பிரதிக்ஷா சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான் விதுரன்.’விதுரன் என்ன பதில் சொல்லுவான்’ என்று பிரதிக்ஷா விதுரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன யோசிக்கிறீங்க? நான் சொன்னதுக்கு சரின்னு சொன்னா தான் நான் வருவேன்?” என்று பிரதிக்ஷா சொல்ல,
“இங்க பாரு! நான் பைக் ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு, இப்ப எல்லாம் கார்ல தான் போறேன். நம்ம கார்லயே போவோம்!”என்று கூறினான் விதுரன்.
“அப்போ நான் வரல, நீங்க மட்டும் போங்க!” என்று பிரதிக்ஷா பிடிவாதம் பிடிக்க, “சரி வா, உனக்கு பட்டாதான் புத்தி வரும்! நான் பைக் ஓட்டி ரொம்ப நாளாச்சு! ஏனோதானனுதான் ஓட்டுவேன்! எல்லாத்துக்கும் சம்மதம்னா சொல்லு பைக்லையே போவோம்!” என்று விதுரன் கூறினான்.
“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு! அதனால எனக்கு பயம் இல்லை!” என்று பிரதிக்ஷா கூற, ” அப்புறம் உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு அவர்களின் வீட்டுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கார் செட்டிற்கு சென்றான் விதுரன். சிறிது நேரம் அங்கிருந்த வாகனங்களை அலசி ஆராய்ந்தவன்
“இந்தா இருக்கு!”என்று மூடியிருந்த திரையை விலக்க, ராயல் என்ஃபீல்ட் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
அதை பார்த்த பிரதிக்ஷா வாயை பிளந்து விட்டாள். “இது யாரோடது, என்னோட ஃபேவரட் பைக்!”என்று சொல்லிக் கொண்டு விதுரனை பார்க்க, “என்னோடது தான்!” என்று கூறினான் விதுரன்.
“உங்களோடதா சூப்பர் சூப்பர், ஆமா நீங்க இதுலையே ஆபீஸ் போய் இருக்கலாமே, ரொம்ப கெத்தா இருக்கும்!” என்று பிரதிக்ஷா ரசித்து கூற,
“காலேஜ் படிக்கும் போது அம்மாகிட்ட அடம் புடிச்சு வாங்கினது! காலேஜ் முடிச்சு பிசினஸ கவனிக்க போன பின்னாடி பைக்ல போனால் நல்லா இருக்காதுன்னு ராம் தேவ் அப்பா சொன்னதுக்கு அப்புறம் காரில் போக ஆரம்பிச்சிட்டேன்!” என்று கூறினான் விதுரன்.
“ஆனால், உங்களுக்கு தெரியுமா கார்ல போனா நல்லாவே இருக்காது! நாலு செவுத்துக்குள்ள அடைப்பட்ட மாதிரி தோணும். பைக்ல போகும்போது அங்க அடிக்கிற காத்த சுவாசிச்சுக்கிட்டு ரோட்டுல போறவங்க வர்றவங்க எல்லாம் பாத்துட்டு போகும் போது அந்த பீலே தனி!” என்ற உற்சாகமாக கூறினாள் பிரதிக்ஷா.
“பைக்ல போன அனுபவம் நிறைய இருக்கும் போல!” என்று விதுரன் பிரதிக்ஷாவை பார்த்து கேட்க, “நான் போனதே கிடையாது! எங்க போனாலும் சித்தப்பா கார்ல தான் அனுப்புவாரு! பொம்பள புள்ளைங்க எல்லாம் பைக் ஓட்ட கூடாதுன்னு சொல்லுவாரு, அதனால இந்த மாதிரி பைக்குகளை பாக்குறதோட சரி! என்னோட லவ்வரோட இந்த பைக்ல போகணும்னு ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு தான் எனக்கு நிறைவேறி இருக்கு! ” என்று பிரதிக்ஷா ஆர்வத்தில் சொல்ல புன்னகைக்க விதுரன் அவளை பார்த்தான்.
சந்தேகமாக விதுரனின் பார்வை இருப்பதை உணர்ந்த பிரதிக்ஷா ‘ நம்ம என்ன பேசனோம்,இவர் ஏன் ஒரு மாதிரி நம்மள பாக்குறாரு’ என்று யோசிக்க அப்போதுதான் தான் உளறியதை உணர்ந்தாள் பேதை.
அடுத்த நொடியே “என் புருஷனோட தான் போகணும்னு நெனச்சேன். லவ்வர் புருஷன் தானே புருஷன், லவ்வர் தான், எல்லாம் நம்ம எடுத்துக்கறதுல தானே இருக்கு! அதைத்தான் அப்படி சொன்னேன்!”என்று சமாளிக்கவிதுரன் பிரதிக்ஷாவை பார்த்து முறைத்தான்.
அவனைப் பார்த்து இளித்து விட்டு, ” சரி பைக்கை ஸ்டார்ட் பண்ணுங்க போவோம்!” என்று பேச்சை மாற்றினாள் பிரதிக்ஷா.
விதுரனும் கிளச்சை பிடித்து செல்ப்யை ஸ்டார்ட் செய்து கியரை போட்டுவிட்டு கிளச்சை விட பைக் மின்னல் வேகத்தில் பறந்தது!
அதுவரை பேலன்ஸ் இல்லாமல் இருந்தவள் விதுரனை தன்னிச்சையாக அணைத்துக் கொள்ள , விதுரன் பைக்கை ஸ்டார்ட் பண்ணிய வேகத்திலேயே பிரேக் போட்டு பைக்கை நிறுத்தினான்.
விதுரனின் முதுகில் தன் முகத்தை புதைத்திருந்தவள் பைக் நின்ற சத்தம் கேட்டு, ” என்னாச்சு? ” என்று கேட்க, தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பாமல் ஒன்னும் இல்லை, ரொம்ப நாள் யூஸ் பண்ணல்ல அதான் ஸ்டார்டிங் ட்ரபுள்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்தான்!.
அந்த இரவு நேரத்தில் சாலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் வர, அந்த பயணம் எந்த இடையூறும் இல்லாமல் இனிமையாகவே சென்றது.
தூய்மையான காற்று அவர்கள் சுவாசத்தில் வருட இருவரும் இனிமையாக அத்தருணத்தை அனுபவித்தனர்.
பிரதிக்ஷாவோ ஒரு படிக்கு மேல்! எத்தனை நாள் கனவு, இன்று நனவாக அவளால் எதையும் நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்கவும் முடியவில்லை! இந்த தருணத்தை ரசித்து விதுரனை இறுக்கி கட்டி பிடித்தாள்.
அவள் அணைப்பின் அழுத்தத்தை விதுரன் அறிந்தாலும், அதை அவனும் விரும்பினானோ என்னவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்.
சில நிமிட பயணத்திற்கு பிறகு அந்த சாலையில் இருந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நிறுத்த, ” எதுக்கு இங்க நிப்பாட்டுறிங்க இங்க வேண்டாம்! இன்னும் கொஞ்சம் தள்ளி போங்க, நான் சொல்ற இடத்துல நிப்பாட்டுங்க!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
கூகுள் மேப்பில் விதுரன் செக் செய்துவிட்டு, பக்கத்துல அரேபியன் ரெஸ்டாரன்ட் இருக்கு, அதுக்கு இருபது மினிட்ஸ் போகணும்,அங்க போகவா?” என்று கேட்க,
“நான் எங்க நிறுத்தனும்னு சொல்றனோ, அங்க நிறுத்துங்க! அது வர பைக்கை ஓட்டிகிட்டே இருங்க!” என்று பிரதிக்ஷாவும் கூறி விட பைக்கை ஸ்டார்ட் செய்தான் விதுரன்.
விதுரனோடு அவள் போகும் இந்த தருணத்தை அவள் ரசிக்க நினைத்ததால் எந்த இடத்திலும் அவள் நிறுத்த நினைக்கவில்லை!
குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு விதுரன், “இங்க பாரு, இதுக்கு மேல வெளியில போனால் சிட்டிக்கு வெளியில போயிருவோம்! அதனால இங்கேயே பக்கத்துல இருக்கிற ஹோட்டலுக்கும் போவோம்!” என்று கூறினான் விதுரன்.
“ப்ளீஸ் விது, இன்னும் கொஞ்சம் தூரம் மட்டும் போங்க, நான் சொல்ற கடையில நிப்பாட்டுங்க!” என்று சொல்ல, வேறு வழி இல்லாமல் விதுரனும் பைக்கை நிறுத்தாமல் சென்றான்.
“இங்கே நிறுத்துங்க!” என்று பிரதிக்ஷா திடீரென்று சொல்லவும் பக்கத்தில் பார்க்க எந்த ஹோட்டலும் இல்லாமல் இருந்தது!
“இங்கே எந்த ஹோட்டலும் இல்ல எங்க நிறுத்த சொல்ற? ” என்று விதுரன் கேட்க பக்கத்தில் இருந்தால் தள்ளுவண்டி கடையில் காட்டி ”இங்கே நிறுத்துங்க போய் சாப்பிடுவோம்!” என்று பிரதிக்ஷா சொல்ல, பிரதிக்ஷாவை ஒரு மாதிரியாக பார்த்தான் விதுரன்.
“என்னாச்சு பாக்குறீங்க நீங்க நினைக்கிற மாதிரி இல்ல, சாப்பாடு செமையா இருக்கும்!” என்று பிரதிக்ஷா சொல்ல,” இந்த மாதிரி ரோட்டு கடையில எல்லாம் சாப்பாடு ஹைஜினிக்கா இருக்காது!” என்று கூறினான் விதுரன்.
“பரவால்ல! ஒரு நாள் ஹைஜீனிக் இல்லாம சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“ஏய் நான் சொல்றதை கேளு!” என்று விதுரன் சொல்ல,”நான் எதையும் கேட்க மாட்டேன், நான் சொல்றத நீங்க வாங்கி தாங்க!”என்று சொல்லிவிட்டு அந்த தள்ளு வண்டியை நோக்கி ஓடினாள் பிரதிக்ஷா. விதுரனும் வேறு வழியில்லாமல் பிரதிக்ஷாவை பின் தொடர்ந்தான்.
“அண்ணா சாப்பிட என்ன இருக்கு?” என்று கேட்க,” இட்லி தோசை ஊத்தாப்பம் பூரி பொங்கல், எல்லாமே இருக்கு” என்று கடைகாரர் சொல்ல,
“அப்போ ரெண்டு தட்டு பூரி கொடுங்க!” என்று கேட்டாள் பிரதிக்ஷா. “அவரும் கடாயை அடுப்பில் வைத்து பூரியை போட புசுபுசுவென்று பூரி எண்ணெயில் மிதக்க அதை பார்த்தவளுக்கு எச்சில் ஊறியது.
“அண்ணா ரெடியாயிடுச்சு, எடுத்து போடுங்க” என்று பக்கத்தில் இருந்த தட்டை எடுத்து அவசர அவசரமாக நீட்டினாள் பிரதிக்ஷா.
“அவ்வளவுதாம்மா!” என்று எடுத்துவிட்டு பூரியை எடுத்து பிரதிக்ஷாவின் தட்டில் போட, அவளே அங்கு இருந்த குருமாவை கலக்கி தன் தட்டில் ஊற்றினாள்.
“ஏய் என்ன பண்ற அவங்களே ஊத்தி தருவாங்க!’ என்று விதுரன் சொல்ல, “சும்மா இருங்க நம்ம கடை, அதெல்லாம் அண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாரு!” என்று சொல்லிவிட்டு விதுரனுடைய தட்டிலும் குருமாவை ஊற்றினாள் பிரதிக்ஷா.
“ஆயில் ஐட்டம் நான் சாப்பிடுறது கிடையாது!” என்று விதுரன் சொல்ல, “ஒருநாள் சாப்பிட்டா, ஒன்னும் ஆகாது ஹைஜீனிக் ஹெல்த் கான்சியஸ் எல்லாத்தையும் எனக்காக இந்த ஒரு நாள் விடுங்க ப்ளீஸ் விது!”என்று சொல்ல, அவளிடம் வாக்குவாதம் பண்ண மனமில்லாமல் சரி என்பதை போல் தலை அசைத்து விட்டு தட்டை வாங்கிக் கொண்டான்.
“எப்படி சாப்பிடுவது என்று சொல்லி தாரேன்!”என்று சொல்லிவிட்டு “பூரிய மொதல்ல உடைங்க!” என்று சொல்லி அந்த பூரியை உடைக்க கற்றுக் கொடுத்தாள்.விதுரனுக்கு இது எல்லாம் புது அனுபவம். பான் வித் சில்வர் ஸ்பூன் என்று வளர்ந்தவனுக்கு இது எல்லாம் வித்தியாசமாகவே தெரிந்தது.
“நீ இந்த மாதிரி கடைகளுக்கு எல்லாம் வந்து அடிக்கடி சாப்பிடுவியா?”என்று விதுரன் தன் சந்தேகத்தை பிரதிக்ஷாவிடம் கேட்க, “சித்தப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், என்னையும் அம்மாவையும் சித்தப்பா பாத்துட்டு இருந்தனால சித்தப்பா சொல்றத தான் கேட்போம். சித்தப்பா நில்லுன்னு சொன்னால் நிக்கணும் நடன்னு சொன்னா நடக்கணும்! அப்படிதான் எங்களோட வாழ்க்கை இருந்துச்சு, அதனால இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நான் வந்து சாப்பிட்டது கிடையாது. ஆனால் ரொம்ப நாளா இந்த மாதிரி இடத்துல வந்து சாப்பிடணும்னு ஆசைப்பட்டு இருக்கேன். இன்னைக்கு தான் என் ஆசை நிறைவேறிருக்கு. உங்களோட சாப்பிடற இந்த நாள் தான் எனக்கு முதல் தடவை!” என்று பிரதிக்ஷா சொல்ல, திகைத்தான் விதுரன்.
பிரதிக்ஷாவோ தன் தட்டில் இருந்த பூரியை பிரித்து உருளைக்கிழங்கு குருமாவில் மூழ்க வைத்து தன் வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தாள்.
