றாவி மாவை முகத்தில அடிக்கிறேன்” என்று பார்த்திபன் மிகுந்த கடுப்பில் கூற,
அப்பொழுது காருக்கு உள்ளே இருந்து கழுத்தை வெளியே நீட்டிய தாரா “என்னடா அங்க சத்தம்?” என கேட்க, அவ்வளவு தான் தாராவின் குரலுக்கு தம்பியும் சரி கணவனும் சரி வாயை பொற்றிக் கொண்டு காருக்குள் ஏற, அடுத்த வினாடி கார் பெண்ணின் வீட்டை நோக்கி விரைந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் பெண்ணின் வீட்டு வாசலில் வந்து நின்றது மாப்பிள்ளை வீட்டாரின் கார்.
முதலில் காரை விட்டு இறங்கியவர் மாப்பிள்ளையின் அம்மா லட்சுமி. அவரை தொடர்ந்து லட்சுமியின் மூத்த மகள் தாராவும், தாராவின் கணவர் கணேஷ்.
கடைசியாக மாப்பிள்ளை பார்த்திபன் இறங்க, அந்த கணம் அவ்வீட்டின் ஜன்னல் வழியாக இருவிழிகள் அவனை ஆராய்ச்சியாக நோக்கியது.
அது வேறு யாருடைய விழிகளும் அல்ல. பார்த்திபன் யாரை பெண் பார்க்க வந்து இருக்கிறானோ அவளுக்கு சொந்தமான விழிகள் தான்.
நயனங்களில் சட்டென்று குடிக் கொண்ட வெட்கம், அவளின் அகத்தில் ஒட்டிக் கொள்ள, நாணத்துடன் ஜன்னலை மூடிக் கொண்டு முகத்தை கரத்தால் மூடி சிறு சிணுங்கலுடன் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ஜோதிகா.
ஜோதிகாவின் அருகில் இருந்த அவள் தங்கை யாஷ்மிகா, “என்னக்கா மாமாவை பார்த்ததும் வெட்கம் வந்துடுச்சா?” என்று கிண்டல் செய்தாள்.
“ஏய் யாஷ் சும்மா இருடி” என்று தங்கையை செல்லமாக மிரட்டியவள் எப்பொழுது தன்னவனை நேருக்கு நேர் காண விடுவார்களோ என்று ஆவலாக அதே சமயம் பயத்துடனும் அமர்ந்து இருந்தாள்.
அவ்வீட்டின் மங்கையின் இரு விழிகளில் அத்தனை ஆனந்தம் குடிகொண்டிருக்க, மாப்பிள்ளை வீட்டார்கள் வந்திருந்தது அறிந்த பெண் வீட்டார்கள் அனைவரும் அதாவது பெண்ணின் தந்தை ராமு தாய் சித்ரா மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா, அத்தை என்று உறவினர்கள் அனைவரும் வெளியேச் சென்று மாப்பிள்ளை வீட்டார்களை இருக்கரம் கூப்பி முகம் கொள்ளா மகிழ்ச்சியுடனும் மிகுந்த மரியாதையுடனும் “உள்ள வாங்க… உள்ள வாங்க” என்று மகிழ்வுடன் அவர்களை வரவேற்றனர்.
வீட்டின் நடுமத்தியில் வந்து நின்றவர்களை இன்முகத்தோடு பார்த்து “உட்காருங்க உட்காருங்க” என்று அங்கே இருந்த சோபாவில் அமர சொன்னார்கள்.
வந்தவர்களும் புன்னகையுடன் அவர்களிடம் பேச ஆரம்பித்து விட, பார்த்திபனின் விழிகள் மட்டும் அவ்வீட்டை அளவெடுக்க ஆரம்பித்தது.
பெரிய வீடாக இல்லையென்றாலும் சற்று வசதியான இடம் தான் அது. பெரிய முன்னறை மற்றும் பூஜை அறை, சமையலறை இரு படுக்கையறைகள் என்று வசதியாக இருந்தது.
பார்த்திபன் அவ்வீட்டை அளவெடுக்க ஆரம்பித்தான் என்று சொல்வதை விட, யாரும் அறியா வண்ணம் புகைப்படத்தில் பார்த்து அவன் சரியென்று சொன்ன பேதையை தேடினான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.
அந்நேரம் வந்து இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்த சித்ராவை பார்த்த லட்சுமி “பொண்ணு என்ன சம்பந்தி படிச்சி இருக்கா?” என்று மகன் கேட்க சொன்ன முக்கியமான கேள்வியை கேட்டார்.
சித்ராவோ “டிகிரி முடிச்சு இருக்கா சம்பந்தி. ஆனால் என்ன படிப்புனு எனக்கு தான் வாயில நுழைய மாட்டிக்கிது. இதோ இப்போ உங்க மருமக வந்ததும் நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்று வெளிப்படையாக பேசியவரை பார்த்து லட்சுமிக்கு மனநிறைவானது.
“அப்போ எதுக்கு நேரத்தை கடத்தணும் பொண்ணை அழைச்சி வாங்க” என்று தாரா கூற, சித்ரா தன் கணவரை திரும்பி பார்க்க, அவர் கண்ணசைவில் சம்மதம் சொல்ல, சித்ரா தன் மூத்த மகளை அழைத்து வர மகள் அறையை நோக்கிச் சென்றார்.
பெண்ணை அழைத்து வர சொன்னதை கேட்டதுமே, பார்த்திபனுக்கு சிறு தடுமாற்றம் உள்ளுக்குள் ஏற்பட தொடங்கினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கெத்தாக அமர்ந்து இருந்தவனின் பார்வை வேறு திசையை நோக்கிச் சென்றது.
பெண் அறையை பார்த்துக் கொண்டு இருந்தால் ‘அதுக்குள்ள மாப்பிள்ளைக்கு பொண்ணை பார்க்க எவ்வளவு அவசரம் பாரு’ என்று கிண்டல் செய்தே அவனை ஒரு வழி பண்ணி விடுவார்கள் அல்லவா.
ஜோதிகாவின் கரத்தில் தேனீர் அடங்கிய தட்டை நீட்டியவர் அவளை அழைத்துச் செல்ல போக, யாஷ்மிகாவோ வெடுக்கென்று கதவிற்கு வெளியே தலையை நீட்டி எட்டி பார்த்தவள் நீட்டிய தலையை உள்ளே இழுத்துக் கொண்டு “அக்கா மாமா ரொம்ப நல்லா இருக்காரு” என்று கூற,
ஏற்கனவே வெட்கத்தில் சிவந்து இருந்த ஜோதிகாவின் முகம் மேலும் சிவப்பாக மாறியது.
“ஏய் யாஷ் அமைதியா இருடி” என்று தாய் அதட்டவும் சின்னவள் வாயை பொற்றிக் கொண்டாள்.
பின் ஜோதிகாவை வெளியே அழைத்து வந்து, அமர்ந்து இருந்தவர்களுக்கு தேனீர் கொடுக்க சொல்ல, அவளும் ஒவ்வொருவராக கொடுத்து முடித்து கடைசியாக பார்த்திபன் முன் தட்டை நீட்ட, அந்நேரம் “அவன் தான்ம்மா என் தம்பி. உன்னை பொண்ணு பார்க்க வந்து இருக்கிறவன், நல்லா பார்த்துக்கோ அப்புறம் மாப்பிள்ளை மாறி போச்சுனு சொல்ல கூடாது” என்று கிண்டல் செய்ய, மேலும் மேலும் அவள் முகம் சிவப்பாக மாறியது தான் மிச்சம்.
மாப்பிள்ளை அவர் தான் என்று அறிந்ததுமே ஜோதிகாவின் கரம் கீ கொடுத்த பொம்மை போல் சிறு ஆட்டம் காண, அதற்குள் புதிதாக முளைத்த வேர்வை துளிகள் வேறு அவளின் நாசி முனையில் வந்து விட, சற்று பதற்றமடைந்து தான் போனாள் பெண்ணவள்.
அவளின் பதற்றத்தை உணர்ந்தானோ இல்லை தன் பதற்றத்தை மறைக்க முயன்றானோ தெரியவில்லை அவசரமாக தட்டில் இருந்த தேனீர் டம்ளரை எடுத்துக் கொண்டு “தேங்க்ஸ்” என்றான்.
அவளோ அடுத்த கணம் தாயின் பின்னால் சென்று தன்னை மறைத்துக் கொண்டவள் மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்திபனை கண்டாள்.
அவனும் அந்நேரம் அவளை நோக்க, சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டவள் இதழ் மெல்லியதாக விரிந்தது.
அதே சமயம் அவனின் அதரமும் வளைந்து இருக்க, அந்தகணம் இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடித்து போனது என்னவோ உண்மை தான்.
அப்பொழுது தாராவின் கணவர் கணேஷோ “அப்புறம் பொண்ணுக்கு என்ன செய்யறதா உத்தேசம்?” என்று அடுத்த கட்ட பேச்சை ஆரம்பித்தார்.
உடனே லட்சுமி இடைபுகுந்து “தம்பி இருங்க நான் பேசிக்கிறேன்” என்றவர் ஜோதிகா பெற்றோரை பார்த்து, “உங்க பொண்ணுக்காக இதை செய்யுங்க அதை செய்யுங்க, இவ்வளவு நகை அவ்வளவு நகை போடுங்கனு நாங்க கேட்க மாட்டோம், ஆனால் நம்ம ஜனங்க முன்னாடி பண்ட பாத்திரங்கள் மட்டும் நிறைந்து இருக்கணும். யாரும் இப்போ எல்லாம் நகையோ பணத்தையோ பார்க்கிறதில்லை. எவ்வளவு சட்டு புட்டு சாமான்கள் குவிச்சி இருக்கானு தான் ஆராய்வாங்க. அதிலும் என் வீட்டு மக்கா கண்ணுல விளக்கெண்ணெயை ஊத்திக்கிட்டு என்ன குறை சொல்றதுனு அலைவாங்க” என்று அவர் ஒரே மூச்சாக கூறி விட,
இதற்கு என்ன பதில் கூறுவது என்று பெண்ணின் வீட்டார் சங்கடத்துடன் அவர்கள் கூறுவதை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
