வேனலின் வெண்பூவே
அத்தியாயம் 27
ஒரு குழந்தை வந்ததால் என்ன மாறிடும்? பெரும்பாலும் அப்பாக்களுக்கு ஒரு அது சமூக கௌரவம். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. ஒரு குழந்தை பிறப்பிலிருந்து முழுதாக மீள, ஐந்து வருடங்கள் கூட ஆகும். ஆனால் தாய்மார்களை யாரும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு கண்டுகொள்வதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் குழந்தைப் பேற்றின் முழு செலவும் பெண் வீட்டினர் செய்ய வேண்டும். பெண் குழந்தை பிறந்து விட்டால் பார்க்க வராத கணவன் வீட்டினர் ஏராளம். ஆண் குழந்தை பிறந்தால் தங்கள் வீட்டு வாரிசு என ஓடோடி வந்து விடுவர். அந்தப் பெண்ணுக்குச் சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் உண்டு. ஆனால் ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும், பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உண்டாகும் உபாதைகளுக்கும் ஆணின் மரபணுவே காரணம் என்பது தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவையில்லாத டிராமாக்கள் எதுவும் இல்லாமல் என்னோட குழந்தையை நான் பெத்தெடுத்து வளர்க்கணும்.
-பத்மமுகி.
இரவில் நிலா நட்சத்திரங்களுக்கும், மேகங்களுக்கும் இடையே தன்னுடைய உலாவினை ஆரம்பித்திருக்க, ஆதியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் பத்மமுகி. இருவரும் ஆள் அரவமற்ற அந்த மணல் கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.
முகியை மீண்டும் விடுதியில் சந்தித்து இருக்க, ஆதி அவள் கையைப் பிடித்தவன் பாய்ந்து கட்டிக் கொண்டான்.
“ஸாரிடாம்மா… ஸாரி… என்னை மன்னிச்சிரு!” முகியின் உடல் அவன் அணைப்பில் விரைத்தது. எப்போதும் அவனருகில் உருகுபவளின் முகத்திலும் கடினத் தன்மை ஒன்று குடியேறியது.
தன் வாழ்க்கையாக நினைத்தவளின் முகத்தில் இருந்த யாரோ என்ற பாவனை ஆதியை கொன்று போட்டிருந்தது.
“லீவ் மீ ஆதி. டோன்ட் கிரியேட் ஏ சீன் ஹியர்.”
“முகி, எனக்கு ஒரு சான்ஸ் குடு. உங்கிட்ட பேசணும்.”
“நான் பேசும்போது யாருமே கேட்கலை. என்னை டைவர்ஸ் பண்ணிட்டு உங்க செகரட்டரியை கட்டிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. அவளைத்தான் பிடிச்சிருக்குன்னா என் பின்னாடி எதுக்கு அவ்வளவு நாள் சுத்தி, மேரஜ் பண்ணி அப்புறம் உங்க அம்மா, அக்காவுக்குக் குடை புடிச்சி… கெட் லாஸ்ட்!” என அவனை விட்டு விலகிச் செல்ல முயற்சிக்க அவன் விடவில்லை.
முகியின் இந்த முகத்தை ஆதி பார்த்ததே இல்லை. அவனிடமிருந்து முற்றிலும் விலகி விட்டதைப் போல் பேச்சு.
அங்குச் செல்லும் சிலர் அவர்களை வினோதமாகப் பார்த்து வைக்க, பத்மமுகி நெற்றியைத் தடவிக் கொண்டாள்.
“அக்கா இங்க…” என்றபடி காமினியும், கார்த்திக்கும் வர, ஆதியைப் பார்த்து நின்று விட்டனர்.
“காமினி, தனியாப் பேச ஒரு இடம் வேணும்டா. அப்புறம் ஒரு செக்யூரிட்டி கொஞ்சம் தள்ளிப் பாதுகாப்புக்கு வேணும்.”
அவள் செக்யூரிட்டி என்றதும் ஆதியின் மனம் சுக்கு நூறாக உடைந்து விட்டிருந்தது. அவளை அதே முக பாவனையுடன் பார்க்க முகியின் முகத்தில் சிறிதும் இளக்கமில்லை.
“வாங்க காட்டறேன்.” எனக் கார்த்திக் முன்னே நடக்க, காமினி முகியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அப்போதுதான் அவளுடைய இன்னொரு கையில் இருந்த மருத்துவமனையின் பையைப் பார்த்தாள் காமினி.
விடுதியின் பின்பக்கத்தில் உள்ள கடற்கரையினைக் காட்டினான் கார்த்திக்.
“நாங்க இங்கதான் இருப்போம், கார்டும் இருப்பாங்க. எதுன்னாலும் ஒரே ஒரு சவுண்ட் கொடுங்க.”
அரையிருட்டில் பத்மமுகியும், ஆதியும் அமர்ந்தனர்.
“ஏன் முகி உன்னை நான் நல்லாப் பார்த்துக்கலையா? எதுக்கு என்னை டைவர்ஸ் பண்ணனும் பெரிய முடிவெல்லாம் எடுத்த? உன்னைத் தேடி நான் வர மாட்டேன்னு நினைச்சியா? உனக்கு நான் ஏதாவது ஆபத்து விளைவிப்பேன்னு நினைச்சியா? கார்டு எல்லாம் வச்சுக்கற அளவுக்கு?” ஆதியின் குரலில் சோகம் கலந்திருந்தது.
“உங்க குடும்பம் செஞ்சாலும் செய்வீங்க.” முகி கத்தரிக்கும் குரலில் கூறினாள்.
“முகி, நீதாண்டி என் குடும்பம்.”
அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தது.
“நான் கிடையாது. உங்க அம்மா, அக்கா, தாகினிதான் ஒரே குடும்பம்.”
“தாகினிக்கும் எனக்கும் சந்த சம்பந்தமும் இல்லை. தாகினியை வேலையை விட்டுத் தூக்கிட்டேன்.”
தன் கணவனை நம்ப இயலாமல் பார்த்தாள் முகி.
“ஓ! வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர வேலையை விட்டுத் தூக்கிட்டீங்களா?”
“முகி, உன்னைத் தவிர வேற யாரும் நம்ம வீட்டுக்குள்ள வர முடியாது. கொஞ்சம் பொறுமையாக இதை மட்டும் பாரு.”
முகிக்கு விருப்பம் இல்லை என்றாலும் அபிதா கூறியது நினைவுக்கு வர அந்தக் கையடக்கக் கணினியை வாங்கினாள்.
தேதியும், நேரமும் காட்டியபடி ஓடியது அந்தச் சிசிடிவி ஃபுட்டேஜ்.
ஆதி திரும்பி நின்று கொண்டிருக்க தாகினி பேசிக்கொண்டிருந்தாள்.
“இதைச் சொன்னதுக்கு தேங்க்ஸ் தாகினி…” என அவன் கூறி முடிக்கும் முன் மாடிப்படியைப் பார்த்த தாகினி உடனே ஆதியின் முன்னால் சென்று அவனை முத்தமிட்டிருந்தாள். அதைத் தொடர்ந்து ஆதி அவளைத் தள்ளி விடுவதும் பதிவு செய்யப்பட்டிருந்தது.”
“ஏன் ஆதி உங்களுக்கு என்னைப் பிடிக்கும்ல, அந்த லோக்கிளாஸ் முகிக்கும் உங்களுக்கும் பிரச்சினைதானே?”
“ஏய்… ஸ்டே இன் யுவர் லிமிட். என்னோட ஃபேம்லி லைஃபில் தலையிட நீ யாரு? என்னோட வைஃபை பத்தி மரியாதை இல்லாம பேசற! நீ பொண்ணுன்னுதான் சும்மா விடறேன். கெட் லாஸ்ட்.” ஆதியின் முகத்தில் அத்தனை வெறுப்பு மண்டி இருந்தது.
அந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு அமைதியாக அவனிடம் கொடுத்தாள்.
“ஓகே, நீங்கச் சீட் பண்ணலை. ஆனால் அதைவிடப் பெரிய பிராப்ளம் ஒன்னு இருக்கு. உங்க அம்மாவும், அக்காவும்.”
“அவங்களை நான் பார்த்துக்கிறேன்.”
“உங்க அம்மாவும், அக்காவும் ஜெயிலுக்குப் போக வேண்டியவங்க. போனாப் போகுதுன்னு நான் கம்ப்ளைண்ட் குடுக்கலை.”
“முகி, அவங்க உன்னை என்ன பண்ணிடப் போறாங்க?”
“என்னோட குழந்தைக்கு விஷத்தைக் கொடுத்தாலும் கொடுப்பாங்க.” எனக் கோபத்தில் தன் வயிற்றைத் தடவியவுடன் ஆதியின் விழிகள் விரிந்தது.
“நிஜமாவா?”
அவள் அதற்குப் பதில் சொல்வதற்குள் தன் மனைவியைத் தூக்கிச் சுற்றி இருந்தான் ஆதி.
“என்னைக் கீழ விடு ஆதி. ஆதி…” என அவள் கத்தவும் ஆதி அவளை இறக்கிவிட்டு கட்டியணைத்துக் கொண்டான்.
“முகி, ஐ லவ் யூ!”
“பட் ஐ டோண்ட்.” முகி பற்களைக் கடித்தபடி கூறினாள்.
“முகி, உன்னை விட்டுப் போற ஐடியா எல்லாம் எனக்கில்லை. அதுவும் இப்ப இப்படின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படி உன்னை விட்டுப் போவேன்?”
“உங்க கூட வந்தால் உங்க அம்மாவும், அக்காவும் சேர்ந்து என்னோட குழந்தையைக் கொன்னுடுவாங்க.”
“முகி, நீ இப்ப ரொம்ப எமோஷனலா இருக்க.”
“எமோஷனா? நானா? எனக்குக் குழந்தை பொறக்கக் கூடாதுன்னு நான் அந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து சத்து மாத்திரைன்னு கான்ட்ராசெப்டிவ்ஸ் குடுத்துருக்காங்க. நான் பிரக்னென்ட் ஆனால் நீ எங்க என்னைவிட யோசிச்சுட்டா? இது கிரிமினல் அஃபன்ஸ். அந்தக் கான்ட்ராசெப்டிவ்ஸ்னால எனக்குப் பாடில எவ்வளவு அஃபக்ட் ஆச்சுன்னு தெரியுமா? அதுமட்டுமில்லாமல் உங்க வீட்டுக்கு நான் மருமகள் கிடையாது. வேலைக்காரி. நான் வந்ததால் வேலைக்கு வர அம்மாவை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க உங்க அம்மா.”
கருத்தடை மாத்திரை ஆதிக்கு தெரியாத ஒன்று. வேலைக்காரப் பெண்ணைப் பற்றியும் அவன் முகியைத் தேடி கிளம்பி வரும்போதுதான் அறிந்திருந்தான். தன் அன்னை, சகோதரியைப் பற்றி அவன் முழுதாக அறியவில்லை. அவர்களுக்கு இப்படியொரு கோரமுகமா?
முகியைத் தேடி வரும் வழியில் ஓரிடத்தில் தேநீர் குடிக்க மகிழுந்தை நிறுத்தி இருக்க, அப்போதுதான் அவர் வந்தார்.
“தம்பி, நல்லா இருக்கீங்களா?”
“அம்மா, நீங்க எங்க இங்க?”
“இந்தப் பக்கம் என்னோட சொந்த ஊரு தம்பி.”
“உடம்புக்கு பரவால்லையாம்மா? உங்களுக்கு உடம்பு சரியில்லை அதனால் வேலையை விட்டு நின்னுட்டீங்கன்னு சொன்னாங்க.”
“தம்பி, அப்படி எல்லாம் ஒன்னுமில்லைப்பா. உங்க அம்மாவைப் பத்தி தப்பா சொல்றேன்னு நினைக்காத. உன் அக்காவும் சரியில்லை. உன் பொண்டாட்டியை பத்திரமாகப் பார்த்துக்க, அவங்க என்னை வேலையை விட்டு நிறுத்துனதே உன் பொண்டாட்டியை வேலை வாங்கத்தான்ப்பா. பத்திரமாப் பார்த்துக்கோ. இதெல்லாம் நான் அவங்க ஒரு தடவை ஹால்ல உட்கார்ந்து உன் கல்யாணத்துக்கு முன்னே பேசுனப்பவே கேட்டுட்டேன். இருந்தாலும் நீங்கப் பார்த்துக்குவீங்கன்னு நம்பிக்கையில் நானும் எதுவும் சொல்லலை. நல்லாருக்காங்களா அவங்க?”
“இல்லைம்மா. என்னை விட்…”
எதிரில் இருந்தவரின் முகம் அதிர்ந்தது.
“தம்பி, நான் சொல்றேன் கேட்டுக்கோ. உன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் பணம்தான் முக்கியம். வீட்டுக்கு வந்த பொண்ணை அவங்க துரத்த முடிவு செஞ்சுருந்தாங்க. அவங்களை எதிர்த்துப் பேசினால் சுத்து வட்டாரத்தில் நான் எங்கேயும் வேலை செய்ய முடியாது. என்னால் பேசவும் முடியலை. இப்ப நான் யாருகிட்டேயும் வேலைக்குப் போறது இல்லை. சொந்தமாக மளிகைக்கடை போட்டுட்டேன். உன் பொண்டாட்டியை விட்ராதப்பா. யாருமில்லாத புள்ளைன்னு அவங்க சொல்லிக் கேட்ருக்கேன். உன்னை மட்டுமே நம்பி வந்திருக்கும். பேசிச் சரி பண்ணுயா.”
சரி என்னும் விதமாக அவன் தலை அசைந்தது.
“இந்தப் பக்கம் வந்தால் வீட்டுக்கு வாப்பா.” என விசிட்டிங் கார்டைக் கொடுத்தார் அவர்.
“ரொம்ப தேங்க்ஸ்மா.”
“நல்லாரு தம்பி. எங்க போயிடப் போகுது உன் பொண்டாட்டி. அதெல்லாம் வந்திரும்யா.” என ஆதிக்கு ஆறுதல் வார்த்தை கூறி அனுப்பி இருந்தார் அந்தப் பெண்மணி.
தன் மனைவியைப் பாதுகாக்கவில்லை என்ற உண்மை ஆதியை ஏற்கனவே அணு அணுவாகக் கொன்று கொண்டிருக்க, இப்போது தெரிந்த உண்மை அவனை முழுதாக மனதளவில் மரிக்கவே வைத்திருந்தது எனலாம். தன் இரத்தங்களின் கொடூர முகங்களை எண்ணி அவனது இதயம் இரத்தக் கண்ணீர் வடித்தது.
“உன்னோட அம்மா, அக்கா உனக்கு நல்லவங்களா, பாசமானவங்களா இருக்கலாம். ஆனால் அதெல்லாம் பொய் ஆதி. நானே கேட்ருக்கேன். அவங்க என்னைத் துரத்தப் பிளான் பண்ணி முடிவு செஞ்சதும் எனக்குத் தெரியும். அதோட டவுட்டில் டேப்லெட்ஸ் எல்லாம் லேபில் செக் பண்ணப்பதான் எனக்கு உண்மை தெரிஞ்சுது. அந்த வீட்டில் இருக்க எனக்குப் பிடிக்கலை. ஆனாலும் எனக்கு நீ இருக்கேன்னு நினைச்சேன் ஆதி. ஆனால் அந்த… பார்ட்டி…”
“முகி ஸாரி… இப்ப நான் என்ன பண்ணனும்?”
“அது உனக்கே தெரியணும் ஆதி. நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்லை. இதுவரைக்கும் நம்ம பிளான்ஸ் எல்லாமே அவங்களும், தாகினியும் சேர்ந்து மாத்தி விட்ருக்காங்க.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். என் கூட வந்துரு முகி.”
“அதுக்கு சான்ஸ் இல்லை ஆதி. உன்னோட அந்த உலகத்துக்குத் திரும்பி வந்தால் எனக்கு ஸ்ட்ரெஸ் ஆகும். அது என்னோட குழந்தைக்கு நல்லது இல்லை. பாம்புகளுக்கு மத்தியில் கூட என்னோட குழந்தை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் உன்னோட வீட்டில் இல்லை. நான் சில தடவை உங்க அம்மா குத்திக் காட்டறாங்கன்னு சொல்ல ட்ரை பண்ணேன். உன் வீட்டில் என்னால் நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடியலை. நான் சொல்ல வந்த டைமெல்லாம் நீ அதைக் காது குடுத்துக் கேட்கலை ஆதி. உங்க அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை. அதனால் என்னோட நம்பிக்கையை நீ இழந்துட்ட. கட்டுன பொண்ணைக் காப்பாத்த முடியலைன்னா உனக்கு எதுக்குக் கல்யாணம்? என்னை வாழ விடு. காதல்னு கூட்டிட்டுப் போய்ச் சாகடிக்க வேண்டாம். இப்ப நான் இரண்டு உயிரு. எனக்கு வேணா யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் குழந்தைக்கு நான் இருக்கேன்.”
முகி பேச வேண்டிய அனைத்தையும் கொட்டி விட்டிருந்தாள். எதிரில் இருந்தவனை அவள் வார்த்தைகளால் கொட்டித் துண்டு துண்டாக உடைத்திருந்தாள். அதிகம் உணர்வுப்பூர்வமாகப் பேசியதில் அவள் விழிகளிலும் நீர் வழிந்தது. ஒரு கணவனாக அவன் தோற்று விட்டதை அவள் மனைவி புரிய வைத்திருந்தாள். அனைத்திற்கும் காரணம் அவனுடைய அன்னையின் மீதும், சகோதரியின் மீதும் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. முகியை திருமணம் முடித்து வந்தபோது அவளை நன்றாக நடத்தினார். திருமணத்தையும் அவ்வளவு சிறப்பாக நடத்தி இருந்தார். அது அத்தனையும் கபட நாடகம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்திருந்தது.
மணலை விட்டு எழுந்த முகி, உடையில் இருந்த மணலைத் தட்டிவிட்டு அதனுடன் தன் உணர்வுகளையும் தட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். அழுத்தி வைத்த உணர்வுகளைக் கொட்டி இருந்தவள் நடையில் ஒரு வித நிமிர்வு வந்திருந்தது.
காமினியும், கார்த்திக்கும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாலும் கவனத்தை முகியின் பக்கம் வைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக அந்தச் சம்பவம் நடந்திருந்தது.
*****
