அத்தியாயம் 14

 

​அவ்வளவு நேரம் கழித்து சென்றும் மரகதம் மயூரிக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார். தலைகுனிந்த படியே வந்தவள், மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தாள் மரகதம் மென்புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

 “சாப்பிடலாமா?” என்று கேட்டவர், 

தான் இன்ஸ்டன்டாக சமைத்திருந்த உப்புமாவை பரிமாறினார். அவரை இனம் புரியாத பார்வையுடன் பார்த்த மயூரி, அமைதியாக உண்டாள்.

​உணவு தொண்டையைத் தாண்டி இறங்க மறுக்க, கண்கள் கலங்காமல் இருக்க கைகளை இறுக மூடி, பற்களை கடித்து மனதை கட்டுப்படுத்தினாள் மயூரி. அவள் கையை மென்மையாகத் தட்டிக்கொடுத்தார் மரகதம். 

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் தன்னைச் சமன் செய்தவள், கண்களைத் திறந்து மாமியாரைப் பார்த்து முயன்று புன்னகைத்தாள்.

​”என் மகனை வெறுத்துறாத மயூரி,” என்றார் இறைஞ்சுதலாக. ​”க்கும்…என்னமோ தெரியல அத்த… அவரை வெறுக்க மனசு வரமாட்டேங்குது. வெறுக்க எத்தனை காரணங்கள் இருந்தாலும், அதைத் தாண்டி அவரோட மனசு லேசானதுன்னு எனக்கு புரியுது. ஏனென்றால்…” என்று நெடிய மூச்சு ஒன்றை வெளியேற்றியவள், 

சட்டென முகத்தை சரி செய்து கொண்டாள்.

“​தைரியம் தானே..எல்லாம்..!” என்றாள் ஆர்.ஜெ. மீராவாக மாறி 

அவளின் புன்னகையிலும் மன உறுதியிலும் மெச்சுதலாக பார்த்தார் மரகதம்.மயூரி அவரை சிரிப்புடன் பார்த்து 

 “அத்தை…எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாளே… இவ ரொம்ப நல்லவன்னு நினைக்கிறீங்களோ?” என்றாள் சிரிப்புடன்.

​மரகதமும் புன்னகையுடன், “இல்ல… சிச்சுவேஷனல் சாங் மனசுக்குள்ள ஓடுச்சு. ‘வெளியே சிரிக்கிறேன் உள்ளே அழுகிறேன்’..!”என்று பாடி காட்டினார் மரகதம். 

இருவரும் கலகலவென சிரித்தனர்.

​திறந்திருந்த அறை கதவின் வழியே கின்கினியாய் ஒலித்த மனைவியின் சிரிப்பு, ரஞ்சனுக்கு மனதில் ஏனோ இனம் புரியாத நிம்மதியைத் தந்தது. அந்த நிம்மதியில் அப்படியே உறங்கியும் போனான்.

உண்டு முடித்து படுக்க வந்தவள், ஆழ்ந்து தூங்கும் ரஞ்சனை பார்த்து பெருமூச்சு விட்டபடி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டவள் வெகு நேரம் கழித்தே தூங்கினாள்.

​காலையில் மயூரி கட்டாயத்தின் பேரிலேயே விழித்தாள். அருகே ரஞ்சன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் மார்பு சீராக ஏறி இறங்குவதை சில நொடிகள் பார்த்தவள், அவன் முகத்தைப் பார்த்தாள். 

எவ்வளவு நிர்மலமாக இருக்கிறது இந்த முகம்! நேற்று அவளைச் சித்திரவதை செய்தது இதுதான் என்றால் யாராவது நம்புவார்களா? மனதினுள் வடிவேல் நகைச்சுவை ஓடியது.

 ‘மூஞ்சி சார்…மூஞ்சி… என் மூஞ்ச பாத்தாதான் இவருக்கு ஏதாவது, வில்லத்தனம் தோணும் போல’ என்று எண்ணியவள், விரைந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

​அவள் குளித்து உடைமாற்றி வெளியே வரவும், ரஞ்சன் கண்களைத் திறக்கவும் சரியாக இருந்தது. அவன் எழுந்து உடற்பயிற்சிக்குத் தயாராகி வரும் முன் மயூரி கிளம்பிக் கீழே இறங்கிவிட்டாள். 

அடுக்களையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது.

​”மயூரி… உதை வாங்கப்போற!” என்ற தாயின் குரலைத் தொடர்ந்து, 

“அத்தை! உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. பண்ணீங்க எனக்கு கெட்ட கோபம் வரும்… பாத்துக்கோங்க. சரளா அக்கா… அவர் என்னை உள்ள வச்சு பூட்டினா..!, இவங்க ஏதாவது பண்ணி திறந்து விடுவாங்களா? இவங்களும் தோட்டத்துல வந்து காரைப் பார்த்துட்டு உட்கார்ந்துக்கிட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷத்துல உயிரே போயிருச்சு,” என்றாள்.

​”ஏன் மயூரி?” என்று மரகதம் கேட்க, 

“பின்ன என்ன அத்த… உங்களுக்கு ஏதாவதுன்னா உங்க பையன் ‘உனக்காக தான் எங்க அம்மாவுக்கு இப்படி ஆயிடுச்சு’ன்னு காருக்குள்ளேயே எனக்கு சமாதி கட்டிட மாட்டாரு? தாஜ்மஹால் மாதிரி ‘கார் மஹால்’ தான் என் நிலைமை,” என்று சிரித்தாள்.

​ரஞ்சன் அனைத்தையும் கேட்டுக் கொண்டே கீழே இறங்கியவனுக்கு ஆச்சரியம்தான். ‘எப்படி இவளால் சிரிக்க முடிகிறது? அவனின் கடுமை இவளுக்கு வலிக்கவே இல்லையா?’

 அவளின் மன உறுதி ரஞ்சனின் மனதில் அவளை உயர்த்தியது’ஆனால் ‘அவள் நடிக்கிறாள் நம்பாதே’ என்று மனது ஒருபுறம் அவனை கிண்டல் செய்ய, அவன் முகம் மீண்டும் இறுகியது.

​டைனிங் ஹாலை அவன் கடக்கும் போது சரியாக மரகதமும்,மயூரியும் வெளியே வந்தனர். ரஞ்சன் மயூரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகிச் சென்றான். மயூரி ஒரு நெடிய மூச்சுடன் உணவு மேஜையில் அமர்ந்தாள். 

உண்டு முடித்தவள், ரஞ்சன் உடற்பயிற்சி முடித்து வரும் முன்னே கல்லூரிக்குச் செல்வதாக மரகதத்திடம் கூறி, கண்ணடித்துவிட்டு வானொலி நிலையம் நோக்கிச் சென்றாள்.

அங்கிருந்து ​கல்லூரிக்குச் சென்றவள் பிரியாவை உற்சாகத்துடன் எதிர்கொண்டாள். ஆனாலும் மனதில் பிரியா நேற்று ரஞ்சனை ஹீரோ, காதல் என்று பேசியது உறுத்தவே செய்தது.

​அவளைக் கண்டதும் அந்த ஞாபகம் வர, கண்களில் இருந்த வேறுபாட்டையும் உதட்டில் விரக்தி புன்னகையையும் கண்ட பிரியா, 

“என்ன மயூரி, உன் சிலபஸ் எப்பயும் போல இல்லையே? உன்னை ஏதும் உன் ஆளு திட்டினாரா?” என்றாள்.

​”அது ஒன்றுதான் குறை… நீ வேற ஏன் டி?” என்று சலித்துக் கொண்டாள் மயூரி.

​”என்னடி நேத்து சூடான பீசா மாதிரி கும்முனு இருந்த… இன்னைக்கு பீசால பிச்சுப் போட்ட ஓரத்துண்டு மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?” என்றாள் பிரியா அவள் அருகே அமர்ந்தபடி

“இப்ப நீ சஸ்பென்சை உடைக்கல.. உன் மண்டைய உடைச்சிருவேன்..” என்றாள் பிரியா .

ஒரு நெடிய மூச்சுடன் முன் தினம் நடந்த அனைத்தையும் கூறினாள் மயூரி.

​”எப்பா..நேத்து தான் ஹீரோ மாதிரி நின்னுகிட்டு இருந்தார்…பார்த்தா வில்லத்தனம் பண்ணி வச்சிருக்கார். ஆமா எனக்கு ஒரு டவுட்… மிஸ்டர் ரஞ்சனோட சிலபசே  வில்லனா? இல்ல உன்ன பாத்தா மட்டும் தான் வில்லன் மூடுக்கு போறாரா?” என்று தீவிரமாகக் கேட்டாள் பிரியா.

​அதைக் கேட்ட மயூரிக்குச் சிரிப்பு வர, அதைக் கண்ட பிரியா மனம் லேசானது.

 “ஏன் இந்த சிரிப்பு.?.இப்ப நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஜோக் சொல்லலையே?”

​”இல்லடி… இன்னைக்கு காலையில தான் எந்திரிச்சப்ப,அவர் தூங்கிட்டு தான் இருந்தார். அப்ப அவர் முகத்தைப் பார்த்தா அவர்தான் இவ்வளவு பெரிய வில்லன்னு யாரும் நம்ப மாட்டாங்கன்னு எனக்கு தோணுச்சு. அப்போ எனக்கும் இதே டவுட்டு தான் வந்தது,” என்று மீண்டும் சிரித்தாள் மயூரி.

​பிரியாவோ ஒரு பெரிய மூச்சை நெஞ்சில் கை வைத்து வெளியேற்றினாள். 

மயூரி “ஏன் டி என்னாச்சு” என்று கேட்க, 

“இல்ல… மிஸ்டர் ரஞ்சன் நார்மலாவே வில்லன்னு தெரிஞ்சா.. இப்பவே உன் பழக்கத்தை கட் பண்ணி இருப்பேன். ஆனா அவர் பார்ட் டைம் வில்லன் மாதிரி தான் தெரியுது, அதான் நிம்மதியா இருக்கு,” என்றாள்.

​அவளை முறைத்த மயூரி, “உனக்கு என் வாழ்க்கை வேடிக்கையா இருக்கா?” என,

 “அப்படி இல்லடி… உன் மூஞ்சிய பாத்தாதான் அவரு வில்லன் மூடுக்கு போறாருன்னா, உன் மூஞ்சியை அவர் பார்க்காத போது நான் சேஃப் தானே? அதை நினைச்சு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு,” என்றாள்.

​அவள் புடனியில் தட்டிய மயூரி, “ஆனா உங்க மூளை முக்கியமான ஒண்ண மிஸ் பண்ணிருச்சு அறிவாளி மேடம். நீங்க அவர் என் மூஞ்சிய பார்க்கும்போதுதானே கூட இருப்பீங்க? இல்ல அவர்கிட்ட தனியா போய் ஏதும் நூறு கோடிக்கு டீலிங் பேசப் போறீங்களா?” என்று கேலி செய்தாள்.

​”ஆமாம்ல! என்னோட நிம்மதியில இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறத நான் எப்படி மறந்தேன்? மய்யூ… நீ எனக்கு பெஸ்ட் பிரண்ட் தானே? இப்பவே என் கூட இருக்கிற பிரண்ட்ஷிப்பை கட் பண்ணி என் உயிரைக் காப்பாத்து டீ ,” என்று கெஞ்சினாள் பிரியா.

​மயூரி பிரியாவின் தோளில் கை போட்டபடி, “நண்பி..டி!.” என்று தன்னோடு இறுக்கிக் கொள்ள, 

பிரியா வானத்தைப் பார்த்து, “சீக்கிரம் எதாவது மஞ்ச மாக்கானா பார்த்து லவ் பண்ணி ஓடி போயிரு.. பிரியா..இவ உன்ன சிங்களாவே இறுதி ஊர்வலத்துக்கு ரெடி பண்ணாம ஓய மாட்டா..!,” என்றாள். 

இருவரும் கலகலத்து கொண்டனர்.

​மயூரி இவ்வளவுதான். தன் வீட்டில் இருக்கும் போதும் இப்படித்தான். மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் அதைச் சிரித்துப் பேசி மனதை ஆற்றிக் கொள்வாள். 

அன்றைய நிகழ்வின் பின் வேலையின் காரணமாகவோ அல்லது மயூரியின் மனதிடம் பிடித்ததாலோ, ரஞ்சன் மயூரியைக் கண்டு கொள்ளவே இல்லை.

​அவன் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. திருமணமாகி இந்த ஒரு மாதத்தில் அவ்வளவு நெருக்கமும் இல்லை, விலகலும் இல்லை. 

அந்த சனிக்கிழமை காலை விரைவாகவே ரஞ்சன் கிளம்பிவிட்டான். மயூரி நிதானமாக எழுந்து கீழே வந்து உணவு உண்டு, தன் மாமியாருடன் கலகலப்பாகவே அந்த நாளைக் கழித்தாள்.

​ஞாயிற்றுக்கிழமை மாமியாருடன் தன் தாயைக் காணச் சென்றாள் மயூரி. அவளின் திடீர் வருகையில் அவர்கள் திகைத்தாலும், மயூரியின் புன்னகை முகத்தைக் கண்டு நிம்மதி அடைந்தார்கள். 

மகேந்திரன் தாமதமாக எழுந்து வந்தவன், தங்கையையும் தங்கை மாமியாரையும் முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

​மயூரியின் தாய் தந்தை இருவருமே அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். மயூரி பிரியாவின் வீட்டிற்கும் மாமியாரை அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நட்பாக இருப்பதை கண்டு மெச்சினார் மரகதம். மரகதத்தின் எளிமையான பேச்சு அனைவரையும் மகிழ்வித்தது.

​மாலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு, மயூரிக்கு பிடித்தமான சிவன் கோவிலுக்கு மாமியாரை அழைத்துச் சென்றாள். தன் திருமணம் வேண்டாம் என்று கோவிலில் ஒளிந்து கொண்ட இடம் என்று அனைத்தையும் காட்டி மாமியாரிடம் கலகலத்துக் கொண்டிருந்தாள்.

​”அப்போ என் மகனா உன்னை கண்டுபிடிக்கலையா? நீயாவே போய் மாட்டிக்கிட்டியா?” என்று சிரித்தார் மரகதம்.

​”கிட்டத்தட்ட அப்படித்தான் அத்தை. இந்த பிரியா பெரிய அறிவாளி மாதிரி கோயில் வாசல் வரை வந்துட்டு போனதும் … உங்க பையன் ஸ்மெல் பண்ணி கண்டுபிடிச்சிருப்பார்,” என்றாள் சோகமாக.

​”அவன் எத்தனை தடவை அவங்க அப்பாகிட்ட ‘காலேஜ் போறேன்னு’ சொல்லிட்டு, மொட்டை மாடியில் ஒளிஞ்சிருந்து, அவர் வெளியே கிளம்புனதும் என்கிட்ட வந்து காசு வாங்கிட்டு படத்துக்கு, பார்ட்டிக்குன்னு போயிருப்பான். அந்த திருட்டுத்தனத்துல உன்னை கணிச்சிருப்பான்,” என்றார் மகனின் குறும்புகளை நினைத்து.

​”அத்தை உண்மையாவே உங்க பையன் இப்படி எல்லாம் பண்ணி இருக்காரா?” என்றாள் ஆச்சரியமாக.

​”அவன் பண்ணாத திருட்டுத்தனமே இல்லை… ஆனா படிப்புலயும் கெட்டி,” என்றார் பெருமையாக. மனதில் பழைய நினைவுகள் வேதனை தர பெருமூச்சுடன் அமைதியானார்

“எப்ப மாறினாரு?” என்று மயூரி கேட்டாள் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில்.

​சற்று நேரம் கோவிலில் இருந்த சிலைகளை நோக்கியபடி இருந்த மரகதம், மயூரி மீண்டும் அவர் தோள் தொட்டு “அத்தை” என்று அழைக்கவும் சுயநினைவிற்கு வந்தவர், 

“பழச மறக்க நினைத்தாலும் அது நம்ம மனசுல ஒரு சுனாமியை அடிக்காம போறதில்ல,” என்றார் ஒரு பெருமூச்சுடன்.

​மயூரி அவரைப் பாவமாகப் பார்த்து, “விடுங்க அத்தை… ரொம்ப கஷ்டமாக இருந்தா சொல்ல வேண்டாம்,” என்றாள். 

அவளின் வார்த்தைகளில் அவளைக் கண்டு புன்னகைத்தவர், “கண்டிப்பா கூடிய சீக்கிரம் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன் மயூரி,” என்றவர் நேரமாவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினார்கள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page