உயிராக வந்த உறவு அத்தியாயம் – 26

நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக முடிந்தது.அனைவரும் கைத்தட்டல்கள், சிரிப்புகள், வாழ்த்துகள், அந்த ஹால் முழுக்க கொண்டாட்டமாக இருந்தது.

அந்த கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் அர்ச்சனா.அவள் முகத்தில் முழு மகிழ்ச்சி.

அவள் கையில் மின்னும் மோதிரத்தை பார்த்துக் கொண்டு மெதுவாக சிரித்தாள்.

“இனி தீரன் என்னுடையவன்…” என்று அவள் மனதில் உறுதியாக நினைத்தாள்.

அவள் அருகில் வந்து நின்றவர்களிடம் பெருமையாக பேசினாள்.ஒவ்வொரு பார்வையிலும் அவளுக்கு ஒரு வெற்றி உணர்வு ஏதோ சாதித்தது போல்..

அவள் தூரத்தில் நின்று கொண்டிருந்த தீரனை பார்த்தாள்.

“இது தான் நான் விரும்பின வாழ்க்கை…” என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.

ஆனால்,அவளுக்குத் தெரியாமல் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ஒரு நிழல் இருந்தது.

தீரன் அமைதியாக ஹாலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அது மனதில் இருந்து வராதது.

அவன் மொபைலை எடுத்தான்.

சில நொடிகள் யோசித்து பிறகு ஒரு எண்ணை அழைத்தான்.

அந்த நேரத்தில்…

தாரணி வீட்டில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.அவள் கண்கள் இன்னும் அழுததால் வீங்கியிருந்தது.

மொபைல் ஒலிக்க அவள் திரையை பார்த்தாள்.

தீரன்.

ஒரு நொடி அவள் தயங்கினாள்.பிறகு மெதுவாக அழைப்பை எடுத்தாள்.

“ஹலோ…”

அவள் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது.

மறுபக்கம் சில நொடிகள் அமைதி.பிறகு தீரன் மெதுவாக கேட்டான்.

“தாரணி…”

“ரித்விக் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா…?”

அந்த ஒரு கேள்வி கேட்டவுடன் தாரணியின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.

அவள் மெதுவாக தலையசைத்தாள்.

“இல்ல…இன்னும் எதுவும் தெரியல…”

என சொல்லும் போதே அவள் குரல் உடைந்து போனது.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு தீரன்…” என அவள் சொல்ல

தீரன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

அவள் குரலில் இருந்த அந்த பயம் அவன் மனதை கிழித்தது.

“யாரோ மிரட்டுறாங்க… நான் என்ன பண்ணணும் என்று தெரியல…”

தீரன் குரல் கொஞ்சம் உறுதியாக,“நீ கவலைப்படாதே,நான் இருக்கேன்…” என்று அவன் சொன்னான் 

அந்த வார்த்தை கேட்டதும் தாரணி அழுதாள்.“நீங்க இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியம் வருகிறது…” என்று அவள் சொல்லிவிட்டு திடீரென்று அமைதியாகி விட்டாள்.

ஏனென்றால்,அவளுக்கு அந்த நிச்சயதார்த்தம் ஞாபகம் வந்தது.

அவள் மெதுவாக கேட்டாள்.

“உங்க… நிச்சயதார்த்தம் முடிஞ்சுதா…?”

தீரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“ஆமா…” என்று மெதுவாக சொன்னான்.

அந்த ஒரு வார்த்தை தாரணியின் மனதை இன்னொரு முறை உடைத்தது.

ஆனால் அவள் அதை வெளியில் காட்டவில்லை.

“சரி…” என்று மட்டும் சொன்னாள்.

தீரன் அவள் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தான்.

ஆனால் என்ன சொல்லுவது என்று அவனுக்கே தெரியவில்லை.

இருவருக்கும் நடுவில் ஒரு கனமான அமைதி.

பிறகு தீரன் மெதுவாக சொன்னான்.

“ரித்விக்கை கண்டுபிடிக்கிறதுக்கு நான் முயற்சி செய்கிறேன்,நீ தனியா எங்கும் போகாதே…” என சொன்னான்

தாரணி கண்களை மூடி கேட்டாள்.

“சரி…”

அழைப்பு மெதுவாக முடியதாரணி மொபைலை கீழே வைத்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் மீண்டும் வழிந்தது.

“அவன் வாழ்க்கை வேற திசை போயிட்டுச்சு…”

“ஆனா நான் இன்னும் அதே இடத்துல தான் இருக்கேன்…” என்று அவள் மனதில் நினைத்தாள்.

மறுபக்கம் அர்ச்சனா தூரத்தில் இருந்து இதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

தீரன் யாருடன் பேசினான் என்று அவள் ஊகிக்க முடிந்தது.

அவள் கண்களில் ஒரு சிறிய கோபம் மின்னியது.

“நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகும்…”

“இன்னும் தாரணி தானா…?”

அவள் மெதுவாக சிரித்தாள்.

“பரவாயில்லை…”

“இது நீண்ட நேரம் நீடிக்காது…”

அவள் மனதில் ஒரு புதிய சதி உருவாக ஆரம்பித்தது.

 

நிகழ்ச்சி முடிந்து அந்த கூட்டத்திலிருந்து விலகி, ஒரு தனி அறைக்குள் வந்து கதவை மெதுவாக மூடியவன் தீரன்.

அவன் கழுத்திலிருந்த டையை சற்றே தளர்த்தி கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான்.கண்ணாடியில் தெரிந்தது அவன் முகம் அல்ல… அவன் கடந்த காலம்.அவன் மெதுவாக நாற்காலியில் உட்கார்ந்தான்.

மோதிரம் போட்ட கை இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

“இது தான் வாழ்க்கையா…?” என்று அவன் மனதில் கேள்வி எழுந்தது.

அந்த நேரத்தில் அவனது நினைவுகள் அவனை மீண்டும் கல்லூரி நாட்களுக்குக் கொண்டு சென்றது.

பேருந்தில் ஜன்னல் அருகே உட்கார்ந்து காற்றை ரசித்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள் தாரணி.

அந்த சிரிப்பு… அந்த கண்கள்… அந்த அழகு…அவள் சிரிச்சா உலகமே நிற்கும் போல…” என்று அவன் முதல் முறையாக நினைத்த நாள்.அவன் அருகே போய் உட்கார்ந்த அந்த தருணம்,சடன் பிரேக்கில் அவள் மெதுவாக அவன் மீது சாய்ந்த அந்த நொடி…

அவன் இதயம் அந்த நாளே அவளிடம் போய்விட்டது.

ஊட்டி ட்ரிப்…மழை…ஒரே குடையின் கீழ் நின்று கொண்டிருந்த அந்த இருவரும்…

கண்ணால் பேசிக் கொண்டிருந்த அந்த மௌனம்…அவன் அவளிடம் காதலை சொன்ன நாள்…

“நான் உன்னை காதலிக்கிறேன் தாரணி…”அவள் தலை குனிந்து சிரித்த அந்த நொடி அது தான் அவன் வாழ்க்கையின் அழகான நினைவு.

அந்த நினைவுகள் அனைத்தும் ஒரு மென்மையான சிரிப்பை அவன் உதட்டில் கொண்டு வந்தது.ஆனால் அடுத்த நொடி

அந்த சிரிப்பு மெதுவாக மறைந்தது.

அந்த நாள் அவன் வாழ்க்கையை மாற்றிய நாள்,தாரணி அவனை சந்திக்க வந்தாள்.அவள் முகத்தில் ஒரு பதட்டம்.

“தீரன்… நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்…”அவன் சிரித்தபடி கேட்டான்.“என்னடா இவ்வளவு சீரியஸா…?”

அவள் குரல் நடுங்கியது.

“என் அக்காவுக்கு குழந்தை பிறக்காது…” என சொல்ல

அவன் சற்று அமைதியாகி கேட்டான்.

“அதனால…?”

அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“நான்… நான் அவளுக்காக…”

அவள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது.

“நான் வாடகை தாயா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்…”

அந்த ஒரு வார்த்தை…

அவனது இதயத்தை கிழித்தது.

“என்ன சொல்றே நீ…?” என்று அவன் குரல் கடுமையாகியது.

“நான் அவளுக்காக இதை செய்யணும் தீரன்,அவள் வாழ்க்கை காப்பாத்தணும்.அது தான் என் கடமை…”என சொல்லவும்

தீரன் கோபத்தில் எழுந்தான்.

“அதுக்காக நீ உன் வாழ்க்கையை இப்படி தியாகம் பண்ணுவியா…?”

“நம்ம காதல்… நம்ம எதிர்காலம்… அதெல்லாம் என்ன ஆகும்…?”என அவன் கேட்க

தாரணி கண்ணீர் துடைத்தபடி,

“நான் உன்னை காதலிக்கிறேன் தீரன்,ஆனா என் அக்கா என் உயிரு…”

அவளுக்காக நான் எதுவும் செய்வேன்…”

அந்த வார்த்தை அவனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது.

“அப்படின்னா,நானென்ன…?”

“நான் உன் வாழ்க்கையில் முக்கியமில்லையா…?” என்று கேட்கவும்

தாரணி தலை குனிந்தாள்.

அந்த அமைதியே பதில்.அந்த நாள்…

அவன் உடைந்தான்.

“சரி…” என்று அவன் மெதுவாக சொன்னான்.

நீ எடுத்த முடிவு தான் உன் வாழ்க்கை,இனி என்னிடம் வராதே…”

அவன் திரும்பிப் பார்த்ததே இல்லை.

அந்த நினைவு இப்போது தீரனின் மனதை நெரித்தது. அவளை நான் அக்கா கணவர் மீது ஆசைப்படுகிறார்கள் என்று தப்பாக புரிந்து கொண்டேன் என நினைத்தேன்..

அவன் கைகளை முகத்தில் வைத்துக் கொண்டான்.

“நான் அவளை புரிஞ்சுக்கலையா…?”

“அவள் என்ன மாதிரி தியாகம் பண்ணிருக்கா…?”

அவன் கண்களில் கண்ணீர் மின்னியது.

அந்த நேரத்தில் அவன் மொபைல் அருகே கிடந்தது.திரையில் தாரணி பெயர் இல்லை…ஆனால் அவன் மனதில் அவள் குரல் மட்டும்.

“என் ரித்விக் காணாம போயிட்டான் தீரன்…”அவன் திடீரென்று எழுந்தான்.

நான் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கேன்…?அவள் அங்கே தனியா அழுதுட்டு இருக்கா என நினைக்கும் போதே அவன் குரல் கடினமாயிற்று.

“இது நிச்சயதார்த்தம்,வாழ்க்கை இல்லை…”என சொல்லி கொண்டே அவன் கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தான்.

“நீ இன்னும் அவளை காதலிக்கிறே தீரன்…”அவன் மனம் தெளிவாக சொன்னது.

அந்த இரவுஅவன் ஒரு முடிவு எடுத்தான்.

“தாரணி மட்டும் இல்ல… அவள் பிரச்சனையும் இப்போ என்னோடது…”

அவனுக்குத் தெரியவில்லை…

அவள் எடுத்த அந்த முடிவு…

அவள் செய்த அந்த தியாகம்…

அந்த நேரத்தில்,ஒரு இருண்ட அறையில் ரித்விக் மெதுவாக கண்களை திறந்தான்.அவன் சுற்றி பார்த்தான்.

“அம்மா…” என்று மெதுவாக அழைத்தான்.

அவனுக்கு தெரியவில்லை…

அவனை தேடி மூன்று பேரின் வாழ்க்கையும் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.

அந்த போன் அழைப்பு முடிந்த பிறகு

தாரணி நீண்ட நேரம் அப்படியே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.

தீரன் சொன்ன “நான் இருக்கேன்…” என்ற வார்த்தை அவளுக்கு ஒரு நிம்மதி கொடுத்தாலும் அவன் நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற உண்மை அவளது இதயத்தை மெதுவாக கிழித்துக் கொண்டே இருந்தது.ஆனால் இப்போ அவளுக்கு முக்கியம் ஒன்றே ஒன்று.

அது ரித்விக்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page