உள்ளே நுழைந்ததும் அவனுடைய மேலாளர் திரு. மேத்தியூ அவனை வரவேற்றார். congratulations கௌரி,. உங்களுக்கு அமெரிக்காவில் இருக்கிற நம்ம கம்பெனிக்கு போக விசா வந்திருக்கு. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்க கிளம்ப வேண்டியிருக்கும். அங்கே போய் நம்ம மேனேஜர் திரு. பின் கார்ட்டரை போய் பாருங்க. அவரே உங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துத் கொண்டு போவார். அவரே உங்களுக்கு நீங்க தங்க இடமெல்லாம் ஏற்பாடு செஞ்சி தருவார். என்ன சந்தோஷம் தானே! என்று கேட்டதும், கௌரிக்கு சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. அவனுடைய நீண்ட நாள் கனவு அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது ஆனால் வர்ஷினியை பார்க்க முடியாதே, அவள் இப்போதுதான் தன்னிடம் சகஜமாக பழகுகிறாள், இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இப்பொது அவளை பார்க்க முடியாமல் போனால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அவரிடம் நன்றி சொல்லிவிட்டு தன் இருப்பிடம் வந்து நீண்ட நேரம் யோசித்தான். நான் அமெரிக்கா போன சில மாதங்களிலேயே வர்ஷினியை எப்படியாவது இங்கு கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்ற முடிவு எடுத்த பிறகு தான் அவனால் நிம்மதியான மூச்சே விட முடிந்தது.
வீட்டுக்கு சென்றதும் தன் குடும்ப உறுப்பினர்களிடம் விஷயத்தை கூறிட கவிதா புளகாங்கிதம் அடைந்தாள். கௌரி, நமக்கு அந்த முருகன் கண்ண திறந்துடார் போல இருக்குடா, ஒன்னு ஒண்ணா நல்லது நடக்குது. உன் அண்ணனுக்கு கல்யாணம் நடந்திருக்கு, அடுத்து நீ ஆசைப்பட்டது போல வெளிநாட்டில் வேலை கிடைச்சிருக்கு. அந்த முருகனுக்கு என் வேண்டுதலையெல்லாம் சீக்கிரமா நிறைவேத்தனும் என்று சொல்லிக் கொண்டே கௌரியை பார்க்க அவன் முகத்தில் சந்தோசத்தின் அடையாளமே இல்லை. என்னடா உன் முகமே சரியில்லை, உனக்கு பிடிச்சது தானே நடந்திருக்கு, உனக்கு சந்தோஷமா இல்லையா, அதெல்லாம் ஒன்னும் இல்லை, சந்தோஷம் தான் என்று சொல்லிவிட்டு தன அறைக்குள் சென்று விட்டான். “தாய் அறியாத சூள் உண்டோ” கவிதா, கௌரி வரும் வரன்களை எல்லாம் ஏதோ காரணம் சொல்லி தட்டி கழிப்பதிலேயே அவளுக்கு புரிந்து விட்டது. அவனுக்கு வர்ஷினியின் மீது இருக்கும் காதல் இன்னும் மாறவில்லை என்பது. இப்போது அவன் வர்ஷினியை அடிக்கடி சென்று பார்ப்பது கூட அவளுக்கு தெரியும். இருந்தும் கண்டும் காணாதது போல் தான் இருக்கிறாள். அவனுடைய நெடு நாள் கனவு நிறைவேறியும் அவன் முகத்தில் சிரிப்பே இல்லை என்பதை பார்த்து உறுதியே செய்துவிட்டாள். அமெரிக்கா போனால் அவளை பார்க்க முடியாமல் ,அவளிடத்தில் பேச முடியாமல் போகுமா என்று தான் பயப்படுகிறான் என்று சரியாக கணித்து விட்டாள். கவிதா மனதில் இவன் வர்ஷினியை விரும்பினால் மட்டும் போதுமா, அவள் மனசில இவன் இருக்க வேண்டாமா? கடவுள் தான் இதற்கும் ஒரு நல்ல வழி காட்டணும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
விக்னேஷும் மதுமதியும் போனிலேயே அழைத்து கௌரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மறுநாள் கௌரி வர்ஷினியை பார்க்க அவள் வீட்டுக்கு சென்று விஷயத்தை கூறியதும் வர்ஷினியின் முகம் ஒரு நொடி வாடி பின் சற்று மலர்ந்தது. அதை கௌரியும் கவனிக்கவே செய்தான். கங்கார்ட்ஸ் சங்கர், நீ சின்ன வயசிலிருந்து ஆசைப்பட்ட கனவு நிறைவேறிடிச்சி என்று சொல்ல கௌரி பதில் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். வர்ஷினி, இரு சங்கர் நான் இனிப்பு செய்து எடுத்துக் கொண்டு வரேன் என்று சமையலறை நோக்கி ஓடினாள்.
கரண் கௌரியிடம் பயணத்தை பற்றி விசாரிக்க அவனும் அதற்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தவன் தீடீரென்று மாமா, நான் உங்க பொண்ணு கிட்ட கல்யாணத்தை பற்றி பேச போறேன், எப்படியாவது அவளை என்கூட அமெரிக்காவுக்கு அழைத்து செல்லத்தான் ஆசைப்படறேன் என்றதும் அவள் சம்மதிச்சா எனக்கும் சந்தோசம் தான்ப்பா. ஆனா அவ என்ன சொல்லுவானு தான் தெரியல, என்று பேசிக் கொண்டே இருக்கும் போதே அங்கு வர்ஷினி வந்தாள். கௌரி நான் சக்கரை பொங்கல் செஞ்சியிருக்கேன் சாப்பிடு என்று ஒரு சிறிய கிண்ணத்தில் சக்கரை பொங்கல் போட்டு சாப்பிடுவதற்கு வசதியாக ஒரு ஸ்பூனும் போட்டு அவனிடம் நீட்ட, கௌரி அதை பார்த்ததும் நீ இன்னும் இந்த இனிப்பை மறக்கவே இல்லையா என்று கேட்ட அவனுக்கு சிறு வயது ஞாபகம் வந்தது.
அப்போது வர்ஷினிக்கு ஐந்து வயதிருக்கும். அது ஆடி மாதமாக இருந்தபடியால் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் எல்லோரும் பொங்கல் வைப்பதை பார்த்து விட்டு மத்தியானம் கோவில் மூடியவுடன் தானும் பொங்கல் வைக்க வேண்டும் என்று வர்ஷினி கௌரியை அழைக்க இருவரும் சேர்ந்து அங்கு வீடு கட்ட வைத்திருக்கும் செங்கலையும், சிறு சிறு குச்சிகளையும் எடுத்து வந்து வீட்டுக்கு தெரியாமல் இருவரும் அவரவர் வீடுகளில் இருந்து கொஞ்சம் அரிசி, வெல்லம் கொண்டு வந்து குட்டி மண் சட்டியில் பொங்கல் வைத்ததும், அதில் வர்ஷினி கையை சுட்டுக் கொண்டு அழுததும், கௌரி அவளை தேற்ற சிறிது நேரம் தன் மடியில் போட்டு கொண்டு அவளை தட்டி கொடுத்து சமாதானம் செய்த பிறகு தன் வீட்டுக்கு கூட்டி சென்று கவிதாவிடம் காயத்திற்கு மருந்து போட்டுவிடும் படி சொன்னதும், பின் வர்ஷினியை அவர்கள் வீட்டில் அவளை திட்டக் கூடாது என்பதற்காக கவிதாவை அவள் வீட்டில் கொண்டு விட்டு அவளை திட்ட கூடாது என்று சொல்லிவிட்டு வரும்படிஅவன் அம்மாவை கெஞ்சியதும் எல்லாம் ஞாபகத்திற்கு வர அவன் வாய்விட்டு சிரித்தான். வர்ஷினியும் அவன் சிரிப்பதை பார்த்து தானும் சத்தமாக சிரித்தாள். வெகு நாட்களுக்கு பின் தன் பெண் இப்படி சிரிப்பதை பார்க்க கரணுக்கு
மகிழ்ச்சியில் கண்களில் நீர் நிரம்பியது. இவர்கள் இப்படியே பேசி கொண்டு இருக்கட்டும் என்று கரண் அங்கிருந்து நழுவி தன் அறைக்குள் சென்று விட்டார்.
கௌரி இது தான் நல்ல சமயம் வர்ஷினி நல்ல மூடில் இருக்கிறாள் இப்பவே கேட்டு விடவேன்டும் என்று அவளிடம் வர்ஷினி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், முதலே நான் சொன்னப்போ மறுத்தது போல இப்பவும் சொன்னா நான் கண்டிப்பா செத்துருவேன் வர்ஷினி என்று ஏக்கமாக அவளை பார்த்து கூற, சங்கர், அப்போவும் சரி இப்போவும் சரி உன்னை கல்யாணம் பண்ணிக்கிற நிலைமையில் நான் இல்லை. உன்னை மட்டும் இல்லை என்னாலே வேறு யாரையும் கல்யாண பண்ணிக்க முடியாது. உனக்கு நான் பொருத்தமானவள் இல்லை சங்கர். என்னை பத்தி முழுசா உனக்கு தெரியாது. தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டே என்று கூறியதும் கௌரி, உன்னை பத்தி எனக்கு எல்லாம் தெரியும் வர்ஷினி. உன் அப்பா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டார். எனக்கு நீ மட்டும் போதும் வர்ஷினி. என்னால உன்னை தவிர மனைவி என்ற இடத்திலே வேறு யாரையும் வச்சு பார்க்க முடியாது. நான் உன்னை வற்புறுத்தறதா நினைக்காதே. நீ என்னை கல்யாணம் பன்லனா, நான் கண்டிப்பா இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன் மட்டும் நினைக்காதே. அது என்னாலே முடியாது. நான் வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான் . சென்றவனையே வர்ஷினி பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
கௌரியும் அமெரிக்கா சென்று விட்டான். திரு பின்கர்ட்டர் உதவியுடன் ஒரு பிளாட்டையும் பிடித்து குடி புகுந்து விட்டான். பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இங்கு வேலை செய்ய வரும் ஐ. டி. நிறுவன ஊழியர்கள் வாழும் வீடு ஓரளவு வசதியாகவே இருக்கும். அந்த வீட்டில் சமைக்க அடுப்பு, அவர்கள் பெரும்பாலும் பேக்கரி வகை உணவுகளை சாப்பிடுவதால் பேக்கிங் செய்ய சுடு அடுப்பு, குளிர் சாதன பெட்டி இருக்கும். நம்மை போல் துவைத்த துணிகளை வெளியில் காயப்போடுவது அங்கு சாத்தியம் இல்லை. அது பனி பொழியும் நாடு ஆதலால் அங்கு மொட்டை மாடிகள் அமைந்த வீடுகளே இல்லை, பெரும்பாலும் வீடுகள் எல்லாம் கூரை போன்ற வடிவில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் ஆதலால் துணி துவைக்கும் இயந்திரம், துணிகளை உலர வைக்க இயந்திரம் இருக்கும். கௌரி அந்த நாட்டை முதல் முதலாக பார்க்கும் போது வித்தியாசனமான அனுபவம் அவனுக்கு கொடுத்தது. அவன் சென்றது ஏப்ரல் மாதம் ஆதலால் கடும் குளிரும் இல்லை வாட்டி வதைக்கும் வெயிலும் இல்லை, தட்ப வெட்ப நிலையும் ரம்மியமாக இருந்தது. அங்கு உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செல்ல ஆங்காங்கே பூங்காக்கள் இருந்தன. அவைகள் சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு இருந்தன அங்கு காலையில் நடை பயிற்சி அல்லது உடற் பயிற்சி செல்ல வெளியே செல்லும்போது அவனுக்கு தெரியாத நபர் கூட அவனை பார்த்து காலை வணக்கம் செலுத்தி புன்னகை புரிந்தனர்.
பெரும்பாலும் அங்கு நடை பயிற்சி செல்லுபவர்கள் தங்களுடன் தனது வளர்ப்பு பிராணிகளையும் கூட்டிக் கொண்டு வருவார். அந்த நாட்டினர் வளர்ப்பு பிராணிகளை தங்களது சொந்த பிள்ளைகளை போல் பாதுகாத்து வளர்கின்றனர். அங்கு இருக்கும் பெரிய பெரிய கடைகளில் எல்லாம் அதற்கு தேவையான சத்துள்ள உணவுகள்,சத்து மாத்திரைகள், அந்த பிராணிகள் விளையாட பொம்மைகள், அவர்கள் அமர்வதற்கு வசதியான மெத்துமெத்தான சிறு படுக்கைகள் மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும்
மக்கள் பார்த்து வாங்க தனியாக பெரிய இடமே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அப்பிராணிகளின் நகங்கள் மற்றும் முடிகளை நீக்க தனியாக முடி திருத்தும் நிலயங்களும் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது கௌரிக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. ஆனால் அங்கு உள்ள மக்கள் பெரும்பாலும் வீட்டில் சமைப்பதே இல்லை.
இப்பொது இந்தியாவும் இவ்வாறு தானே மாரி வருகிறது என்பது வறுத்தப்படவேண்டிய ஒன்று தான். கடைகளில் கண்ணை கவரும் அழகான டப்பாக்களில் உணவை விற்கின்றனர். அதையே மக்களும் வாங்கி செல்கின்றனர். கௌரி அங்கிருக்கும் ஒரு உணவு பாக்கெட்டை எடுத்து பார்த்தான். அதில் அத்தனை இரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அவர்கள் பிஸ்ஸா, பர்கர் என்ற பேக்கரி உணவு வகைகளை சாப்பிடுவதால் அது ஜீரணமாக வகைவகையான குளிர் பானங்களும் அருந்துகிறார்கள்.
அந்த குளிர் பானங்களிலும் சக்கரையின் அளவு மிகுதியாகவே இருக்கும். இவர்கள் இதை எப்படி சாப்பிடுகிறார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். நம் நாட்டை போலவே அங்கும் ஏழைகள் இருக்கவே செய்கிறார்கள். இது போன்ற உணவுகள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் அவர்கள் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். அதனாலேயே இங்கு ஏழைகள் மிக பருமனாகவும் பணம் உள்ளவர்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கிறார்கள். பணம் உள்ளவர்கள் அங்கு கிடைக்கும் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுகிறார்கள். பழ வகைகளையும் அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். மறக்காமல் தினமும் உடற்பயிற்சி செய்து தங்களது உடலை அழகாகவும், வலிமையுடையதாகவும் வைத்திருக்கிறார்கள்.
வர்ஷினிக்கு கௌரி தன்னை அடிக்கடி பார்க்க வந்துகொண்டிருந்த போது அவனின் காதலும் அன்பும் தெரியவில்லை. ஆனால் அவளை விட்டு அவன் வெளிநாடு சென்ற போதுதான் அவன் அருமையே தெரிந்தது. அவனை அவள் அதிகமாக தேட தொடங்கினாள். அவளுக்கு எப்போதும் அவன் நினைவாகவே இருந்தது. அவனிடத்தில் பேசவேண்டும், அவனை பார்க்க வேண்டும் என்று மனது துடித்தது. சங்க கால பாடலில் சொல்வதை போல் வர்ஷினி பசலை நோயால் உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காணப்பட்டாள். அவளால் சரியாக சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. சாப்பிட போனால் சாப்பிடும் தட்டில் அவன் முகம் தெரிகிறது, தூங்க சென்றால் தலையணையில் அவன் முகம் தெரிகிறது. அவன் தனக்கு போன் செய்து பேச மாட்டானா அல்லது குறுஞ்செய்தியாவது அனுப்ப மாட்டானா என்று தினமும் தன் அலைபேசியை நூறு முறையாவது பார்த்தும் விடுவாள். சில நேரங்களில் அவள் கௌரியிடம் போன் செய்து பேசவேண்டும் என்று மனதும் கையும் துடித்தது. ஆனால் போன் செய்து அவனை அழைத்தால் எங்கே அவன் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று எண்ணிவிடுவானோ, இதனால் அவன் வாழ்க்கை கெட்டு விடுமோ என்று எண்ணி அவனுக்கு போன் செய்யாமல் தவிர்த்து விடுவாள் . ஆனால் கௌரி தினமும் கரணிடம் பேசத்தான் செய்தான். கரண் தான் வர்ஷினியிடம் பேசக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருந்தார். அப்போதுதான் அவள் அவனை பற்றி யோசிப்பாள். நல்ல முடிவும் எடுப்பாள் என்று நினைத்தார். இந்த பிரிவு கண்டிப்பாக கௌரியின் காதலை அவளுக்கு உணர்த்தும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவர் நினைத்தது போல தான் நடந்தது. தன் பெண்ணை பற்றி நன்றாக புரிந்தவர் அல்லவா அவர். வர்ஷினிக்கும் அவனை பார்க்காமால் ஒரு நாளை கடத்துவது ஒரு யுகம் போலத்தான் இருந்தது.
அவனுடைய அக்கறையான பேச்சும் அழகான சிரிப்பும் அவள் மனக்கண்ணில் அடிக்கடி வந்து வந்து போயின. இது தான் காதலா? காதல் என்றால் இப்படித்தான் இருக்குமா?என்று அவள் தன்னைத்தானே உணர்ந்த காலம் தான் அது. சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் ஏதோ நெஞ்சுக்குள் அழுத்துவது போல இருந்தது. தன்னுடைய வீம்பை விட்டு அவனிடத்தில் பேசிவிட்டால் தான் என்ன என்ற நிலைக்கே வந்துவிட்டாள். ஒரு நாள் தன் அப்பாவிடம் அவன் பேசினானா என்று கேட்க மெதுவாக வர்ஷினி தன் தந்தையிடம் சென்று அப்பா, சங்கர் அமெரிக்காவுக்கு போய் ரொம்ப நாள் ஆயிடுச்சி. உங்களுக்கு அவன் போன் பண்ணி பேசினானா?என்று துணிந்து கேட்டு விட்டாள். கரண் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு கௌரி எனக்கெதுக்கு போன் பண்ணப்போறான் ? நான் என்ன அவன் மனைவியா இல்லை காதலியா? ஆமா, உன்னக்கெதுக்குமா அவன் மேல இவ்வளவு அக்கறை ? அவனை வேண்டாம்னு சொல்லற, பின்னே அவன் எப்படி இருந்தா உனக்கென்ன என்று நக்கலாய் கேட்க, இவருகிட்ட போய் நான் கேட்டேன் பாரு என்னையே நானே அடிச்சிக்கணும் என்று மனதிற்குள் நினைத்தவாறே அவள் அப்பாவை முறைத்து விட்டு சென்று விட்டாள். கரண், இந்த பொண்ணு மனம் மாறுனா நல்லாயிருக்கும். என் மனதில் உள்ள பெரிய பாரமே இறங்கிடும் என்று நினைத்துக்கொண்டே இருக்கும்போது அவருடைய அலைபேசி மணி அடித்தது. கௌரி தான் அழைத்திருந்தான்.
