உன்னில் சிறைய்கிறேன் – 36

காலத்தின் கையில் பறி கொடுத்த  என் உயிர் மீண்டும் துளிர்விடுகிறதே…!

நிழலெனத் தொடர்ந்த சோகங்கள் விலகி, நிஜமாய் என் முன்னே நிற்கிறதே உயிரே…!

உன்னில் சிறைய்கிறேன் – 36

குருதி தோய்ந்த ஆடைகளும், குலைந்து போன நம்பிக்கையுமாக உயிருக்குப் போராடிய இரு ஜீவனுக்காக மருத்துவமனை வாசலில் மண்டியிட்டுக் கிடந்தாள் அருவி,

​விதி செய்த சதியில் தாய் மடிந்து போக, மருத்துவர் நீட்டிய அந்தப் பிஞ்சுக்கரம் அருவியின் மரணித்துப் போன இதயத்தை மீண்டும் ஒருமுறை துடிக்க வைத்தது,

​ஒருநொடிப் பொழுதில் உயிராய் உறவான சொந்தங்கள் யாவையும் இழந்துவிட்டு, சுடுகாடாய் நின்றவளின் தனிமைக்கு மருந்தாக வந்தது அந்த மழலை, 

​அவள் வாழ்வதற்கு இனி ஒரு காரணமுண்டு, அவள் அழுவதற்குத் துணையாக ஒரு உயிருண்டு,

இழந்த மொத்த உலகத்தையும், அந்தக் குழந்தையின் சிறு விரல்கள் மீண்டும் அருவியிடம் கொண்டு வந்து சேர்த்தன,

இப்படி தான் யாழினி அருவியிடம் வந்து சேர்ந்தாள், யார் என்னவென்றெல்லாம் தெரியாத முகமறியாத ஒருபெண்ணின் குழந்தைக்கு தான் இத்தனை காலமும் தாயாகி வளர்த்தாள்,

அப்படி இருக்க தன் உலகமாக நினைத்த உயிருக்கு சொந்தக்காரி மாண்டுபோனாள் என்று இருந்த வேளையில் தான் முழுதாக உயிருடன் தன்முன் இருப்பதைக் கண்ட அருவிக்கு உலகமே சுழன்றது,

ஆம் யாழினியின் தாய் தான் ரோஹித்தின் அக்கா நிகிதா…! 

“நான் எவ்வளவு சுயநலமா இருந்திருக்கேன்னு எனக்கு இப்ப தான் புரியுது, குடும்பத்தை இழந்துட்டு நான் நின்ன மாதிரி தானே, 

புருஷனையும் குழந்தையையும் இழந்துட்டு அந்தப்பொண்ணு வலியோட நின்றிப்பா” என்று எண்ணியவளின் கண்கள் உடைப்பெடுத்தது, கலங்கிய விழிகளோடு நின்றிருந்தவளைக் கண்டதும் பதிறினான் ரோஹித்,

“ஹைய்யோ நீங்க ஏன் மேடம் அழறீங்க, இது நீங்களோ நானோ எதிர்பாராம நடந்த ஒன்னு, என்ன எல்லாத்தையும் தொலைச்சுட்டு நடைபிணமா இருந்த என் அக்கா லைஃப் இனி நல்லா இருக்கும்னு நினைச்சேன், 

ஆனா அது இனிமே நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு, அவ ஒரு முடிவு எடுத்தா எடுத்தது தான் யாராலும் மாத்த முடியாது” என்று கவலையோடும் வருத்ததோடும் ரோஹித் சொல்ல,

“எனக்கு உன் அக்காவை பார்த்து பேசனும் ரோஹித்” என்றாள் அருவி,

“நீங்க இல்ல கடவுளே இறங்கி வந்து சொன்னாலும் அவ மனசை மாத்த முடியாது மேடம்” என்றான் ரோஹித்,

“எனக்கு இப்பவே அவங்கள பாக்கனும் ரோஹித் ப்ளீஸ்” என்றாள் அருவி,

“என்ன மேடம் நீங்க ப்ளீஸ்ன்னு சொல்லிட்டு, வாங்க மேடம்” என்று அழைத்துப் போனான், மணமகள் அறையின் உள்ளே கோபத்தோடும் ஏமாற்றத்தோடும் அமர்ந்திருந்த நிகிதா அருவியையும் ரோஹித்தையும் கண்டு பொங்கினாள்,

“இப்ப இங்க எதுக்கு வந்தீங்க, என்னை இன்னும் எவ்வளவு தூரம் காயப்படுத்தணும்னு நினைக்கிறீங்க, யார்கிட்டயும் பேச எனக்கு விருப்பமில்ல, தயவுசெஞ்சு இங்க இருந்து போயிடுங்க, நான் கொஞ்சநேரம் தனியா இருக்கனும்” என்று உடைந்த குரலில் கூறினாள் நிகிதா,

“அருவி மேடம் உங்கிட்ட ஏதோ பேசனுமாம்” என்று ரோஹித் சொல்ல,

“அய்யோ, அருவி… அருவி… அருவி… உன் அருவி புராணத்தையே கேட்டுக்கேட்டு தலைவலிக்கிது, இப்ப என் கல்யாணம் நின்னு போனா என்ன, 

நீ சொன்ன மாதிரியே நானே வீட்ல பேசி உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் போதுமா” என்று போறபோக்கில் அருவியின் தலையில் இடியை இறக்கினாள் நிகிதா,

“அக்கா அது இல்ல, இப்ப நீ ஏன் தேவையில்லாம பேசிட்டு இருக்க” என்று பதறினான் ரோஹித்,

“தேவையில்லாம பேசுறேனா, நீதானடா உன் கல்யாணத்துல வச்சு அருவியை நம்ம குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தி வச்சு, அதுமூலமா அருவியை கல்யாணம் பண்ணுவேன்னு சொன்ன” என்ற​நிகிதாவின் வார்த்தைகள் அருவியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது,

“அது… வந்து….” என்றவனை எரித்து விடுவது போல் முறைத்த அருவி,

“இதுக்கு மேல என் கண்முன்னாடி நிற்காத போயிடு. ரோஹித்” என்று கர்ஜித்தாள், ஒருவார்த்தை கூட பேசாமல் தன்குட்டு வெளிப்பட்ட அதிருப்தியில் தலைகவிழ்ந்து போனான் ரோஹித், ரோஹித் வெளியேறியதும் அருவி மெல்ல அவளருகே சென்றாள்,

“என்னை மன்னிச்சிடுங்க, இனியும் நான் சுயநலமா இருந்தா எனக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்னுடும்” என ஆரம்பித்த அருவி நடந்த மொத்தக் கதையையும் நிகிதாவிடம் ஒப்புவித்தாள், 

“ஆக்ஸிடெண்ட் ஆன அன்னைக்கு  நீங்க உயிருக்கு போராடிட்டு இருந்தப்போ, டாக்டர்ஸ் உங்க குழந்தை மட்டும் தான் பிழைச்சிருக்குன்னு சொன்னாங்க,

குழந்தைக்கு யாருமே இல்லன்னு நினைச்சு, சுயநலமா என் தனிமைக்கு மருந்தா அவளை நானே எடுத்துட்டு போயிட்டேன்” என்ற ​அருவியின் கண்கள் அருவியாய் கொட்டியது, 

“நீங்க இறந்தே போயிருந்தாலும் நியாயப்படி உங்க குடும்பத்தைத் தேடி வந்து குழந்தையை அவங்கிட்ட குடுத்திருக்கனும், நான் அப்படி பண்ணாம எனக்கு யாருமே இல்லைங்கிற அந்த ஒரு காரணத்துக்காக, 

யார்கிட்டயும் சொல்லாம கொல்லாம குழந்தையை எடுத்துட்டு போனது என்னோட தப்பு தான், உங்ககிட்ட இருந்து அவளைப் பறிச்சது தப்புதான், அந்தத் தப்புக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும்,

அதை மனசார நான் ஏத்துக்கிறேன், உங்க குழந்தையை உங்ககிட்டயே ஒப்படைக்கிறேன்,” என்ற அருவி நிகிதாவின் முன்பு மண்யிட்டு அழுதாள்,

​நிகிதா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள்,இத்தனை காலம் தான் இழந்ததாக நினைத்த உயிர், தன் கண்முன்னே இருக்கிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை,

​அவள் கண்கள் அருவியின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த யாழினியின் மேலேயே நிலைத்திருந்தது, அதை உணர்ந்த அருவி அழகுமலர்க் குவியலைப் போலத் தூங்கிக் கொண்டிருந்த யாழினியை, 

மெல்ல நிகிதாவின் கைகளில் சேர்த்தாள், நிகிதாவின் கைகள் நடுங்கின, யாழினியைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவளது பிஞ்சு முகத்தை வருடிக் கொடுத்தாள் நிகிதா,

“என் உயிரை தொலைச்சுட்டு, இவ்வளவு நாளும் எங்கெல்லாமோ உன்னைத் தேடி அலைஞ்சேனே கடவுளே, என் குழந்தை கிடைச்சுட்டா, பத்திரமா எங்கிட்ட வந்துட்டா” என்று கதறிய நிகிதாவை அதற்கு மேலும் பார்க்க திராணியற்று, அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினாள் அருவி, 

உள்ளே நடந்த மொத்தத்தையும் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவின் மனசாட்சி அவனைச் சுட்டது தலைகுனிந்து நின்றான்,

வேகமாக வெளியே வந்த அருவி அங்கே நின்றிருந்த ஜீவாவைப் பார்த்தாள், அருவியை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையில் இல்லாத ஜீவா அப்படியே நின்றான்,

“இங்க பாருங்க ஜீவா, காலம் எல்லாருக்கும் ரெண்டாவது வாய்ப்பைக் குடுக்கிறது இல்ல, விதி உன்னை இப்போ இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்குன்னா நிச்சயமா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்றவள் மூச்சை இழுத்து விட்டபடியே தொடர்ந்தாள்,

“தமிழ் ஒரு கடல் மாதிரி, அவகிட்ட கோபம் இருக்கும் கூடவே அதைவிட ஆழத்துல அன்பு அதிகமாவே இருக்கும், ஒரு அப்பாவா, ஒரு புருஷனா அவகூட சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க,

உங்க ஈகோவை தூக்கி குப்பையில போட்டுட்டு, கவி மிதுன் இரண்டு  பேரைகூடயும் மூணாவதா தமிழ்ங்கிற குழந்தையையும் சேர்த்து பத்திரம பாத்துக்கோங்க” என்ற அருவி ஜீவாவைக் கடந்து சென்றாள்,

அருவியின் வார்த்தைகள் ஜீவாவின் மனதுக்குள் இருந்த பிடிவாதப் பூட்டை உடைத்தது, நிமிர்ந்து நிகிதாவைப் பார்த்தான், தன் குழந்தையோடு அவள் ஐக்கியமாகி இருந்தாள்,

இது நமக்கான வாழ்க்கையும் இல்லை, இவர்களின் வாழ்க்கையில் நமக்கான இடமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு, அவன் அவனின் பழைய வாழ்க்கைப் பாதைக்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்தான் ஜீவா,

அவன் மனம் இப்போது தெளிந்த நீரோடையாக மாறியிருந்தது, அருவி சொன்னது போல, தன் ஈகோவைத் தகர்த்தெறிந்துவிட்டு தமிழினியைத் தேடிச் செல்லத் துணிந்தான்,

*******************

காலம் எத்தனை கோரமானது, எந்த தனிமையில் வதையக் கூடாது என்று பயந்தாலோ அந்தத் தனிமையே அவளது துணையாகி வாட்டியது,

இத்தனை காலம் தன் உயிராக, தன் நிழலாக வளர்த்த யாழினி இனி தன்னுடையவள் இல்லை என்ற உண்மை அவளைச் சிதைத்தது, 

“யாழிமா… அம்மா இல்லாத ஒரு நிமிஷத்தை உன்னால எப்படித் தாங்க முடியும்” என்று தனிமையில் அவள் பிதற்றினாள்,

​”நான் செஞ்சது தப்புதான், ஆனா அந்தத் தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? யாழினி இல்லாம ஒரு வினாடி கூட இந்த அருவியால இருக்க முடியாதுன்னு அந்த கடவுளுக்குத் தெரியாதா” என்று வெறிச்சோடியச் சுவர்களைப் பார்த்து அரற்றினாள்,

அவளது அறையெங்கும் யாழினியின் மணம் வீசிக் கொண்டிருந்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்த அந்தச் சிறுமி விளையாடிய பொம்மைகள், 

அருவியின் காயத்தை இன்னும் அதிகமாக்கின, ஒரு பொம்மையை எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், அது யாழினி என்றே நினைத்து விம்மி அழுதாள், அழுகையினூடே தலை சுற்றி கண்கள் சொருக மயங்கி விட்டாள்,

யாருமற்ற தனிமையில் எத்தனை நேரம் தான் மயங்கிக் கிடந்தாளோ தெரியவில்லை, அவளின் நிலை கண்டு அவளைப் படைத்த கடவுளுக்கே மனம் இளகி அழுகை வந்திருக்கும், 

மறுபுறம் தன்னவளின் நிலையறியாது, தனிமையைத் துணையாக்கி வேதனை வேள்வியில் வாடிக் கொண்டிருந்தான் அக்னி, யாரிடமும் பேசப் பிடிக்காமல், 

யாரையுமே சந்திக்க விரும்பாமல், தன் ஆன்மாவைத் துளைத்துக் கொண்டிருந்த குற்ற உணர்வோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அக்னி, சிறைக் கம்பிகளின் நடுவே தரையோடு தரையாகப் புதைந்து கிடந்தான், அப்போது, கம்பிகளுக்கு அப்பால் வார்டனின் பூட்ஸ் சத்தம் கேட்டது, 

“அக்னி, உன்னைப் பார்க்க விசிட்டர்ஸ் வந்திருக்காங்க” என்று வார்டன் அதிகாரத் தோரணையில் சொல்ல, அதறிகெல்லாம் ​அக்னி அசையவில்லை, மூடியிருந்த கண்களைக் கூடத் திறக்காமல், 

“எனக்கு யாரையும் பார்க்க விருப்பமில்ல, வந்தவங்ககிட்ட அக்னின்னு ஒருத்தன் இருந்தான், இப்ப செத்துட்டதா சொல்லி இனி திரும்பி வரவேண்டாமுன்னு அனுப்பிடுங்க,” என்றவன் குரல் இறுகிப் போயிருந்தது,

​”நீ இப்படித்தான் சொல்லுவன்னு முன்னாடியே சொன்னாங்க,  அவங்க அருவியைப் பத்தி ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம், அருவியைப் பத்தித் தெரிஞ்சுக்கணுமா வேண்டாமா” என்று வார்டன் கேட்க, 

அக்னியின் உடலில் புது மின்னல் பாய்ந்தது, ​’அருவி’ அந்தப் பெயர் அவனது மரத்துப் போன இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தது, 

அவளுக்கு என்ன ஆச்சு, எப்படி இருக்கிறா, அவள் நலமாக இருக்கிறாளா என்று ஆயிரம் கேள்விகள் அவன் மூளையைத் துளைக்க, அடுத்த நொடி அவன் எழுந்து நின்றான்,

​கசங்கிய ஆடைகளும், கலைந்த தலைமுடியும், ரத்தக் கறையாய் படிந்திருந்த பழைய நினைவுகளுமாக அக்னி விசிட்டர்ஸ் அறைக்கு வந்தான்,

கம்பிகளுக்குப் பின்னால் வந்து அமர்ந்த அக்னி, எதிரே இருப்பவனைப் பார்த்ததும் திகைத்துப் போனான், அங்கே அமர்ந்திருந்தது ரோஹித், அக்னிக்குத் தூக்கி வாரிப் போட்டது,

“ரோஹித்… நீ எதுக்கு இங்க வந்திருக்க, அருவி… அவ நல்லா இருக்கா இல்ல, ஆமா அவளை எப்போ கடைசியா பார்த்த” என்று அக்னியின் குரலில் இருந்த அந்தப் பதற்றம் ரோஹித்தை ஒரு நிமிடம் நெகிழ வைத்தது,

அருவியின் மனதை புரிந்து கொண்டான் ரோஹித், தனிமையில்  சிதைந்து கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க அவனால் அவளைத் தேற்ற முடியவில்லை, 

இனி என்ன செய்தும் அருவியின் வாழ்க்கைக்குள் நுழைய முடியாது என்ற நிலையை உணர்ந்த ரோஹித், இனி எப்பாடு பட்டாவது அக்னியுடன் அருவியை சேர்த்து வைப்பதே சிறந்த முடிவு என்று அக்னியைத் தேடி வந்து விட்டான்,

“அருவி மேடம் நல்லா இல்ல சார், அவங்க இப்ப ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க, நீங்க திரும்பி வந்தா தான் அருவி மேடம் நல்லா இருப்பாங்க” என்றான் ரோஹித் 

“நான் ஒரு கொலைகாரன், எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது, மரணதண்டனை குடுத்தாக் கூட நான் செஞ்ச பாவத்துக்கு பத்தாது, 

அவளோட இந்த நிலமைக்கு காரணமான என்னால, அவளை எப்படி நல்லா வச்சுக்க முடியும் ரோஹித்” என்று விரக்தியாக அக்னி சொல்ல,

“அதனாலதான் சொல்றேன் சார், உங்களால இழந்த உறவுகளோட ஒட்டுமொத்த அன்பையும் நேசத்தையும் நீங்க தான சார் குடூக்கனும்,

இந்த நேரத்துல தான் நீங்க அவங்க கூட இருக்கணும், உங்க அன்பு அருவி மேடத்தோட இழப்பை எல்லாம் சரி செய்யும் சார், 

எல்லாருமே ஏதோ சட்டமும் நீதியும் தான் உங்களை இந்த ஜெயிலுக்குள்ள அடைச்சு வச்சிருக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க, ஆனா எனக்குத் தெரியும் சார் இந்தச் சட்டம், ஜெயில், 

உங்களை அடைச்சு வச்சிருக்கிற இந்தக் கம்பி இது எல்லாத்தையும் நீங்க நினைச்சா ஒரே ஒரு நொடியில உடைக்க முடியும் சார்” என்ற ​ரோஹித் எழுந்து நின்றான்,

​”உடைங்க சார், உங்க மௌனத்தை உடைச்சுட்டு இந்த ஜெயிலை விட்டு வெளியே வாங்க சார், அருவி மேடத்துக்காகவும், அவங்க வயித்துல வளர்ற உங்க குழந்தைக்காகவும்  நீங்க வெளியே வந்தே ஆகணும் சார்” என்று

ரோஹித் வீரம் பொங்கச் சொன்ன அந்த ஒற்றை வாக்கியம், அக்னியின் காதுகளில் இடியென இறங்கியது, ஒரு நொடி அவன் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் பெரும் வேகத்தோடு துடிக்கத் தொடங்கியது,

​தன் உயிரானவளின் வயிற்றில், தன் ரத்தம் தன் வம்சத்தின் மிச்சம், தன் உயிர் வளர்கிறது என்ற செய்தி அவனது அணுக்களையெல்லாம் அதிரச் செய்தது, 

இத்தனை காலமும் குற்ற உணர்ச்சியில் செத்துக்கொண்டிருந்த அக்னிக்குள், இப்போது  தந்தையான பேரானந்தமும், அதைவிடப் பெரிய ஒரு தவிப்பும் குடிகொண்டது,

அவனது வலது கை மெல்ல நகர்ந்து, தனக்கும் ரோஹித்துக்கும் இடையே இருந்த அந்த இரும்புக் கம்பியை இறுகப் பற்றியது, அவனது கை நரம்புகள் புடைத்தன,

அடுத்த நொடி… அக்னியின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் அந்தத் தடித்த இரும்புக் கம்பி மெல்ல வளைந்தது,

இரும்பு வளையும் சத்தம் ‘க்ரீச்’ என்று கேட்க ரோஹித் மிரண்டு போனான், 

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page