அத்தியாயம் -28

வேனலின் வெண்பூவே

 

அத்தியாயம் 28

 

வாழ்க்கையில் சில நேரம் நமக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அதை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பானில் உடைந்த பாத்திரங்களைத் தங்கத்தைக் கொண்டு சரிசெய்யும் முறை ஒன்று உள்ளது. அதன் மூலம் அந்தப் பொருட்களின் மதிப்பும் கூடி விடுகிறது. சில சமயம் உடைந்து ஒட்டும் உறவுகள் கூட மிகவும் வலிமையாகி விடுகிறது. ஆனால் உடைந்த இடம் ஒட்டி விடலாம். இன்னும் பாத்திரத்தில் உடையும் இடங்கள் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
     -ருத்ரசேனா.

கடிகாரம் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்க காமினி தன் அறையினுள்ளே இரவு உடையில் ஓய்வு இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். வேலை, பத்மமுகி விஷயம் இவையெல்லாம் தாண்டி ருத்ரா அவள் தலைக்குள் புகுந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தான். ருத்ரனை எப்போதும் அவளுக்குப் பிடிக்கும். அதற்கு முதல் காரணமாய் அவளுக்குத் தாயில்லாத நிலையில் பெண்துணையாய் இருந்து வழி நடத்திய அபிதாவின் மகன் அவன். அத்தோடு ருத்ரா காமினியிடம் அளவாகப் பேசினாலும், தனது சகோதரனுக்கும், தந்தைக்கும் மிகவும் பிடித்தமானவன். தன்னிடம் ஒதுங்கியே இருப்பவனின் திடீர் செயல்கள் அவள் மனதை அலைக்கழித்தன.

காமினி தன்னுடைய நிலையைப் பற்றிக் கூறியபோது, அதற்கு ருத்ரா கூறிய பதில் பழையனவற்றை மேலும் நினைவூட்டியது.

“ஆமா, நீ என் சித்தப்பா பையனோட ஃபியான்சியாக இருந்த. இப்ப இல்லை. அதோட எப்ப நமக்குள்ள இதெல்லாம் நடந்துதோ அப்பவே அந்த ரீஸன் எல்லாம் பின்னுக்குப் போயிருச்சு. முதல்ல உனக்கு என்ன வேணும்னு தெளிவாக யோசிச்சுட்டு வா.”

ருத்ரனின் அந்தப் பதில் கடந்தகாலத்தின் இனிய பக்கங்களோடு, கசப்பான பக்கங்களையும் கொண்டு வந்திருந்தது.

***

காமினி கல்லூரி முடித்து இரண்டு வருடங்கள் கடந்திருக்க, சிவபொன்னம்பலம் அவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பித்திருந்தார். தன் மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்த வேண்டும் என்று ஆசை அவருக்கு.

அப்போது ருத்ராவின் தந்தை வழி சொந்தத்தில் வந்து சேர்ந்திருந்தது அந்த வரன். காமினி தந்தை முடிவு செய்பவரைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்க ராகவும் அவளுக்குப் பிடித்தமாதிரி அமைந்திருந்தான்.
மாநிறம், ஆறடி உயரம், சிரித்தால் கன்னத்தில் விழும் குழியென வசீகரமாக இருந்தான் ராகவ். அதை விடக் காமினியை வெளியே அழைத்துச் செல்லும் போதெல்லாம் அவளை நன்றாக நடத்தினான். ஒளிவு மறைவின்றி பேசுவான்.

மணமகனாக வருவதற்கு முன்பே ராகவைப் பற்றி அவளுக்கு அபிதாவின் மூலம் தெரியும். அன்னை தந்தை கல்லூரி படிக்கும்போது காலமாகிவிட, சில நாட்கள் அபிதாவின் கவனிப்பில் இருந்தவன், பிறகு வேலை காரணமாக வெளியூர், வெளி மாநிலம் அதன் பிறகு வெளிநாடு சென்று விட்டான். இப்போது மீண்டும் அவர்கள் இருக்கும் ஊரிலேயே தொழில் தொடங்கி இருந்தான்.

காமினியின் தந்தைக்கும், மகளை அருகில் கொடுப்பது மகிழ்ச்சியே. அவள் வேலைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

காமினி, ராகவ் திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் இருந்தது. ஒவ்வொரு முறையும் காமினியை சந்திக்க வரும்போது மலர்க்கொத்துடன் வருவான் ராகவ். அவளை ஒவ்வொரு தடவையும் அவனுக்குக் காமினி முக்கியம் என உணர வைத்தான். சின்ன சின்ன சீண்டல்கள், விழிகளால் பேசும் பரிபாஷை, அவ்வப்போது யாரும் அறியாமல் கைக்கோர்த்து ரகசியம் பேசும் தருணங்கள், இரவு நேரத்தில் வேலை இருந்தாலும் நேரம் ஒதுக்கிப் பேசும் அலைபேசி உரையாடல்கள் எனக் காமினிக்கும் மற்ற பெண்களைப் போல் திருமணமாகும்போது நடப்பவை நடந்தேறியது. ராகவுக்கும் வாழ்க்கைத் துணையாக வரப் போகும் காமினியின் மீது மிகப் பிரியம். இருவரின் பிடித்ததுடன் கொண்டாட்டத்தோடு நடந்தேறியது இருவரின் நிச்சயதார்த்தமும்.

ஒரு பெட்டியில் அவனுடைய நினைவுகளைப் பூட்டி வைத்திருக்க, இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படத்தினைப் பார்த்தவளுக்கு விழிகளிலிருந்து கண்ணீர் தானாக வழிந்தது. அவளுடன் வாழக் கண்ட கனவுகளை எல்லாம் கனவாக விட்டுவிட்டு உலகை விட்டே நீங்கிச் சென்றிருந்தான் ராகவ்.
திருமணத்திற்கு சில நாட்களுள்ள நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய பொருட்களை விற்று விட்டு வரச் சென்றிருந்தவன் திரும்பி வரவே இல்லை. அங்குப் புயல் மழையில் சிக்கிப் பலியாகி இருந்தான்.

கல்யாண வீடு களையிழந்து போயிருந்தது. காமினி, சிவபொன்னம்பலம், கார்த்திக், அபிதா என அனைவரும் உடைந்து போய் அமர்ந்திருந்தனர். ராகவின் இறப்பைப் பற்றி விசாரிக்கப் பலரும் அழைத்துக் கொண்டே இருந்தனர்.

‘திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது மணப்பெண்ணை சோகத்தில் ஆழ்த்தி சென்று மறைந்த மணமகன். மணப்பெண்ணின் நிலை என்ன?’ என்ற செய்தி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளிலும் வந்துவிட்டது.

காமினியின் உலகம் உறைந்து போயிருந்தது. தன்னுடன் வாழ அத்தனை நம்பிக்கை கொடுத்திருந்தவன் மரித்துப் போயிருந்தான். அவன் உடல் இந்தியாவிற்கு வந்து சேரவே ஒரு மாதம் பிடித்துவிட்டது. காமினி ஒரே மாதத்தில் மிகவும் இளைத்துப் போயிருந்தாள். பொன்னம்பலத்திற்கோ தன் மகளின் வாழ்வு இப்படியாகிவிட்டதே என்ற வருத்தம் அவர் மனதைக் கூறு போட ஆரம்பித்தது. சிவகார்த்திக் இருவரையும் கவனித்துக் கொள்ள பாடாய்பட்டுவிட்டான்.

தன் மகள் திருமணம் நின்ற துக்கத்தில் இருந்த காமினியின் தந்தை உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, காமினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வீட்டில் இருந்தால் அழுத்தமாக இருக்கிறது என வெளியில் சென்றால் மக்கள் அவளை அனுதாபமாகப் பார்த்தனர். அத்தோடு அவள் ராசியையும் சிலர் குறை கூறினர். ஒரு பெண் பிறந்தபோது பணம் வந்தால் அவள் மகாலட்சுமி. பணம் போனால் மூதேவியென ராசி பார்ப்பவர்கள் பலர் இருக்கும்போது திருமணத்திற்கு முன் மணமகன் இறந்துவிட காமினியைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசினர்.

கார்த்திக் ஒற்றை ஆளாக இவை அனைத்தையும் சாமாளித்தான். உடன் ருத்ராவின் குடும்பமும் இருந்தனர். இரு வீட்டினருக்கும் இழப்புதான். தந்தை மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்தவுடன் மேலும் காமினி அறைக்குள் முடங்க, அபிதா யோசித்தார்.

அவர் யோசனையின்படி கார்த்திக் காமினியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட, ருத்ரா விடுதி நிர்வாகத்தில் உதவ வெளிநாட்டில் பார்த்த வேலையைத் துறந்து, நெய்தல் நிழலில் பணியில் சேர்ந்தான்.

அடுத்தடுத்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காமினிக்கு ஒரு புகைப்படம் கிடைக்க, அதனை யோசனையுடன் பார்த்தவள், அதைக் கைப்பேசியில் படம் பிடித்து வைத்தபின், படுக்கையில் ஆயாசத்துடன் படுத்துக் கொண்டாள். அன்றைய இரவு அவளுக்கு ஒரு உண்மை புலப்பட்டிருந்தது.

***

கார்த்திக் கன்யாவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் முகத்தில் வந்து போகும் ஒவ்வொரு பாவனைகளையும் அவன் விழிகள் உள்வாங்கிக் கொண்டிருந்தன. தான் விரும்பிய பெண் மனதை உடைப்பது எல்லாம் ஆண்களால் மறக்க முடியாது. அதுவும் உருவத்தைக் காட்டி நிராகரிக்கப்படுவது மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். கன்யாவின் நிராகரிப்பு அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி இருந்தது.

அதற்கு மிகப் பெரிய காரணம் கல்லூரி படிக்கும் சமயத்தில் கார்த்திக் ஒல்லியாகச் சுமாராக இருப்பான். முகப்பருக்கள், கண்ணாடி எனப் பெண்கள் திரும்பிப் பார்க்கும் உருவம் அவனுக்கு இல்லை. கன்யாவின் இயல்பான நட்பு முதலில் அவ்வளவாக நெருங்கிப் பழகாத கார்த்திக்கையும் பழக வைத்திருந்தது. அது நாளடைவில் காதலாகவும் மாறி இருந்தது. அதைக் கல்லூரி விட்டுச் செல்லும் முன்பு அவன் வெளிப்படுத்தி இருக்க அதன் விளைவுகள் வேறுவிதமாய் அமைந்திருந்தது.

“நான் இந்த மெஸேஜை அனுப்பவே இல்லை கார்த்தி சீனியர். என்னை எப்படி உருவத்தைப் பார்த்து எடை போடறதா நீங்க நினைக்கலாம்?” என அவன் சட்டையைப் பிடித்தாள் கன்யா.

“உன் நம்பரிலிருந்து மெஸேஜ் வந்தால் நான் என்னை நினைக்க முடியும்? பொண்ணுங்க அழகையும் எதிர்பார்ப்பாங்க. ஆனால் அந்த மெஸேஜ் எனக்கு ரொம்ப இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் குடுத்தது. காமினிதான் ரொம்ப சப்போர்டிவா இருந்தாள். அப்புறம் ரொம்ப செல்ஃப் கேர் எடுக்க ஆரம்பிச்சேன். அக்னே ட்ரீட்மெண்ட், ஜிம் வொர்க் அவுட். கொஞ்ச வருஷத்தில் இப்படி மாறிட்டேன்.”

“இன்னும் நீங்க என்னை நம்பலையா? இருங்க.”

தன் கைப்பேசியில் கன்யா ஒரு கோப்பைத் திறந்து காட்டினாள்.

“இது என்னோட அப்பா ரொம்ப சீரியஸாக ஆர்மியிலிருந்து அடிபட்ட நாள். அப்பாவைப் பார்க்கப் போகும்போது என் கூட இருந்தது கிளாஸ்மேட், இப்ப எக்ஸ் பாய்ஃபிரெண்ட் அவன்கிட்டதான் என்னோட மொபைல் இருந்துச்சு. அன்னைக்கு முழுக்க என்னோட போன் அவன்கிட்ட இருந்துச்சு. அவனும் ஆர்மி ஃபேமிலி. அவன்தான் இதைச் செஞ்சிருக்கணும். நைட் அம்மாவுக்கும் முடியாமல் போயிருச்சு. அவங்களையும் பார்க்க வேண்டியதாகிடுச்சு.”

அவள் குறிப்பிட்ட தேதியும், குறுஞ்செய்தி வந்த தேதியும் ஒரே நாள்தான். கார்த்திக்கின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

“நம்புங்க சீனியர்.”

இதுவரை கார்த்திக் நினைத்தது எல்லாம் தவறாகப் போயிருந்தது. கன்யாவின் முன்னாள் காதலன் வேண்டுமென்றே கார்த்திக் அனுப்பிய செய்திக்குப் பதிலாக அவனை இழிவுபடுத்துவதைப் போல் அனுப்பி இருந்தான். அவனுக்குக் கன்யாவைப் பிடித்திருக்க இடையில் கார்த்திக் வருவது பிடித்தமில்லை. ஏற்கனவே கன்யா எப்போதும் கார்த்திக் சீனியர் என அடிக்கடி அவனைப் பற்றிப் பேசுவது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் செய்த வேலையால் கன்யா, கார்த்திக், காமினி மூவரின் நட்பும் பிரிந்து போக, சில மாதங்களில் கன்யாவிடம் காதலைச் சொல்லி அவள் சம்மதம் வாங்கி இருந்தான்.

“உங்களை எனக்கு இப்ப இருக்குறதை விட, அப்பத்தான் ரொம்ப பிடிக்கும். அக்னே இருந்தாலும் கியூட் ஃபேஸ், ஜென்டில்மேன். இன்டலிஜென்ட். அதான் தேடித் தேடி உங்க இரண்டு பேர் கூடவும் பழகுனேன். நீங்கப் போனதுக்கு அப்புறம் கூட ஒன் இயர் உங்க நம்பருக்கு ட்ரை பண்ணேன். நம்பர் ரீச் ஆகலை.”

“கன்யா…”

அவன் சட்டையைப் பிடித்தபடி இன்னும் பேசிக்கொண்டிருந்தாள். இருவரின் முகத்திற்கு இடையே உள்ள நெருக்கம் குறைந்திருந்தது.

“என்னைப் போய்… உங்களுக்குத் தெரியுமா? அவனும் நானும் நாலு வருஷம் ரிலேசன்ஷிப்பில் இருந்தோம். இன்னொரு பொண்ணுக்காக என்னை டம்ப் பண்ணிட்டு போயிட்டான். ரொம்ப அழுதேன். அதோட அப்பாவும் போயிட்டாரு. அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. அப்படித்தான் இங்க வந்தேன். உங்களை இங்க பார்த்ததில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா!”

கன்யாவின் விழிகளில் நீர் வழிய ஆரம்பிக்க, “இட்ஸ் ஓகே. காம் டவுன்.” என அவள் தலையைத் தன் மார்பில் வைத்து அணைத்துக் கொண்டான்.

கன்யா ஒற்றை ஆளாக அனைத்தையும் தாங்கிக்கொண்டிருந்தாள். அன்னைக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் எதையும் பெரிதாகக் கூறி அவரின் கவலையையும் கூட்ட விரும்பவில்லை அவள்.

“ஸாரி சீனியர்… ஸாரி… அழுது ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு எனக்கு அழுகை வந்துட்டே இருக்கு.” பல விஷயங்களை ஒற்றை ஆளாகத் தாங்கி இருந்தவள் இன்று அழுது கொண்டிருந்தாள்.

“இட்ஸ் ஓகே…” கன்யாவை விடுவித்தவன் அடுத்து என்ன பேசுவது என யோசித்தவாறே தூரத்தில் தெரிந்த கடலைப் பார்த்தான்.

“சீனியர்.”

“ம்ம்ம்.”

“ஃபிரெண்ட்ஸ்.” எனக் கை நீட்டினாள். முகத்தில் கல்லூரியில் பார்த்த அதே வெள்ளந்திப் புன்னகை. அவளுக்குப் பதில் சொல்லாமல் கையைக் கொடுத்தான்.

“நம்ம ஃபிரெண்ட்ஷிப் வச்சு ஹோட்டலில் எதுவும் அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. இப்ப வீட்டுக்குப் போ. டைம் ஆகுது. சாப்பிட்டியா?”

“இனிதான்.”

“குட் நைட்.”

மகிழுந்தின் கதவை நீக்கி மகிழ்ச்சியுடன் இறங்கினாள் கன்யா. சிவகார்த்திக்கின் மனதிலும் பாரம் நீங்கி இருந்தது. அவள் இறங்கி வீடு செல்லும்வரை பார்த்திருந்தவன், அதன்பின் தன் வீட்டுக்குச் சென்றான்.

***

ஆதி பத்மமுகியின் அறையில் அமர்ந்திருந்தான். தன்னை விட்டு முகி நீங்கிச் செல்ல, சில விநாடிகள் உறைந்து நின்றிருந்தவன் அவள் பின்னே ஓடி வந்து அவளைத் தூக்கிக் கொண்டவன்,

“நீ என்னை எவ்ளோ வேணா திட்டு. கோபப்படு. பேசு. ஆனால் உன்னை விட்டு நான் போகமாட்டேன். என்னோட தப்பை சரி செய்ய ஒரு வாய்ப்பு குடு. இல்லை ஹோட்டல் ரிசப்ஷனை விட்டு எங்கும் நகரமாட்டேன்.”

“இறக்கி விடுங்க. என்னை இறக்கி விடுங்க, ஆதி.” குழந்தை வயிற்றில் இருப்பதால் அதிகம் குதித்துத் துள்ளவில்லை. மருத்துவர் அவளைப் பத்திரமாக இருக்கச் சொல்லி இருக்கிறார்.

கார்த்திக்கும், காமினியும் ஆதி செய்த செயலைப் புருவத்தைத் தூக்கிப் பார்த்தவர்கள் என்ன செய்வது என ஒருவரையொருவர் விழிகளால் கேட்டுக் கொண்டார்கள்.

“மினியன், அவங்களுக்கு சார்ட் அவுட் பண்ண டைம் கொடுப்போம்.” அவர்களும் கணவன் மனைவி சண்டைக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.

காமினிக்குமே முகிக்கு ஆதியின் மீது இருக்கும் காதலைப் பற்றித் தெரியுமே! ஆதியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவள் விழிகளில் வந்து போகும் உணர்வுகளை அவளும் கண்டிருக்கிறாளே! ஆனால் முகியை ஏமாற்றியது முரண்டினாலும் அபிதாவே ஆதியைப் பற்றிப் பெரிதாக எதுவும் கூறவில்லை. ஏனென்றால் அவர் திருமணம் தாண்டிய தொடர்புடைய நபர்களை ஊக்குவிக்கமாட்டார்.

ஆதி முகியை இறக்கி விடவே இல்லை.

“ஹாய்! முகி ரூம் நம்பர் தெரியுமா? மேடம் கேட்டாலும் சொல்லமாட்டாங்க. நீங்களாவது சொல்லுங்க. இல்லைன்னா எத்தனை நாளானாலும் நான் உங்க ரிசப்ஷனை விட்டு நகரமாட்டேன்.”

“முகி, கொஞ்சம் டைம் குடுத்துப் பாருங்க. உங்க ரூமுக்கு ஆப்போசிட்தான் சார். எதுனாலும் கால் பண்ணுங்க அக்கா.” எனக் கார்த்திக் கூறிவிட ஆதி மனைவியைக் கீழே இறக்கிவிடாமல் நடக்க ஆரம்பித்தான்.

“இங்க என்னடா நடக்குது?”

“மினியன், புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுவும் இப்ப பேபி வரப் போகுதுன்னு நினைக்கிறேன். அந்தப் பேபிக்காக ஒரு வாய்ப்புன்னு சொல்லமாட்டேன். ஆனால் அவங்களுக்கு வெளியாட்களால் பிரச்சினைன்னா தட் பேபி டிசர்வ்ஸ் ஃபேமிலி. பார்க்கலாம்.” எனச் சகோதரியைத் தோளில் கைப்போட்டு அழைத்துச் சென்றவன், அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டு அலுவலகம் சென்று பணிகளை முடித்துவிட்டு, கன்யாவைத் தேடிச் செல்ல, அவனுடைய இத்தனை நாள் வலிக்கு ஒரு நிவாரணம் கிடைத்திருக்க அவன் நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்திருந்தான்.

ஆதி முகியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். முகியோ அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவன் கேட்டாலும் பதில் கூறவில்லை. அவனின் செய்கைகளைப் புறக்கணிக்க அவள் எடுத்துக் கொண்ட ஆயுதம் மௌனம்.

மனைவிக்குப் பிடித்த உணவை அறைக்கே வர வைத்திருந்தான். அவனை எப்படியாவது தன் அறையை விட்டுத் துரத்த வேண்டும் என முடிவு செய்தவள்,

“ஆதி, நான் சாப்பிட்டுத் தூங்கணும். நீங்க உங்க ரூமுக்குப் போங்க.”

“இத்தனை நாள் ஒரே ரூமில்தான் இருந்தோம். இனி அந்தப் பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை. உன்னை விட்டுப் போறதுக்கெல்லாம் நான் வரலை. இனி என்ன சொன்னாலும் இங்கதான் நான் இருப்பேன். அதிலும் குழந்தையோட உன்னைத் தனியாக விட்டுட்டுப் போகமாட்டேன். நீ என்னை அனுப்ப ட்ரை பண்ணினால் இந்த ரூம் வாசலில்தான் தூங்குவேன்.”

முகிக்கு அவனைச் சமாளிக்க முடியவில்லை. அதற்கு அவள் உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை.

அவளை எப்படி தேடிக் காதலைக் கூறி மணந்தானோ மீண்டும் அவளுக்காக அனைத்தையும் செய்யத் தயார் நிலையில் இருந்தான் ஆதி. முகியின் மறுப்பையும் தாண்டி ஆதி அவளை விட்டு நீங்கவில்லை. முகி அவனை மன்னிப்பாளா?

 

*****

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page