வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 25
ஒருத்தங்க ஏன் கெட்டவங்களா இருக்காங்க? நல்லவங்களாக இருக்காங்க? அதுவும் நல்ல வசதியான குடும்பத்தில் பொறந்து, வளர்ந்து படிச்சு, நல்ல விஷயங்களைக் கத்துக்கற வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது ஏன்? பல இடங்களில் ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றம் புரிவார்கள் எனக் காட்டப்படுகிறது. ஆனால் குற்றத்திற்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லா வகையான சமூக அந்தஸ்த்தில் இருக்குறவங்களும் குற்றம் செய்யறாங்க. ஏன் இவங்க கெட்டவங்களாக இருக்காங்கன்னு ஆராய்ச்சி செய்யாமல் இருக்கறதே நல்லது.
-பத்மமுகி.
நெய்தல் நிழலின் உயர்குடி மக்கள் மட்டும் பிரத்தியேகமாக உணவு உண்ணும் அறை அது. அதன் உள்ளமைப்பே அரண்மனையைப் போன்று இருக்கும். சிம்மாசனம் போன்று உணவு உண்ணும் ஆசனங்களும் இருக்கும். அந்த அறையின் பெயர் “ராஜ போகம்.” என்பதாகும். அங்குதான் மாயாவும், அர்ஜூனும் உணவருந்திக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரே சிவகார்த்திக்கும், காமினியும் அமர்ந்திருந்தனர்.
காமினி மாயாவுக்கு ஒவ்வொரு உணவையும் பற்றிச் சுருக்கமாகக் கூறி, அவளுக்குப் பரிந்துரைகள் செய்து கொண்டிருக்க, அவர்களுக்கு அருகே கன்யா நின்றுகொண்டிருந்தாள். மாயாவிற்கு தேவையான அனைத்தையும் பார்க்க வேண்டும் என்பதால் அவள் எப்போதும் அவர்கள் அருகே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
நால்வரும் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தனர்.
“ஹோட்டல் ஸ்டே பிடிச்சிருக்கா மாயா?”
“யா… ஐ லவ் இட். இட்ஸ் லைக் எ பேலஸ்.”
நெய்தல் நிழலின் கட்டமைப்பு அரண்மனை போன்று உள்ளே மற்றும் வெளியே காணப்படும். மர வேலைப்பாடுகள், தங்க நிற வேலைப்பாடுகள் என அற்புதமாக இருக்கும்.
இப்போது கூட அவர்கள் வெள்ளித் தட்டுகளில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
“ஐம் லிவ்விங் எ ராயல் லைஃப்.”
“யூ ஆர் மை குயின் மாயா.” என அர்ஜூன் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.
கன்யாவுக்கு அவர்களைப் பார்த்ததும் மனதில் அந்த ஏக்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அவர்கள் அருகில் இருக்கும்போது இருவரும் ஒருவரின் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நமக்கு இப்படியொரு அன்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. பொய்த்துப் போன அவள் காதல் மனதில் பாரத்தை ஏற்றியது. எதிரில் நின்றிருந்தவளை சிவகார்த்திக் ஏறிட்டான்.
அப்போது கன்யாவும் அவனைப் பார்க்க, இருவரின் விழிகளும் சில நொடிகள் சந்தித்துக் கொண்டன. அவன் விழிகளைப் பார்க்கப் பார்க்க மனதில் ஏதோ ஒரு வினோத உணர்வு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“கார்த்திக், அந்த டிஷ் எடு.” எனக் காமினி அவன் கைகளைத் தொடவும் கன்யாவும் பார்வையைத் திருப்பிக் கொள்ள, கார்த்திக்கும் தன் சகோதரியை நோக்க, அவள் கைகாட்டிய பாத்திரத்தை எடுத்துத் தந்தான்.
கன்யா அதற்குப் பின் சிவகார்த்திக்கின் பக்கமே பார்க்கவில்லை. அவன் பார்வையைத் தவிர்த்தாள். நொடியில் அவன் பார்வை கடத்தி இருந்த செய்தி அவளை நிலை கொள்ள செய்திருந்தது.
“கன்யா, ஐ வான்ட் டூ டிரஸ் பிட்டிங். ஹெல்ப் மி அவுட்.”
“ஸுயர் மேம்.” எனக் கன்யா அவளுக்கு ஒப்புதல் கொடுத்தாள்.
நால்வரும் உணவு உண்டு முடித்திருக்க, உடன் பிறப்புகள் இருவரும் விடைபெற்றனர்.
தன் சகோதரனைத் தன்னுடைய அலுவலக அறைக்கு இழுத்துச் சென்றாள் காமினி. அவளுக்குத் தன் சகோகரனின் பார்வை புரிந்தே இருந்தது.
“டே! இன்னும் நீ மறக்கலையா?”
“மினியன், எதை மறக்கணும்?” கேள்வி புரியாதது போல் அசட்டையாகக் கேட்டான்.
“நான் எதைக் கேட்கிறேன்னு உனக்கும் தெரியும்டா, ஒழுங்கா பதில் சொல்லு.”
‘பெண் பார்வை. கழுகுப் பார்வைதான்.’ என நினைத்துக் கொண்டவன், “தலைக்கு மேல் வேலை கிடக்குது மினியன். யூஸ்லெஸ்ஸான விஷயங்களைப் பேச வேணாம்.” என்றான்.
அதற்குள் காமினியின் அலைபேசி அடிக்க ஆரம்பித்தது.
“உன்கிட்ட நைட் பேசிக்கிறேன்.” என்றவள் அறையிலிருந்து கைப்பேசியில் பேசியபடி வெளியேறினாள். செல்லும் தன் சகோதரியைப் பார்த்தவனின் நினைவெல்லாம் கல்லூரிக்குப் பறந்து சென்றது.
“சிவா சீனியர், நீங்க மட்டும் எப்படி எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் போடாமல் ஸ்லிம்மா ஃபிட்டா இருக்கீங்க? வொய் இந்தப் பசங்களுக்கு மட்டும் வெயிட் போட மாட்டேங்குது?”
பாவ் பாஜியை உண்டு கொண்டிருந்த அவனிடம் பெரிய கேள்வியை எழுப்பிக்கொண்டிருந்தாள். கன்யாவின் கன்னம் எல்லாம் அப்போது உப்பி கொஞ்சம் கொழுக்மொழுக் என்றுதான் இருப்பாள்.
“அதெல்லாம் தொழில் ரகசியம்டா அய்யாச்சாமி.” என்றபடி அவள் தோளில் கைப்போட்டாள் காமினி.
“சீனியர், நீங்களுமே அப்படித்தான் இருக்கீங்க. எப்படி?”
“கன்யா பேட்டி, அதெல்லாம் ஜெனிடிக்ஸ். நாங்க இரண்டு பேரும் சின்ன வயசிலிருந்து அப்படித்தான். ஒல்லி பெல்லிஸ். அப்புறம் வெயிட் கெயின் ஆகுதுன்னு கவலைப்பட்டேன்னா கார்பை விடப் புரோட்டின் அதிகம் சாப்பிடு. சரியாப் போயிடும்.” என இலவசமாக ஆலோசனை அள்ளி வழங்கியபடி தன் சகோதரனிடமிருந்து இன்னொரு பாவ் பாஜியை எடுத்து உண்டாள் காமினி.
அவர்கள் இருவரையும் பார்த்தபடி தன்னுடைய ஃபுரூட் சாலடை கன்யா உண்டாள். முதல் நாள் சந்திப்பிற்குப் பின் கன்யா அவர்களை அடிக்கடி சந்தித்தாள். அவர்களும் எதார்த்தமாகப் பழகினார்கள். இப்படியே மூவருக்குள்ளும் நல்ல தோழமை ஒன்று உருவாகி இருந்தது.
கார்த்திக்கை விடக் காமினி கலகலப்பான ஆள் என்பதால் கன்யாவுக்கு அவளிடம் அதிகம் ஒட்டுதல் உண்டு. மூவரும் தமிழ் என்பதால் இன்னுமே நன்றாகப் பேசிப் பழக முடிந்தது.
வாரத்திற்கு இருமுறை அல்லது ஒருமுறை முதலில் அவர்களைத் தேடி வர ஆரம்பித்திருந்தவள், பிறகு அடிக்கடி தேடி வர ஆரம்பிக்க மூவரும் அடிக்கடி வெளியில் செல்ல ஆரம்பித்தனர். சிவகார்த்திக்கும் கன்யாவுடன் நன்றாகப் பழகினான்.
இப்படி இருக்கும்போது அவர்களின் பிரிவுக்குச் சுழியிடும் நாளும் வந்தது. அந்த நாளை நினைத்தபடி தலையைக் குலுக்கியவன் அந்த நினைவுகளை விரட்ட முயன்றான்.
அவன் சகோதரி மணமக்களின் உறவினர்கள் சாப்பிடும் இடத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
தன்னுடைய கையடக்க கணினியில் அதற்குப் போடவிருக்கும் அலங்காரத்தைப் பார்த்தபடி அதைச் செய்பவருக்கு இப்படி வேண்டும் எனக் கூறிக் கொண்டிருந்தாள்.
“இப்படித்தான் எனக்கு டெக்ரேட் செய்யணும். சாப்பாடு பாத்திரம் வைக்கிறதைப் பத்தி ருத்ரா சார் சொல்லுவாரு.” என அவள் கூறி முடிக்க, பவுடர் நீல சட்டையும், தந்த நிற கால் சட்டையும் அணிந்தபடி ருத்ரா உள்ளே வந்துகொண்டிருந்தான்.
“இதோ சாரே வந்திட்டாரு.”
“ஹ்ம்ம்…” சிவகாமினி நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.
ஆனால் அவனிடமிருந்து வரும் நறுமணமும், காலணியின் சத்தமும் அவளுக்கு அவன் வருகையை உணர்த்தியது.
கையடக்க கணினியில் விழிகளை மீண்டும் வைத்தவள், “சார் இனி சொல்லுவாரு. அப்புறம் நாம பேசலாம்.” என அங்கிருந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள். தன்னை கண்டும் காணாமல் செல்பவளைப் பார்த்தபடி அலங்காரம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் ருத்ரன் பேச ஆரம்பித்தான்.
ருத்ரன் கூறிய பதில் காமினியின் மனதில் ரீங்காரம் போல் ஒலித்தது மீண்டும்.
“இப்படி ஒருத்தன் நடந்துகிட்டா அதுக்கு என்ன அர்த்தம் காமினி? அதுக்கு மேல் நீ குடுக்கற ரியாக்ஷனுக்கு என்ன அர்த்தம்னு நீ நினைக்கிற?” என அவளையே திருப்பிக் கேட்டிருந்தான்.
“தெளிவாகப் பதில் சொல்லு. என்னைத் திருப்பிக் கேள்வி கேட்காத.”
காமினிக்கு அவன் செய்கைக்கான அர்த்தம் தெரிய வேண்டி இருந்தது.
“நீயே கண்டுபிடி. அப்புறம் பேசலாம். எனக்கு வேலை இருக்கு.”
‘இவரு பெரிய சிம் எம். நாலு பாத்திரத்தை உருட்டறதுக்கு இவன் பண்ணற அலப்பறை இருக்கே…’ என மனதில் நினைத்தாலும் அவனிடம் அதைக் கூறமாட்டாள். ருத்ராவுக்கு இப்படி நக்கல் அடிப்பது எல்லாம் பிடிக்காது.
“நான் இங்க சும்மா சுத்தறேன். போடா.” என்றபடி அந்த இடத்தை விட்டு வெளிநடப்பு செய்தவளை ரசித்தபடி நின்ற ருத்ரன் அவள் வைத்து விட்ட பாத்திரங்களை எடுத்து வைத்தான்.
பிறகு மீண்டும் அவனை நேரில் சந்திக்கிறாள். அவனிடம் பேசப் பிடிக்காமல் அமர்ந்து கொண்டவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே தனக்கு தேவையான விஷயங்களைக் கூறியவன் அவரை விட்டுக் காமினியிடம் வந்தான்.
தன் முன் வந்து அவன் நின்றது தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பவளின் முன் நாற்காலியைப் போட்டு அமர்ந்தான்.
“மிஸ். சிவகாமி.” என அவன் அழைக்கவும், காமினி உடனே நிமிர்ந்து பார்த்தாள்.
“ருத்ரா, எத்தனை தடவை சொல்றது என்னை அந்தப் பேர் சொல்லிக் கூப்பிடாதன்னு.”
விழிகளில் கனலுடன் ஆள்காட்டி விரல் நீட்டித் தன் முன் பேசுபவளைப் புன்னகையுடன் ஏறிட்டவன், “எனக்கு அப்படித்தான் கூப்பிட பிடிச்சுருக்கு.” என்றான்.
“உன்னை என்ன செய்யறேன்னு பாருடா?” என அருகில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த வண்ணத்தாள் அடங்கிய உருளையை எடுத்தவள் அவன் பக்கம் வீச, அவள் கையைப் பிடித்து நாற்காலியிலிருந்து தன் மடி மீது அமர வைத்திருந்தான் ருத்ரன். வண்ணத்தாள் உருளையும் அவள் கைப்பிடியிலிருந்து அருகில் உள்ள மேசையில் வைத்து விட்டான்.
“என்ன ருத்ரா செய்யற?” எனச் சுற்றும் முற்றும் பார்க்க அந்தக் கூடத்தில் யாருமில்லை.
“யாருமில்லை சிவகாமி.” எனக் காதோரம் முணுமுணுத்தான் ருத்ரா.
தன் இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்திருந்தவனின் கரங்களைத் தாண்டிப் பாவையால் செல்ல முடியவில்லை. அவள் கழுத்தோரம் முகத்தைப் புதைத்தவன், “எதுக்கு சிவகாமி டென்சன் ஆகற? ரிலாக்ஸ்! உங்கிட்ட எனக்கு எவ்வளவு ரிலாக்ஸா இருக்கு.” என மெல்லிய குரலில் அவன் பேசக் காமினி அப்படியே உடல் அதிர நின்றாள்.
ரூட் பாய் ருத்ரன் இப்படி ரோமியோ வேலையெல்லாம் பார்த்தால் காமினிக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
அதிர்ச்சியை எல்லாம் உதறி இருந்தவள், “ருத்ரா, என்ன வேணும் உனக்கு? திடீர்னு ஏன் இப்படி நடந்துக்கிற? நீ என்னை ல…” அவள் கேள்வியைக் கேட்கும் முன் அவள் முகத்தைத் திருப்பி விரல்களால் அவள் வாயை மூடினான்.
“எதுக்கு காமினி அதுக்குள்ள லேபில் பண்ணற? நான் அந்தப் பதில் சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிறியா? அந்தப் பதில் சொன்னால் உன்னோட பதில் என்ன?” என்று அவளைத் திருப்பி மீண்டும் கேள்வி கேட்டிருந்தான்.
பெண்களுக்கு எது நடந்தாலும் தெளிவான பதில் வேண்டும். காமினியும் அதைத்தான் எதிர்பார்த்தாள்.
“டேய்! நான் ஒரு கேள்வி கேட்டால் அதுக்கு நீ பதில் சொல்றதை விட்டுக் கேள்வி கேக்கற. உன்னை நான் என்ன பண்ணறது?”
“யுவர் விஷ். நேத்து நைட் நடந்த மாதிரி கூட நடந்துக்கலாம். இன்னும் ஒரு ஸ்டெப் அட்வான்ஸா பண்ணாலும் எனக்கு ஓகே.”
“ராஸ்கல்! நான் உன் கூடச் சின்ன வயசிலிருந்தே இருக்கேன். எங்கிட்ட இப்படி நடந்துக்கிற? முதல்ல என்னை விடு. யாராவது பார்த்திடப் போறாங்க.”
“தெரியாத பொண்ணுகிட்ட நடந்துகிட்டா அதுக்கு வேற பேரு சிவகாமி. யாரும் பார்க்கலைன்னா ஓகேவா உனக்கு?” என அழுத்தமாகப் பதில் கூறினான்.
‘இவன் கரண்டியைத்தான் நல்லாப் பிடிப்பான்னு பார்த்தா, கட்டிப்பிடிக்கறதிலும், கடுப்பேத்தறதிலும் குறைச்சல் இல்லை.’ என அவள் மனது நொடிக்க, அவள் கழுத்தில் தன் இதழ்களை வைத்து முத்தமிட்டவனால் உடல் சிலிர்க்க நிமிர்ந்தாள்.
“ருத்ரா… நான் உன் சித்தப்பா பையனோட ஃபியான்ஸிடா.” என இதழ்கள் நடுங்க அந்த வார்த்தைகளைக் கூறிவிட்டாள்.
அதே நேரம், வெயிலில் மண்ணைத் தன்னுடைய கருவியைக் கொண்டு தோண்டிக் கொண்டிருந்தாள் பத்மமுகி.
உச்சி வெயிலுக்கு தலையில் தொப்பி அணிந்திருந்தாலும், வெயில் அதனைத் தாண்டி உடலைத் தொட்டது. நேரம் செல்லச் செல்லத் தலைசுற்றுவது போல் இருந்தது. மதிய உணவு இன்னும் உண்டிருக்கவில்லை அவள்.
அவள் தடுமாறுவதைப் பார்த்த அருகிலிருந்த அவளுடைய உதவியாளன், “மேம் இந்தாங்க தண்ணி… முதல்ல போய்ச் சாப்பிடுங்க” என்று தண்ணீரைக் கொடுக்க, அதை வாங்க நிமிர்ந்த முகி அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பித்தாள்.
*****
