காலமாயினும், காதலாயினும் கையில் இருக்கும் போதே கொண்டாடி விடு, விட்டுவிட்டால் எந்நாளும் திரும்பாது கூட போய்விடும்…!
உன்னில் சிறையாகிறேன் – 31
“எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நேசிப்பவள், நிச்சயமாக தனக்கு சொந்தமான உயிரை எப்படி நேசிப்பாள், உயிர் கொடுத்து அல்ல உயிரைத் துறந்தாவது நேசிப்பாள் அல்லவா” என்று அந்த கணம் அவள் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உருவானது,
அவனின் முதல் பார்வையில் மரியாதையை வென்றவள் காலத்தால் இடப்பட்ட கட்டளைகளின் பிடியில் சிக்கி அவனின் மனதையே வெற்று விட்டாள் என்பதே நிதர்சனம்,
அவளின் நினைவாக இருந்தவனுக்கு திடீரென தாத்தா திருவாசகம் இவளை தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென சொல்லி அருவியைக் காட்ட,
சொல்லிடங்கா ஆனந்தக்கடலில் மிதந்தவன் தன் உணர்வுகளை உள்ளே அடக்கிக் கொண்டு தன்னவளுக்கு மனதார தாலிகட்டி சொந்தமாக்கிக் கொண்டான்,
திருவாசகத்திடம் ஒருகோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தான் தன்னை திருமணம் செய்திருக்கிறாள் என்று அதன்பின் தான் அவனுக்கு தெரியவந்தது,
விஷயம் தெரிந்ததும் சுக்குநூறாக உடைந்து போனான், அதைவிடப் பேரிடியாய் அவளுக்கு ஒரு குழந்தை இருப்பது,
தன் மனதில் தேவதையாக காதலியாக தற்சமயம் மனைவியாக நேசித்து கனவிலேயே அவளுடன் காதல் கொண்டு வாழ்ந்தவனுக்கு, அவன் தன்னுடையவள் ஆவதற்கு முன்பே வேறொருவனுடையவள் என்பதை ஏற்க முடியாமல் தவித்தான்,
ஆயிரம் கசையடிகளைக் கூட வாங்க தயாராக இருந்தவனுக்கு அவளை இன்னொருவனின் உடமையாக இருந்தவள் என்பதை ஏற்க முடியாமல் போனதே அவனின் பரிதாப நிலை,
திருவாசகம் அக்னியை தேடி வந்து அருவியின் மொத்த இழப்பிற்கான காரணமாக அவனைக் கைகாட்டிய போது அவனால் அதை கொஞ்சமும் ஏற்கவும் முடியவில்லை, தன்னையே தன்னால் மன்னிக்கவும் முடியவில்லை,
அருவியின் பின்புலம் மொத்தமும் அறிந்தவனுக்கு, அவள் என்றும் தன்னவள் தான் என்று புரிய வர, அவளை நேருக்கு நேராக பார்க்கும் திராணியற்றுப் போனான் என்பதே நிதர்சனமான உண்மை,
தாத்தாவின் உதவியோடு அருவியை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தவனின் மனதில் இனி ஒரு துயரும் அவளை அண்டாமல் கண்ணின் மணியை இமை காப்பது போல காக்க வேண்டுமென்ற எண்ணங்களே மேலோங்கி இருந்தது,
மெல்ல மெல்ல அவளுடன் நெருங்கி அவள் மனதை வெல்ல நினைத்தவனை தன் அழகால் மயக்கி ஒரே இரவில் ஆறடிக்கும் அசராது நின்றவனை அடியோடு ஆளைச் சாய்த்து விட்டாள்,
சும்மாவே அவளைக் கண்டால் தறிகெட்டு ஓடும் மனதை அடக்க வெகுசிரமப்படுபவன், தன் பொய்யான கோபக் கணலென காட்டியே தன்னை மறைத்துக் கொண்டிருந்தான்,
நேற்றை இரவோடு இனி அந்த முகம் அவனுக்கு தேவையிருக்காது, அன்பையும் தன் காதலையும் வெளிப்படையாக காட்டி கெஞ்ச வேண்டும், கொஞ்ச வேண்டும் என்ற ஆவலோடு காத்திருக்கிறான் அக்னி,
மீட்டிங் ஹாலில் ஏசியின் குளிர்ச்சி உச்சத்தில் இருக்க, அக்னியின் மனமோ தகித்துக் கொண்டிருந்தது, எதிரே அமர்ந்திருந்த வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் புள்ளிவிவரங்களைப் பற்றிக் பேசிக்கொண்டிருக்க,
அக்னியின் கண்கள் லேப்டாப் திரையைப் பார்த்தாலும், அதில் தெரிந்ததெல்லாம் அருவியின் புன்னகை சிந்தும் முகம் தான்,
ஒரு வாரம் ஒரு யுகத்தைப் போல நகர்ந்தது அவனுக்கு, பகலில் வேலையில் மூழ்கித் தன்னை மறக்க முயன்றாலும், இரவு நேரங்களில் தனிமை அவனை வதைத்தது, தன் போனில் இருந்த அருவியின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே,
“மகிழ், நீயும் என்னை நினைச்சுட்டு இருப்பியா, இல்ல, நான் போனது உனக்கு நிம்மதியா இருக்குமா, இனி நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த ரகசியமும் இருக்காது,
அன்னைக்கு நடந்த விபத்தைப் பத்தி நானே உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடப் போறேன், என்னைத் தண்டிச்சாலும் சரி, ஏத்துக்கிட்டாலும் சரி ஆனா இனி நீ இல்லாம என்னால வாழவே முடியாது” என்று ஒரு திடமான முடிவோடு இருந்தான்,
அவனது இரும்பு இதயம் ஒரு பெண்ணுக்காகத் துடியாய்த் துடித்தது, பல ஆண்டுகளாக யாரையும் அண்டவிடாமல் தான் கட்டியெழுப்பிய கோட்டை,
அருவி என்ற ஒற்றைப் பெண்ணின் மெல்லிய சிரிப்பில் தவிடுபொடியாகிக் கிடந்தது, அவளிடம் தன் காதலைச் சொல்ல அவன் ஆயிரம் வார்த்தைகளை மனதிற்குள் கோர்த்து வைத்திருந்தான்,
”மகிழ்… உன்னை நான் முதல்ல பார்த்தப்போ உருவான அந்த மரியாதை, இன்னைக்கு காதலா உருமாறி நிக்குது, உன்னைக் கட்டிப்பிடிச்சு, நீ மட்டும் தான் என் உலகம்னு சொல்லணும்னு என் உயிர் துடிக்குது” என்று அக்னியின் உள்மனம் அவளிடம் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தது,
மீட்டிங் முடிந்த அந்த கடைசி நிமிடம், அக்னிக்குச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்த உணர்வு, திலீபன் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல்,
“நீ இங்க இருந்து எல்லா வேலையையும் முடிச்சுட்டு பொறுமையா வா, எனக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு அடுத்த ப்ளைட் பிடிச்சு பறந்து வந்தான் அக்னி,
அக்னிக்கு இன்று மட்டும் ஏனோ வானில் பறக்கும் விமானத்தின் வேகம் கூட சிற்றெறும்பின் வேகமாகத் தெரிந்தது,
இறக்கை மட்டும் இருந்திருந்தால் காற்றை கிழித்துக் கொண்டே பறந்தே தன்னவளிடம் வந்திருப்பானாக இருக்கும்,
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவனை அழைத்துப் போக கார் தயாராக இருந்தது, அக்னி காரில் ஏறவும் டிரைவர் காரைக் கிளப்ப,
விமானத்தின் வேகமே சிற்றெறும்பு என்றால் கார் மட்டும் எம்மாத்திரம், வெளியே சொல்லவும் முடியாமல் உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாத பரவசத்தில் இருந்தான்,
அவனின் வேகத்திற்கு இந்த உலகில் எதுவுமே ஈடில்லை, கார் வீட்டை நெருங்க நெருங்க நெருங்க அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒருசேர சிறகடித்ததைப் போன்றதொரு உணர்வு,
அவனது கார் வீட்டின் போர்டிகோவில் வந்து நின்றபோது, கைகளும் கால்களும் கூட பரபரவென பரபரத்தது, இதயத்தின் வேகம் தாறுமாறாக துடித்தது,
“மகிழ்……… இதோ நான் வந்துட்டேன்……. மகிழ்……” என்று சத்தமாக கத்தி சொல்ல வேண்டுமென துடிக்க அதை எல்லாம் வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு புயலென வீட்டிற்குள் பாய்ந்தான்,
வீட்டிற்குள் நுழைந்த அக்னியின் கண்கள் அலைபாய்ந்தன, ஹாலில் யாருமில்லை, ஒரு வாரப் பிரிவின் ஏக்கம் அவனது கால்களை நேராக அவனின் அறைக்கு இழுத்துச் சென்றது,
எப்படியும் அறைக்குள் இருக்கப் போகிறாள் அவளைக் கட்டிப் பிடித்து பல ஆயிரம் முத்தம் தரவேண்டும், அட்லீஸ் சில நூறு முத்தங்களையாவது தந்தால் தான் தன் மனதை அடக்க முடியும் என்ற நிலையில்,
கதவைத் திறந்த போது அங்கே அநாதையாக நின்ற தனிமையும், கலைந்து கிடந்த படுக்கையும் தான் அவனுக்காக காத்திருந்தது, பாத்ரூம், க்ளாசெட், பால்கனி என அந்த அறையின் மூலை முடுக்கெல்லாம் தேடினான்,
”மகிழ்… எங்க இருக்க, விளையாடாம என் முன்னாடி வந்திரு மகிழ், நீ எங்க இருக்க ப்ளீஸ் வா” என்று அவனது குரல் அந்த அறையெங்கும் எதிரொலித்தது,
பால்கனியில் நின்று கீழே பார்த்தான் தோட்டத்தில் தாத்தா அமர்ந்திருப்பதைப் பார்த்து அங்கே ஓடினான்,
அங்கே திருவாசகம் ஐயா மட்டும் தனியாக அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தார், அவரது முகத்தில் இருந்த அந்தத் துயரம் அக்னியை உறைய வைத்தது,
”தாத்தா, மகிழ் எங்க ஐ மீன் அருவி எங்க, வெளிய எங்கேயாவது போயிருக்காளா, அவ எங்க போயிருக்கான்னு தெரியுமா தாத்தா” அக்னி அவர் அருகில் மண்டியிட்டு அமர்ந்து கேட்டான்,
திருவாசகம் மெல்லத் தலைநிமிர்ந்து அக்னியைப் பார்த்தார், அவரது கண்கள் சோகத்தின் மொத்த உருவமாக இருந்தது,
“போயிட்டா அக்னி… அவ போயிட்டா, நானும் திரும்பி வர மாட்டே, என்னைத் தேடி யாரும் வந்துடாதீங்கன்னு சொல்லிட்டு போயிட்டா அக்னி” என்றவரின் கண்கள் கலங்கியது,
மதிப்பும் மரியாதையும் மிக்க தாத்தாவின் அழுகையும், உயிராய் உறவாய் நேசித்தவள் இல்லை என்ற நிதர்சனமும் ஒருசேர தாக்க அக்னியின் இதயத்தின் ஆழம் வரை வலியாய்த் தாக்கியது,
“என்ன சொல்றீங்க தாத்தா? எங்க போனா? எதுக்கு போனா?” என்று அவசர அவசரமாக அக்னி கேட்க, கலங்கிய கண்களைத் துடைத்த திருவாசகம் தாத்தா அக்னியை தீர்க்கமாகப் பார்த்தார்,
அக்னி மீட்டிங்கிற்காக வெளியூர் சென்ற செய்தி ரவி மூலம் தெரிந்தபோது, அருவிக்கு ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது,
“நல்லது… கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள், அந்தப் பெரிய அறையில் அவன் இல்லாதது முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு சுகமான சுதந்திரத்தைத் தந்தது,
எதைப் பற்றியும் யோசிக்காமல், யாழினியோடு விளையாடிக் கொண்டு அந்த அறையைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தாள், ஆனால், அதெல்லாம் ஒரு பொழுது தான், இரவு திரும்பியவுடன் அந்தச் சுதந்திரம் மெல்ல மெல்லச் சுமையாக மாறத் தொடங்கியது,
அறை முழுவதும் அக்னியின் வாசம், அவன் பயன்படுத்திய பெர்ஃப்யூம், அவன் கலைத்துப் போட்ட உடைகள், மேஜையில் இருந்த அவனது கைக்கடிகாரம் என ஒவ்வொன்றும் அக்னியை அவளுக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தன,
“ஏன் இப்படிப் பண்ணுறீங்க அக்னி, இருக்கும் போது தான் வாட்டுறீங்கன்னு பார்த்தா, நீங்க இல்லாதப்போ கூட ஏன் என்னை இவ்வளவு வதைக்கிறீங்க” என்று புலம்பினாள்,
அவனில்லா தனியறை கூட தனித்தீவாகத் தான் தெரிந்தது, அவனது அதன் வாசம் அவளது நாசியைத் துளைக்க, அவளையும் அறியாமல் கண்கள் சொருகியது,
அவனோடு கழித்த அந்த ஒரு இரவு, அவளது மனக்கண்ணில் திரைப்படமாக ஓடியது, அவனது ஒவ்வொரு தீண்டலும், குறும்பான பேச்சும், விடாமல் துரத்திய முத்தங்களும், இப்போது அவளுக்கு உயிர் வலியாய் இருந்தது,
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது, அவனது பிம்பம் பின்னிருந்து வந்து அவளைக் கட்டிப்பிடிப்பது போல ஒரு பிரம்மை,
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால் அங்கே மிஞ்சியது என்னவோ வெறுமை மட்டும் தான், சுவரில் இருந்த அவனது பெரிய புகைப்படத்தைப் பார்த்தாள்,
அவன் அவளைப் பார்த்து மெல்லியதாகக் கண்ணடிப்பது போலவே தோன்றி இம்சித்தது, இரவு நேரங்கள் இன்னும் கொடூரமாக இருந்தது,
ஏசியின் குளிர்ச்சி உடலில் படரும்போது, அக்னியின் அந்தத் தகிக்கும் மார்புக்கூட்டின் கதகதப்பு அவளுக்குத் தேவைப்பட்டது, சில நாட்கள் மட்டுமே கிடைக்கப் பெற்ற அவனின் அருகாமை,
இன்னும் வேண்டுமென அவனுள் ஏக்கமும் தவிப்பும் கூடிப்போனது, அவன் தோளில் சாய்ந்து உறங்கிய அந்த நிமிடம் மீண்டும் கிடைக்காதா என ஏங்கினாள்,
”ஏன் அக்னி… ஏன் என் லைஃப்ல வந்தீங்க” என்று அவனையே குற்றம் சாடியவள், படுக்கையில் அவன் படுக்கும் பக்கத்தைத் தடவிப்பார்த்தபடி விடிய விடிய உறங்காமல் தவித்தாள், பசி எடுக்கவில்லை, தூக்கம் வரவில்லை,
ஒரு சிறு பிள்ளையைப் போல அவனது வரவுக்காக வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி, அதன் பெயர் தான் காதல் என்பதைக் கூட அறியாத பேதையவளோ,
காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு வதைக்கும் இன்பம் என்பதை அக்னியின் பிரிவில் அருவி முழுமையாக உணர்த் தொடங்கினாள் மகிழருவி,
இவ்வளவு ஏக்கம் தவித்து துடிப்பு என மொத்தம் சேர்த்து காதலாகக் கொண்டவள் அவன் வரும் முன் ஏன் அவனை நீங்கிச் சென்றாள்,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
