வக்கீல் கூறியதை கேட்டு கமலா அதிர்ச்சியானார்.
“இதுக்கு இதே ஒன்னு தான் தீர்வு. ஆனா, இந்த முடிவையும் நீங்க எடுக்கக்கூடாது. உங்க மருமகனா எடுக்கணும். அவரு பக்கம் இருந்து அவர் என்ன பண்றாருனு பாப்போம். அவர் பக்கம் வக்கீல் யார் பேசுறாங்கன்னு பாத்துட்டு, நம்ம அவர்கிட்டயும் பேசி பார்ப்போம். மத்தபடி உங்க பொண்ண உங்க மருமகன் கிட்ட இருந்து பிரிக்கிறது என்னோட நோக்கமும் கிடையாது.
உங்க நோக்கமும் கிடையாது. பிரிஞ்சு வாழ்றதுல உங்க மகளுக்கும் விருப்பம் கிடையாது. உங்க மருமகனும் பிரியனும்னு நினைக்க போறது கிடையாது. அப்போ இது மட்டும் தான் ஒரே வழி. ஆனா, உங்க மருமகன் எடுக்கணும் இந்த முடிவை, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுங்க. நம்மளும் கொஞ்ச நாள் கழிச்சு நோட்டீஸ் அனுப்புவோம்.
அவரும் கொஞ்சம் யோசிக்கட்டும், உங்க பொண்ணுக்கும் கொஞ்சம் நேரம் வேணும், அவங்களும் யோசிக்கட்டும், அதுக்கப்புறம் எதா இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம் “என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்து இருந்தார்.
அதன் பிறகு தான் அனைத்தும் நடந்திருந்தது. அசதியில் அழுகையில் கரைந்தப்படியே நன்றாக உறங்கிய மனைவியின் தலையை கோதியப்படி இருந்தவன்.
அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் இட்டுவிட்டு,” நான் பேசி இருக்கனும் சுதா. அன்னைக்கு நான் பேசாம விட்டதால் எவ்வளவு பிரச்சனை, இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. நீயும், நானும் ஒரு மாசம் பிரிஞ்சி இருக்க வேண்டி இருந்தது. புள்ளைங்களையும் பிரிச்சி , இது எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தான் . உன்ன சொல்ல மாட்டேன், நீ புள்ளைங்கள பிரிக்கணும்னு நினைச்சிருந்தா என்கிட்ட இருந்து நம்ம மகியை பிரிச்சி இருக்கலாம்.
அதுக்கு உனக்கு ரொம்ப நேரம் ஆகாது. நம்ம மிது அழுதே சோர்ந்து போய்டுவான்றதால தான் என்கிட்ட நீ மிதுவை விடாமல் மகியை விட்டுட்டு போன. அதுவும் எனக்கு புரியும் டி, என்னால மிதுவை நேரா பார்க்க முடியாது என்று தான் அந்த ஒரு மாசமும் பாப்பாவ கூட பார்க்க முடியாம தவிச்சேன். ஆனா, அங்க மட்டும் தான் என்னால உன்னையும் பார்க்க முடிஞ்சது அதனால தான் நீ பாப்பாவ விட்டுட்டு வெளியே வரும்போது, உன்ன பாக்க செஞ்சேன்.
ஆனா, எல்லாமே என் கை மீறி போயிடுச்சு .இனி எதையும் அப்படி விட மாட்டேன் சுதா .இனி உன்ன விட்டுக் கொடுக்கிற மனநிலையில் நான் இல்ல சுதா.இனி யார்கிட்டயும் சரி ,பெத்தவங்களாகட்டும் எனக்கு எல்லா உறவும் வேணும்னு நினைச்சவன். அப்பப்ப உன்ன விட்டு கொடுத்துட்டே இருக்கேன். இனி எனக்கு எல்லாரும் எப்படியோ ,அதைவிட ஒரு படி மேல சுதா நீ!
அப்பாவுக்கு அம்மா இருக்காங்க. என் தங்கச்சிக்கு அவ புருஷன் இருக்காரு. ஆனா, உனக்கு நான், எனக்கு நீ தானே சுதா! எனக்கு பெத்தவங்கள பாக்குற கடமை எப்படி இருக்கோ, அதே அளவுக்கு புருஷனா உன்ன பாக்கற கடமையும் இருக்கு சுதா. அந்த இடத்திலிருந்து ரொம்பவே தவறிவிட்டேன். இனியும் அப்படி ஒரு செயலை செய்ய மாட்டேன்.
இனி எந்த இடத்திலும் உன்ன விட்டுக் கொடுத்திட மாட்டேன். உனக்காக தோள் கொடுப்பேன். குரல் கொடுப்பேன் ,என்ன நம்பு சுதா!” என்று தூங்கிக்கொண்டு இருந்தவளிடம் பேசிக்கொண்டே சென்றான்.
அவள் தூக்கத்தில் அசைந்து திரும்பி படுக்க முயலவும், வேகமாக அவளை கட்டி அணைத்து, தூக்கிக் கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்து விட்டு, இவனும் மறுபக்கம் வந்து படுத்திருந்தான்.
மறுநாள் விடியலில் எழுந்ததிலிருந்து, சுதா அவ்வபோது, அவனைப் பார்த்தபடியே இருக்க.
அவனும் பழைய கணவனாக முற்றிலுமாக மாறி இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவளை சீண்டியபடி இருந்தான் .
இங்கு வந்த இந்த ஒரு மாத காலத்தில், பெரிதாக அவன் அவளை மனதளவில் தேடுகிறான். ஆனால், இப்பொழுது ஏதாவது செய்ய போய் தவறாகி விடுமோ? என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு , நேற்று இரவில் இருந்து ஏதோ ஒன்று தைரியத்தை கொடுக்க.
கலையில் எழுந்ததில் இருந்து, குட்மார்னிங் சொன்னவன், அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னத்தில் இதழ் பதிப்பது, அவள் சமையல் செய்யும்போது வந்து அவள் இடுப்பைக் கிள்ளவும், அவளை பின்பக்கம் இருந்துக் கட்டி அணைத்தபடி, அவள் கழுத்து வளைவில் முத்தமிடுவது, அவள் பின் முதுகில் முத்தமிடுவது என அவ்வப்போது அவளை சீண்டிப்படியே சில்மிஷங்களை தொடர்ந்தபடி இருந்தான் .
அவளும் அதை எல்லாம் ரசிக்கத்தான் செய்தாள் .இதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் பொழுது ,தங்களது அறைக்குள் நடப்பவைத்தான் இவை எல்லாம், வெளியில் வந்துவிட்டால் மட்டுமே அடக்க ஒடுக்கமாக இருப்பான். மற்றபடி அறையில் இருக்கும் பொழுது இதையெல்லாம் செய்து கொண்டுதான் இருப்பான்.
அதை இங்கேயும் தொடர ஆரம்பித்து இருந்தான் .
குழந்தைகள் எழுந்த பிறகு, சிறிது வாலை சுருட்டி வைத்துக்கொண்டு நல்ல தந்தையாக வலம் வந்தான். ஒரு வாரம் அழகாக சென்றது .
இந்த ஒரு வாரத்தில் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு இருந்ததா ?என்று கேட்டால் மனதளவில் முழுமையாக நெருங்கி இருந்தனர். உடல் அளவில் நெருங்க சுதாவிற்கு ஏதோ ஒன்று தயக்கத்தை கொடுத்தபடியே இருந்தது.
அதும் ஆதிக்கு சொல்லவா வேண்டும் . சொல்லெண்ணா உணர்வில் தத்தளித்தான். அவளிடம் நெருங்க வேண்டும் என்று உடல் குதியாட்டம் போட்டாலும், ஏதோ ஒன்று தடுக்க அவளிடம் நெருங்க முடியாமல் தவித்தபடி இருந்தான்.
அவனது தவிப்பை உணர்ந்தவள். இரவில் குழந்தைகள் தூங்கிய பிறகு ,கீழே படுக்கையை விரித்து படுத்தாலும் கூட, அவன் நெருங்கவில்லை .இவளும் தன்னாலான அனைத்தையும் செய்தாள் ஆனால், ஆதியை ஏதோ ஒன்று தடுத்தபடியே இருந்தது.
அன்று வார இறுதியில் குழந்தைகளை இப்பொழுது எங்கு அழைத்துச் செல்வது ?என்று புரியாமல் நின்றான்.
அப்போது குழந்தைகள் இருவரும், “இந்த வாரம் நம்ம நாலு பேரும் வெளியே எங்கையாவது போயிட்டு வரலாம் பா “என்று கூறி விட .
குழந்தைகள் இருவரையும் தூக்கி ஆனந்தமாக முத்தமிட்டவன். மனைவியுடன் தனக்கான நேரமும், இதுவரை கிடைக்காததை உணர்ந்து ,மாமியாருக்கும், தாய்க்கும் போனில் அழைத்திருந்தான்.
தந்தைக்கு அழைக்காமல் நேரடியாக தாயுக்கே அழைத்தான்.
அவரும்,”சொல்லுடா ?”என்று கேட்க.
” நான் பசங்களை கூட்டிட்டு வெளியே போறேன் மா. பசங்க வருவாங்கனு நீ எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்காத. மனசுல எதுவும் யோசிக்காத, நான் அங்கேயும் அத்தை வீட்டுக்கும் கூட்டிட்டு போகல” என்றான்.
அவர் அமைதியாக இருக்கவும். “என்னம்மா?” என்றான் .
“சரிடா “என்றவர் வேறு எதுவும் கூறவில்லை.
இங்கு தன் மாமியாருக்கும் இவனே அழைத்து விவரத்தைக் கூற.
“சரி மாப்ள. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்” என்றவர் வேறு எதுவும் கூறாமல் வைத்து விட்டார்.
இங்கு சித்ரா தான் ,”என்ன மொத்தமா உங்க பையன் வில்லியாவே முடிவு பண்ணிட்டான் இல்லங்க!”என்று கணவனிடம் அழுதபடி இருந்தார்.
மனைவியின் தலையை கோதியவர் .”அன்னிக்கி நீ பேசின பேச்சு அதிகம் சித்ரா”
” அதுக்குன்னு என்னம்மா சொல்றான் தெரியுமா ?இன்னைக்கு”
“என்னடி சொல்லிட்டான் அப்படி?”
“என்னமோ போங்க” என்று சித்ரா புலம்பிக் கொண்டு இருக்க.
உதயா வீட்டிற்குள் நுழைந்தவள். “என்னம்மா இன்னைக்கு உன் பேர பசங்க வரலையா? இல்ல நீ போகலையா ?”என்று வேணும்னே தாயை வம்பு இழுத்தபடி நுழைந்தாள்.
எப்படியும் தன் அண்ணன் மாமியார் வீட்டில் கொண்டு போய் பிள்ளைகளை விட்டு இருப்பான் என்று எண்ணியே அவள் பிரச்சினையை உண்டு பண்ண அப்படி பேச.
ஏற்கனவே ஆதங்கத்தில் இருந்தவர் .தன் மகள் அவ்வாறு நக்கலாக கேட்டவுடன் ஓங்கி ஒன்று கன்னத்தில் விட்டிருந்தார்.
அவள் அதிர்வாக தாயைப் பார்க்க. நேசனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
” இந்த ஒரு அடி பத்தாது உனக்கு. இன்னும் நாலடி சேர்த்துக் கொடுக்கணும் “என்ற நேசன் “எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு சித்ரா” என்றபடி கிளம்பிவிட்டார் .
மகள் பேசுவதை கேட்டால் தானும் கை ஓங்கினாலும், ஓங்கிவிடுவோம் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்தப் பிறகு மகளிடம் கை நீட்டுவது சரியாக இருக்காது என்று கிளம்பிவிட்டார்.
எப்படியும் தன் மனைவி பேசி விடுவாள் என்ற எண்ணம் அவருக்கு, கை ஓங்கிய பிறகு பேசாமல் விட்டு விடுவாளா என்ன? என்று தான் கிளம்பிவிட்டார்.
கையோடு உதயா அழைத்துக் கொண்டு வந்த பேரப்பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டார்.
போகும்போது ,”பசங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கூட்டிட்டு வரேன். வரும்போது அசைவம் எடுத்துட்டு வரேன் எல்லா ரெடி பண்ணி வை சித்ரா” என்று குரல் கொடுத்தபடியே திரும்பியும் பார்க்காமல் தான் கிளம்பி இருந்தார்.
உதயா இன்னும் அதிர்ச்சி விலகாமல் நிற்க.
” வாய மூடுடி. உன்னால தாண்டி இப்போ நான் என் பேர பசங்க இல்லாம தன்னந்தனியா இந்த வீட்டுல நிக்கிற மாதிரி இருக்கு”
” என்னம்மா இப்படி எல்லாம் பேசுற? நான் என்ன பண்ணேன். உன் மருமக பண்ணதுக்கு”
“இன்னொரு முறை அவ பேச்சு எடுத்த கழுத்தை நெறுச்சி கொன்றுவேன் ஞாபகத்துல இருக்கட்டும் . அவ சரியா இல்ல தப்பா எனக்கு வேணாம். இப்போ நான் தனியா இருக்குறதுக்கு நீ மட்டும் தாண்டி காரணம்”
” நான் என்ன பண்ண? நீ ஏதாவது பேசி உன் மருமக வூட்டை விட்டு போனதுக்கு என்ன சொல்வியா?”
” நல்லா இருந்த குடும்பத்துல குட்டையை குழப்பி விட்டது நீதாண்டி. அக்கம் பக்கம் பேசுறாங்கனு சொல்லி என் மனசையும் கலைச்சு ,நானும் தகாத வார்த்தை எல்லாம் விட்டு, மொத்தமா என் பையனை இழந்து நிக்குற. வாரத்துக்கு ஒரு முறை ஆச்சு வந்துட்டு இருந்துச்சுங்க . இப்ப அதுவும் இல்லாம நிக்குற. இனியாவது அவங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும். இந்த வாரம் எங்கையுமே போகல. அவங்க குடும்பத்தோட இருக்கட்டும்னு ஆசைப்படுறாங்க. அவளும் புள்ளைங்களோட இருக்க முடியாம அவதிப்பட்டுட்டு தான் இருக்குறா”
“ஓ! புதுசா உன் மருமக மேல பாசம் பொங்குது போல. புள்ளைங்களோட இருக்கட்டும் நினைக்கிற போல”
“இப்பதான் சொன்னேன்.திரும்ப பேசினா என்ன செய்வேன்னு தெரியாது. ஞாபகம் இருக்கட்டும். ஏண்டி அவ நல்லா இருந்தாலே உனக்கு புடிக்க மாட்டேங்குது . அப்படி என்ன பண்ணா உன்ன ?”
“என்னமா மருமகளுக்கு சப்ப கட்டு கட்டிட்டு வர? “
” நான் எந்த கட்டும் கட்டிட்டு வரல சரியா .அந்த ஒரு விஷயம் தான் அவகிட்ட எனக்கு பிடிக்காம போச்சு, மத்தபடி அவளை நான் எந்த வகையிலும் தப்பு சொல்ல மாட்டேன் .மருமகளா எனக்கு எந்த குறையும் வச்சுப்புடுல, உனக்கு நாத்தனாராவும் இதுவரைக்கும் எந்த குறையும் வைக்கல. சீரும் சிறப்புமா தான் இதுவரை உனக்கு நல்லது கெட்டது எல்லாம் எடுத்து பார்த்துட்டு தான் செஞ்சிருக்கா. என்னால முடியாம படுத்து இருந்தாலும், எனக்கும் செஞ்சுகிட்டு தான் இருக்கா. இப்ப முதற்கொண்டு ,அன்னைக்கு நான் பேசுன பேச்சுக்கு நீயா இருந்தா முகத்தை திருப்பிக்கிட்டு போயிருந்திருப்ப.
ஒத்த வார்த்தை பேசி இருக்க மாட்ட என்கிட்ட. ஏன் இந்த வீட்டுக்கு உங்க அம்மா வந்தாங்கனு கூட கேட்டு சண்டை பிடிச்சி இருப்ப உன் புருஷன் கிட்ட. ஆனா, அவ நான் பேசின பேச்சுக்கு அத்தை என்ற வார்த்தையை மட்டும் தான் கூப்பிட முடியாமல் தவிச்சு நின்னாலே தவிர, வீட்டுக்கு வந்தவங்கள வாங்கனு வாய் நிறைய கூப்பிட்டா தாடி .
எனக்கு எந்த குறையும் இல்லாம, போன ரெண்டு வாரமும் சாப்பாடு போட்டும் சரி, மரியாதை கொடுத்தும் சரி, வழி அனுப்பி வச்சிருந்தா .ஆனா அதுல ஒரு துளி கூட நீயா இருந்தா பண்ணி இருக்க மாட்ட .உன் மாமியா சும்மா சாதாரணமா காய்கறி அரிஞ்சு தரலைன்னு என்ன பேச்சு பேசுற நீ ? உன் புருஷன் கிட்டயே என்ன வெட்டு வெட்டுன்னு பேசுற.நீ பேசாதடி என் மருமகள . நாக்கு அழுகி போயிடும்.
எனக்கும் சேர்த்து தான் சொல்றேன் அன்னைக்கு நான் பேசுனது தப்புதான் .அதை என்னால ஏனோ இப்பயும் ஒத்துக்க முடியாம மனசு கடந்து அடிச்சிக்கிது. அதுக்காக நான் என் மருமகள தப்புனு சொல்ல முடியாது. அன்னைக்கு என் பையன் என்கிட்ட விட்டுக்கொடுத்துட்டு நின்னு புட்டான். நான் உன்கிட்ட விட்டுக் கொடுத்து நின்னுட்டேன்.
அதுக்காக தான் இன்னைக்கு நானு தனந்தனியா நிக்கிறேன். அதுக்காக தான் அனுபவிச்சிட்டு இருக்கேன்” என்ன புலம்பினார்.
தாய் தான் பேசினால் சரிப்பட்டு வர மாட்டார். தன்னைத்தான் அடிக்கவே செய்து விட்டார் . இன்னும் பேசினால் ஏதாவது செய்வார் என்று எண்ணி “பிள்ளைகளை மட்டும் கொண்டு வந்து விட்டுடு .இனி ஏன் நான் உன் வீட்டு வாசப்படி மிதிக்க போறேன் .உன் மகனையும் ,மருமகளையும் கூட்டிட்டு வந்து உட்கார வச்சி ஆக்கி கொட்டு” என்றவள் கிளம்பிவிட்டாள்.
” போடி நீ வரலைன்னு இப்ப யாரு அழுதா? என் பேரப்பிள்ளைகளை மட்டும் வார வாரம் அனுப்பி விடு அவங்களை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் .நானே கூப்பிட்டா கூட என் மகன் இந்த வீட்டு வாசப்படி இப்போதைக்கு மிதிக்க மாட்டான். அந்த அளவுக்கு பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசி இருக்கேன். என்னைக்கு மனசு மாறி வரணும்னு இருக்குதோ அன்னைக்கு வரட்டும் என் புள்ளைங்க. ஏன் வூடு தேடி அதுவரைக்கும் நான் போய் பாத்துக்குறேன். எனக்கு என்ன மானம் ரோசம் வேண்டி கிடைக்குது. பேசினவ நானு அனுபவிச்சு தான் ஆகணும்” என்று புலம்பிக் கொண்டே கணவன் சொன்னது போல் அசைவம் செய்வதற்கு தேவையானதை செய்ய ஆரம்பித்து விட்டார்.
மகன் வயித்து பேரப்பிள்ளை ,
மகள் வயித்து பேர பிள்ளை, எதாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தானே.இரு பேர பிள்ளைகள் மீதும் பாசம் குறைவில்லாமல் வைத்திருக்கின்றனர்.
அன்று மகள் ஏத்திவிட்டதில் பேசி இருந்தாலும், அதன் பிறகு தான் பேசியதை உணர்ந்து மனதிற்குள் வேதனை பட்டுக்கொண்டு தான் இருந்தார். ஆனால், வாய்விட்டு மன்னிப்பு கேட்க முடியாமல், ஏதோ ஒன்று தடுக்க அமைதியாக இருந்து விட்டார் .
இப்பொழுது போன வாரம் மகன் பேசிய பேச்சில் மொத்தமாக குற்ற உணர்வில் ஒரு வாரமாக தவித்துக் கொண்டிருக்கிறார்.
