மயக்கம் தயக்கம் 13

திவ்யாவின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.நிஜத்தில் அவள் இப்போது மனதளவில் கர்ப்பம்,குழந்தை போன்ற விஷயங்களுக்கு தயாராகவில்லை. கணவன், அவன் தன்னை மட்டுமே சுற்றி வருவது,காதல்,காமம், கணவன் மனைவி இருவருக்குமேயான பிரத்யேக நேரம், இருவரும் வார இறுதி நாட்களில் பைக்கிலோ காரிலோ வெளியே சென்று வருவது என அவளது உலகமே வேறாக இருந்தது.அது அவளுக்கு பிடித்தமானதாகவும் சுதந்திரத்தை பறைசாற்றுவதாகவும் இருப்பதாக அவள் உணர்ந்தாள்.

அலுவலகத்திலும் இதுவரையில் நல்ல பெயர் தான். இப்போது வயிற்றில் இருக்கும் இந்தக்குழந்தை அவளது அனைத்து சந்தோஷங்களையும், முயற்சிகளையும் நல்லபெயரையும் கெடுக்கவென்றே வயிற்றில் வந்து உட்கார்ந்திருப்பதாக தான் அவளால் யோசிக்க முடிந்தது. அவளது உடல்நிலையை அனுசரித்து முன்புபோல் தனது காமத்தை அவன் வெளிப்படுத்தவில்லை. ஓயாத சோர்வும்,வாந்தியுமாக இருக்க  பெண்ணை இன்னமும் படுத்தி எடுக்கவேண்டாம் என்று அவன் எண்ணம். மருத்துவரும் ‘ஒரு மூணு மாசம் ரெண்டு பேரும் கண்ட்ரோலா இருங்க ‘ என்று சொல்லியிருக்கிறார்.

அதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. ஹார்மோன்களின் மாற்றம்,அலைபாயும் மனம் என்று அவளால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

“என்னோட அம்மா உனக்கு ஹெல்ப் செய்ய வரட்டுமான்னு கேக்குறாங்க திவி. வீட்டுல பெரியவங்க இருந்தா நமக்கும் கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கும். ஆஃபீஸ்ல பேசி உனக்கு ஒர்க் பிரம் ஹோம் வாங்கிடலாம். முடியலைன்னா பிரேக் எடுத்துக்கோ “என்றெல்லாம் சொன்னவனை கோபமாக பார்த்தாள் மனைவி.

“சோ,என்னோட பேரன்ட்ஸ் என்னை விட்டுட்டாங்க. அதை குத்திக்காமிக்க உன்னோட அம்மாவை இங்கே வரச்சொல்லி எனக்கு டெலிவரி பாக்க போறே. அவங்க சொல்லுறதை நா கேட்டு நடக்கணும். கரெக்ட்?”என்று சண்டை போட்டாள்.அவள் இந்தக்கோணத்தில் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.

தனியாகவே சமாளிக்கலாம் என்று முடிவு செய்தால் அதற்கும் பெரிய ஆப்பாக அலுவலகத்திலிருந்து வந்தது. ப்ரமோஷனுடன் வெளிநாட்டில் மூன்று மாத பயிற்சி. வேறு வழியே இல்லை.இத்தனை சீக்கிரம் இவ்வளவு பெரிய பதவியெல்லாம் தேடிவருவது என்பது பலருக்கு கனவு தான். அவ்வளவு ஏன் அவனது அப்பாவுக்கே நாற்பது வயதைக் கடந்தபிறகு தான் அலுவலக ரீதியில் நிறைய வாய்ப்புக்களும், முன்னேற்றங்களும். இந்த சமயத்தை பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டால் மீண்டும் இந்த வாய்ப்பு எப்பேது வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

மனைவியின் நிலைமை வேறு அவனை மிரட்டியது. திவ்யாவுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய முதலில் அனுமதி வாங்கியவன்.,அவள் நிலைமை பார்த்து ஒருவருஷ பிரேக் என்றே சொல்லிவிட்டான். திவ்யா முடிவு எடுக்கும் நிலையில் இல்லாமல் அவன் சொன்னதை ஒப்புக்கொண்டு ஆகவேண்டுய கட்டாயம்.

மூன்று மாதங்களில் அவளது உடம்புநிலை இன்னமும் மோசமானதே தவிர எந்த முன்னற்றமும் இல்லை. ஓயாமல் தூங்கினாள். வயிற்றுப்பக்கம் சொரிந்து சொரிந்து தழும்புகள் ஆனது. சிசுவின் வளர்ச்சியில் அவளது உடம்பு வாகு மாறியது.லேசாக மேடிட்ட வயிறும்,அகண்டு போயிருந்த பின்புறமும், பூசிய உடல்வாகும் அவளுக்கு ரசிக்கவில்லை.

கோவமாக வந்தது.இப்போது இந்தக்குழந்தை இல்லாவிட்டால் கணவனுடன் மூன்று மாதங்கள் வெளிநாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. மனைவியின் பிடிவாதத்தை கணக்கில் எடுக்காமல் நான்காம் மாதம் தொடங்கும் சமயத்தில் தனது அம்மாவை அழைத்துவிட்டான் அவன்.

அவர்கள் வரும் சமயம் இவன் கிளம்பியாகவேண்டும் என்று வந்து நின்றது.வீட்டில் பிரச்சனைகளை குறைக்கவென்று வீட்டோடு தங்கியிருக்கும் வேலையாட்களை நியமித்தான். வெளியே செல்வதற்கு கார் டிரைவர் எப்போதும் இருந்தார்.எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு அவனும் கிளம்பி சென்றான்.

தன்னை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் ஓயாமல் மாமியாரிடம் சண்டை போட்டாள் திவ்யா.அவரும் என்ன செய்ய முடியும்?பொறுத்துப்போனார். மகனை குறித்தும், அவனது வாழ்க்கை குறித்தும் பெரும் கவலை அவருக்குள். அதற்காகவே அவளிடம் மல்லுக்கு நிற்காமல் நகர்ந்து சென்றார்.

திவ்யா அதற்கும் விடாமல் கணவன் அழைக்கும் நேரங்களில்,”உங்கம்மாவை என்னை பார்த்துக்கவும்,துணைக்கும் வரவச்சீங்க.அவங்க என்னடானா என்னோட பக்கமே வர மாட்டேங்குறாங்க. நல்ல இருக்கு உங்க வீட்டு லட்சணம் “என்று நக்கலடித்தாள். அவனுக்கு தனது அம்மாவின் குணம் நன்றாகவே தெரியும். அதோடு மனைவியை அவன் நன்கு உணர்ந்து கொண்டிருந்தான்.

வாணிக்கு  யாரிடமும் சண்டை போட்டு பழக்கம் இருந்தது இல்லை.அவர் தனது மாமியார் மாமனார் இருந்த பொழுதும் கூட அவர்களுடன் சுமூகமான உறவுதான். இன்றும் தனது இரண்டு நாத்தனார்களுடன் நல்ல உறவில் தான் இருக்கிறார்.அதிர்ந்து பேசியும் பழக்கமில்லை.அதிகம் பிரச்சனைகளை தலையில் எடுத்துக்கொண்டு அல்லாடும் பழக்கமும் இல்லை.

அதனாலேயே தனது அம்மா தன் மனைவியிடம் அருகே செல்லவும் தயக்கம் காட்டுகிறார் என்றால் அதற்க்கு காரணம் மனைவியின் நடத்தைத்தான் என்பதை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தான் அவன்.  மாதாந்திர செக்கப் செய்து கொள்வதற்கு மாமியார் வரவேண்டாம் .அப்படி வந்தால் மருத்துவரிடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம்.

தனியாக அனுப்ப மனமில்லாமல் சமையல் செய்யும் பெண்ணை துணைக்கு அனுப்பி வைத்தார் வாணி. அங்கே மருத்துவமனையில் தனக்கு பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று அழுதவள், மருத்துவரிடம்  “மேம்,கேக்குறேன்னு நினைக்காதீங்க. இப்போ எனக்கு குழந்தை பெத்துக்கற இஷ்டமும்,தைரியமும் இல்ல. அப்பார்ட் செய்ய முடியுமா?” திவ்யாவின் கேள்வியில் அசந்து தான் போனார் மருத்துவர். ஆனாலும் ,”இல்ல திவ்யா.ஏற்கனவே இப்போ நாலு மாசம் தாண்டி,அஞ்சாவது மாசத்துக்குள்ள வந்துட்டீங்க.இப்போ அபார்ஷன் சாத்தியம் இல்ல. அதோட உங்க கர்ப்பப்பை தங்குமான்னு யோசிக்கணும்.அப்படி அபார்ஷன் தான் வேணும்னா நா ரிஸ்க் எடுக்க மாட்டேன்.வேறே டாக்டர் பாருங்க ” என்று சொல்லி அந்த மாதத்தின் ரிப்போர்ட், மற்றும் எடுத்துக்கொக்ள வேண்டிய மருந்துகளின் பட்டியலை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார்.அவர் மனதில் அவ்வளவு ஆயாசம்,”எங்கே போகிறது இந்த தலைமுறை என்று “

திவ்யாவுக்கு மருத்துவர் சொன்னவிதத்தில் அவ்வளவு கோவம் .அவர் தன்னை புரிந்து கொண்டார் என்பதே அவளுக்கு பிடித்தமான ஒன்றாக இல்லை. ‘எப்போ இந்த சுமை கீழே இறங்கும் ‘என்றுதான் நினைப்பு.

மருத்துவருக்கு மனதில் சரியாக படாததில் திவ்யா கேட்ட விஷயத்தை அவனுக்கு வாட்சாப் சேதியாக அனுப்பி வைத்துவீட்டார் . செய்தியை பார்த்தவனுக்கு உடம்பு நடுங்கிவிட்டது.

“இவள் கேட்டது அம்மாவுக்கு தெரியுமா? என்பதுதான் அவனது முதல் கேள்வி.அம்மாவுக்கு அழைத்து பேசும்பொழுது அவர் வீட்டில் இருப்பதும்,திவ்யா தனியாக சென்று இருப்பதும் புரியவே, என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தான்.

” கண்ணா, உன்னோட மனைவிக்கு நா இருக்குறது அவ்வளவு கம்போர்ட் குடுக்கலைன்னா,நீ இங்கே வந்ததும் நா கிளம்புறேன்.ஏற்கனவே உங்கப்பாவும் ரோஷியும் தனியாத்தான் சமாளிக்கிறாங்க. நாம செய்யற விஷயங்களுக்கு அர்த்தம் இருக்கணும்.பலன் குடுக்கணும்.” என்றுதான் பேசினார் வாணி.அவர் பேச்சில் மகன் மீதான அதிருப்தி தெளிவாக தெரிந்தது.அவனால் பதில் சொல்லவே இயலவில்லை.

“இன்னும் ஒரே மாசம் தான்மா.நா அங்கே வந்துருவேன்.அப்புறம் பேசிக்கலாம் “என்று முடித்துவிட்டான். வீடு வந்த திவ்யாவோ கணவனுக்கு அழைத்து சாதாரணாமாக பேசிவிட்டு வைத்தாள். பகல் முழுவதும் ஒன்று உறக்கம்,இல்லையென்றால் மொபைல் போன். இப்படித்தான் அவளது கர்ப்பகாலம் கழிந்தது. மாமியாராக ,வீட்டின் பெரியவளாக மருமகளிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பெண்ணிடம் அவ்வளவு அலட்சியம்.

பயிற்சியை முடித்துக்கொண்டு அவனும் இந்தியா வந்துவிட்டான்.அவனுக்கான பொறுப்புகள் அலுவலகத்தில் அவன் கழுத்தை இறுக்கியது.

 

திவ்யா இவனிடம் பேசுவதை வெகுவாக குறைத்திருந்தாள். அவனும் கேட்டுப் பார்த்துவிட்டான்,”திவி, என்னோட ஏன் சரியா பேச மாட்டேங்குற? நாம காதலிச்ச நாட்கள் திரும்ப வராதான்னு இருக்கு செல்லோ…”

அவளிடமிருந்து வெறுப்பார்வை மட்டுமே .அதுவும் அவனை குற்றம் சாட்ட நொந்துபோனான் அவன்..அவனது மனதில் ஆயிரம் எண்ணங்கள் வட்டமிட்டது.” கல்யாணம் செஞ்சுக்கிட்ட பெண்கள் கொஞ்சகாலம் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டாலும்,பிறகு தாய்மை அடைவது இயல்புதானே? அதை அவர்கள் சந்தோஷமாகத்தானே ஏத்துக்கிறாங்க?

என்னோட அம்மா இரண்டு குழந்தைகளோட தாய்.ஆனாலும் அவங்க கேரியர் அவங்க சூஸ் பண்ணி டிசைன் பண்ணிக்கிட்டது தானே? இன்னிக்கு வரைக்கும் அவங்களோட தனிப்பட்ட சுதந்திரம் எங்க யாராலயும் பறிக்கப் படலையே! இதை குத்தமா சொல்ல என்ன இருக்கு? இயல்பா வந்ததை ஏத்துக்குறது சரிதானே?”

அவன் கேள்விகளை மனைவியிடம் கேட்கவும் செய்தான்.அவளது பதில் அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.

” நீ சொல்றது அத்தனை சரிதான். பட், எனக்கு குழந்தை மேல ஆசை இல்ல. ஓயாம அதையே பார்த்து பார்த்து கவனிச்சு, பாம்பெர்ஸ் மாத்தி, உவெக்… நினைச்சாலே அருவருப்பா இருக்கு. என்னோட ஷேப்பே போயிருச்சு. உனக்கு என்ன ஆம்பிள. ஆண்மையை நிரூபிக்குற குழந்தை. அப்படி உனக்கு குழந்தை ஆசை இருந்தா சரகசி ட்ரை பண்ணியிருக்கலாம். நா என்ன மிஷினா?”

அவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை.தொடந்து பேசினால் சண்டை வரும் என்று அமைதியாகி விட்டான். அதற்கும் அவனிடமே காய்ந்தாள். வீட்டில் பிரச்சனைகள் அதிகமானதில்  வாணி இந்தக்கணம் கிளம்பியாக வேண்டும் என்று பிரச்சனை செய்தாள் திவ்யா. அந்த அளவுக்கு ஏதாவது நிகழ்வா..என்றால் அப்படி ஒன்றுமே இல்லை. ஏழாம் மாத இறுதியில் இருக்கும் பெண்ணிடம் என்னவென்று பேச முடியும்?

கொட்டும் மழையில் சென்று நின்றுகொண்டு ஆகத்யம் செய்தவளை கையாலாகாதவனாக பார்த்துக்கொண்டிருந்தான் அவன் . வாணி கிளம்பிவிட்டார். இதற்குமேல் அங்கே இருப்பது சரி இல்லை என்று அவருக்கு புரிந்துவிட்டது. மகனின் வாழ்க்கை செல்லும் திசை பெற்றவர்கள் இருவருக்கும் பயத்தைக் கொடுத்தது.

அந்த பயத்தவுடனே கிளம்பி சென்றார் வாணி.  கணவன் – மனைவி இருவருக்குமான காதலும் நீண்ட இடைவெளி கொண்டது.  மீட்பதற்கு இருவரும் தயாராக இல்லை.காணாமல் போன காதலை தேடுவதில் இருவருக்கும் ஆர்வம் இல்லை. 

 

அவளுக்கு பிரசவ நேரம் நெருங்குவதற்கு முன்பாகவே இருவவருக்கும் மனம் விலகி நின்றது. தான் காதலித்த பெண் இவள் இல்லை எனும் அளவுக்கு அவளது குணம் ,அதன் உண்மை நிறம் தெரியும் நேரம் மனதளவில் உடைந்து போனான் அவன். கடமைக்காக இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த பிரசவ நாளும் வந்தது. குழந்தை வெளியே வருவதில் சிக்கல் . சிசேரியன் செய்துகொள்ளவே மாட்டேன் என்று அடமாக நின்றது பெண். எட்டு மணி நேர நீண்ட போராட்டம்.அதன்பிறகு மருத்துவர்களின் பெரும் முயற்சியில் பெண்ணரசி பிறந்துவிட்டாள்.

“ஏற்கனவே, என்னோட பாடி ஷேப் போயிருச்சு. இன்னும் பால் வேறே கொடுத்தா மார்பு தொங்கிடும். என்னால பால் கொடுக்கவே முடியாது” என்று சொல்லிவிட்டாள் திவ்யா.

” இங்கே பாருங்க திவ்யா,தாய்ப்பால் குடுத்தா,மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையுது. பேபிக்கும் அதுதான் நல்லது ” என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. மூன்று நாட்கள் போராடிய பிறகு குழந்தைக்கு பால் கொடுக்க பெண்ணவள் சம்மதிக்க, பவுடர் பாலை பழக்கம் செய்து கொண்டிருந்த குழந்தை மார்பு காம்பில் வாயை வைக்கமாட்டேன் என்று அடம். அதையும் சமாளித்து பால் குடிக்கவைக்க நர்ஸ் முயற்சி செய்தார். ஆனால் பால் சுத்தமாக வரவே இல்லை. பசியில் குழந்தை வீறிட்டு அழுவதை வெறுப்புடன் பார்த்தாள் திவ்யா.

குழந்தையை கங்காரு குட்டி போல தன்னுடனே அடக்கிக்கொண்டு அலைந்தான் அவன். குழந்தை பிறந்து மூன்றாவது நாள் தாயும் சேயும் வீட்டுக்கு வந்தார்கள். “குழந்தையை கவனிக்க ஆயா போட்டுடு.என்னால முடியாது.”என்று தீர்த்து திவ்யா சொல்லிவிட வேறு வழியில்லாமல் அதையும் செய்தான். மாலை வீட்டுக்கு அவன் வந்த பிறகு குழந்தை அவனிடம் தான். தயா தன் அப்பாவிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.

தயா பிறந்து ஆறாவது மாதத்தில் “எனக்கு இங்கே மூச்சு முட்டுது டா.. என்னால இங்கே இருக்க முடியல.எதையோ இழந்த மாதிரி, பறிகொடுத்த மாதிரி பீல் ஆகுது.என்னோட இஷ்டமே இல்லாம என்னை நீ அம்மாவாக்கிட்ட.என்னால ஜீராணிக்க் முடியல. வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துட்டு இருந்திருக்கலாம். நா.. ப்ச் விடு. இனிமே என்னோட ஏமாற்றங்களோட என்னால இங்கே இருக்க முடியாது.வெளி உலகத்துக்காக வேஷம் கட்டி நடிக்க எனக்கு முடியாது.என்னோட வாழ்க்கையை நா முழுதா அனுபவிச்சு வாழனும். அதுக்கு தடையா வர எதையும் என்னால அனுமதிக்க முடியாது “என்றுவிட்டு ,தான் கையெழுத்திட்ட விவாகரத்து பத்திரத்தை அவன் முன் வைத்தாள்.

திகதி ஒரு மாதம் முன்பே அவள் கையெழுத்து இட்டுவிட்டாள் என்று சொல்லியது. கையெழுத்து போட்டுவிட்டு மிகுந்த யோசனை செய்திருக்கிறாள் என்று புரிந்தது. இதற்க்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்று புரிந்தவனாக தனது கையெழுத்தை போட்டு அவளிடம் கொடுத்துவிட்டான். அவளும் அதற்கு மேல் அங்கே இருக்கவில்லை. கிளப்பிவிட்டாள். இருவருக்கும் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறார்கள் என்று தெரியும். அவ்வளவு தான். அதற்கு மேல் அங்கே ஒன்றும் இல்லை. மூணு வருஷங்கள் இருவர் வாழ்க்கையிலும் அநேக மாற்றங்களை கொடுத்துவிட்டது.

அவன் வேறு யாருமில்லை.நம் விஜயராகவன்தான் என்று புரிந்து கொண்டீர்கள் தானே! இதுதான் அவன் வாழ்க்கையின் பாதி எழுதப்பட்டு விட்ட பக்கங்கள்.

தயா போதும் என்று குழந்தைக்கு தகப்பனாக அவன் நின்றிருக்க, திவ்யா தனக்கு துணை வேணும் என்று லிவ் இன் வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டாள்.

இனி வரும் காலங்கள் நமக்கு சொல்ல என்ன வைத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நானும் காத்திருக்கிறேன்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page