மொழி – 23

“நீ சந்தோஷமா இருக்கியா யாஷ்?”.

“ம்மா”.

“சொல்லு”.

அதற்குள் மருத்துவமனையில் பணத்தை கட்டி விட்டு திருமூர்த்தியும், சேரனும் அறைக்குள் நுழைந்தனர். 

அவர்களை பார்த்தவன் அமைதியாக அமர்ந்திருக்கவும்.

“ஆனா, நான் சந்தோஷமா இல்ல. எனக்கு நீ வேணும். என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியாது. ப்ளீஸ், எங்களோடவே வந்துடேன்”. 

என்ன கூறுவான்.. அவளை விட்டுவிட்டு அவனால் வர முடியுமா.. நிச்சயமாய் முடியாது. தெரிந்து கொண்டே இப்படி கேட்பவரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.

தன் தந்தையை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான்.

“அப்பா கூப்பிடுங்க” என்று சேரன் கூறவும்.

“வந்து தொலையட்டும். வேற என்ன பண்றது?” என்று கோபமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார் திருமூர்த்தி.

“அதான் அப்பாவே சொல்லிட்டாங்களே யாஷ். வந்துடேன்.. எங்களோடவே வந்துடேன்” என்று கண்களில் ஆசை மின்ன கேட்பவரிடம் மறுக்க முடியாமல் அவருக்கு சம்மதமாய் தலையசைத்தான். 

வெளியே வந்த திருமூர்த்தி கடுகடுவென்று அமர்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து மகன்கள் இருவரும் வெளியே வரவும்.

“இவளையும் இழுத்துகிட்டு தான் அங்க வர போறியா?” என்றார் கோபமாக.

“நான் இருக்க இடத்துல தான் என் பொண்டாட்டியும் இருப்பா” என்று தெளிவாக கூறிவிட்டான்.

அவருக்கு கோபம் தலைக்கேறி விட்டது.

“இப்போ உனக்கு சந்தோஷமாடா.. உன்ன எப்படி எல்லாம் சீராட்டி வளத்தா.. மத்த ரெண்டு பேரையும் விட உன்மேல தானடா உயிரே வச்சிருந்தா. இப்படி அவளோட உயிரையே எடுக்க பாத்துட்டியே டா பாவி. அப்படி என்னடா பண்ணா இவ உனக்காக.. இவளுக்காக மொத்த குடும்பத்தையும் தூக்கிப்போட்டுட்டு, இப்படி அவளையும் கொண்டு வந்து படுக்க வச்சுட்டியே.. கொஞ்ச நாள்ல என்னையும் படுக்க போட்டுடு.. நாங்க எல்லாம் போய் சேர்ந்ததும் சந்தோஷமா வாழு” என்று ஆத்திரத்தோடு கத்தி விட்டார்.

பவித்ராவிற்கு அங்கு நிற்கவே முடியவில்லை. உடல் கூசியது.. கண்களில் கண்ணீர் வடிய தலை குனிந்து அமைதியாக நின்றிருந்தாள். 

“அப்பா என்ன பேசுறீங்க நீங்க?” என்று சேரன் அவரை தடுக்க முற்படவும்.

“விடு சேரா.. என் மனசுல இருக்குற மொத்தத்தையும் கொட்டுனாலாவது என் ஆதங்கம், கோபம் எல்லாம் குறையுதானு பார்ப்போம். மனுஷனாடா நீ எல்லாம்.. பெத்தவங்கள இப்படி சித்திரவதை பண்றியே நீ எல்லாம் என்ன டா புள்ள.. இப்படி குத்துயிரா அவள கொண்டு வந்து போட்டுட்டல்ல.. ஆனா, இந்த நிலைமையிலும் பைத்தியக்காரி உன்ன தானே நினைக்கிறா.. நீ அவளோட வந்து இருக்கணும்னு தானே ஆசைப்படுறா.. இப்ப கூட எங்களுக்காக இவள தலை முழுகிட்டு வரமாட்டியா” என்று கோபமாக பவித்ராவை சுட்டிக்காட்டி இருந்தார்.

“அப்பா இப்போ அவ என்னோட பொண்டாட்டி. அவளோட தான் என் வாழ்க்கை. இது என்னைக்கும் மாறாது. எங்கள ஏத்துக்குனுமா வேண்டாமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும். உங்களோட மனசு மாற இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சரி நாங்க காத்துட்டு இருப்போம். அப்படி இல்லையா, உங்க கோபம், ஆதங்கம், ஆத்திரம் எல்லாம் தீருற வரைக்கும் என்னை அடிச்சுக்கோங்க, திட்டிக்கோங்க.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்கப்பா. ஆனா, என்னால அவள விட்டுட்டு வர முடியாது” என்று திடமாய் கூறிவிட்டான்.

“பாத்தியாடா.. பாத்தியாடா சேரா.. எப்படி பேசறான் பாரு. எல்லாம் எங்க தலை எழுத்து.. இப்படி எல்லாம் நடக்கிறத பாக்கணும்னு எழுதி இருக்கு. யாரை சொல்லி நொந்து போறது” என்று தலையில் கை வைத்தவாறு மீண்டும் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

ஒருவழியாய் பரமேஸ்வரியை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டில் என்ன நடக்கும் என்பது அவளுக்கும் திண்ணம். இருப்பினும், அவனுக்காக வந்தாள். அவள் நினைத்தது தான் அங்கே அரங்கேறியும் இருந்தது.

யாரும் ஒரு வார்த்தையும் பவித்ராவிடம் பேசவில்லை. உள்ளே வருமாறு அழைக்க கூட இல்லை. அனைத்து பேச்சுவார்த்தையும் யஷ்வந்துடனே முடிந்துவிட்டது. 

அதிலும், திருமூர்த்தி அத்தனை அவமானப்படுத்தும்படி பேசினார் யஷ்வந்திற்கு தெரியாமல். 

எதையுமே அவள் பெரிது படுத்தவில்லை. யஷ்வந்திடம் வெளிப்படுத்திக் கொள்ளவும் இல்லை. அவன் ஒருவனுக்காக அத்தனை அவமானங்களையும் துச்சமென தாங்கி நின்றாள்.

பரமேஸ்வரியின் பார்வை கூட அவளில் படிந்து மீண்டது எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

இவளும் யாரின் மரியாதையையும், சுமூகமான பேச்சுவார்த்தையையும் எதிர்பார்த்து இங்கு வரவில்லையே.. அவள் வந்ததற்கு யஷ்வந்த் ஒருவன் மட்டும் தானே காரணம். அவனுக்காக எதையும் தாங்கிக்கொள்வேன் என்று அவள் எப்பொழுதோ முடிவு செய்துவிட்டாள். 

சற்று நேரம் தன் தாயுடன் பேசி இருந்து விட்டு, “மா அப்ப நான் கிளம்புறேன். அடிக்கடி வந்து உங்கள பார்த்துப்பேன். கண்டதை யோசிச்சு மனச கெடுத்துக்காதீங்க”.

அவனின் கையை பதட்டமாக பிடித்துக் கொண்டவர், “ஏன் போற இங்கேயே இரு. பாரு, யாருமே அவள ஒரு வார்த்தை கூட பேசலையே.. அப்புறம் ஏன் போறேன்னு சொல்ற?”.

“மா நினைச்ச உடனே எல்லாமே சரியா போயிடாது. அவளும் உயிரும் உணர்வும் இருக்க ஒரு மனுஷி தான். இங்க வந்ததுல இருந்து ஒருத்தர் கூட அவள வானு கூப்பிடல. ஒரு வார்த்தை கூட அவகிட்ட யாரும் பேசல. ஆனா, அவ எதைப்பத்தியும் கவலைப்படாம அமைதியா நிக்கிறா. எல்லாம் என் ஒருத்தனுக்காக மட்டும் தான். இன்னும் நீங்க அவள எத்தனை அவமானப்படுத்தினாலும் அவ அமைதியா தான் தாங்கிக்கிட்டு நிப்பா. என் ஒருத்தனுக்காக அவ எவ்வளவு வேணாலும் தாங்குவாமா.. அதுக்காக அவ கஷ்டப்படுறத பார்த்துகிட்டு என்னாலயும் இருக்க முடியாது இல்ல.. எல்லா காயமும் ஆற நேரம் எடுக்கும். அப்பாவோட மனசு மாறட்டும் அப்புறமா இங்கேயே உங்களோடவே இருக்கேன். அதுக்காக நான் இங்க வரவே மாட்டேன்னு நெனச்சு திரும்ப உடம்ப கெடுத்துக்காதீங்க. வருவேன்.. அடிக்கடி உங்கள பாக்க வருவேன்.. பவித்ராவோட..”.

“சரி பா” அவருக்கு இதுவே போதுமானதாய் இருந்தது.

எங்கே இவனின் உறவு அப்படியே மறைந்து போய் விடுமோ என்று அப்படி பயந்துவிட்டார். இத்தனை தூரம் அவன் வீட்டிற்கு வந்ததே அவருக்கு ஆசுவாசமாய் இருந்தது. இனி அடிக்கடி வருவேன் என்று அவனின் வாய்மொழியாக கூறிய பின்னர் தான் நிம்மதி அடைந்தார்.

அங்கிருந்து விடைபெற்று பவித்ராவுடன் கிளம்பியவன் வீட்டை அடையவும். எதுவும் பேசாமல் அவளை இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

அவளின் தற்போதைய மனநிலைக்கு இந்த அணைப்பும், அவனின் அரவணைப்பும் மிக மிக தேவைப்படும் ஒன்றாய் இருந்தது. அவனுக்குள் பாகாய் கரைந்தாள்.

“உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா பவி?”.

“என்ன சொல்றீங்க?”.

“யாரும் உன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல இல்ல.. நிச்சயமா உனக்கு ஹர்ட் ஆகி இருக்கும். ஆனா, எதையுமே நீ காட்டிக்கல. எனக்காக தானே”. 

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல பாவா. எனக்காக நீங்க எத்தனையோ செஞ்சிருக்கீங்க. அதையெல்லாம் சொல்லிக் காட்டினாலும் உங்களுக்கு பிடிக்காது. அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. இது என்ன இதுக்கு மேல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி, உங்களுக்காக உங்க கையை புடிச்சிட்டு உங்களோடவே நான் தாங்கி நிற்பேன்”. 

“தேங்க்ஸ் பவி” என்றான் கரகரத்த குரலில்.

“தேங்க்ஸ் வேற மாதிரியும் சொல்லலாம்னு யாரோ சொன்ன போல ஞாபகம்” என்றாள் நிலைமையை சீராக்கும் பொருட்டு.

அதில் அவளை பார்த்து அழகாய் புன்னகைத்தவன், “சோதிக்கிற பவி” என்று கலங்கிப்போன குரலில் கரகரப்பாய் கூறியவன்.

அவள் மொத்தமாய் தனக்குள் புதைந்து போகும் அளவிற்கு அழுத்திக் கொண்டான்.

அன்றைய நாள் அப்படியே தான் கரைந்தது. தன் குடும்பத்தாருடன் மீண்டும் ஒன்றிணைய இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ என்று தான் எண்ணிக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.

இப்படி சட்டென சீராகும் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை. அதை பற்றியே அவளிடம் கூறிக் கொண்டிருந்தான். தன் மனதில் இருக்கும் எண்ணத்தை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி அவளிடம் கொட்டிக் கொண்டிருந்தான்.

அவன் குடும்பத்தை பிரிந்து அவனுக்குள் எத்தனை வருத்தம் இருக்கின்றது என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

இப்பொழுது அவர்களுடன் இணைந்ததில் அவனுக்கு எத்தனை மகிழ்ச்சி என்பதையும் உணர்ந்து கொண்டாள்.

அவனின் மகிழ்ச்சியின் பிம்பமாய் இவளின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை நெலிந்தாடியது.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் வீட்டிற்கு சென்றும் வந்தும் என இருந்தார்கள். 

விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள் என முக்கிய விசேஷங்களில் எல்லாம் இணைந்து கொள்வார்கள்.

ஆனால், அங்கே சென்றுவிட்டால் பவித்ராவின் வாசம் முழுவதும் அறைக்குள்ளேயே தான். வெளியே அவள் வந்தாலும், யாரும் அவளுடன் பேசுவது கிடையாது. அவர்களின் பார்வையை எதிர்கொள்ள திறனாய் இன்றி அறைக்குள்ளேயே முடங்கி விடுவாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் யஷ்வந்த் பழையபடி வீட்டில் பேச, சிரிக்க என அனைவரிடமும் ஒன்றி சகஜமாகி விட்டான். 

திரு மூர்த்தி மட்டும் இன்னமும் அவனுக்கு பாராமுகம் தான் காட்டிக் கொண்டிருத்தார். 

*****

“நாளைக்கு தீபாவளினா சரியா நாளைக்கு தான் வருவியா.. இன்னைக்கு வரணும்னு தெரியாது. ஏன் இப்படி பண்ற யாஷ்” என்று சலித்துக் கொண்டார் பரமேஸ்வரி.

“மா ஆஃபீஸ் முடிஞ்சு இப்ப தான் வீட்டுக்கே போயிட்டு இருக்கேன். வீட்டுக்கு போனதும் பவித்ராவை கூப்பிட்டு வரேன்”.

“சரி சரி” என்று அழைப்பை துண்டித்து விட்டவருக்கு எப்படி பவித்ராவை இவனின் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவது என்பது தான் புரியவில்லை.

ஆனால், நிச்சயம் அவனின் வாழ்க்கையில் இருந்து அவளை வெளியேற்ற முடியாது என்பது மட்டும் நன்கு விளங்கி விட்டது. 

முழுமனதாய் ஏற்கவும் முடியாமல், விளக்கவும் முடியாமல் தாயும் தந்தையும் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்தவன், “பவி என்ன பண்ற வீட்டுக்கு போகணும்ல” என்றவாறு அறைக்குள் வரவும்.

அவளோ தயாராக வைக்கப்பட்டிருந்த உடை பெட்டிகளை காண்பித்தவள், “நான் எப்பவோ ரெடி” என்றாள் தன் புருவத்தை ஏற்றி இறக்கி.

அவளை வேகமாக அணைத்துக் கொண்டவன், “சூப்பர் பவி! நான் சொல்றதுக்குள்ள எல்லாமே ரெடி பண்ணிட்ட” என்றான் மெச்சும் பார்வையோடு.

“பின்ன, நாளைக்கு தீபாவளி நாளைக்கு போனா நல்லாவா இருக்கும். ஒரு நாளாவது முன்னாடியே போகணும்ல”. 

“எத்தன நாள் முன்னாடி போனாலும் அங்க யாரும் உன்கிட்ட பேசக்கூட போறதில்ல” என்றான் வருத்தமாக. 

“ஐயோ பாவா! அது என் பிரச்சனை. நான் பாத்துக்குறேன். உங்க கிட்ட எல்லாரும் பேசுறாங்களா.. நீங்களும் எல்லார்கிட்டயும் பேசுறீங்களா.. அத பத்தி மட்டும் பாருங்க. இன்னும் எத்தன நாள் ஆனாலும் சரி, நான் பொறுமையா காத்துட்டு இருப்பேன். அவங்க மனசு மாறி வரட்டுமே” என்று அத்தனை புரிந்து கொண்டு பேசியவளை, மேலும் மேலும் அள்ளிக் கொள்ள தான் அவனுக்கு தோன்றியது.

“ம்ம்.. இப்படியே நின்னா கிளம்ப வேண்டாமா” என்று அவனின் அணைப்பை சுட்டிக்காட்டி கூறியவள் அவனை தன்னிலிருந்து பிரித்தவாறு, “சீக்கிரம் கிளம்புங்க” என்று அவசரப்படுத்தி கிளம்பிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page