சித்ரா இங்கு பேசிவிட்டு வைத்தவுடன் நேராக வீட்டிற்கு சென்றிருந்தான் நந்தா.
வீட்டிற்கு சென்றவன், தன் மனைவி நித்யாவிடம் சென்று “நித்யா நான் கொஞ்சம் ஊர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு ரெண்டு மூணு நாளைக்கு சமாளிச்சுக்கோ, பணம் வேணும்னா பீரோல இருக்கு எடுத்துக்கோ, இல்லன்னா நான் ஜி பி பண்றேன் “
“என்ன ஆச்சு ஏன்?” என்றாள் ஒரு மாதிரியான குரலில்,
ஒரு நிமிடம் நின்றவன். “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”
” ஏன் ?அதான் அங்க உங்க அக்கா இருக்காங்க இல்ல?”
வேகமாக அவளை திரும்பி முறைத்தவன்.”அவ மாசமா இருக்கிறது உனக்கும் தெரியும் தானே”
” அதுக்கு என்ன?”
” ஏற்கனவே அவ சோர்ந்து போய் படுத்து இருக்கா ரெண்டு மாசமா அங்க வீட்டுக்கும் வரலைன்னு சொல்லிருந்தேன் தான”
“அதுக்கு?”
” என்னடி என்ன சொன்னாலும் அதுக்கு இதுக்குன்னு சொல்லிட்டு இருக்க? அம்மாவுக்கு பிபி லோ ஆகி பெட்ல அட்மிட் பண்ற ரேஞ்சுல வேற இருக்காங்களாம். கூட இருந்து ஒரு ஆள் பார்த்துக்குற மாதிரி இருக்கு. ஒன்னுக்கு ரெண்டு புள்ளைய பெத்த என் அம்மாவை காசு கொடுத்து யாரையோ பார்த்துக்க சொல்ல சொல்றியா ? இம்புட்டு நாள சுதா அங்க இருக்க தெம்புல தான் இங்க நானும் நிம்மதியா இருந்துட்டேன். இப்ப அவள பாத்துக்கவே ஆள் வேணும் தான். சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படி இருக்க ,அவ எங்க இருந்து அம்மாவை பார்த்துக்குவா சொல்லு? அதுக்காக என்ன இங்கிருந்து வேடிக்கை பார்த்துட்டு, யாரோ பாருங்க பாக்காட்டி போங்கன்னு இருக்க சொல்றியா?” என்றான் கண் கலங்க .
வேகமாக கணவனை கட்டி அணைத்தவள். “சாரி நந்தா” என்றாள்.
அவன் முதுகை நீவி விட்டு தண்ணீர் கொடுத்தவள். “நான் என்ன விஷயம்னு தான் கேட்டேன். சொல்லாம கொள்ளாம போறீங்களேன்னு வேற ஒன்னும் இல்ல”
” அதான் சொல்லிட்டேன்ல பார்த்துக்க”
“ஹம்” என சொன்னவளுக்கு உள்ளுக்குள் பயம் இருக்க செய்தாலும் ,புன்னகையாகவே தலையசைத்தாள்.
அவள் பயத்தை உணர்ந்தவனும் அவளை கட்டி அணைத்து இப்பொழுது அவள் நெற்றியில் இதழ் பதித்து,அவள் இதழோடு இதழ் பொருத்தி அவளின் பயத்தை போக்க முயன்றவன். அவளிடம் இருந்து விலகி “வந்துருவேன்டி பயப்படாத.இப்படி ஒவ்வொரு முறையும் நீ பயந்து பயந்து சாகவும் தான்.உன்ன என்னால இப்படி பார்க்க முடியாம தான் அங்க போகாம இங்கேயே உன் கூடவே இருக்கேன்.ஆன இப்பவும் அப்படி இருக்க முடியுமா சொல்லு ?இம்புட்டு நாளும் நான் தைரியமா இருந்ததுக்கு காரணம் சுதாவும் ,மாமாவும் தான் ஆன இப்ப அப்படி இருக்க முடியாது பாரு” என்றவன் மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்த.
‘ ஏன்?’கேள்வியாக பார்த்தாள்.
“ஒன்னும் இல்ல” என்றவன்,” சரி ரெண்டு மூணு நாளைக்கு மேனேஜ் பண்ணிக்கோ.நா அங்க போயிட்டு என்னன்னு பாத்துட்டு உனக்கு போன் பண்றேன். பாப்பாவை பத்திரமா பாத்துக்க சரியா? “என்று மனைவியிடம் கூறிவிட்டு, மகளை தூக்கி கொஞ்சி விட்டு ,”அம்மா கூட சமத்தா இருக்கணும் என்ன?” என்று மூன்று வயது மகள் இனியாவிடவும் கூறியவன்,அவள் கையிலும் சிறு தொகையை கொடுத்துவிட்டு,” ஏதாவது தேவைனா சொல்லு நான் பசங்க கிட்ட சொல்லி வாங்கி தர சொல்றேன்.நீ அலைஞ்சிட்டு இருக்க வேணாம் சரியா புள்ளைய தூக்கிக்கிட்டு “என்று கூறியவன்.
வேகவேகமாக ஒரு சின்ன பேக்கில் இரண்டு மூன்று துணிகளை மட்டும் அடுக்கிக் கொண்டு கிளம்பி இருந்தான்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறதே!அவன் அங்கு போய் தங்கியே!, அப்படி இருக்கையில் அங்கு துணிமணி இருந்தாலும் கூட ,அது தனக்கு பத்துமா ? என்பது கேள்விகுறி தான் .
ஆகையாலே , இரண்டு மூன்று செட் மட்டும் அடுக்கிக்கொண்டு வேகமாக கையில் சிறு தொகையையும் எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.
உண்மையாகவே சித்ரா கூட அவன் மறுநாள் காலையில் இங்கு வந்து நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
விடியற்காலையிலே வீட்டிற்கு வந்திருந்தவன்.கதவை திறப்பதற்காக தாயுக்கு அழைத்திருந்தான்.
விடியலில் மகன் ஃபோன் செய்யவும், ஒன்றும் புரியாமல் கைகள் நடுங்க,எடுத்தவர். “சொல்லு நந்தா எல்லாரும் நல்லா இருக்கீங்க தான ? மருமக, பேரப்புள்ள எல்லாம் எப்டி இருக்கு? எதும் பிரச்சனை இல்லையே?” என்றார் படபடக்கும் நெஞ்சத்துடன்,
“மா.உனக்கு என்னம்மா ஆச்சு உடம்பு சரி இல்லனு கூட எனக்கு சொல்ல மாட்டியா? எங்கம்மா இருக்க வீட்ல தான இருக்க? நான் வாசல்ல தான் இருக்கேன் கதவை தர “
உண்மையாகவே அவருக்கு கண்களில் கண்ணீர் பொலபொலவென்று கொண்டிருந்தது .
சித்ரா போன் செய்த பிறகு, தாயுக்கு என்ன ஆச்சு ?என்று கூட கேட்க அவனுக்கு தோணவில்லை. நேராக பார்க்க கிளம்பி விட்டிருந்தான்.வந்து பிறகு தான் தாய்க்கு அழைத்து இருந்தான். அதன் பிறகுதான் ,அவன் புத்திக்கு உரைத்தது.தான் வருவதாக கூட தாய்க்கு கூறவில்லை என்பதை உணர்ந்தான் அடித்து பிடித்து வந்ததில் ,
உண்மையாகவே சுதாவால் இப்போது பார்க்க முடியாது என்பதையும் அறிந்தவன்.உடனே கிளம்பியிருந்தான்.
அவன் போன் வைத்த நொடி ஒன்றும் புரியாமல், சுதாவுக்கு அழைக்கலாம் என்றுதான் யோசித்தார் .ஆனால், மணியைப் பார்த்தவர் ,மூன்று மணி தான் ஆகிறது.இந்த நேரத்தில் அழைக்க வேண்டாம் என்று சித்ராவிற்கு அழைத்து விட்டார்.
அவருமே சிறிது பதட்டத்துடன் போனை எடுத்தவர், “என்ன பண்ணுது கமலா.நல்லா இருக்கா இல்ல?” என்றார் வேகமாக எழுந்து உட்கார்ந்து படி,
“அண்ணி எனக்கு ஒன்னும் பண்ணல .ஆனா ,நீங்க பண்ண வேலையில நந்தா அடிச்சு புடிச்சு வந்திருக்கான் போல வெளிய நிக்கிறனு போன் பண்றான்.அவன் வந்து இருக்கேன்னு போன் பண்ண பிறகுதான் எனக்கு படபடன்னு வருது”
இங்கு சிரித்து விட்டார் சித்ரா.
“நீ பெத்த மகன் தான வந்து நிக்கிறான்.என்னவோ கொள்ள கூட்டத்தலைவன் வந்த மாதிரி இப்படி படபடன்னு வருதுன்றியே அதுக்கு எதுக்கு போன் பண்ற ? வந்தவனை புடிச்சு வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கிறத விட்டுட்டு”என்றவர்.” மொத போய் கதவை திறந்து விடு.புள்ள வூட்டுகுள்ள வரட்டும்.அவனை என்னானு பாரு, அதை விட்டு போன பண்ற ?”என்று அதட்டியவர்.
” நல்லது தான். நீ இப்படியே போய் நில்லு, அப்பதான் அவன் ஆச்சு உனக்கு உடம்பு சரியில்லைன்னு உண்மையா நம்புவான்”
” அண்ணி “
சிரித்த சித்ரா.” கதவ தொற போனவை.”என்று கூறியவர் எப்படியும் கமலா வைக்க மாட்டார். ஏதாவது மீண்டும் பேசுவார் என்று எண்ணி ,சித்ராவே போனை வைத்திருந்தார் .
போன் அடித்தவுடன் நேசனும் தூக்கம் கலைந்து எழுந்தவர் கமலாவுக்கு உடம்புக்கு என்னவோ என்று பதறி தான் உட்கார்ந்திருந்தார்.
மனைவி சிரித்த முகமாக பேசி விட்டு நிமிர்ந்த பிறகு, என்னவென்று கேட்க.ஏற்கனவே இரவு அங்கு சென்று பேசி விட்டு வந்ததை கூறியதும் , தேவையில்லாத வேலை என்றுதான் கூறினார்.
“இப்படி பேச போய் கமலா அங்க வலியோட தான உக்காந்து இருக்கும்.இல்ல மகன் வருவான்னு எதிர்பார்த்து ஏமாந்துச்சுன்னா என்ன பண்ணுவ?” என்று கேட்டதற்கு,
” நீங்க நந்தாவை அம்புட்டு லேசா எடை போடாதீங்க.நம்ம சுதாவுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் அவன் இங்க வர போக, நம்ம பார்வையில் வளர்ந்த புள்ள தான, அவனுக்கு அம்மா ,அக்கானா உசுரு தான்.நேசிச்சவளை விடமுடியாமல் நிக்கிறான். அதுக்காக பெத்தவங்கள ஒதுக்குற அளவுக்கு இல்ல, எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு .கமலா எதிர்பார்த்து இருக்காளோ இல்லையோ? ஆனா, நான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.அதை விட அவன் மேல நம்பிக்கை இருக்கு வருவான் நீங்க வேணா பாருங்க ?”என்று கூறியிருந்தார்.
ஆனால் சித்ரா கூட இவ்வளவு சீக்கிரம் அவனை எதிர்பார்த்து இல்லை .எப்படியும் நாளை காலை கிளம்பி வருவான் என எண்ணியவருக்கு அதிர்ச்சி தான்.
தான் போன் பேசி வைத்த இரண்டு மணி நேரத்துல கிளம்பி இருக்கணும்,இல்லனா அவன் இவ்வளவு சீக்கிரத்துல இங்கு வந்திருக்க முடியாது.இரவோடு இரவாக வந்திருக்கிறான் என்று எண்ணி சிரித்து விட்டு தன் கணவனிடம் கூறிவிட்டு படுத்து விட்டார் .
காலை விடிந்த பிறகு மருமகளிடம் கூறிக் கொள்ளலாம் என்ற எண்ணம். எப்படியும் கமலா கூறி இருக்க வாய்ப்பில்லை.அதனால் தான் தன்னை அழைத்து இருக்கிறாள் என்று தான் அமைதியாகி விட்டார்.
இங்கே படபடவென வர முந்தானையால் தன் முகத்தை துடைத்தபடியே வந்து கதவை திறந்து இருந்தார் கமலா.
“என்னமா பண்ணுது நான் போன் பண்ணி இவ்வளவு நேரம் கழிச்சு வந்து கதவை திறக்கிற?”என வேகமாக தூக்கிக் கொண்டு வந்த பையை ஒரு மூலையில் போட்டுவிட்டு ,தாயை கையோடு சோபாவில் உட்கார வைத்து, முதலில் தன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கை குட்டையால் அவரது முகத்தை துடைத்து விட்டவன்.
” என்னம்மா பண்ணுது ?”என்று கேட்டிருந்தேன்.அவர் அப்பொழுதும் அவனையே பார்த்தபடியே உட்கார்ந்து இருக்க.
” இருமா” என்று வேகமாக எழ.
அவனின் கையைப் பிடித்தார்.
“இங்க தான் இரு”என தட்டிக் கொடுத்துவிட்டு, கிச்சனுக்கு சென்று அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவன்.அவரது நெஞ்சை நீவி விட்டு கையோடு வரும்பொழுது சர்க்கரை டப்பாவையும் தூக்கி கொண்டு வந்திருந்தான்.அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அவர் வாயை திறந்து போட்டவன்.
“பொறுமையா சப்பி சாப்பிடு. என்ன பண்ணுது உனக்கு ?ஏற்கனவே, லோ பிபி தானே! கையில எதையாவது சாக்லேட் (இனிப்பா)வச்சுக்க சொல்லி இருக்காங்க தான.ஏன்மா இப்படி பண்ற ? டாக்டர் உன்னை பெட்ல சேர்க்க சொல்லி இருந்தாங்கன்னா எனக்கு போன் போட்டு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா? அப்படியே உன்னை தலை முழுகிடுவேன்னு நினச்சிட்டியா?”
கண்களில் நீர் வழியே அவனின் வாயை பொத்தினர்.
” நெருப்புன்னு சொன்னா சுட்டுடாதுமா.எனக்கு நீயும், சுதாவும் எப்பவும் வேணும்”என தாயை கட்டிக்கொண்டு அழுதுவிட்டு, அவர் மடியிலேயே தலை சாய்த்து இருந்தான் .
அவரும் தலைக்கோதி விட்டார். “ஹாஸ்பிடல் போலாமா ?”
“இப்போ கொஞ்சம் தேவலாம் டா. ஒன்னும் இல்ல”
” என்ன தேவலாம்.போன் பண்ண உடனே இப்படி பதறி வேர்க்க விறுவிறுக்க வர.அப்போ உனக்கு ஒன்னுனா எனக்கு பதறாதன்னு நினைச்சுக்கிட்டியா ?”
ஒன்றுமில்லை என அவனைத் தேற்றி சிறிது நேரம் பேசினார்.
“நீ இப்படியே விட்டா விடிய விடிய பேசிக்கொண்டே இருப்ப. தூங்கு, காலையில விடிஞ்சதும் ஹாஸ்பிடலுக்கு போலாம் சரியா?”
அவர் பேந்த பேந்த முழிக்க.
” ஒன்னும் இல்லம்மா.எதா இருந்தாலும் பாத்துக்கலாம்.நான் உன் கூட தான் இருக்க போறேன்”
” காலையில என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்த உடனே கிளம்பிடுவியா டா நந்தா”என தன்னையும் மீறி கேட்டிருந்தார். மகன் தன்னுடன் ஒரு நாளாவது இருக்க முடியாதா ?என்ற ஏக்கம்.
சித்ரா கூறியதில் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவன் தனக்காக ஓடி வந்திருவான் என்று கூட எதிர்பார்த்திருந்தார்.முதல் முறையாக மகனிடம் இப்படி கேட்கிறார் எதிர்பார்ப்புடன்,
இதற்கு முன்பு அவன் வந்தால் கூட ,அங்க மருமக தனியாக இருக்குமே கெளம்புடா என்று கூறியவரின் வாயிலிருந்து,முதல் முறையாக என்னை விட்டுட்டு கிளம்பிடுவியா ?என சிறுப்பிள்ளையாக கேட்டிருந்தார். இப்பொழுது உண்மையாகவே அவனுக்கு கஷ்டமாகிவிட்டது.
சுதாவும் வந்து இரண்டு மாதங்களாக பார்க்காதது அவருக்கு இன்னும் கஷ்டத்தை தானே கொடுத்து இருக்கும் என்பதை உணர்ந்தவன்.தாயை கட்டிக்கொண்டு அழுதுவிட்டு, “இல்லம்மா உன் கூட ரெண்டு நாள் இருந்துட்டு தான் போவேன் “
அப்பொழுதும்,”அங்க பிள்ளையும், மருமகளும் தனியா இருப்பாங்களேடா “
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்.இல்லனாலும பக்கத்துல ஆளுங்க இருக்காங்க பாத்துப்பாங்க அவள பாக்குறது எப்படி என் கடமையோ ,அதே மாதிரி உன்ன பாக்கறதும் என் கடமை தா மா.சுதா இருக்கவும் கொஞ்சம் தெம்பா இருந்தேன். சுதாக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கா?”என்று இப்பொழுது அக்காவை பற்றியும் விசாரித்து இருந்தான்.
” ஏன்? அத அவளுக்கு போன் பண்ணி கேட்க வேண்டியதுதானே?”
” கேட்கலாம் தான்.ஆனா “என்று தடுமாற,
” என்னடா ?”
“இல்ல.அவ இங்க வந்து இருக்கான்னு நீ சொல்லும்போது, அவளை போன் போட்டு நான் எதுவுமே கேட்கலையே,அவளை திட்டிட்டு தானே வச்சேன்.அம்மா கூப்பிட்டா உன்னை யார் இங்க வர சொன்னா ?அங்கிருந்து பேசி முடிக்காம இங்க வந்து உட்காருவியானு அவளை திட்டி விட்டட்டேன் .அதிலிருந்து நான் அவ கிட்ட பேசல ? உன் மூலமா அவ வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு மட்டும்தான்”
தன் மகள் கூட இதை கூறவில்லையே என்பதை தான் யோசித்தார்.தம்பியை ரொம்பவே தேடி இருந்து இருப்பாளே? மதியம் அழுதாலே அப்போ இதற்கு தான? என்று இப்போதுதான் உணர்ந்தார்.
அன்று உண்மையாகவே ஆதி மீது நம்பிக்கை வைத்து ,அங்க நின்னு புருஷன் கிட்ட உங்களால எனக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியாதானு கேட்காம, அம்மா வீட்டில் வந்து உட்கார்ந்தா பிரச்சனை முடிஞ்சிடுமா? ஆயுசுக்கும் உன் அம்மா கூடயே இருந்துடுவியா? கல்யாணம் ஆயிட்ட பிறகு பொண்ணுங்களுக்கு புகுந்த வீடு தான் முக்கியம்.அதுக்காக தாயை பார்க்க வேண்டாம்னு சொல்லல. வரப்போக இருக்கலாம்.இங்கேயே உட்கார்ந்து திங்கணும்னு கனவு காணாத,உன் காசுல, நீ சம்பாதித்து உழைத்து சாப்பிட்டா கூட ,புருஷன் வீட்டில் உட்காறது வேற ,தாய் வீட்டுல வந்து உட்கார்ந்திருக்கிறது வேற” என்று கூறியிருந்தான்.
சுருக்கென்று தைத்தாலாவது தன் அக்கா புருஷனை தேடி சென்று விட மாட்டாளா? என்ற எண்ணம். உடனிருந்து இரண்டு வருடம் பார்த்து இருக்கிறான்.தூரத்தில் இருந்தும் இத்தனை வருடம் ஆதியை பார்த்திருக்கிறான்.ஒரு சொல் சொல்லி விட முடியாது தவறாக ,தாயை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் இருந்திருக்கிறார் என்று அவர் மீது கோபம் இருக்கிறது தான்.
மாமாவிற்கும் போன் செய்து சத்தம் போட்டு இருந்தான் தான். இடைப்பட்ட காலத்தில் இவனுக்கு விஷயம் தெரிந்த அன்று ஆதிக்கு ஃபோன் செய்து சத்தம் போட்டு இருந்தான்.இரண்டு நாட்களுக்கு பின்பு, ஆதியே சமாதானமாகவும் பேசி இருந்தான்.
” ஏன் மாமா போய் சுதாவை உங்களால கூட்டிட்டு வர முடியாதா ?”என்று, அதன் பிறகு தான், ஆதியும் மேலோட்டமாக தனக்கு அவளை நேரில் பார்ப்பதற்கு கூட வாய்ப்பு தர மாற்றாள் என்பதையும் கூறி இருந்தாள்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு கிளம்பலாம் என்று அவன் இருக்கும் போது தான் ,மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.வாந்தி, பேதி லூஸ் மோஷன் என்று சென்று கொண்டிருக்க.
குழந்தை சோர்வடைந்து இருந்தது. அங்கு மாமாவின் மீது நம்பிக்கை இருந்தது விட்டுவிட மாட்டார். என்ன தான் அக்கா விவாகரத்து வேண்டும் என்று கேட்டாலும் கூட, மாமா விட்டு விட மாட்டார்,நேசன் மாமாவும் விட்டு விட மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.அதே அளவிற்கு தாய் இடம் ஃபோன் பண்ணி பேசி இருக்கும் போது,தாயும் கூறி இருந்தார்.
அவராகவே ,”பிள்ளைய பாரு.நான் இருக்கேன் பார்த்துக்கிறேன்.நீ மருமக கூட இரு.துணைக்கு ஆள் வேணும் நந்தா ஒத்தசைக்கு , பொம்பள ஒருத்தியா சின்ன பிள்ளையை வெச்சுகிட்டு எங்கெங்கனு அலைவா?” என்று கூறியிருந்தார்.
சொன்னாலும் ,சொல்லாட்டியும் அதுதானே உண்மை.இப்பொழுது வரை நித்யாவை இழுத்து பிடித்து வைத்து ஆதரவாக பேசுவதற்கு காரணமும் இருக்க செய்தது. நித்யா கிறிஸ்டின்.இவர்கள் இந்து. வெவ்வேறு மதத்தினரை திருமணம் செய்து இருக்கிறார்கள்.
வேறு மத பையனை விரும்பி இருக்கிறாள் மகள் என்றவுடன் சுத்தமாக அறவே வெறுத்து விட்டார்கள் நித்யாவின் பெற்றவர்கள்.இருவரின் திருமணமும் ஓடிப் போய் தான் செய்து கொண்டார்கள்.
பிரச்சனையை ஆதியிடம் கூறிய பொழுது,” நாங்களே செஞ்சு வைக்கிறோம் இங்க வாங்க டா” என்று கூறியதற்கு கூட ,
“வேணாம் மாமா .அது இன்னும் பெரிய சிக்கலா போய் முடியும். ரிஜிஸ்டர் மேரேஜ் தான் சரி “என்று கூறியிருந்தான் அப்பொழுது இருந்த பிரச்சனையின் வீரியத்தில்,
அவசர அவசரமாக ஆதி தான் சென்று ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்திருந்தான்.
அதன் பிறகு ,இங்கு வந்து சிறிதாக ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்.
மதம் விட்டு மதம் திருமணம் செய்திருக்க, இரு பக்கமும் பிரச்சனைகள் உண்டாகியிருந்தது.இப்பொழுது வரை பேரப்பிள்ளை பிறந்து மூன்று வருடமாகி கூட, நித்யாவிற்கு பிறந்த வீட்டு உறவு சுத்தமாக கிடையாது.
மகளை மொத்தமாக தலைமுழுகி விட்டார்கள்.
அம்மா, அப்பா ,கூட பிறந்தவர்களுக்கு ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறாள் 4 வருடங்களாக, திருமணமான புதிதில் இங்கு வந்து இருந்த ஒரு வாரத்திலும் நித்யா வீட்டில் இருந்து வந்து பிரச்சனை செய்திருக்க,அடிக்கடி வீடு ஏறி வந்து சத்தம் போட்டு மிரட்டி விட்டு செல்ல, தாயை அக்கா ,மாமாவின் பொறுப்பில் விட்டுவிட்டு, வெளியூருக்கு வேலைக்கு சென்று இருந்தான்.
” கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும்” என்று ஆதியும் சுதாவும்தான் கூறியிருந்தார்கள்.
அவர்களுக்கும் தனிமை கிடைத்தால்,சிறிது அதிலிருந்து வெளிவரவும் வசதியாக இருக்கும் என்று அனுப்பி வைத்திருந்தார்கள்.ஆனால், நித்யா வீட்டில் செய்த பிரச்சினையால், இங்கு வந்தால் ஒரு வேலை நாந்தாவை தன்னிடமிருந்து இவர்களும் பிரித்து விடுவார்களோ? என்ற பயம் உருவாக்கி இருந்தது.
