“சொல்லாமல் தவிக்க விடும் இந்த காதல் என்னை கொடுமைகள் செய்ய காத்திருக்கிறது “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -17
இரவு முழுவதும் தூங்காமல் தவித்தாள். அன்று அவன் பேசியதால் வலியோடு சென்றவள். விஜயிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் நடந்த பிரச்சனையை இதற்கு காரணம் நிதிஷா, வருணுடன் சேர்ந்து அழகாய் திட்டமிட்டு காரியத்தை சாதித்து விட்டாள்.
யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவதா, தன்னிடம் கேட்டிருக்கலாமே, வருண் குணம் அனைவருக்கும் தெரியும், இப்பொழுது நிதிஷா வேறு கூட்டு சேர்ந்திருக்கிறாள் இருவரும் வெளியே சுற்றுவதும், அலுவலத்தில் ஆட்டம் போடுவதும் என செய்து கொண்டிருப்பது வர்மாவுக்கு தெரியாமல் இருக்காது, ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் என்னை எதற்காக காயப்படுத்த வேண்டும்.
விஜயிடம் பிரச்சனை பற்றி மட்டும் கேட்டு தெரிந்து கொண்டாள். தனக்கும், வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் பற்றி அவள் சொல்லவில்லை. ஆனால் இருவரிடையே ஏதோ இருக்கிறது என்று விஜய்க்கு தெரியும்.கோவிலில் நிலாவுக்கு நடந்தது கூட நிதிஷா செய்த ஏற்பாடு தான்.
வர்மாவின் அமைதிக்கு காரணம் இருப்பது புரிந்தாலும் இந்த அமைதி பிடிக்கவில்லை அவளுக்கு, அவனுக்கு தன் மேல் ஈர்ப்பு இருக்கிறது அன்றே கண்டு கொண்டாள். அவனின் முத்தம் உயிர் வரை சென்று பதியம் போட்டு காதல் என்னும் செடியை வளர்த்து வருகிறது.
அதை அவனே அன்றே பிடுங்கி எறிந்து விட்டானே, போதும் இந்த அவஸ்தை எதுவும் வேண்டாம். அவனைப் பார்த்தாலே போதும் அனைத்தும் மறந்து விடுகிறது. இப்பொழுது கூட அவன் மேல் கோவம் தான் ஆனால் அவன் அருகில் இருந்தால் தன்னை நெருங்கி வந்தால் கோவம் மறைந்து அவன் மீதான காதல் பெருகி விடும்.
என்ன பார்வை அவன் கண்ணுக்குள் காந்தத்தை விழுங்கி விட்டானா பார்த்ததும் அவனை நோக்கி ஈர்த்து விடுகிறதே, ஏதேதோ யோசனைகள் எண்ணங்களின் சுழல்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தாள் தூக்கத்தை மறந்தாள்.
காலை எழுந்ததும் இரவு மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு முடிவு கட்டிட நினைத்தாள். அருகில் வந்த வசந்தி “ஏன் மா இவ்ளோ வருத்திக்கிற, பேசாம அவர் கிட்ட சொல்லிடேன் எவ்வளவு நாள் மனசுலயே வச்சிக்க முடியும் எப்படியும் ஒரு நாள் தெரியப் போறது தானே “
அவர் சொல்வது புரிகிறது தான் எதற்கு வர்மாவைத் தேடி வந்தோம். அவனுக்கு தெரிய வேண்டிய உண்மைகளை சொல்லி விடத் தானே, அவனின் அதிகப் படியான கோவத்திற்கும், அதிகார குணத்திற்கும் ஒருவகையில் அவளும் தானே காரணம்.
அவனும் இயல்பான வாழ்வு வாழ வேண்டும். சிறிய வயதில் இருந்தே அவன் வலிகளை சுமக்கக் கற்றுக் கொண்டான் அதன் வெளிப்பாடு தான் கோவம் என்ற பெயரில் தனக்கு தானே போட்டுக் கொண்ட முள்வேலி
ஆரண்யாவிடம் அவனின் இயல்பான குணம் வெளிப்படுவதை அவனுமே உணர்ந்து கொண்டான். அது அவன் குணத்திற்கு எதிரானதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவளைத் தள்ளி வைக்க முயற்சிக்கிறான்.
போதும் இருவரின் ஆட்டங்களும் ஒரு கட்டத்தில் முட்டி மோதி யார் வெற்றி, என்ற போட்டியில் காதல் தான் நசுங்கிக் கொண்டிருக்கிறது இன்றுடன் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து விடும். ஒரு முடிவுடன் அலுவலகம் கிளம்பினாள்.
கவர்மெண்ட் காண்ட்ராக்ட்க்கு தேவையான சிமெண்ட்கள் பேக் செய்யப்பட்டு குறிப்பிட்ட நாளுக்கு முன் முடித்து விட்டாள். எவ்வளவு சிமெண்ட், அதை எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் அனுப்புகிறோம். அந்தந்த தடத்திற்கான வண்டிகள், அதன் எண், டிரைவர் பெயர்,வண்டி புறப்படும் நேரம் அது சொன்ன இடத்திற்கு அடையும் நேரம் எனஅனைத்தையும் தயார் செய்து விட்டாள்.
கூடவே உழைத்த தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய அவர்களுக்கு நியாயமான கூடுதல் சம்பளம் போன்றவற்றையும் பட்டியலிட்டு அனைத்தையும் சேர்த்து கோப்பினை எடுத்துக்கொண்டு வர்மாவின் அறைக்கு முன் நின்றாள்.
அவன் அன்று பேசியது தான் நினைவடுக்குகளில் நின்று அவளை மறக்க முடியாமல் துரத்தி கொண்டு வருகிறது. கண்கள் மூடி திறந்தாள் இதையும் கடந்து தானே செல்ல வேண்டும்.
கதவை நாக் செய்து விட்டு “மே ஐ கம் இன் சார் ” அவளின் குரல் அவனுக்கு தெரியுமே,
“எஸ் ” என்று பெண் குரல் வர, ஆரண்யாக்கு தூக்கி வாரிப் போட்டது கண்டிப்பாக அவளாக இருக்கக்கூடாது என்று நினைத்தாலும் உண்மை அது இல்லையே கதவினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
வர்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மிகவும் நெருக்கமாக, ஒற்றை பிலீட்டில் புடவை அவள் அணிந்திருந்த பிளவுஸ் அப்பட்டமாக அதன் இருப்பை காட்டியது.
முகம் சுளிக்கும் விதத்தில் அவள் இருந்தாலும் அவள் பக்கத்தில் இருப்பவனோ எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறானே, ‘உள்ளே வா ‘ என்று சொல்ல கூட வாய் திறக்க மனம் இல்லையா,
அன்று அதை செய்ய மட்டும் இருந்ததோ, எதை டி சொல்ற, அவள் மனம் அவளை கேள்வி கேட்க, அடிச்சான் பாரு கிஸ்ஸு அத தான் சொன்னேன், ஓ அப்போ மேடம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க மீண்டும் அவள் மனம் கேள்வி கேட்க, அது உனக்கு தேவை இல்லாதது ஒழுங்கா போ, கேள்வி கேட்கும் மனசாட்சியை விரட்டி விட்டவள்,
யோசித்தபடி இருக்க, சொடுக்கிட்டு அழைத்தான் வர்மா,
“ஹான் ” அவன் அழைத்ததில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் போல் முழித்தவள், “சார் ” என்றாள்.
“என்ன சொல்லுங்க, எவ்ளோ நேரம் கூப்பிடுறேன் அமைதியா இருக்கீங்க, என்ன கனவு காண்றீங்களா ” அவன் எரிச்சலுடன் சொல்லும் வார்த்தைகளில் கடுப்பு தான் அவளுக்கு
“இல்லை சார் நீங்க முக்கியமான பைல் பார்த்துட்டு இருந்தீங்க அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு இருந்தேன் ” தான் கொண்டு வந்த பைலை அவனிடம் நீட்டினாள்.
அவன் கேட்கும் முன்னே “காண்ட்ராக்ட்க்கு தேவையான ப்ரோடக்ட்ஸ் ரெடி சார், இதுல எவ்ளோ செலவு, ப்ரோடக்ட்ஸ் டீடெயில்ஸ், எப்போ டெலிவரி, டைம், ரேட் எல்லாமே இருக்கு “
ஆச்சர்யத்துடன் விழி உயர்த்தியவன் உடனே இயல்பாக மாற்றிக் கொள்ள அவன் கள்ளத்தனம் கண்டு கொண்டாள்.
“சார் ” அவள் பேசலாம் என்று அவனிடம் கேட்க,
நிதிஷாவோ “அதான் சொல்ல வேண்டியதை சொல்லி முடிச்சிடீங்களே இன்னும் ஏன் நிக்கிறீங்க கிளம்புங்க “
ஆரண்யா,வர்மாவை பார்க்க போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். இவள் மீண்டும் பேச முயற்சி செய்ய, நிதிஷா இவளை துரத்தி விடுவதில் தீவிரம் காட்டிட, வேறு வழியின்றி கிளம்பினாள்.
போன் பேசி முடித்தவன் ஆரண்யாவை பார்க்க அவள் தான் அங்கு இல்லையே, நிதிஷா பதில் சொல்ல அவன் அவள் பேசுவதை கேட்கவே இல்லை, வெளியே சென்று ஆராண்யாவைப் பார்க்க செல்ல, பேக்டரியில் தீ பிடித்துக் கொண்டதாக போன் வர, ஆரண்யா அங்கு சென்றிருந்தாள்.
வர்மா உடனே பேக்டரிக்கு செல்ல, ஆட்களுக்கோ, பொருள்களுக்கோ எந்த சேதாரமும் இல்லை. சிமெண்ட் மூட்டைகள் பேக் செய்யப்பட்டு கண்டைனரில் வைக்கப்பட்டு இருந்தது. அதை சார்ந்த ஆவணங்களும் இன்று அலுவலத்தில் ஆரண்யா எடுத்து வந்து கொடுத்து விட்டதால்,
பெரிய பிரச்சனை இல்லை. பேக்டரிக்கு வந்தவன் முதலில் ஆரண்யாவைத் தான் தேடினான் அங்கு இருந்தவர்கள் வர்மாவின் அறையை காட்டிட, அவனும் அங்கு சென்றான். அறையின் உள்ளே தீப்பிடித்திருந்தது. வாசலில் நின்றவன் எப்படியோ உள்ளே சென்று விட்டான்.
“ஆரண்யா,ஆரண்யா, ஆரு ” கடைசியில் சொன்னதில் தான் அவளும் “மாறா நான் இங்க இருக்கேன் ” என்றாள்
குரல் மட்டும் கேட்கிறது எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை.
“எங்கடி இருக்க, உன்னை யாரு இங்க வர சொன்னது”
அவளிடம் பதிலில்லை, பதறியவன் “பதில் சொல்லு எங்க இருக்க “
அவன் இருக்கையின் கீழே அமர்த்திருந்தால் கையில் சில கோப்புகள் பொருள்கள் இருந்தது. “மாறா இங்க கீழ பாருங்க “
தீ சுற்றிலும் எறிந்து கொண்டிருந்தது. அவன் அறையில் இருந்த ஜன்னலை உடைத்தவர்கள் வெளியே இருந்து குரல் கொடுக்க,
“எழுந்து வா டி வழி இருக்கு போய்டலாம் ” அவள் அருகே சென்றான். அவனிடம் கையில் வைத்திருந்த பொருள்களை கொடுத்தாள். அவனும் அதை வாங்கிக் கொண்டு ஜன்னல் புறம் இருந்தவர்களிடம் வீசினான்.
அவளை இழுத்து வர தீ அந்த இடத்தில் பற்றிக் கொண்டது. அதில் இருந்து தப்பியவர்கள் ஜன்னல் புறம் வர தீயின் வெப்பம் அருகே இருப்பது போல் பயமுறுத்தியது.
“நீங்க போங்க மாறா ” என்றாள் அவனை பத்திரமாக வெளியேற்ற நினைத்து
அந்த இடத்திலும் சொல் பேச்சு கேட்காமல் தன்னை தூரத்துவதில் தீவிரம் காட்டுபவளை என்ன சொல்வது, இனி பேசி பயனில்லை என்று நினைத்தவன்
அவளை தூக்கிக் கொண்டு ஜன்னல் இருந்த பக்கம் ஏறிக் கொண்டான். வெப்பத்தினால் அனல் வீச, நொடியும் தாமதிக்காமல் குதித்து விட்டான். இருவருக்குமே தோளில் தீ பட்டு விட்டது. அங்கு இருந்தவர்கள் தண்ணீரினை ஊற்றி அவர்களை பத்திரமாக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி விட, ஆரண்யா மயங்கி இருந்தாள்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிட, அவளை பரிசோதித்த மருத்துவர்கள் புகையை சுவாசித்ததாலும், பயத்திலும் மயக்கம் வந்ததாக சொல்ல, அவள் தோளில் இருந்த தீக்காயத்திற்கு மருந்து போட்டனர்.
அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் ஒரு மணி நேரத்தில் இயல்புக்கு திரும்பி விடுவதாக சொல்ல, மனம் நிம்மதி அடைந்தாலும், அவள் கண் விழித்து பார்த்தாள், பேசினால் தான் வர்மாவுக்கு உயிர் வந்தது போல் இருக்கும்.
வர்மாவின் வீட்டிற்கு தகவல் சென்று விட அவர்களும் மருத்துவமனை வந்து விட்டனர், வர்மாவின் அம்மா தான் ஆராண்யாவைப் பார்த்து கொள்வதாக கூறி அவள் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்த பிறகே இவன் காயத்திற்கு மருந்திட சம்மதித்தான்.
1 மணி நேரம் கழித்து ஆரண்யா கண் விழிக்க, வர்மா அறைக்குள் வந்து விட்டான்.
“அம்மா நீங்க கொஞ்சம் வெளிய இருங்க ” என்றவன் அவர் சென்றதும் கதவை அடைத்து வந்தவன் அவளின் முன் அமர,
கண் திறக்க முடியாமல் திறந்தவள் தன் எதிரே ருத்ர மூர்த்தியாய் இருப்பவனைப் பார்த்தாள்.
அவன் தோளில் இருந்த காயத்தினை தொட முயல அவன் நகர்ந்து கொண்டான். இந்த நேரத்தில் கூட தன்னை விலக்கி வைக்கிறானே என்று நினைத்து கண்கள் கலங்க அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்
“எதுக்காக அந்த ரூமுக்குள்ள போன ” வார்த்தையில் தீப்பொறி பறக்க அவன் கேட்க,
இதுக்கு அந்த தீயில மாட்டி இருக்கலாம் இப்போ இதுல இருந்து எப்படி தப்பிக்கிறது. யோசித்தவள் எதையாவது சொல்லி சமாளிப்போம் இல்லையா மயங்கிடலாம் என்று நினைத்துக்கொண்டு பேச வர
கதவினை பலமாக யாரோ தட்டிட எரிச்சலுடன் கதவினைத் திறக்க விஜய் வர்மா காலின் கீழே விழுந்து புரண்டான்….
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
