வானவீதியில் உலாவரும் ஒளிரும் வெண்ணிலவே, உன்மீது தான என் நேசம் தான் எத்தகையது…!
கைகளில் எட்டாத உயரத்தில் கண்களில் படும் தூரத்தில் நீ இருந்தும் தீரா காதலோடு காலமெல்லாம் உன் ஒளியில் உயிர் ஏந்தி காத்திருப்பேன்…!
உன்னில் சிறையாகிறேன் – 28
அக்னி வீட்டில் தன் ஆபீஸ் அறையில் ஏதோ ஒரு மும்முரமான வேலையில் இருந்தான், அந்நேரம் கதவு தட்டப்பட நிமிர்ந்து பார்த்தான்,
”யெஸ், கம் இன்” அக்னியின் அதிகாரக் குரல் ஒலிக்க, கதவைத் திறந்து கொண்டு ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான்,
”குட் மார்னிங் சார், மீட்டிங் ஃபைல்ஸ் எல்லாம் ரெடியானதும் வீட்டுக்கே எடுத்துட்டு வரச் சொன்னீங்க இல்ல சார் அதான்” என்று ஒருவன்
தயங்கித் தயங்கி உள்ளே வர, அக்னி தன் கையில் இருந்த பேனாவை டேபிளில் வைத்துவிட்டு,
“ஃபைல்ஸ்ல எல்லா டீடைல்ஸும் கரெக்டா இருக்கா” என்று அக்னி கேட்க, தான் கொண்டு வந்திருந்த கோப்புகளை அவனது மேஜையில் வைத்தான்,
“எல்லாமே கரெக்டா இருக்கு சார்” என்று சொன்னான் அவன்,
“ஓகே, நான் மீட்டிங்கு கிளம்பறேன், நீ இங்க இருந்து நான் சொன்னதை கவனிச்சுக்க, ஈவ்னிங் பார்ட்டிக்கு போக நான் சொன்ன ஏற்பாடெல்லாம் பண்ணிட்டியா” என்று கேட்டான் அக்னி,
“நீ சொன்ன மாதிரி எல்லாமே ரெடி பண்ணிட்டேன் சார், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க, நான் கூடவே இருந்து பார்த்துக்கறேன் சார்” என்று பவ்வியமாக சொன்னான்,
“ஓகே, லெட்ஸ் கோ” என்றவன் அவனை தன்னுடன் அழைத்துச் சென்றான் அக்னி,
அக்னி வருவதை அருவி தற்செயலாகத் திரும்பிப் பார்த்தாள், பார்த்த அடுத்த நொடி, அவள் கையில் இருந்த பொருள் கீழே விழுந்தது,
அங்கே அக்னியுடன் வந்தது ரோஹித்,
அருவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன, அவளது கடந்த காலத்தின் ஒரு நிழல், இன்று அக்னியின் நிழலாக அவன் முன்னே நிற்பதை அவளால் நம்ப முடியவில்லை,
ரோஹித்தும் அருவியைப் பார்த்ததும் ஒரு கணம் உறைந்து போனான், அவனது முகத்தில் வந்து போன அதிர்ச்சியை அவன் மிகக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டான்,
அக்னி இதையெல்லாம் கவனிக்காமல்,
“அருவி இவன் ரோஹித், என்னோட பெர்சனல் அசிஸ்டென்ட், நான் இல்லாதப்போ உனக்கு என்ன வேணும்னாலும் இவன்கிட்ட கேட்கலாம்,
ரோஹித், இவங்கதான் அருவி… என்னோட வொய்ஃப்,” என்று அறிமுகம் செய்து வைத்தான்,
ரோஹித் மெல்லத் தலைகுனிந்து,
“குட்மார்னிங் மேடம்,” என்றான். அவனது குரலில் ஒரு நடுக்கம் இருந்தது,
அருவிக்குத் தொண்டை வறண்டது, இதயம் படபடவென அடித்துக் கொண்டது, ரோஹித் இங்கே எப்படி வந்தான்? அக்னிக்கு இவனைப் பற்றித் தெரியாதா? அல்லது இதுவும் அக்னியின் ஏதோ ஒரு திட்டமா? அவள் தட்டுத் தடுமாறி,
“குட்மார்னிங்” என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள்,
இருவரும் ஒருவரை ஒருவர் முன்பே தெரிந்தவர்கள் என்பதற்கான எந்த அடையாளத்தையும் அக்னியிடம் காட்டிக் கொள்ளவில்லை,
“ஓகே சார், எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்பறேன்” என்று அங்கிருந்து விட்டால் போதும் ஓடிவிடலாம் என்று தயாரானான் ரோஹித்,
ரோஹித், நான் சொன்ன வேலை இன்னும் முடியல, இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டியில என் வொய்ப் எப்படி நடந்துக்கணும்னு யாரு சொல்லித் தருவாங்க?” என்று கேட்டான்,
அருவி புரியாமல் அக்னியைப் பார்த்தாள்,
“என்ன சொல்றீங்க அக்னி, ஒரு பார்ட்டிக்கு வர்றதுக்கு என்ன சொல்லி தரனும்” என்று கேட்டவளை அக்னி அலட்சியமாகப் பார்த்தான்,
“பார்ட்ன்னதும் சும்மா வந்து நின்னா போதுமா அந்தப் பார்ட்டிக்கு வர்றவங்க எல்லாரும் பிசினஸ் மேக்னட்ஸ், அங்க நீ என் வொய்ப்பா வரப்போற, உன்னோட ஒவ்வொரு அசைவும் என்னோட அந்தஸ்தைக் காட்டணும்,
நீ எப்படிச் சிரிக்கணும், எப்படி மத்தவங்ககிட்ட பேசணும், ஏன அங்க குடுக்குற ஸ்பூனை வச்சு எப்படிச் சாப்பிடணும்னு கூட உனக்குத் தெரியாது,
அதனால இதை எல்லாம் சொல்லி கொடுக்க ஆள் வருவாங்க, ஒழுங்கா அவங்க சொல்றதை கேட்டு கத்துக்கோ” என்றான் அக்னி
அருவிக்கு அவமானத்தில் கோபம் கொப்பளித்தது,
“நான் ஒன்னும் விவரம் தெரியாத பொண்ணு இல்ல, எல்லாமே தெரியாட்டியும் ஏதோ கொஞ்சம் எனக்கும் தெரியும்” என்று மல்லுக்கு நின்றாள்,
”போதும் நிறுத்து” என்று கத்தினான் அக்னி.
“ரோஹித்… நான் சொன்ன அந்த எக்ஸ்பர்ட்ஸ் இப்போவே வரணும். ஒருத்தி டிரஸ்ஸிங் சென்ஸ் பத்திச் சொல்லிக் கொடுப்பா, ஒருத்தர் டேபிள் மேனர்ஸ் பத்திச் சொல்லுவார்,
ரோஹித், நீ இங்கேயே இருந்து எல்லாம் கரெக்டா நடக்குதான்னு சூப்பர்வைஸ் பண்ணு ஒரு சின்னத் தப்பு நடந்தாலும், பார்ட்டியில அவமானப்படப் போறது நான் தான் ஈவ்னிங் பார்ட்டிக்கு ரோஹித் வந்து உன்னை பிக்கப் பண்ணிப்பான்,
நான் நேரா அங்க வந்துடுவேன், சொல்லிக் கொடுத்த மாதிரி கரெக்டா நடந்துகோ” என்று ஒரு மிரட்டலான கட்டளையைப் பிறப்பித்துவிட்டு அக்னி வெளியேறினான்,
அக்னி வெளியேறியதும், அந்த அறையில் நிலவிய மௌனம் ஒரு பாரத்தைப் போல இருவரையும் அழுத்தியது,
அருவி அப்படியே சிலையாக உறைந்து நிற்க, ரோஹித் மெல்ல அவளை நெருங்கினான், அவனது பார்வையில் அவளை முதல்நாள் பார்த்த அதே ஏக்கம், இன்னமும் நிறைந்திருந்தது,
”அருவி…” என்று அவன் மெல்ல அழைக்க, அந்த ஒரு அழைப்பிலேயே அருவிக்குத் தன் கல்லூரி நாட்களின் நினைவுகள் அலைமோதின,
”ரோஹித், நீ இங்க எப்படி, அக்னி சார்கிட்ட நீதான் வேலை பார்க்கிறியா” என்று அருவி பதற்றத்துடன் குரலைத் தாழ்த்திக் கேட்டாள்,
ரோஹித் ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தினான்,
“விதி எவ்வளவு கொடுமையானதுன்னு இப்போதான் புரியுது அருவி, அன்னைக்கு காலேஜ் முடிஞ்சப்போ, என்னை மறந்துடு, உன் வாழ்க்கையில நல்ல நிலைக்குப் போன்னு சொன்னே,
உன் பேச்சை கேட்டு நான் ஓடுன ஓட்டம், கடைசியில என்னைத் தூக்கி கொண்டு வந்து நிறுத்துன இடம் உன் முன்னாடின்னு நான் கனவுல கூட நினைக்கல” என்றான் ரோஹித்,
எந்தவித சலனமும் இன்றி சிலையென நின்றிருந்தாள் அருவி,
“ஏன் அருவி, அக்னி சாரோட வொய்ப்பா நீ இங்க நிம்மதியா இல்லையா, உன்னோட அந்த பழைய சிரிப்பு எங்க போச்சு, உன்னோட அந்தத் துணிச்சல் எங்க,
உன் கண்ணு இருந்த அந்த வெளிச்சம் இப்போ காணாமப் போயிருக்கே ஏன்” என்று ரோஹித் ஆவேசமாகக் கேட்டான்,
அருவிக்குத் தொண்டை அடைத்தது, தன் மனதின் வலியை யாரோ ஒருவன் இத்தனை சரியாகக் கண்டுபிடித்ததை அவளால் தாங்க முடியவில்லை,
“ரோஹித், எனக்கும் அவருக்குமான வாழ்க்கை வேற, அதைப்பத்திப் பேச இது நேரமில்ல, என் வாழ்க்கை முடிஞ்சது முடிஞ்சது தான், இனி அதைபத்தி பேசி எந்த பிரயோசனமும் இல்ல” என்றாள் அருவி,
”நீ யாரு எப்படிப்பட்டவ, உன்னை இப்படிப் பார்க்கும்போது என் மனசு தாங்கல அருவி” என்றான் ரோஹித் வேதனையுடன்,
அருவி ஒரு நிமிடம் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்,
“ரோஹித் நீ என் மேல வச்சிருக்கறது உண்மையான அன்பா இருந்தா, எனக்காக நீ ஒரு உதவி செய்யனும், இனிமே நாம ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாத மாதிரியே இருக்கணும்,
நீ அக்னி சாரோட ஆபீஸ் ஸ்டாப், நான் அவரோட வொய்ப், இந்த எல்லைக் கோடு தாண்டி நாம ஒரு வார்த்தை கூடப் பேசக்கூடாது, இது எனக்காக நீ செய்யுற உதவியா இருக்கட்டும்” என்று கறாராகச் சொன்னாள்,
ரோஹித் கனத்த இதயத்துடன் அவளைப் பார்த்தான்,
“சரி அருவி. உன்னோட சந்தோஷம் தான் முக்கியம், நான் அப்படியே இருக்கேன், ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ, உனக்கு ஒரு கஷ்டம்னா, உனக்காக உன் கூடவே நான் இருப்பான் அருவி” என்று சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான்,
அவன் சென்ற பின் அருவி அப்படியே சோபாவில் சரிந்து அமர்ந்தாள் அருவி,
அக்னி சொன்னபடியே அடுத்த அரை மணிநேரத்தில் அருவியை தயார் செய்ய பயிற்சி ஆட்கள் வந்தனர், ரோஹித் ஒரு ஓரத்தில் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தான்,
தன் கண் முன்னால், தான் தேவதையாகப் பார்த்த அருவிக்கு, அக்னி இப்படிப் பயிற்சி அளிப்பதைக் கண்டு அவனது இதயம் ரணமாகியது,
”மேடம்… நீங்க நடக்கும்போது உங்க முதுகு தண்டு வளைக்கக் கூடாது, நேரா நடக்கணும்,” என்று ஒரு பெண் சொல்ல, அருவி இயந்திரம் போல நடந்தாள்,
”ஸ்பூனை இப்படித்தான் பிடிக்கணும், சாப்பிடும்போது சத்தம் வரக்கூடாது” என்று மற்றொருவர் சொல்லிக் கொடுக்க,
அருவிக்கு அழுகையே வந்துவிட்டது, ரோஹித் மெல்ல அவளை நெருங்கி,
“அருவி இதெல்லாம் நீ பண்ணி தான் ஆகனுமா, என்னால பாக்கவே முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கு அருவி” என்று ரகசியமாகச் சொன்னான்,
“தயவு செஞ்சு என் லைஃப்ல தலையிடாத ரோஹித், எது நடந்தாலும் நானே சமாளிச்சுப்பேன்” என்று திட்டவட்டமாக கூறினாள் அருவி,
திருவாசகம் வந்து பார்த்துவிட்டு,
“இவனுக்கு என்ன பைத்தியமா, ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்கான், அவன் தான் சொல்றான்னா, நீ எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் இல்ல, நான் என்ன ஏதுன்னு அவனை கண்டிச்சிருப்பேன்” என்றார் திருவாசகம்,
“இதுக்கெதுக்கு டென்சன் ஆகுறீங்க தாத்தா, அவருக்கு என்ன தோணுதோ அதை செய்யுறார், விடுங்க தாத்தா” என்று சமாதானம் செய்தாள் மகிழருவி,
“சரிம்மா உங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் தலையிடல, குழந்தையை மட்டும் நான் பாத்துக்கறேன்” என்று சொல்லி யாழினியை அழைத்துச் சென்றார் திருவாசகம்,
அருவியை வாட்டி வதைக்கும் ராட்சதனோ அவ்வப்போது போனில் வீடியோ கால் செய்து விசாரித்தான்,
“ரோஹித்… என்ன ஆச்சு, இன்னும் அவ அப்படியே தான் இருக்கா, கொஞ்சம் கூட அந்த ராயல் லுக்கே வரல, இன்னும் நல்லா ட்ரெய் பண்ணுங்க” என்று மிரட்டிவிட்டுச் சென்றான்,
அருவிக்குத் தன் மேல் இருந்த சுயமரியாதை மெல்லச் சிதைவது போலத் தோன்றியது, அக்னி அவளை ஒரு பொம்மையாக மாற்றி விளையாடிக் கொண்டிருந்தான்,
ஆனால் அந்தப் பொம்மைக்குள்ளும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவில்லை, அந்த நெருப்பில் விழுந்து வெந்து கருகி தானும் ஒருநாள் சாம்பலாகப் போகிறோம் என்று அவன் அறிந்திருக்கவில்லை,
பயிற்சிகள் முடிந்து மணி ஐந்தைத் தாண்டியது, அந்தப் பெரிய அறையில் அருவி தனிமையில் இருந்தாள், அக்னி அனுப்பிய விலையுயர்ந்த பார்ட்டி உடையும், நகைகளும் படுக்கையில் மின்னின,
ஆனால் அருவியின் மனமோ இருண்டு கிடந்தது, கண்ணாடி முன் நின்றவளுக்குத் தன் பிம்பமே அந்நியமாகத் தெரிந்தது,
“இனி இதுதான் என் தலைவிதி போல” என்று கசப்புடன் நினைத்துக் கொண்டாள்,
ரோஹித் வெளியே காத்திருந்தான்.
அக்னி சொன்னபடி அருவியை அழைத்துச் செல்ல வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது, ஆனால், அருவியின் முன்னால் அவனால் ஒரு இயந்திரமாக இருக்க முடியவில்லை,
அருவி மெல்லத் தயாராகி வெளியே வந்தாள், கருநீல நிறத்தில் சரிகை வேலைப்பாடுகள் செய்த அந்த நவநாகரீக உடை அவளது தோற்றத்தையே மாற்றியிருந்தது,
கூந்தலை அள்ளி முடிந்து, ஒரு சில இழைகளை மட்டும் கன்னத்தில் விழவிட்டிருந்தாள், அவளது தோற்றம் ஒரு பேரரசியைப் போல இருந்தாலும், கண்களில் இருந்த அந்தத் தவிப்பு அவளது எளிமையைப் பறைசாற்றியது,
அவளைப் பார்த்த ரோஹித் அப்படியே சிலையாக நின்றான்,
“அருவி… நீ… நீ ரொம்ப அழகா இருக்க” என்று அவன் அறியாமலேயே அவன் வாய் முணுமுணுத்தது, அருவி காதுகளில் அவன் வார்த்தைகள் விழவில்லை, ஆனாலும் அவனை ஒரு முறை கூர்மையாகப் பார்த்தாள்,
“கிளம்பலாமா ரோஹித்” என்ற அவளது குரலில் இருந்த அந்த அந்நியத்தன்மை ரோஹித்தை நிஜத்திற்கு இழுத்து வந்தது,
”ஆ… ஓகே அருவி… ஸாரி மேடம், கார் ரெடியா இருக்கு,” என்று தடுமாறினான்,
காரில் செல்லும் போது அமைதி நிலவியது, ரோஹித் அடிக்கடி கண்ணாடியின் வழியாகப் பின் சீட்டில் அமர்ந்திருந்த அருவியைப் பார்த்தான்,
அருவியோ ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பது போலத் தன் கண்களைத் திருப்பிக் கொண்டாள். அவளுக்குத் தெரியும்,
ரோஹித்திடம் பேசத் தொடங்கினால் அணை உடைந்த வெள்ளம் போலத் தன் துயரம் கொட்டிவிடும் என்று.
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
