“மெல்லிய உன் பார்வைத் தீண்டல் என் விழிகளை கணக்கச் செய்து விடுகிறது இது உன்னால் ஏற்படும் மாற்றம் “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று..
பாகம் -29
வெளியே வேலை இருப்பதாக வீட்டில் சொல்லி விட்டு காலையிலேயே அலுவலகம் வந்து விட்டான். மாலை தான் வருவேன்என்று சொல்லு தான் சென்றான். அவன் எப்போதும் அப்படி தானே வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பான்.
ஆரண்யாவிற்காக பரிசுப் பொருள் வாங்க வந்திருந்தான். கடையில் நிறைய பொருட்களைப் பார்த்தவனுக்கு ஒரு பொருளின் மீது அவனது கவனம் பதிந்தது. அதை வாங்கிக் கொண்டான். வரும் வழியில் நேற்று அவள் தலையை அலங்கரித்த மல்லிகை தென்பட, அதையும் வாங்கிக் கொண்டான்.
விஜய் கூட அலுவலத்தில் கேட்டான் “என்ன டா வீட்டுக்கு போகலையா “
“இல்லை டா சாயந்திரம் வெளிய கூட்டிட்டு போகணும் அதான் வீட்டுக்கு போய்ட்டா அவளை பார்த்துட்டா பிளான் எல்லாம் வேற மாதிரி மாறிடும். அவளுக்கு சர்ப்ரைஸா பண்ணணும்ல அதான் “
“நீ கலக்கு மச்சான். நிச்சயம் இன்னைக்கு எல்லாம் சரி ஆகிடும் “
விஜய் சொன்னதற்கு சிரித்தான்.வீட்டிற்கு வந்தவன் ஹாலில் அனைவரும் அமர்ந்து சிரித்து பேசிகொண்டிருந்தனர். ஜோதாவும், ரத்தோரும் கூட ஊருக்கு செல்லவில்லை மறுநாள் கிளம்புகிறார்கள். அனைவருக்கும் முன்பே ஆரண்யாவிடம் சென்றவன் அவளுக்காக வாங்கி வந்த மல்லிகைப்பூவினை கொடுத்தான். அவளும் வாங்கிக் கொண்டாள். வெளியே போகணும் சீக்கிரம் கிளம்பு என்று வர்மா சொன்னதும் சிரிப்புடன் சென்றாள். இதைப் பார்த்த பெரியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வர்மன் கொடுத்த மல்லிகைப்பூ, அவனுக்காக அவனுக்கு பிடித்த காட்டன் புடவை. அலுவலகத்தில் அவனுடன் இருந்த நேரங்களில் அவன் பார்வை தீண்டிய நினைவுகள் ஒரு நொடி என்றாலும் அதில் இருந்த ரசனை அவளுக்கு புரிந்தது. அதற்க்கு காரணம் இந்த காட்டன் புடவைகள் என்பது அவளுக்கு தெரிந்து தான் இருந்தது.
இன்றுடன் அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பின்னும் எதற்கு இந்த இடைவெளி. அவள் அவனை ஏற்கத் தொடங்கி விட்டாள்.
இயற்கை படர்ந்த பூங்கா வண்ண வண்ண மலர்களால் மலர்ந்து அந்த இடத்தை மணம் வீசி மனதை மயக்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு வாங்கி வந்த பரிசினை மறைத்து வைத்திருந்தான். சிறிது நேர மௌனம் இருவருமே பேச நினைத்து பேசாமல் மெல்லிய தயக்கத்தினை ரசித்துக் கொண்டு பார்வைகளில் ரசனை கொண்டு அமர்ந்திருந்தனர்.
“ஆரு சுக்கு காபி குடிக்கலாமா அங்க பாரு விக்குறாங்க ” அவன் கை காட்டிய இடத்தில் மிதிவண்டியில் விற்றுக் கொண்டிருந்தார் முதியவர். அவளுக்கும் பிடிக்குமே சம்மதமாய் தலை அசைத்தாள்.
அரை மணி நேரம் கடந்தும் சுக்கு காபி வாங்கச் சென்றவன் இன்னும் வரவில்லை. அவனுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு ஏற்கப் படவில்லை. எழுந்து சென்று பார்க்கலாம் என்று நடந்தாள், சுக்கு காபி விற்பவரை பார்த்தாள், அவரிடம் வர்மா பற்றி கேட்க, “காபி காலி ஆகிடுச்சு மா அவர் வெளிய போய்ட்டாரு ” முதியவர் சொன்னதில், காபி வாங்கிட்டு வர தான் வெளிய போனாரா, அவளுக்கு அது சந்தோஷமாக இருந்தது. ஒரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது. என்னுடனே இருந்திருக்கலாமே என்ற ஏக்கம் தான்.
அவளுக்கு வர்மாவின் குரல் கேட்டது குரல் வந்த திசையை நோக்கி சென்றாள் தனக்காக சென்று வாங்கி வந்திருப்பார் என்ற ஆசையோடு சென்றாள் பெரிய பூச் செடிக்கு பக்கத்தில் வர்மா நின்றிருந்தான் அவன் கையில் ஒரு காபி கப், அவனுக்கு பக்கத்தில் முட்டி வரை மட்டுமே இருந்த சிவப்பு நிற கவுண் அவளின் கையில் காபி கப், குடித்து முடித்தவள் வர்மா நோக்கி வர, அவள் கண்ணில் அவன் மீதான ஆசை மின்னியது.
அவள் நெருங்கி வரவும் வர்மா அவன் கையில் இருந்த கப்பினை இடது கரத்திற்கு மாற்றியவன் நகர்ந்து விட, அவள் வர்மாவின் தோளில் சாய்வது போல் நெருங்கினாள். வர்மா விலகி வந்து விட்டான்.
வர்மா ஆரண்யாவைப் பார்த்தான். அவன் முகம் இயல்பாய் இருந்தது. இவளுக்குத் தான் அருவருப்பாய் இருந்தது. பொது இடத்தில் ஒரு பெண்ணால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடியும். ஆனால் மனதில் தெளிவு இருந்தது. வர்மாவிடம் இதைப் பற்றி கேட்க கூடாது. வர்மாவுடன் சேர்ந்து நடந்தாள். முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தனர். அவன் அவளிடம் கப்பை நீட்ட வாங்கிக் கொண்டாள்.
காபியை வாங்கியவள் பருக, “நான் இன்னும் குடிக்கல ” வர்மா சொன்னதும், அவளுக்கு புரிந்து விட்டது. தான் குடித்துக் கொண்டிருந்த கப்பை அவனிடம் கொடுக்க, அவனும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
“ஆரு டைம் ஆச்சு வீட்டுக்கு கிளம்பலாமா ” அவன் சொன்னது அவளுக்கும் அதே சூழல் தான் இங்கு பிடிக்கவில்லை. வீட்டிற்கு சென்று விடலாம். “போலாம்” இருவருமே வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
வீட்டில் இருக்கும் அலுவலக அறையில் நுழைந்தான். ரத்தோரிடம் பேசியவன், வீட்டில் இருப்பவர்களை அழைத்தான். ஆரண்யாவிற்கு நெஞ்சு துடித்தது, எதற்கு இப்பொழுது எல்லாரையும் அழைக்க வேண்டும். பூங்காவில் நடந்தற்கு கூட நான் எதுவும் கேள்வி கேட்கவில்லை பிறகு என்ன ஆயிற்று இவருக்கு, குழப்பத்துடன் வந்து நின்றாள்.
விஜயும் வந்து விட்டான்.”அப்பா விஜய்க்கும், நிலாக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம், விஜய் வீட்ல போய் பேசிட்டு நல்ல நாள் குறிச்சிடலாம் “
ஆரண்யாவிற்கு இப்பொழுது தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. நல்ல விஷயம் தான். நான் தான் தேவை இல்லாம பயந்துட்டேன். அவள் கொஞ்சம் ஆசுவாசம் அடைய, வர்மா அதற்குள்,
“அப்பா நான் வேற ஒரு முடிவும் எடுத்துருக்கேன். ஆரண்யா மாமாவோட சென்னை ப்ராஞ்ச் பார்த்துக்க போறா, நம்ம கான்ஸ்டரக்ஷன்ல ராஜஸ்தான் கலையும் சேரும் போது அது அழகே தனி தான். நீங்க என்னப்பா சொல்றீங்க “
“எனக்கு முழு சந்தோஷம் ” ஆரண்யாவைப் பார்த்து சிரிக்க, சிரிப்புடன் வந்தவள் வர்மாவுடன் சேர்ந்து பெரியவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார்கள்.
விஜய், வர்மாவிடம் “என்னடா பார்க் போனியா எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டியா” அவன் மனதில் ஆருவால் மட்டுமே வர்மாவை மகிழ்வாக வைத்திருக்க முடியும், இவர்கள் இனி சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்து தான் வர்மாவிடம் ஆருவிடம் பேச யோசனை சொன்னான். அவர்களுக்குள் இருந்த பிரச்சனை சரி ஆகி இருக்கும் என்ற எண்ணத்தில் கேட்க,
விஜய்யை தனியாக அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன் “என்ன மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ரெடியா ” குரலில் பழைய வர்மாவின் தொனியும் பேச்சு கொஞ்சம் மென்மையாக இருக்க, வர்மாவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் எதற்காக, முதலில் வெளியே போன போது என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான் விஜய்க்கு
“ஹாப்பி தான் டா. நீயும் தங்கச்சியும் போனீங்களே அது என்ன ஆச்சு, முதல்ல அதை சொல்லு “
அங்கு நடந்ததை சொன்னான். “ரீனா டா நம்ம கிட்ட இதுக்கு முன்னாடி பார்ட்னரா இருந்தார், வெங்கி அவரோட பொண்ணு, நான் 2 கப்ல காபி வாங்கிட்டு வந்துட்டு இருந்தேன் சூடா இருந்தது அங்க இருந்த பெஞ்ச்ல வச்சிட்டு, திரும்ப எடுக்குறதுக்குள்ள அவ வந்து எடுத்திட்டுட்டா, அவ கிட்ட நான் பேசுனது கூட இல்லை. ஒரு பார்ட்டில பார்த்தேன் அவ்ளோ தான். அவளா கிட்ட வந்தா, நான் விலகிட்டேன். இது எல்லாம் ஆரு பார்த்துட்டா, அவளும் கேட்பா பதில் சொல்லலாம்னு பார்த்தா
அவ எப்பவும் போல தான் இருக்கா, இது லைப் விஜய், நடக்குற எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. அது போல நம்மை இயல்பை தொலைச்சிட்டும் இருக்க முடியாது. இப்பவும் என்னை காதலிக்கிறா, அவ கண்ணுல தெரியுது, அவ என் மேல வச்சிருக்குற அந்த அன்பு எல்லா கோவத்தையும் மறந்துட்டு ஏத்துக்க நினைக்கிறா,
எங்க ரெண்டு பேருக்குமே இப்போ தேவை படறது அமைதி தான் நாங்களா எங்களை புரிய வைக்க போராடுற அந்த நேரத்துல ஏதாவது குருக்கீடு நடந்துட்டே இருக்கு, அதை ஒவ்வொரு தடவையும் புரிய வச்சிட்டு இருக்க முடியாது. அதுக்காக அமைதியாவும் இருக்க முடியாது. அவ வேலை செஞ்சிட்டு இருந்தா, அங்க ராஜஸ்தான்லயும் அவ தான் கம்பெனி பொறுப்பையும் பார்த்திருக்கா,
இங்க வீட்ல அடைச்சு வைக்க நான் விரும்பல, அவ மனசு அவளுக்கு பிடிச்சதை செய்யட்டும். என்னால அவளுக்கு மனசு காயப்படிருக்கு அது நான் தர சமாதானப் பேச்சுல சரி ஆகிடாது. செயல்ல அவளா உணர வைக்கணும். எனக்காக அவ எவ்ளோ செஞ்சா, நான் அவ மனசு புரிஞ்சும் நடக்குறது வேடிக்கை தான் பார்த்தேன். இப்போ எனக்காக நான் போய் அவ கிட்ட நின்னா அவ அப்டியே ஏத்துக்கணுமா,
இனி அவ வேலைல அவ கான்சென்ட்ரேட் பண்ணட்டும். அவ அதுல பெருசா வளரனும். அவ கூட இருந்து அதை நான் ரசிக்கணும். எப்போ எங்க ரெண்டு பேருக்கும் எங்களோட காதல் எங்களை சேர்த்து வைக்குதோ அப்போ எங்களுக்குள்ள நடக்கும். அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள எந்த பிரிவும் வராது. அதை மட்டும் நான் உறுதியா சொல்ல முடியும்”
வர்மாவின் வார்த்தைகளில் விஜய்க்கு கண்ணீரும் மகிழ்ச்சியும் ஒரு சேர வர, அவனை அணைத்துக் கொண்டுவன், “நீ எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இது மட்டும் தான் எனக்கு தெரியும். உன் மனசுல எவ்ளோ காதல் இருக்குன்னு இப்போ புரியுது டா, தங்கச்சிக்கும் புரியும். நீ அவ மனசை ஜெயிச்சுடுவா, எனக்கு இப்போ தான் ரொம்பவே சந்தோஷமா இருக்கு “
வர்மா சொன்ன படி ஆரண்யாவிற்கு தன்னுடைய அலுவலத்தில் தனி அறையை உருவாக்கி அவளுக்கு உதவிக்கு ஆட்களை நியமித்தான். தன்னுடைய கன்ஸ்டரக்ஷனில் ராஜஸ்தானிய கலை நுட்பத்தை சேர்த்து பெரிய மால்கள், திருமண மண்டபம், வீடுகள், வாடிக்கையாளர்கள் விருப்பப்படி அவர்களின் பிராத்தியோக அறை, வரவேற்பரை, கோவில்கள் என இருவருக்கும் ஆர்டர்கள் வந்து கொண்டே இருந்தது.
இடையில் விஜய், கவிநிலா திருமணமும் கோலாககமாக நடந்தேரியது. வர்மாவும், ஆரண்யாவும் இணைந்தே திருமண வேலைகளை கவனித்தனர். பெரியவர்களுக்கு மகிழ்ச்சி இருப்பினும், இருவரும் தங்களுக்குள் இன்னும் வாழ்க்கை தொடங்கவில்லை என்ற எண்ணம் எட்டிப் பார்க்க தான் செய்தது. கேட்க நினைத்தும் கேட்காமல் இருந்தனர்.
ஆரண்யாவுடன் கோவிலுக்கு சென்ற மதிவதனி இருவரின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்க, ஆரண்யாவோ “அத்தை நீங்களே நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்ங்க ” வெட்கத்துடன், சிரிப்புடன் சொல்ல, இருவரும் மகிழ்வுடன் வீட்டுக்கு வந்தனர்.
வீட்டில் வர்மா காணவில்லை என்ற செய்தி தான் அவர்களை வரவேற்றது…
வர்மாவுக்கு என்ன ஆச்சு… அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..
