அத்யாயம் -10
திருக்குறள்
நீர்இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
குறள் எண் 20 வான் சிறப்பு அதிகாரம் -2
அத்யாயம் 10
இங்கே ஒரு புறம் ஆண்கள் எல்லாரும் செட்டு சேர்ந்து விட பெண்கள் மூவரும் கிட்சன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள்.
தன்னுடைய வீட்டில் இருக்கும் இறுக்கமான மன நிலை இவர்கள் வீட்டில் இல்லை. அதனால் அண்ணன் தங்கை இருவருக்குமே இவர்களிடம் பேச இலகுவாக இருந்தது. கார்த்தியின் அன்னை லலிதாவின் பேச்சில் பெரும்பாலும் மகனின் புராணம் தான்.
“எங்க அம்மாவுக்கு எப்பவுமே எங்க அண்ணாந்தான் ரொம்ப புடிக்கும் அன்னையின்தோளில் நாடி வைத்து பேசிய மகளை கன்னத்தோடு அனைத்துக் கொண்டார் அன்னை.
“அப்படி எல்லாம் இல்ல. எந்த அம்மாவாவது பெத்த புள்ளைங்களுக்கு நடுல வித்யாசம் பார்ப்பங்களா? நீ சொல்லுமா” வெகுளியாக அவர் கேட்ட கேள்விக்கு,
“பார்ப்பாங்களே! எங்க அம்மா பாக்கறாங்களே” என்று சொல்ல வந்த வார்தைகளை மறைத்து சிரித்துக் கொண்டாள் கீர்த்தி.
அடுத்த வாரம் என் பையனோட பிறந்த நாள் விழா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். கீர்த்தி நீயும் அவனும் தான் ஒரே ஆபீசு. கண்டிப்பா நீ வந்துரணும் . கட்டாயமாக சொல்லி அனுப்பினார் கார்த்தியின் அன்னை. மறுக்க முடியாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு வந்தாள் கீர்த்தி.
அதற்குள், “டேய் மச்சி!” என்று கார்த்தியின் நண்பர்கள் சிலர் வந்தார்கள்.
அவர்களை பார்த்த கீர்த்தி சற்று பயப்படவும், “நீ ஒன்னும் பயப்படாத. எல்லாம் நான் வளர்த்த பசங்க தான். ரொம்ப நல்ல மாதிரி.” என்றார் லலிதா .
“எல்லா குரங்கும் இப்ப கிரிக்கட் மட்டையை தூக்கிட்டு ஓடிடும். நீங்க பயப்படாதீங்க கீர்த்தி. “சொன்னது வந்தனா .
அவள் சொன்ன மாதிரியே கார்த்தி உடை மாற்றிக் கொண்டு அவர்களுடன் கிளம்பி விட்டான்.
“சார் பை! அப்பா பை!” சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர் அனைவரும். வாயில் வரை சென்ற கார்த்திக் திரும்ப ஓடி வந்து அவசர முத்தத்தை அன்னைக்கு வழங்கி விட்டு ஓடினான். அவர்கள் சென்றதும் அந்த இடமே சத்தம் இல்லாமல் மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது.
“நாங்களும் கிளம்பறோம் மா” சொல்லி விட்டு கீர்த்தியும் ரவியும் கிளம்பினார்கள்.
“உன்ன பார்த்தது ரொம்ப சந்தோஷம் கீர்த்திமா ” வாய் நிறைய புன்னகையுடன் காலில் விழுந்தவளுக்கு ஆசிர்வாதம் செய்தார்கள்.
“சீக்கிரமா கல்யாண பத்திரிக்கை வைக்கணும். ”
கீர்த்தி ரவி இருவரின் முகத்திலும் இருந்த புன்னகை மொத்தமாய் டாடா சொல்லி விட்டு சென்று விட்டது.
அடுத்த சில நாட்களில்,
இங்கே வந்தனாவின் வீடு களைகட்ட தொடங்கியது.அவள் அம்மா மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பக்கம் காசி அல்வாவை கிளறிக் கொண்டே இன்னொரு பக்கம் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தாள். இப்படி எல்லாம் சொல்லணும்னு எனக்கும் ஆசையாதாங்க இருக்கு. ஆனா அப்படி எல்லாம் இல்லை . இந்த நிகழ்வுகள் இல்லாம பொண்ணு பாக்க முடியுமா ?
முடியுமே!
இந்த நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் வந்தனாவிற்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது . வீட்டில் அல்ல .அருகே இருக்கும் ஒரு கோவிலில் . எளிமையாக . மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துக் கொண்டார்கள் . வந்தனாவின் மனம் அவனை ஏற்றுக் கொண்டு விட்டதா ? அவள் இருக்கும் மன நிலையில் யாரையும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லாம் அவளுக்கு இல்லை. திருமணதிற்கு ஓகே சொல்லும் எந்த ஆண் மகனாக இருந்தாலும் ஓகே சொல்ல வேண்டும். நட்டை, குட்டை, சொட்டை எதுவும் சொல்ல முடியாது. இருப்பது ஒரு வயதில் ஆரம்பித்த இந்த பெண் பார்க்கும் படம் வெற்றிகரமாக ஐந்தாம் வருடத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது ஆமை வேகத்தில் .
மாப்பிள்ளை ஐடியில் வேலை பார்ப்பவர் . இவர்கள் வீட்டிலும் சற்று வசதியானவர்கள் என்பதால் மேற்கொண்டு இது வேண்டும் அது வேண்டும் என்று அவர்கள் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. மாப்பிள்ளைக்கும் தோஷம் இருக்கிறது தான் . இருவருக்கும் இடையே எட்டு வயது வித்யாசம். அவர்கள் வீட்டிலும் பெண் பார்த்து பார்த்து மனவிரக்தியில் தான் இருக்கிறார்கள். செவ்வாய் தோஷம் இருக்கும் பெண் கிடைத்தால் யார் தான் விடுவார்கள் ? அப்படியா !
இவளை பார்த்து விட்டு அப்போதே தலையில் பூ வைத்து ஓகே செய்து விட்டார்கள் . மாப்பிள்ளையும் பெண்ணும் பரஸ்பரம் தொலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டார்கள். சிரிப்பு சிரிப்புடன் கலந்த உற்சாகம் உற்சாகத்துடன் இருக்கும் வெட்கம் எல்லாம் அங்கே அழகிய நினைவுகளாக கேமராவில் பதிவாகியது .
பெண் வீட்டினர் வீட்டிற்கு சென்று செல்வதற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டினர் சென்று விட்டார்கள். அதற்குள் இவளுக்கு அழைப்பு வந்தது. மாப்பிள்ளைதான் தான் காரில் சென்று கொண்டிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள் .
முதல் முறை இருவருமே பேசிக் கொள்வதால் ஃபார்மலாகத் தான் இருந்தது காதல் மொழிகள் கொஞ்சம் பேச்சுக்கள் ஆரம்பிக்கவில்லை. ஆனால் நாட்கள் ஓட ஆரம்பித்தன இதோ அதோ என்று அவர்களுக்கு நிச்சயப் புடவை எடுக்க கிளம்பினார்கள் .
விவாகாப்பட்டு,சாமுத்திரிகா பட்டு,சர்வ லட்சண பட்டு, காஞ்சி பட்டு இன்னும் ஏதேதோ வகைகள் எல்லாவற்றிலும் அலசி அலசி ஒரு புடவையை எடுத்து விட்டான் மணமகன்.
“நிச்சயத்திற்கு இவ்வளவு காஸ்ட்லியா வேணுமா?” இது அவன் அன்னை . நிச்சயமாக இருந்தாலும் அவ என்னுடைய வருங்கால பொண்டாட்டி. அவளுக்கு நான் செய்யாம யாருக்கு செய்யப் போறேன் என்று அவன் கேட்ட விதத்தில் அனைவருமே வாயை மூடிக் கொண்டார்கள் .
எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் மாப்பிள்ளையின் மாமா இறந்து விட்டார் என்ற செய்தி வரவும் இவர்களுக்கு மிகவும் அவஸ்தையாகிவிட்டது. .
பெண்ணின் வீட்டினருக்கும் விஷயத்தைச் சொன்னார்கள் .
வந்தனாவிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
” என்ன ஆச்சு .ஏன் இப்படி ?”என்று வந்தனா கேட்டதற்கு,
தெரியவில்லை வந்தனா. காலையில் டிபன் சாப்பிட்டு முடிலன்னு படுத்தவரு அப்படியே அட்டாக் வந்து போயிட்டாராம். “
அவ்வளவு தான் அவன் சொன்னது. அதற்கு மேற்கொண்டு அவன் வீட்டுப் பெரியவர்கள் மட்டுமே பேசினார்கள்.
“இல்லம்மா! கல்யாண நிச்சயத்துக்கு துணி எடுத்துட்டு வரும்போது இந்த மாதிரி ஒரு விஷயம் அப்படின்னா எங்களால அதை மனசால ஏத்துக்க முடியல .நீங்க வேற இடம் பார்த்துக்கோங்கம்மா”
இதற்கு மேல் அவர்களிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது? தெரியவில்லை. பேசினார்கள். பெற்றோர் கார்த்திக் எல்லாம் நேரில் சென்று பார்த்து பேசி விட்டு வந்தார்கள் . அவர்களை எந்த விதத்திலும் சம்மதிக்க வைக்க முடியவில்லை. சமாளிக்கவும் முடியவில்லை .
கல்லூரியில் கடந்த சில நாட்களாக சிரிப்புடன் வலம் வந்தனாவின் முகத்தில் சோகம் அப்பி கிடப்பதை பார்த்த அனைவருக்குமே சங்கடமாகிவிட்டது .
அன்றைய மாலையில் இவளுக்கு மனம் சரியில்லாமல் இருக்கவும் அருகே இருந்த பார்க்கில் சிறிது நேரம் அமர்ந்துக் கொண்டாள். அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது அப்போது அவள் அருகில் வந்து நின்றான் ரவி .
“வந்தனா! ” அருகில் ரவியின் குரல் கேட்கவும் ,
“சார் நீங்க எங்க எங்க ?” என்று சொல்லிக்கொண்டே எழுந்து நின்றாள் .
“எதுக்கு எழுந்துக்கறீங்க . உட்காருங்க . நான் தினமும் இங்கே பூங்காவில் உட்கார்ந்துட்டு தான் போவேன் அது சரி நீங்க எங்க இங்க ?”
அன்று ரவியும் கீர்த்தியும் இவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பிறகு இன்னும் கொஞ்சம் நட்பு பழகி இருந்தார்கள். இன்றைய தினத்தித்திற்குப் பிறகு அவர்களுக்குள் நட்பின் ஆழம் அதிகமானது.
“ஒன்னும் இல்ல சார்.நானும் சும்மாதான்.”
“ ஓகே !”
இருவருமே ஒன்றாக அமர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை சுற்றியும் நிறைய பேர் பிரதக்ஷணம் போல வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். இப்போது எல்லாம் எங்கு பார்த்தாலும் வாக்கிங் செல்லும் பெரியவர்களின் கூட்டம் சிறியவர்களின் கும்பல் அதிகமாக தான் இருக்கிறது. இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்.
சில நிமிட மௌனத்திற்கு பிறகு ரவி தான் பேச்சை ஆரம்பித்தான்.
“ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க வந்தனா ?”
ரவி கேட்ட கேள்விக்கு இவள் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள். .இன்னும் திருமணம் நிச்சயமானது பற்றி கல்லூரியிலும் சரி, ரவிக்கும் சரி யாருக்கும் இவள் சொல்லவே இல்லை. அதனால் இந்த விஷயத்தை பற்றி எப்படி சொல்வது என்ற தயக்கத்துடனே அவள் அமைதியாக இருந்தாள் .
“தப்பா நினைச்சுக்காதீங்க உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம் .”
கண்ணியமாகவே ஒதுங்கிக் கொண்டான். பிறகு அவன் எதுவும் பேசவில்லை . பெண்களின் முகத்தினை தாண்டி பார்க்கும் ஆண்கள், ஏதாவது காரணம் சொல்லி தன்னுடைய தோள் சாய மாட்டாளா? அணைத்து ஆறுதல் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்காததா என்று ஏங்கும் ஆண்களுக்கு நடுவே ரவி, கார்த்திக் போல ஆண்களை கூட இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா ?
ரவிக்கு சான்றிதழ் நான் இப்போது கொடுக்கலாம். கார்த்திக் எங்கே இங்கே வந்தான்? சரி அதையும் கீர்த்தியின் கையாலேயே கொடுத்துவிடலாம் சான்றதழ் கிடைக்கும் சொல்லால் இல்லை. வாயால். முத்த மொழியில் மொத்தமாய் …
வந்தனாவின் தயக்கத்தை அவனும் புரிந்துக் கொண்டான். இவர்கள் ஒன்னும் விடலை பருவத்தில் இல்லையே.
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, மனதிற்குள் இருந்த சங்கடங்கள், ‘நான் இப்ப ஓரம் கட்டுறேன். ஒழுங்கா வீடுபோய் சேறு என்று கட்டளை இட்டது பெண்ணிற்கு .
“கிளம்பலாமா” என்று அவள் எழுந்துக் கொண்டாள்.
“ஓகே ! ”
அவனும் உடன் எழுந்துக் கொண்டான் .
“எப்படி வந்தீங்க?” என்றான் அவன்.
“டூ வீலர் !” இது அவளின் பதில் .
முகம்திருப்பி அவள் பார்த்து சொன்னபோது அவளின் நெற்றியில் இருந்த கல் பொட்டு மின்னியது.
அன்னை தங்கை தவிர வேறு எந்தப் பெண்ணையும் அவன் ரசித்தது இல்லை.
“இது என்ன புதுசா ?”
அவள் முகம் பார்க்காமல் தவிர்த்தான்.
“காபி ?” கேட்டவனுக்கு பதிலாக
“காபி வேணாம். இங்க இஞ்சி டீ நல்லா இருக்கும். ட்ரை பண்ணுங்க” என்றவளின் சொல்படி, சரி என்று விட்டான்.
அங்கே இருந்த டீ கடையில் , upi இல் பணம் செலுத்தியது அவன் தான் .
நான் கொடுக்கறேன். அவள் சொல்லவில்லை. பத்து ரூபா டீக்கு இத்தனை அலப்பறை வேண்டியதில்லை என்று நினைத்திருக்கலாம்.
அமைதியாக இருவரும் அந்த தேநீரை ரசித்து குடித்து விட்டு சேர்ந்தே பார்க்கிங் பகுதிக்கு சென்று வண்டி எடுக்கப் போனார்கள்.
இவள் வண்டிக்கு பின்னால் சில வண்டிகள் ஏடாகூடமாக பார்க் செய்திருந்தார்கள். அத்தனையும் பைக்குகள். நிச்சயம் இவளால் நகர்த்த முடியாது.
இவள் கேட்காமலேயே அவனே அவள்செல்ல வழி செய்துக் கொடுத்தான்.
நன்றி உரைத்து விட்டு இவள் கிளம்பினாள்.
“ஹெல்மட்?”
“ஸ்…. தேங்க்ஸ் மறந்தே போய்ட்டேன். “சொல்லி விட்டு இறங்கி டிக்கியில் இருந்து அவள் ஹெல்மட்டை எடுத்துக் போட்டுக் கொண்டாள். அவனும் தான் . இவள் ஒரு ஷாலை எடுத்து தலையில் போட்டு பிறகு அதனாலேயே முகம் மூடி அதற்கு மேல் ஹெல்மெட் போட்டுக் கொண்டாள் .அவனோ சிறு தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு அதற்கு மேல் தலை கவசம் என்று சில வினாடிகளில் வேலையை முடித்துக் கொண்டு இவள் கிளம்ப காத்திருந்தான்.
தன்னால் தான் அவனுக்குத் தாமதம் என்று அவசரமாக அவளும் கிளம்பினாள் அதில் வந்த சிறு வெட்கப் புன்னகையை அவனால் தான் காண முடியவில்லை. ஷால் சிறப்பாக தன்னுடைய வேலையை செய்து விட்டது. இல்லை நான் உனக்கு காட்டிக் கொடுப்பேன். கண்கள் காட்டி விட்டது. கண்கள் மின்ன பை சொன்னவளுக்கு சிறு தலையசைப்புடன் கிளம்பி விட்டான் அவன்.
வீட்டிற்கு வந்த இவருக்கும் அவர்களின் நிலையில் அவர்களால் இயல்பாக இருக்க முடியவில்லை.
சங்கீத ஸ்வரங்கள் ஆரம்பிக்கும்…அப்போ வேகமா
துடிக்கும் இதயம்….
