இதயம்!
துடிப்பு – 02
வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பியவளுக்கு,ஏனோ அதை நினைக்கையில் பயமும் ஒருங்கே எரிச்சலும்.
ராகவிக்கும் தவிப்பு.பெற்றோர் இல்லாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்றாலும்,தோழியின் வாழ்வை விட அவள் நிம்மதியாய் இருப்பதாய் அடிக்கடி அவளுக்குள் தோன்றி மறைவது பொய்யுமல்ல.
“வீட்டுக்கு போயே ஆகனுமா டி..?”
“வேற என்ன கவி பண்றது..? எல்லாம் என்னோட தலவிதி..” நொந்து கொண்டவளுக்குள் நெஞ்சம் விம்மித் துடித்தது.
“பயப்டாத டி..இந்த ப்ரச்சன எல்லாத்துல இருந்தும் உன்ன காப்பாத்த கண்டிப்பா ஒருத்தர் வருவாரு..” என்க சலிப்பாய் விரிந்தன,பாவையவளின் இதழ்கள்.
“இந்த உலகத்துல அப்டி பட்ட ஒருத்தன் பொறந்தே இருக்க மாட்டான் டி..” விட்டேற்றியாய் உரைத்தவள்,உண்மை தெரிந்து தான் கூறிட்டாளோ,என்னவோ..?
பேரூந்து தரிப்பிடத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்தவளுக்கு,தன் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும் சூன்யத்தை எண்ணுகையில் ஏனோ விழிகளில் நீர் கோர்க்கத் தான் செய்தது.
தாய் தந்தை இல்லாத பிள்ளை அவள்.தாய்,யாரோ ஒருவனால் காதல் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்க,இன்று வரை அவளின் தந்தை யார் என்று அவளுக்குத் தெரியவில்லை.
வயிற்றில் பிள்ளையுடன் அவனிடம் நியாயம் கேட்கப் போய்,தோற்று வந்த அவளின் தாயார் சாந்தி,அவள் பிறந்து இரண்டே வருடங்களில் இறந்து போக,அது வரை அவளைக் கவனித்து வந்த அவளின் தாய் வழிப் பாட்டிக்கு பேரிடி தான்.
புத்தி சுவாதீனம் இல்லாது ஏனோ தானோவென்று இருந்த தன் மகள்,அந்த பிஞ்சுக் குழந்தைக்காக வேண்டியாவது திருந்தி விடுவார் என்று அவர் நினைத்திருக்க,கடைசி வரை அது நடந்தேறிடவில்லையே.
அவளது பாட்டியும் தன்னால் முடிந்தவரை அவளை அன்பாய் கவனித்துக் கொண்ட போதிலும்,வயதின் முதுமை அவரையும் விட்டு வைக்காமல் இறைவனடி சேர்த்திருக்க,அதன் பின் அவளின் வாசம் சித்தி வீட்டில் தான்.
பாவையவளின் தாயாரின் ஒரே ஒரு சகோதரம் அவர்.
சாந்தியின் உடன் பிறந்த தங்கை தான்,பார்வதி.அவருக்கு அக்காளின் மகளின் கரிசனமும் பாசமும் இருந்த போதிலும்,அதை வெளிக்காட்ட முடிந்தது கிடையாது.
அவரின் கணவர் ரத்னவேலுக்கு,என்னவோ பாவையவளைக் கண்டாலே பிடிப்பதில்லை.அவளுக்கான அத்தியவசிய தேவைகளை கவனித்துக் கொண்ட போதிலும்,கல்விக்கு உதவ முன் வராதிருக்க,பார்வதி தான் பல இடங்களில் ஏறி இறங்கி,அவளுக்கென புலமைப் பரிசில் வாங்கிக் கொடுத்து அவளை படிக்க வைத்தது.
அவளுக்குமே அந்த வீட்டில் இருக்க பிடிப்பது இல்லை.ரத்னவேலின் குடும்பம் கூட்டுக் குடும்பம்.
அவரின் அக்கா கணேஷ்வரியும் அண்ணன் திலகனும் குடும்பம் சகிதமாய் அவர்களுடனேயே வசித்திட,அது பாவையவளுக்கு பெருத்த சங்கடம் தான்.
அடிக்கடி அவர்களின் கேலிக் கிண்டலுக்கும் ஆளாகியவளுக்கு,ரத்னவேலின் தாயாரின் சுடுசொற்கள் தான் மனதைக் குத்திக் கிழித்திடும்.
அதுவும் திலகனின் பார்வையுடன் அசூசையான அத்துமீறல்களும் அவளை வெகுவாய் பாதித்திட,எதையும் யாரிடமும் உரைத்திடக் கூட முடியாமல் தவிதவித்துப் போனாள்,அவள்.
ஒரு முறை தாள முடியாமல்,பார்வதியிடம் தன்னை அநாதை ஆசிரமத்தில் விடும் படி கூறி கதறியிருக்க,அவருக்கும் விழிகளில் கண்ணீர்.அவருமே,திலகனின் பார்வையில் அறுவறுப்பாய் உணர்ந்திருக்க,பெறா மகளின் நிலை அவரை அதிகம் தாக்கிட,அதற்கு தீர்வு காணவே முனைந்தார்,முழு முயற்சியுடன்.
அவரும் அவளின் நிலை புரிந்தாற் போல்,வெளியூரில் பள்ளியொன்றில் சேர்த்து விடுதியில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்திட,அதன் பின்னரே பாவையவளின் வாழ்வில் கொஞ்சம் ஒளி சேர்ந்தது போல்.
அதன் பின்னர் படித்து,ஒருவாறு வேலையில் காலூன்றிட,வாழ்வு ஓரளவு சுமூகமாய்ச் சென்று கொண்டிருக்க,அதன் பின்னர் வந்து சேர்ந்தது,பெரும் புயலாய்.
அது தான்,கணேஷ்வரியின் மகன் சதீஷுக்கும் அவளுக்கும் இடையிலான திருமணம்.கணேஷ்வரியின் கணவர்,தர்மேந்திரன் ஒரு அரசியல் பெரும் புள்ளி.
அதுவும் கணேஷ்வரியின் அதீத செல்லமும் சதீஷை வழி தவறச் செய்திருக்க,அவனுக்கோ ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள்.
கணேஷ்வரிக்கும் ஒன்றும் அவளை தன் மகனுக்கு கட்டிக் கொடுக்க விருப்பமில்லை.ஏதோ இராசி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை கட்டி வைத்தாலே,மகனின் ஆயுள் நிலைக்கும் என ஏதோ ஒரு ஜோசியக்காரர் அடித்து விட்டிருக்க,அது பாவையவளுடன் பொருந்திப் போனது தான்,விதி.
பாவையவள் மறுத்த போதிலும்,அவர் விடுவதாய் இல்லை.இதில்,பார்வதியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கின்ற மறைமுக மிரட்டல் வேறு.
திக்குத் தெரியா காட்டில் சிக்கிக் கொண்டது போல,அவளிருக்க ஒரு முறை யாரிடமும் கூறாமல்,ஊரை விட்டு ஓடிப் போக முயன்றிட,அதுவோ பெருத்த தோல்வியில் முடிவடைய அதன் பின்னர்,சொல்லவா வேண்டும்..?
அவளை கண்காணிக்கவே,பல ஆட்களை நியமித்திருக்க,அவர்களின் கண்ணில் சிக்காமல் வீட்டில் இருந்து ஒரு அடி எடுத்து வைப்பதை யோசிக்கவே முடியாத நிலை அவளுக்கு.
ஏன் வேலையிடத்தில் கூட,புதிதாய் நான்கைந்து பேர் பணிக்கு வந்திருக்க,அது கணேஷ்வரியின் ஆட்கள் என்று அவளுக்கும் தெரியாமல்,இல்லை.
தன் வாழ்வை நினைத்து பெருமூச்சு விட்டவாறு,வீட்டுக்கு வந்தவளை ஆராயும் பார்வை பார்த்த கணேஷ்வரியோ,அடுத்த நொடி இயல்பாகி இருந்தார்.
“வந்துட்டியாம்மா..?” கேட்டவாறு அவளின் தலை தடவ,அவளுக்கு பயம் கவ்விக் கொண்டது.
ஏன் இந்த பாசம் என்று அறிந்திடத் தெரியாமல் அவளிருக்க,அவரின் பின்னே வந்த சதீஷின் பார்வையில் உள்ளம் குமுறிட,என்ன செய்திடவென்று தெரியாமல் திகைத்துப் போனாள்,அவள்.
“நாளக்கி சதீஷோட ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி இருக்காம்..நீயும் போய் வர்ர..” தலையை தடவியவாறு கூறியவரிடம் எங்கனம் மறுக்க அவளும்..?
சரியென்ற தலையசைப்புடன் தன்னறைக்குள் நுழைந்து கொள்ளும் வரை,அவளைத் தொடர்ந்த,அவனின் ஊறும் பார்வையில் அவள் தேகம் பற்றி எரிவது போன்ற பிரம்மை.
அதுவும் இன்னும் சரியாக,இரண்டு வாரங்களில் திருமணம்.அதை நினைக்கையில்,தற்கொலை பரவாயில்லை என்று தோன்றிட்ட போதிலும்,அதற்கும் அவளிடம் தைரியம் இல்லையே.
முகத்தை நீரால் அடித்துக் கழுவியவளுக்கு,நாளை எப்படி சதீஷிடம் இருந்து தப்பிப்பது என்பதே பெருத்த யோசனையாய்.
●●●●●●●●
குளியலறைக் கதவை திறந்து கொண்டு,சிகையில் இருந்து நீர்ச் சொட்டச் சொட்ட வெளியே வந்தான்,அமிதேஷ் பிரதாப்.
ஆறடி உயரமும் அதற்கு தோதான கட்டடுமஸ்தான தேகமுமாய் இருப்பவன்,காண்போரை ஒரு முறை கவர்ந்து இழுக்கும்,அழகன் தான்.
ஐந்து நிமிடங்களுக்குள் உடைக்குள் தன்னை நுழைத்து தயாராகி வந்தவனோ,அடுத்த நிமிடம் தோழனுக்கு அழைத்திட,சரியாக பத்து நிமிடங்களில் அவன் இருப்பிடம் முன்னே,வந்து சேர்ந்திருந்தான்,தோழன்.
“என்ன இன்னிக்கி இவ்ளோ பக்காவா ரெடியாகி இருக்க..?”
“சாத்வேத் சார மீட் பண்ணப் போகனும் அதான்..” எனக் கூறிட,தோழனிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.
சரியாக பதினைந்து நிமிடங்களின் பின்னர்,சாத்வேதின் மாளிகையின் முன்னே வந்து நின்றது,அவர்களின் வண்டி.
பதினைந்து வருடங்கள் கடந்திருந்த போதிலும்,மக்களுக்கு அவர் மீதிருந்த நம்பிக்கையும் விசுவாசமும் துளியும் குறையாதிருக்க,நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்து இருந்தது அவர் தான்.
வயதின் மூப்பில் நரை முடிகள் ஆக்கிரமித்திருந்த போதிலும்,உடற் திடம் இன்னும் முன்பு போலவே,இருக்கத் தான் செய்தது,பெரிய மனிதருக்கு.
மனவலிமையும் மாறா உடற் திடமும் சிறந்த ஒரு ஆட்சியாளராக,அவரை காலூன்றிடச் செய்திட,பக்க பலமாய்.
வாயிலில் இருந்த காவலாளி சல்யூட் வைத்திட,அதை தலையசைப்புடன் ஏற்றவர்களோ,மாளிகைக்குள் நுழைகையில் வீங்கிய விழிகளுடன் எதிர்ப்பட்டார்,விஹானா.
அதைக் கண்டதுமே,அமிதேஷினதும் தோழன் விஷ்வின்னிதும் முகம் கூம்பிப் போக,கனத்த மனதுடனேயே,நுழைந்தனர் அபிஷேக்கின் அறைக்குள்.
மருத்துவக் கருவிகள் சூழ்ந்திருக்க,சிரமத்துடன் சுவாசித்தவாறு மயக்க நிலையில் இருந்தான்,அபிஷேக்.
அவன் இதயம் வெகுவாய் பலவீனம் அடைந்து இருக்க,மருத்துவர்களோ இதய மாற்றுச் சிகிச்சையை தவிர வேறு வழியில்லை என்று கையை விரித்த நிலை.
ஆனால்,இதய மாற்றுச் சிகிச்சைக்கு பொருத்தமான இதயம் கிடைத்திட வேண்டுமே..?
பல வழிகளில் முயன்ற போதிலும்,தீர்வு கிடைத்தபாடில்லை.ஒரு முறை இதய மாற்றுச் சிகிச்சைக்கு முயன்ற போதிலும்,அது தோல்வியில் முடிவடைந்திருக்க,சாத்வேத் உட்பட அனைவருக்கும் நம்பிக்கை விட்டுப் போயிருந்தது.
“டாக்டர் என்ன சொன்னாரு சார்..?” நைந்து வந்த குரல்,மகனின் தலையை வருடியவாறு இருந்த சாத்வேதிடம் கேள்வி தொடுத்தது.
“ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் தான்..இல்லன்னா” என்றவருக்கு அதற்கு மேலும் பேச முடியாது போக,தொண்டைக் குழி அடைத்துக் கொண்டது.
“நாங்க இருக்குற வர எதுவும் ஆகாது சார்..” கூறியவனின் விழிகளில் அத்தனை உறுதி.
மறுநாள்,
அமிதேஷும் சாத்வேதும் மருத்துவர் பிரஜினை சந்திக்க வந்திருக்க,அவர்களுடன் இணைந்திருந்தார்,தலை சிறந்த மரபணுவியலாளர் வித்யுத்.
சாத்வேதின் முகத்தில் படர்ந்திருந்த வலியின் சாயல்,தப்பவில்லை பிரஜினின் கண்களில் இருந்து.
அவருக்குமே,தீர்வொன்றை கொடுத்திடை ஆசை தான்.அதற்காக,வித்யுத்துடன் சேர்ந்து முடிவொன்றை கொண்டு வந்த போதிலும்,அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்று தான்,புரிந்த பாடில்லை.
“சார்ர்ர்ர்..”
“சொல்லுங்க பிரஜின்..”
“உங்க கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன்..வயசு ஏற ஏற அபிஷேக்கோட ஹார்ட்டோட ஆக்டிவிடி கொறஞ்சிட்டே போகும்னு..அது அவனோட ஜெனடிக்ஸ்ல வந்த ப்ராப்ளம்..”
“……………….”
“அதுக்கு ஒரே ஒரு சால்யூஷன் ஹார்ட் ட்ரான்ஸ் ப்ளான்ட் மட்டுந்தான்..நார்மலா ப்ளட் க்ரூப் எச் எல் ஏ இதெல்லாம் மேட்ச் ஆனா ஒருத்தர் ஹார்ட்ட இன்னொருத்தருக்கு ட்ரான்ஸ்பர் பண்ண முடியும்..ஆனா அபிஷேக்குக்கு அப்டி நார்மலான ப்ரொஸீஜர்ல ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ண முடியாது..” என்றிட,புருவத்தை சுருக்கினான்,அமிதேஷ்.
அவனுக்குமே,மருத்துவ விடயங்கள் ஓரளவு அத்துப்படி என்றிருந்த போதிலும்,பிரஜின் கூறிடும் சிக்கல் புதிதாகவே தோன்றிற்று.
“புரிலப்பா..” தந்தையான மருத்துவரிடம் கேள்விக் கணை தொடுத்தான்,மகன்.
“உனக்கு தெரியாதில்ல அமி..அபிஷேக் விஹானா மேடமோ வயித்துல இருக்கும் போது அவங்க பல வகையான ரேஸ்..அதாவது கதிர்வீச்சுக்கு வெளிக்காட்டப்பட்டு இருக்காங்க..அதனால தான் அபியோட ஜீன்ல மியூட்டேஷன் உண்டாகி,இந்த ப்ராப்ளம் வர்ரதுக்கு ரீசன்..”
“ம்ம்ம்ம்ம்..”
“இவ்ளோ நாள் என்னன்னா நாம வெறும் ஜீன்ல மியூட்டேஷன் மட்டும் தான் நடந்திருக்குன்னு நெனச்சிகிட்டு இருந்தோம்..பட் அப்டி இல்லன்னு நேத்து தான் தெரிய வந்தது..”
“என்ன சொல்றீங்க டாக்டர்..?” பதறியது,தந்தையுள்ளம்.
“நியூக்ளியர் பாம் வெடிக்கிறப்போ வேறு டிஃபரண்டான பார்டிகல்ஸ் அபியோட பாடிக்குள்ள நொழஞ்சு செல்ஸ்குள்ள ஸ்டோர் ஆகி இருக்கு..எல்லா செல்ஸ்குள்ளவும் இல்ல..ஆனா,நிக்லெக்ட் பண்ண முடியாத அளவு தான்..”
“நியூட்ரான் பார்டிகலா வித்யுத் அங்கிள்..?”
“ம்ஹும் அது நியூட்ரான் இல்ல..அது என்ன பார்டிகல்னு இப்ப வர எங்களால கண்டு பிடிக்க முடில..அது என்னன்னு இப்ப வர நம்மளோட சைன்டிஸ்ட்ஸ் ஆராய்ச்சி பண்ணிட்டு தான் இருக்காங்க..இப்போதக்கி அதுக்கு ஃபெக்டர் எக்ஸ் நாட் நைன்டி வன்னு நேம் பண்ணி இருக்காங்க நம்ம சைடின்ஸ்ட்ஸ்..”
“அதனால என்ன..?”
“அந்த பார்டிகல்ஸ் எல்லாம் சேந்து ஒரு ரேடியேஷன அபியோட இன்டர்னல் எக்ஸ்டர்னல் சர்ஃபேஸ் ஆஃப் த பாடிக்குள்ள வெளியிட்டு கிட்டு இருக்கு..சில சமயம் அவன் பாடி ஓவர் ஹீடா இருக்குறதுக்கு ரீசன் இந்த கதிர்வீச்சு தான்”
“ஆனா இதுல என்ன பாஸிட்டிவ்னா என்வயர்மன்ட்கு எக்போஸ் ஆகற ரேஸ் அப்டியே வீரியம் இல்லாததா மாறுது..சன் லைட் டெம்பரேச்சர் இல்லன்னா ஹீலியம் இதுல ஏதாச்சும் ஒன்னு காரணமா இருக்கலாம்..அதனால வெளிய எந்த பாதிப்பும் இல்ல..ஆனா,இன்டர்னல் அப்டி இல்ல..”
“அபியோட பாடிக்குள்ள அந்த ரேஸோட எஃபெக்ட்னால எந்த ப்ராப்ளமும் இல்ல..இன்னொருத்தரோட பாடி பார்ட் உள்ள வரும் வர..”
“அது ஏன் அவனோட நார்மல் செல்ஸ அந்த கதிர் வீச்சு பாதிக்கல..?”
“அது தான் ஒரே ஒரு நல்ல விஷயம்..தெரிஞ்சோ தெரியாமலயோ,அபியோட செல்ஸ் ஆர்கன்ஸ் எல்லாம் டெவலப் ஆகனது அந்த ரேடியோஷனோட எக்ஸ்போஷர் இருக்குற டைம் ல..ஸோ அதனால நேச்சுரலாவே,அதுக்கு ரெஸிஸ்ட் பண்ற மாதிரி தான் அவனோட நார்மல் பாடி செல்ஸ் உருவாகி இருக்கு..அது ஒரு மிராகில்னு சொல்லலாம்..”
“பட் மத்தவங்களோட பாடி செல்ஸால அந்த ரேடியேஷன ரெஸிஸ்ட் பண்ண முடியாது..அது தான் நாம ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ண பாத்தப்போ அது ஃபெயிலியர் ஆக ஃபர்ஸ்ட் காரணம்..”
மருத்துவரும் மரபணுவியலாளரும் கூறக் கூற,அமிதேஷுக்கும் சாத்வேத்துக்கும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அப்படியே சிதைந்து போவது போல் தோன்றிட,தலையில் கை வைத்துக் கொண்டார்,சாத்வேத்.
“அப்போ அந்த ரேடியேஷன்கு ரெஸிஸ்ட் பண்ற மாதிரி செல்ஸ் இருக்குற ஒரு பர்சனோட இதயத்த தான் நம்ம அபிக்கு ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ண முடியும் அப்டி தான பா..?அப்டின்னா அந்த பர்சனும் இந்த ரேஸ்கு எக்போஸ் ஆகற டைம் கருவுல இருந்து இருக்கனும் கரெக்டா..?”
“ம்ம்.. மோஸ்ட் ப்ராபப்லி அப்டி தான் ..”
“அப்போ ஆஜுவோட..” என்று அமிதேஷ் இழுத்திட,பிரஜினின் விழிகள் அனலை கக்கியது.
“நீங்கெல்லாம் இடியட்டா..? அவன் என்னான்னா நேத்து ராத்திரியே வந்து இதெல்லாம் தெரிஞ்சி கிட்டு நான் ஹார்ட் தர்ரேன்னு நிக்கறான்…அவனுக்கு அபி மட்டுமா கண்ணுக்கு தெரிவான்..? உங்களுக்கு எல்லாம் பெத்தவங்க கூடப் பொறந்தவங்க எல்லாம் கண்ணுக்கு தெரியுறது இல்லயா..?”
அனல் மிகுந்த வார்த்தைகளில் நிதானித்தான்,மகன்.என்னவென்றாலும்,இரு தோழர்களும் தனக்கு சமம் என்றிருக்க,ஒருத்தனை முற்படுத்திய தன் வார்த்தைகளில் அதீத குற்றவுணர்வு எழுந்தது,அமிதேஷுனுள்.
அபிஷேக் மீது அளவு கடந்த பாசமும் கரிசனமும் இருந்த போதிலும்,அவனுக்கு ஒன்று என்றால்,தன்னையும் பொருட்படுத்தாமல் உதவிக்கு வரும் தோழனை அவன் விட்டுக் கொடுத்திருக்க கூடாது என இடித்துரைத்தது,மனசாட்சி.
“ஆஜு” என அமிதேஷ் உரைத்ததும்,சாத்வேதின் விழிகளிலும் சிறு எதிர்பார்ப்பு வந்த சென்றதை கண்டு கொண்ட பிரஜினுக்கு அவரின் நடவடிக்கை அவ்வளவு உவப்பாய் படவில்லை.
என்னவென்றாலும்,பெற்ற மகனை விட,அவனின் தோழன் முன்னிற்கப் போவதில்லை என்ற நிதர்சனம் சுட்டெரிக்க,அதைப் பற்றி மேலும் யோசித்து தன்னை அழுத்தத்தில் ஆழ்த்திக் கொள்ள விரும்பவில்லை,அவர்.
“ஆஜுவோட செல்ஸ்ல இதில்ல இத விட எக்ஸ்ட்ரீமான ரேஸ்குமான ரெஸிஸ்டன்ஸ் இருக்கு..பட் ஆஜோட ப்ளட் க்ரூப் டிஷ்யூ கம்பெடபிலிடி ஃபேக்டர் ரெண்டுமே அபியோடதோட ஒத்துப் போகல..”
கூறியவரின் அகத்தில் அத்தனை நிம்மதி.ஒருவேளை,அவையிரண்டும் ஒத்துப் போய் இருந்தால்,சாத்வேதின் நடவடிக்கை வேறாக இருந்து இருக்குமோ என மனதில் சிறு சந்தேக விதை.
மேலும் அவர் பேச வரும் முன்,சாத்வேதுக்கு அவ்னித்திடம் இருந்து அழைப்பு வர,காதில் அலைபேசியை பொருத்தியவாறு அவர் வெளியேறிட,மிகுதியை நாளைக்கு கூறுவதாய் இருவரும் ஒருமித்துக் கூறவே,வெளியேறிச் சென்றான்,அமிதேஷும்.
●●●●●●●
கணேஷ்வரி இன்று கூறியதை எண்ணியவாறு விழித்திருந்தவளுக்கு,உறக்கம் கொஞ்சமும் வந்தபாடில்லை.
நேரத்தை பார்க்கையில் அது பதினொன்றைத் தாண்டியிருக்க,உடலில் அத்தனை அசதி இருந்த போதிலும்,மனதில் இருந்த யோசனை உறக்கத்தை இடையிட்டு தடுத்திருக்க,பல்வேறு யோசனைகள் பாவையவளின் மனதில்.
முன்பொரு முறையும் இப்படி நடந்திருந்தது.தான்,ராகவியிடம் கதைத்து விட்டு,இரவாகி வீட்டுக்கு வரும் சமயம்,அவளிருக்கும் வீட்டுக்கும் பேரூந்து தரிப்பிடத்துக்கும் இடையிலான சிறு வீதியில் குடித்து விட்டு வந்த சதீஷ் சற்றே அத்து மீற முயல,பாதையில் இருந்த ஒரு நல்லவன் அவளைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல்,சதீஷோ போட்டு சாற்றி அடித்திருந்தான்.
அடுத்த நாளும் வீட்டுக்கு வராமல்,அவன் மருத்துவமனையில் கட்டுடன் படுத்திருக்கையில் தான்,அவன் தர்ம அடி வாங்கிய விடயமே,அவளுக்குத் தெரிய வந்தது.
முகம் தெரியாத,அந்த நல்லவனுக்கு பலமுறை நன்றி கூறி,அவனுக்கென பிராத்தித்தும் இருக்கிறாள்,அவள்.
அன்று போல்,நாளையும் யாரேனும் அவளை பாதுகாத்திட வந்தால் தேவலை என்கின்ற எண்ணமே,அவளின் மனதில் முதன்மையாய்.
யோசனையில் அவளிருந்த சமயம் கதவு தட்டப்பட,அந்த சத்தத்தில் இவள் மனதில் அச்சத்தின் பேரலை.
பொதுவாக,அந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும்,அவளைத் தேடி அறைக்கெல்லாம் வருவதில்லை.சித்தியின் பிள்ளைகள் கூட,அவளை ஒதுக்கி வைத்திட,அவர்களுடன் பெரிதாய் பழக்கமும் இல்லை.
அப்படியிருக்கையில்,இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது..?
அவள் அமைதியாக இருக்கவும்,மீண்டும் மீண்டும் கதவு அதீத சப்தத்துடன் தட்டப்பட,துப்பட்டாவை இறுக்கப் பிடித்துக் கொண்டு,சற்றே திறந்திட,அவளின் நினைப்பை பொய்யாக்காமல் முழு போதையுடன் விழிகளில் சிவப்புடன் நின்றிருந்தான்,சதீஷ்.
அதில் அதிர்ந்தவளோ,கதவை மூட முன்னமே,தள்ளி விட்டு அவன் அறைக்குள் நுழைந்திட,உயிர்க்கூடு ஆடி நின்றது,பாவையவளுக்கு.
ஆட்கள் முன்னிலையிலேயே,அவனின் பார்வையையும் நடவடிக்கைகளையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாதிருக்க,இப்போது தனியே சிக்கியிருக்க என்ன தான் செய்வாள்,அவளும்..?
நெஞ்சில் கை வைத்தவளின் இதயம் உச்ச வேகத்தில் துடித்திட,செவியை நிறைத்தது,”லப் டப்” ஓசை.
துடிக்கும்.
2026.03.14
