அப்பா என்று தயங்கிக் கொண்டு நின்ற சேரனை வெற்றுப் பார்வை பார்த்தவர், “சொல்லு” என்று விட்டு மீண்டும் தளர்ந்த நடையுடன் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.
அத்தனை வேண்டுதல்களோடு நின்றிருந்தனர் இந்துவும், நித்யாவும்.
“இந்து குழந்தையை வச்சுட்டு நீ இங்க இருக்க வேண்டாம். பாப்பாவ தூக்கிக்கிட்டு நீ, நித்யா, அத்தை எல்லாம் வீட்டுக்கு போங்க. இங்க நாங்க பாத்துக்குறோம்”.
“இல்லண்ணா, நானும் அம்மா கூட இருக்கேன். அம்மா கண் விழிச்சதும் நான் போறேன்” என்று அழுகையுடன் கூறினாள் நித்யா.
“நித்யா இப்படி எல்லாம் அழக்கூடாது. அதான் டாக்டர் சீரியஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க இல்ல. அம்மா எப்படி டேப்லெட் போடாம விட்டாங்கன்னு நாமலும் சரியா கவனிக்காம விட்டுட்டோம். எப்பயுமே சரியா டேப்லெட் போட்டுடுவாங்க அதே மாதிரி போட்டு இருப்பாங்கன்னு நினைச்சு விட்டுட்டோம். இனி அம்மா விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும். நீ அண்ணியோட வீட்டுக்கு போடா” என்றான் அவளின் தலையை தடவிக் கொடுத்து.
“ப்ளீஸ் அண்ணா நான் இருக்கேனே.. அம்மா கண் விழிக்கட்டும் நான் போறேன்” என்று அழுகையோடு அவள் பிடிவாதமாய் கூறவும்.
“நித்யா இங்கேயே இருக்கட்டும்ங்க. அத்த கண் விழிச்சதும் வரட்டும். அங்க வந்தாலும் அழுதுகிட்டு தான் இருப்பா. அத்த கண் விழிச்ச பிறகு வந்தா அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். நானும் அம்மாவும் மட்டும் அண்ணனோட போறோம். நீங்களும் இங்கேயே இருங்க” என்று விட்டு கிளம்பி விட்டாள் இந்து.
*****
“ஐயோ! என்ன பண்றீங்க பாவா! தள்ளிப் போங்க சமைக்கணும். கிளாசுக்கு வேற நேரம் ஆகுது” என்று பரபரத்தாள் பவித்ரா.
“ஓய்! என்ன ரொம்ப ஓவரா பண்ற.. வர வர நீ என்னை கண்டுக்கிறதே இல்ல. வீட்ல போரடிக்குதுன்னு சொன்னியேனு தான் ஃபேஷன் டிசைனிங் சேர்த்து விட்டேன். நீ முழு நேரமும் அதை மட்டும் தான் கவனிக்கிற.. என்னை கவனிக்கிறதே இல்ல”.
கைகள் அவளின் இடையை சுற்றி இருக்க. அவனின் மீசை முடி அவளின் கழுத்து வளைவில் குறுகுறுப்பூட்டிக் கொண்டிருந்தது.
“சேர்த்து விட்டது நீங்க தானே.. இப்போ அதையே பாக்குறேன்னா வேற என்ன பார்க்கிறதாம்” என்றாள் சிணுங்கிக்கொண்டே.
“ஏன் பாக்க வேற விஷயமா இல்ல.. என்னை பாக்கலாமே” என்றவனின் குரல் மாற்றமே அவளுக்கு எதையோ உணர்த்த அவனை நோக்கி திரும்பி நின்றவள்.
“போதும். நேரம் ஆகுது. உங்களுக்கு ஆபீஸ் இல்லையா.. மணி ஆகுது பாருங்க” என்றாள் அவனின் நெஞ்சின் மீது தன் கையை வைத்து தள்ளியவாறு.
“இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்” என்றான் அவளின் காதருகில் குனிந்து கிசுகிசுப்பாக.
அவனின் மீசை ரோமங்கள் வேறு குறுகுறுப்பூட்ட, “அச்சோ பாவா, எனக்கு கிளாஸ் இருக்கு” என்றாள் கெஞ்சலாக.
சட்டென்று அவளிலிருந்து பிரிந்தவன் தன் இடுப்பில் இருகரம் குற்றியவாறு, “அப்போ உனக்கு நான் முக்கியம் இல்ல, கிளாஸ் தான் முக்கியம் அப்படித்தானே”.
எங்கே அவன் கோபித்துக் கொண்டானோ என்று நொடியில் பவித்ராவின் முகமே மாறிவிட்டது.
பெரிதாக இவளிடம் அவன் தன் கோபத்தை காண்பித்தது இல்லை என்றாலும், இந்த இடைப்பட்ட நாட்களில் அவனின் மன வருத்தத்தை முகத்தில் நிறையவே கண்டு இருக்கிறாள்.
சட்டென்று அவனை நெருங்கி நின்றவள் அவனின் நெஞ்சில் தலை சாய்த்து அணைத்துக்கொண்டு, “சரி, நான் கிளாஸ் போகல” என்றாள் முணுமுணுப்பாக.
அதில் பக்கென்று சிரித்து விட்டவன், “என்னடி இப்படி இருக்க.. நான் என்ன சொன்னாலும் அதுக்கு எஸ், ஓகே தானா.. நோவே கிடையாதா.. முடியாதுன்னு சண்டை போடு டி” என்றான் அவளின் தடையை பற்றி முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவாறு.
“சண்டையா எதுக்கு?”.
“அப்புறம் நான் என்ன சொன்னாலும் தலையாட்டிட்டே இருப்பியா”.
“ஆமா, நீங்க எது சொன்னாலும் அதை நான் மறுக்க மாட்டேன். இப்போ என்ன கிளாஸ் தானே நாளைக்கு பாத்துக்கலாம்” என்றாள் கண்சிமிட்டி புன்னகைத்தவாறு.
அதில் தன் இதழ் மடித்து புன்னகையை அடக்கியவன், “வேண்டாம் பவி, அப்புறம் என்னை சோதிக்கிறதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு செஞ்சிடுவேன். பாவம், உனக்கு தான் கஷ்டம்” என்றான் மிரட்டல் விடுப்பது போல்.
“பரவாயில்ல, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் தாங்கிப்பேன்”.
அவளின் வார்த்தைகள் அத்தனை உள் அர்த்தத்தை தாங்கி இருந்தது. அவர்கள் இருவரின் மனதிற்குமான தனி பாஷை..
ஒவ்வொரு வார்த்தையின் உள் அர்த்தத்தையும் இருவருமே அத்தனை அழகாய் புரிந்து கொள்வார்கள்.
“அப்படியெல்லாம் என் பவிக்கு எந்த கஷ்டமும் வரவிடமாட்டேன். அப்படி ஏதாவது கஷ்டம் வரணும்னாலும் அது என்னை தாண்டி தான் வரணும்” என்றவனும் அத்தனை உணர்ந்து கூறியிருந்தான்.
எத்தனை அழகிய காலைப் பொழுது, ஒவ்வொரு விடியலும் அவர்களுக்காக ஒவ்வொரு புது புது கதைகளுடனே விடிகின்றது.
அவளுடன் விடியும் விடியலும், மூழ்கும் இரவும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு புதிய பரிமாணம் தான்.
ஹாலில் வீற்றிருக்கும் யஷ்வந்தின் செல்பேசி இசைக்க.
அவனின் டி-ஷர்டை பற்றி இழுத்தவள், “பாவா போன்”.
“கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விடுறாங்களா பாரு, அதுக்குள்ள மூக்கு வேர்த்துடும் எல்லாம் அந்த சாரதியா தான் இருக்கும். இன்னும் லீவ் போட்டது அவன் கிட்ட சொல்லல” என்று கூறிவிட்டு தன் செல்பேசியை ஹாலிற்கு சென்று எடுத்தவனின் புருவம் யோசனையில் முடிச்சிட்டது.
அங்கிருந்து வந்த இத்தனை நாட்களில் ஒரு நாளும் சேரன் இவனுக்கு அழைத்ததோ, பேசியதோ கிடையாது.
அவர்களின் மனநிலையை உணர்ந்த இவனுமே தள்ளியே இருந்து கொண்டான். அவர்களுக்கான கால அவகாசமும் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு.
இன்று திடீரென சேரனின் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் ஒரு நொடி புருவம் சுருங்க பார்த்தவன் அழைப்பை ஏற்றான்.
எதிர் முனையில் சேரன் கூறிய செய்தியில் மொத்தமாய் இடிந்து போய் விட்டான் யஷ்வந்த்.
அடுப்பை அணைத்துவிட்டு வந்த பவித்ரா யஷ்வந்த் அதிர்ந்து போய் நிற்பதை கண்டு அவனின் தோளில் மெல்லமாய் தட்டியவள், “என்ன ஆச்சு?” என்று இதழ் அசைவோடு தன் கையை ஆட்டி கேட்கவும் தான் சுயநினைவு பெற்றவன், “எந்த ஹாஸ்பிடல்?”.
அவனின் குரலிலும், முகத்திலும் எந்த ஒரு உணர்வுமே பிரதிபலிக்கவில்லை.
அவன் மருத்துவமனையை பற்றி விசாரிக்கவுமே பவித்ராவிற்கு படபடப்பு தொற்றிக் கொண்டது. யாருக்கு என்னவோ என்ற அச்சம் பரவ வயிற்றுக்குள் கிலியை கிளப்பியது.
“சரி வரேன்” என்றவன் அணைப்பை துண்டிக்கவும்.
அவனின் கையைப் பற்றிக் கொண்டவள், “என்னாச்சு பாவா?” என்றாள் பதட்டமாக.
“அம்மாவுக்கு உடம்பு முடியலையாம் பவி. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. போய் பாத்துட்டு வந்துடுவோம்”.
அத்தனை இயந்திர தன்மையாய் வெளியேறி இருந்தது அவன் வார்த்தைகள்.
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் மருத்துவமனையை அடைந்திருந்தனர்.
யஷ்வந்த் அவசர சிகிச்சை பிரிவினுள்ளே நுழைந்ததுமே அவனை ஓடி வந்து கட்டிக்கொண்ட நித்யா ஓவென கதறி அழுக்க தொடங்கி விட்டாள்.
“அண்ணா அம்மா..” என்றவளுக்கு வார்த்தைகளே வெளிவரவில்லை.
தேம்பி தேம்பி அழுதவளின் முதுகை தட்டிக் கொடுத்தவன், “அழாத, அம்மாவுக்கு எதுவும் ஆகாது” என்று விட்டு அவளுடனே முன்னேறினான்.
சட்டென்று அவனிடமிருந்து இரண்டு அடி பின் தேங்கி நடக்கத் தொடங்கினாள் பவித்திர பாரிஜாதம்.
இருக்கும் சூழலில் அது யஷ்வந்தின் கருத்திலும் பதியவில்லை. அவனின் முழு எண்ணமும் அவனின் தாயைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அவரைப் பார்த்த பின்பு தான் அவனின் மனதின் தவிப்பு அடங்கும் என்று உள்ளுக்குள் ஒரு வித பயம் உருவெடுக்க. வெளியே உணர்வுகள் அற்று நடந்து சென்றான்.
திருமூர்த்தியின் அசைவற்ற தோரணையே யஷ்வந்தை கூறுபோட போதுமானதாய் இருந்தது. இவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாரே தவிர்த்து, ஒரு வார்த்தையும் பேசி விடவில்லை.
அதிலேயே மொத்தமாய் மரித்து விட்டான். எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்த பார்வை அது.
வெறும் வெற்றுப் பார்வையாகவோ, கோபப்பார்வையாகவோ இல்லாமல், உன்னை எப்படி எல்லாம் வளர்த்தவளை இப்படி ஒரு கதிக்கு ஆளாக்கி விட்டாயே என்ற பார்வை, முற்றிலும் உடைந்து போய் விட்டான். ஆனால், வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.
அப்பொழுது தான் பரமேஸ்வரியை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர் புதிதாய் நிற்கும் யஷ்வந்தை கண்டு, “நீங்க தான் அவங்க மகனா?”.
“ஆமா டாக்டர்”.
“அவங்க உங்கள தான் கேட்டுட்டே இருக்காங்க. போய் பாருங்க” என்று விட்டு நகர்ந்தார்.
அவர் கூறிய வார்த்தையில் அவனின் மனம் முழுக்க வலி வேரூன்றி உயிர் வரை தீண்டியது.
ஏதோ நடை பயிலும் மழலை போல் நடையில் அப்படி ஒரு தள்ளாட்டமும், நடுக்கமும். யாரையும் பார்க்கவில்லை. மெதுவாய் அந்த அறைக்குள் நுழைந்தான்.
மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் அவனை ஈன்றெடுத்த தாய்.
இது நாள் வரை இப்படி ஒரு நிலையில் அவரை கண்டிடாதவன் மொத்தமாய் உடைந்து போனான்.
“ம்மா” என்ற வார்த்தைகள் வெறும் காற்றாய் வெளியேற.
கண்களில் இருந்து கண்ணீர் கீழ் இறங்கி விட்டிருந்தது. மெல்லமாய் அடி மேல் அடி வைத்து அவரை நெருங்கியவன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவாறு அவரின் ஓசி குத்தப்பட்ட கையை மெதுவாய் தீண்டினான்.
மயக்க நிலையில் இருந்த அந்த தாய்க்கு தன் மகனின் ஸ்பரிசம் தெரிந்து விட்டதோ என்னவோ.. அவரின் விரல்கள் மெல்லமாய் அசைந்து கொடுத்தது.
அவரின் கையை எடுத்து தன் கண்களில் ஒத்தி கொண்டவன், “சாரிமா, எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் நான் உங்கள அப்படியே விட்டுட்டு போயிருக்க கூடாது. அங்கேயே இருந்து போராடி இருக்கணும். கூடவே இருந்து என்னை பார்க்க பார்க்க உங்களுக்கு கோபம் அதிகமாகி எதுவும் ஆகிட கூடாதேன்ற பயத்தில் தான் அங்கிருந்து வெளியே வந்தேன். கடைசியில அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தான் புரிஞ்சுது. என்னை மன்னிச்சிடுங்கம்மா”.
மனதிற்குள்ளேயே ஆயிரம் முறை, லட்சம் முறை மன்னிப்பை யாசித்து விட்டான். நேரத்தில் சேர்க்கப்படாத மன்னிப்பும் வீண் தானே..
“கொஞ்சம் வெளியில இருங்க சார் டாக்டர் இப்போ ரவுண்ட்ஸ் வர நேரம்” என்று செவிலியர் யஷ்வந்தை வெளியே அனுப்பவும்.
தன் முகத்தை அழுந்த துடைத்தவன் பார்வை ஒரு இடத்தில் நில்லாமல் பரிதவிப்போடு தன் அன்னையின் முகத்தையே தழுவி தழுவி வாசலை எட்டி இருந்தது.
வெளியே வந்தவன் அப்பொழுது தான் பவித்ராவை தேடினான். சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
நேராக அவள் அருகில் சென்று சுவற்றில் தலை சாய்த்தவாறு ஒற்றை காலை சுவற்றில் ஊனியபடி 2 கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் திணித்துக்கொண்டு நின்று விட்டான்.
யாரிடமும் எதுவும் பேசவில்லை..
சமாதானம் கூறவில்லை..
சண்டையிடவில்லை..
மன்னிப்பை யாசிக்கவில்லை..
அவன் இருக்கும் மனநிலையில் பேசக்கூட அவனுக்கு திறனாய் இல்லை அப்படியே நின்று விட்டான்.
“ஏன் இங்க வந்துட்டீங்க?” என்றவளை ஏறிட்டு பார்த்தவன், “உன் இடம் இங்கனா, அப்போ என் இடமும் இங்க தான?”.
இந்த நிலையிலும் அவனின் இத்தகைய வார்த்தை அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
