மௌனத்தால் உடைந்த காதல் 24

சித்ரா நேசனை அழைத்துக் கொண்டு மகன் ,மருமகள் இருக்கும்  வீட்டிற்கு வந்து இறங்கினார்.

குழந்தைகள் அழுத்தப்படி வீட்டு வாசலையும், தாயையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தனர்.

வேகமாக முதலில் இறங்கிய சித்ரா தான் உள்ளே ஓடினார். “என்ன ஆச்சு ?”என்று மருமகளை தொட்டு பார்க்க.

உடல் சுடவில்லை என்றவுடன் , முகத்தில் மீண்டும் தண்ணீர் தெளித்து எழுப்பி அவளை தோளில் சாய்த்து உட்கார வைத்தார். .

“என்ன ஆச்சு ?என்ன பண்ணுது?” என்று கேட்க.

“உடம்பு ரொம்ப சோர்வா இருக்குன்னு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். ஆனா, என்னால் எதுவும் செய்ய முடியல,  தல பாரமா இருக்க மாறி  இருக்கு. ஒரு மாதிரி மயக்கமாவே இருக்கு”

” என்ன பண்ணுது? சாப்டியா இல்லையா ? வேலை வேலைனு ஓடி உடம்ப பாக்கமா இருக்கியா ?” என்று அதட்டியப்படி கேட்டுக் கொண்டிருந்தாலும், வேகமாக கணவனை மருமகளை பார்க்க கூறிவிட்டு, கிச்சனுக்கு சென்று  ஏதாவது இருக்கிறதா ?என்று உருட்டிப் பார்த்தார்.

எதுவும் இல்லை என்ற பிறகு ,பால் பிரிட்ஜில் இருப்பதை உணர்ந்து, அதை காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து மருமகளுக்கு புகட்டினார்.அடுத்த நொடி குடித்த அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டு வந்திருந்தாள்.

அவளுக்கு உதவி செய்தார் சித்ரா. அப்போதும் ஒரு மாதிரி இருக்கவும்,” ஏங்க  நீங்க ஆட்டோ ஒன்னு  கூட்டிட்டு வாங்க. இப்படியே இருந்தா சரிப்பட்டு வராது, ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போலாம்”  என்றார்.

சரி என்று நேசனும் ஆட்டோ பிடித்துக் கொண்டு வர .

நேசன் குழந்தைகளை தன்னுடன் வண்டியில் ஏற்றிக்கொள்ள. மாமியாரும், மருமகளும் ஆட்டோவில் மருத்துவமனை சென்று இறங்கினர் .

அங்கு கூட்டமாக இருக்கவும்,சிறிது நேரம் கழித்தே மருத்துவரை பார்க்க வேண்டியிருந்தது. அப்படி வெளியே உட்கார்ந்து இருக்கும் பொழுது சுதாவின் போன் அடிக்க ஆரம்பித்தது.

தந்தை போன் செய்தாலும் செய்வார் என்பதனால், குழந்தைகள் செல் போனை கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்தனர்.

கமலா போன் செய்யவும், கமலாவிடம் விவரத்தை கூறியிருந்தனர்.

“ஏண்டா இந்த நேரத்துல உங்க பாட்டிய பயமுறுத்துறீங்க. தனியா வேற இருக்காங்க?” என்று சித்ரா தான் அதட்டினார்.

“விடு சித்ரா .சின்ன பசங்களுக்கு என்ன தெரியும்” என்றார் நேசன்.

அடுத்த கால் மணி நேரத்திலேயே அவர் வீட்டிற்கு அருகில் மருத்துவமனை இருந்ததால், ஆட்டோ பிடித்து வந்திருந்தார்.

மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு நேசனுக்கு போன் செய்து எந்த மருத்துவமனை என்று கேட்டுக் கொண்டு அவரும் வந்துவிட.

குழந்தைகளுடன் நேசன் வெளியே உட்கார்ந்து இருக்க. சித்ரா தான் மருமகளை டாக்டர் பார்க்க அழைத்து சென்றிருந்தார். கமலா வந்தவுடன் தானும் டாக்டர் பார்க்க செல்வதாக  கூறி உள்ளே சென்று இருந்தார்.

” என்ன ஆச்சு ? என்ன பண்ணுது”என்று கேட்க .
 

காலையிலிருந்து சோர்வாக இருப்பதாக கூறியிருந்தாள்.

” இதேபோல ரொம்ப நாளாக  இருக்கா ? இல்லை இன்னைக்கு தான?”என்று டாக்டர் கேட்க.

” இப்போ ஒரு வாரமா அப்பப்ப ஒரு மாதிரி சோர்வா இருந்துச்சு. ஆனா ,இன்னைக்கு ரொம்ப முடியல” என்றாள் டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தபடி,

மருமகளை தான் பார்த்தார் சித்ரா.கமலாவும் தன் மகளை தான் பார்த்தார் .’இதை சொல்லவில்லையே!’ என்ற எண்ணம் இருந்தது  இருவருக்கும்.

“அவன் கிட்ட சொன்னியா ?அவன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல. உனக்கு உடம்பு சரியில்லைன்னு “என்று  சித்ரா குறைபட்டார்.

” சரி சரி இருங்க” என்ற டாக்டர்.

“சரி மா வேற  என்ன பண்ணுது ?”

அவளும் தனக்கு இருப்பவற்றை கூற.

அவளின் சிம்டம்ஸ்களை கேட்ட மருத்துவர்,”நாள் எதுவும் தள்ளிப் போய் இருக்க மா ?எத்தனை நாள் தள்ளி போயிருக்கு?” என்றார்.

அதன் பிறகு பெற்றவர்கள் இருவரும் அவளை பார்க்க.

அவளோ பேந்த பேந்த முழித்தபடி  இருந்தாள்.அவளுக்கு அப்படி ஒன்று ஞாபகத்தில் இல்லை. கமலாவும் சரி ,சித்ரவும் சரி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதன் பிறகு , கமலா தான் அவருக்கு தெரிந்த தேதி வைத்து, “ஆமாம் டாக்டர். இந்த மாசம் தலைக்கு குளிக்கல. ஒரு மாசம் முன்ன குளிச்சது தான் ” என்றார்.

“தேதி தெரியுமா மா?”
 

“ஆறாம் தேதி குளிச்சா .40 நாளைக்கு மேல தாண்டி இருக்கு”

  சுதா அதிர்வாக மாமியாரையும் , தாயையும் பார்த்தாள்.

இருவரும் டாக்டரை பார்த்தனர். அவரும் ,”சரி வாங்க டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் “என்று சுதாவை  அழைத்துக்கொண்டு சென்று ,டெஸ்ட் பண்ணி விட்டு வந்தார்.

வரும் போதே புன்னகையுடன் வந்தவர்,” உங்க மருமக மாசமா தான் இருக்காங்க. ரெண்டு மாசம் ஆகுது”

அப்படி ஒரு சந்தோஷம் பெற்றவர்கள் இருவருக்கும்.

சுதாவை ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தமிட்டனர்.

இப்போது வரை அவள் பேந்த பேந்த முழித்தபடி தான் உட்கார்ந்து இருந்தாள்.

சத்து மாத்திரை எழுதி கொடுத்தவர்,” கொஞ்சம் சோர்வா இருக்காங்க ,ரொம்ப அனிமிக்கா இருக்காங்க ,சத்தான பொருளா ஆகாரமா கொடுங்க. பெருசா ஸ்ட்ரைன் பண்ணிக்க வேணாம்”

“டாக்டர் அவ வேலைக்கு போயிட்டு இருக்கா” என்றார் சித்ரா .

“இருக்கட்டும் மா கூட அதான் ஒன்னுக்கு ரெண்டு பெரியவங்க இருக்கீங்க இல்ல பார்த்துக்கோங்க”என்றார்.

  சரி என்று வெளியில் வந்தனர்.

நேசன் தான் என்னமோ ஏதோ என்று பயந்தபடி இருந்தார். வெளியில், குழந்தைகளும் பயத்துடன் இருக்க.

மகளை ஒரு இடத்தில் உட்கார வைத்த கமலா. பேரப்பிள்ளைகளின் அருகில்  வந்தார்.

நேசன் தான் ” என்ன  சொன்னாங்க சித்ரா? என்ன ஆச்சு ?”என்று கேட்க.

” ஏங்க நம்ம திரும்ப தாத்தா பாட்டியாக போறோம் .நம்ம சுதா மாசமா இருக்காங்க ” என்றார் சந்தோசமாக,

அவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி..குழந்தைகள் இருவருக்கும் ஒன்றும் புரியாமல் இருக்க. குழந்தைகளின்  கையை இரு பாட்டிகளும் பிடித்தவர்கள். “உங்களுக்கு ஒரு தம்பி பாப்பா வரப்போகுது” என்றவுடன் இருவரும் குதித்து  தங்களது சந்தோஷத்தை கொண்டாடினர். ஆனால் ,இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தது என்னவோ சுதா தான் .அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

இப்படி ஒன்றை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகமே காட்டி கொடுத்தது. ஆனால், பெரியவர்கள் யாரும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்த ஆதித்தான் வீடு பூட்டப்பட்டு இருப்பதை உணர்ந்து, யாரையும் காணவில்லை என்று சுதாவிற்கு அழைத்து இருந்தான்.

அப்பொழுது நேசனே மருத்துவமனைக்கு வர சொல்லி இருந்தார்.” என்ன ஆச்சுப்பா ?”என்றவன் யாருக்கு என்னவோ என்று அடித்து பிடித்து வந்திருந்தான் .

நேசன் எதுவும் கூறவில்லை . மகன் பயப்படுவான் என்று உணர்ந்து, அடித்து பிடித்து வந்தவுடன் மனைவி ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்க, மற்றவர்கள் அனைவரும் தனியாக இருக்க, ஒன்னும் புரியாமல் “என்னாச்சு ?”என்று கேட்டான் .

“சுதாக்கு தான்  உடம்பு முடியல”

” என்னாச்சு சுதா!” என்று பதறினான்.

” எல்லாம் உன்னால தாண்டா” என்றார் சித்ரா புன்னகையுடன்.

” நான் என்ன மா பண்ணேன்”

“நீ என்ன பண்ணல”

” மா.கேட்டா பதில் சொல்லாம என்னாலனு சொல்லிட்டு இருக்க” என்றவன் கத்த,

“அம்மு என்ன ஆச்சு? என்ன செய்து?”  என்றான் குரலை தாழ்த்தி அவளிடம்,

அவள் தயக்கத்துடன் அவனின் கையை பிடிக்கவும்.

“வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா டா”  என்றார்.

“என்ன மா .அதிகமா குரலை உயர்துற ?”

“நான் என்னடா குரலை உயர்துறேன்” என்று இவரும் அவனைவிட இரண்டு மடங்கு குரலை உயர்த்த ,

தாய் குரலில்  தன் குரலை அடக்கியவன். பாவமாக மனைவியை பார்த்தான்.

அவளும் சோர்வாக இருப்பதை உணர்ந்தவன் .”சரி வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்றவன்  “வா சுதா போலாம் “என்று அவளின் கையைப் புடிக்க.

“அவ என் கூட ஆட்டோல வந்துப்பா. நீ  பிள்ளைகளை மட்டும் கூட்டிட்டு போ” என்றார்.

இப்பொழுது அவன் பாவமாக பார்க்க.” நீங்களும் அண்ணன் கூட போங்க அண்ணி. நான் சுதா கூட ஆட்டோவில் வரேன். நீங்க போனா தான் சரியா வரும் ” என்றார் கமலா.

சம்பந்தி எதற்காக அவ்வாறு கூறுகிறார் என்பதை உணர்ந்த சித்ராவும்” சரி பார்த்து கூட்டிட்டு வா கமலா” என்று கூறிவிட்டு, இருவரையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு ,ஆதி பிள்ளைகளையும் ,நேசன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஆதி இப்போது இருக்கும்  வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

சுதா வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே ஆலம் கரைத்து வைத்த சித்ரா ,ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் சுதாவை வரவேற்க.

ஒன்றும் புரியாமல் திருத்திருவென முழித்தபடி இருந்தான் ஆதி.

“அம்மாக்கு என்ன ஆச்சு டா?” என குழந்தைகளிடம் கேட்க.

குழந்தைகள் சந்தோஷத்தில் குதுகளித்தபடியே ” அப்பா அது “என்று இருவரும்  அவனின் ஆளுக்கு ஒரு காலை கட்டி கொண்டு ,”நம்ம வீட்டுக்கு புது தம்பி பாப்பா வரப்போகுதே!” என்று கூச்சலிட்டனர்,

ஆதிக்கு ஒன்றும் புரியாமல் “என்னம்மா சொல்றாங்க?” என்றான்.

சித்ரா தான் “என்ன டா இப்ப பசங்க சொன்னது உனக்கு புரியல?” என்றார்.

“ஏன்மா நீ வேற வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே பேசுற? என்னன்னு விஷயம் சொல்லுமா ?என் பொண்டாட்டிக்கு என்னன்னு கேட்டா வாயை கூட திறக்க மாற்றிங்க. அவளும் ஒரு மாதிரியா சோர்ந்து போய் இருக்கா”

“அவளே வாயாடிச்சு போய்த்தான உட்கார்ந்து இருக்கா” என்று சிரித்தவர்.  கிச்சனுக்கு சென்று சர்க்கரை எடுத்துக் கொண்டு வந்தவர்.மகனின் வாயில் சர்க்கரையை அள்ளிப் போட்டு,”நீங்க ரெண்டு பேரும் அப்பா, அம்மா ஆக போறீங்க டா திரும்ப. சுதா மாசமா இருக்கா. நாள் தள்ளி போயிருந்தது கூட தெரியாம வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கா . புள்ளைங்க வீட்டுக்கு வரும்போது, சோர்ந்து போய் வந்து சீக்கிரமாவே வேலை விட்டு வந்து படுத்து இருந்திருக்கா. அம்மா சோர்ந்து போய் இருக்கவும் சரி தூங்கட்டும்னு சொல்லி வேலையை பார்த்துட்டு இருந்து இருக்குங்க. நேரம் ஆகியும் அப்பவும் அவ தூங்கிட்டு இருக்கவும் பயந்து,  உன் அப்பாவுக்கு போன் போட்டு இருக்காங்க, அவர்  எடுக்கலனு, எனக்கு போட்டுச்சுங்க. பதறி ஓடி வந்தா, மயக்கமாவே இருந்தா, பால் கொடுத்தா அதையும் வாந்தி எடுத்துட்டா ,அப்புறம் தான்  ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம். அங்க போனதுக்கு அப்புறம் தான் விவரம் தெரியுது “என்று முழு மூச்சாக விவரத்தை கூறி முடித்தார்.

அவனும் இப்பொழுது திருதிருவென முழிக்க. மகனைப் பார்த்த நேசனுக்கு  சிரிப்பை அடக்க முடியவில்லை. அவனின் நிலை புரிந்தது. அவன் தோளில் கை வைத்த தந்தையை கட்டிக்கொண்டு அழுதான்.

” டேய் ஆதி என்னடா ?நல்ல விஷயம் நடந்திருக்கும்போது இப்படி அழுற?ஒன்னும் இல்லடா “என்று நேசன் தோளில் தட்டிக் கொடுத்தார். அதன் பிறகு, அமைதியாக இருந்தான்.

அவ்வப்போது சுதா கணவனை பார்த்த படியும், தாயிடம் பேசிக் கொண்டும், அமைதியாக இருந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை இருவரும் மாறி மாறி பார்த்துக் கொள்ள.

அதை உணர்ந்த பெரியவர்களும் அமைதியாக இருந்தனர்.சரி என்று வேகமாக சித்ரா தான் சமையலில் இறங்க. கமலாவும் உதவி செய்தார்.

சாப்பிட்டவுடன்,” குழந்தைங்க  எங்க கூட இருக்கட்டும் .நாங்க இன்னைக்கு இங்கதான் இருக்க போறோம். நேரம் ஆயிடுச்சு “என்றார் சித்ரா.

கமலா “கிளம்புகிறேன்” என்று கூறியவரை.

” என்னத்த ஏன் உங்க மக வீட்டுல இருக்க மாட்டீங்களா ?”என்று கேட்டிருந்தான்.

“அப்படி இல்ல  மாப்ள .அங்க எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே இருக்கு அதான்”

“என்ன கமலா  இது.நானும் தான் அங்க போட்டது போட்ட படி கிடக்குது.நாளைக்கு போய் பார்த்துக்கலாம் “என்று கண்ணை காட்டினார் .

மகனுக்கும், மருமகளுக்கும் தனிமை கொடுக்க வேண்டி,

  அவர் தனியா கூட பார்த்துக் கொள்ளலாம் .அது அவருக்கு பிரச்சனை இல்லை .ஆனால், கமலாவும் இங்கே இருக்கட்டும் என்று எண்ணினார் .

“சரி அண்ணி” என்றவரும் அங்கு தங்கிக் கொள்ள.

இருக்கும் மற்றொரு அறையில் குழந்தைகளுடன் கமலாவும் ,சித்ராவும் இருப்பதாக முடிவு செய்தனர்.

நேசன் ஹாலில் படுத்துக் கொள்வதாக கூறினார்.

“அண்ணா நீங்களும் வாங்க படுத்துக்கலாம். அங்க விசலாம தான் இடம் கிடக்கு”

“இல்லமா.நீங்க படுங்க. நான் இப்படியே கொஞ்ச நேரம்  காத்தாட இருந்துட்டு வந்து படுத்துகிறேன். ” என்றவர்.

“மருமக சோர்வா இருக்கு பாருங்க” என்று மகனின் தோளில் தட்டி அனுப்பி வைத்தார்.

குழந்தைகளும் தாய் தந்தையுடன் போவேன் என்று அடம் பிடிக்காமல், பாட்டி உடன் ரொம்ப நாட்களுக்குப் பிறகு, தூங்கப்போவதால் சந்தோஷத்துடன் பாட்டிகளுடன் சென்று படுத்துக்கொண்டனர்.

சிறிது நேரம் தாத்தாவுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து விளையாடிவிட்டு வந்து படுத்தனர். ரூமுக்கு சென்ற பிறகு ஆதிக்கு கைகால் புரியாமல் வேகமாக சுதாவை கட்டி அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் .

“என்ன சுதா சொல்றாங்க அம்மா?” என்றான்.

அவளும்,” எனக்கும் ஒன்னும் புரியல ஆதி. நான் இத பத்தி யோசிக்கவே இல்ல”என்றாள்.

இருவருமே அப்படி ஒன்றை யோசிக்கவில்லை .தங்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட நாட்களில், ஆனால் ,இப்படி ஒன்றை இருவருமே யோசிக்கவில்லை.” கொஞ்சம் கவன குறைவா இருந்துட்டோமோ?” என்றாள் சுதா

“ஏன் சுதா உனக்கு விருப்பமில்லையா ?”என்றான்.

” அச்சோ ஆதி அப்படி இல்ல. நீங்க வேற” என்று வேகமாக அவனை கட்டி அணைத்தவள், ” நான் இத எதிர்பார்க்கல ஆதி அவ்ளோ தான்”

“நானுமே எதிர்பார்க்கல தாண்டி”என கட்டியணைத்தான். அதன் பிறகு ,அவர்களுக்கான நேரமாகியது .

அவள் சோர்ந்து போயிருக்கவும், தன் மடியிலே படுக்க வைத்து தட்டிக் கொடுத்து, தூங்கியதும் தன் மேல் படுக்க வைத்துக் கொண்டான்..

குழந்தைகள் தவறாக எண்ணிவிடுவார்களோ ?என்று இருவருக்குமே ஒரே போல தோன்ற.இருவருமே மாற்றி மாற்றி தங்களுக்குள்ளே குழந்தைகள் புது குழந்தையின் வரவை எதிர்நோக்கி சந்தோஷத்துடன் இருந்தது நினைவு கூர்ந்து ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதல் கூறி தங்களுடைய சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டு உறங்கியும் இருந்தனர்.

மறுநாள் காலையில் சித்ரா தான் ” கிளம்புங்க போகலாம் .இந்த வீட்டை காலி பண்ணிட்டு”  என்றார்.

” என்ன மா விளையாடுறியா ?” என்றான் ஏகத்துக்கும் ஆதி.

“நான் விளையாடல. இதுக்கப்புறம் இங்கேயே உங்கள விட்டு வைக்கணும்னு எனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்ல. உங்களுக்கு நேரம் கொடுக்கணும்னு கேட்டு இருந்தீங்க, நானும் மருமகளை இனி எதுவும் பேசிட மாட்டேன்னு சொல்லிட்டேன். இனியும் என் வாயிலிருந்து ஒத்த வார்த்தை வராது, சரியா ,நீங்க நம்பினாலும் சரி, நம்மலனாலும் சரி ,இனி என் மருமகளை இங்க தன்னந்தனையா விட்டுட்டு போக எனக்கு விருப்பம் கிடையாது. ஒன்னுக்கு ரெண்டு உசுரா இருக்கா,வேலை வேலைனு  பொழுதுக்கும் ஓடுறா அவள கவனிக்கிறதே இல்ல. சத்து குறைவா இருக்குன்னு சொல்லி இருக்காங்க ,இப்போ ஒன்னுக்கு ரெண்டு உசுரா இருக்கா, என் பேரப்பிள்ளை மேல உள்ள பாசம்னு சொல்ல மாட்டேன். என் மருமகளை பார்க்க வேண்டியதும் என்னோட கடமை தான். கெளம்பு “என்றார்.

ஆதி தான் மறுத்து கொண்டு இருந்தான்.

“அப்பா என்னப்பா ?”என்றான்.

  நேசன் வாய் திறக்கவில்லை.

” ஏம்பா அமைதியா இருக்கீங்க ?”

“இப்போ நான் எதுவும் பேசுற நிலைமையில இல்ல ஆதி ” என்றவர் மேற்கொண்டு பேசவில்லை .

கமலா கூட ,”நீ போ சுதா .அங்க போறது தான் சரியா வரும்”

” நீங்க என்ன கமலா. அங்க போறது தான் சரியா வரும் சொல்ற? நீயும் என் கூடவே வா. கொஞ்ச நாள இருந்தாலும்,நீ எந்த அளவுக்கு தனியா இருந்து கஷ்டப்படுறனு  நானும் உணர்ந்துட்டேன். என்னதான் அங்க என் கூட உங்க அண்ணன் இருந்துமே கூட ,நான் தனியா இருக்க மாதிரிதான் தோணுச்சு. இத்தனை வருஷம் யாரும் இல்லாம நீ தனியா இருக்கும்போது உனக்கு எந்த அளவுக்கு வலி இருந்திருக்கும் எனக்கு புரியுது. நீயும் இப்ப எங்க கூடவே வா அங்க “

“இல்ல  அண்ணி அது சரிப்பட்டு வராது .பொண்ணு கொடுத்த வீட்ல “

” உன்ன  அங்க யாரு என்ன கேள்வி கேட்க போறாங்க ?”

“இல்ல அண்ணி நான் வரப்போக இருக்கேன் .ஆனா அங்க வந்து அப்பப்போ தங்கறது கூட சரியா வரும் .ஒன்னு ரெண்டு நாள்.. ஆனா, அங்கவே இருக்கறது சரிப்பட்டு வராது .எனக்கு தனியா இருந்து பழக்கம் ஆயிடுச்சு .இனி எந்த பிரச்சனையும் இல்லை “

நேசனும் கூட கூப்பிட்டு பார்த்தார்.

” இல்ல நா வரல” என்று ஒரே வார்த்தையாக உறுதியாக நின்றார். ஆனால், இறுதி வரை சுதா எதுவும் பேசாமல் இருக்க.

” கெளம்பு சுதா”  என்றார் சித்ரா இப்போது அவளிடம் நேரடியாக,

“அம்மா திரும்பத் திரும்ப என்னை கத்த வைக்காதீங்க. வந்தீங்களா போனீங்களா ஒன்னும் பிரச்சனை  இல்ல. ஆனா, அவ விருப்பம் இல்லாம இன்னொரு முறை எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டேன்னு திரும்பத் திரும்ப என்ன சொல்ல வைக்காதம்மா “என்று அவன் குரலை உயர்த்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்க.

பெரியவர்கள் பாவமாக அவனைப் பார்த்தபடி நின்றனர்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page